கார்க்கியின் பார்வையில்

நதியின் மடியில்…!

முடிவற்று நீண்ட
அந்த நாளின் இடையில் நான்
அந்த நதியைக் கண்டேன்…
அதன் மூலத்தைக் கண்டேனில்லை நான்..
அதன் முடிவையும் காணேணோ அறியேன்
துவக்கமும் இலக்கும் அற்று
வழிந்தோடும் நதி…
செல்லும் தடந்தோறும் கண்டவற்றையெல்லாம்
தனக்குள் வரித்துக் கொண்டோடும் நதி..
கரைகள் அற்ற
திசையென்று ஏதுமற்று
வேகமாயும் வேகமற்றும்
ஆழமாயும் ஆழமற்றும்
தானே தன் பாதையைப் பற்றியோடும்
நதியின் மடியில் நான் அமர்ந்தேன்….

நிறைய தண்ணீர்..
தனதாற்றலைத் தானேயறியாத 
ஒரு பெண்ணின் உடல் போல்
வளைந்து நெளிந்து
சுழித்துப் புரண்டு
காமுற்ற அரவமாய்
இரையை நெருங்கிய வேங்கையாய்
வன்மையுமாய் மென்மையுமாய்
வனாந்திரங்களையும் வெட்டவெளிகளையும் தின்று
தரைமேல் படர்ந்து செல்லும் நதி
ஒரே நேரத்தில் பேரரசி போலும்
பிச்சைக்காரி போலும் நடந்து செல்கிறது…

ஆதியில் நாகரீகங்களைப் பெற்றெடுத்த
அதன் கருவறையில்
அமிலத்தின் நெடி காரமாய் –
விகாரமாய் வீசிற்று..
தன்னால் செழித்துக் கொழித்தவைகள்
இன்று தன்னாலேயே வாடிச் சாவதைக்
கண்டு நதி வடித்த கண்ணீர்
பத்து ரூபாய்க்கு விலை போகிறது..
வரப்புகளின் மடைகளில் மன்வெட்டிக்
கொத்தலின் இனிய முத்தங்களெல்லாம்
இனி பழங்கனவு தானோ…
துள்ளி விளையாட வயலும் வரப்புமில்லை…
விளையாட்டைக் கண்டித்து மடை கட்ட
விவசாயியுமில்லை.. 
செம்மண் திப்பி கலந்த அதன் சிவந்த
நிறத்தை உறிஞ்சியெடுத்த அமெரிக்க
இயந்திரத்தின் மலவாயிலிருந்து
நிறமிழந்து ஒரு ப்ளாஸ்டிக் புட்டியிடம்
தன் சுதந்திரமுமிழந்து நிற்கும் சோகம்

வழியும் கண்ணீரோடு நின்ற என்னிடம்
மொழியும் வார்த்தைகளும் அற்று
வெறும் சப்தங்களாய் மதோடு
பேசிச் சென்றாள் அந்தத் தாய்..

“ஓ என் பிள்ளாய்…
என் மடியினின்றும் விலகிச் செல் நீ..
எதை வேண்டி வந்தாய் இன்று..?
உனக்களிக்க ஏதுமில்லை என்னிடம்..
இந்த வனமும் எனதில்லை..
இந்த நீரும் எனதில்லை..
இந்த மீன்களும் எனதில்லை..
நானே எனக்கில்லாத ஓர் நாளில்
எனை நாடி ஏன் வந்தாய்..?
இப்போதே விலகிச் செல் நீ…

அள்ளித் தந்த எனையே
அள்ளிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
என்னில் பிறந்து
என்னில் தவழ்ந்து
என்னில் வளர்ந்த
என் பிள்ளைகளே என்னைக்
களவாடிச் சென்ற கதையைக்
கேட்க வந்தாயா…
பிறந்த மலையும் விலை போனது
வாழ்ந்த பூமியும் விலை போனது
சேரும் கடலும் விலை போனது
நானும் விலை போய் விட்டேன் என் பிள்ளாய்…
ஏதுமற்ற இடத்தில் எதைத்
தேடி வந்தாய் என் பிள்ளாய்…
இருளில் தொலைத்ததை நீ
வெளிச்சத்தில் தேடுகிறாய்…
சோம்பி அமரும் நீ வேண்டாமெனக்கு
இப்போதே விலகிச் செல் நீ…
உன் கண்ணீர் வேண்டாமெனக்கு
என் மலை வேண்டும்
என் வனம் வேண்டும்
என் நிலம் வேண்டும்
என் வரப்பு வேண்டும்
என் கடல் வேண்டும்..
மீட்டுத் தருவாயா என் பிள்ளாய்…?”

சலசலக்கும் சப்தங்களினூடே
ஒரு சோக ராகமும் சில பறைகளின்
ஒலியும்…
செம்மண் திப்பிகளின்றிச் சிவக்கிறது
நதி…
இனி கண்ணீரில்லை…!

செப்ரெம்பர் 16, 2010 Posted by | கவிதை, புனைவு | , | 2 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: