கார்க்கியின் பார்வையில்

விளையாட்டுத் துறை – சில என்னங்கள்..!

சில நாட்கள் முன்னாள் ஹாக்கி வீரர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடிய செய்தி ஆங்கில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருந்தது. அப்புறம் எப்போதுமே ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கும் போது ஒரே ஒரு மெடலாவது வாங்கி விட மாட்டோ மா..? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் ஊடகங்களில் வருவதுண்டு.

‘அதெப்படி சார்… நூறு கோடி மக்கள் வாழற நாட்டுக்கு ஒரு பதக்கம் கூட ஜெயிக்கற அருகதை இல்லாமப் போயிடுமா? எல்லாம் பாலிடிக்ஸ் சார்…எங்க பாத்தாலும் கரப்ஷன்..” என்று அங்கலாய்க்கும் நடுத்தர வர்க்க குரல்களை நிறைய கேட்டிருப்போம். இது போன்ற ஒரு விவாதம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் விவாதம் செய்தது நினைவுக்கு வருகிறது. இந்தத் துறையில் நேரடியான அனுபவம் இருப்பதால் இது பற்றி எனது கருத்துக்களை ஒரு பதிவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். ரீனா – செந்தில். நான் ஜித்தோ குகாய் கராத்தே பள்ளியில் ப்ரொவிஷனல் ப்ளாக் பெல்ட் பெற்ற தகுதியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது ரீனா எனது மானவி. பின்னர் ஜித்தோவில் எனது ப்ளாக் பெல்ட்டை உறுதி செய்ய எனது அப்போதைய மாஸ்ட்டர் மூவாயிரம் லஞ்சம் கேட்டதால் கோவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அங்கே எனது சக மானவன் செந்தில். இந்த இருவருமே சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு தகுதி கொண்ட வீரர்கள். குறிப்பாக ரீனா 2003ம் ஆண்டு தமிழ்நாடு அளவிலான கத்தா / குமிட்டே என்று இருபிரிவிலும் இண்டர் டோ ஜோ போட்டிகளில் முதலிடம் வென்றவர்.

“ஒரு தேவதையின் மரணம்” என்ற ஒரு சிறுகதை சில நாட்களுக்கு முன் எழுதியிருப்பேன். அதில் வரும் ஜெனி எனும் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் ரீனா தான். எனக்கு அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம். அப்போது நான் அவரது பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்தில் கராட்டே இன்ஸ்ட்ரக்டராக இருந்தேன். பின்னர் அவரது ஆர்வத்தைப் பார்த்து இலவசமாகவே எங்களது மெயின் டோஜோவுக்கு
வரவழைத்தேன். (டோஜோ என்பது பயிற்சி செய்யும் இடம் அல்லது பள்ளி என்று பொருள் கொள்ளலாம். மெயின் டோஜோ என்பதை தலைமைப் பள்ளி என்று சொல்லலாம்)

சேர்ந்து மூன்றே வருடங்களில் அவர் கருப்புப் பட்டை பெறும் அளவுக்கு ஆர்வமாக கற்றுக் கொண்டார். பெண்கள் என்றால் குழைவான உடல்வாகு கொண்டவர்கள், பயந்த சுபாவம் கொண்டவர்கள், அவர்களுக்கு தற்காப்புக் கலையெல்லாம் ஒத்துவராது என்கிற பொதுவான அபிப்ராயங்களை ரீனா உடைத்து நொறுக்கினார். மாநில அளவில் நடந்த சில போட்டிகளில் அனாயசியமாக வெற்றிகளைத் தட்டி வந்தார். நாங்களெல்லாம் அவர் மேல் மிக எதிர்பார்ப்போடு இருந்தோம். ஜப்பானில் நடக்கும் உலக அளவிலான போட்டிகளுக்கு அவரை அனுப்ப மற்ற மானவர்களெல்லாம் சேர்ந்து ஸ்பான்சர்ஷிப்புக்காக அலைந்து கொண்டிருந்தோம்.

இந்த காலகட்டத்தில் தான் எனக்கும் எங்கள் மாஸ்ட்டருக்கும் மனக்கசப்பாகி நான் ஜித்தோவில் இருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அதற்க்குப் பின் சில ஆண்டுகளாக ரீனாவைப் பார்க்க முடியவில்லை. அப்புறம் ஒரு நான்கு வருடம் கழித்து எதேச்சையாக சாலையில் எதிர்பட்டார். அப்போது அவர் பழைய ரீனாவாக இருக்கவில்லை. உருக்குலைந்து போயிருந்தார். முன்பு கிராப் வைத்திருப்பார் – இப்போது நீளமாக தலைமுடி.
என்னோடு சரியாக பேசாமல் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். பின் நான் எனது பழைய நன்பர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்ததும் அவர் கனவர் இது போன்ற விளையட்டுக்களில் ரீனா ஈடுபடுவதை விரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது. கலியாணத்துக்குப் பின் ஒரு நாள் ரீனா பயிற்சியில் இருக்கும் போது டோஜோவுக்குள் புகுந்த அந்த ஆள் ரீனாவுக்கு பளீர் என்று ஒரு அறை விட்டு தர தரவென்று இழுத்துச் சென்றிருக்கிறான். அதன் பின் ரீனா எப்போதும் டோ ஜோவுக்கு வந்ததேயில்லை. ஒரு வேளை ரீனா தொடர்ந்து பயிற்சி செய்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்னவோ.

எத்தனையோ ஆண் மானவர்களை குமிட்டேயில் அனாயசியமாக வீழ்த்தும் திறமை கொண்ட ரீனா அவள் கனவனை சும்மா ஒரு தட்டு தட்டியிருந்தாலே அவன் மூஞ்சி எட்டாகி இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடும் அளவுக்கு சுதந்திரமான சிந்தனை கொண்ட பெண்களை நமது சமூகம் பஜாரி என்று தானே சொல்கிறது. ஒருவேளை ரீனா அப்படிச் செய்திருந்தால் இன்றைக்கு அவள் மெடல் வாங்கியிருப்பாளோ இல்லையோ வாழாவெட்டி எனும் பட்டத்தை வாங்கியிருப்பாள். மக்கள் தொகையில் சரிபாதி கொண்ட பெண்களை இப்படி மொக்கையாக்கி வைத்திருப்பது தான் நமது சமூக அமைப்பு. பொருளாதார ரீதியில் அவர்களை சார்பு நிலையில் இருக்க வைத்தே வீணடித்து விட்டது. ஏதோ லீணா மணிமேகலை போன்று நாலு கெட்ட வார்த்தைகள் பேசுவதையே பெண் விடுதலையின் உச்சம் என்று நினைத்துக் கொள்ளும்
அலுக்கோசுகள், அந்த நாலு கெட்ட வார்த்தைகளையும் கவனமாக அவரது கனவரை நோக்கி உதிர்க்காததன் மர்மம் என்னவென்று யோசிக்க வேண்டும்.

செந்தில் ஒரு டைலர். ஒரு ஆயத்த ஆடை தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தான். அங்கே குறிப்பான வேலை நேரம் கிடையாது. ஆர்டர் இருக்கும் போது இரவு பகலாக வேலை செய்தாக வேண்டும். இரவு முழுக்க வேலை செய்து விட்டு சிவந்த கண்களோடு காலையில் மைதானத்தில் வந்து எங்களோடு நிற்பான். உடல் தொய்ந்து போய் ஓய்வு கேட்டு கெஞ்சும். அந்த நிலையிலும் செந்தில் அடிக்கும் ஜம்ப்பிங் ரிவர்ஸ் சைடு கிக் எங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம். நான் மிகச் சிலரோடு தான் குமிட்டே பயிற்சி செய்ய அஞ்சி இருக்கிறேன். அதில் செந்தில் என்றால் எனக்கு எப்போதும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். தைய்யல் மிஷினை மிதித்து மிதித்து உரமேறிய கால்கள் அவன் கால்கள்.

டேக் வாண்டோ ஒலிம்பிக்கில் இருக்கிறது. அனேகமாக ஒலிம்பிக்கில் இருக்கும் ஒரே மார்ஷியல் ஆர்ட் டேக் வாண்டோ தான் – கராத்தே கூட ஒலிம்பிக்கில் இல்லை. செந்திலின் லட்சியமே எப்படியாவது இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபட்டிருப்பான். எந்த சூழ்நிலையிலும் வகுப்பை தவிர்த்ததேயில்லை. இந்த நிலையில் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு கொரியாவில் இருக்கும் டேக் வாண்டோவின் தலைமைப் பள்ளியில் இருந்து சில தலைசிறந்த வீரர்கள் இந்தியா வந்தார்கள். அதையொட்டி இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட மானவர்கள் அவர்களோடு மோதும் ஒரு போட்டி ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் செந்திலும் எங்கள்
டோஜோ சார்பில் இறங்கினோம்.

பொதுவாக டேக் வாண்டோ வைப் பொருத்த வரையில் கொரிய வீரர்களே முன்னனி வகிப்பார்கள் (குங்ஃபூ என்றால் சீனர்கள் கராட்டே என்றால் ஜப்பானியர்கள் என்பது போல) அந்தப் போட்டியில் அவர்கள் எந்தவிதமான சவாலையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார்கள். ஆனால் செந்தில் அது வரையில் இருந்த மாயைகளை (Myth) நொறுக்கித் தள்ளினான். அவனது ரிவர்ஸ் சைட் கிக் அன்றைக்கு அற்புதங்களைக் காட்டியது.
கொரியர்கள் மிரண்டு போனார்கள். எங்கள் தலைமை இன்ஸ்ட்ரக்டர் இந்திய டேக் வாண்டோ வின் எதிர்காலம் செந்தில் என்று வீரர்களிடையே தனிப்பட்ட முறையில் பேசும் போது சொன்னார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எப்படியும் தேர்வாகிவிடுவான் என்றும் எப்படியும் மெடல் தட்டிவிடுவான் என்றும் நாங்களெல்லாம் செந்தில் மேல் மிக எதிர்பார்ப்புடன் இருந்தோம். இந்த நிலையில் தான் அவனது குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து அவனை நிர்மூலமாக்கியது.

செந்திலுக்கு மொத்தம் மூன்று அக்காக்கள். அவன் அப்பா சின்ன வயதிலேயே அவன் அம்மாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணோடு போய் விட்டார். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு வந்து விட்டான். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆள் செந்தில் தான். இந்த நிலையில் தான் செந்திலின் முதல் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடானது. திருமண செலவுகளை ஈடுகட்ட செந்தில் ஓவர் டைம் பார்க்கத் துவங்கினான். ஓவர் டைம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல – தொடர்ந்து மூன்று சிப்டுகள் வேலை செய்வான். ஆறே மாதத்தில் அறுபத்தைந்து கிலோவில் இருந்து ஐம்பது கிலோவாக எடை குறைந்தான். பின்னர் இரண்டாவது அக்கா.. மூன்றாவது அக்கா…

இடையில் எனது பொருளாதார நிலைமையும் என்னை ஊரை விட்டு விரட்டி விட்டது. பதினான்கு ஆண்டுகள் எத்தனையோ ஆசைகளோடு கற்று வந்த கலைகளை தூக்கி உடைப்பில் போட்டு விட்டு பிழைப்பைப் பார்க்க கிளம்பி விட்டேன். காலை எழுந்தவுடன் துவங்கும் ஓட்டம் இரவு படுக்கையில் மயங்கி விழும் வரையில் நிற்காது. இப்படியே சில ஆண்டுகள் போனதில் எனது பழைய நன்பர்கள் எல்லோரும் மறந்தே போனார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்த போது செந்திலைத் தேடிக் கண்டுபிடித்து போய் பார்த்தேன். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தான். இளைத்த உருவம், களைத்துப் போய் அலைபாயும் கண்கள், தைய்யல் இயந்திரத்தை மிதித்து மிதத்து
ஸ்லிப் டிஸ்க் பிரச்சினை வேறு.. இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தரும் வல்லமை கொண்டிருந்தவன் இன்று எங்கோ ஒரு ரெடிமேட் துணிக் கடையில் இன்றைக்கு எப்படியாவது ஓவர் டைம் கிடைக்காதா ஒரு அம்பது ரூவா கூட கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான்.

இது தான் நிதர்சனம்..

இன்றைக்கான சோறை இன்றைக்கே சம்பாதித்தாக வேண்டிய நெருக்கடி. கல்யாணம் என்றாலே பெண் வீட்டை தேட்டை போடலாம் என்று கருதும் ஒரு சமூகத்தில் செந்தில் போன்று மூன்று சகோதரிகளைக் கொண்ட ஒருவன் எங்கிருந்து பதக்க லட்சியங்களைச் சுமப்பது? இது பொதுமைப்படுத்தும் முயற்சியல்ல – ஆனால், நாட்டில் பெருவாரியாக இருக்கும் கீழ்நடுத்தர ஏழைக் குடும்பங்களில் பதின்ம வயதுகளின்
இறுதியிலேயே பொருளாதார பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. யாராவது “நூறு கோடி பேரு இருக்கற நாட்டுல ஒரு தங்கப் பதக்கம் கூடவா வாங்க வக்கில்ல” என்று நீட்டி முழக்குவதை பார்க்கும் போதெல்லாம்.. ” யோவ்.. உன்னோட இந்தியாவுல மொத்தமாவே மூனு கோடி பேரு தான்யா தேறுவாங்க.. மிச்சம் இருக்கற தொன்னுத்தியேழு கோடி பேரு எங்க இந்தியாவுல இருக்காங்கய்யா” என்று கத்த வேண்டும் என்று தோன்றும்.

நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் என்பது சதவீதம் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் விளையாட்டையெல்லாம் ஒரு பிழைப்பாகவா பார்க்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் மாநில அளவில் முதல் இரண்டு இடங்கள் பெற்று சான்றிதழ் வைத்திருந்தால் ரயில்வே துறையில் டி.டி.ஆர் வேலை கிடைக்கலாம். அதுவும் கூட நிச்சயமில்லை. 1975 ஹாக்கி உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணியின் கேப்டனே இன்று ரயில்வே துறையில் தலைமை டிக்கெட் பரிசோதகராகத் தான் குப்பை கொட்டுகிறார் – இது இன்றைய டைம்ஸில் வந்திருக்கும் செய்தி. அதே நேரம் 83 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டனின் நிலை இன்று என்ன?

இந்த பிரச்சினையில் பல பரிமாணங்கள் இருக்கிறது. அதில் லஞ்ச ஊழலும் ஒன்று. எனது நன்பன் வைபவ் பற்றி எனது வட இந்திய பயனக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் நினைவிருக்கிறதா? அவன் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உ.பி கிரிகெட் அணியில் விளையாடியவன். ரஞ்சி கோப்பை போட்டியில் இறுதி செய்யப்படப் போகும் ஐம்பது பேரில் ஒருவனாக தேர்வாக அவனிடம் ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்கள். கேட்டது வேறு யாரும் இல்லை – இன்று ஆங்கிலச் சேனல்களில் கிரிக்கெட்டின் புனிதம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் ஒரு முன்னாள் வீரர் தான். லாலு ப்ரஸாத்தின் மகன் டில்லி கிரிகெட் அணியில் விளையாடுகிறான்.

ஆனால் இந்த லஞ்ச ஊழலும் அரசியல்வாதிகளும் மட்டுமே இந்தியா விளையாட்டுத் துறையில் பிரகாசிக்காமல் போனதற்கு முதன்மைக் காரணம் அல்ல. அதைத் தாண்டி மிக முக்கியமான காரணம் பொருளாதாரமும் நமது சமூக அமைப்பு முறையும். இங்கே தான் சூத்திரன் பஞ்சமன் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே சமூக விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்றைய உணவை சேகரிப்பதே பெரும்
பாடாக இருக்கும் போது, எப்படி விளையாட்டுத் துறைக்கு வந்து விட முடியும்? நமது சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி பெரிதாக சொல்லித் தெரியவேண்டியதில்லை. ரீனா போன்று எத்தனை பேர் தங்கள் கனவுகளை லட்சியங்களை மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு சமையலறையில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்? ஒரு சானியா மிர்ஸாவை கொண்டாடும் ஊடகங்கள் இப்படி கவனிப்பாரே இல்லாமல் திறமைகள் வீணடிக்கப்படும் லட்சக்கணக்கான சானியா மிர்ஸாக்களைப் பற்றி பேசுவதில்லை. இதே சானியா மிர்ஸா அழகியாக இல்லாமலும்
சிவந்த தோல் இல்லாமலும் இருந்திருந்தால் இப்படி ஒரு கவனிப்பை பெற்றிருப்பாரா என்பது இன்னொரு கேள்வி.

இந்தியாவுக்கு பதினோரு க்ராண்ட் ஸ்லாம் பெற்றுத் தந்த லியாண்டர் பயஸை விட பெரிதாக எதையும் சாதிக்காத சானியா மிர்ஸா ஊடகங்களில் கொண்டாடப்படுவது ஏனென்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஏன் கிரிக்கெட்டுக்கு இந்தளவுக்கு கவனிப்பும் முக்கியத்துவமும் தருகிறார்கள் என்பதை யோசித்திருக்கிறீர்களா? கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் தேசிய விளையாட்டே கிரிக்கெட் தான் என்று நம்பும் படிக்கு ஊடகங்கள் கடந்த ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் தொடர்ந்து பொதுபுத்தியில் பதிய வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வீரர்கள் விளையாடுகிறார்களோ இல்லையோ பல விளம்பர காண்டிராக்டுகளில் கையெழுத்திட்டு விடுகிறார்கள். இவர்கள் மேல் – அதாவது இவர்களின் கவர்ச்சியின் மேல் – கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகள்
இவர்கள் அணியில் தேர்வாவது வரைக்கும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆமாம்.. கடைசியாக யுவராஜ் சிங் எப்போது உருப்படியாக விளையாடினார் என்று நினைவுக்கு வருகிறதா உங்களுக்கு? தொடர்ந்து ரஞ்சி கோப்பை மேட்சுகளில் நன்றாக விளையாடு தினேஷ் ஏன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பதில்லை?

உலகமயமாக்கல் எல்லா துறையையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் துறைகளாக மறுவார்ப்பு செய்து வருகிறது. பன்னாட்டு கம்பெனிகள் தமது பிரண்டு அம்பாஸிடர்களாக தேர்வாக ஏதோ கொஞ்சம் திறமையும் நல்ல அழகும் கொண்ட வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது – இவர்கள் தான் தவிர்க்கவியலாத படிக்கு அணிகளில் இடம் பெறுவர். சச்சின் டோனி போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம் (அப்படிப் பார்த்தாலும் எனது தனிப்பட்ட கருத்து சச்சினை விட காம்ப்ளி திறமையானவர் என்பதே) – இவர்கள் இயல்பிலேயே திறமை கொண்டவர்கள் – அதை பன்னாட்டு கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எத்தனையோ திறமைசாலிகள் இந்த நூறு கோடி கூட்டத்துக்கு நடுவே எங்கோ இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் வெளியே தெரிவதில்லை?

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பும் அணிகளில் லட்சக்கணக்கான ரூபாய்கள் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி கொண்ட மேல் நடுத்தர வர்க்க குடும்பத்துப் பிள்ளைகளே இருப்பர். உண்மையான திறமைசாலிகள் எங்கோ ஒரு மூலையில் தைய்யல் இயந்திரத்தை மிதித்து இடுப்பு ஒடிந்து கிடப்பார்கள். அவர்களின் கோப்பை வெல்லும் கனவுகளெல்லாம் தகர்ந்து போய் இன்றைக்கு ஓவர் டைம் கிடைத்தால் தேவலம் எனும் எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 3, 2010 - Posted by | culture, medias, politics | , , ,

4 பின்னூட்டங்கள் »

  1. vilaiyattai patre oru arumaiya kannottam konda pathivu

    பின்னூட்டம் by karthik | ஏப்ரல் 12, 2010 | மறுமொழி

  2. //கருத்துரிமை, காவாளித்தனம், நர்சிம் உ.த மற்றும் சில பன்றிகள்//

    தலைப்பில் பன்றிகள் என்ற வார்த்தை தேவையற்றது என்று கருதுகிறேன். பதிவின் கருத்துக்கள் யாரிடம் சென்று சேர வேண்டுமோ அவர்களிடம் போகாது.

    எனவே தலைப்பு குறித்து பரிசீலனை செய்ய வேண்டுகிறேன். வாய்ப்பிருந்தால் சுயவிமர்சனமும்.

    பின்னூட்டம் by மிஸ்டர் மிஸ்டேக் | ஜூன் 1, 2010 | மறுமொழி

  3. […] விளையாட்டுத் துறை – சில எண்ணங்கள்..!- க… […]

    Pingback by ஒலிம்பிக் தங்கம் – பித்தளைச் சுதந்திரம் ! « புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி | ஜூலை 25, 2012 | மறுமொழி


பின்னூட்டமொன்றை இடுக