கார்க்கியின் பார்வையில்

நதியின் மடியில்…!

முடிவற்று நீண்ட
அந்த நாளின் இடையில் நான்
அந்த நதியைக் கண்டேன்…
அதன் மூலத்தைக் கண்டேனில்லை நான்..
அதன் முடிவையும் காணேணோ அறியேன்
துவக்கமும் இலக்கும் அற்று
வழிந்தோடும் நதி…
செல்லும் தடந்தோறும் கண்டவற்றையெல்லாம்
தனக்குள் வரித்துக் கொண்டோடும் நதி..
கரைகள் அற்ற
திசையென்று ஏதுமற்று
வேகமாயும் வேகமற்றும்
ஆழமாயும் ஆழமற்றும்
தானே தன் பாதையைப் பற்றியோடும்
நதியின் மடியில் நான் அமர்ந்தேன்….

நிறைய தண்ணீர்..
தனதாற்றலைத் தானேயறியாத 
ஒரு பெண்ணின் உடல் போல்
வளைந்து நெளிந்து
சுழித்துப் புரண்டு
காமுற்ற அரவமாய்
இரையை நெருங்கிய வேங்கையாய்
வன்மையுமாய் மென்மையுமாய்
வனாந்திரங்களையும் வெட்டவெளிகளையும் தின்று
தரைமேல் படர்ந்து செல்லும் நதி
ஒரே நேரத்தில் பேரரசி போலும்
பிச்சைக்காரி போலும் நடந்து செல்கிறது…

ஆதியில் நாகரீகங்களைப் பெற்றெடுத்த
அதன் கருவறையில்
அமிலத்தின் நெடி காரமாய் –
விகாரமாய் வீசிற்று..
தன்னால் செழித்துக் கொழித்தவைகள்
இன்று தன்னாலேயே வாடிச் சாவதைக்
கண்டு நதி வடித்த கண்ணீர்
பத்து ரூபாய்க்கு விலை போகிறது..
வரப்புகளின் மடைகளில் மன்வெட்டிக்
கொத்தலின் இனிய முத்தங்களெல்லாம்
இனி பழங்கனவு தானோ…
துள்ளி விளையாட வயலும் வரப்புமில்லை…
விளையாட்டைக் கண்டித்து மடை கட்ட
விவசாயியுமில்லை.. 
செம்மண் திப்பி கலந்த அதன் சிவந்த
நிறத்தை உறிஞ்சியெடுத்த அமெரிக்க
இயந்திரத்தின் மலவாயிலிருந்து
நிறமிழந்து ஒரு ப்ளாஸ்டிக் புட்டியிடம்
தன் சுதந்திரமுமிழந்து நிற்கும் சோகம்

வழியும் கண்ணீரோடு நின்ற என்னிடம்
மொழியும் வார்த்தைகளும் அற்று
வெறும் சப்தங்களாய் மதோடு
பேசிச் சென்றாள் அந்தத் தாய்..

“ஓ என் பிள்ளாய்…
என் மடியினின்றும் விலகிச் செல் நீ..
எதை வேண்டி வந்தாய் இன்று..?
உனக்களிக்க ஏதுமில்லை என்னிடம்..
இந்த வனமும் எனதில்லை..
இந்த நீரும் எனதில்லை..
இந்த மீன்களும் எனதில்லை..
நானே எனக்கில்லாத ஓர் நாளில்
எனை நாடி ஏன் வந்தாய்..?
இப்போதே விலகிச் செல் நீ…

அள்ளித் தந்த எனையே
அள்ளிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
என்னில் பிறந்து
என்னில் தவழ்ந்து
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகளே என்னைக்
களவாடிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
பிறந்த மலையும் விலை போனது
வாழ்ந்த பூமியும் விலை போனது
சேரும் கடலும் விலை போனது
நானும் விலை போய் விட்டேன் என் பிள்ளாய்…
ஏதுமற்ற இடத்தில் எதைத்
தேடி வந்தாய் என் பிள்ளாய்…
இருளில் தொலைத்ததை நீ
வெளிச்சத்தில் தேடுகிறாய்…
சோம்பி அமரும் நீ வேண்டாமெனக்கு
இப்போதே விலகிச் செல் நீ…
உன் கண்ணீர் வேண்டாமெனக்கு
என் மலை வேண்டும்
என் வனம் வேண்டும்
என் நிலம் வேண்டும்
என் வரப்பு வேண்டும்
என் கடல் வேண்டும்..
மீட்டுத் தருவாயா என் பிள்ளாய்…?”

சலசலக்கும் சப்தங்களினூடே
ஒரு சோக ராகமும் சில பறைகளின்
ஒலியும்…
செம்மண் திப்பிகளின்றிச் சிவக்கிறது
நதி…
இனி கண்ணீரில்லை…!

செப்ரெம்பர் 16, 2010 Posted by | கவிதை, புனைவு | , | 2 பின்னூட்டங்கள்

உறக்கம் கலைந்து போன தருணம்..

சட்டென்று கலைந்தது
உறக்கம்…
கூச்சல் – இல்லை – கூக்குரல் –
இல்லை ஏதோவொன்று
உலுக்கியெழுப்பிவிட்டது..
கண்களின் முன்னே
நான் உறங்கிப் போன பழைய உலகம்
புதிதாய் ஒரு கோணத்தில் விரிகிறது..
பெரிதாய் மாற்றங்களேதும் இல்லை
அதே காஷ்மீர்
அதே போபால்
அதே பாலஸ்தீன்
அதே போஸ்னியா
அதே ஆப்கான்
அதே ஈராக்
அதே ஈழம்
அதே –
ஒரு ரூபாய் அரிசி
உடன்பிறப்புக் கடிதம்
வண்ணத் தொலைக்காட்சி
கருப்பு வாழ்க்கை…

ஆனால்..
அங்கே சில மனிதர்களுக்கு மட்டும்
கண் காது மூக்கு கை கால்கள்
இல்லை..
வாயும் வயிறும் மலவாயும் மட்டுமேயிருந்தது.
ஏககாலத்தில்
வாய் தின்று கொண்டேயிருந்தது
வயிறு செறித்துக் கொண்டேயிருந்தது
மலவாய் கழிந்து கொண்டேயிருந்தது
இந்த சுற்று வட்டத்திற்கு வெளியே
வயிறும் மலவாயும் ஓய்வெடுத்த
தருணங்களில் வாய் பேசியது…
பேசிக் கொண்டேயிருந்தது…
கலை இலக்கியம் அரசியல்
வாழ்வு சாவு….

பெரிய வாய் –
அதன் ஒருமுனை தென் துருவத்திலும்
இன்னொரு முனை வட துருவத்திலும்
நிலை கொண்டு நின்றது…
மேலுதடு சந்திரனையும்
கீழுதடு சமுத்திரத்தையும் தொட்டது..

பெரிய வயிறு –
உள்ளே பழுப்புக் காகித சோவியத் நூல்களும்
பளீர் காகித பின்னவீன இலக்கியமும்
மட்டிக் காகித தினத்தந்தியும்
இறைந்து கிடக்கிறது..

பெரிய ஆசனவாய் –
பழுப்பும் பளீரும் மட்டியும் கலந்து
மஞ்சளாய்ப் போவதெல்லாம்
இலக்கியம் தான் என்கிறது வாய்..

‘என்ன தான் சொல்லுங்க தோழர்..
கம்யூனிஸ்டுங்க கிட்ட
நிறைய ஆண் மைய்யத் திமிர்…’
வாய் பேசியது

‘எனக்குத் தெரியாத மார்க்சியமா..
எனக்குத் தெரியாத முதலாளித்துவமா..
எனக்குத் தெரியாத கலை இலக்கியமா…
ரசியா தெரியுமா சீனா தெரியுமா
வட கொரியா தெரியுமா க்யூபா தெரியுமா…’
வயிறு செறித்தது

யோனியின் மயிர் கொண்டு வரைந்த
ஓவியங்களை
இலக்கியமாய் பிரசவிக்கும் ஆசனவாய்…
நரகலின் நாறும் உரிமையே
பெணுரிமை என்கிறது வாய்….

கழிவுகளின் நாற்றம் மூக்கைத் துளைக்க
மீண்டும் –
சட்டென்று கலைந்தது உறக்கம்…
-கார்க்கி

ஜூலை 27, 2010 Posted by | கவிதை, பதிவர் வட்டம் | , , , | 2 பின்னூட்டங்கள்

எங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..!

தீயாய்ச் சுட்ட கோடை
மெல்லக் கடக்கிறது
சூள் கொண்ட அடர் மழை மேகங்கள்
மெல்லச் சூழ்கிறது..

கடந்து செல்லும் மேகங்களாய்க்
கடந்து செல்லும் நாட்கள்
கலையும் நினைவுகள்
நாளையும் இன்றும் நேற்று தான்
நேற்றும் நாளையும் இன்று தான்
இன்றும் நேற்றும் நாளை தான்
கடந்து செல்லும் கணம் ஒவ்வொன்றும்
மூளையின் நரம்புப் பிண்ணல்களின்
நினைவு அடுக்குகளில் நிறைய –
அழித்துச் செல்கிறது
புதிதாய் –
எழுதிச் செல்கிறது
 
சோகங்கள் நிகழ்வுகளாகி
நிகழ்வுகள் செய்திகளாகி
செய்திகள் நிதர்சனங்களாகி
நிதிர்சனங்கள் நியாயங்களாயும்
விதிகளாயும் ஒழுங்குகளாயும்
சமூகத்தில் உறைந்து போகிறது
சமூக உறைவின் செய்திகள்
நினைவுகளில் எழுதப்பட்டு
அநீதிகள் அழிக்கப்படுகிறது…

கழிந்து போன வருடங்களின்
இடைவெளிகளில் போபாலின்
கதறல் தேய்ந்து காணாமல்
போகச் செய்யப்பட்டது..
இருபத்தைய்யாயிரம் உயிர்களின்
உணர்வுகளும் ஆசைகளும்
தந்தியின் எட்டாம் பக்கத்து
எட்டாம் பத்தியில் இடம் பிடிக்க
முண்டியடிக்கின்றன..
வரிசையில் காத்திருக்கின்றன
முள்ளிவாய்க்கால் பிணங்கள்

நர்மதை நதியோடு போன
பிணங்களின் முனகல்கள்
காஷ்மீரின் முகடுகளிலும்
முள்ளிவாய்க்கால் மயானங்களிலும்
எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது..

காஷ்மீரத்தின் உடலில்
பாய்ந்த ஈயக் குண்டுகள்
ஈழத்துக் குழந்தையின் உடலைக்
கிழித்துக் கொண்டு வெளியேறுகிறது..
பார்த்துக் கெக்கெளிக்கிறார் வாரன் ஆண்டர்சன்..
செம்மொழிக் கவிதையால் களிம்பு தடவுகிறார்
கவிஞர் எட்டப்பக்கவிராயர்
கோவையில் கைத்தட்டல் –
கொழும்புவில் எதிரொலிக்கிறது…

வழிந்த ரத்தம் வேறு வேறு
சரிந்த உடல்கள் வேறு வேறு
மதங்கள் வேறு வேறு
மொழி வேறு வேறு
குத்துவாட்கள் வேறு வேறு
ஆனால் அதன் உறை மட்டும் ஒன்று

தனியே அழும் கண்கள்
இணைந்து சிவக்கும் நாட்களை நோக்கி…

-கார்க்கி

ஜூலை 13, 2010 Posted by | கவிதை | , , , , , , | 2 பின்னூட்டங்கள்

செயலின்மையிலிருந்து செயலுக்கு…

நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…

திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…

உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது

மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….

இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….

நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…

அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..

ஜூலை 1, 2010 Posted by | Alppaigal, கவிதை, போலி கருத்துரிமை, culture, facist, politics | , , , | 2 பின்னூட்டங்கள்