கார்க்கியின் பார்வையில்

விளம்பர அரசியல்

வர வர இந்த அழகுக் க்ரீம் கம்பெனிகள் நம்மையெல்லாம் வெள்ளைக்காரர்களாக மாற்றாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது. கருப்பான பையன்களும் பெண்களும் ஏழு நாட்களிலோ என்னவோ
பளிச்சென்று வெள்ளைக்காரப் பையன்கள் போல் ஆகிவிடுவது போன்ற தொலைக்காட்சி விளம்பரங்களை எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இது தவிர ஊட்டச்சத்து பான விளம்பரங்கள்,
கைப்பேசி இனைப்பு விளம்பரங்கள் சோப்பு விளம்பரங்கள் ம்யூட்சுவல் பண்டு விளம்பரங்கள் என்று எந்த விளம்பரங்களானாலும் நம்முடைய ‘நிலையை’ அடுத்த தளத்துக்குள் திணித்து விடுவது மட்டுமே
தங்களது ஒரே வாழ்க்கை லட்சியம் என்கிற லட்சியவெறியில் இயங்கிக் கொண்டிருப்பது போல் காட்டுகிறார்கள். இதில் பொதுவாக எவருமே அவன்
விளம்பரப்படுத்தும் பொருளின் நம்பகத்தன்மை / நீரூபகத்தன்மை பற்றியெல்லாம் பேசியிருப்போம் ஆனால் இது போன்ற விளம்பரங்களின் பின்னே மறைந்து வரும் அரசியல் நோக்கங்கள்
பற்றி எத்துனை விவாதங்கள் நிகழ்ந்திருக்கும் / அல்லது அப்படி நிகழ்ந்த விவாதங்கள் எத்துனை பேரின் கவனத்துக்குப் போயிருக்கும்; ஏன் அப்படி கவனத்துக்கு வராமல் போய் விட்டது
என்பதே தனியானதொரு விவாதத்துக்குரியது.

இவ்விளம்பரங்கள் நேர் பொருளில் சொல்லும் செய்தியைக் காட்டிலும் மறைபொருளாக நம்முள் ‘திணித்து’ விட்டுச் செல்லும் செய்திகள் அதிக வக்கிரமும் தீமையும் நிறைந்த ஒன்று. ஒரு பத்து அல்லது இருபது நொடி விளம்பரம், பார்வையாளன் ஒருவன் ஆழ்மனதில் கருப்பாயிருப்பது அசிங்கமானது என்றும் அவமானகரமானது என்றும், வெள்ளைத் தோல் இருந்தால் தான் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்பது போலவும் பதிய வைத்து விடுகிறது. பணிப்பெண் வேலைக்கும் வெள்ளைத் தோலுக்கும் என்ன தொடர்பு? வேலைக்கு ஆளெடுக்கிறார்களா விபச்சாரத்துக்கு ஆளெடுக்கிறார்களா? கருப்பாய் இருப்பதைக் காட்டிலும் வெள்ளையாய் இருப்பது என்னென வகையில் உசத்தி? எது அழகு? யார் அதைத் தீர்மானிப்பது?
என்றெல்லாம் சிந்திக்க விடாத வேகத்தில் காட்சிகள் நகர்கிறது.

வெள்ளை நிறத் தோலின் மேலான மோகத்தின் நீட்சி வெள்ளை நாடுகள் மேலான விசுவாசமாய் முடிகிறது. இவ்வித விளம்பரங்களின் பின்னேயுள்ள நிறுவனங்கள் பெரும்பாலும்
பன்னாட்டு நிறுவனங்களாய் இருப்பதும்; இந்த போக்கை துவக்கியதும் அவர்களாயே இருப்பதும் எதேச்சையானதொன்றல்ல.

பன்னாட்டு வங்கி ஒன்றின் விளம்பரம் ஒன்றில் ஒரு பெண் காலை நேர ஒட்டப்பயிற்சியில் இருக்கிறாள்; வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் பற்றி சிந்தித்தவாறே ஓடுகிறாள்; எதிரே கடந்து போகும் இளைஞனைத் திரும்பிப் பார்த்தவாறே ஒரு நமுட்டுச் சிரிப்புடன் “coool T-Shirt!” என்று மனதுக்குள் கமெண்ட் அடிக்கிறாள் – இது பார்வையாளன் சொக்கிப் போயிருக்கும் தருணம்! – உடனே வாடிக்கையாளர் ஒருவரின் சேமிப்பு பற்றியும் சிந்திக்கிறாள். இந்தியச் சூழலில் ஒரு பெண் ஆடவன் ஒருவனைப் பார்த்து கமெண்ட் அடிப்பதைப் பார்க்கும் பார்வையாளனுக்குள் எவ்விதமான கிரக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை! அதே கிறக்கம் கலையும் முன்னே தமது ஊழியர்களின் “கடமை உணர்ச்சியை” உள்ளே சொருகி விடுகிறார்கள். இங்கே இலக்கு வைக்கப்பட்ட பார்வையாளர்கள் காளான்களைப் போல் பெருகி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய இளைஞர்கள்.

“என்ன இருந்தாலும் ப்ரைவேட் பேங்க் மாதிரி வருமா சார்? அங்க தான் சார் கஸ்டமரை மதிக்கிறான்!” என்று உளரும் இளைஞனை
நம்மாள் புரிந்து கொள்ள முடிகிறது!
இன்றைக்கு தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகள் சொற்பம். தமிழக அரசாங்கமும் தமது குடிகளைத் “தயார்ப்படுத்தும்” பொருட்டு இலவசமாகவே தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க முன்வந்திருக்கிறது.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு வயது வரை தாய்ப்பாலும்
அதற்குப் பின்னே கொஞ்சம் கொஞ்சமாக திட உணவும் கொடுத்தே பழக்கப்படுத்துவார்கள். திட உணவும் அப்படியெல்லாம் ஒன்றும் விசேசமானதில்லை; அப்பனாத்தாளுக்கு என்னவோ அதில் கொஞ்சம் குட்டிப் பாப்பாவுக்கு – அவ்வளவு தான். விளம்பரங்களின் கைவரிசையால் இன்றைய பொடிசுகள் அப்பனின் சட்டையை கொத்தாகப் பிடித்து “எங்கே எனது ஜூனியர் ஹார்லிக்ஸ்?” என்கிறது.

மாதம் மூவாயிரத்தைனூரில் நாலு வயிற்றை ரொப்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் ஐந்து வயது மகன்,

“அங்கிள், ஐயேம் எ காம்ப்ளான் பாய்” என்கிறான் மழலை மொழியில்; அந்தத் தகப்பனோ மழலை மொழியை ரசிக்கும் நிலையில் இல்லை!

பொருட்களை வாங்கிக் குவிப்பதே அந்தஸ்தின் அடையாளமாகவும், பல்சர் வைத்திருப்பதே ஆண்மையின் அடையாளமாகவும்.. நமது இளைஞர்கள் அடிமைப் புத்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்தப்படுகிறார்கள்.

பெண்களை இவர்கள் காட்டும் விதம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஜட்டியின் அழகில் மயங்கும் பெண்கள் கூட்டம் ஒன்று இளைஞன் ஒருவனை முத்தமிட்டே தீர்க்கிறார்கள். இனிமே சூப்பர்மேன் போல பேண்ட்டுக்கு மேலே ஜட்டியுடன் பையன்கள் அலைவார்களானால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.. பேக்பைப்பர் இசைக்கு மயங்கும் எலிகள் வாசிப்பவனைப் பின் தொடர்கிறது.. அவன் போட்டிருக்கும் செண்ட்டின் மனத்துக்கு மயங்கும் பெண்கள் அவனை எலிகளைப் போல பின் தொடர்ந்து செல்கிறார்கள்.. என்னவோ இது பெண்களை தெய்வமாகப் போற்றும் தேசமாம்…அதையும் நாம் நம்பவேண்டுமாம!

இவ்விளம்பரங்களில் காட்சிப்படுத்தப்படும் வாழ்நிலையும், நாடும் நிச்சயமாக நம்முடைய நாடோ  வாழ்நிலையோ இல்லை. இதையெல்லாம் பார்த்து தயாராகும் யுப்பி வர்க்க இளைஞர்களோ “சார் நாடு இப்பயெல்லாம் எங்கேயோ போயிருச்சுங்க” என்று ஜனகராஜின் அசிஸ்டெண்ட் லெவலுக்கு உருகுகிறார்கள்.

போன வாரம் அப்படிச் சொன்ன இளைஞன் ஒருவனிடம் அதே நாளில் செய்தித்தாளில் வந்திருந்த அரசு ஆய்வு ஒன்றைச் சுட்டிக் காட்டி நாளுக்கு இருபது ரூபாய் மட்டும் சம்பாதித்து வாழும் குடும்பங்களின் என்னிக்கை என்பது சதவீதம் என்று விளக்கினேன். அவனோ பதிலின்றி “ஙே” என்று விழிக்கிறான்.

ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் வாங்கும் ஐ.டி துறை இளைஞர்களையே இவ்விளம்பரங்கள் குறிவைக்கின்றன; அவனுக்கோ அவனைச் சுற்றி – அவன் வீடு, அலுவலகம், நன்பர்கள் – உள்ள உலகத்தையே இவையும் அழகாக காட்சிப்படுத்தித் தருவதால் அதுவோ நாட்டின் ஒட்டுமொத்தமான சித்திரம் என்பதாக நினைத்துக் கொள்கிறான்.

என்.டி.டீ.வியும் சி.என்.என்.ஐபின்னும் முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியை அதே கோனத்தோடு இவனும் முக்கியமாய்க் கொள்கிறான். அந்தச் சேனல்களுக்கு சோற்றுக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல வாழ்வில் அவ்வப்போது சோகச் சுவையும் தேவையாய் இருக்கிறபடியால் அத்தி பூத்தாற்போல எப்போதாவது ‘ஏழ்மையைப்’ பார்த்து நீலிக்கண்ணீர் வடித்து வைக்கிறார்கள். ஏதோ மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் காட்டி விளக்கி வரும் கைடு போல இந்நாட்டு உழைக்கும் மக்களின் பிரச்சினையைக் காட்டுகிறார்கள்.

அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞன், “சார் ஏதோ ஒரு நாலைஞ்சு பேரு நாட்டுல கஷ்ட்டப்படறாங்கன்னு நினைச்சா இவ்வளவு பேரோட நெலமையே இப்படித் தான் இருக்கா?” என்கிறான்

இது தான் “அவர்கள்” எதிர்பார்ப்பது! 

ஒக்ரோபர் 5, 2007 Posted by | culture | , , | 4 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: