கார்க்கியின் பார்வையில்

இந்தியா விற்பனைக்கு..!!

சில மாதங்கள் முன்பு பி.டி கத்தரிக்காய்க்கு சந்தையில் விற்க அனுமதி வழங்குவதற்கு எதிராக இங்கே கடும் அமளி ஏற்பட்டது. ஜனநாயக
முற்போக்கு சக்திகளோடும், விஞ்சானிகள், அறிவுத் துறையினர், விவசாயிகள் பொது மக்கள் என்று பரவலாக பி.டி கத்தரிக்காய்க்கு ஒரு கடும் எதிர்ப்பு உருவாகியது. பரவலான எதிர்ப்புக் குரல்களோடு  சேர்ந்து கொண்டு என்.ஜி.ஓக்கள் சிலரும் கூட வித விதமான வடிவங்களில்
பி.டி.கத்தரியை எதிர்த்து போராடிய காட்சிகளை நாம் மறந்திருக்க முடியாது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கொஞ்ச நாட்கள் மக்கள் கருத்தறியும் கருத்தரங்கங்கள் என்ற பெயரில் நடத்திய
நாடகங்களையும் தொடர்ந்து பி.டி கத்தரி விஷயத்தில் ‘பொதுக்கருத்து’ ஒன்றை எட்டும் வரையில் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று
அறிவித்திருந்தார். உடனே ஆங்கில ஊடகங்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக என்.ஜி.ஓக்கள் தமது வெற்றியை அறிவித்துக் கொண்டாடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.

இதுவரையில் நீங்கள் கேட்டது திரைப்படத்தின் இடைவேளை வரையிலான கதையைத் தான். இடைவேளைக்குப் பின் தான் கதையில் மிக முக்கியமான திடுக்கிடும் திருப்பங்களும் சதிகளும் அரங்கேறுகிறது.  கடந்த மாதத்தின் மத்தியில் இந்தியா அமெரிக்காவோடு விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மத்திய அமைச்சரவையின் இரகசிய ஒப்புதலோடு கையெழுத்திட்டிருக்கிறது. இதனடிப்படையில் இந்திய – அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கார்கில், மான்சாண்டோ  போன்ற பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களை பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறது.

மேலும் அமெரிக்காவோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு விவசாயத்தில் அன்னிய நேரடி தலையீட்டை அனுமதிப்பதற்கும் ஓசையில்லாமல் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நேரடியாக நமது விளைநிலங்களின் மேல் கைவைக்க முடியும். போதிய சட்ட அறிவு இல்லாத ஏழைவிவசாயிகளிடம் நேரடியாக ஏமாற்று ஒப்பந்தங்களைப் போட்டு நல்ல செழிப்பான விளைநிலங்களில் மரபணு மாற்ற விதைகளையும் வீரிய சக்தி கொண்ட உரங்களையும் கொட்டி விஷமாக்கப் போகிறார்கள்.

மேலும் ஏற்கனவே இருந்த தேசிய உயிரிதொழில் நுட்ப ஒழுங்காற்றுச் சட்டத்தில் ( National Biotechnology Regulatory Authority) திருத்தங்கள்
செய்து, உயிரிதொழி நுட்ப ஒழுங்காற்று சட்டம் எனும் பெயரில் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற முயற்சிகள் நடந்து
வருகிறது.

இந்தச் சட்டம் உண்மையில் எவ்வகையிலும் ‘ஒழுங்காற்றப்’ போவதில்லை. இது உயிரிதொழில் நுட்பத்தில் உருவான பொருட்களை சந்தைப்படுத்துபவர்களையும் ஆராய்ச்சியையும் ‘ஒழுங்குபடுத்துவது’ போல ஒரு பாவ்லா காட்டுகிறது. அதாவது மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதிப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது – ஆனால் அதற்காக அது ஏகப்பட்ட ஓட்டைகளுடனும், விதிகள் மீறப்பட்டதை சட்டரீதியாக நிரூபிப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக இருக்கும்படியும் சிக்கலான ஒரு நடைமுறையை முன்வைக்கிறது.

மறுபுறம், மிகக் கச்சிதமாக பொதுமக்களைக் கவ்வுகிறது. அந்தச் சட்டத்தின் 13(63)ம் பிரிவின் படி, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஒருவர் எதிர்த்து பேச வேண்டும் என்றாலே தகுந்த ‘அறிவியல்’ ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரைக்கும் சிறை தண்டனையோ அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மற்றொரு பிரிவின் படி, மாநில அரசாங்கம் மரபணு தொழில்நுட்பம் தொடர்பாக கொண்டு வரும் எந்தவிதமான சட்டத்தையும் மத்திய அரசின் இந்தச் சட்டம் அமுக்கிவிடும். இதன் 27(1) பிரிவின் படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூட மரபணு மாற்றப் பயிர்கள் விஷயத்தில் செல்லுபடியாகாது.

இப்போது ஜெயராம் ரமேஷ் பின்வாங்கிய சூழலையும் அந்தப் பின்வாங்களையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். மக்களிடையேயும், விஞ்ஞான அறிஞர்கள் மட்டத்திலும், விவசாயிகள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு மற்றும் சில மாநில அரசுகள் மரபணு மாற்ற கத்தரிக்காயை தடை செய்யும் அரசாணை வெளியிட்டிருந்த சூழலில் தான் மத்திய அரசு பின்வாங்கியது. இப்போது போடப்படவிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க எத்தனிக்கிறார்கள்.

நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் விவசாய நிலங்களை ஒப்படைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் – அவர்கள் விளைவிக்கும் மரபணு மாற்ற பயிர்களை சந்தைப்படுத்தும் போது எதிர்ப்புகள் உருவானால் அதை அடக்கி ஒடுக்க ஒரு சட்டம். சுதந்திரச் சந்தையைப் பற்றி வாய்கிழிய பேசும் ஆங்கில ஊடகங்கள் இந்த சுதந்திரச் சந்தையில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. நாளைக்கு பி.டி காய்கறிகளையும் அரிசியையும் வாங்க மறுப்பீர்களானால் உங்கள் மேல் கூட இந்தச் சட்டம் பாயும். நீங்கள் எதைத் தின்ன வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்க விடாத சுதந்திரம் தான் தனியார்மய தாசர்கள் பேசும் சுதந்திரச் சந்தை.

இது முதலாளிகளுக்கான – அதுவும் அமெரிக்க பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கான – சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டம். மக்கள் மேல் மரபணு மாற்றப் பயிர்களை தினிக்க பின்வாசல் வழியாய் நுழையப்போகும் கருப்புச் சட்டம். நேற்றைய செய்திகளில் குஜராத்தில் பி.டி பருத்தியில் அதன் விஷத்தையும் முறியடித்து தாக்கும் காய்ப்புழுக்கள் தோன்றி பரவுகிறது எனும் செய்தி படத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், இப்படிச் செய்தி வெளியிடுவதும், அதை நீங்கள் வாசித்து இன்னொருவரிடம் சொல்லுவதையும் கூட குற்றமாக்கி
தண்டிக்க முடியும்.

அவுரிச் செடி பயிரட மறுத்த விவசாயிகளை அன்றைக்கு பிரிடிஷ் காலனிய போலீசு அடித்து உதைத்து கட்டாயப்படுத்தியது. இன்றைக்கு மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடவும் – அதை சந்தையில் நீங்கள் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. அது காலனிய யுகம் என்றால் இது மறுகாலனிய யுகம். முதலில் பி.டி கத்தரியை அனுமதிக்கப் போவதாகச் சொல்லி ஒரு முன்னோட்டம் பார்த்து விட்டு; அதற்கு எந்த விதமான எதிர்ப்பு எந்த வகையிலெல்லாம் வருகிறது என்று ஆழம் பார்த்து விட்டு – இப்போது எதிர்ப்புகளை முற்றிலும் ஒடுக்க
பக்காவான சட்டங்களை இயற்றி நேரடியாக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது ஆளும் கும்பல்.

மக்கள் எதிர்ப்புகளை மக்களோடு மக்களாக ஊடுருவி அந்த எதிர்ப்புப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திச் சென்று சரியான தருணத்தில் கைகழுவி மக்களின் முதுகில் குத்தும் துரோகத்தை அன்றைக்கு காலனிய காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரசு செய்தது என்றால் – இன்றைக்கு அதே வேளையை என்.ஜி.ஓக்கள் செய்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு மேஸ்திரி வேலை பார்க்கிறது. பாத்திரங்கள் மட்டும் தான் மாறியிருக்கிறது – கதை அப்படியே தான் தொடர்கிறது.

பி.டி கத்தரியை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு – மத்திய அரசு தற்காலிகமாய் தள்ளிவைக்கிறோம் என்று சொன்னதையே வெற்றியாக அறிவித்து விட்டு இப்போது அரசு மீண்டும் கருப்புச் சட்டங்களின் மூலம் மரபணு தொழில்நுட்பத்தை பின்வாசல் வழியாக அனுமதித்திருக்கும் நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு வரையில் பிலிம் காட்டிக் கொண்டிருந்த என்.ஜி.ஓக்கள் இப்போது தலைமறைவாகி விட்டார்கள்.

இது உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள வேண்டிய தருணம். தமக்குள் ஒன்றுபட்டு இந்த அமெரிக்கதாசர்களைத் தோற்கடித்து தூக்கியெறியாத வரை விடிவுகாலம் கிடையாது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் மெய்யான நாட்டுப்பற்று கொண்டவர்கள் ஒன்றுபட்டு போராடி மக்கள் எதிரிகளையும் துரோகிகளையும் முறியடிக்க முன்வர வேண்டும்.

மார்ச் 24, 2010 Posted by | politics | , , , , , | 5 பின்னூட்டங்கள்

மன்மோகன் சிங் என்னும் பொய்யர்

அணு சக்தி ஒப்பந்தம் குறித்து விஞ்ஞானிகளும் நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகளும் சந்தேகக் குரல் எழுப்பிய போதெல்லாம்.. பிரதமர் அதை சமாளிக்கும் விதமாக அவிழ்த்து விட்ட பொய் மூட்டைகள் இப்போது அம்பலத்துக்கு வந்து சந்தி சிரிக்கிறது..

இரு நாடுகளுக்கிடையே போடப்பட்ட ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களுக்கெல்லாம் “அதான் அயித்தானே சொல்லிட்டாவளே.. ஏன் வருத்தப்படறீய..?” என்று மாமன் மச்சான்களுக்குள் பேசிக் கொள்வது போல “அதான் புஸ் எங்க ஊட்ல சாப்பிடும் போது இப்படியெல்லாம் நடக்காதுன்னு சொல்லிட்டாரே?” என்று சமாளிப்பாக சொன்ன பொய்கள் ஒவ்வொன்றாக அவிழத்துவங்கி விட்டிருக்கிறது இப்போது.

“நாடு அணுசக்தியில் வல்லரசாவதைத் தடுப்பதே இவிங்களுக்குப் பொழப்பாப் போச்சி.. மன்மோகன் சிங் எம்பூட்டு நல்லவரு..? பெரிய படிப்பெல்லாம் படிச்ச மேதாவி.. அறிவுசீவி.. ”  என்கிற ரீதியில் பேசி/எழுதி வந்த எல்லார் முகத்திலும் நெய்வேலி நிலக்கரியை குழைத்துக் கட்டி பூசி விட்டார் மன்மோகன் சிங்.

இது குறித்து அசுரன் தளத்தில் வெளியான கட்டுரை -http://poar-parai.blogspot.com/2008/08/i.html

D.Cயில் வெளியான இன்றைய தலைப்புச் செய்தி –

செப்ரெம்பர் 4, 2008 Posted by | politics | , | 1 பின்னூட்டம்