எந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்?
நேற்றுத்தான் எனக்கு எந்திரனை தரிசிப்பதற்கான பெரும் பேறு வாய்க்கப்பெற்றது. நல்ல பிரிண்ட். நன்றி மலேசியா.
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் – ரஜினியின் ரசிகப்பெருமக்களே, உங்களோடு மல்லுக்கட்டுவது இப்பதிவின் நோக்கம் அல்ல அல்ல அல்லவே அல்ல. ஏற்கனவே இப்படத்தின் வியாபார ஏகபோகத்தனத்தை விமர்சித்தும், இப்படத்தை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதன் பின்னுள்ள வக்கிரம் குறித்தும், ரஜினி என்கிற நமுத்துப் போன பட்டாசை விமர்சித்தும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றுள் உங்களுக்காக நான் பரிந்துரைப்பது வினவு கட்டுரைகளை. இன்னொரு பக்கம் ரஜினியின் ரசிகர்களால் படத்தின் இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வெளியேறி – “தமிழேன்ண்டா…” பாணி விமர்சனங்களும் வலைப்பூக்களில் நிறையவே இறைந்து கிடக்கிறது. எனவே அந்த எல்லைக்குள் நான் நுழையவேயில்லை. அதற்கு வெளியே இந்தத் திரைப்படம் குறித்து சொல்ல எனக்குச் சில விடயங்கள் உள்ளன. எனினும், எந்திரனை முன்வைத்து எனது உரையாடல் இருக்கப்போவதால், படத்தைப் பற்றிய எனது சுருக்கமான விமர்சனத்தை மட்டுமே வைக்கிறேன்.
நீங்கள் இப்போது கண்களை மூடிக் கொண்டு தமிழ்த் திரைப்படத்தின் கருப்பு வெள்ளை காலத்துக்குச் செல்லுங்கள். விட்டலாச்சார்யாவின் ஒரு திரைப்படம். பெயர்….? ‘பரஞ்சோதியும் பாசக்கார பூதமும்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்… சுந்தராபுரி என்கிற ஒரு தேசத்தில் பரஞ்சோதி என்கிற ஒரு நல்லவன் இருக்கிறான். அவன் தான் நம்ம ஹீரோ. அவனிடம் ஒரு பூதம் இருக்கிறது. அது ஒரு நல்ல பூதம். பூத உலகில் இருக்கும் மற்ற குட்டி பூதங்களையெல்லாம் விட சிறந்த பல சக்திகளைக் கொண்ட பூதம். அந்தக் கதையில் வில்லன் ஒரு கெட்ட மந்திரவாதி. அவனிடம் இருக்கும் பூதங்கள் சோப்ளாங்கி ரக பூதங்கள். அவன் எப்படியாவது ஹீரோவிடம் இருக்கும் நல்ல பூதத்தைக் கவர்ந்து விட முயல்கிறான். அதன் வல்லமையை வைத்து தானே அந்த தேசத்தின் அரசனாகி விட நினைக்கிறான். பரஞ்சோதியின் பூதத்தை எப்படியோ ஏமாற்றிக் கவர்ந்து விடும் வில்லன், நாட்டில் பல அக்கிரமங்களைச் செய்யத் துவங்குகிறான். பரஞ்சோதியும் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் ஒரு குட்டித் தீவில் ஒரு தங்கக் கூண்டில் வசிக்கும் கிளியின் உடலில் ஒளிந்திருக்கும் கெட்ட மந்திரவாதியின் உயிரை எடுத்து பாசக்கார பூதத்தையும் நாட்டையும் காப்பாற்றுகிறான். அவன் அந்த முயற்சியின் இருக்கும் போது பரஞ்சோதியின் காதலி கெட்ட மந்திரவாதியின் கவனத்தை தன்பால் ஈர்த்து வைத்திருக்க ‘என் மணாளா…… என் கண்ணாளா…ஆஆஆஆ…” என்று ஒரு பாடலைப் பாடி பரதநாட்டியம் ஆடுகிறார்.
நீங்கள் இப்போது ஒரு முப்பதாண்டுகள் முன்னேறி வருகிறீர்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் வருடம். ஈஸ்ட்மென் கலரில் ஒரு ஏவிஎம் திரைப்படம். பெயர்…..? ‘தாயே தெய்வமே’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கதையில் ஹீரோ ஜெய்சங்கர் ஒரு யானை வளர்க்கிறார். அது பலம் பொருந்தியது. அது நல்ல பல காரியங்களைச் செய்கிறது. இதில் வில்லனாக வரும் அசோகன், அந்த யானையை எப்படியாவது ஜெய்சங்கரிடம் இருந்து கவர்ந்து அதை ஸ்மக்லிங் (கோல்டு பிஸ்கோத்து) செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். நல்லவிதமாகக் கேட்டுப் பார்த்து தராத ஜெய்சங்கரிடம் இருந்து அந்த யானையை எப்படியோ கவர்ந்து விடும் வில்லன், அதை கெட்ட காரியங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். ஜெய்சங்கர் சும்மா இருப்பாரா…? வட்டமாக கவ்பாய் தொப்பி மாட்டிக் கொண்டு, முதுகுக்குப் பின்னே இரட்டைக் குழல் துப்பாக்கியும், இடையில் இரண்டு
ரிவால்வரும் பொருத்திய பெல்டையும், மார்புக்குக் குறுக்கே தோட்டா பெல்ட்டையும் வரிந்து கட்டிக் கொண்டு வில்லனைத் தேடி போகிறார். அவருக்க்கு பக்க வாத்தியமாக டைட் பேண்ட் மாட்டிய ஹீரோயினும் பாங்கோ டிரம்ஸுடன் எம்.எஸ்.விஸ்வநாதனும் கூடவே வேறு குதிரைகளில் போகிறார்கள். எம்.எஸ்.வி டிரம்ஸ் வாசிக்க, ஹீரோயின் வில்லன் முன் ஒரு கிளப் டேன்ஸ் ஆடும் சைக்கிள் கேப்பில் யானையை மீட்டுவிடும் ஜெய்சங்கர், வில்லனைக் கொன்று யானையைத் திருத்துகிறார். சுபம்.
போதும் போதும்.. கண்ணைத் திறந்து தொலையுங்கள்.
இப்போது இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு. எந்திரன் விமர்சனம் கீழே –
பரஞ்சோதி = ஜெய்சங்கர் = வசீகரன் (ரஜினி)
பாசக்கார பூதம் = பாசக்கார யானை = பாசக்கார எந்திரன் (சிட்டி)
கெட்ட மந்திரவாதி = கெட்ட அசோகன் = கெட்ட விஞ்ஞானி (வில்லன்)
ஹீரோயின் = ஹீரோயின் = ஹீரோயின் (ஐசுவரியா -அலைஸ் – ஒலக அழகி)
மணாளனே…. = கிளப் டான்ஸ் = அரிமா அரிமா
ஊஊஊ… = டிடும் டடும் குடும் (MSV) = ஷக் திக் ஷக் ஹூக் ஹிக் ஹாஆஆங்ங் (AR.Rahman)
மாடர்ன் தியேட்டர்ஸ் = ஏ.வி.எம் = கலாநிதி மாறன்
விட்டலாச்சார்யா = ஆர்.சுந்தரம் = ஷங்கர்
எந்திரன் விமர்சனம் முற்றிற்று.
வேற எந்த வெங்காயமும் என் கண்களுக்குப் புலப்படாமல் போனதற்கு என் கண்களின் கோளாறே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
இந்தத் திரைக்காவியத்தை தமிழ் திரைப்படங்களின் உச்சம் என்றும், ஹாலிவுட்டுக்கே விடுக்கப்பட்ட சவால் என்றும் எழுதப்படும் கட்டுரைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. பொதுவில் சாதாரண இரசிகர்களின் கண்ணோட்டமும் அப்படியே இருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு. முதலில் நவீனம், முன்னேற்றம், வளர்ச்சி என்பதை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் இருக்கும் கோளாரு தான் இத்திரைப்படத்தின் தொழில் நேர்த்தி நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் மயக்கத்தின் காரணம். கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை – நாம் இந்த நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொஞ்சம் அறுத்துப் பார்த்து விட்டு திரும்ப எந்திரனுக்கு வருவோம்.
இந்தியாவில் எதில் நவீனம் இல்லை? எல்லாமே நவீனம் தானே…. விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போமே. நிலத்தை உழ டிராக்டர். களை புடுங்க மிஷின். கதிர் அறுக்க மிஷின். கதிர் அடிக்க மிஷின். தென்னை மரம் ஏறக்கூட மிஷின் வந்து விட்டதாம். போக்குவரத்து வாகனங்கள் என்று பார்த்தால்… அலுங்காமல் குலுங்காமல் சாலையைத் தழுவிக் கொண்டே ஓடும் வோல்வோ பஸ்கள் வந்தாயிற்று, நெடுஞ்சாலைகளைக் கிழித்துப் பறக்கும் ஹார்லி டேவிட்சன் இருக்கிறது, ஆவ்டி கார்கள், பி.எம்.டபிள்யூ கார்கள்… சரி நம்ம இராணுவத்தைப் பார்ப்போமே.. ஒலியை விட வேகமாய் பறக்கும் நூற்றுக்கணக்கான சுகோய் Su-30 MKI ரக போர் விமானங்கள், ஒலியை விட வேகமாய் பறந்து தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், தாக்கி விட்டு ஒளிந்து கொள்ளும் விசேடமான டாங்கிகள், அடுத்த தலைமுறைக்கான யுத்த தளவாடங்கள்…. இன்னும் கணினிகள், மூன்றாம் தலைமுறை அலைவரிசை
சேவைகள், செல்போன்கள், ஜட்டிகள், பனியன்கள்..
இதெல்லாம் நவீனமோ, வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லை என்கிறேன்..
‘அடப் போங்க சார்… இத்தினி இருந்தும்… நீங்க என்னடான்னா இன்னும் பழைய பல்லவியையே பாடறீங்களே..’ என்கிறீர்களா? ஒரே ஒரு கேள்வி. இத்தனை ஆள் அம்பு யானை சேணையெல்லாம் இருக்கே…. அப்புறம் ஏன் பாகிஸ்தான் லொள்ளு பண்ணும் போது திருப்பி அடிக்க முடியாம அமெரிக்கா கிட்ட ஓடுறாங்க? புள்ளியியல் ரீதியில் பார்த்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு போர் என்று வந்தால், அது ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விடுமாம். இந்தியாவின் எண்ணிக்கை பலம் அப்படி. ஆனா முடியலையே… ஏன்? நீங்க என்பதுகளில் வரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன் ஸ்டைலாக ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து பைப் புகைத்துக் கொண்டிருப்பான். அவன் அடியாட்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் பாடிபில்டர்களாக இருப்பார்கள். பயில்வான் தான்.. வஸ்தாது தான்… எல்லாம் தெரியும் தான்… ஆனா சுயமா அடிக்க முடியாதே…. அது தான் இந்தியா.
ஆக, கருவிகளில் வரும் மாற்றங்களைக் கொண்டு மட்டும் நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளவிடுதாக இருந்தால் இந்தியா வஸ்தாது தான் – எந்திரன் ஹாலிவுட்டுக்கு
சவால் தான். ஆனால், அந்த மாற்றத்தை எந்தவகையில் பயன்படுத்துகிறோம், அது நம் சிந்தனையில் எவ்வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கருவிகளிலான (தொழில்நுட்பம்) மாற்றம் வாழ்நிலையில் எவ்வாறான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் தான் நமக்கு முழு சித்திரமும் கிடைக்கும். கணினிகளை ஜோதிடம் பார்க்கவும், வேறு ஒரு நாட்டுக்கு கணக்கெழுதித் தரவும் மட்டும் பயன்படுத்தி விட்டு என் கிட்டயும் கம்ப்யூட்டர் இருக்கு அதனால நானும் ரவுடி தான் என்றால் என்ன அர்த்தம்? அப்படித்தான் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
ஒரு நவீன ஹாலிவுட் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களும் எந்திரனிலும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்ப்போம்.
2004ம் ஆண்டு வெளியான ஐ.ரோபாட் மற்றும் 2009ம் ஆண்டு வெளியான சர்ரோகேட்ஸ். இரண்டிலும் மனிதனுக்கும் இயந்திரப் பயன்பாட்டிற்கும் இடையில் எழும் முரண்பாட்டை
பிரதானமாய்க் கையாளுகிறார்கள். மனிதனுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்படும் இயந்திரங்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்கும் திறனையும் பெற்று ஆதிக்க நிலையை அடைகிறது.
இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் மனித வேட்கைக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே நிகழும் முரண்பாட்டைக் காணலாம். இவ்விரு திரைப்படங்களும்
கூட அமெரிக்க மசாலாத்தனம் கொண்ட வணிகக் குப்பைகள் தான். அதிலும், அவர்கள் குறிவைக்கும் வணிக இலக்கு என்பது எந்நேரமும் அச்சத்திலிருக்கும் சராசரி அமெரிக்கர்களின் உளவியல்.
அமெரிக்கர்களின் இந்த அச்சத்தின் வெளிப்பாடுகளை அவர்களது வெகுசன வணிக சினிமாக்களில் காணலாம். ஒரு பல்லி திடீர் என்று பெரிதாகி ஊருக்குள் புகுந்து விடுவது (கோட்ஸில்லா) , ஒரு பழங்காலப் பிராணி திடீரென்று உயிர்பெற்று ஊருக்குள் புகுந்து விடுவது (ஜுராசிக் பார்க்).. அயல்கிரகத்து மனிதர்கள், வினோதமான பூச்சிகள், வினோதமான கடல் உயிரினங்கள்… என்று அம்புலிமாமா தரத்திலான கற்பனையில் கொஞ்சம் தொழில்நுட்பத்தைக் கலந்தால் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக் பஸ்ட்டர் தயார். இந்த வணிக சினிமா சூத்திரத்தினுள்ளும் கூட அவர்கள் தமது மக்கள் வாழ்வின் மேல் கொண்டிருக்கும் அச்சத்தையே அச்சாரமாகக் கொண்டு சிந்திக்கிறார்கள். ஆனால் எந்திரன் ஒரு சராசரி இந்தியனின் பாமரத்தனமான கற்பனையளவுக்குக் கூட – அதாவது ஒரு கந்தசாமியின் அளவுக்குக் கூட – கதைக்களனுக்காக மெனக்கெடவில்லை. அப்படியே விட்டலாச்சார்யாவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கொண்டு வந்துள்ளார்கள்.
கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் கோல்டு பிளேக் கிங்ஸ் பாக்கெட்டினுள் துண்டு பீடியை வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் – அதன் வெள்ளித்திரை வடிவம் தான் எந்திரன்.
ஒரு டெரா பைட் வேகமும் ஒரு ஸெட்டா பைட் நினைவுத் திறனும் கொண்ட எந்திரன் என்ன செய்கிறான்? மருதாணி வைக்கிறான். ஸ்டைலாக நடந்து தன் இடுப்பில் கைவைக்கிறான். நாயகியைக் காப்பாற்ற பொறுக்கிகளின் மூஞ்சியில் கை வைக்கிறான். பாட்டுப்பாடி பரதநாட்டியம் ஆடுகிறான். கருநாடக சங்கீதம் பாடுகிறான். மருத்துவச்சி வேலை செய்கிறான். மொத்தத்தில் முதல் பாதியில் எந்திரன் மயிலாப்பூருக்கும் நங்கநல்லூருக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறான். இரண்டாவது பாதியில் நிறைய பேரைக் கொல்கிறான், ஹீரோவின் டாவு மேலேயே கண் வைக்கிறான். இந்த ரெண்டாவது காரணம் ஒன்று போதாதா? ஒரு மருவை ஒட்டிக் கொண்டு வில்லனின் கோட்டையில் புகும் ஹீரோ, நாயகியை வில்லன் முன் டான்ஸ் ஆட வைத்து அந்த கேப்பில் ஜெயித்து விடுகிறான்.
இது தான் ஹாலிவுட் தர கற்பனையா? இதே இருநூற்றம்பது கோடியைத் தூக்கி இராம நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிட அருமையான ஒரு படத்தை எடுத்திருப்பார்.
எனக்கு ஹாலிவுட் திரைப்படமான அவதார் நினைவுக்கு வந்தது. அதில் தொழில்நுட்பத்தின் மேண்மைக்கும் அதன் உருவாக்க நேர்த்திக்கும் கிடைத்த பாராட்டு என்பது அது எப்படி எதன் மேல் கையாளப்பட்டது என்பதைக் கொண்டே கிடைத்தது. அது ஒரு அந்நிய தேச திரைப்படம் தான். ஒரு அமெரிக்க வெள்ளையரின் கற்பனை தான். ஆனாலும் கூட அது நம்மிடம் ஏதோவொன்றைச் சொன்னது. நமது சமகாலத்தின் நிகழ்வுகளின் மீதான நமது கோபத்தை அது மீட்டியது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் தங்களை அந்த கிராபிக்ஸ் பொம்மைகளிடம் கண்டார்கள். இன்காக்கள், மாயன்கள், ஆப்ரிக்கக் கருப்பர்கள் தொடங்கி இன்றைய கோண்டுக்கள் வரையிலான பூர்வகுடி மக்களை பண்டோரா கிரகத்து மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவதாரின் வடிவம் அதன் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு நின்றது – துருத்திக் கொண்டிருக்கவில்லை.
நம்மிடமும் கணினிகள் இருக்கிறது தான். அது கணினியின் வேலையைச் செய்யவில்லை – கிளியின் வேலையைச் செய்கிறது
அன்றைக்கு ஆர்.எஸ் மனோகரிடம் தொழில் நுட்பம் இருந்தது. எம்.ஆர்.ராதாவிடம் அது இல்லை – அதைவிட ஆயிரம் மடங்கு வீரியமான நவீனமான சிந்தனை இருந்தது. இன்று ஆர்.எஸ் மனோகராக ஷங்கர் இருக்கிறார்.. ஆனால் ஒரு எம்.ஆர்.ராதா இல்லை. அப்படி ஒருவர் தோன்றுவதற்கான வாய்ப்புகளை சன் குழுமத்தின் வியாபார ஏகபோகம் ஏறத்தாழ ஒழித்துக் கட்டிவிட்டது என்றே சொல்லலாம்.
– to be contd….
செயலின்மையிலிருந்து செயலுக்கு…
நாட்கள் ஒவ்வொன்றும்
கால வெளியைக் கிழித்துக் கொண்டு
முன்னே செல்கின்றன…
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
காலை – உச்சி – அந்தி – இரவு
தின்ற நாட்களையெல்லாம்
அனுபவங்களாய்க் கழிகிறது அறிவு…
எஞ்சியதெல்லாம் கொஞ்சம்
மொன்னைத்தனம் தான்…
திருமணத்துக்கு காசு
கொடுத்த மவராசன்
பிள்ளையும் நானே தருவேன்
என்று சொல்லாமல் போனான்…
அரசு கொடுத்த காசில்
மாப்பிள்ளை வாங்கிவிட்டு
கொசுராய் கொஞ்சம்
சுயமரியாதையும் கிடைக்காதா
என்று ஏங்கும் மனங்கள்…
உலையில் கொதிக்கும்
ஒரு ரூபாய் அரிசி
மூளையை நிரப்பி
அறிவின் மலச்சிக்கலாகி
செயலின்மையாய் உடலோடு உறைகிறது
மரித்தவர் பேசிய மொழிக்கு
கோடிகளில் மாநாடு…
நடக்கும் பிணங்களால் நிரம்பியது
மாநாட்டு அரங்கு..
வல்லூறுகளின் இயக்கத்தில்
காக்கைகள் நடத்திய கச்சேரிக்கு
ஒரு குடும்பம் தலையசைக்க
ஒரு கோடி குடும்பங்கள் தலைகவிழ்ந்தன….
இயங்கும் உடலுக்குள்
இயங்காத உள்ளம் கொண்டிருக்கும்
கல்தோன்றி முன் தோன்றா காலத்தே
முன் தோன்றி மூத்த குடிகளின் மேல்
மூத்திரம் பெய்கிறான்
கோண்டு இனச் சிறுவன்…
அசத்தோமா சத்கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அம்ருத்தங்கமய
அதற்கு மேல் யோசிக்காமல்
தேங்கிவிட்ட கேணோபநிஷதம்
விட்ட இடத்திலிருந்து
செயலின்மையிலிருந்து செயலுக்கும்
மானக்கேட்டிலிருந்து சுயமரியாதைக்கும்
கோழைத்தனத்திலிருந்து வீரத்துக்கும்
அடிமைத்தனத்திலிருந்து விடுதலைக்கும்
வழிகாட்டிப் பாடம் நடத்த
வருகிறாள் கோண்டு இனக் கிழவி….
நானே வழியென்று கல்லறைக்கு
வழிகாட்டிய யூதத் தச்சன் காட்டாத
வழியைக் காட்டிச் செல்கிறது
சீறிக்கிளம்பும் கோண்டு அம்பு…
அந்த வழி..
பரலோக சொர்கத்திற்கல்ல
பூலோக சொர்க்கத்திற்கு..
இன்னும் கொஞ்சம் வாழ்க்கை..!
அது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஒரு குட்டி தீபாவளி
போல இருக்கும். மில்லில் அன்றைக்குத் தான் சம்பளம் கொடுப்பார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்கு வரும் போது அப்பா எனக்கும் அண்ணாவுக்கும் லாலா கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வருவார். அம்மா வீட்டில் ஒரு பழைய உஷா தையல் மிஷின் ஒன்றை வைத்து தெரிந்தவர்களுக்கு கிழிந்த பழைய துணியெல்லாம் தைத்துக் கொடுப்பாள். தையல் மிசின் இருக்கும் மூலையிலேயே பக்கத்து திட்டில் ஒரு பழுப்பேரிய டப்பா இருக்கும். அதில் அம்மாவுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களைப் போட்டு வருவாள். அது முழுக்க நிரம்பி வழியும் மாதத்தில் எனக்கும் அண்ணாவுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய்கள் கிடைக்கும்.
ஏழாம் தேதிக்கு அடுத்து வரும் சனிக்கிழமை எனக்கு இன்னுமொரு கொண்டாட்டமான நாள். அப்பாவுக்கு வார லீவு நாள் சனிக்கிழமை தான்.
சிலவுக் கணக்கை எழுதிய பின் அந்த மாதத்துக்கான மளிகை சாமான் வாங்கும் நாள் தான் அடுத்து வரும் முதல் சனிக்கிழமை. பொருட்களை
பிடித்துக் கொள்ள என்னையும் சைக்கிளின் பின்னே அமர வைத்து கூட்டிப் போவார். டவுனைப் பார்க்கப் போகும் சந்தோசத்தை விட எனக்கு நாங்கள் பொருள் வாங்கப் போகும் கடையில் கணக்கெழுதும் கணேசனைப் பார்க்கப் போகும் சந்தோசம் தான் தூக்கலாக இருக்கும்.
எங்கள் வீடு தாராபுரம் தாண்டி வெள்ளகோயில் போகும் வழியில் மூலனூரில் இருந்தது. பக்கத்தில் ஓரளவுக்கு பெரிய டவுன் என்றால் அது தாராபுரம் தான். தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நீங்கள் திருப்பூர் செல்லும் வழியில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் வந்தால் ஒரு ரவுண்டானா
இருக்கும். அதில் வலது புறம் திரும்பி ஒரு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஒரு நால் ரோடு சந்திப்பு வரும் – அந்த இடத்திற்கு பூக்கடை
நிறுத்தம் என்று பெயர். அதில் இடது புறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால் இடது புறம் கரூர் வைசியா பேங்கிற்கு நேர் எதிரே வலது புறத்தில் பால் பாண்டி டிரேடர்ஸ் இருக்கும்.
பதினைந்து வருடத்திற்கு முன் ஊக்கு முதல் சகல மளிகை சாமானும் விற்கும் பெரிய கடை அந்த வட்டாரத்திலேயே பால் பாண்டி டிரேடர்ஸ் தான். எந்த நேரமும் ஐம்பதுக்கும் குறையாமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள். போனதும் கணேசனிடம் முதலில் பில் போட வேண்டும். பில் என்பது கையால் ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்படும் சிட்டை தான். அந்த சிட்டையின் கடைசியில் மொத்த தொகை போட்டிருப்பார்கள். அதை கல்லாவில் அண்ணாச்சியிடம் கட்ட வேண்டும். பின் அந்த பில்லின் நீளத்தைப் பொருத்து அதை உள்ளே வேலை செய்யும் கடைப் பையனிடம் கணக்கெழுதிய கணேசனே கொடுப்பார். பொருட்கள் கட்டப்பட்டு சரிபார்க்கப் படும் வரையில் கல்லாவுக்கு நேர் எதிராக போடப் பட்டிருக்கும் அரிசி மூடைகளில் அப்பா அமர்ந்திருப்பார். கணேசன் என்னைக் கூப்பிட்டு தன் அருகேயே அமர வைத்துக் கொள்வார்.
அரிசி மூடைகள் வரிசையாக வைத்திருக்கும் பகுதிக்கு நேர் பின்னே தான் கணேசன் அமர்ந்து பில் போட்டுக் கொண்டிருப்பர். அங்கேயிருந்து
அவரைத் தெளிவாக கவனிக்க முடியும். கனேசனைப் பார்த்தவர்கள் முதலில் ஆச்சர்யப்படுவார்கள். அவருக்கு காதும் மூளையும் தலையில்
இருக்கிறதா இல்லை கைகளில் இருக்கிறதா என்று ஒரு குழப்பம் வரும்.
“அண்ணாச்சி, கொள்ளு ஒரு கிலோ, து.பருப்பு ரெண்டுகிலோ, க.எண்ணை அஞ்சு லிட்டர்,. மஞ்சள் கால் கிலோ, ச.மாவு ரெண்டு கிலோ, ம.மாவு
ரெண்டு கிலோ, வெ.ரவை ரெண்டு கிலோ, கோ.ரவை ஒரு கிலோ, ப.பருப்பு ஒரு கிலோ, ஊதுபத்தி ரெண்டு ரோலு, ஒட்டகம் மார்க் அரப்பு அரை கிலோ, புலி மார்க் சீயக்கா அரை கிலோ, ஐய்யார் இருவது சின்ன சிப்பம், பச்சரிசி ரெண்டு கிலோ, உளுந்து ஒரு கிலோ, கடுகு அம்பது கிராம், கேரளா குண்டு மிளகு நூறு கிராம், சீரகம் நூறு கிராம், மல்லி நூறு கிராம், புளி ஒரு கிலோ, கல் உப்பு அரை கிலோ, சக்கரை மூணு கிலோ, திரி ரோஸ் டீ தூள் நூறு கிராம், கண்ணன் காபி தூல் நூறு கிராம், சூப்பர் மேக்ஸ் பிளேடு நாலு, ரெண்டு நட்ராஜ் பென்சில்.. அப்புறம் அவ்வளது தான் – சீக்கிரம் பில்லப் போடுங்க” மாத சம்பளக்காரர்கள் இப்படி தாறுமாறாக ஒப்பித்து விட்டு அவசரப் பட்டுக் கொண்டு நிற்பார்கள்.
அவர் ஒவ்வொரு பொருளின் பெயரையும் அளவையும் சொல்லி முடித்த பிண்ண நொடியில் அது எழுதப்பட்டு அதற்கான விலையும் எழுதப்பட்டு விடும். இந்த மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் விலை ஏறி இறங்கும். காலையில் அண்ணாச்சி அன்றைய விலை நிலவரத்தை வரிசையாக கிலோவுக்கு இத்தனை என்று சொல்லுவதை கனேசன் ஒரு டீயை உறிஞ்சியபடி கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் வாடிக்கையாளர்கள் பல்வேறு அளவைகளில் சொல்வதை அவர் சொல்லி முடிக்கும் முன்னரே மனதுக்குள் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து விலையை வரிசையாக எழுதி, கீழே கோடு கிழித்த அடுத்த பத்து நொடிகளில் வரிசையாக எல்லா தொகையையும் கூட்டி மொத்த தொகையை எழுதி விடுவார். வேலை செய்யும் அனுபவம் கொண்ட பையனிடம் கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் சின்ன பில்லை கொடுக்க வேண்டும். அவசரம் அல்லாத பெரிய பில்லையும் கூட புதிய பையனுக்கு அவ்வப்போது கொடுக்க வேண்டும் – அவனும் பயிற்சி பெற்று தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா.
இந்த நுணுக்கமான அவதானிப்புகள் எல்லாம் பில்லை எழுதி, பொருளுக்குண்டான விலையை அதன் அளவுக்கேற்ப எழுதி, அதன் மொத்த மதிப்பை கூட்டி எழுதும் அந்த நேரத்திற்குள்ளேயே முடிந்து விடும். இதையெல்லாம் கை எழுதிக் கொண்டிருக்கும் போதே வாய் விசாரிப்புகளில் இறங்கியிருக்கும்.
“என்ன அண்ணாச்சி, பையன காலேஜுல சேத்துட்டியளா. எத்தன ரூவா கட்டினிய?”
“அத ஏங்க கேக்கறீங்க.. வாங்குன ஒன்னார்ருவா மார்க்குக்கு இன்சினீருக்குப் படிக்கனுமாம் தொரைக்கு. பணம் பொரட்டத்தான் இப்போ நாயா அலைஞ்சிட்டு இருக்கேன்” அந்த நடுத்தர வயது சலிப்புக்கு உடனே ஆறுதல் வரும்..
“விடுங்கண்ணாச்சி.. நாம தான் படிக்க வைக்க ஆளில்லாம இன்னிக்கு லோல்படுறோம்.. நம்ம பிளையளாவது படிக்கட்டுமே.. காச என்ன முடிஞ்சா
கொண்டு போறம்… இன்னாங்க பில்ல பிடிங்க. காச அங்க கல்லாவுல கட்டுங்க” சிட்டையை அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே திரும்பி “ஏல..
செல்லதொர இங்க வால. அண்ணாச்சிக்கு இந்த லிஸ்ட்ட வெரசாக் கட்டித் தா. ஒரு கலரு ஒடச்சி கொடு – நீங்க அந்தா அந்த மூடைல
இருங்கண்ணாச்சி.. பய சீக்கிரமா போட்டுத் தருவான்”
அத்தனை கவனமான வேலைக்கு இடையிலும், விசாரிப்புகளுக்கு இடையிலும், உள்ளே யார் சும்மா நிற்கிறார்கள் என்கிற கவனிப்புகளுக்கு
இடையிலும், எந்நேரமும் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலிக்கு இடையிலும், முகத்தில் நிரந்தரமாய் ஒரு சிரிப்பு தேங்கியிருக்கும். முகத்தின் அமைப்பே சிரிப்பது போல் தானோ என்று நான் சந்தேகப் பட்டதும் உண்டு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளை கணேசன் அழைத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். கடையில் கூட்டம் குறைவாய் இருக்கும் நாளில் ஏதாவது பில்லை என்னிடம் கொடுத்து மொத்த தொகையை கூட்டித் தரச் சொல்வார். நான் திணருவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அதே கணக்கை தனது மின்னல் வேக பாணியில் போட்டு விட்டு ‘நாங்கெல்லாம் அந்தக் கால எட்டாவதாக்கும்; அந்தக்கால எட்டாவதும் இந்தக் கால எம்மேயும் ஒன்னுதான் தெரியுமாடே’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்.
என்னிடம் அவருக்கு தனி அக்கரை உண்டு. நான் அப்பாவோடு போகும் போதெல்லாம் தனியே என்னிடம் விசாரிப்பார். அவரின் சட்டையின் மேல்
பை பெரிதாக இருக்கும் அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருக்கும். அதில் கையை விட்டு அள்ளி எத்தனை வருகிறதோ அத்தனையும் எனக்கே கொடுப்பார். மளிகைக் கடைகளில் ரோஜா பாக்கு, பான் பராக் போன்ற லாகிரி வஸ்துக்களை மொத்தமாக வாங்க ஊக்குவிக்கும் பொருட்டு
அதன் முகவர்கள் சின்னச் சின்னதாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். நீங்கள் இந்த முப்பது நாப்பது ரூபாய் விலையில் விற்கும் டிஜிடல் வாட்ச்சை எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதெல்லாம் அது போன்ற வாட்சுகளே அனேகமாக கிடைப்பதில்லை. முன்பு அது போன்ற வாட்சுகளை சும்மா இலவச இணைப்பாக கொடுப்பார்கள். அதுவும் ஓரிரண்டு மாதத்துக்கு ஓடும். பச்சை மஞ்சள் நீலம் ரோஸ் என்று கலர் கலரான ப்ளோரஸண்ட் நிற வாரில் மிக்கி மௌஸ், டாம் & ஜெர்ரி படம் எல்லாம் போட்டிருக்கும்.
கணேசன் வேலை செய்வதைப் பார்த்து எனக்கும் என்றாவது ஒரு நாள் கணக்கெழுதும் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்ட காலம்
ஒன்று இருந்தது. பத்தாவதற்குப் பின் அப்பா என்னை பழனியில் பாலிடெக்னிக் படிக்க அனுப்பி விட்டார். அங்கே பாட்டி தாத்தாவின் வீட்டில்
நின்று படித்துக் கொண்டு ஆறு மாதம் ஒருமுறை தான் மூலனூருக்கு வருவேன். பாலிடெக்னிக் முடிந்து ஒருவழியாக ஒரு கம்ப்யூட்டர் சர்வீஸ்
கம்பெனியில் சேர்ந்தேன். ஒரு ஆறு ஆண்டு காலம் வாழ்கையும் பிழைப்பும் என்னை எனது சொந்த மண்ணில் இருந்து பிய்த்து எடுத்து விட்டது.
வீட்டுக்குப் போகும் நாளில் எல்லாம் அம்மாவோடும் அப்பாவோடும் செலவிடவே நேரம் பத்தாத நிலையில் பால்பாண்டி டிரேடர்சும் அப்பாவோடு சைக்கிளில் போன நினைவுகளும் ஏறக்குறைய மறந்தே விட்டது.
இரண்டாயிரத்து மூன்றாம் வருட வாக்கில் நான் எங்கள் கம்பெனியின் திருப்பூர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது காலையில்
தலைமை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு –
“சங்கர், உங்களுக்கு ஒரு இன்ஸ்டாலேஷன் செட்யூல் ஆகி இருக்குங்க” மேரியின் அதே வழக்கமான சலிப்பூட்டும் குரல்
“அப்படியா.. கஸ்டமர் அட்ரஸ், காண்டாக்ட் போன் நெம்பர் எல்லாம் சொல்லுங்க மேடம்” அசுவாரசியமாய் காதைக் குடைந்து கொண்டே
நோட் பேடை கையில் எடுத்துக் கொண்டேன்.
“நோட் பண்ணிக்குங்க – எம்.எஸ் பால்பாண்டி டிரேடர்ஸ், பூக்கடை ரோடு, தாராபுரம். காண்டாக்ட் நேம் – மிஸ்டர். பால்பாண்டி
நிமிர்ந்து உட்கார்ந்தேன் – ‘பால்பாண்டி டிரேடர்ஸ்’… தாராபுரம்… உய்ய்ய்ய்…! வாயிலிருந்து உற்சாகமாய் விசில் புறப்பட்டது.
“ஹல்லோ.. சங்கர்..! வாட் ஈஸ் திஸ்???” மேரியின் குரலில் லேசான சூடு.
“இ..இல்ல அ..அயாம்.. சா.. சாரிங்க. அ.. அது வந்து தாராபுரம் எங்க சொந்த ஊரு. அதான் எக்ஸைட்மெண்ட்ல…” திக்கித் திக்கி வந்து விழுந்தது
வார்த்தைகள்.
“ம்ம்ம்.. இட்ஸ் ஓக்கே. டேக் கேர் ஆஃப் த இன்ஸ்டலேஷன். முடிச்சிட்டு ரிப்போர்ட் அனுப்புங்க. பை” தட்டென்று போனை அறைந்து சாத்தினாள்.
என்ன தான் நமக்கு தொழில்நுட்பங்கள் நிறைய தெரிந்திருந்தாலும், வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயர்ந்திருந்தாலும் அதை பக்கத்திலிருந்து
பார்க்க ஆட்களிலில்லாதது ஒரு கொடுமை. நமது திறனை நாம் அயல் ஆட்களிடம் நிரூபிப்பதில் இருக்கும் பெருமிதத்தை விட நமக்குத் தெரிந்த
நபர்களின் முன் அதை காட்டுவதில் ஒரு அல்ப திருப்தி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா. கடைக்குப் போன என்னைப் பார்த்து அடையாளம்
தெரியாமல் சீட்டில் இருந்து எழுந்த அண்ணாச்சி ‘வாங்க சார். உட்காருங்க சார். டீ குடிக்கறீங்களா சார்’ என்று குழைந்த போது எனக்கு அதே அல்ப திருப்தி ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுப் போனது.
“என்ன அண்ணாச்சி என்னை அடையாளம் தெரியலையா?” கையில் இருந்த டூல்ஸ் பேக்கை அவர் டேபிளின் மேல் வைத்துக் கொண்டே கேட்டேன்.
“யாரு…. அட! நம்ம மணி மவனா நீ. என்னப்பா அளே அடையாளம் தெரியாம மாறிட்டயே. டவுசர போட்டு மூக்குல ஒழுக்கிட்டு வந்து நிப்பா நீ..
இப்ப இஞ்சினியரா..”
அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் கணேசன். கொஞ்சம் நரை முடிகள் வாங்கியிருந்தார். கண்ணில் ஒரு திக்கான கண்ணாடி ஏறியிருந்தது. வழக்கமான அவரது டேபிளுக்கு பதில் புதிதாக ஒரு கம்ப்யூட்டர் டேபிள் இருந்தது. அதன் அருகிலேயே இரண்டு அட்டைப் பெட்டிகள் – மானிட்டரும், சி.பி.யுவும்.
“சரி அண்ணாச்சி.. நான் சீக்கிரம் சிஸ்டத்த இன்ஸ்டால் பண்ணிடறேன்” திரும்பிப் பார்க்காமல் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே கணேசனின்
இடத்திற்குச் சென்றேன்.
என்றுமில்லாத அதிசயமாய் கணேசன் பதட்டமாய் இருந்தார். என்னை முதலில் ஓரிரு வினாடிகள் வெறுமையாய்ப் பார்த்தார். மெதுவாய்
புன்னகைத்தார். அவரது கைகள் அந்த அழுக்கேறிய, கூர்மையான முனைகள் மழுங்கி ஒரு நீள் வட்ட வடிவத்துக்கே வந்து விட்ட – மழுங்கிப் போன
கிளிப்பில் கத்தையாய் சிட்டைகளை லூசாக பற்றியிருந்த – கார்ட் போர்டு அட்டையை இறுக்கமாக பிடித்திருந்தது. அதில் லேசாய் நடுக்கம் இருந்தது. அது முதுமை காரணமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
“என்னண்ணே… சவுக்கியமா இருக்கீங்களா”
அந்த அட்டையை டேபிளின் மேல் வைத்தார். எழுந்து நின்று அவரை விட உயரமாய் வளர்ந்து விட்ட என் தோள்களை இரு கைகளாலும்
பற்றினார். எனது இரு புஜங்களின் வழியே அவர் உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டே வந்து எனது இரு மணிக்கட்டுகளையும் பற்றினார்.
இடது கையில் புதிதாய் நான் வாங்கிக் கட்டியிருந்த டைட்டன் வாட்சை பார்த்தார். ஒரு பெருமிதமான புன்னகை அவரது முகத்தில் எழுந்தது.
“நல்லா இருக்கேன் தம்பி.. ” ஏதோ கேட்க வேண்டும் போல் அவரது முகம் என்னை எதிர்பார்த்தது.
“என்னண்ணே..” என்றேன் அவரது பழுப்பேறிய கண்களுக்குள் பார்த்துக் கொண்டே.
“அ..அது.. வ..வந்து…”
“சொல்லுங்கண்ணே”
“இந்தக் கம்பியூட்டரை எத்தனை நாளிலே படிக்க முடியும் தம்பி” அவரது கண்கள் என் முகத்திலிருந்து விலகி உள்ளே அண்ணாச்சியை ஒரு முறை
பார்த்தது.
“ஆப்பரேட் பண்ண எப்படியும் அடிப்படை தெரிஞ்சிருக்கணும்ணே. எப்படியும் ஆறு மாசமோ இல்லை ஒரு வருசமோ ஆகலாம் – ஆர்வத்தைப்
பொருத்து” என்றேன். எனக்கு அந்தக் கேள்வியின் பொருள் புரியவில்லை.
அவர் முகத்தில் ஒரு ஆயாசம் தோன்றியது. எனது மணிக்கட்டுகளை விடுவித்தவர். அவர் சீட்டில் அமர்ந்தார். அந்த சிட்டை பேடை ஏக்கத்துடன்
பற்றிக் கொண்டார்.
அன்று நான் அந்த சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்யும் போது கணேசன் கம்ப்யூட்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். இன்ஸ்டலேசன் முடிந்து
டேலி சாப்ட்வேரை திறந்து எப்படி கூட்டல் கழித்தல் கணக்கு போட வேண்டும், வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது என்பது எப்படி என்பதை
நான் விளக்கிக் கொண்டிருந்த போது அவரது கண்கள் ஒரு பசியெடுத்த புலியின் கூண்டுக்குள் தவறி விழுந்து விட்ட மானின் கண்களைப் போல
அலைபாய்ந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து கிளம்பும் போது கணேசன் என் தோளைப் பிடித்து இருத்தினார். அவரது மேல் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சில ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி எனது கையில் திணித்தார்.
“என்ன.. கணேசா.. இன்னும் ரெண்டு நாள்ல அந்த கம்பியூட்டர கத்துகிடுவியாலே… அந்த அட்டைய தூக்கி தூர போட்டுட்டு இனிம கம்பியூட்டர்ல வேல பாக்க கத்துக்கல” அண்ணாச்சி உற்சாகமாய் கணேசனிடம் சொல்லிக் கொன்டிருந்த போது நான் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினேன். பஸ்ஸில் தாராபுரத்திலிருந்து மூலனூர் வரும் வரையில் எனக்கு கணேசனின் கண்களே நினைவிலாடியது. வில்லுப்பாட்டு வித்வானை பாப் சாங் பாட நிர்பந்திப்பது போல் இருந்து அந்த சூழ்நிலை.
அதற்குப் பின் எனது பணிச்சூழல் என்னை இந்தியாவின் பரப்பெங்கும் மேற்கும்-கிழக்குமாய், வடக்கும்-தெற்குமாய் அலைக்கழித்தது. எத்தனையோ
ஊர்கள், எத்தனையோ கணேசன்கள், எத்தனையோ அனுபவங்கள்… போன மாதம் இரண்டு வார லீவில் மீண்டும் ஊருக்குப் போயிருந்தேன். எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் எனக்கு தாராபுரத்தின் நினைவும், கணேசனின் நினைவும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது.
அவரைப் போய் சந்திக்கலாம் என்று கிளம்பினேன்.
இந்த ஏழு வருடத்தில் தாராபுரம் பெரிதாக மாறவேயில்லை. சாலைகள் மட்டும் கொஞ்சம் அகலமாகியிருந்தது. பால்பாண்டி டிரேடர்ஸ் கூட அதிகம் மாறவில்லை. கல்லாவில் அண்ணாச்சியின் சாடையில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே அண்ணாச்சியின் புகைப்படம்
ஒன்று மாலையோடு தொங்கிக் கொண்டிருந்தது. எனது பார்வை கணேசனின் இடத்திற்குச் சென்றது – அங்கே அவர் இல்லை. அந்த டேபிளில் – நான் இன்ஸ்டால் செய்த சிஸ்டத்தின் முன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் கணேசனிடம் நான் முன்பு எப்போதும் பார்க்கும் வாஞ்சை இல்லை. டென்ஷனாக இருந்தான். டேலியில் ஏதோ கோளாரு போல அந்த மங்கிய ஸ்க்ரீனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்கள் கூட்டம் முன்பைப் போல இல்லை. முன்பு இருந்ததை விட பாதி தான் இருந்தது.
“என்ன சார் வேணும்?” கல்லாவில் இருந்த இளைஞன் கேட்டான்.
“இல்ல.. இங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… கணேசன்னு பேரு.. அவரைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…” சுற்றிலும் பார்வையை ஓட்டிக்
கொண்டே சொன்னேன்.
“ஓ… அவரா.. இருக்காரே.. உள்ள பாக்கிங் செக்சனில் இருக்கார். வரச் சொல்லவா..”
“இல்லங்க. வேணாம். நானே போய் பார்த்துக்கிறேன்”
கணேசன் கிழண்டு போயிருந்தார். நிறைய மெலிந்திருந்தார். கண்ணாடி பழுப்பேறியிருந்தது. அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி நடுங்கும் கைகளால் ஏதோ பருப்பை பொட்டலமாக மடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விரல்களின் இடுக்கில் அந்த பொட்டலம் விழ முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் நேரே அவர் முன் போய் நின்றேன். ஒரு சின்ன போராட்டத்துக்குப் பின் சனல் கயிரால் ஒருவழியாக பொட்டலத்தைக் கட்டி முடித்தவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
“யேய்.. சங்கரு….என்னப்பா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே” அவரது கை அனிச்சையாக அவரது சட்டை பாக்கெட்டுக்குச் சென்றது.
காலியான பாக்கெட்டைத் தடவி விட்டு ஏமாற்றமாய் கீழிறங்கியது.
“அது… அண்ணாச்சி மவன் கொஞ்சம் வெறைப்பான ஆளு. மிட்டாய்க்கெல்லாம் சம்பளத்துல பிடிச்சிக்கிறாரு..” வரட்சியாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“பரவாயில்லண்ணே… வாங்க டீ சாப்பிடுவோமா”
“சரி வா..”
வெளியேறும் போது அவர் அந்த பய்யனைத் திரும்பிப் பார்த்தார் – அவன் இன்னும் டேலியோடு போராடிக் கொண்டிருந்தான். நமுட்டுச் சிரிப்போடு
என்னைப் பார்த்தார். அதில் ஏதோவொரு செய்தி இருந்தது – எனக்குப் புரியவில்லை. எனக்கு மனம் கணத்துக் கிடந்தது. ஒரு காலத்தில் இதே கடையில் கணக்கராய் இருந்தவர்.. இன்று இதே கடையில் தொழில் கற்றுக் கொள்ள வந்த சின்னப் பயல்களோடு சேர்ந்து பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கிறார். கால மாற்றம் தான் என்றாலும்.. நானும் கூட அவரின் இந்த நிலைக்கு காரணமாய் இருந்துள்ளேன் என்பது எனக்கு உறுத்தலாய் இருந்தது. எத்தனை கணேசன்களின் கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் நான் உலைவைத்திருப்பேனோ என்ற கவலை என்னை வாட்டியது. நாங்கள் சாலையைக் கடந்து எதிரே கரூர் வைசியா பேங்கை ஒட்டி இருந்த பாய் கடைக்குப் போனோம்.
“என்னண்ணே இந்த வயசுக்கப்புறம் உங்கள பொட்டலம் மடிக்க விட்டுட்டாங்களே” எனக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“அதனால என்னப்பா… அதுவும் ஒரு வேலை தானே” அவர் டீயை ஊதிக் குடிப்பதில் மும்முரமாய் இருந்தார்.
“இல்லண்ணே.. இதே கடைல நீங்க மதிப்பா சட்ட மடிப்புக் கலையாம கணக்கெழுதிட்டு இருந்தீங்க.. இப்ப அதே கடைல சின்னப் பசங்களோட
நின்னு வேல பாக்கீங்களே.. அதுக்கு நானும் ஏதோவொரு வகையில காரணமா போனது கஸ்டமா இருக்குண்ணே”
டீ தம்ளரை வைத்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்தார். லேசாக சிரித்தார். அது என்னை சீண்டுவது போலிருந்தது.
“என்னண்ணே.. இப்படிச் சிரிக்கிறீங்க”
“பின்ன சிரிக்காம என்னப்பா… ஏதோ பழைய சிவாஜி படத்துல வரும் ரங்காராவ் நிலமையில நான் இருக்கதா நினைச்சியா நீ.. அது என்ன
சொல்லுவாங்க… ஆங்! வாழ்ந்து கெட்ட மாதிரி. வாழ்ந்தா தானே கெட முடியும். ம்ம்ம்…. அன்னிக்கு நீ இந்த கம்பியூட்டர போட்டுக் குடுத்துட்டு
போன நாள்ல எனக்கு ரொம்ப கஸ்டமாத் தான் இருந்தது. எத்தனையோ வருசமா இதே கடைல கணக்கெழுதிருக்கேன்… நான் படிச்ச படிப்பு வேற.. நான் போட்ட கணக்கு வேற… இது புதுசா வந்தது. எனக்கும் பயம் தான். ரெண்டு நா டயம் குடுத்தாரு அண்ணாச்சி. எனக்கு ஒரு எழவும் புரியலை. புரிஞ்சிக்கிடற வயசும் தாண்டியாச்சி. கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி பொட்டலம் மடிக்க போட்டாரு – சம்பளத்தயும் அதுக்கு தக்க கம்மி பண்ணிட்டாரு. எத்தனையோ வருசம் கூடவே வேலை பாத்த கடைப் பய்யன்களே ஒருத்தனும் ஏன்னு கேக்க வரல…”
டீ தம்ளரை கையிலெடுத்தவர் ‘சர்க்’ என்று உறிஞ்சி அதன் சுவையைக் கண் மூடி இரசித்தார். பின் தொடர்ந்தார்..
“கூட நின்னு ஏன்னு நியாயம் கேக்க நாதியில்லைங்கறது தான் எதார்த்தம். இந்த வயசுக்கப்புறம் என்னாலும் தனியா நின்று ரோசம் காட்ட முடியலை. வச்சிக் காப்பாத்த புள்ளைங்களும் இல்லை. ஏத்துக்கிட்டேன். வேற வழியில்லாம ஏத்துக்கிட்டேன். ஆனா.. எனக்கு இன்னிக்கு நடந்தது தான் எனக்குப் பதிலா புதுசா வந்திருக்கவனுக்கும் நடக்கும். சிட்டைல கணக்கெழுதிட்டு இருந்த என்னைக் கம்பியூட்டர் வந்து தூக்கி வீசிச்சி. கம்பியூட்டர்ல வேல பாக்கவன வேற எதுனா அதை விட பெருசா ஒன்னு வந்து தூக்கி வீசும். எனக்கு இந்தப் பிள்ளைய பாத்தா பாவமா இருக்கும். நான் நின்ன மேனிக்கு கீழ விழுந்தவன் – லேசாத் தான் அடிபட்டுச்சி. ஆனா.. ஒசரத்துல நின்னு கீழ விழுந்தா? அன்னிக்கும் ஏன்னு கேக்க நாதியத்து தான் நிக்கனும். நாமெல்லாம் கூலிக்காரங்க சங்கரு… நான் சின்னக் கூலிக்காரன்.. நீ பெரிய கூலிக்காரன். கூலிக்குத் தக்க அடி தான் விழும் தம்பி”
“நம்ம வீடுகள்ல பழைய பொருளைப் புது பொருள் வந்து மாத்தி வைக்கும். அதுக்கெல்லாம் உயிர் இல்லை தம்பி. ஆனா நமக்கு உயிர் இருக்கு.
குடும்பம் இருக்கு. நாம் கூட்டுக்குத் திரும்பினா வாயைப் பிளந்துகிட்டு குஞ்சுகள் காத்துக் கிடக்கும். நாமும் பழசாவோம்.. அறிவு பழசாகும்.. புதுசா
ஏதோவொன்னு வந்து நிக்கும். ஆனா.. புதுசை நாம் கத்துக்கற அளவுக்கு முதலாளிங்க யாரும் நமக்கு நேரம் தர்றதில்ல.. வேலை செய்யற நாள்ல கசக்கி பிழிஞ்சு நம்மோட சாரெல்லாத்தையும் உறிஞ்சிட்டு சக்கையா துப்பிடறாங்க. நாமெல்லாம் தனித்தனியா நிக்கறோம். தனித்தனியா
தோக்கிறோம். தனித்தனியா விழுந்திடறோம். பக்கத்தில் நின்னவன் விழும் போது நாமும் விழப்போறம் – நம்மையும் தள்ளி விடப்போறான்னு
புரிஞ்சிக்கிடறதில்லை.. தனித்தனியான மாடுகளை நாளுக்கொன்னா நரி மெஞ்ச மாதிரி ஆகுது நம்ம நிலமை” பேசி முடித்து விட்டு மிச்சமிருந்த
டீயை உறிஞ்சத் தொடங்கினார்.
எனக்கு பேச்சே எழவில்லை. அந்தக் கணத்தில் – இந்த வாழ்க்கை.. இந்த வசதி.. இந்த நாளின் எனது மேன்மை.. நானே சுயமாய் உருவாக்கியது என்று நினைத்த ஒரு அழகிய மாளிகை.. எல்லாம் என் கண்முன்னே நழுவிச் செல்வது போல் ஒரு காட்சி தோன்றியது. ஐயோ… நான் – நான் எனது இளமையெல்லாம் தொலைந்து.. ஒரு நடுவயதினனாய்.. தனியனாய் நிற்கிறேன். என் காலடியில் பூமி நழுவிச் செல்கிறது. நான் கிழண்டு
போய் விட்டேன். நான் இனி இளைமை முறுக்குத் தெறிக்கும் பந்தையக் குதிரையல்ல. மட்டக் குதிரை. என்னால் இனி பந்தையத்தில் ஓட முடியாது. யாருக்கும் நான் தேவையில்லை.. என்னைச் சுற்றிலும் புதிதாய்ச் சில குதிரைகள்.. அவை என்னைப் பார்த்து சிரிக்கிறது. உறுதியான பல் வரிசை தெரிய சிரிக்கிறது.. அது – அது.. இல்லை.. அது குதிரைகளல்ல.. அங்கே கம்ப்யூட்டரில் டேலியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞன் போல் தெரிகிறது. இல்லை அது குதிரைகள் தான்.. இல்லை.. அது அந்தப் பையன் தான். அவன் தோள் மேல் அண்ணாச்சி அமர்ந்திருந்தார். அண்ணாச்சிகள் அமர்ந்திருந்தனர். கையில் ஏதோ உறுத்தியது.. அது.. இன்னொரு கை. அது யாருடைய கையோ.. திரும்பிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே இன்னொரு மட்டக் குதிரை. அதைத் தொடர்ந்து இன்னொன்று. அதைத் தொடர்ந்து இன்னொன்று. நாங்கள் ஓடினோம். அண்ணாச்சியை நோக்கி ஓடினோம்… அண்ணாச்சிகளை நோக்கி ஓடினோம்…
“தம்பி.. தம்பி..” கணேசன் என் தோளை உலுக்கிக் கொண்டிருந்தார். “என்னப்பா டீ கிளாஸைக் கீழ போட்டுட்டியே. ஒடம்பு சரியில்லையா?”
“இல்லை.. ஒன்னுமில்லை” முகம் முழுக்க வேர்த்திருந்தது. “சரி போலாம்”
“ம்ம்.. இந்தா.. இதை வச்சிக்க” அவர் எனது வலது கை உள்ளங்கையில் சில ஆரஞ்சு மிட்டாய்களை வைத்தார். என்னைப் பார்த்து திருப்தியாய் சிரித்தார். அது என்னை உணர வைத்த திருப்தி. திரும்பி கடையை நோக்கி நடந்தார்.
கடந்து போன ஆண்டுகள்; நிலைத்து நிற்கும் எதார்த்தங்கள்..!
கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அனாயசியமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி அவளே எனக்கு அழகி.
இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெரிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!
“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.
“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.
பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேனீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கிரகம் கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.
தேனீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.
“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.
“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.
“பாண்டிச்சேரிங்க”
“என்ன விசமா?”
“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”
“தங்கறதெல்லாம்?”
“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.
சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள் தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கே தான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நன்பர்கள் தான் இருந்தனர். அதில் கோபால் மிக நெருங்கிய நன்பன். அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் கலைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்
“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்
“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை
“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வென்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.
“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.
“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்
“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.
“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீ வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..” வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…
“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்.. கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.
பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.
“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெரிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.
அங்கே விவசாயம் தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணி தான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தே தான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீன் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.
ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.
“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.
“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.
“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்” தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.
ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும் தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள் தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தா தான். அதற்குப் பின் ஒரு இரண்டு வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.
என் பெரியப்பாவின் மகள் தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்கா தான் எனக்கு அம்மா.
“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கைய்யால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பா தான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.
ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.
பண்ணிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவும் எவரும் வருவதில்லை.
போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வரும் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நன்பர்களே கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் காரியங்களும் கூட நன்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.
எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவர் சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.
வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தரியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.
பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.
அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.
மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.
முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?
ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின்அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.
“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள் தான் அவை.
“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”
“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது. அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.
“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.
“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்பஎங்க இருக்காங்க?”
“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியே படலியா?”மௌனமாக இருந்தேன்.
“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”
“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”
“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டு தான் வருவேன்”
“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”
“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸ¤ல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”
“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.
நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.
“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”
டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயனிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.
இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.
“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”
“வெவசாயமெல்லாம்?”
“அதெல்லாம் ஓய்ஞ்சி போயில் பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”
“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”
“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரனும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹ¤ம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”
இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுன்னாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காறை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற என்னம் இப்போது மாறி விட்டது.
“சரி போலாம் கோபாலு”
“ஏண்டா உள்ளெ போகலியா”
“போயி?”
அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில் தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பை நோக்கி நடந்தோம்.
சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..
“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.
“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”
“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோனி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில் தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.
“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”
“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”
அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. ·பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம் தான்.
அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.
“சரி போலாம்” என்றவாரே வெளியில் வந்தேன்.
பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,
“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன பொடியனெல்லாம் போடா வாடான்னு தான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்வே கெடைக்காது.”
பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவொன்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.
கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கே தான் தங்கியிருந்தேன்.
இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரை தான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள் தான் புழுத்து நாறுகிறது.
இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
புதிதாக ஒரு இம்சை கிளம்பியிருக்கிறது – ஸ்ரீ ராம் சேனா என்ற அமைப்பு.
சில நாட்களுக்கு முன் மங்களூரில் கேளிக்கை விடுதி ஒன்றில் புகுந்து அங்கிருந்த பெண்களை சராமாரியாக தாக்கியதில் தான் முதன் முதலாக இந்த அமைப்பு “புகழ்”அடைந்தது. இப்போது காதலர் தினக் கொண்டாடங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்துள்ள இதன் தலைவன் முத்தலிக் என்பவன், காதலர் தினத்தன்று ஆண்களும் பெண்களும் ஜோடிகளாய்த் திரிந்தால் பிடித்து கல்யாணம் செய்து வைத்துவிடுவோம் – இல்லை என்றால் கையில் ராக்கி கட்ட வைப்போ்ம் என்று சொல்லி வைக்க, குமுறி எழுந்த நவயுக முற்போக்கு ( தங்களை ‘லூசு’ பெண்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள்) பெண்கள் சிலர் காதலர் தினத்தன்று முத்தலிக்குக்கு பிங்க் நிற ஜட்டிகளை பார்சல் அனுப்பப் போவதாக சொல்லி இனையத்தளம் வாயிலாக ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
மீடியாவெங்கும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது!
ஆமா, யார் இந்த ராம் சேனா? யார் இந்த முத்தலிக்? எங்கேர்ந்து கெளம்புராய்ங்க?

முத்தலிக்
மேலே படத்தில் கண்ணக்கோல் வைப்பவன் போலவே திருட்டு முழி முழிக்கிறான் அல்லவா, இவன் தான் முத்தலிக் – ப்ரமோத் முத்தலிக்!
கருநாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்தவன். 2000ம் ஆண்டுத்
தொடக்கம் எட்டே ஆண்டுகளில் 45 கிரிமினல் வழக்குகள் இவன் மேல் பதிவாகியிருக்கிறது. தனது பதிமூன்றாம் வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர்ந்ததில் ஆரம்பித்த கிரிமினல்
வாழ்க்கை இப்போது ஸ்ரீ ராம் சேனா வரையில் வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட இந்து தற்கொலைப் படை அமைத்துள்ளதாக அறிவிக்கும் அளவுக்கு
உயர்ந்து நிற்கிறது. வருடம்தோறும் மஹாராஷ்ட்டிர மாநிலத்தில் நடைபெறும் நாதுராம் கேட்ஸேவின் நினைவு நாள் கூட்டத்தில் தவறாமல் பங்கு பெறுவதை பெருமையாக அறிவித்துக்
கொள்ளும் இந்தக் கிரிமினல் மிகச் சுதந்திரமாகச் சுற்றி வருவதுடன் அவ்வப்போது கலாச்சார ஃபத்வாக்களையும் விதித்து வருகிறான்.
இந்த இடத்தில் சாதாரண ப்ளேடு பக்கிரிகளிடம் வீரம் காட்டும் போலீசு 45 வழக்குகள் பதிவாகியிருக்கும் ப்ரமோத் முத்தலிக்கின் மயிரைக் கூட அசைக்க முடியவில்லை என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்!
இந்த அமைப்புக்கும் தமக்கும் சம்பந்தமில்லை என்று இப்போது (பிரச்சினைகள் ஆரம்பித்த பின்) ஆர்.எஸ்.எஸ் சொல்வதெல்லாம்
ஏற்கனவே கோட்ஸேவுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்
லை என்று ரீல் விடுவதைப் போலத்தான். பொதுவாக ஆர்.எஸ்.எஸின் தந்திரம் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு விதமான இயக்கங்களை நடத்துவது தான்; ஏனெனில் பின்னால் தடை
செய்யும் அளவுக்கு பிரச்சினை வந்தால் அந்த குறிப்பிட்ட முகமூடியை மட்டும் அப்போதைக்கு கழட்டி விட்டுவிடலாம் அல்லவா? – அதாவது ஆணி வேர் ஆர்.எஸ்.எஸ் என்றால் சல்லி
வேர் ஸ்ரீ ராம் சேனா.
இந்த காட்டுப்பயல்களை எதிர்த்து களத்தில் நிற்பதாக மீடியாக்களால் வெளிச்சம் போட்டுக்காட்டுவது “பிங்க் ஜட்டி” இணையக் குழுமத்தினர். ராம் சேனை காதலர் தினத்தை எதிர்த்து கருத்து தெரிவித்தவுடன் களத்தில் குதித்த – தம்மை லூசு / முற்போக்குப் பெண்கள் என்று அழைத்துக் கொள்ளும் – பெண்கள் இணையம் வாயிலாக ஒன்றினைந்து சேனையின் தலைவன் முத்தலிக்கு பிங்க் நிற ஜட்டிகளை காதலர் தினத்தன்று பாரிசாக அனுப்பப்போவதாக அறிவித்துள்ளனர் ( முன்னா பாய் எபக்ட்!) . அறிவித்த சில நாட்களிலேயே பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் / ஆண்கள் இந்த இணையக் குழுமத்துக்கு ஆதரவளித்து முன்வந்துள்ளனர்.
இவர்கள் ராம் சேனாவின் காதலர் தின எதிர்ப்பு என்ற அம்சத்தை மட்டும் தனியே கத்தரித்து எடுத்து, ராம் சேனா என்பது பெண்களுக்கு எதிரானது என்ற அம்சத்தை மட்டும் மைய்யப்படுத்தி தமது பிரச்சாரத்தை அமைத்து வருகிறார்கள். இந்த பிரச்சாரத்துக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கும் வேலையை ஆங்கில மீடியாக்கள் செய்துவருவது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல.
இந்த போராட்ட முறையின் அயோக்கியத்தனம் ஒருபக்கம் இருக்கட்டும் – இதனால் வசதியாக மறைந்து போவது ராம் சேனையின் மக்கள் விரோதத் தன்மை!
கேளிக்கை விடுதிகளில் குடித்துக் கும்மாளமிடும் உரிமையும், முறையற்ற உறவுகள் கொள்ள உரிமை பெற்றிருப்பதுமே பெண் விடுதலையின் உச்சம் என்பது தான் இவர்கள் செய்யும்
பிரச்சாரத்திலிருந்து விளங்க வருவது. நகரங்களில் கட்டிடங்களில் சித்தாள் வேலையிலும், மற்றக்கூலி வேலைகளிலும் , கிராமப்புரங்களில் விவசாயக்கூலி வேலையிலும் மிகக்
கொடூரமான முறையில் சுரண்டப்படும் பெண்கள் நிறைந்த இந்த நாட்டில் – குடும்பம் என்ற அமைப்பு முறைக்குள் கணவன், மகன், தந்தை என்று எல்லா உறவுகளாலும் ஈவு இரக்கமற்று
சுரண்டப்படும் பெண்கள் கொண்ட நாட்டில், பெண்விடுதலை என்பதை குடித்துக் கும்மாளமிடுவதற்கான உரிமை என்ற அளவில் சுருக்கும் அயோக்கியத்தனத்தையே இவர்கள் செய்கிறார்கள்.
இந்துத்துவம் என்பதே அடிப்படையில் பெண்களுக்கு எதிரானது – மட்டுமல்லாமல் அது மக்களுக்கே எதிரானது. பரந்துபட்ட ஒரு தளத்தில் நின்று இந்துத்துவ இயக்கங்களின் மக்கள்
விரோத ஜனநாயக விரோத அடித்தளத்தை மக்கள் மத்தில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்த வேண்டும் என்ற அத்தியாவசிய தேவையை மறக்கடிக்கும் வகையில் இப்போது
பிங்க் ஜட்டியா பிங்க் சேலையா என்ற அளவில் விவாதத்தை சுருக்கியது தான் இந்த ஜட்டிக் குழுவினர் செய்த வேலை.
கழிசடைத்தனம் செய்யும் உரிமையே விடுதலை என்று கோரும் இந்தப் பெண்கள் உண்மையில் ராம் சேனையை புனிதப்படுத்தும் வேலையையே செய்கிறார்கள். பிங்க் நிற ஜட்டியின்
பிரகாசிக்கும் ஒளியில் ராம் சேனையின் மற்ற எல்லா மக்கள் விரோத தன்மையும் மறைந்து போகிறது.
ராம் சேனை போன்ற கிரிமினல் கூட்டத்துக்கு சரியான உடனடி பதில் என்பது தெருவில் இறங்கி திருப்பி அடிப்பது ஒன்று தான் – அவர்களுக்கு வன்முறை தவிர்த்து வேறு எந்த
மொழியும் புரியாது. இவர்களுக்கான நீண்டகால பதில் என்பது இந்துத்துவ அரசியல் நிலவ அடித்தளமாய் இருக்கும் சமூகப் பொருளாதார நிலையை மாற்றியமைக்கு புரட்சி மட்டும்
தான்!
Do we have a choice?
கருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுடைய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.
இதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள்? எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது? இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன?
உதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும்? வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,
கள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறுதிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை!
அறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு
கோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.
வேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்
இதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.
நேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு
உல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.
இவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்
சிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.
இனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise! எப்படி? –
ஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்
செய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை
கொண்ட சூத்திரர்கள்.
தெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது!
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று
அனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.
உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!
ஊடகங்களும் வாழ்க்கையும்!
கார்கில் போர் நினைவிருக்கிறதா? அந்த சமயத்தில் நாடெங்கிலும் பொங்கி வழிந்த “தேசபக்தி”யை எவரும் மறந்திருக்க மாட்டோ ம். ஒரு போரின் பின்னேயும் அதன் வெற்றியின் பின்னேயும் இந்திய ராணுவத்தின் அயோக்கியத்தனங்களும், உள்ளே புளுத்து நாறிக் கொண்டிருந்த ஊழலும் எப்படியெல்லாம் மறைக்கப் பட்டது என்பதையும் நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. இதனையெல்லாம் ஊதி ஊதி எறிய வைத்தது ஊடகங்களே. பாவம் அவர்களுக்கு இப்போதெல்லாம் தங்கள் வியாபாரத் திறனையும் மார்கெட்டிங் யுக்தியையும் காட்ட போர் எதுவும் நடக்கவில்லை.. ஆனாலும் ஒரு போருக்கு உரிய அத்துனை வெறி/பரபரப்பையும் ஒரு விளையாட்டுப் போட்டிக்குள் திணித்து விட தங்களால் முடியும் என்பதையும், “இந்தியர்களை” ( இந்துக்களை என்று
புரிந்து கொள்க) உசுப்பேத்தி விட முடியும் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை
எதிர்த்து ஆடி வென்றது. இது ஒன்று போதாதா? இந்திய அணி நாடு திரும்பியதும் மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று வரவேற்ற காட்சி ஆங்கில செய்தி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதில் நம் கவனத்துக்குறியது என்னவென்றால், “ரசிகர்களில்” பலர் காவி நிறக் கொடியுடன் விளையாட்டு வீரர்களை வரவேற்றது தான். நான் வசிக்கும் பகுதியில் இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் இரவு, தேனீர் அருந்த நான் வெளியே சென்றிருந்தேன். இருசக்கர வாகனங்களில் வெறிக்கூச்சலுடன் சில ரசிகர்கள் ரவுண்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு ரம்ஜான் மாத இரவு. அதே நேரத்தில் ஊரெங்கும் பிள்ளையார் சதுர்த்திக்காக சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி. வாகனங்களில் வந்த ரசிகர்கள் தலையில் காவி நிறத் துணியையும் கையில் காவிக் கொடியையும் கொண்டிருந்தனர். இரவுத் தொழுகை முடிந்து
தெருக்களில் கூடி பேசிக் கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் கண்டதும் பைக்குகளில் வந்த காலிகளின் வெறி அதிகமானது. வாகனத்தை நிறுத்தி, “பாரத் மாதா கீ ஜே” “பாக்கிஸ்த்தான் டவுன் டவுன்” என்ற கத்திவிட்டு நகர்ந்தனர்.
இந்திய விளையாட்டு அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியானது இந்துக்கள் முஸ்லீம்களை வென்றதன் குறியீடாக இவர்கள் பாவிக்கிறார்கள். இந்தக் கூச்சல்களினூடாக முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களில்லை என்பதையும், இந்தியா என்பது ‘இந்து’யா எனபதையும் பதியவைக்க முயற்சிக்கிறார்கள். நாளிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புச் செய்திகள் வரை இப்படியான ஒரு சித்திரத்தைத் தான் உருவாக்கி விட்டுள்ளது.
ஒரு விளையாட்டில் கிடைத்த வெற்றிக்குப் பின்னால் ஏன் இத்தனை ஒரு வெறி?
ஒரு விளையாட்டை விளையாட்டு என்பதாக அல்லாமல் அதற்கும் மேலானதொரு கவுரவப் போர் என்கிற அளவுக்கு அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உடல் திறனை வெளிப்படுத்தும் வேறு விளையாட்டுகள் முக்கியத்துவம் இழந்ததற்குக் காரணம் இந்த ஊடக வெறியூட்டிற்கு அப்பால் இருக்கிறது. அந்தக் காரணங்களை விவாதக் களத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதே இந்த கிரிக்கெட் வெறியூட்டலின் மூலம் ஊடகங்கள் சாதித்ததாகும்.
இங்கே என்பது சதவீதத்துக்கும் மேலான மக்கள் உயிர் பிழைத்துக் கிடக்கவே உணவு என்கிற நிலையில் இருக்க, இவர்கள் உடல்திறன்
சார்ந்த வேறெந்த விளையாட்டிலும் ஈடுபடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இன்று நாளிதழில்( 15/10/2007 டைம்ஸ் ஆப் இந்தியா )
வெளியான செய்தியின் படி இந்தியக் குழந்தைகளில் 40% பேர் பட்டினியுடன் தான் தினசரி உறங்கப் போகிறார்கள். விளையாட்டுகள் என்பதும் உடல் திறனைக் கூட்டும் பயிற்சி என்பதும் சுமார் 20% குறைவான உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கு ஊதிப் பருத்த தொப்பையைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்று என்றாகிப் போய் விட்டது.
இதனை மறைக்கும் விதமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமான சிறு நகரங்களில் இருந்து உருவான, “புகழ்” பெற்ற வீரர்களை முன்னிறுத்துவதும், கிரிக்கெட்டின் மேல் அதீதமாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள்/ கட்டுரைகள் வெளியிடுவதும் ஆகும். தினசரி வாழ்க்கையையே போராட்டமாக வாழும் மக்களின் வாழ்க்கைப் போரை மறைக்கவே விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு போரின் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
“ஏன் இந்தியாவில் பரவலாக மக்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை?” என்னும் கேள்விக்குள் புகுந்தால் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலங்களுக்கு “கசக்கும்” உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே அந்தக் கேள்வி மிகத் தந்திரமாக அழுத்தப்படுகிறது. பாக்கிஸ்தானை இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் அந்நாட்டை போரில் வென்றது போல வெளியாகும் செய்தியின் கூச்சலில், அந்நாட்டு மக்களில் பட்டினியில் வாடுவோர் இந்தியாவை விட சதவீத அளவில் குறைவு ( அதே செய்தியின் படி) என்பது மறைந்து விடுகிறது.
சென்செக்ஸ் பதினெட்டாயிரம் புள்ளிகள் கடந்து பாய்வதன் மேல் பாய்ச்சப்படும் ஊடக வெளிச்சத்தில் கண்கள் கூசும் மக்கள், இதே நாட்டில் 77 கோடிப் பேர் அரசாங்க கணக்குப்படியே நாளொன்றுக்கு இருபது ரூபாய்களுக்கும் குறைச்சலான தொகையில் வாழ்க்கை நடத்துவதை காணத்தவறுகிறார்கள் -தவற வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் உயரும் சென்செக்ஸ் புள்ளிகள் யாருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது? நாட்டின் நிதிமந்திரியே
“என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி உயர்கிறது என்பதும் தெரியவில்லை. கவலையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.” என்று “ஒன்னுமே புரியல உலகத்திலே…. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” என்று விரக்தியுடன் உளரிக் கொண்டிருப்பதும் எவர் கவனத்தையும் பெறவில்லை – அப்படி கவனத்தைப் பெற இவர்கள் விடுவதும் இல்லை.
இந்நாட்டின் உழைக்கும் மக்கள் புளுத்துப் போன கோதுமையில் செய்யப்பட்ட “லால் ரொட்டியை” தின்பது இவர்களின் கவுரவத்துக்கும் போலிக் கரிசனத்துக்கும் உறுத்தலாய் இருந்திருக்கும் போலிருக்கிறது. போன வாரம் காட்டப்பட்ட இது தொடர்பான செய்திகளில், இதற்குக் காரணமான தானியக் கொள்முதல் கொள்கைகளையும், அதன் காரணமாய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளையும் பற்றி பேச்சு மூச்சே இல்லை. தெருவில் அலையும் பிச்சைக்காரணைப் பார்த்து சொல்லப்பட்ட “அச்சச்சோ”வின் தொனியே மேலோங்கி இருந்தது. குறைந்த பட்சம் இவர்களும் நம்முடைய “இந்தியாவில்” தான் வாழ்கிறார்கள் என்பதாகவும் கூட பதிவு செய்யப்படவில்லை.
மொத்தத்தில் ஒரு யுப்பி வர்க்கத்து இளைஞனுக்கு எப்போதாவது – ஒரு விபத்து போல – மேலெழும் கேள்விகளை மொன்னையாக்குவதும், அவன் எப்போதாவது நிதர்சனத்தைக் கண்டு திகைத்து நிற்கும் போது சமாதானப்படுத்திக் கொள்ள காரணங்களைத் தருவதும் தான் இந்த செய்திகளின் நோக்கமாக இருக்கிறது.
நம்மைப் பொருத்த வரையில், அவன் காட்டுவது நம்முடைய நாடு அல்ல! அவன் பேசுவது நம்முடைய பிரச்சினைகளை அல்ல! அவன் தரும் சித்திரம் நம்முடைய வாழ்க்கைச் சித்திரமல்ல!