கார்க்கியின் பார்வையில்

எங்கோ விழுந்தது.. இங்கே வெடிக்கிறது..!

தீயாய்ச் சுட்ட கோடை
மெல்லக் கடக்கிறது
சூள் கொண்ட அடர் மழை மேகங்கள்
மெல்லச் சூழ்கிறது..

கடந்து செல்லும் மேகங்களாய்க்
கடந்து செல்லும் நாட்கள்
கலையும் நினைவுகள்
நாளையும் இன்றும் நேற்று தான்
நேற்றும் நாளையும் இன்று தான்
இன்றும் நேற்றும் நாளை தான்
கடந்து செல்லும் கணம் ஒவ்வொன்றும்
மூளையின் நரம்புப் பிண்ணல்களின்
நினைவு அடுக்குகளில் நிறைய –
அழித்துச் செல்கிறது
புதிதாய் –
எழுதிச் செல்கிறது
 
சோகங்கள் நிகழ்வுகளாகி
நிகழ்வுகள் செய்திகளாகி
செய்திகள் நிதர்சனங்களாகி
நிதிர்சனங்கள் நியாயங்களாயும்
விதிகளாயும் ஒழுங்குகளாயும்
சமூகத்தில் உறைந்து போகிறது
சமூக உறைவின் செய்திகள்
நினைவுகளில் எழுதப்பட்டு
அநீதிகள் அழிக்கப்படுகிறது…

கழிந்து போன வருடங்களின்
இடைவெளிகளில் போபாலின்
கதறல் தேய்ந்து காணாமல்
போகச் செய்யப்பட்டது..
இருபத்தைய்யாயிரம் உயிர்களின்
உணர்வுகளும் ஆசைகளும்
தந்தியின் எட்டாம் பக்கத்து
எட்டாம் பத்தியில் இடம் பிடிக்க
முண்டியடிக்கின்றன..
வரிசையில் காத்திருக்கின்றன
முள்ளிவாய்க்கால் பிணங்கள்

நர்மதை நதியோடு போன
பிணங்களின் முனகல்கள்
காஷ்மீரின் முகடுகளிலும்
முள்ளிவாய்க்கால் மயானங்களிலும்
எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது..

காஷ்மீரத்தின் உடலில்
பாய்ந்த ஈயக் குண்டுகள்
ஈழத்துக் குழந்தையின் உடலைக்
கிழித்துக் கொண்டு வெளியேறுகிறது..
பார்த்துக் கெக்கெளிக்கிறார் வாரன் ஆண்டர்சன்..
செம்மொழிக் கவிதையால் களிம்பு தடவுகிறார்
கவிஞர் எட்டப்பக்கவிராயர்
கோவையில் கைத்தட்டல் –
கொழும்புவில் எதிரொலிக்கிறது…

வழிந்த ரத்தம் வேறு வேறு
சரிந்த உடல்கள் வேறு வேறு
மதங்கள் வேறு வேறு
மொழி வேறு வேறு
குத்துவாட்கள் வேறு வேறு
ஆனால் அதன் உறை மட்டும் ஒன்று

தனியே அழும் கண்கள்
இணைந்து சிவக்கும் நாட்களை நோக்கி…

-கார்க்கி

ஜூலை 13, 2010 - Posted by | கவிதை | , , , , , ,

2 பின்னூட்டங்கள் »

  1. நிகழ் கால நிகழ்வுகளின் அவலங்களை மனதினை தைக்கும் கவிதையாய் கொடுத்துள்ளீர்கள்…

    பின்னூட்டம் by ராசராசசோழன் | ஜூலை 25, 2010 | மறுமொழி

  2. valikirathu….

    பின்னூட்டம் by Anupama Jeyakumar | ஒக்ரோபர் 29, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: