கார்க்கியின் பார்வையில்

ஒட்டுக் கேட்ட உரையாடல்கள்

நேற்றுக் காலை தேனீர் குடிக்க ரோட்டோர தேனீர்க் கடைக்கு போயிருந்த போது ஒட்டுக்கேட்ட உரையாடல் இது – 

“ஏம்பா உனுக்கு இந்த பங்கு சந்தையிலே புள்ளி ஏறுது பல்லி பதுங்குதுன்னு சொல்றானுவலே அது இன்னான்னு தெரியுமா?”

தந்தியை  மடித்து வைத்துக் கொண்டே கேட்டான் மாதன்.

“அது இன்னா எழவோ என்னா கர்மமோ யாரு கண்டா…. நிதி மந்திரியே கோயில் கூட்டத்துல தொலைஞ்சு போனது மாதிரி பெக்கே பெக்கேன்னு முழிக்குது…. நமக்கு என்னா புரியும்?”

என்றான் சின்னான், மடக்கி வைத்த தந்தியை கையில் எடுத்துக் கொண்டே.

“ஏம்பா அவரு தானே நாட்டுக்கே நிதிமந்திரியாமுல்ல? அவருக்கேவா தெரியலே?”

“”அட ஆமாப்பா… இப்புடி புள்ளி ஏறுரதப்பாத்தாலே பயம்மா இருக்குன்னு பேசி இருக்காரே”

“என்னாபா இது.. இப்புடி ஒரு கிறுக்குப் பயலப் போயி அமிச்சராப் போட்டிருக்காங்களே…”

 ஒரு ஆதங்கத்தில் கேட்டே விட்டான் சின்னான்.

“இன்னிக்கு  நாட்டுல மந்திரியா இருக்க அறிவாளியா இருக்கனுமின்னு கட்டாயமா என்னா?”

சின்னானின் அதே எகத்தாளமான பதிலுக்கு அசட்டுத்தனமாய் சிரித்துக்கொண்ட மாதன் அடுத்த விவகாரத்துக்குள் புகுந்தான்,

“அது சரி.. அது யாரோ காரத்தாமில்ல… அவரு  அணு சக்தி ஒப்பந்தத்துல அரசாங்கம் கையெழுத்துப் போட்டா கவுத்துருவோம் கவுத்துருவோம்னு
சொல்றாறே மெய்யாலுமே கவுத்துருவாரா?”

ஏற்கனவே தினத்தந்தி நாலடியாரின் “தத்துவத்தால்” மண்டை காய்ந்து போயிருந்த சின்னானுக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது..

“அடப்போய்யா நீ வேறே. அவங்க கவலை அவங்களுக்கு.. எலிக்சனு வேற இப்பவா அப்பவான்னு இருக்கில்லே.. அதான் “நீ என்னா வேணா செய்துக்கோ ஆனா எல்லாருக்கும் தெரியறா மாதிரி செய்யாத” அப்படின்னு காங்கிரஸுக்கே காவளித்தனம் பன்றாது எப்புடின்னு சொல்லிக் குடுக்குறாங்கோ. இப்ப இப்புடி தையா தக்கான்னு
குதிக்கிற இவரு… ஏன் இதுக்கு மின்னாடியே நடந்த பேச்சு வார்த்த… அமெரிக்கா நடத்துன கட்டப்பஞ்சாயத்துக்கெல்லாம் மிரட்டாம இருந்தாரு? ரெண்டாயித்தஞ்சிலேயே ரகசியமா ஒப்பந்தம் கையெழுத்தாயாச்சு. இப்ப குதிக்கிறவரு… கையெழுத்து போட்ட பேப்பரையெல்லாம் கிழிச்சுப் போடலாம்னு மட்டும் சொல்லவே இல்ல கவனிச்சியா? அதான் மேட்டரே….!”

“அது சரீ… கம்யூனிஸ்டு கச்சியும் காங்கிரஸும் சேந்து கமிட்டு போட்டு பேசப் போறாங்களாமில்லே.. அப்ப ஒப்பந்தம் நின்னா  மாதிரி தானே?”

“அதாவது மாதா… “நானு சொறி நாயி, என்னோட வேல சும்மா கொறைக்கறது தான். உனுக்கு பிரச்சனையின்னா இந்தா இந்த பஞ்ச வச்சி காதப் பொத்திக்கோ” அப்படின்னு சொறி நாயி சொன்னா மாதிரி தான் இது”

“அட இன்னாபா இது சரியான பேச்சுமாத்தா இருக்கே?”

“இதுல.. கமிட்டிங்கறது பஞ்சு மாதிரி. என்னா ஒரு விசயம்னா.. இதே பஞ்ச நாட்டுல எல்லாரு காதுலயும் பூவாச் சுத்தப் பாக்குறாங்க. அவ்வளவு தான் மேட்டரு”

சிபிஎம், சிபிஐ அரசியல் “தந்திரங்களை”க் கேட்டதால் பேஸ்த் அடித்தது போல் ஆகிவிட்டிருந்த மாதனுக்கு டீக்குடித்தால் தேவலம் போலிருந்திருக்கும் போல..

“யெய்யா சடையப்பா… ஜூடா ரண்டு டீ குடுப்பா” என்றான்.

பேச்சைத்தான் மாற்றிப் பார்ப்போமே என்று அடுத்த கேள்வியை வீசினான் மாதன்,

“அது என்னாபா யாரோ பரதேசிச் சாமியாரு கலைஞரு தலையவே வெட்டச் சொல்லிப் புட்டாராமே?”

“நம்ம ஊருல புள்ளையாரு கச்சி இருக்கே.. அது தான் வடநாட்டுல ராமரு கச்சி..”

“இது இன்னாபா அநியாயமா இருக்கு? நாட்டுல இருக்க மனுசப் பசங்கள வச்சி இவங்க அரசியல் பண்ண மாட்டாங்களாமா?”

“ஊருல எவன் எக்கேடு கெட்டுப் போன எனக்கென்ன கவலைன்னு சொல்லி அரசியல் பன்றது தான் இவங்க பொழப்பே… நம்ம கலைஞரு வேற ராமரோட வேட்டியவே உருவிட்டாரா… சும்மா உடுவாங்களா? அதான் வாயக்குடுத்து இப்ப புண்ணாக்கிட்டு அலையறாங்க.”

“அதான் ராமரு கட்டுன பாலம்னு சொல்றாங்களே.. இவரு ஏன் அத இடிக்கப் போறாரு?”

“அட லூசுப் பயலே… ராமயானமே வெறும் கத தானப்பா? அப்ப ராமரு மட்டும் எப்பிடி உசிரோட இருந்திருக்க முடியும்? அப்புடியே இருந்தாலும் அவரோட காலம் லச்சக்கணக்கான வருசத்துக்கு மின்னன்னு சொல்றாங்க ராமயானத்தப் படிச்சவங்க. லச்சக்கணக்கான வருசத்துக்கு மின்ன நாட்டுல மனுசங்களே இல்லன்னு படிச்ச விஞ்ஞானிகளெல்லாம்
எழுதி வச்சிருக்காங்க. அப்படியே இருந்தாலும், அந்த காலத்துல தமிழ்நாட்டுக்கும் லங்கைக்கும் கடலே இல்லைன்னும் விஞ்ஞானிமாருக சொல்றாங்க.. அப்புடியே கடல் இருந்தாலும் 30 மைல் தூரத்துல இருக்கற லங்கைக்கு 800 மைல் தூரத்துக்கு ஏன் பாலங்கட்டனும்?”

“அடப்பாவமே இதக் கேப்பாரே இல்லையா?”

“அதக் கேக்கப் போயி தான் நம்ம கலைஞரு நாக்க வெட்டனுமின்னு சொல்லி இருக்கான் அந்த சாமி”

“அடப்பாவி.. இவனுகளயெல்லாம் ரோட்டுல ஓட விட்டு அடிக்கனும்பா”

“அதத்தானே நம்ம தி.முக காரங்க நல்லாவே செய்யறாங்களே..”

“புள்ளையாரு கச்சிக்காரங்க புதுசா ஈழத்துல இருக்க நம்மாளுகளுக்கு துணி மனியெல்லாம் வாங்கியனுப்ப போறாங்களாமே”

“இதுக்குப் பேரு தான் கூடிக் கெடுக்கறது. இவனுக கிட்ட மட்டும் சாக்ரதையா இருக்கனும்பா”

“நம்ப ஏரியாவுக்கு வரட்டும்.. சாணி கரச்சி அடிக்கறேன்”

காலியான தேனீர் கோப்பைகளை வைத்து விட்டு இடத்தை காலி செய்தனர் மாதனும் சின்னானும். தேனீர்க்கடை அரசியல் பேச்சும் சலூன் கடை அரசியல் அரட்டைகளுமாகத் தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்களை சாதாரண மக்கள் அறிந்து கொண்டனர் என்று சமீபத்தில் எங்கோ படித்ததை, ‘எங்கே படித்தோம்?” என்று யோசித்துக் கொண்டே
நானும் நடையைக் கட்டினேன்.

Bye the way, அது இன்னும் நினைவுக்கு வந்தபாடில்லை!

ஒக்ரோபர் 17, 2007 Posted by | politics | | 1 பின்னூட்டம்

   

%d bloggers like this: