கார்க்கியின் பார்வையில்

எந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்?

நேற்றுத்தான் எனக்கு எந்திரனை தரிசிப்பதற்கான பெரும் பேறு வாய்க்கப்பெற்றது. நல்ல பிரிண்ட். நன்றி மலேசியா.

ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் – ரஜினியின் ரசிகப்பெருமக்களே, உங்களோடு மல்லுக்கட்டுவது இப்பதிவின் நோக்கம் அல்ல அல்ல அல்லவே அல்ல. ஏற்கனவே இப்படத்தின் வியாபார ஏகபோகத்தனத்தை விமர்சித்தும், இப்படத்தை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதன் பின்னுள்ள வக்கிரம் குறித்தும், ரஜினி என்கிற நமுத்துப் போன பட்டாசை விமர்சித்தும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றுள் உங்களுக்காக நான் பரிந்துரைப்பது வினவு கட்டுரைகளை. இன்னொரு பக்கம் ரஜினியின் ரசிகர்களால் படத்தின் இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வெளியேறி – “தமிழேன்ண்டா…” பாணி விமர்சனங்களும் வலைப்பூக்களில் நிறையவே இறைந்து கிடக்கிறது. எனவே அந்த எல்லைக்குள் நான் நுழையவேயில்லை. அதற்கு வெளியே இந்தத் திரைப்படம் குறித்து சொல்ல எனக்குச் சில விடயங்கள் உள்ளன. எனினும், எந்திரனை முன்வைத்து எனது உரையாடல் இருக்கப்போவதால், படத்தைப் பற்றிய எனது சுருக்கமான விமர்சனத்தை மட்டுமே வைக்கிறேன்.

நீங்கள் இப்போது கண்களை மூடிக் கொண்டு தமிழ்த் திரைப்படத்தின் கருப்பு வெள்ளை காலத்துக்குச் செல்லுங்கள். விட்டலாச்சார்யாவின் ஒரு திரைப்படம். பெயர்….? ‘பரஞ்சோதியும் பாசக்கார பூதமும்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்… சுந்தராபுரி என்கிற ஒரு தேசத்தில் பரஞ்சோதி என்கிற ஒரு நல்லவன் இருக்கிறான். அவன் தான் நம்ம ஹீரோ. அவனிடம் ஒரு பூதம் இருக்கிறது. அது ஒரு நல்ல பூதம். பூத உலகில் இருக்கும் மற்ற குட்டி பூதங்களையெல்லாம் விட சிறந்த பல சக்திகளைக் கொண்ட பூதம். அந்தக் கதையில் வில்லன் ஒரு கெட்ட மந்திரவாதி. அவனிடம் இருக்கும் பூதங்கள் சோப்ளாங்கி ரக பூதங்கள். அவன் எப்படியாவது ஹீரோவிடம் இருக்கும் நல்ல பூதத்தைக் கவர்ந்து விட முயல்கிறான். அதன் வல்லமையை வைத்து தானே அந்த தேசத்தின் அரசனாகி விட நினைக்கிறான். பரஞ்சோதியின் பூதத்தை எப்படியோ ஏமாற்றிக் கவர்ந்து விடும் வில்லன், நாட்டில் பல அக்கிரமங்களைச் செய்யத் துவங்குகிறான். பரஞ்சோதியும் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் ஒரு குட்டித் தீவில் ஒரு தங்கக் கூண்டில் வசிக்கும் கிளியின் உடலில் ஒளிந்திருக்கும் கெட்ட மந்திரவாதியின் உயிரை எடுத்து பாசக்கார பூதத்தையும் நாட்டையும் காப்பாற்றுகிறான். அவன் அந்த முயற்சியின் இருக்கும் போது பரஞ்சோதியின் காதலி கெட்ட மந்திரவாதியின் கவனத்தை தன்பால் ஈர்த்து வைத்திருக்க ‘என் மணாளா…… என் கண்ணாளா…ஆஆஆஆ…” என்று ஒரு பாடலைப் பாடி பரதநாட்டியம் ஆடுகிறார். 

நீங்கள் இப்போது ஒரு முப்பதாண்டுகள் முன்னேறி வருகிறீர்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் வருடம். ஈஸ்ட்மென் கலரில் ஒரு ஏவிஎம் திரைப்படம். பெயர்…..? ‘தாயே தெய்வமே’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கதையில் ஹீரோ ஜெய்சங்கர் ஒரு யானை வளர்க்கிறார். அது பலம் பொருந்தியது. அது நல்ல பல காரியங்களைச் செய்கிறது. இதில் வில்லனாக வரும் அசோகன், அந்த யானையை எப்படியாவது ஜெய்சங்கரிடம் இருந்து கவர்ந்து அதை ஸ்மக்லிங் (கோல்டு பிஸ்கோத்து) செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். நல்லவிதமாகக் கேட்டுப் பார்த்து தராத ஜெய்சங்கரிடம் இருந்து அந்த யானையை எப்படியோ கவர்ந்து விடும் வில்லன், அதை கெட்ட காரியங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். ஜெய்சங்கர் சும்மா இருப்பாரா…? வட்டமாக கவ்பாய் தொப்பி மாட்டிக் கொண்டு, முதுகுக்குப் பின்னே இரட்டைக் குழல் துப்பாக்கியும், இடையில் இரண்டு
ரிவால்வரும் பொருத்திய பெல்டையும், மார்புக்குக் குறுக்கே தோட்டா பெல்ட்டையும் வரிந்து கட்டிக் கொண்டு வில்லனைத் தேடி போகிறார். அவருக்க்கு பக்க வாத்தியமாக டைட் பேண்ட் மாட்டிய ஹீரோயினும் பாங்கோ டிரம்ஸுடன் எம்.எஸ்.விஸ்வநாதனும் கூடவே வேறு குதிரைகளில் போகிறார்கள். எம்.எஸ்.வி டிரம்ஸ் வாசிக்க, ஹீரோயின் வில்லன் முன் ஒரு கிளப் டேன்ஸ் ஆடும் சைக்கிள் கேப்பில் யானையை மீட்டுவிடும் ஜெய்சங்கர், வில்லனைக் கொன்று யானையைத் திருத்துகிறார். சுபம்.

போதும் போதும்.. கண்ணைத் திறந்து தொலையுங்கள்.

இப்போது இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு. எந்திரன் விமர்சனம் கீழே –

பரஞ்சோதி = ஜெய்சங்கர் = வசீகரன் (ரஜினி)
பாசக்கார பூதம் = பாசக்கார யானை = பாசக்கார எந்திரன் (சிட்டி)
கெட்ட மந்திரவாதி = கெட்ட அசோகன் = கெட்ட விஞ்ஞானி (வில்லன்)
ஹீரோயின் = ஹீரோயின் = ஹீரோயின் (ஐசுவரியா -அலைஸ் – ஒலக அழகி)
மணாளனே…. = கிளப் டான்ஸ் = அரிமா அரிமா
ஊஊஊ… = டிடும் டடும் குடும் (MSV) = ஷக் திக் ஷக் ஹூக் ஹிக் ஹாஆஆங்ங் (AR.Rahman)
மாடர்ன் தியேட்டர்ஸ் = ஏ.வி.எம் = கலாநிதி மாறன்
விட்டலாச்சார்யா = ஆர்.சுந்தரம் = ஷங்கர்

எந்திரன் விமர்சனம் முற்றிற்று.

வேற எந்த வெங்காயமும் என் கண்களுக்குப் புலப்படாமல் போனதற்கு என் கண்களின் கோளாறே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன்.

இந்தத் திரைக்காவியத்தை தமிழ் திரைப்படங்களின் உச்சம் என்றும், ஹாலிவுட்டுக்கே விடுக்கப்பட்ட சவால் என்றும் எழுதப்படும் கட்டுரைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. பொதுவில் சாதாரண இரசிகர்களின் கண்ணோட்டமும் அப்படியே இருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு. முதலில் நவீனம், முன்னேற்றம், வளர்ச்சி என்பதை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் இருக்கும் கோளாரு தான் இத்திரைப்படத்தின் தொழில் நேர்த்தி நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் மயக்கத்தின் காரணம். கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை – நாம் இந்த நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொஞ்சம் அறுத்துப் பார்த்து விட்டு திரும்ப எந்திரனுக்கு வருவோம்.

இந்தியாவில் எதில் நவீனம் இல்லை? எல்லாமே நவீனம் தானே…. விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போமே. நிலத்தை உழ டிராக்டர். களை புடுங்க மிஷின். கதிர் அறுக்க மிஷின். கதிர் அடிக்க மிஷின். தென்னை மரம் ஏறக்கூட மிஷின் வந்து விட்டதாம். போக்குவரத்து வாகனங்கள் என்று பார்த்தால்… அலுங்காமல் குலுங்காமல் சாலையைத் தழுவிக் கொண்டே ஓடும் வோல்வோ பஸ்கள் வந்தாயிற்று, நெடுஞ்சாலைகளைக் கிழித்துப் பறக்கும் ஹார்லி டேவிட்சன் இருக்கிறது, ஆவ்டி கார்கள், பி.எம்.டபிள்யூ கார்கள்… சரி நம்ம இராணுவத்தைப் பார்ப்போமே.. ஒலியை விட வேகமாய் பறக்கும் நூற்றுக்கணக்கான சுகோய் Su-30 MKI ரக போர் விமானங்கள், ஒலியை விட வேகமாய் பறந்து தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், தாக்கி விட்டு ஒளிந்து கொள்ளும் விசேடமான டாங்கிகள், அடுத்த தலைமுறைக்கான யுத்த தளவாடங்கள்…. இன்னும் கணினிகள், மூன்றாம் தலைமுறை அலைவரிசை
சேவைகள், செல்போன்கள், ஜட்டிகள், பனியன்கள்..

இதெல்லாம் நவீனமோ, வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லை என்கிறேன்..

‘அடப் போங்க சார்… இத்தினி இருந்தும்… நீங்க என்னடான்னா இன்னும் பழைய பல்லவியையே பாடறீங்களே..’ என்கிறீர்களா? ஒரே ஒரு கேள்வி. இத்தனை ஆள் அம்பு யானை சேணையெல்லாம் இருக்கே…. அப்புறம் ஏன் பாகிஸ்தான் லொள்ளு பண்ணும் போது திருப்பி அடிக்க முடியாம அமெரிக்கா கிட்ட ஓடுறாங்க? புள்ளியியல் ரீதியில் பார்த்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு போர் என்று வந்தால், அது ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விடுமாம். இந்தியாவின் எண்ணிக்கை பலம் அப்படி. ஆனா முடியலையே… ஏன்? நீங்க என்பதுகளில் வரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன் ஸ்டைலாக ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து பைப் புகைத்துக் கொண்டிருப்பான். அவன் அடியாட்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் பாடிபில்டர்களாக இருப்பார்கள். பயில்வான் தான்.. வஸ்தாது தான்… எல்லாம் தெரியும் தான்… ஆனா சுயமா அடிக்க முடியாதே…. அது தான் இந்தியா.

ஆக, கருவிகளில் வரும் மாற்றங்களைக் கொண்டு மட்டும் நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளவிடுதாக இருந்தால் இந்தியா வஸ்தாது தான் – எந்திரன் ஹாலிவுட்டுக்கு
சவால் தான். ஆனால், அந்த மாற்றத்தை எந்தவகையில் பயன்படுத்துகிறோம், அது நம் சிந்தனையில் எவ்வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கருவிகளிலான (தொழில்நுட்பம்) மாற்றம் வாழ்நிலையில் எவ்வாறான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் தான் நமக்கு முழு சித்திரமும் கிடைக்கும். கணினிகளை ஜோதிடம் பார்க்கவும், வேறு ஒரு நாட்டுக்கு கணக்கெழுதித் தரவும் மட்டும் பயன்படுத்தி விட்டு என் கிட்டயும் கம்ப்யூட்டர் இருக்கு அதனால நானும் ரவுடி தான் என்றால் என்ன அர்த்தம்? அப்படித்தான் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

ஒரு நவீன ஹாலிவுட் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களும் எந்திரனிலும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்ப்போம்.
2004ம் ஆண்டு வெளியான ஐ.ரோபாட் மற்றும் 2009ம் ஆண்டு வெளியான சர்ரோகேட்ஸ். இரண்டிலும் மனிதனுக்கும் இயந்திரப் பயன்பாட்டிற்கும் இடையில் எழும் முரண்பாட்டை
பிரதானமாய்க் கையாளுகிறார்கள். மனிதனுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்படும் இயந்திரங்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்கும் திறனையும் பெற்று ஆதிக்க நிலையை அடைகிறது.
இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் மனித வேட்கைக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே நிகழும் முரண்பாட்டைக் காணலாம். இவ்விரு திரைப்படங்களும்
கூட அமெரிக்க மசாலாத்தனம் கொண்ட வணிகக் குப்பைகள் தான். அதிலும், அவர்கள் குறிவைக்கும் வணிக இலக்கு என்பது எந்நேரமும் அச்சத்திலிருக்கும் சராசரி அமெரிக்கர்களின் உளவியல்.

அமெரிக்கர்களின் இந்த அச்சத்தின் வெளிப்பாடுகளை அவர்களது வெகுசன வணிக சினிமாக்களில் காணலாம். ஒரு பல்லி திடீர் என்று பெரிதாகி ஊருக்குள் புகுந்து விடுவது (கோட்ஸில்லா) , ஒரு பழங்காலப் பிராணி திடீரென்று உயிர்பெற்று ஊருக்குள் புகுந்து விடுவது (ஜுராசிக் பார்க்).. அயல்கிரகத்து மனிதர்கள், வினோதமான பூச்சிகள், வினோதமான கடல் உயிரினங்கள்… என்று அம்புலிமாமா தரத்திலான கற்பனையில் கொஞ்சம் தொழில்நுட்பத்தைக் கலந்தால் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக் பஸ்ட்டர் தயார். இந்த வணிக சினிமா சூத்திரத்தினுள்ளும் கூட அவர்கள் தமது மக்கள் வாழ்வின் மேல் கொண்டிருக்கும் அச்சத்தையே அச்சாரமாகக் கொண்டு சிந்திக்கிறார்கள். ஆனால் எந்திரன் ஒரு சராசரி இந்தியனின் பாமரத்தனமான கற்பனையளவுக்குக் கூட – அதாவது ஒரு கந்தசாமியின் அளவுக்குக் கூட – கதைக்களனுக்காக மெனக்கெடவில்லை. அப்படியே விட்டலாச்சார்யாவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கொண்டு வந்துள்ளார்கள்.

கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் கோல்டு பிளேக் கிங்ஸ் பாக்கெட்டினுள் துண்டு பீடியை வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் – அதன் வெள்ளித்திரை வடிவம் தான் எந்திரன்.

ஒரு டெரா பைட் வேகமும் ஒரு ஸெட்டா பைட் நினைவுத் திறனும் கொண்ட எந்திரன் என்ன செய்கிறான்? மருதாணி வைக்கிறான். ஸ்டைலாக நடந்து தன் இடுப்பில் கைவைக்கிறான். நாயகியைக் காப்பாற்ற பொறுக்கிகளின் மூஞ்சியில் கை வைக்கிறான். பாட்டுப்பாடி பரதநாட்டியம் ஆடுகிறான். கருநாடக சங்கீதம் பாடுகிறான். மருத்துவச்சி வேலை செய்கிறான். மொத்தத்தில் முதல் பாதியில் எந்திரன் மயிலாப்பூருக்கும் நங்கநல்லூருக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறான். இரண்டாவது பாதியில் நிறைய பேரைக் கொல்கிறான், ஹீரோவின் டாவு மேலேயே கண் வைக்கிறான். இந்த ரெண்டாவது காரணம் ஒன்று போதாதா? ஒரு மருவை ஒட்டிக் கொண்டு வில்லனின் கோட்டையில் புகும் ஹீரோ, நாயகியை வில்லன் முன் டான்ஸ் ஆட வைத்து அந்த கேப்பில் ஜெயித்து விடுகிறான்.

இது தான் ஹாலிவுட் தர கற்பனையா? இதே இருநூற்றம்பது கோடியைத் தூக்கி இராம நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிட அருமையான ஒரு படத்தை எடுத்திருப்பார்.

எனக்கு ஹாலிவுட் திரைப்படமான அவதார் நினைவுக்கு வந்தது. அதில் தொழில்நுட்பத்தின் மேண்மைக்கும் அதன் உருவாக்க நேர்த்திக்கும் கிடைத்த பாராட்டு என்பது அது எப்படி எதன் மேல் கையாளப்பட்டது என்பதைக் கொண்டே கிடைத்தது. அது ஒரு அந்நிய தேச திரைப்படம் தான். ஒரு அமெரிக்க வெள்ளையரின் கற்பனை தான். ஆனாலும் கூட அது நம்மிடம் ஏதோவொன்றைச் சொன்னது. நமது சமகாலத்தின் நிகழ்வுகளின் மீதான நமது கோபத்தை அது மீட்டியது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் தங்களை அந்த கிராபிக்ஸ் பொம்மைகளிடம் கண்டார்கள். இன்காக்கள், மாயன்கள், ஆப்ரிக்கக் கருப்பர்கள் தொடங்கி இன்றைய கோண்டுக்கள் வரையிலான பூர்வகுடி மக்களை பண்டோரா கிரகத்து மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவதாரின் வடிவம் அதன் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு நின்றது – துருத்திக் கொண்டிருக்கவில்லை.

நம்மிடமும் கணினிகள் இருக்கிறது தான். அது கணினியின் வேலையைச் செய்யவில்லை – கிளியின் வேலையைச் செய்கிறது

அன்றைக்கு ஆர்.எஸ் மனோகரிடம் தொழில் நுட்பம் இருந்தது. எம்.ஆர்.ராதாவிடம் அது இல்லை – அதைவிட ஆயிரம் மடங்கு வீரியமான நவீனமான சிந்தனை இருந்தது. இன்று ஆர்.எஸ் மனோகராக ஷங்கர் இருக்கிறார்.. ஆனால் ஒரு எம்.ஆர்.ராதா இல்லை. அப்படி ஒருவர் தோன்றுவதற்கான வாய்ப்புகளை சன் குழுமத்தின் வியாபார ஏகபோகம் ஏறத்தாழ ஒழித்துக் கட்டிவிட்டது என்றே சொல்லலாம்.

– to be contd….

ஒக்ரோபர் 8, 2010 Posted by | Alppaigal, எந்திரன், ஏ.ஆர்.ரஹ்மான், பதிவர் வட்டம், ரஜினி, ரஜினி காந்த், வடிவேலு, விவேக், medias | , | 21 பின்னூட்டங்கள்

இராவணன் : இராமன் ஜெயித்த கதை..!

ஒரு கலைப் படைப்பு என்பது – கவிதையோ, ஓவியமோ, கதையோ, சினிமாவோ – தன்னுள் பல்வேறு அடுக்களைக் கொண்டதாய் (layers) உள்ளது. வெவ்வேறு அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டு பார்வையாளன் முன் ஒரு முழுமையான சித்திரமாய் வைக்கப்படுகிறது. அந்தப் படைப்பு எந்த வர்க்கத்திடம் எந்த சேதியைச் சொல்கிறது என்பதை இந்த அடுக்குகளுக்குள்ளான முரண்பாடுகளில் எந்த அடுக்கு வென்று மேலே துலக்கமாய்த் தெரிகிறது என்பதிலிருந்தே தீர்மானமாகிறது. இதில் கதாசிரியன் அல்லது படைப்பாளியின் பங்கு அவன் எந்த வர்க்கத்தை
சார்ந்தவனாயிருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் எந்த அடுக்கை முன்நகர்த்திச் செல்கிறான் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் இரசிகன் அல்லது வாசகன், ஒரு படைப்பைக் காணும் போது அவன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ற மன எழுச்சியை அடைகிறான்.

இராவணன் படத்தைப் பொருத்தவரை இப்படி நம்மை படம் நெடுக வழிநடத்திச் செல்லும் இழை / அடுக்கு எதுவென்பதைப் பற்றியதே
இவ்விமரிசனம். கதைக்களன் இராமாயனம் என்பது பலவகைகளில் நிருவப்பட்டுள்ளது. பாத்திர அமைப்புகள் மற்றும் பாத்திரங்களின் உடல் மொழி வாயிலாகவே இது வலிந்து திணிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல், தற்சமயம் மத்திய இந்தியாவில் வளங்களைக் கைப்பற்ற இந்திய அரச
படைகள் பழங்குடியினர் மேல் தொடுத்திருக்கும் போரைத் தொடர்ந்து பொதுவில் வனங்கள், பழங்குடிகள் பற்றி இது வரையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு உயர் பிரிவினருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படம் அவர்கள் பற்றி சாடை பேசுகிறது.

படத்தின் பெயர் இராவணன் என்பதாக இருப்பதால் பரவலாக இராவணனை நாயகனாக காட்டியிருக்கிறார்கள் என்று தமிழ் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நுணுக்கமாக அவதானிக்கும் போது இப்படைப்பு இராமனை அவனது சில வரலாற்றுப் பழிகளில் இருந்து காப்பாறி விடவே செய்கிறது. வால்மீகியின் இராமனை முன்பு ஒரு முறை கம்பன் காப்பாற்றினான் – இதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சினிமாக் கம்பன் இன்னுமொரு முறை இராமனை செலுலாய்டில் காப்பாற்றியுள்ளான்.

தன் தங்கையை போலீசுக்கு பயந்து கைவிட்ட மாப்பிள்ளையின் கையை வெட்டும் அதே வீரா, தங்கையைக் கற்பழித்த போலீசை உயிரோடு விட்டு
விடுகிறான். எந்தவித ஈவு இரக்கமும் இல்லாத – பழியுணர்ச்சி மிகுந்த – வீரா, சீதை மேல் பெரிய காரணங்கள் ஏதுமின்றி அனுதாபப்படுகிறான். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சீரழிவுகளுக்குக் காரணமான போலீசு அதிகாரியின் மனைவின் மேல் அவனுக்கு மோகம் தோன்றுகிறது. கதை
முடிவில் இராவணனிடம் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் இராமன் சந்தேகம் கொள்கிறான். இந்த இடத்தில் அவனுடைய சந்தேகத்துக்கு புது
விளக்கம் கொடுத்து (‘யாருகிட்டே என்ன சொன்னா எங்கே யாரை தேடிப் போவாங்கன்னு தெரிஞ்சு தானே சொன்னீங்க எஸ்.பி சார்’ என்று
கிளைமேக்ஸில் கூவும் இடம்) ராமனின் யோக்கியதையைக் காப்பாற்றுகிறார். உண்மையில் இராவணன் இராமனை தொங்கு பாலத்தில்
காப்பாற்றவில்லை – இந்த இடத்தில் தான் காப்பாற்றுகிறான். இதே இடத்தில் தான் மணிரத்னமும் இராமனும் ஜெயிக்கிறார்கள் – இராவணன்
பாத்திரமும் படமும் தோற்கிறது.

சூர்பனகையாக வரும் பிரியாமணியின் கற்பழிப்புக் காட்சி பார்வையாளனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படாத வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்க்கும் போது பிரியாமணி ‘எத்தனையோ தடுத்துப் பார்த்தேன் முடியவில்லை – ராத்திரி பூரா பழிவாங்கிட்டானுக’ என்று அழுகிறார். கவனியுங்கள் – ‘பழிவாங்கி’விட்டார்கள். மலைகிராம மக்களின் செயல்கள் ஜெண்டில்மேன் இரசிகர்களுக்கு ஒருவிதமாய் முகச்சுழிப்பு ஏற்படுத்தும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா அந்த போலீசுக்காரனை கடத்தி வந்து மொட்டை அடிக்கும் வைபவத்தின் போது உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு ‘ஹுவ்வா ஹுவ்வா’ என்று குதியாட்டம் போட்டுக் களிக்கிறார்கள். நியாயமாய் ஆத்திரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இப்படி களிவெறியோடு கள்ளை ஊற்றிக் கொண்டும், சேறைப் பூசிக் கொண்டும் குதியாட்டமா போடுவார்கள்? இன்னும் பல்வேறு காட்சிகளிலும் மலைவாசி மக்கள் பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அதே சித்திரத்தைத் தான் ஜூம் பண்ணிக் காட்டுகிறது சந்தோஷ் சிவனின் காமிராக் கண்கள்.

வீரா ஒரு மலைவாசி அல்ல. அவன் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பனின் ஒரு
நகல் வடிவம். வீரா யாருக்கு நல்லவன்? வீரப்பன் யாருக்கு நல்லவனோ அவர்களுக்குத்தான் வீராவும் நல்லவன். வீரப்பனை ஒழித்துக் கட்ட
அரசியல்வாதிகளுக்கு இருந்த நியாயமும் நாம் அவனை மறுப்பதற்குக் கொள்ளும் நியாயமும் வேறு வேறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பன் வாயிலிருந்து அஜீரணமாகி தமிழ்தேசிய ‘சரக்கு’ வழிந்து அதை கேவலப்படுத்தியது. இங்கோ பொருத்தமில்லாத இடத்தில் வீராவின்
வாயிலிருந்து ‘மேட்டுக்குடி’ எனும் வார்த்தை வருகிறது.

கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில் ஐசுவரியாவுக்கு சாப்பாடு எடுத்து வருகிறான் வீராவின் அண்ணன். அப்போது ஐஸ்வரியா ‘நான் என்ன நாயா
தூக்கி தூரப் போடுங்கள் இதை’ என்கிறாள் – இது ஒரு சாதாரண சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். இது மேட்டுக்குடிக்கு மட்டுமே
சொந்தமானதும் இல்லை – அடித்தட்டு மக்களுக்கு சம்பதமில்லாததும் இல்லை. ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்படும் பிரபு ‘இது ஒரு மேட்டுக்குடி திமிர்’ என்று அறிவித்து மேட்டுக்குடி திமிரை சுயமரியாதையாக்குகிறார். நம்மிடம் இருந்து அதை அந்நியமாக்குகிறார் – இந்த இடங்களில் தான்
மணிரத்னமும் இராவணன் படமும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எல்லாம் நல்லா இருக்கு ஆனா ஏதோவொன்னு
குறையுதே என்று பார்வையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

அடுத்து ஒரு கலைப்படைப்பு என்பது அது எழுதப்பட்ட அல்லது வெளிப்பட்ட காலத்தின் சமூக பொருளாதார நிகழ்வுகளோடான தன்னைத்
தொடர்பு படுத்திக் கொள்கிறது. இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அது அப்போது நடந்த ஆரிய திராவிட போரையும், திராவிடத்தின் மேல் ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவியதையும் குறியீடாகக் கொண்டிருந்தது. தற்போது அதன் நீட்சியாக மத்திய இந்தியாவில் இராம சைனியமாக
இந்திய அரச படைகள் பழங்குடிகளின் வளங்களின் மேல் பாய்ந்து குதற காத்துக் கொண்டிருக்கும் நிலையும், இராவண சைனியமாக
மாவோயிஸ்டுகள் அதை எதிர்த்து நிற்கும் நிலையும் நிலவும் சூழல்.

தமது வாழ்க்கையில் வனாந்திரங்கள், மலைப்பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள் என்று இன்னொரு உலகம் இருப்பதையே உணராத ஒரு
மக்கள் பிரிவு சமீப காலமாய் அவற்றைப் பற்றி படிக்க வேண்டிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காத்துக்
கொள்ள மத்திய இந்தியாவின் கோண்டுகளும், சந்தால்களும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள். இதுவும் ஒரு இராமாயணம் தான். அன்று சீதையை நெருப்பாய்ச் சுட்டது பாப்பனியம் இன்றோ பார்ப்பனியமாய் சர்வதேச தரகு முதலாளிகள் அமர்ந்திருக்க, அவர்கள் நலன் காக்கும் ராமனின் பாத்திரத்தை மன்மோகனும், லட்சுமணனின் பாத்திரத்தை சிதம்பரமும், அனுமனின் பாத்திரத்தை சல்வாஜூடும் குண்டர்களும் ஏற்றுக் கிளம்பியுள்ளனர். ஆனால், இந்தக் கதையில் சீதையான இயற்கை வளங்களை இரவணர்களான கோண்டுக்கள் காத்து நிற்கிறார்கள். சீதையை கோண்டுக்களிடம் இருந்து ‘மீட்டு’ பன்னாட்டு தரகு முதலாளிகள் கையில் சேர்த்துவிட இராம சைன்னியம் தண்டகாரன்ய வனத்தை சுற்றி வளைத்து நிற்கிறது. அதை எதிர்த்து இராவண சைன்னியமாய் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தை எதிர்த்து ஒன்றுமில்லாதவர்கள் நிற்கிறார்கள். பெரும் பீரங்கிகளையும் நெருப்பை உமிழும் விமானங்களையும் எதிர்த்து கோண்டுகளின் வில்லாளிகள் நிற்கிறார்கள். நொடிக்கு நூறு ஈயக்குண்டுகளை துப்பும் எந்திரத் துப்பாக்கிகளை எதிர்த்து எத்தனையோ நாள் பட்டினியோடும், பஞ்சடைத்த கண்களோடும் கையில் ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும் நிற்கிறது இராவண சைன்னியம். ஜெண்டில்மேன் அலுகோசுகளுக்கு இந்தச் சூத்திரம் புரியவில்லை. அது எப்படி சாத்தியம்? இது என்ன அநியாயம்? ஒரு
சக்தி மிக்க வல்லரசை ஓட்டாண்டிகள் படை இப்படி அலைக்கழிப்பது எப்படி சாத்தியமானது என்று திகைக்கிறார்கள். தமது வாழ்வில் முதன் முறையாய் யார் இந்த கோண்டுக்கள், யாரிந்த காட்டுவாசிகள் என்று கவனிக்கிறார்கள். இராவண சைன்னியத்தின் தாக்குதல் முறைகளும் அவர்கள் இராம சைன்னியத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய காதைகளையும் முதலாளித்து பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிக்கிறார்கள்.

மணிரத்னம் காட்டுவாசிகளுக்கும் போலீசுக்குமான சண்டையைக் காட்டுகிறார். டீசெண்டு போலீசு – இண்டீசெண்டு காட்டுவாசிகள். பெண்ணைக்
கடத்திப் போய் மோகிக்கும் அழுக்குக் காட்டான் வீரா ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பன் வாயில் தமிழ்தேசியம் ஒழுகுகிறது. எங்கள் ஊர் பக்கத்தில் இதை சாடை பேசுவது என்று சொல்வார்கள். நேராய் பேச துப்பில்லாதவர்கள் செய்யும் கோழைத்தனம். மாடு மேய்த்துத் திரும்பும் மக்களை ‘நம்ம்ம்ம்பி’ போலீசு அனுமதிக்கிறது – அவர்களுக்குள்ளே கலந்து வரும் வீரா கும்பல் அங்கே இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளைக்
கொள்ளையடிக்கிறது. வீராவின் கும்பலை படத்தில் காட்டியவரையில் அவர்களிடம் அதிகபட்சம் இருந்த ஆயுதம் ஒரே ஒரு பிஸ்டல். அதுவும்
வீராவிடம் தான் இருந்தது. எனில் இந்த இயந்திரத் துப்பாக்கிக் கொள்ளை ஏன் காட்டப்படுகிறது என்பதை மணி சொல்லாமலே அவரின் ரசிகர்கள்
உணர்ந்து கொள்கிறார்கள்.

போலீசைக் கட்டிவைத்து எரிக்கிறார்கள் மக்கள் – காரண காரியம் ஏதும் சொல்லப்படவில்லை; அப்படியேதும் இல்லாமலே அவர்கள் செய்வார்கள்
என்பது போல் துவங்குகிறது ஆரம்பக் காட்சி. சம்பந்தமேயில்லாமல் தனது தனிப்பட்ட பகையுணர்ச்சிக்கும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைக்கும்
‘மேட்டுக்குடி’களோடு பிரச்சினை என்று வீரா பேசுகிறான். அவனோடு வரும் மலைகிராம மக்களோ எந்நேரமும் சேறும் சகதியும் பூசிக் கொண்டு
அலைகிறார்கள். மூங்கில் குடுவைகளில் கள்ளை நிரப்பி ஊற்றிக் கொண்டு ஹுவ்வா ஹுவ்வா என்று குதியாட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெண்களுக்கிடையே ஒளிந்து கொண்டு இராவணனை இராமன் சுட்டான் என்பது போல் காட்டியுள்ளதாக சில தமிழ் வலைப்பதிவுகளில்
வாசிக்க நேர்ந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. தேவ் (இராமன்) வீராவைக் (இராவணனை) கைது செய்யத் தேடி வருகிறான். அவன் கடமையை செய்ய விடாமல் பெண்கள் அவனைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அவன் துப்பாக்கியை எடுத்து வாகாக குறிவைத்து இராவணனை அடிக்கிறான். அதாவது  ரவுடி வீராவை மலை கிராமப் பெண்கள் கேடயமாக நின்று காப்பாற்ற முனைவது போலவும் வேறு வழியில்லாமல் தேவ் பெண்கள் மத்தியிலிருந்து சுடுவது போலவும் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதிகாச ராவணன் திராவிடர்களின் குறியீடாக இராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டான் என்பதை பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வீரா எந்த வகையிலும் அந்த மலை கிராமத்து மக்களின் விடுதலைக்கோ மேம்பாட்டுக்கோ போராடியதாக காட்சிகள் இல்லை. என்பதை கணக்கில்
கொண்டால் எஞ்சியிருப்பது இதிகாச இராவணனின் சாயல் அல்ல, சுப்பிரமணியபுரத்திலிருந்து மஞ்சப்பையோடு கிளம்பி வந்த ஒரு பொருக்கிப் பயல் மட்டுமே. இதைத் தான் தற்போது ஏடுகளில் வெளியாகியிருக்கும் மணிரத்னத்தின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது. தான் இந்தப் படத்தில்
வீராவின் பாத்திரப் படைப்பின் மூலம் உணர்த்த வந்தது இராவணனையோ இராமாயனத்தையோ அல்ல; இது போன்ற முரட்டு மனிதர்களுக்குள்ளும்
காதல் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதையே என்றுள்ளார்.

பின் இராமயண கதைக்களனும், பழங்குடியினர் பின்னணியும் வீராவுக்கு எதற்கு? அது அவர்கள் நியாயத்தைப் பேச அல்ல; அவர்களை இழிவு
படுத்தவே என்பதை வெள்ளித்திரையில் தெளிவாக நிருவியுள்ளார் மணி ரத்னம். கதைக்களனையும் பின்னணியையும் படத்திலிருந்து உருவியெடுத்து விட்டால் மிஞ்சுவது ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி பற்றிய கதை தான். ஒரு ரவுடியை பொருத்தமில்லாத இடத்தில் உலவவிட்டதில் தான்
மணிரத்னத்தின் அரசியல் அடங்கியிருக்கிறது.

-கார்க்கி

ஜூன் 23, 2010 Posted by | Alppaigal, இராவணன் விமர்சனம், சினிமா விமர்சனம், culture, Films, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

விளையாட்டுத் துறை – சில என்னங்கள்..!

சில நாட்கள் முன்னாள் ஹாக்கி வீரர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடிய செய்தி ஆங்கில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருந்தது. அப்புறம் எப்போதுமே ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கும் போது ஒரே ஒரு மெடலாவது வாங்கி விட மாட்டோ மா..? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் ஊடகங்களில் வருவதுண்டு.

‘அதெப்படி சார்… நூறு கோடி மக்கள் வாழற நாட்டுக்கு ஒரு பதக்கம் கூட ஜெயிக்கற அருகதை இல்லாமப் போயிடுமா? எல்லாம் பாலிடிக்ஸ் சார்…எங்க பாத்தாலும் கரப்ஷன்..” என்று அங்கலாய்க்கும் நடுத்தர வர்க்க குரல்களை நிறைய கேட்டிருப்போம். இது போன்ற ஒரு விவாதம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் விவாதம் செய்தது நினைவுக்கு வருகிறது. இந்தத் துறையில் நேரடியான அனுபவம் இருப்பதால் இது பற்றி எனது கருத்துக்களை ஒரு பதிவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். ரீனா – செந்தில். நான் ஜித்தோ குகாய் கராத்தே பள்ளியில் ப்ரொவிஷனல் ப்ளாக் பெல்ட் பெற்ற தகுதியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது ரீனா எனது மானவி. பின்னர் ஜித்தோவில் எனது ப்ளாக் பெல்ட்டை உறுதி செய்ய எனது அப்போதைய மாஸ்ட்டர் மூவாயிரம் லஞ்சம் கேட்டதால் கோவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அங்கே எனது சக மானவன் செந்தில். இந்த இருவருமே சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு தகுதி கொண்ட வீரர்கள். குறிப்பாக ரீனா 2003ம் ஆண்டு தமிழ்நாடு அளவிலான கத்தா / குமிட்டே என்று இருபிரிவிலும் இண்டர் டோ ஜோ போட்டிகளில் முதலிடம் வென்றவர்.

“ஒரு தேவதையின் மரணம்” என்ற ஒரு சிறுகதை சில நாட்களுக்கு முன் எழுதியிருப்பேன். அதில் வரும் ஜெனி எனும் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் ரீனா தான். எனக்கு அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம். அப்போது நான் அவரது பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்தில் கராட்டே இன்ஸ்ட்ரக்டராக இருந்தேன். பின்னர் அவரது ஆர்வத்தைப் பார்த்து இலவசமாகவே எங்களது மெயின் டோஜோவுக்கு
வரவழைத்தேன். (டோஜோ என்பது பயிற்சி செய்யும் இடம் அல்லது பள்ளி என்று பொருள் கொள்ளலாம். மெயின் டோஜோ என்பதை தலைமைப் பள்ளி என்று சொல்லலாம்)

சேர்ந்து மூன்றே வருடங்களில் அவர் கருப்புப் பட்டை பெறும் அளவுக்கு ஆர்வமாக கற்றுக் கொண்டார். பெண்கள் என்றால் குழைவான உடல்வாகு கொண்டவர்கள், பயந்த சுபாவம் கொண்டவர்கள், அவர்களுக்கு தற்காப்புக் கலையெல்லாம் ஒத்துவராது என்கிற பொதுவான அபிப்ராயங்களை ரீனா உடைத்து நொறுக்கினார். மாநில அளவில் நடந்த சில போட்டிகளில் அனாயசியமாக வெற்றிகளைத் தட்டி வந்தார். நாங்களெல்லாம் அவர் மேல் மிக எதிர்பார்ப்போடு இருந்தோம். ஜப்பானில் நடக்கும் உலக அளவிலான போட்டிகளுக்கு அவரை அனுப்ப மற்ற மானவர்களெல்லாம் சேர்ந்து ஸ்பான்சர்ஷிப்புக்காக அலைந்து கொண்டிருந்தோம்.

இந்த காலகட்டத்தில் தான் எனக்கும் எங்கள் மாஸ்ட்டருக்கும் மனக்கசப்பாகி நான் ஜித்தோவில் இருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அதற்க்குப் பின் சில ஆண்டுகளாக ரீனாவைப் பார்க்க முடியவில்லை. அப்புறம் ஒரு நான்கு வருடம் கழித்து எதேச்சையாக சாலையில் எதிர்பட்டார். அப்போது அவர் பழைய ரீனாவாக இருக்கவில்லை. உருக்குலைந்து போயிருந்தார். முன்பு கிராப் வைத்திருப்பார் – இப்போது நீளமாக தலைமுடி.
என்னோடு சரியாக பேசாமல் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். பின் நான் எனது பழைய நன்பர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்ததும் அவர் கனவர் இது போன்ற விளையட்டுக்களில் ரீனா ஈடுபடுவதை விரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது. கலியாணத்துக்குப் பின் ஒரு நாள் ரீனா பயிற்சியில் இருக்கும் போது டோஜோவுக்குள் புகுந்த அந்த ஆள் ரீனாவுக்கு பளீர் என்று ஒரு அறை விட்டு தர தரவென்று இழுத்துச் சென்றிருக்கிறான். அதன் பின் ரீனா எப்போதும் டோ ஜோவுக்கு வந்ததேயில்லை. ஒரு வேளை ரீனா தொடர்ந்து பயிற்சி செய்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்னவோ.

எத்தனையோ ஆண் மானவர்களை குமிட்டேயில் அனாயசியமாக வீழ்த்தும் திறமை கொண்ட ரீனா அவள் கனவனை சும்மா ஒரு தட்டு தட்டியிருந்தாலே அவன் மூஞ்சி எட்டாகி இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடும் அளவுக்கு சுதந்திரமான சிந்தனை கொண்ட பெண்களை நமது சமூகம் பஜாரி என்று தானே சொல்கிறது. ஒருவேளை ரீனா அப்படிச் செய்திருந்தால் இன்றைக்கு அவள் மெடல் வாங்கியிருப்பாளோ இல்லையோ வாழாவெட்டி எனும் பட்டத்தை வாங்கியிருப்பாள். மக்கள் தொகையில் சரிபாதி கொண்ட பெண்களை இப்படி மொக்கையாக்கி வைத்திருப்பது தான் நமது சமூக அமைப்பு. பொருளாதார ரீதியில் அவர்களை சார்பு நிலையில் இருக்க வைத்தே வீணடித்து விட்டது. ஏதோ லீணா மணிமேகலை போன்று நாலு கெட்ட வார்த்தைகள் பேசுவதையே பெண் விடுதலையின் உச்சம் என்று நினைத்துக் கொள்ளும்
அலுக்கோசுகள், அந்த நாலு கெட்ட வார்த்தைகளையும் கவனமாக அவரது கனவரை நோக்கி உதிர்க்காததன் மர்மம் என்னவென்று யோசிக்க வேண்டும்.

செந்தில் ஒரு டைலர். ஒரு ஆயத்த ஆடை தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தான். அங்கே குறிப்பான வேலை நேரம் கிடையாது. ஆர்டர் இருக்கும் போது இரவு பகலாக வேலை செய்தாக வேண்டும். இரவு முழுக்க வேலை செய்து விட்டு சிவந்த கண்களோடு காலையில் மைதானத்தில் வந்து எங்களோடு நிற்பான். உடல் தொய்ந்து போய் ஓய்வு கேட்டு கெஞ்சும். அந்த நிலையிலும் செந்தில் அடிக்கும் ஜம்ப்பிங் ரிவர்ஸ் சைடு கிக் எங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம். நான் மிகச் சிலரோடு தான் குமிட்டே பயிற்சி செய்ய அஞ்சி இருக்கிறேன். அதில் செந்தில் என்றால் எனக்கு எப்போதும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். தைய்யல் மிஷினை மிதித்து மிதித்து உரமேறிய கால்கள் அவன் கால்கள்.

டேக் வாண்டோ ஒலிம்பிக்கில் இருக்கிறது. அனேகமாக ஒலிம்பிக்கில் இருக்கும் ஒரே மார்ஷியல் ஆர்ட் டேக் வாண்டோ தான் – கராத்தே கூட ஒலிம்பிக்கில் இல்லை. செந்திலின் லட்சியமே எப்படியாவது இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபட்டிருப்பான். எந்த சூழ்நிலையிலும் வகுப்பை தவிர்த்ததேயில்லை. இந்த நிலையில் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு கொரியாவில் இருக்கும் டேக் வாண்டோவின் தலைமைப் பள்ளியில் இருந்து சில தலைசிறந்த வீரர்கள் இந்தியா வந்தார்கள். அதையொட்டி இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட மானவர்கள் அவர்களோடு மோதும் ஒரு போட்டி ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் செந்திலும் எங்கள்
டோஜோ சார்பில் இறங்கினோம்.

பொதுவாக டேக் வாண்டோ வைப் பொருத்த வரையில் கொரிய வீரர்களே முன்னனி வகிப்பார்கள் (குங்ஃபூ என்றால் சீனர்கள் கராட்டே என்றால் ஜப்பானியர்கள் என்பது போல) அந்தப் போட்டியில் அவர்கள் எந்தவிதமான சவாலையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார்கள். ஆனால் செந்தில் அது வரையில் இருந்த மாயைகளை (Myth) நொறுக்கித் தள்ளினான். அவனது ரிவர்ஸ் சைட் கிக் அன்றைக்கு அற்புதங்களைக் காட்டியது.
கொரியர்கள் மிரண்டு போனார்கள். எங்கள் தலைமை இன்ஸ்ட்ரக்டர் இந்திய டேக் வாண்டோ வின் எதிர்காலம் செந்தில் என்று வீரர்களிடையே தனிப்பட்ட முறையில் பேசும் போது சொன்னார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எப்படியும் தேர்வாகிவிடுவான் என்றும் எப்படியும் மெடல் தட்டிவிடுவான் என்றும் நாங்களெல்லாம் செந்தில் மேல் மிக எதிர்பார்ப்புடன் இருந்தோம். இந்த நிலையில் தான் அவனது குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து அவனை நிர்மூலமாக்கியது.

செந்திலுக்கு மொத்தம் மூன்று அக்காக்கள். அவன் அப்பா சின்ன வயதிலேயே அவன் அம்மாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணோடு போய் விட்டார். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு வந்து விட்டான். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆள் செந்தில் தான். இந்த நிலையில் தான் செந்திலின் முதல் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடானது. திருமண செலவுகளை ஈடுகட்ட செந்தில் ஓவர் டைம் பார்க்கத் துவங்கினான். ஓவர் டைம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல – தொடர்ந்து மூன்று சிப்டுகள் வேலை செய்வான். ஆறே மாதத்தில் அறுபத்தைந்து கிலோவில் இருந்து ஐம்பது கிலோவாக எடை குறைந்தான். பின்னர் இரண்டாவது அக்கா.. மூன்றாவது அக்கா…

இடையில் எனது பொருளாதார நிலைமையும் என்னை ஊரை விட்டு விரட்டி விட்டது. பதினான்கு ஆண்டுகள் எத்தனையோ ஆசைகளோடு கற்று வந்த கலைகளை தூக்கி உடைப்பில் போட்டு விட்டு பிழைப்பைப் பார்க்க கிளம்பி விட்டேன். காலை எழுந்தவுடன் துவங்கும் ஓட்டம் இரவு படுக்கையில் மயங்கி விழும் வரையில் நிற்காது. இப்படியே சில ஆண்டுகள் போனதில் எனது பழைய நன்பர்கள் எல்லோரும் மறந்தே போனார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்த போது செந்திலைத் தேடிக் கண்டுபிடித்து போய் பார்த்தேன். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தான். இளைத்த உருவம், களைத்துப் போய் அலைபாயும் கண்கள், தைய்யல் இயந்திரத்தை மிதித்து மிதத்து
ஸ்லிப் டிஸ்க் பிரச்சினை வேறு.. இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தரும் வல்லமை கொண்டிருந்தவன் இன்று எங்கோ ஒரு ரெடிமேட் துணிக் கடையில் இன்றைக்கு எப்படியாவது ஓவர் டைம் கிடைக்காதா ஒரு அம்பது ரூவா கூட கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான்.

இது தான் நிதர்சனம்..

இன்றைக்கான சோறை இன்றைக்கே சம்பாதித்தாக வேண்டிய நெருக்கடி. கல்யாணம் என்றாலே பெண் வீட்டை தேட்டை போடலாம் என்று கருதும் ஒரு சமூகத்தில் செந்தில் போன்று மூன்று சகோதரிகளைக் கொண்ட ஒருவன் எங்கிருந்து பதக்க லட்சியங்களைச் சுமப்பது? இது பொதுமைப்படுத்தும் முயற்சியல்ல – ஆனால், நாட்டில் பெருவாரியாக இருக்கும் கீழ்நடுத்தர ஏழைக் குடும்பங்களில் பதின்ம வயதுகளின்
இறுதியிலேயே பொருளாதார பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. யாராவது “நூறு கோடி பேரு இருக்கற நாட்டுல ஒரு தங்கப் பதக்கம் கூடவா வாங்க வக்கில்ல” என்று நீட்டி முழக்குவதை பார்க்கும் போதெல்லாம்.. ” யோவ்.. உன்னோட இந்தியாவுல மொத்தமாவே மூனு கோடி பேரு தான்யா தேறுவாங்க.. மிச்சம் இருக்கற தொன்னுத்தியேழு கோடி பேரு எங்க இந்தியாவுல இருக்காங்கய்யா” என்று கத்த வேண்டும் என்று தோன்றும்.

நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் என்பது சதவீதம் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் விளையாட்டையெல்லாம் ஒரு பிழைப்பாகவா பார்க்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் மாநில அளவில் முதல் இரண்டு இடங்கள் பெற்று சான்றிதழ் வைத்திருந்தால் ரயில்வே துறையில் டி.டி.ஆர் வேலை கிடைக்கலாம். அதுவும் கூட நிச்சயமில்லை. 1975 ஹாக்கி உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணியின் கேப்டனே இன்று ரயில்வே துறையில் தலைமை டிக்கெட் பரிசோதகராகத் தான் குப்பை கொட்டுகிறார் – இது இன்றைய டைம்ஸில் வந்திருக்கும் செய்தி. அதே நேரம் 83 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டனின் நிலை இன்று என்ன?

இந்த பிரச்சினையில் பல பரிமாணங்கள் இருக்கிறது. அதில் லஞ்ச ஊழலும் ஒன்று. எனது நன்பன் வைபவ் பற்றி எனது வட இந்திய பயனக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் நினைவிருக்கிறதா? அவன் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உ.பி கிரிகெட் அணியில் விளையாடியவன். ரஞ்சி கோப்பை போட்டியில் இறுதி செய்யப்படப் போகும் ஐம்பது பேரில் ஒருவனாக தேர்வாக அவனிடம் ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்கள். கேட்டது வேறு யாரும் இல்லை – இன்று ஆங்கிலச் சேனல்களில் கிரிக்கெட்டின் புனிதம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் ஒரு முன்னாள் வீரர் தான். லாலு ப்ரஸாத்தின் மகன் டில்லி கிரிகெட் அணியில் விளையாடுகிறான்.

ஆனால் இந்த லஞ்ச ஊழலும் அரசியல்வாதிகளும் மட்டுமே இந்தியா விளையாட்டுத் துறையில் பிரகாசிக்காமல் போனதற்கு முதன்மைக் காரணம் அல்ல. அதைத் தாண்டி மிக முக்கியமான காரணம் பொருளாதாரமும் நமது சமூக அமைப்பு முறையும். இங்கே தான் சூத்திரன் பஞ்சமன் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே சமூக விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்றைய உணவை சேகரிப்பதே பெரும்
பாடாக இருக்கும் போது, எப்படி விளையாட்டுத் துறைக்கு வந்து விட முடியும்? நமது சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி பெரிதாக சொல்லித் தெரியவேண்டியதில்லை. ரீனா போன்று எத்தனை பேர் தங்கள் கனவுகளை லட்சியங்களை மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு சமையலறையில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்? ஒரு சானியா மிர்ஸாவை கொண்டாடும் ஊடகங்கள் இப்படி கவனிப்பாரே இல்லாமல் திறமைகள் வீணடிக்கப்படும் லட்சக்கணக்கான சானியா மிர்ஸாக்களைப் பற்றி பேசுவதில்லை. இதே சானியா மிர்ஸா அழகியாக இல்லாமலும்
சிவந்த தோல் இல்லாமலும் இருந்திருந்தால் இப்படி ஒரு கவனிப்பை பெற்றிருப்பாரா என்பது இன்னொரு கேள்வி.

இந்தியாவுக்கு பதினோரு க்ராண்ட் ஸ்லாம் பெற்றுத் தந்த லியாண்டர் பயஸை விட பெரிதாக எதையும் சாதிக்காத சானியா மிர்ஸா ஊடகங்களில் கொண்டாடப்படுவது ஏனென்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஏன் கிரிக்கெட்டுக்கு இந்தளவுக்கு கவனிப்பும் முக்கியத்துவமும் தருகிறார்கள் என்பதை யோசித்திருக்கிறீர்களா? கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் தேசிய விளையாட்டே கிரிக்கெட் தான் என்று நம்பும் படிக்கு ஊடகங்கள் கடந்த ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் தொடர்ந்து பொதுபுத்தியில் பதிய வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வீரர்கள் விளையாடுகிறார்களோ இல்லையோ பல விளம்பர காண்டிராக்டுகளில் கையெழுத்திட்டு விடுகிறார்கள். இவர்கள் மேல் – அதாவது இவர்களின் கவர்ச்சியின் மேல் – கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகள்
இவர்கள் அணியில் தேர்வாவது வரைக்கும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆமாம்.. கடைசியாக யுவராஜ் சிங் எப்போது உருப்படியாக விளையாடினார் என்று நினைவுக்கு வருகிறதா உங்களுக்கு? தொடர்ந்து ரஞ்சி கோப்பை மேட்சுகளில் நன்றாக விளையாடு தினேஷ் ஏன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பதில்லை?

உலகமயமாக்கல் எல்லா துறையையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் துறைகளாக மறுவார்ப்பு செய்து வருகிறது. பன்னாட்டு கம்பெனிகள் தமது பிரண்டு அம்பாஸிடர்களாக தேர்வாக ஏதோ கொஞ்சம் திறமையும் நல்ல அழகும் கொண்ட வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது – இவர்கள் தான் தவிர்க்கவியலாத படிக்கு அணிகளில் இடம் பெறுவர். சச்சின் டோனி போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம் (அப்படிப் பார்த்தாலும் எனது தனிப்பட்ட கருத்து சச்சினை விட காம்ப்ளி திறமையானவர் என்பதே) – இவர்கள் இயல்பிலேயே திறமை கொண்டவர்கள் – அதை பன்னாட்டு கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எத்தனையோ திறமைசாலிகள் இந்த நூறு கோடி கூட்டத்துக்கு நடுவே எங்கோ இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் வெளியே தெரிவதில்லை?

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பும் அணிகளில் லட்சக்கணக்கான ரூபாய்கள் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி கொண்ட மேல் நடுத்தர வர்க்க குடும்பத்துப் பிள்ளைகளே இருப்பர். உண்மையான திறமைசாலிகள் எங்கோ ஒரு மூலையில் தைய்யல் இயந்திரத்தை மிதித்து இடுப்பு ஒடிந்து கிடப்பார்கள். அவர்களின் கோப்பை வெல்லும் கனவுகளெல்லாம் தகர்ந்து போய் இன்றைக்கு ஓவர் டைம் கிடைத்தால் தேவலம் எனும் எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 3, 2010 Posted by | culture, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

3 idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும்

இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதிவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப நாட்களாக அலுவலக சுற்றுப்பயனமாக வட இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதிலும் கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்க வேண்டியாகிவிட்டபடியால், ஒரு பேயிங் கெஸ்ட் அக்காமடேஷனில் தங்கியிருக்கிறேன். என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர்கள் – ஒருவன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் – ஒருவன் உத்திர பிரதேசம் – ஒருவன் நம்ம ஊர், கும்பகோணம்.

வந்தநாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அனேகமாக நான் அறைக்கு பீஃப் பிரியாணி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட இரண்டாவது நாளிலிருந்தே கொஞ்சம் முறைப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராகுல் ( ம.பி காரன்) எங்கள் எல்லோருக்குமாக சேர்த்து புதிதாக திரைக்கு வந்துள்ள 3 இடியட்ஸ் என்ற இந்திபடத்துக்கு டிக்கெட் வாங்கி வந்துவிட்டான். நான் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தி ஒரு எழவும் புரியாது என்று சொல்லிப்பார்த்தேன் – விடவில்லை. அதிலும் நம்ம கும்பகோணத்தான் ஒரு பார்ப்பான், இந்தி கற்று விடவேண்டும் என்று கடும் முனைப்புடன் இருக்கிறவன். மற்ற இருவருமாக சேர்ந்து இவனிடம் இந்தி படம் பார்த்தால் ஓரளவு இந்தி பேசக் கற்றுக் கொண்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. ம்ம்… சொல்ல
மறந்து விட்டேன் – அவர்களும் பார்ப்பனர்கள் தான். ஒருத்தன் காயஸ்த் பார்ப்பான், இன்னொருவன் வேரெதோவொரு பார்ப்பான்..  என்னதான் பார்ப்பான்களாயிருந்தாலும், இவர்களுக்குள் ஒரு க்ளியரான டிமார்கேஷன் (பிரிவு) இருக்கும் – அதாவது நம்ம கும்பகோணத்தானுக்கும் வடக்கத்தியானுகளுக்கும். இதுல எவன் எவனை ஒதுக்கறான் என்று எனக்கு இதுவரை புரியவரவில்லை.

கிடக்கட்டும். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் நம்மாளு என்னைப் போட்டு நச்சியெடுத்து சம்மதிக்க வைத்துவிட்டான். படத்தைப் பற்றி நிறைய விமர்சனக்கட்டுரைகள் தமிழில் கூட வந்திருக்கிறது.. கதை என்று பார்த்தால்…. ஹீரோ ரான்ச்சோ ஒரு புத்திசாலி  (ஆமிர்கான் ) கல்லூரி மானவன்(!). கூட்டாளிகளாக இன்னும் ரெண்டு மானவர்கள் – ஒரு மேல் நடுத்தர வர்க்க முசுலீம்(மாதவன்), ஒரு கீழ்நடுத்தரவர்க்க இந்து (பேரு தெரியலை). இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள் – ஆமிர் பொரியியலை அதன் உண்மையான அர்த்தத்தில் கற்க விரும்புபவன் – நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டத்தின் மேல் விமர்சனம் கொண்டவன். மாதவன் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட மானவன் – அப்பாவின் கட்டாயத்துக்கு பொரியியல் கற்க வந்துள்ளவன். அந்த இன்னொருவன், வீட்டில் பொருளாதார நெருக்கடி – எப்படியோ படித்து ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற கட்டாயத்துக்கு பொரியியல் கற்க வந்துள்ளவன்.

இவர்கள் மூவரும் சேர்ந்து கல்லூரி நாட்களில் லூட்டியடிக்கிறார்கள். இப்படியாக வாத்தியார்களையும், கல்லூரி தாளாலரையும் கடுப்படித்து படித்து முடிக்கிறார்கள் – மாதவன் படித்து முடித்தவுடன் பொரியியல் துறையை விடுத்து தனக்கு விருப்பமான புகைப்படக்கலையை தேர்ந்தெடுக்கிறார் – ஆமிரின் ஆலோசனை. இன்னொரு மானவனுக்கு கேம்ப்பஸ்ஸில் வேலை
கிடைக்கிறது – ஆமீரின் உதவி+ஊக்கம்+etc. கதாநாயகியின் அக்காள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள் – உபயம் ஆமிர் ( அதாவது பிரசவ
கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார் – ஹீரோவாச்சே, சும்மாவா?).

படம் நெடுக வரும் இன்னொரு பாத்திரம் – ராமலிங்கம் எனும் மானவன். இந்த பாத்திரப்படைப்பைப் பற்றி தான் எனது நெருடல் –
இவன் வரும் காட்சிகளை நான்(ங்கள்) காணவேண்டும் என்பதற்காகவே ராகுல் தனது கைக்காசைப் போட்டு டிக்கெட் வாங்கி வந்திருக்கிறான் என்பது எனது அனுமானம். இந்த ராமலிங்கம் போன்ற ஒரு பாத்திரத்தை நாமும் கூட நமது கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். “ஏய் இது என்னோட டிபனாக்கும் – இது என்னோட பேணாவாக்கும் – இது என்னோட டிராப்ட்டராக்கும் – தொடாதே!” இந்த மாதிரி ஒரு அல்பை கேரக்டர்.

படித்து முடிக்கும் சமயத்தில் வரும் ஒரு ஆசிரியர் தின விழாவில், கல்லூரி தாளாலரை இம்ப்ரெஸ் செய்ய ராமலிங்கம் லைப்ரேரியன் உதவியுடன் ஒரு இந்தி உரையை தயாரிக்கிறான் – அதில் வரும் ஏதோவொரு வார்த்தையை மாற்றி “பலாத்கார்” என்று வரும்படி ஆமிர் செய்து விடுகிறான். ஏன்? ஏனென்றால் இந்த கேரக்டர் ஒரு அல்பையாச்சே. அந்த விழாவில் எல்லோர் முன்னிலையிலும் உரையை படித்து கடும் அவமானத்துக்குள்ளாகும் ராமலிங்கம், இந்த மூன்று நன்பர்களிடமும் வந்து, இன்னும் பத்து ஆண்டுகளில் தான் சொந்த வாழ்க்கையில் ஒரு உயர் நிலைக்கு வந்தபின் இவர்களை வந்து சந்திப்பதாக சவால் விட்டுச் செல்கிறான். முதல் காட்சியே பத்தாண்டு கழித்து ராமலிங்கம் இவர்களை சந்திக்க வருவதிலிருந்து தான் படம் ஆரம்பிக்கிறது. இவர்களில் ரான்ச்சோ(ஆமிர்) எங்கேயிருக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை – அவரைத் தேடிப்போகும் இடைவெளியில் ஃப்ளேஷ்பேக்காகத் தான் மொத்த கதையும் விரிகிறது.

ராமலிங்கம் தன்னை கல்லூரி முதலாண்டு முதல் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதும்  “I am Chattar Ramalingam born in Uganda, studied in Pondicherry” என்றே சொகிறான். ராமலிங்கம் எனும் கதாபாத்திரம் – தெளிவாக தமிழர்களின் உருவகமாகவே படத்தில் காட்டப்படுகிறது. அவன் தட்டுத்தடுமாறி இந்தி கற்றுக்கொள்ள முயல்கிறான் – இடையிடையே ஆங்கில வாக்கியங்கள் போட்டு பேசுகிறான். MTI – அதாவது மதர் டங் இன்ப்ளுயன்ஸ் என்பார்களல்லவா, தாய்மொழி பாதிப்புடன் பிற மொழிபேசுவது போலவே, தென்னாட்டு பாதிப்புடன் (accent) இந்தி பேசுகிறான். மொத்த திரையரங்கும் கைகொட்டிச் சிரிக்கிறது – ராகுல் எனது மற்றும் கும்பகோணத்தானின் முகபாவத்தை ஓரக்கண்ணில் கவனிப்பது தெரிந்தது

ராமலிங்கம் கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வும் கூட கச்சிதமாக தமிழர்களை நினைவுக்குக் கொண்டுவரும் படியான ஒரு தேர்வு. தில்லியில் வடகிழக்கிலிருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் இடம் பெயர்ந்து வரும் மக்களை இங்கே வடநாட்டினர் “சிங்க்கீஸ்” (சைனீஸ் என்பதன் சுருக்கம்) என்றே விளித்து கிண்டல் செய்கிறார்கள். அவர்களை இந்தியர்களாகவே வடக்கில் கருவதில்லை. அதே போல் தமிழர்களையும் அவர்கள் இந்தியர்களாக கருதுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் வட இந்தியர்கள் என்று குறிப்பது ஊடகங்களை
மட்டுமல்ல – இங்கே சாதாரணமாக என்னோடு பழகுபவர்களும் கூட இதே போன்ற அணுகுமுறையை கையாளுவதைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பிரதிபலிக்கும் விதமாகவே ராமலிங்கம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது தான் உகாண்டாவில் பிறந்ததாக சொல்கிறான். வேறு சில இடத்திலும் இது அழுத்தமாக புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கதாபாத்திரம்  கோமாளித்தனமானதாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…ம்ம்ம்ம்.. ஒரு விதமான காமெடிக் வில்லன் போல! பரீட்சையில் தான் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக பரீட்சைக்கு முந்தைய இரவு ஹாஸ்டலில் உள்ள அறைகளில் மற்ற மானவர்கள் அறியாமல் செக்ஸ் புத்தகத்தை வைக்கிறான். ஹீரோ கல்வித் திட்டத்தைப் பற்றி வகுப்பில் ஆசிரியரிடம் விமர்சித்துப் பேசுகிறான், அதற்கு ஆசிரியர் அந்த மானவனை(ஹீரோவை) கண்ணாபின்னாவென்று திட்டுகிறார் – மற்ற மானவர்களெல்லாம்  அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் மட்டும் சத்தம் போட்டு சிரிப்பது போலவும், எகத்தாளமாக திரும்பி பார்க்கிறான்.

பொதுவாக நான் படிக்கும் காலத்தில் என்னைப் பொருத்தளவில், முதல் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, தலையை எண்ணை போட்டு படிய வாரிக்கொண்டு, சட்டையில் காலர்பட்டன் நெக்பட்டனெல்லாம் போட்டுக் கொண்டு, ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திரிக் கொட்டைத் தனமாக தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை வாந்தியெடுக்கும் மானவனைக் கண்டாலே பிடிக்காது. எட்டி உதைக்கலாமா என்று கூட தோன்றும். இந்த ராமலிங்கம் கதாபாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது.  ராமலிங்கம்  ஒரு கோழை, காரியவாதி, சுயநலவாதி, துரோகி, இங்கிதம் தெரியாவன் (ராமலிங்கம் அடிக்கடி குசுவிடுவது போல காட்சிகள் உள்ளது) என்பதை மிக முயன்று நிறுவியுள்ளனர். இங்கே ராமலிங்கம் என்பது ஒரு கதாபாத்திரமாக அல்ல – தமிழர்களின் ஒரு குறியீடாகவே இருக்கிறது.

எப்படி?

பொதுவில் இங்கே (வடக்கில்) தமிழர்கள் காரியவாதிகள் என்றும் எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போலவும் ஒரு கருத்து உள்ளது. ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் – அந்தக் கருத்தின் உருவகமாக ராமலிங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவில் தெற்கத்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) உலகமயமாக்களின் பின் உருவான ஐ.டி துறை, ஐ.டி சேவைத் துறை போன்றவைகளில் அதிகளவு வேலைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனும் குமைச்சல் வடக்கில் இயல்பாகவே இருக்கிறது. அதற்குக் உண்மையான காரணம் அவர்களை விட ஒப்பீட்டு ரீதியில் ( BIMARU மாநிலங்கள் சில ஆப்ரிக்க நாடுகளை விட படு கேவலமான முறையில் உள்ளது) கல்வித்துறைக்
கட்டமைப்புகள் இங்கே வலுவாக இருப்பதாகும். ஆனால், வடக்கில் சாதாரணர்களிடையே ஏதோ தமிழர்கள் தந்திரமாக (அவர்களுக்கு
தென்னிந்தியா என்றாலே அது தமிழ்நாடு தான்) தமது வேலைகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது.

இடைவேளைக்குப் பின் கதையில் ஒரு ட்விஸ்ட்.. அதாவது ஆமிர் உண்மையான ரான்ச்சோ அல்ல. ரான்ச்சோ என்பது ஒரு பெரிய பண்ணையாரின் பையன். ஆமிர் அந்த கிராமத்தில் நன்றாக படிக்கும் ஏழை மானவன் என்பதால், ரான்சோவின் பேரில் பொரியியல் படித்து பட்டத்தை ரான்சோவுக்கு கொடுத்துவிட வேண்டும் எனும் ஏற்பாட்டில் தான் படிக்கவே வருகிறான் (இது இன்னொரு நெருடல்). போலவே படித்து முடித்ததும் பட்டத்தை உண்மையான ரான்ச்சோவிடம்
கொடுத்துவிட்டு ஒரு ஒதுக்குப் புறமான கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும் ஒரு விஞ்ஞானியாகவும் (!?) வாழ்ந்து வரும் ஆமிரின் உண்மையான பெயர் – ஃபுங்செக் வாங்க்டூ. இவரிடம் சில முக்கியமான பேட்டண்டுகள் இருக்கிறது. வாங்க்டூவிடம் ஒரு ஒப்பந்தம் போடும் வேலையாகத் தான் ராமலிங்கம் இந்தியா வருகிறான் – ஆனால் வாங்க்டூ தான் ஆமிர் என்று தெரியாது. அந்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை.

ஆமிரை கிராமத்தில் பொடியன்கள் மத்தியில் வைத்துப் பார்க்கும் ராமலிங்கம் முதலில் அவனைக் கேவலமாக பேசிவிடுகிறான்.. பிறகு அவனே தான் சந்திக்க வேண்டிய வாங்க்டூ என்று தெரியவரும் போது இதுவரை தான் பேசியதெல்லாம் சும்மா தாஷுக்காக என்றும் ஆமிர் தான் ஜெயித்து விட்டதாகவும் சொல்லி குழைகிறான். உச்சகட்டமாக தனது பேண்ட்டை கழட்டி ஜட்டியுடன் திரும்பி நின்று “நீ தான் பெரியாளு” என்பது போன்று ஏதோ இந்தியில் சொல்கிறான். ஆமிரும் மற்ற இரு நன்பர்களும் கேலியாக சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் – ராமலிங்கம் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டே துரத்துகிறான் – காட்சி உறைந்து படம் முடிகிறது..

இந்த இறுதிக் காட்சி “தமிழர்கள் தமது காரியம் நடக்க வேண்டுமானால் எந்தளவுக்கும் இறங்கிப் போக தயங்காத சுயநலவாதிகள்” என்ற
வடநாட்டான் நம்மேல் கொண்டிருக்கும் கருத்தின் உருவகம்.

“ஆப்கோ ஹிந்தி மாலும்ஹேனா?”

“Sorry I dont know hindi”

என்று எனக்கும் ராகுலுக்கும் ஆரம்பத்தில் நடந்த அந்த உரையாடலைத் தொடர்ந்தே என்னை ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த உயிரினத்தைப் பார்ப்பது போலவே பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆக, நான் ராமலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதும், ராமலிங்கத்தின் கோமாளித்தனங்களைப் பார்த்து கூட்டம் கைகொட்டிச் சிரிப்பதை பார்க்க வேண்டும் என்பதும் தான் அவன் நோக்கம். படம் நெடுக இடையிடையே அவன் என்னை
ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. நானாவது பரவாயில்லை – ஹிந்தியை முற்றிலுமாக புறக்கனித்து விட்டவன். ஹிந்தி தெரியாது என்று பெருமையாகவே சொல்லிக் கொள்பவன். ஆனால் சங்கரனின்( கும்பகோணம்) நிலையோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் தட்டுத்தடுமாறி ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பவன் – அவனுடைய பட்லர் இந்தியை தினப்படி அவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந்தப் படமோ அதில் உச்சகட்டமாகிவிட்டது.

திரையரங்கை விட்டு வெளியே வந்து நான் தனியே போய் தம்மடிக்க நின்றேன். சங்கரன் உர்ரென்று வந்து பக்கத்தில் நின்றான். “நீங்க
வேணா பாருங்க பாஸு.. சீக்கிரமா நல்லா இந்தி பேசக் கத்துக்குவேன்” என்றான். “கத்துக்கிட்டு?” என்றேன்… ஒன்றும் பதில் சொல்லவில்லை.

மொழியின் மேல் எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது -நான் மொழிவெறியனுமல்ல- ஆனால் அது திணிக்கப்படுவது தான் எரிச்சலூட்டுகிறது. எனது இந்தப் பயனத்தில் தில்லியின் சில பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது.. அதிலும் குறிப்பாக கால்காஜி பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள்.கூலி வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களான அவர்களிடம் பழகிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தையும் காட்டுகிறது. வடநாட்டைச் சேர்ந்த, மற்றும் பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பிற உழைக்கும் மக்கள் தமது வர்க்கத்தவரான தமிழர்களின் மேல் மொழிக் காழ்ப்பைக் காட்டுவதில்லை. இயல்பாக இவர்களும் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். புதிதாக வந்து சேரும் இந்தி பேசத்தெரியாத தமிழர்களுக்கும் மற்ற உழைக்கும் வடநாட்டினர் உதவியாகவே இருக்கிறார்கள். வேலைக்கான போட்டி மட்டுமே அவர்களிடம் நிலவுகிறாதேயொழிய தமிழன் எனும் காரணத்துக்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை –
நடைபாதைகளின் ஒரே பகுதியை அவர்கள் தமக்குள் சச்சரவில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் மேல்தர வர்க்கங்களிடையே இயல்பாகவே மதராஸிகள் மேல் வெறுப்பு இருக்கிறது. அவர்கள் வேலைகளை நாம் அபகரித்துக் கொள்கிறோம் எனும் பொறாமை இருக்கிறது. இயல்பாக இந்த குமுறல்களெல்லாம் அவர்களுக்கு சரியான கல்விக்கட்டமைப்பை உறுதி செய்து தராத அரசின் மேல் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் குமுரல்களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மேலான வெறுப்பாக மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சின்ன உதாரணம் தான். உடன் வேலை செய்யும் வேறு தென்னாட்டவர்களிடம் பேசும் போது இதே போன்ற கள்ளப்பரப்புரை தொடர்ந்து நடந்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.

மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துவரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் சமீபத்திய உலகளாவிய பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் மேலும் சீர்குலைவை நோக்கி சென்று வரும் நிலையில், மக்களின் கோபம் தம்மேல் திரும்பிவிடாமல் தடுத்து வைக்க இது போன்ற படங்களும் ஆளும் வர்க்கத்துக்குத் தேவையாய்த் தான் இருக்கிறது. பிராந்திய பகைமைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அளவுக்கு வளருவதை ஆளும் வர்க்கம் எப்போதுமே விரும்பத்தான் செய்யும்.ஆனால், இந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலை ஒரு நாள் ஏற்படும் போது – இந்தியா எனும் இந்த ஏற்பாடு சிதைந்து போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

திசெம்பர் 29, 2009 Posted by | Films, medias, politics | | 10 பின்னூட்டங்கள்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்..!

அதாவதுங்க.. பம்பாய்ல குண்டு வெடிச்சதுக்கு நாமெல்லாம் சரியாக் கவலப்படலைன்னு கண்டுபிடிச்சி.. எப்படி சரியாக் கவலைப்படனும்னு கமல்
அய்யங்கார்வால் நமக்கெல்லாம் பாடம் நடத்தியிருக்கிறார். அதான் படம்.

மூணு முசுலீம் ‘தீவிரவாதிகள்’ ஒரு இந்து தீவிரவாதி – பின்னே பேலன்ஸ் வேணும்ல?

யாரந்த மூணு முசுலீம் தீவிரவாதிகள்?

அதுல ஒருத்தரரோட மூணு பொண்டாட்டில ஒரு பொண்டாட்டி 2002ல பெஸ்ட் பேக்கரிக்கு பன்னு வாங்க போனப்ப வயிற்றில் குழந்தையோடு
கொன்னுட்டாங்க.. இவரு அதுக்காக நாலு வருசம் ரிவர்ஸ்ல போயி 1998ல கோயமுத்தூர்ல குண்டு வக்கறாரு

அப்புறம் ஒருத்தர் அல் காயிதா ஒருத்தர் அது மாதிரி வேறெதோ ஒரு இயக்கம் – அதாவது இசுலாமிய மேன்மையை நிறுவ தீவிரவாதப் பாதையை
தெரிவு செய்தவர்கள்..

படம் பூரா ஏதோ ஆர்.எஸ்.எஸ் சாகாவுல பயிற்சி பெற்றவர் எடுத்த மாதிரியே இருக்கு.. இதோ.. இசுலாமிய தீவிரவாதத்த நமக்கு புரிய வைக்கிற அக்கறைல
ஒரு வசனமும் வச்சிருக்காங்க. ஒரு முசுலீம் “தீவிரவாதி” சொல்றாரு – “நவாபா இருந்தோம்.. இப்ப நாயா அலையிறோம்” – உங்க காக்கி டவுசர் கண்ணுல
ஆடுது கமல் சாரே…

ம்… சொல்ல மறந்துட்டனே.. அந்த இந்து “தீவிரவாதி” சொல்றாரு – “ஆயுதம் வித்ததைத் தவிற எனக்கு வேறொன்னும் தெரியாதுங்க. என்ன விட்றுங்க”
– ஏதோ பாவம் வயித்துப் பொழப்புக்கு (அந்தாளுக்கு நெசமாளுமே பெரிய வயிறு தான்) ஏ.கே 47ம்.. ஊருகாச் செலவுக்கு ராகெட் லாஞ்சரும் வித்தவர்
போல… இவரு ரொம்பப் பாவம்ங்கர மாதிரியே காட்றாங்க.

முசுலீம் தீவிரவாதியென்றால் அவனுக்கு அயல்நாட்டு பின்புலம் இருக்கும் – இந்துத் தீவிரவாதி ஏதோ பாவம் என்கிற மாதிரியே காட்சிப்படுத்தியிருக்கிறார்..
முசுலீம் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுபவர்கள் முகங்களில் ஒருவித பெருமிதமும் இந்துத்தீவிரவாதியாக காட்டப்படுபவர் முகத்தில் குற்றவுணர்ச்சியும்
காட்டுகிறார். வலைத்தளத்தில் நடந்து கொண்டிருக்கும் விவாதமொன்றில் அன்பர் ஒருவர் கேட்கிறார் – “முசுலீம் தாங்க வெள்நாட்டிலெல்லாம் போய்
குண்டு போடறாங்க.. இந்துக்கள் அது மாதிரி வேற நாட்டில போய் குண்டு வைக்கிறாங்களா”.. அப்போ நேபாளத்தில் புரட்சிக்கு எதிராக மதக்கலவரத்தை
தூண்டிவிட்டு குண்டுவெடிப்புகளில் இறங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளெல்லாம் யார்? விரல் சூப்பும் பாப்பாக்களா?

சரி மெயின் மேட்டருக்கு வருவோம்… நகரத்துல ஐந்து இடத்தில் குண்டு வச்சிருக்கறதாவும் அது எங்கேன்னு சொல்லனும்னா இவிங்கள விடுதல
செய்யனும் என்றும் சொல்றாரு கமல். யாருகிட்டே……? கமிசனர் மோகன்லால் கிட்டே. அவருக்கு ரெண்டு அசிஸ்டெண்ட் அதுல ஒருத்தரு ஆரிஃப்..

இந்த ஆரிஃபை நாம் கவனமா பார்க்கனும். ஏன்னா படத்துல கமல் காட்டிருக்க “நல்ல” முசுலீம் ஆச்சே. ஒரே வார்த்தைல சொல்லனும்னா இந்தாளு
அதிகமா வசனம் பேசாத ‘விஜயகாந்த்’ ரக போலீசு. கமல் என்னா சொல்ல வர்றாருன்னா… ஒரு “நல்ல” முசுலீம்னா இந்துய ச்செ.. இந்திய தேசிய
கோவணத்துல ஓட்ட விழறா மாதிரி தெரிஞ்சாலே தன்னோட ஜட்டிய கழட்டி பாரத மாதாவுக்கு கடன் குடுத்து காப்பாத்தனும்.

இந்த நாலு தீவிரவாதியையும் ஒரு இடத்துக்கு வரவச்சு அவங்களுக்கு மரண தண்டனை விதிப்பது தான் நம்ம கமல் அய்யங்கார்வாலின் ( இன்ஷா
அல்லான்னு ஓரிடத்தில் கமல் சொல்லாலும் படம் பூரா துருத்திக் கொண்டு தெரியும் பூணூலின் காரணமாக அவரை நான் அய்யங்கார்வாலாகத்தான்
பார்க்கிறேன்) திட்டம்.

அந்தோ பரிதாபம்… ஒரே ஒருத்தர் ( அதான், 2002 பெஸ்ட் பேக்கரில மூணாவது சம்சாரத்த பரிகுடுத்ததுக்காக 98ல கோயமுத்தூர்ல குண்டு வெச்சாரே)
மட்டும் தப்பிச்சுடறார்..

விடுவாரா நம்ம அய்யங்காருவாலு….??? விஜயகாந்தே வெட்கப்படும் அளவுக்கு வசனம் பேசறார்.. பேசறார்… பேசறார்.. பேசறார்.. கடேசீல நம்ம “நல்ல
முசுலீம்” ஆரிஃப் “கெட்ட முசுலீமை” சுட்டுக் கொல்லும் வரை பேசறார்…

அத்தனை நேரம் கமல் பேசியதன் விசயம் என்னான்னா.. தீவிரவாதின்னு சொல்லி எவனைக் கைது பண்ணினாலும் விசாரனையே இல்லாம சுட்டுக்
கொன்னுடனுமாம்…

இதுக்கேண்டா ஒன்னேமுக்கா மணிநேரம் ஒக்கார வச்சி படுத்தியெடுக்கறீங்க?

நரேந்திர மோடி செஞ்ச போலி என்கவுண்ட்டர் செய்தியை ஸ்கேன் பண்ணி ஸ்க்ரீன்ல காட்டிருந்தா முப்பது செகண்டுல படம் முடிஞ்சிருக்குமேடா.. அட
குஜராத் போலீசால் கொல்லப்பட்ட சோராபுத்தீன் படத்தையோ இஷ்ராத் ஜஹான் படத்தையோ கூட காட்டியிருந்தால் நாப்பது செக்கண்டுல படமே
முடிஞ்சிருக்குமேடா..

இதோ கமலின் நியாயம் – மோடியின் நியாயம் – ஆர்.எஸ்.எஸின் நியாயம் – கீழே ரத்தவெள்ளத்தில் கிடக்கிறது….! இது நம்மைப்போல் ஒருவன் பற்றிய
படமல்ல.. கமல் ‘உன்னைப் போல் ஒருவன்’ நான் என்று மோஹன் பாகவத்தைப் பார்த்தும் நரேந்திர மோடியைப் பார்த்தும் சொல்கிறார்.. அவர்
செல்லுலாய்டில் சொன்னதற்கான செலவை நமது பையில் இருந்து உருவி விடுகிறார்.

Ishrat Jahan

இந்தப் படம் அப்பட்டமான இந்துத்துவத்தை சொன்னது ஒன்றும் ஆச்சர்யமில்லை.. ஏனெனில் கழுதை பேண்டால் விட்டை என்பதைப் போல கமலின் படம்
ஆர்.எஸ்.எஸ் படம் என்று நமக்கும் தெரியும் தானே.. ஆனால் இந்துத்துவ துவேஷம் பொங்கும் காட்சிகளை ரசிகன் ரசித்த விதம் தான் அதிர்ச்சியளிப்பதாக
இருந்தது.. இந்து தீவிரவாதியாய் வரும் சந்தானம் “ஒரு பொண்டாட்டி போனா என்ன.. அதான் இன்னும் ரெண்டு இருக்கே?” என்கிறார்; பார்வையாளன்
சிரிக்கிறான்..

கமல் “நீங்கள் தீவிரவாதின்னு சொல்லி அரெஸ்ட் பன்றீங்க.. அவன் விசாரனை முடிந்து வெளியே வருகிறான்.. நான் அப்படி தப்பிக்கவிடாமல் தண்டனை
கொடுக்கனும்னு சொல்றேன்” என்கிற ரீதியில் பேசிக்கொண்டு போகிறார்.. இங்கே எல்லோரும் கைதட்டுகிறார்கள்.. எவருக்கும் நாடெங்கும் போலி
மோதல்களில் கொல்லப்பட்ட அப்பாவி முசுலீம்களின் நினைவு வரவில்லை!

வயித்துப் பொழப்புக்கு தீவிரவாதியான சந்தானபாரதி (கரம்சந்த் லாலா) வேனில் இருந்து தடுமாறி தடுமாறி இறங்குகிறான்; ரசிகன் உச்சுக் கொட்டுகிறான்.
அரங்கை விட்டு வெளியே வரும் ரசிகன் ஒருவன் சொல்கிறான் – “முசுலீம்னா அது அந்த ஆரிஃப் மாதிரி இருக்கனும்ங்க”.. ஒரு சாதாரண இந்துவை விட
ஒரு முசுலீம் என்றால் அதிகளவு இந்துதேசிய வெறியை வெளிப்படுத்துமாறு கோரும் ஆர்.எஸ்.எஸ் அரசியலை நைசாக தமிழ்நாட்டிலும் திணிப்பதில்
கமல் வெற்றி பெற்று விட்டார்.

செப்ரெம்பர் 23, 2009 Posted by | Films, medias | , | 5 பின்னூட்டங்கள்

பார்ப்பனியத்தின் இருப்பு!!

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை சமூகத்தில் ஏற்கனவே புறையோடிப் போயுள்ள புண்ணின் மேல் போடப்பட்டிருந்த அழகான ஒப்பனையை கொஞ்சம்
திரை கிழித்துக் காட்டியிருக்கிறது. இது விஷயமாக பொதுவாக எல்லோரும் “அடப்பாவமே என்னமா அடிக்கிறானுக… இவனுக படிக்கப் போறானுகளா இல்ல ரவுடித்தனம்
செய்யப் போறானுகளா? அடிவாங்கற பய்யன் ரொம்ப பாவம் சார்… அவனப் பெத்தவங்க என்ன பாவம் செய்தாங்களோ..” என்று வன்முறையை வாழ்க்கையிலேயே கண்டிராத
“ரீஜெண்டான” வெளக்கெண்ணைகள் போல அங்கலாய்த்துக் கொண்டிருக்க.. மீடியாக்களும் வலைப்பதிவுகளும் இந்தக் குரல்களையே பெரும்பாலும் எதிரொலித்துக் கொண்டிருக்க..
வினவு தளத்தில் வெளியான இரண்டு கட்டுரைகள் மட்டும் விதிவிலக்காய் சமூக எதார்த்தத்தை நிகழ்ந்த சம்பவங்களோடு உரசிப்பார்த்து கறாரான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

அந்தக் கட்டுரைகளின் சுட்டி இதோ –

1) சட்டக்கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் தமிழகம் காப்போம்!!

2) சட்டக்கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…. அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம்!

பிரச்சினை குறித்து இதை விட தீர்க்கமான/ நேர்மையான கட்டுரை ஒன்றை எழுதிவிட முடியாது. எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரைகள்.

இந்தக் கட்டுரைக்கு வந்த பின்னூட்டங்கள் சிலவற்றை வாசிக்க நேர்ந்த போது எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களும் அதனின்று நான் பெற்ற படிப்பினைகளையும் உறுதிப்படுத்துவதாய்
இருக்கிறது. இந்த கட்டுரைகளுக்கு பின்னூட்டமிட்ட சில ரீஜெண்ட் கேசுகள்,

1) வன்முறை வன்முறை தான் சார்.. தலித்தாய் இருந்தால் என்ன ஆதிக்க சாதியாய் இருந்தால் என்ன? தப்பு தப்பு தான் சார்

2) அப்படியே தலித்துகளுக்கு பிரச்சினை இருந்திருந்தால் அவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்து இருக்க வேண்டும். அதன் மூலம் தீர்வுகண்டிருக்க வேண்டும் – ரவி சிறீனிவாஸ் சில
இடங்களில் இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

3) என்னாது…??? வன்முறைக்கு தீர்வு வன்முறையா? என்னவொரு சாடிசம்? – இது மருத்துவர் ருத்ரனை நோக்கி எழுப்பப்பட்டது.

பொதுவாக “இப்ப அழவேண்டிய நேரம். அதுவும் அடிப்பட்ட மானவர்களுக்காக அழவேண்டிய நேரம். இந்த நேரத்துல போய் இதுக்கு யார் காரணம், வரலாற்று ரீதியாக என்ன
நடந்தது என்பது பற்றியெல்லாம் ஏன் சார் யோசிக்கறீங்க? நீங்கெல்லாம் மனுசனா மிருகமா” வன்முறையைக் கண்டு முகம் சுளிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இப்படிச்
சிந்திக்கிறார்கள். ஏதோ இந்தியாவில் தீண்டாமை சாதியெல்லாம் எப்போதோ மலையேறி விட்டதென்றும்.. சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு போன்ற “அரசியல்களால்” தான்
சாதி இன்னும் வாழ்கிறது என்றும், இடஒதுக்கீட்டை எடுத்த் அடுத்த நிமிடம் சாதி மறைந்து விடும் என்றும் எழுதி/பேசி வருகிறார்கள்.

அந்தக் கட்டுரைகளின் பின்னூட்டம் ஒன்றில் தோழர் ஒருவர் கேட்டது போல, “இப்போ ஆதிக்க சாதிக்காரன் அடிவாங்கினான் என்றவுடன் துள்ளிக் குதித்து வருகிறாயே…. முன்பு
தலித்துகள் அடிவாங்கிய போது எங்கே போனாய்?” என்ற கேள்வி நிச்சயம் இவர்கள் மனசாட்சியை உலுக்கியிருக்க வேண்டும் – அப்படி ஒன்று இருந்திருக்கும் பட்சத்தில்.
அப்போதெல்லாம் மவுனமாகத்தானே இருந்தாய் நீ? தின்னியத்திலும், பாப்பாபட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம்.. இன்னும் வெளியே தெரியாத எத்தனையெத்தனையோ கிராமங்களில்
தலித்துகள் மேலான வன்முறை பற்றிக் கேள்விப்பட்ட போது நீ மவுனமாய் இருந்தாய் அல்லவா? பெரியார் தி.க தோழர்கள் இப்போது ஒரு ஆறு மாதங்களுக்கு முன் இரட்டைக்
குவளை முறைக்கு எதிராய் போராட்டம் அறிவித்து, எங்கெங்கே இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுகிறது என்று ஒரு நீண்ட பட்டியல் வெளியிட்டார்களே அப்போது நீ
மவுனமாய்த் தானே இருந்தாய்? – அந்த மவுனம் தான் பாரதிக்கண்ணனை அடித்தவர்கள் செய்த வன்முறையை விட மிக மோசமான வன்முறை..

நேரடியாக – உடல் ரீதியாக காட்டப்படும் வன்முறை ஒருபுறம் இருக்க… உளவியல் ரீதியாக செலுத்தப்படும் வன்முறையானது ஏற்படுத்து ஊமைக்காயங்கள் எப்படியிருக்கும் என்று
இவர்கள் அனுபவித்திருப்பார்களானால் – “வன்முறைக்குத் தீர்வு வன்முறையா சார்?” என்று நொன்னை பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். “அம்பேத்கர் பேரைப் போடாம விட்டது
ஒரு சின்ன சமாச்சாரம்… இதுக்குப் போய் இந்தளவுக்கு இறங்கிட்டாளே சார்?” தங்கள் ஸ்காலர்ஷிப் வாங்கும் போது எதிர்கொண்ட கேலிப் பார்வைகளும், மெஸில் தனித்து
உட்காரவைக்கப்பட்ட போது எதிர்கொண்ட அவமானங்களும்… பொதுவாக கிராமப் புறங்களிலிருந்து பல்வேறு நேரடி/மறைமுக அவமானங்களையும், வன்முறைகளையும் சந்தித்துவிட்டு
வந்திருக்கும் மானவர்களுக்கு இந்த “சின்ன சமாச்சாரம்” ஒரு நெருப்புப் பொறி தான். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு வரண்ட கானகமாய் புழுங்கிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில்
விழுந்த மிகச் சிறிய நெருப்புப் பொறி தான் போஸ்டர் சம்பவம்.

“அப்படியே இருந்தாலும் அவர்கள் அரசின் கவனத்தை அல்லவா ஈர்த்திருக்க வேண்டும்?” அரசு என்பதே பார்ப்பனியத்தின் நடைமுறை வடிவம் தான். அரசு இயந்திரத்தின் அங்கமாக
ஆகும் தலித் கூட நாட்பட நாட்பட கருப்புப் பார்ப்பானாய்த் தான் மாறியாக வேண்டும் என்கிற சூழல் தான் நிலவுகிறது. பாப்பாப்பட்டி, கீறிப்பட்டி, நாட்டார்மங்கலம், தின்னியம்.
மேலவளவு – இத்தனைக்கும் பின்னே விழித்தெழாத அரசு, இம்மானவர்கள் எழுதியிருக்கக்கூடிய மூன்று பக்க மணுவிற்கா விழித்திருக்கப் போகிறது? கிராமங்களில் தலித்துகளின் சேரி
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் – அதுவும் காற்று வீசும் திசையின் கீழ்ப்புறத்தில் – இருக்கிறதே.. இந்த அரசு அவர்களையும் ஆதிக்கசாதியினரின் வீடுகளையும் ஒரே பகுதியில் ஏற்படுத்த
முயன்றிருக்கலாமே?

ஆக.. சாதி இருக்கிறது. அதன் ஒடுக்குமுறைகள் இருக்கிறது. அது மேலும் மேலும் வலிமையடைந்திருக்கிறது. காலம் மாற மாற அது வெளிப்படும் முறைகளில்
மாற்றமடைந்திருக்கிறதேயொழிய அதன் இருப்பு இன்னும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இது தான் உண்மை. இந்த உண்மை தான் சட்டக்கலூரி வன்முறைகளின் மூலம்
இன்னுமொருமுறை வெளிப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்பாடு நமக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை.

சமூக எதார்த்தம் அறியாத நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சில அல்பைகள் தான் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். “என்னாது காந்தி செத்துட்டாரா?” என்ற ரீதியில்,
“என்னாது சாதி இருக்கா? அதுவும் படிக்கிற இடத்துலயே இருக்கா? என்ன கொடுமை சார்?” என்கிறார்கள் தூக்கத்தில் இருந்து விழித்து. இதில் சிலர் உண்மையிலேயே தூங்கி
விட்டவர்கள்.. பலர் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த காரியவாதிகள். இந்தக் காரியவாதிகள் தாம் பாரதிக்கண்ணன் அடிபடும் காட்சியைப்பிழிந்து வரும் சோகரசத்தை
மூலதனமாகக் கொண்டு மீண்டும் தொண்ணூறுகள் வராதா, ஆடுகள் முட்டிக் கொள்ளாதா – நாம் ரத்தம் குடிக்க மாட்டோ மா என்று நரிகள் போலக் காத்துக் கிடக்கிறார்கள். இந்தக்
காரியவாதிகள் யார் என்று நாம் சொல்லவே வேண்டியதில்லை.. எதை மறைத்தாலும் இவர்கள் குடுமியை மட்டும் மறைத்துவிட முடியுமா என்ன?

இந்த விவகாரம் குறித்து வினவு குழுமத்தினர் எழுதிய மேற்கண்ட இரண்டு கட்டுரைகள் மாத்திரமல்லாமல் அதனைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளும்
முக்கியத்துவம் வாய்ந்தது. அதன் சுட்டி கீழே –

1) பண்ணைப்புரம்: இளையராஜா ஊரில் தனிக்குவளை தகர்க்கும் போராட்டம்!

2) அமெரிக்கா: வெள்ளை நிறவெறி கருப்பு உண்மைகள்!

நவம்பர் 21, 2008 Posted by | Alppaigal, medias, politics | | 4 பின்னூட்டங்கள்

முதலாளித்துவம் நடத்தும் பாடம்

சமீபமாக காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு செய்திகள் நாம் ஏற்கனவே படித்த சில பாடங்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

செய்தி 1) யானைக்கால் வியாதிக்காரனின் காலைப் போல செயற்கையாக வீங்கிப் பெருத்த அமெரிக்கப் பொருளாதாரம் ஊசி பட்ட பலூன் போல வெடித்துச் சிதறியதில் சில கம்பெனிகள் ’நட்டமடைந்தது’. அந்தக் கம்பெனிகளை நட்டத்தில் இருந்து காக்க அதிரடியாக களமிறங்கிய அமெரிக்க அரசு, ஜெனரல் வார்டில் இருந்து எமர்ஜென்ஸி வார்டுக்கு மாறி இருக்கும் முதலாளித்துவ நோயாளியை காப்பாற்ற 700 பில்லியன் டாலரை குளூக்கோஸாக இறக்கியிருக்கிறது. இந்தக் கம்பெனிகள் பெரும்பாலும் நிதிமூலதனம் ஊகவனிகம் போன்ற ஊரான் காசை உள்ளே விட்டுக் கொள்வதன் மூலம் முன்பு பெரிய அளவில் தேட்டை போட்ட கம்பெனிகள் தான்.

அப்படியானால் முன்பு சம்பாதித்த லாபம் இப்போ எங்கே போச்சு? யாரிடம் போச்சு? அந்த லாபமெல்லாம் அந்நிறுவனங்களின் தலைப்பீடங்களில் இருக்கும் ஓரிருவரின் சட்டைப்பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். இப்போது நட்டத்தில் இருந்து காப்பாற்ற வாரியிறைக்கப்படுவது – மக்கள் பணம்!

செய்தி 2)க்கு போகும் முன் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் – கஞ்சிக்கே வக்கில்லாத இல்லாத மக்கள் சைக்கிளில் பயணம் செய்து அல்லலுறுவதைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த ரத்தன் டாடா, அவர்கள் பாதுகாப்பாக பயனம் செய்ய வேண்டுமே என்கிற உயர்ந்த நோக்கில் ஜஸ்ட் ஒரே ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இந்த முடிவை கேட்டதும் இந்தியாவில் ஏழைகளின் ஒரே பங்காளனாக இருக்கும் காமரேட்டுகள் இன்னும் விவசாயத்தை நம்பி பிழைத்துக்கிடக்கும் சில முட்டாள் விவசாயிகளிடமிருந்து ஒரு ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி ரத்தன் டாடாவுக்கு தானமாகக் கொடுத்தார்கள்.

காமரேட்டுகளின் நல்ல உள்ளத்தையும் ரத்தன் டாடாவின் இளகிய மனதையும் புரிந்து கொள்ளாத அந்த முட்டாள் விவசாயிகள் பொங்கிய எழுந்து டாடாவின் பின்புறத்தில் எட்டி உதைத்ததில் மேற்கு வங்கத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு விட்டார். அப்படி தூக்கியெறியப்பட்டவர் நம் மாநிலத்தில் விழ மாட்டாரா என்று மற்ற மாநில முதல்வர்கள் இன்னும் அன்னாந்து பார்த்துக் கிடக்கிறார்கள்.

இப்போ செய்தி 2) அந்திரத்தில் வந்து தனது கனவுக் காரை – இல்லையில்லை – ஏழைகளின் கனவுக்காரை தயாரிக்க டாடா போட்டிருக்கும் ஒரு முக்கிய நிபந்தனை – அவர்கள் சிங்கூரில் கூடாரத்தைக் கலைத்த வகையில் ஏற்பட்ட நட்டத்தை ஆந்திர அரசு ஈடு கட்ட வேண்டும் என்பது – அதாவது மக்கள் பணம்!

இந்த இரண்டு செய்திகளின் மூலமும் நமக்கு முதலாளித்துவம் நடத்தும் பாடம் என்னவெனில் – லாபம் தனியுடைமை! நட்டம் பொதுவுடைமை!

இது குறித்து டெக்கான் க்ரோனிக்கலில் வெளியான செய்தி கீழே –

Nano in AP if Singur loss is paid by state
BY B. KRISHNA PRASAD

Tata Motors is ready to relocate its Nano project to Andhra Pradesh if the government pays for the loss that the company incurred in shifting out of Singur. Tata Motors officials put the figure at Rs 700 crore.
The Chief Minister, Dr Y.S. Rajasekhar Reddy, offered to compensate the loss “to some extent”, about Rs 300 crore.
“The issue of relocation cost got highlighted during the talks,” said a official in the industries department. “Though they had indicated this issue before their visit to the state, we did not anticipate that they were so serious about it.” The government offered cent per cent VAT exemption for the plant, which would work out to more than Rs 100 crore a year and even give land to ancillary units.
With the Tata delegation insisting on total compensation, a visibly disturbed Chief Minister asked his officers not to bother to stretch out for the project.
By Monday evening, Tata Motors officials went “out of contact” with officials of the Chief Minister Office. “The message is clear, they don’t want to talk at this juncture,” said a CMO official.
Earlier on Monday morning, the Tata Motors delegation visited the Vargal mandal in Medak district, about 50 km from the city, to inspect an alternative site. The government offered 600 acres immediately and another 650 acres after acquisition.

ஒக்ரோபர் 7, 2008 Posted by | medias, politics | 5 பின்னூட்டங்கள்

Do we have a choice?

கருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுடைய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.

இதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள்? எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது? இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன?

உதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும்? வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,
கள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறுதிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை!

அறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு
கோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.

வேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்
இதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.

நேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு
உல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.

இவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்
சிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.

இனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise! எப்படி? –

ஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்
செய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை
கொண்ட சூத்திரர்கள்.

தெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று
அனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.

உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!

ஒக்ரோபர் 21, 2007 Posted by | culture, medias | , | 2 பின்னூட்டங்கள்

ஊடகங்களும் வாழ்க்கையும்!

கார்கில் போர் நினைவிருக்கிறதா? அந்த சமயத்தில் நாடெங்கிலும் பொங்கி வழிந்த “தேசபக்தி”யை எவரும் மறந்திருக்க மாட்டோ ம். ஒரு போரின் பின்னேயும் அதன் வெற்றியின் பின்னேயும் இந்திய ராணுவத்தின் அயோக்கியத்தனங்களும், உள்ளே புளுத்து நாறிக் கொண்டிருந்த ஊழலும் எப்படியெல்லாம் மறைக்கப் பட்டது என்பதையும் நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. இதனையெல்லாம் ஊதி ஊதி எறிய வைத்தது ஊடகங்களே. பாவம் அவர்களுக்கு இப்போதெல்லாம் தங்கள் வியாபாரத் திறனையும் மார்கெட்டிங் யுக்தியையும் காட்ட போர் எதுவும் நடக்கவில்லை.. ஆனாலும் ஒரு போருக்கு உரிய அத்துனை வெறி/பரபரப்பையும் ஒரு விளையாட்டுப் போட்டிக்குள் திணித்து விட தங்களால் முடியும் என்பதையும், “இந்தியர்களை” ( இந்துக்களை என்று
புரிந்து கொள்க) உசுப்பேத்தி விட முடியும் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை
எதிர்த்து ஆடி வென்றது. இது ஒன்று போதாதா? இந்திய அணி நாடு திரும்பியதும் மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று வரவேற்ற காட்சி ஆங்கில செய்தி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதில் நம் கவனத்துக்குறியது என்னவென்றால், “ரசிகர்களில்” பலர் காவி நிறக் கொடியுடன் விளையாட்டு வீரர்களை வரவேற்றது தான். நான் வசிக்கும் பகுதியில் இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் இரவு, தேனீர் அருந்த நான் வெளியே சென்றிருந்தேன். இருசக்கர வாகனங்களில் வெறிக்கூச்சலுடன் சில ரசிகர்கள் ரவுண்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு ரம்ஜான் மாத இரவு. அதே நேரத்தில் ஊரெங்கும் பிள்ளையார் சதுர்த்திக்காக சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி. வாகனங்களில் வந்த ரசிகர்கள் தலையில் காவி நிறத் துணியையும் கையில் காவிக் கொடியையும் கொண்டிருந்தனர். இரவுத் தொழுகை முடிந்து
தெருக்களில் கூடி பேசிக் கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் கண்டதும் பைக்குகளில் வந்த காலிகளின் வெறி அதிகமானது. வாகனத்தை நிறுத்தி, “பாரத் மாதா கீ ஜே” “பாக்கிஸ்த்தான் டவுன் டவுன்” என்ற கத்திவிட்டு நகர்ந்தனர்.

இந்திய விளையாட்டு அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியானது இந்துக்கள் முஸ்லீம்களை வென்றதன் குறியீடாக இவர்கள் பாவிக்கிறார்கள். இந்தக் கூச்சல்களினூடாக முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களில்லை என்பதையும், இந்தியா என்பது ‘இந்து’யா எனபதையும் பதியவைக்க முயற்சிக்கிறார்கள். நாளிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புச் செய்திகள் வரை இப்படியான ஒரு சித்திரத்தைத் தான் உருவாக்கி விட்டுள்ளது.

ஒரு விளையாட்டில் கிடைத்த வெற்றிக்குப் பின்னால் ஏன் இத்தனை ஒரு வெறி?

ஒரு விளையாட்டை விளையாட்டு என்பதாக அல்லாமல் அதற்கும் மேலானதொரு கவுரவப் போர் என்கிற அளவுக்கு அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உடல் திறனை வெளிப்படுத்தும் வேறு விளையாட்டுகள் முக்கியத்துவம் இழந்ததற்குக் காரணம் இந்த ஊடக வெறியூட்டிற்கு அப்பால் இருக்கிறது. அந்தக் காரணங்களை விவாதக் களத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதே இந்த கிரிக்கெட் வெறியூட்டலின் மூலம் ஊடகங்கள் சாதித்ததாகும்.

இங்கே என்பது சதவீதத்துக்கும் மேலான மக்கள் உயிர் பிழைத்துக் கிடக்கவே உணவு என்கிற நிலையில் இருக்க, இவர்கள் உடல்திறன்
சார்ந்த வேறெந்த விளையாட்டிலும் ஈடுபடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இன்று நாளிதழில்( 15/10/2007 டைம்ஸ் ஆப் இந்தியா )
வெளியான செய்தியின் படி இந்தியக் குழந்தைகளில் 40% பேர் பட்டினியுடன் தான் தினசரி உறங்கப் போகிறார்கள். விளையாட்டுகள் என்பதும் உடல் திறனைக் கூட்டும் பயிற்சி என்பதும் சுமார் 20% குறைவான உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கு ஊதிப் பருத்த தொப்பையைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்று என்றாகிப் போய் விட்டது.

இதனை மறைக்கும் விதமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமான சிறு நகரங்களில் இருந்து உருவான, “புகழ்” பெற்ற வீரர்களை முன்னிறுத்துவதும், கிரிக்கெட்டின் மேல் அதீதமாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள்/ கட்டுரைகள் வெளியிடுவதும் ஆகும். தினசரி வாழ்க்கையையே போராட்டமாக வாழும் மக்களின் வாழ்க்கைப் போரை மறைக்கவே விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு போரின் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“ஏன் இந்தியாவில் பரவலாக மக்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை?” என்னும் கேள்விக்குள் புகுந்தால் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலங்களுக்கு “கசக்கும்” உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே அந்தக் கேள்வி மிகத் தந்திரமாக அழுத்தப்படுகிறது. பாக்கிஸ்தானை இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் அந்நாட்டை போரில் வென்றது போல வெளியாகும் செய்தியின் கூச்சலில், அந்நாட்டு மக்களில் பட்டினியில் வாடுவோர் இந்தியாவை விட சதவீத அளவில் குறைவு ( அதே செய்தியின் படி) என்பது மறைந்து விடுகிறது.

சென்செக்ஸ் பதினெட்டாயிரம் புள்ளிகள் கடந்து பாய்வதன் மேல் பாய்ச்சப்படும் ஊடக வெளிச்சத்தில் கண்கள் கூசும் மக்கள், இதே நாட்டில் 77 கோடிப் பேர் அரசாங்க கணக்குப்படியே நாளொன்றுக்கு இருபது ரூபாய்களுக்கும் குறைச்சலான தொகையில் வாழ்க்கை நடத்துவதை காணத்தவறுகிறார்கள் -தவற வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் உயரும் சென்செக்ஸ் புள்ளிகள் யாருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது? நாட்டின் நிதிமந்திரியே
“என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி உயர்கிறது என்பதும் தெரியவில்லை. கவலையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.” என்று “ஒன்னுமே புரியல உலகத்திலே…. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” என்று விரக்தியுடன் உளரிக் கொண்டிருப்பதும் எவர் கவனத்தையும் பெறவில்லை – அப்படி கவனத்தைப் பெற இவர்கள் விடுவதும் இல்லை.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் புளுத்துப் போன கோதுமையில் செய்யப்பட்ட “லால் ரொட்டியை” தின்பது இவர்களின் கவுரவத்துக்கும் போலிக் கரிசனத்துக்கும் உறுத்தலாய் இருந்திருக்கும் போலிருக்கிறது. போன வாரம் காட்டப்பட்ட இது தொடர்பான செய்திகளில், இதற்குக் காரணமான தானியக் கொள்முதல் கொள்கைகளையும், அதன் காரணமாய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளையும் பற்றி பேச்சு மூச்சே இல்லை. தெருவில் அலையும் பிச்சைக்காரணைப் பார்த்து சொல்லப்பட்ட “அச்சச்சோ”வின் தொனியே மேலோங்கி இருந்தது. குறைந்த பட்சம் இவர்களும் நம்முடைய “இந்தியாவில்” தான் வாழ்கிறார்கள் என்பதாகவும் கூட பதிவு செய்யப்படவில்லை.

மொத்தத்தில் ஒரு யுப்பி வர்க்கத்து இளைஞனுக்கு எப்போதாவது – ஒரு விபத்து போல – மேலெழும் கேள்விகளை மொன்னையாக்குவதும், அவன் எப்போதாவது நிதர்சனத்தைக் கண்டு திகைத்து நிற்கும் போது சமாதானப்படுத்திக் கொள்ள காரணங்களைத் தருவதும் தான் இந்த செய்திகளின் நோக்கமாக இருக்கிறது.

நம்மைப் பொருத்த வரையில், அவன் காட்டுவது நம்முடைய நாடு அல்ல! அவன் பேசுவது நம்முடைய பிரச்சினைகளை அல்ல! அவன் தரும் சித்திரம் நம்முடைய வாழ்க்கைச் சித்திரமல்ல!

ஒக்ரோபர் 15, 2007 Posted by | culture, medias | , | 2 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: