கார்க்கியின் பார்வையில்

பார்ப்பனியத்தின் இருப்பு!!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை சமூகத்தில் ஏற்கனவே புறையோடிப் போயுள்ள புண்ணின் மேல் போடப்பட்டிருந்த அழகான ஒப்பனையை கொஞ்சம்
திரை கிழித்துக் காட்டியிருக்கிறது. இது விஷயமாக பொதுவாக எல்லோரும் “அடப்பாவமே என்னமா அடிக்கிறானுக… இவனுக படிக்கப் போறானுகளா இல்ல ரவுடித்தனம்
செய்யப் போறானுகளா? அடிவாங்கற பய்யன் ரொம்ப பாவம் சார்… அவனப் பெத்தவங்க என்ன பாவம் செய்தாங்களோ..” என்று வன்முறையை வாழ்க்கையிலேயே கண்டிராத
“ரீஜெண்டான” வெளக்கெண்ணைகள் போல அங்கலாய்த்துக் கொண்டிருக்க.. மீடியாக்களும் வலைப்பதிவுகளும் இந்தக் குரல்களையே பெரும்பாலும் எதிரொலித்துக் கொண்டிருக்க..
வினவு தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காய் சமூக எதார்த்தத்தை நிகழ்ந்த சம்பவங்களோடு உரசிப்பார்த்து கறாரான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

அந்தக் கட்டுரைகளின் சுட்டி இதோ –

1) சட்டக்கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் தமிழகம் காப்போம்!!

2) சட்டக்கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…. அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

பிரச்சினை குறித்து இதை விட தீர்க்கமான/ நேர்மையான கட்டுரை ஒன்றை எழுதிவிட முடியாது. எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் அதனின்று நான் பெற்ற படிப்பினைகளையும் உறுதிப்படுத்துவதாய்
இருக்கிறது. இந்த கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்ட சில ரீஜெண்ட் கேசுகள்,

1) வன்முறை வன்முறை தான் சார்.. தலித்தாய் இருந்தால் என்ன ஆதிக்க சாதியாய் இருந்தால் என்ன? தப்பு தப்பு தான் சார்

2) அப்படியே தலித்துகளுக்கு பிரச்சினை இருந்திருந்தால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும். அதன் மூலம் தீர்வுகண்டிருக்க வேண்டும் – ரவி சிறீனிவாஸ் சில
இடங்களில் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

3) என்னாது…??? வன்முறைக்கு தீர்வு வன்முறையா? என்னவொரு சாடிசம்? – இது மருத்துவர் ருத்ரனை நோக்கி எழுப்பப்பட்டது.

பொதுவாக “இப்ப அழவேண்டிய நேரம். அதுவும் அடிப்பட்ட மானவர்களுக்காக அழவேண்டிய நேரம். இந்த நேரத்துல போய் இதுக்கு யார் காரணம், வரலாற்று ரீதியாக என்ன
நடந்தது என்பது பற்றியெல்லாம் ஏன் சார் யோசிக்கறீங்க? நீங்கெல்லாம் மனுசனா மிருகமா” வன்முறையைக் கண்டு முகம் சுளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படிச்
சிந்திக்கிறார்கள். ஏதோ இந்தியாவில் தீண்டாமை சாதியெல்லாம் எப்போதோ மலையேறி விட்டதென்றும்.. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற “அரசியல்களால்” தான்
சாதி இன்னும் வாழ்கிறது என்றும், இடஒதுக்கீட்டை எடுத்த் அடுத்த நிமிடம் சாதி மறைந்து விடும் என்றும் எழுதி/பேசி வருகிறார்கள்.

அந்தக் கட்டுரைகளின் பின்னூட்டம் ஒன்றில் தோழர் ஒருவர் கேட்டது போல, “இப்போ ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கினான் என்றவுடன் துள்ளிக் குதித்து வருகிறாயே…. முன்பு
தலித்துகள் அடிவாங்கிய போது எங்கே போனாய்?” என்ற கேள்வி நிச்சயம் இவர்கள் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் – அப்படி ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில்.
அப்போதெல்லாம் மவுனமாகத்தானே இருந்தாய் நீ? தின்னியத்திலும், பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம்.. இன்னும் வெளியே தெரியாத எத்தனையெத்தனையோ கிராமங்களில்
தலித்துகள் மேலான வன்முறை பற்றிக் கேள்விப்பட்ட போது நீ மவுனமாய் இருந்தாய் அல்லவா? பெரியார் தி.க தோழர்கள் இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இரட்டைக்
குவளை முறைக்கு எதிராய் போராட்டம் அறிவித்து, எங்கெங்கே இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டார்களே அப்போது நீ
மவுனமாய்த் தானே இருந்தாய்? – அந்த மவுனம் தான் பாரதிக்கண்ணனை அடித்தவர்கள் செய்த வன்முறையை விட மிக மோசமான வன்முறை..

நேரடியாக – உடல் ரீதியாக காட்டப்படும் வன்முறை ஒருபுறம் இருக்க… உளவியல் ரீதியாக செலுத்தப்படும் வன்முறையானது ஏற்படுத்து ஊமைக்காயங்கள் எப்படியிருக்கும் என்று
இவர்கள் அனுபவித்திருப்பார்களானால் – “வன்முறைக்குத் தீர்வு வன்முறையா சார்?” என்று நொன்னை பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். “அம்பேத்கர் பேரைப் போடாம விட்டது
ஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் இந்தளவுக்கு இறங்கிட்டாளே சார்?” தங்கள் ஸ்காலர்ஷிப் வாங்கும் போது எதிர்கொண்ட கேலிப் பார்வைகளும், மெஸில் தனித்து
உட்காரவைக்கப்பட்ட போது எதிர்கொண்ட அவமானங்களும்… பொதுவாக கிராமப் புறங்களிலிருந்து பல்வேறு நேரடி/மறைமுக அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்துவிட்டு
வந்திருக்கும் மானவர்களுக்கு இந்த “சின்ன சமாச்சாரம்” ஒரு நெருப்புப் பொறி தான். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரண்ட கானகமாய் புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
விழுந்த மிகச் சிறிய நெருப்புப் பொறி தான் போஸ்டர் சம்பவம்.

“அப்படியே இருந்தாலும் அவர்கள் அரசின் கவனத்தை அல்லவா ஈர்த்திருக்க வேண்டும்?” அரசு என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறை வடிவம் தான். அரசு இயந்திரத்தின் அங்கமாக
ஆகும் தலித் கூட நாட்பட நாட்பட கருப்புப் பார்ப்பானாய்த் தான் மாறியாக வேண்டும் என்கிற சூழல் தான் நிலவுகிறது. பாப்பாப்பட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம், தின்னியம்.
மேலவளவு – இத்தனைக்கும் பின்னே விழித்தெழாத அரசு, இம்மானவர்கள் எழுதியிருக்கக்கூடிய மூன்று பக்க மணுவிற்கா விழித்திருக்கப் போகிறது? கிராமங்களில் தலித்துகளின் சேரி
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் – அதுவும் காற்று வீசும் திசையின் கீழ்ப்புறத்தில் – இருக்கிறதே.. இந்த அரசு அவர்களையும் ஆதிக்கசாதியினரின் வீடுகளையும் ஒரே பகுதியில் ஏற்படுத்த
முயன்றிருக்கலாமே?

ஆக.. சாதி இருக்கிறது. அதன் ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அது மேலும் மேலும் வலிமையடைந்திருக்கிறது. காலம் மாற மாற அது வெளிப்படும் முறைகளில்
மாற்றமடைந்திருக்கிறதேயொழிய அதன் இருப்பு இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மை தான் சட்டக்கலூரி வன்முறைகளின் மூலம்
இன்னுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாடு நமக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.

சமூக எதார்த்தம் அறியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில அல்பைகள் தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். “என்னாது காந்தி செத்துட்டாரா?” என்ற ரீதியில்,
“என்னாது சாதி இருக்கா? அதுவும் படிக்கிற இடத்துலயே இருக்கா? என்ன கொடுமை சார்?” என்கிறார்கள் தூக்கத்தில் இருந்து விழித்து. இதில் சிலர் உண்மையிலேயே தூங்கி
விட்டவர்கள்.. பலர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த காரியவாதிகள். இந்தக் காரியவாதிகள் தாம் பாரதிக்கண்ணன் அடிபடும் காட்சியைப்பிழிந்து வரும் சோகரசத்தை
மூலதனமாகக் கொண்டு மீண்டும் தொண்ணூறுகள் வராதா, ஆடுகள் முட்டிக் கொள்ளாதா – நாம் ரத்தம் குடிக்க மாட்டோ மா என்று நரிகள் போலக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தக்
காரியவாதிகள் யார் என்று நாம் சொல்லவே வேண்டியதில்லை.. எதை மறைத்தாலும் இவர்கள் குடுமியை மட்டும் மறைத்துவிட முடியுமா என்ன?

இந்த விவகாரம் குறித்து வினவு குழுமத்தினர் எழுதிய மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் மாத்திரமல்லாமல் அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும்
முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சுட்டி கீழே –

1) பண்ணைப்புரம்: இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம்!

2) அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்!

நவம்பர் 21, 2008 Posted by | Alppaigal, medias, politics | | 4 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: