இன்னும் கொஞ்சம் வாழ்க்கை..!
அது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஒரு குட்டி தீபாவளி
போல இருக்கும். மில்லில் அன்றைக்குத் தான் சம்பளம் கொடுப்பார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்கு வரும் போது அப்பா எனக்கும் அண்ணாவுக்கும் லாலா கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வருவார். அம்மா வீட்டில் ஒரு பழைய உஷா தையல் மிஷின் ஒன்றை வைத்து தெரிந்தவர்களுக்கு கிழிந்த பழைய துணியெல்லாம் தைத்துக் கொடுப்பாள். தையல் மிசின் இருக்கும் மூலையிலேயே பக்கத்து திட்டில் ஒரு பழுப்பேரிய டப்பா இருக்கும். அதில் அம்மாவுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களைப் போட்டு வருவாள். அது முழுக்க நிரம்பி வழியும் மாதத்தில் எனக்கும் அண்ணாவுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய்கள் கிடைக்கும்.
ஏழாம் தேதிக்கு அடுத்து வரும் சனிக்கிழமை எனக்கு இன்னுமொரு கொண்டாட்டமான நாள். அப்பாவுக்கு வார லீவு நாள் சனிக்கிழமை தான்.
சிலவுக் கணக்கை எழுதிய பின் அந்த மாதத்துக்கான மளிகை சாமான் வாங்கும் நாள் தான் அடுத்து வரும் முதல் சனிக்கிழமை. பொருட்களை
பிடித்துக் கொள்ள என்னையும் சைக்கிளின் பின்னே அமர வைத்து கூட்டிப் போவார். டவுனைப் பார்க்கப் போகும் சந்தோசத்தை விட எனக்கு நாங்கள் பொருள் வாங்கப் போகும் கடையில் கணக்கெழுதும் கணேசனைப் பார்க்கப் போகும் சந்தோசம் தான் தூக்கலாக இருக்கும்.
எங்கள் வீடு தாராபுரம் தாண்டி வெள்ளகோயில் போகும் வழியில் மூலனூரில் இருந்தது. பக்கத்தில் ஓரளவுக்கு பெரிய டவுன் என்றால் அது தாராபுரம் தான். தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நீங்கள் திருப்பூர் செல்லும் வழியில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் வந்தால் ஒரு ரவுண்டானா
இருக்கும். அதில் வலது புறம் திரும்பி ஒரு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஒரு நால் ரோடு சந்திப்பு வரும் – அந்த இடத்திற்கு பூக்கடை
நிறுத்தம் என்று பெயர். அதில் இடது புறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால் இடது புறம் கரூர் வைசியா பேங்கிற்கு நேர் எதிரே வலது புறத்தில் பால் பாண்டி டிரேடர்ஸ் இருக்கும்.
பதினைந்து வருடத்திற்கு முன் ஊக்கு முதல் சகல மளிகை சாமானும் விற்கும் பெரிய கடை அந்த வட்டாரத்திலேயே பால் பாண்டி டிரேடர்ஸ் தான். எந்த நேரமும் ஐம்பதுக்கும் குறையாமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள். போனதும் கணேசனிடம் முதலில் பில் போட வேண்டும். பில் என்பது கையால் ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்படும் சிட்டை தான். அந்த சிட்டையின் கடைசியில் மொத்த தொகை போட்டிருப்பார்கள். அதை கல்லாவில் அண்ணாச்சியிடம் கட்ட வேண்டும். பின் அந்த பில்லின் நீளத்தைப் பொருத்து அதை உள்ளே வேலை செய்யும் கடைப் பையனிடம் கணக்கெழுதிய கணேசனே கொடுப்பார். பொருட்கள் கட்டப்பட்டு சரிபார்க்கப் படும் வரையில் கல்லாவுக்கு நேர் எதிராக போடப் பட்டிருக்கும் அரிசி மூடைகளில் அப்பா அமர்ந்திருப்பார். கணேசன் என்னைக் கூப்பிட்டு தன் அருகேயே அமர வைத்துக் கொள்வார்.
அரிசி மூடைகள் வரிசையாக வைத்திருக்கும் பகுதிக்கு நேர் பின்னே தான் கணேசன் அமர்ந்து பில் போட்டுக் கொண்டிருப்பர். அங்கேயிருந்து
அவரைத் தெளிவாக கவனிக்க முடியும். கனேசனைப் பார்த்தவர்கள் முதலில் ஆச்சர்யப்படுவார்கள். அவருக்கு காதும் மூளையும் தலையில்
இருக்கிறதா இல்லை கைகளில் இருக்கிறதா என்று ஒரு குழப்பம் வரும்.
“அண்ணாச்சி, கொள்ளு ஒரு கிலோ, து.பருப்பு ரெண்டுகிலோ, க.எண்ணை அஞ்சு லிட்டர்,. மஞ்சள் கால் கிலோ, ச.மாவு ரெண்டு கிலோ, ம.மாவு
ரெண்டு கிலோ, வெ.ரவை ரெண்டு கிலோ, கோ.ரவை ஒரு கிலோ, ப.பருப்பு ஒரு கிலோ, ஊதுபத்தி ரெண்டு ரோலு, ஒட்டகம் மார்க் அரப்பு அரை கிலோ, புலி மார்க் சீயக்கா அரை கிலோ, ஐய்யார் இருவது சின்ன சிப்பம், பச்சரிசி ரெண்டு கிலோ, உளுந்து ஒரு கிலோ, கடுகு அம்பது கிராம், கேரளா குண்டு மிளகு நூறு கிராம், சீரகம் நூறு கிராம், மல்லி நூறு கிராம், புளி ஒரு கிலோ, கல் உப்பு அரை கிலோ, சக்கரை மூணு கிலோ, திரி ரோஸ் டீ தூள் நூறு கிராம், கண்ணன் காபி தூல் நூறு கிராம், சூப்பர் மேக்ஸ் பிளேடு நாலு, ரெண்டு நட்ராஜ் பென்சில்.. அப்புறம் அவ்வளது தான் – சீக்கிரம் பில்லப் போடுங்க” மாத சம்பளக்காரர்கள் இப்படி தாறுமாறாக ஒப்பித்து விட்டு அவசரப் பட்டுக் கொண்டு நிற்பார்கள்.
அவர் ஒவ்வொரு பொருளின் பெயரையும் அளவையும் சொல்லி முடித்த பிண்ண நொடியில் அது எழுதப்பட்டு அதற்கான விலையும் எழுதப்பட்டு விடும். இந்த மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் விலை ஏறி இறங்கும். காலையில் அண்ணாச்சி அன்றைய விலை நிலவரத்தை வரிசையாக கிலோவுக்கு இத்தனை என்று சொல்லுவதை கனேசன் ஒரு டீயை உறிஞ்சியபடி கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் வாடிக்கையாளர்கள் பல்வேறு அளவைகளில் சொல்வதை அவர் சொல்லி முடிக்கும் முன்னரே மனதுக்குள் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து விலையை வரிசையாக எழுதி, கீழே கோடு கிழித்த அடுத்த பத்து நொடிகளில் வரிசையாக எல்லா தொகையையும் கூட்டி மொத்த தொகையை எழுதி விடுவார். வேலை செய்யும் அனுபவம் கொண்ட பையனிடம் கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் சின்ன பில்லை கொடுக்க வேண்டும். அவசரம் அல்லாத பெரிய பில்லையும் கூட புதிய பையனுக்கு அவ்வப்போது கொடுக்க வேண்டும் – அவனும் பயிற்சி பெற்று தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா.
இந்த நுணுக்கமான அவதானிப்புகள் எல்லாம் பில்லை எழுதி, பொருளுக்குண்டான விலையை அதன் அளவுக்கேற்ப எழுதி, அதன் மொத்த மதிப்பை கூட்டி எழுதும் அந்த நேரத்திற்குள்ளேயே முடிந்து விடும். இதையெல்லாம் கை எழுதிக் கொண்டிருக்கும் போதே வாய் விசாரிப்புகளில் இறங்கியிருக்கும்.
“என்ன அண்ணாச்சி, பையன காலேஜுல சேத்துட்டியளா. எத்தன ரூவா கட்டினிய?”
“அத ஏங்க கேக்கறீங்க.. வாங்குன ஒன்னார்ருவா மார்க்குக்கு இன்சினீருக்குப் படிக்கனுமாம் தொரைக்கு. பணம் பொரட்டத்தான் இப்போ நாயா அலைஞ்சிட்டு இருக்கேன்” அந்த நடுத்தர வயது சலிப்புக்கு உடனே ஆறுதல் வரும்..
“விடுங்கண்ணாச்சி.. நாம தான் படிக்க வைக்க ஆளில்லாம இன்னிக்கு லோல்படுறோம்.. நம்ம பிளையளாவது படிக்கட்டுமே.. காச என்ன முடிஞ்சா
கொண்டு போறம்… இன்னாங்க பில்ல பிடிங்க. காச அங்க கல்லாவுல கட்டுங்க” சிட்டையை அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே திரும்பி “ஏல..
செல்லதொர இங்க வால. அண்ணாச்சிக்கு இந்த லிஸ்ட்ட வெரசாக் கட்டித் தா. ஒரு கலரு ஒடச்சி கொடு – நீங்க அந்தா அந்த மூடைல
இருங்கண்ணாச்சி.. பய சீக்கிரமா போட்டுத் தருவான்”
அத்தனை கவனமான வேலைக்கு இடையிலும், விசாரிப்புகளுக்கு இடையிலும், உள்ளே யார் சும்மா நிற்கிறார்கள் என்கிற கவனிப்புகளுக்கு
இடையிலும், எந்நேரமும் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலிக்கு இடையிலும், முகத்தில் நிரந்தரமாய் ஒரு சிரிப்பு தேங்கியிருக்கும். முகத்தின் அமைப்பே சிரிப்பது போல் தானோ என்று நான் சந்தேகப் பட்டதும் உண்டு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளை கணேசன் அழைத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். கடையில் கூட்டம் குறைவாய் இருக்கும் நாளில் ஏதாவது பில்லை என்னிடம் கொடுத்து மொத்த தொகையை கூட்டித் தரச் சொல்வார். நான் திணருவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அதே கணக்கை தனது மின்னல் வேக பாணியில் போட்டு விட்டு ‘நாங்கெல்லாம் அந்தக் கால எட்டாவதாக்கும்; அந்தக்கால எட்டாவதும் இந்தக் கால எம்மேயும் ஒன்னுதான் தெரியுமாடே’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்.
என்னிடம் அவருக்கு தனி அக்கரை உண்டு. நான் அப்பாவோடு போகும் போதெல்லாம் தனியே என்னிடம் விசாரிப்பார். அவரின் சட்டையின் மேல்
பை பெரிதாக இருக்கும் அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருக்கும். அதில் கையை விட்டு அள்ளி எத்தனை வருகிறதோ அத்தனையும் எனக்கே கொடுப்பார். மளிகைக் கடைகளில் ரோஜா பாக்கு, பான் பராக் போன்ற லாகிரி வஸ்துக்களை மொத்தமாக வாங்க ஊக்குவிக்கும் பொருட்டு
அதன் முகவர்கள் சின்னச் சின்னதாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். நீங்கள் இந்த முப்பது நாப்பது ரூபாய் விலையில் விற்கும் டிஜிடல் வாட்ச்சை எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதெல்லாம் அது போன்ற வாட்சுகளே அனேகமாக கிடைப்பதில்லை. முன்பு அது போன்ற வாட்சுகளை சும்மா இலவச இணைப்பாக கொடுப்பார்கள். அதுவும் ஓரிரண்டு மாதத்துக்கு ஓடும். பச்சை மஞ்சள் நீலம் ரோஸ் என்று கலர் கலரான ப்ளோரஸண்ட் நிற வாரில் மிக்கி மௌஸ், டாம் & ஜெர்ரி படம் எல்லாம் போட்டிருக்கும்.
கணேசன் வேலை செய்வதைப் பார்த்து எனக்கும் என்றாவது ஒரு நாள் கணக்கெழுதும் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்ட காலம்
ஒன்று இருந்தது. பத்தாவதற்குப் பின் அப்பா என்னை பழனியில் பாலிடெக்னிக் படிக்க அனுப்பி விட்டார். அங்கே பாட்டி தாத்தாவின் வீட்டில்
நின்று படித்துக் கொண்டு ஆறு மாதம் ஒருமுறை தான் மூலனூருக்கு வருவேன். பாலிடெக்னிக் முடிந்து ஒருவழியாக ஒரு கம்ப்யூட்டர் சர்வீஸ்
கம்பெனியில் சேர்ந்தேன். ஒரு ஆறு ஆண்டு காலம் வாழ்கையும் பிழைப்பும் என்னை எனது சொந்த மண்ணில் இருந்து பிய்த்து எடுத்து விட்டது.
வீட்டுக்குப் போகும் நாளில் எல்லாம் அம்மாவோடும் அப்பாவோடும் செலவிடவே நேரம் பத்தாத நிலையில் பால்பாண்டி டிரேடர்சும் அப்பாவோடு சைக்கிளில் போன நினைவுகளும் ஏறக்குறைய மறந்தே விட்டது.
இரண்டாயிரத்து மூன்றாம் வருட வாக்கில் நான் எங்கள் கம்பெனியின் திருப்பூர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது காலையில்
தலைமை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு –
“சங்கர், உங்களுக்கு ஒரு இன்ஸ்டாலேஷன் செட்யூல் ஆகி இருக்குங்க” மேரியின் அதே வழக்கமான சலிப்பூட்டும் குரல்
“அப்படியா.. கஸ்டமர் அட்ரஸ், காண்டாக்ட் போன் நெம்பர் எல்லாம் சொல்லுங்க மேடம்” அசுவாரசியமாய் காதைக் குடைந்து கொண்டே
நோட் பேடை கையில் எடுத்துக் கொண்டேன்.
“நோட் பண்ணிக்குங்க – எம்.எஸ் பால்பாண்டி டிரேடர்ஸ், பூக்கடை ரோடு, தாராபுரம். காண்டாக்ட் நேம் – மிஸ்டர். பால்பாண்டி
நிமிர்ந்து உட்கார்ந்தேன் – ‘பால்பாண்டி டிரேடர்ஸ்’… தாராபுரம்… உய்ய்ய்ய்…! வாயிலிருந்து உற்சாகமாய் விசில் புறப்பட்டது.
“ஹல்லோ.. சங்கர்..! வாட் ஈஸ் திஸ்???” மேரியின் குரலில் லேசான சூடு.
“இ..இல்ல அ..அயாம்.. சா.. சாரிங்க. அ.. அது வந்து தாராபுரம் எங்க சொந்த ஊரு. அதான் எக்ஸைட்மெண்ட்ல…” திக்கித் திக்கி வந்து விழுந்தது
வார்த்தைகள்.
“ம்ம்ம்.. இட்ஸ் ஓக்கே. டேக் கேர் ஆஃப் த இன்ஸ்டலேஷன். முடிச்சிட்டு ரிப்போர்ட் அனுப்புங்க. பை” தட்டென்று போனை அறைந்து சாத்தினாள்.
என்ன தான் நமக்கு தொழில்நுட்பங்கள் நிறைய தெரிந்திருந்தாலும், வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயர்ந்திருந்தாலும் அதை பக்கத்திலிருந்து
பார்க்க ஆட்களிலில்லாதது ஒரு கொடுமை. நமது திறனை நாம் அயல் ஆட்களிடம் நிரூபிப்பதில் இருக்கும் பெருமிதத்தை விட நமக்குத் தெரிந்த
நபர்களின் முன் அதை காட்டுவதில் ஒரு அல்ப திருப்தி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா. கடைக்குப் போன என்னைப் பார்த்து அடையாளம்
தெரியாமல் சீட்டில் இருந்து எழுந்த அண்ணாச்சி ‘வாங்க சார். உட்காருங்க சார். டீ குடிக்கறீங்களா சார்’ என்று குழைந்த போது எனக்கு அதே அல்ப திருப்தி ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுப் போனது.
“என்ன அண்ணாச்சி என்னை அடையாளம் தெரியலையா?” கையில் இருந்த டூல்ஸ் பேக்கை அவர் டேபிளின் மேல் வைத்துக் கொண்டே கேட்டேன்.
“யாரு…. அட! நம்ம மணி மவனா நீ. என்னப்பா அளே அடையாளம் தெரியாம மாறிட்டயே. டவுசர போட்டு மூக்குல ஒழுக்கிட்டு வந்து நிப்பா நீ..
இப்ப இஞ்சினியரா..”
அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் கணேசன். கொஞ்சம் நரை முடிகள் வாங்கியிருந்தார். கண்ணில் ஒரு திக்கான கண்ணாடி ஏறியிருந்தது. வழக்கமான அவரது டேபிளுக்கு பதில் புதிதாக ஒரு கம்ப்யூட்டர் டேபிள் இருந்தது. அதன் அருகிலேயே இரண்டு அட்டைப் பெட்டிகள் – மானிட்டரும், சி.பி.யுவும்.
“சரி அண்ணாச்சி.. நான் சீக்கிரம் சிஸ்டத்த இன்ஸ்டால் பண்ணிடறேன்” திரும்பிப் பார்க்காமல் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே கணேசனின்
இடத்திற்குச் சென்றேன்.
என்றுமில்லாத அதிசயமாய் கணேசன் பதட்டமாய் இருந்தார். என்னை முதலில் ஓரிரு வினாடிகள் வெறுமையாய்ப் பார்த்தார். மெதுவாய்
புன்னகைத்தார். அவரது கைகள் அந்த அழுக்கேறிய, கூர்மையான முனைகள் மழுங்கி ஒரு நீள் வட்ட வடிவத்துக்கே வந்து விட்ட – மழுங்கிப் போன
கிளிப்பில் கத்தையாய் சிட்டைகளை லூசாக பற்றியிருந்த – கார்ட் போர்டு அட்டையை இறுக்கமாக பிடித்திருந்தது. அதில் லேசாய் நடுக்கம் இருந்தது. அது முதுமை காரணமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
“என்னண்ணே… சவுக்கியமா இருக்கீங்களா”
அந்த அட்டையை டேபிளின் மேல் வைத்தார். எழுந்து நின்று அவரை விட உயரமாய் வளர்ந்து விட்ட என் தோள்களை இரு கைகளாலும்
பற்றினார். எனது இரு புஜங்களின் வழியே அவர் உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டே வந்து எனது இரு மணிக்கட்டுகளையும் பற்றினார்.
இடது கையில் புதிதாய் நான் வாங்கிக் கட்டியிருந்த டைட்டன் வாட்சை பார்த்தார். ஒரு பெருமிதமான புன்னகை அவரது முகத்தில் எழுந்தது.
“நல்லா இருக்கேன் தம்பி.. ” ஏதோ கேட்க வேண்டும் போல் அவரது முகம் என்னை எதிர்பார்த்தது.
“என்னண்ணே..” என்றேன் அவரது பழுப்பேறிய கண்களுக்குள் பார்த்துக் கொண்டே.
“அ..அது.. வ..வந்து…”
“சொல்லுங்கண்ணே”
“இந்தக் கம்பியூட்டரை எத்தனை நாளிலே படிக்க முடியும் தம்பி” அவரது கண்கள் என் முகத்திலிருந்து விலகி உள்ளே அண்ணாச்சியை ஒரு முறை
பார்த்தது.
“ஆப்பரேட் பண்ண எப்படியும் அடிப்படை தெரிஞ்சிருக்கணும்ணே. எப்படியும் ஆறு மாசமோ இல்லை ஒரு வருசமோ ஆகலாம் – ஆர்வத்தைப்
பொருத்து” என்றேன். எனக்கு அந்தக் கேள்வியின் பொருள் புரியவில்லை.
அவர் முகத்தில் ஒரு ஆயாசம் தோன்றியது. எனது மணிக்கட்டுகளை விடுவித்தவர். அவர் சீட்டில் அமர்ந்தார். அந்த சிட்டை பேடை ஏக்கத்துடன்
பற்றிக் கொண்டார்.
அன்று நான் அந்த சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்யும் போது கணேசன் கம்ப்யூட்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். இன்ஸ்டலேசன் முடிந்து
டேலி சாப்ட்வேரை திறந்து எப்படி கூட்டல் கழித்தல் கணக்கு போட வேண்டும், வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது என்பது எப்படி என்பதை
நான் விளக்கிக் கொண்டிருந்த போது அவரது கண்கள் ஒரு பசியெடுத்த புலியின் கூண்டுக்குள் தவறி விழுந்து விட்ட மானின் கண்களைப் போல
அலைபாய்ந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து கிளம்பும் போது கணேசன் என் தோளைப் பிடித்து இருத்தினார். அவரது மேல் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சில ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி எனது கையில் திணித்தார்.
“என்ன.. கணேசா.. இன்னும் ரெண்டு நாள்ல அந்த கம்பியூட்டர கத்துகிடுவியாலே… அந்த அட்டைய தூக்கி தூர போட்டுட்டு இனிம கம்பியூட்டர்ல வேல பாக்க கத்துக்கல” அண்ணாச்சி உற்சாகமாய் கணேசனிடம் சொல்லிக் கொன்டிருந்த போது நான் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினேன். பஸ்ஸில் தாராபுரத்திலிருந்து மூலனூர் வரும் வரையில் எனக்கு கணேசனின் கண்களே நினைவிலாடியது. வில்லுப்பாட்டு வித்வானை பாப் சாங் பாட நிர்பந்திப்பது போல் இருந்து அந்த சூழ்நிலை.
அதற்குப் பின் எனது பணிச்சூழல் என்னை இந்தியாவின் பரப்பெங்கும் மேற்கும்-கிழக்குமாய், வடக்கும்-தெற்குமாய் அலைக்கழித்தது. எத்தனையோ
ஊர்கள், எத்தனையோ கணேசன்கள், எத்தனையோ அனுபவங்கள்… போன மாதம் இரண்டு வார லீவில் மீண்டும் ஊருக்குப் போயிருந்தேன். எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் எனக்கு தாராபுரத்தின் நினைவும், கணேசனின் நினைவும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது.
அவரைப் போய் சந்திக்கலாம் என்று கிளம்பினேன்.
இந்த ஏழு வருடத்தில் தாராபுரம் பெரிதாக மாறவேயில்லை. சாலைகள் மட்டும் கொஞ்சம் அகலமாகியிருந்தது. பால்பாண்டி டிரேடர்ஸ் கூட அதிகம் மாறவில்லை. கல்லாவில் அண்ணாச்சியின் சாடையில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே அண்ணாச்சியின் புகைப்படம்
ஒன்று மாலையோடு தொங்கிக் கொண்டிருந்தது. எனது பார்வை கணேசனின் இடத்திற்குச் சென்றது – அங்கே அவர் இல்லை. அந்த டேபிளில் – நான் இன்ஸ்டால் செய்த சிஸ்டத்தின் முன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் கணேசனிடம் நான் முன்பு எப்போதும் பார்க்கும் வாஞ்சை இல்லை. டென்ஷனாக இருந்தான். டேலியில் ஏதோ கோளாரு போல அந்த மங்கிய ஸ்க்ரீனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்கள் கூட்டம் முன்பைப் போல இல்லை. முன்பு இருந்ததை விட பாதி தான் இருந்தது.
“என்ன சார் வேணும்?” கல்லாவில் இருந்த இளைஞன் கேட்டான்.
“இல்ல.. இங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… கணேசன்னு பேரு.. அவரைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…” சுற்றிலும் பார்வையை ஓட்டிக்
கொண்டே சொன்னேன்.
“ஓ… அவரா.. இருக்காரே.. உள்ள பாக்கிங் செக்சனில் இருக்கார். வரச் சொல்லவா..”
“இல்லங்க. வேணாம். நானே போய் பார்த்துக்கிறேன்”
கணேசன் கிழண்டு போயிருந்தார். நிறைய மெலிந்திருந்தார். கண்ணாடி பழுப்பேறியிருந்தது. அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி நடுங்கும் கைகளால் ஏதோ பருப்பை பொட்டலமாக மடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விரல்களின் இடுக்கில் அந்த பொட்டலம் விழ முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் நேரே அவர் முன் போய் நின்றேன். ஒரு சின்ன போராட்டத்துக்குப் பின் சனல் கயிரால் ஒருவழியாக பொட்டலத்தைக் கட்டி முடித்தவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
“யேய்.. சங்கரு….என்னப்பா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே” அவரது கை அனிச்சையாக அவரது சட்டை பாக்கெட்டுக்குச் சென்றது.
காலியான பாக்கெட்டைத் தடவி விட்டு ஏமாற்றமாய் கீழிறங்கியது.
“அது… அண்ணாச்சி மவன் கொஞ்சம் வெறைப்பான ஆளு. மிட்டாய்க்கெல்லாம் சம்பளத்துல பிடிச்சிக்கிறாரு..” வரட்சியாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.
“பரவாயில்லண்ணே… வாங்க டீ சாப்பிடுவோமா”
“சரி வா..”
வெளியேறும் போது அவர் அந்த பய்யனைத் திரும்பிப் பார்த்தார் – அவன் இன்னும் டேலியோடு போராடிக் கொண்டிருந்தான். நமுட்டுச் சிரிப்போடு
என்னைப் பார்த்தார். அதில் ஏதோவொரு செய்தி இருந்தது – எனக்குப் புரியவில்லை. எனக்கு மனம் கணத்துக் கிடந்தது. ஒரு காலத்தில் இதே கடையில் கணக்கராய் இருந்தவர்.. இன்று இதே கடையில் தொழில் கற்றுக் கொள்ள வந்த சின்னப் பயல்களோடு சேர்ந்து பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கிறார். கால மாற்றம் தான் என்றாலும்.. நானும் கூட அவரின் இந்த நிலைக்கு காரணமாய் இருந்துள்ளேன் என்பது எனக்கு உறுத்தலாய் இருந்தது. எத்தனை கணேசன்களின் கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் நான் உலைவைத்திருப்பேனோ என்ற கவலை என்னை வாட்டியது. நாங்கள் சாலையைக் கடந்து எதிரே கரூர் வைசியா பேங்கை ஒட்டி இருந்த பாய் கடைக்குப் போனோம்.
“என்னண்ணே இந்த வயசுக்கப்புறம் உங்கள பொட்டலம் மடிக்க விட்டுட்டாங்களே” எனக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.
“அதனால என்னப்பா… அதுவும் ஒரு வேலை தானே” அவர் டீயை ஊதிக் குடிப்பதில் மும்முரமாய் இருந்தார்.
“இல்லண்ணே.. இதே கடைல நீங்க மதிப்பா சட்ட மடிப்புக் கலையாம கணக்கெழுதிட்டு இருந்தீங்க.. இப்ப அதே கடைல சின்னப் பசங்களோட
நின்னு வேல பாக்கீங்களே.. அதுக்கு நானும் ஏதோவொரு வகையில காரணமா போனது கஸ்டமா இருக்குண்ணே”
டீ தம்ளரை வைத்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்தார். லேசாக சிரித்தார். அது என்னை சீண்டுவது போலிருந்தது.
“என்னண்ணே.. இப்படிச் சிரிக்கிறீங்க”
“பின்ன சிரிக்காம என்னப்பா… ஏதோ பழைய சிவாஜி படத்துல வரும் ரங்காராவ் நிலமையில நான் இருக்கதா நினைச்சியா நீ.. அது என்ன
சொல்லுவாங்க… ஆங்! வாழ்ந்து கெட்ட மாதிரி. வாழ்ந்தா தானே கெட முடியும். ம்ம்ம்…. அன்னிக்கு நீ இந்த கம்பியூட்டர போட்டுக் குடுத்துட்டு
போன நாள்ல எனக்கு ரொம்ப கஸ்டமாத் தான் இருந்தது. எத்தனையோ வருசமா இதே கடைல கணக்கெழுதிருக்கேன்… நான் படிச்ச படிப்பு வேற.. நான் போட்ட கணக்கு வேற… இது புதுசா வந்தது. எனக்கும் பயம் தான். ரெண்டு நா டயம் குடுத்தாரு அண்ணாச்சி. எனக்கு ஒரு எழவும் புரியலை. புரிஞ்சிக்கிடற வயசும் தாண்டியாச்சி. கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி பொட்டலம் மடிக்க போட்டாரு – சம்பளத்தயும் அதுக்கு தக்க கம்மி பண்ணிட்டாரு. எத்தனையோ வருசம் கூடவே வேலை பாத்த கடைப் பய்யன்களே ஒருத்தனும் ஏன்னு கேக்க வரல…”
டீ தம்ளரை கையிலெடுத்தவர் ‘சர்க்’ என்று உறிஞ்சி அதன் சுவையைக் கண் மூடி இரசித்தார். பின் தொடர்ந்தார்..
“கூட நின்னு ஏன்னு நியாயம் கேக்க நாதியில்லைங்கறது தான் எதார்த்தம். இந்த வயசுக்கப்புறம் என்னாலும் தனியா நின்று ரோசம் காட்ட முடியலை. வச்சிக் காப்பாத்த புள்ளைங்களும் இல்லை. ஏத்துக்கிட்டேன். வேற வழியில்லாம ஏத்துக்கிட்டேன். ஆனா.. எனக்கு இன்னிக்கு நடந்தது தான் எனக்குப் பதிலா புதுசா வந்திருக்கவனுக்கும் நடக்கும். சிட்டைல கணக்கெழுதிட்டு இருந்த என்னைக் கம்பியூட்டர் வந்து தூக்கி வீசிச்சி. கம்பியூட்டர்ல வேல பாக்கவன வேற எதுனா அதை விட பெருசா ஒன்னு வந்து தூக்கி வீசும். எனக்கு இந்தப் பிள்ளைய பாத்தா பாவமா இருக்கும். நான் நின்ன மேனிக்கு கீழ விழுந்தவன் – லேசாத் தான் அடிபட்டுச்சி. ஆனா.. ஒசரத்துல நின்னு கீழ விழுந்தா? அன்னிக்கும் ஏன்னு கேக்க நாதியத்து தான் நிக்கனும். நாமெல்லாம் கூலிக்காரங்க சங்கரு… நான் சின்னக் கூலிக்காரன்.. நீ பெரிய கூலிக்காரன். கூலிக்குத் தக்க அடி தான் விழும் தம்பி”
“நம்ம வீடுகள்ல பழைய பொருளைப் புது பொருள் வந்து மாத்தி வைக்கும். அதுக்கெல்லாம் உயிர் இல்லை தம்பி. ஆனா நமக்கு உயிர் இருக்கு.
குடும்பம் இருக்கு. நாம் கூட்டுக்குத் திரும்பினா வாயைப் பிளந்துகிட்டு குஞ்சுகள் காத்துக் கிடக்கும். நாமும் பழசாவோம்.. அறிவு பழசாகும்.. புதுசா
ஏதோவொன்னு வந்து நிக்கும். ஆனா.. புதுசை நாம் கத்துக்கற அளவுக்கு முதலாளிங்க யாரும் நமக்கு நேரம் தர்றதில்ல.. வேலை செய்யற நாள்ல கசக்கி பிழிஞ்சு நம்மோட சாரெல்லாத்தையும் உறிஞ்சிட்டு சக்கையா துப்பிடறாங்க. நாமெல்லாம் தனித்தனியா நிக்கறோம். தனித்தனியா
தோக்கிறோம். தனித்தனியா விழுந்திடறோம். பக்கத்தில் நின்னவன் விழும் போது நாமும் விழப்போறம் – நம்மையும் தள்ளி விடப்போறான்னு
புரிஞ்சிக்கிடறதில்லை.. தனித்தனியான மாடுகளை நாளுக்கொன்னா நரி மெஞ்ச மாதிரி ஆகுது நம்ம நிலமை” பேசி முடித்து விட்டு மிச்சமிருந்த
டீயை உறிஞ்சத் தொடங்கினார்.
எனக்கு பேச்சே எழவில்லை. அந்தக் கணத்தில் – இந்த வாழ்க்கை.. இந்த வசதி.. இந்த நாளின் எனது மேன்மை.. நானே சுயமாய் உருவாக்கியது என்று நினைத்த ஒரு அழகிய மாளிகை.. எல்லாம் என் கண்முன்னே நழுவிச் செல்வது போல் ஒரு காட்சி தோன்றியது. ஐயோ… நான் – நான் எனது இளமையெல்லாம் தொலைந்து.. ஒரு நடுவயதினனாய்.. தனியனாய் நிற்கிறேன். என் காலடியில் பூமி நழுவிச் செல்கிறது. நான் கிழண்டு
போய் விட்டேன். நான் இனி இளைமை முறுக்குத் தெறிக்கும் பந்தையக் குதிரையல்ல. மட்டக் குதிரை. என்னால் இனி பந்தையத்தில் ஓட முடியாது. யாருக்கும் நான் தேவையில்லை.. என்னைச் சுற்றிலும் புதிதாய்ச் சில குதிரைகள்.. அவை என்னைப் பார்த்து சிரிக்கிறது. உறுதியான பல் வரிசை தெரிய சிரிக்கிறது.. அது – அது.. இல்லை.. அது குதிரைகளல்ல.. அங்கே கம்ப்யூட்டரில் டேலியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞன் போல் தெரிகிறது. இல்லை அது குதிரைகள் தான்.. இல்லை.. அது அந்தப் பையன் தான். அவன் தோள் மேல் அண்ணாச்சி அமர்ந்திருந்தார். அண்ணாச்சிகள் அமர்ந்திருந்தனர். கையில் ஏதோ உறுத்தியது.. அது.. இன்னொரு கை. அது யாருடைய கையோ.. திரும்பிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே இன்னொரு மட்டக் குதிரை. அதைத் தொடர்ந்து இன்னொன்று. அதைத் தொடர்ந்து இன்னொன்று. நாங்கள் ஓடினோம். அண்ணாச்சியை நோக்கி ஓடினோம்… அண்ணாச்சிகளை நோக்கி ஓடினோம்…
“தம்பி.. தம்பி..” கணேசன் என் தோளை உலுக்கிக் கொண்டிருந்தார். “என்னப்பா டீ கிளாஸைக் கீழ போட்டுட்டியே. ஒடம்பு சரியில்லையா?”
“இல்லை.. ஒன்னுமில்லை” முகம் முழுக்க வேர்த்திருந்தது. “சரி போலாம்”
“ம்ம்.. இந்தா.. இதை வச்சிக்க” அவர் எனது வலது கை உள்ளங்கையில் சில ஆரஞ்சு மிட்டாய்களை வைத்தார். என்னைப் பார்த்து திருப்தியாய் சிரித்தார். அது என்னை உணர வைத்த திருப்தி. திரும்பி கடையை நோக்கி நடந்தார்.
மஞ்சள் நிற பூதம் – 2ம் பகுதி..!
சமீபத்தில் ஒரு அவசர வேலையாக கோவை செல்ல வேண்டியிருந்தது. அப்போது நானும் எனது நன்பனும் காந்திபார்க் அருகே ஒரு பேக்கரியில்
தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். பேக்கரியில் சப்ளையராக ஒரு அசாமிய இளைஞன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். வங்க
மொழி பேசும் நபர்கள் பலரும் கூட பேக்கரிக்கு சாதாரணமாக வந்து சென்று கொண்டிருந்தனர். பின்னர் கவனித்ததில் தான் தெரிந்தது ஊரில் பல தொழில்களிலும் பல மட்டத்திலும் வடமாநிலங்கலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நிறைய பேர் வியாபித்திருக்கிறார்கள் என்பது.
கோவை விரைவில் ஒரு பல்கலாச்சார நகராக மாறிவிடும். இருக்கும் கலாச்சாரம் ஒழிந்து போவது கூட நல்லது தான். என் நன்பன் ஒரு சிறு
நகைப் பட்டரை வைத்திருப்பவன். அவன் காந்திபார்க்கின் பின்னேயிருக்கும் ஒரு சந்துக்குள் தனது பட்டரைக்கு அழைத்துச் சென்றான். அங்கும் பெரும்பாலும் வங்காளிகளே. கடந்த ஒரு பத்து ஆண்டுகளில் தான் இந்த இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. அவனோடு பேசியதிலிருந்தும் பின்னர் அதே துறையில் இருக்கும் வேறு சிலரோடு பேசியதிலிருந்து புதிதாக பல விஷயங்கள் தெரியவந்தது.
அதையெல்லாம் பற்றி காணும் முன் சில தகவல்கள் –
– கோவையில் மட்டும் ஆ·ப் சீஸனில் நாளொன்றுக்கு நூற்றம்பது கிலோ தங்க ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும்
வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. அட்சய திரிதியை, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகை சீஸனில் என்ன
கணக்கு என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் – ஆனால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்வது என்னவென்றால், ஒழுங்காக பதியப்பட்ட கணக்கு எதுவும் கிடையாது என்பது தான்.
– அந்த நகரத்தில் வங்கத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளிகள் மட்டுமே சுமார் நாற்பதாயிரம் பேருக்கும் மேல் இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள் இது அங்கே அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொல்லும் கணக்கு / இதே கோவை நகர பெங்காலி நகைத் தொழிலாளர் சங்கத் தலைவர் 25
ஆயிரம் என்கிறார்). இதுவும் தவிர கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வங்காளிகளுக்குக் குறையாத எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.
– கோவையில் மட்டும் சுமார் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பேர்கள் வரை இத்தொழிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர். இது நகைக்கடை, சேல்ஸ்மென், பட்டரைகள், பேக்டரிகள், டையிங் யூனிட் தொழிலாளிகள், சாக்கடையில் தங்கத் துகள் சலிப்பவர்களையும் உள்ளிட்ட தோராயமான கணக்கு.
– இன்றைய தேதியில் கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் யூனிட்டுகளும், நூற்றுக்குக்கும் அதிகமான பேக்ட்டரிகளும் இருப்பதாக இத்தொழிலில் உள்ள எனது நன்பன் சொல்கிறான். இந்த பேக்டரிகள் சில நேரடியாக ஏற்றுமதியிலும் கூட ஈடுபட்டிருக்கின்றன. ஒரு பேக்டரி என்பது முப்பதிலிருந்து ஐம்பது வரையிலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் – ஒரு யூனிட்டில் சுமார் பத்து தொழிலாளிகள் வரை வேலை செய்வார்கள். ஒரு பேக்டரியில் எல்லாவிதமான நகைகளும் உருவாக்கப்படும். யூனிட் என்பது சின்னச் சின்ன ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் சிறிய பட்டரை.
– 2002ம் ஆண்டு உலக தங்க கவுன்ஸில் வெளியிட்ட அறிக்கையின் படி :- இந்திய தங்க வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 600 கோடி டாலர்கள்,
சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள், ஒரு லட்சம் பட்டரைகளிலிருந்து தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். உலகத்திலிருக்கும் தங்கத்தில் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை இந்தியாவில் இருக்கிறது.
– உலக கோல்டு கவுன்சிலின் மதிப்பீட்டின் படி சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை நாளை முன்னிட்டு விற்கப்பட்ட தங்கத்தின் அளவு மட்டும் 49 டன்கள்; இதில் 60% தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் விற்கப்பட்டுள்ளது. இதில் கேரளத்தில் மட்டும் 40% (அதாவது பத்து டன்கள் – அதாவது பத்தாயிரம் கிலோ!!!) தங்கம் விற்கப்பட்டுள்ளது.
இனி இந்த பிரம்மாண்டமான பளபளக்கும் புள்ளிவிபரங்களுக்குப் பின்னே காலகாலமாய் புழுங்கிச் சாகும் தொழிலாளிகள் நிலை குறித்தும் இத்தொழிலில் கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாய் நிகழ்ந்துவந்த மாற்றங்கள், அதற்குக் காரணமாயிருந்த மறுகாலனியாதிக்க பொருளாதார சூழல் குறித்தும் கொஞ்சம் பார்க்கலாம்.
1991 என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கு இருந்த தேவையை விட, உலகளவில் தங்கத்துக்கு இருந்த தேவையை விட அதிகமாகும். ( ஆதாரம் http://www.gold.org)
இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கியது. ஆசாரிகளின்
வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் அவர்களிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது. கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைகளைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இந்தக் கடைகளும் கூட தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்க பார்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.
இது நகைப் பட்டரைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை அவர்கள் கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் இழந்தனர். நகை மாளிகைகளும் கூட இவர்களிடம் செய்து வாங்குகிறார்கள் என்றாலும் லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்போடு சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின்
வரவால் ஏற்பட்டது.
இந்த இடத்தில் சுதந்திரச் சந்தையின் போதகர்களாக இணையத்தில் செயல்பட்டு வருபவர்கள் இப்படியும் சொல்லலாம் – எந்த தொழிலிலும் நவீன மாற்றம் தவிர்க்கவியலாதது. இன்றைய நிலவரப்படியே நகைத் தொழிலில் நிறைய வேலைவாய்ப்பு உருவாகிவிட்டுள்ளது நீங்கள் தரும் விபரங்களிலேயே கூட உள்ளதே. எனவே தனியார்மயம் சரியானது தான் எனும் வாதத்தை முன்வைக்கலாம்.
மாற்றம் என்பது ஏற்கனவே உள்ள சக்திகள் (resourse) ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதல்ல. அந்த சக்திகளின் நிலை மாற்றமாக இருக்க வேண்டும். இப்போது அறிமுகமான நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் முன்பு இருந்த தொழிலாளிகளை உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்; அவர்கள் அத்தனை நூற்றாண்டுகளாக – பரம்பரை பரம்பரையாக – கற்றுக் கொண்ட உத்திகளோடு இணைந்து முன்னேறியிருக்க வேண்டும் –
மாறாக தனது வரவையே அந்தத் தொழிலாளிகளின் தற்கொலைகள் மூலம் தான் முன்னறிவித்துக் கொண்டது.
தொன்னூறுகளின் இறுதியில் பாரம்பரிய நகைப்பட்டரை தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டார்கள். பலர் வேறு தொழில்களுக்கு விரட்டப்பட்டனர். எஞ்சிய சிலர் தாம் அதுவரை கற்று வைத்திருந்த தொழில்நுட்பங்களை மறந்து கம்பி பட்டரையிலோ பால்ஸ் பட்டரையிலோ குறைகூலிக்கு மாரடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர்.
1997ம் ஆண்டு தங்க இறக்குமதியில் இருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது. இனிமேல் தங்கத்திற்கு என்.ஆர்.ஐ இந்தியர்களையோ கடத்தல்காரர்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை எனும் நிலை உருவானது. தொன்னூறுகளின் இறுதியில் சங்கிலித் தொடர் நகைமாளிகைகள் உருப்பெறத் துவங்கியது. வட்டார அளவில் பிரபலமாயிருந்த டிசைன்கள் தவிர ஒரே கூரையின் கீழ் வெவ்வேறு பிராந்திய டிசைன்களை குவித்து வைக்க வேண்டியது அவசியமானது. ஈரோட்டிலிருக்கும் ஒரு நகை மாளிகையினும் நுழையும் நுகர்வோர் ஒருவனின் கண்முன்னே ஜெய்பூர் டிசைன், மலபார் டிசைன், பெங்காலி டிசைன் என்று அணிவகுக்கிறது.
பொருளாதார பின்புலம், பிற்போக்கு அடித்தளம் இயல்பாகவே இருந்து வந்த சேமிப்புப் பழக்கம் இவைகளின் காரணமாய் இந்தியர்களுக்கு இருக்கும் தங்க மோகம் உலகமயமாக்கல் சூழலில் முதலாளிகளுக்கு மெய்யாகவே ஒரு வாய்ப்பை தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தது.
நாடெங்கும் பரவலாக பரவியது சங்கிலித் தொடர் நகைக் கடைகள். ஜாய் ஆலூக்காஸ், கல்யான் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ் & சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின.
இவர்களுக்கு ஏற்கனவே இருந்த தங்கவெறி போதுமானதாக இல்லை; புதிதாக வெறியுட்ட வேறு விஷயங்கள் தேவைப்பட்டது. ஒரு பத்துப்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகை பரணிலிருந்து தூசு தட்டி
எடுக்கப்பட்டது. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர். போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியையும் துனைக்கழைத்துக் கொண்டனர். பிரபலமான நடிகர்களை ப்ராண்டு அம்பாசிடர்களாக வைத்துக் கொள்வது, நடிகைகளை நடமாடும் நகைக்கடைகளாக விளம்பரங்களில் உலாத்த விடுவது என்று தங்க மோகத்தில் மக்களை மூழ்கடித்தனர்.
பெரும் நகைக்கடைகளில் இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்று பரிந்துரைக்கவும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்று பரிந்துரைக்கவும் ஜோதிட ‘வல்லுனர்களை’ நியமித்து ஏற்கனவே நிலவிவந்த பிற்போக்குத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் தனது லாபவெறிக்கு முதலாளிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஐரோப்பாவில் வளர்ந்து வந்த முதலாளித்துவம் நடப்பிலிருந்து பிற்போக்குத்தனங்களையெல்லாம் உடைத்து நொறுக்கியது – இங்கே முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு பிற்போக்குத்தனங்களே (பார்ப்பனியம்) கூட்டாளி.
இயல்பாகவே மேல் வர்க்கத்தாரின் மேல் பிரமிப்புடன் இருக்கும் உழைக்கும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. இதே சமயத்தில் மற்ற சேவைத் துறைகளிலும் ஐ.டி துறையிலும் ஏற்பட்ட வளர்ச்சியானது நுகர்வையே கலாச்சாரமாகக் கொண்ட புதிய ரக மேல்தட்டு வர்க்கம் ஒன்றை உருவாக்குகிறது. செயற்கையான முறையில் தேவையில் ஏற்படுத்தப்பட்ட மிதமிஞ்சிய வீக்கம் உற்பத்தியிலும் அதேவிதமான மாற்றத்தைக் கோருகிறது.
இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டியது ( ஆதாரம் – http://southasia.oneworld.net/Article/indian-goldsmiths-face-a-doomed-future) இணைப்பில் உள்ள கட்டுரையின் கடைசி பத்தியிலிருந்து – நவீன நகை மாளிகைகள் நடத்திய ஒரு நகைக் கண்காட்சியில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டரைகள் பெரும்
நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போனது. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டரை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜெண்டுகளாக மாற்றம் பெற்றனர்.
மேலும் இயந்திரங்களில் வேலை செய்ய வேறு மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இவர்களுக்கும் சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல – மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும் – மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.
இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத்
தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தாயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.
இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள். அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் ( தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்கானிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.
முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப் பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆப்ரண உருவாக்கத் திரனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற
பட்டறையில் தொழிலாளியாய் வேலைக்குச் செல்கிறார்.
இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும் (தப்பித்தவறி தங்கம் பட்டறை
முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுக்க) தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது.
சீசன் உள்ள அந்த சில நாட்கள் தொழிலாளிகள் தங்கள் உயிரை தங்கத்தோடு சேர்த்து உருக்கியும், தமது சுயமரியாதையை வளைந்து நெளியும் அந்தத் தங்கக்கம்பியைப் போல நெளித்தும் சம்பாதிக்கும் சொற்பப் பணம் தான் எங்கோ ஒரு மேற்கு வங்க கிராமத்தில் மணியார்டருக்காக காத்துக் கிடக்கும்சொந்தங்களின் பசியாற்றப் போகிறது. நகைக்கடை ஷோரூம்களில் கண்ணாடி அலமாரிகளுக்குள் பளபளக்கும் ஒவ்வொரு நகைகளுக்கும் பின்னேயும் கோவையின் இருட்டுச் சந்துகளிலோ ஜெய்பூரின் நெரிசல் மிகுந்த தெருக்களிலோ உள்ள ஏதோ ஒரு பட்டறையின் உள்ளே கண் எரிச்சலோடு புழுங்கிச் சாகும் தொழிலாளியின் உழைப்பு மறைந்து கிடக்கிறது.
சென்ற தீபாவளி சமயத்தில் இதே நன்பனை அவன் பட்டரைக்கு பார்க்கப் போயிருந்த போது வங்கத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளிகளோடு சேர்ந்து இவனும் தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். தூக்கம் வராமல் இருக்க கணமான உணவு எதையும் உட்கொள்ளக் கூடாது – எனவே மூன்ற நாட்களும் டைகர் பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டு தாக்குப்பிடித்து வேலை செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும் – தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.
ஊரே பண்டிகைக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரம்.. பட்டாசுகளும் வாண வேடிக்கைகளுமாக வெளியில் எல்லோரும் குதூகலித்துக் கொண்டிருந்த போது காந்தி பார்க்கின் பின்னே இருந்த குறுகிய சந்துகளில் ஆயிரக்கணக்கானவர்கள் நாட்கணக்கில் தூக்கம் மறந்து தண்ணீர் மறந்து சோற்றை மறந்து உழைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த நகை எங்கோ ஒரு அல்பையின் கழுத்தை அலங்கரிக்குமோ அல்லது ஏதோவொரு முதிர்கண்ணியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை
மாட்டிவிடுமோ தெரியவில்லை ஆனால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அந்த பெயர் தெரியாத தொழிலாளர்களின் உயிரை உருக்கியெடுத்துக் கொண்டிருந்ததை மட்டும் காண முடிந்தது.
ஆம்.. நிறைய வேலைகளை உலகமயமாக்கம் கொண்டுவந்துள்ளது; கூடவே அதேயளவுக்கு ஜோம்பிகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது – உழைக்கும் ஜோம்பிகள்..! இப்படி உழைக்கும் மக்களை நடைபிணங்களாய் மாற்றுவதும், மேல்நடுத்தர வர்க்க மக்களை ஏன் எதற்கு என்றில்லாமல் வாங்கிக் குவிக்கும் நுகர்வு இயந்திரங்களாய் மாற்றுவதும், நடுத்தர வர்க்க மக்களி மேலே பார்த்து ஏங்கி நிற்க வைப்பதுவுமான ஒரு சமூக எதார்த்தமே இந்த மறுகாலனியாதிக்க கால சமூக எதார்த்தம்.
நன்பனை சந்தித்து உரையாடிவிட்டு மனதெல்லாம் பாரமாக சலீவன் வீதியிலிருந்து காந்திபார்க் ரவுண்டானா அருகே உள்ள பேருந்து
நிலையத்துக்கு வந்தால் சி.ஐ.டி.யுவின் (சிபிஎம்) பேனர் ஒன்று வரவேற்றது – அதில் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டு போராடப்போவதாக அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. கீழே அந்த பேணர் உபயதாரராக “லக்ஷ்மி டையிங் வொர்க்ஸ்” என்று
போட்டிருந்தது.
இவர்கள் யாருக்குத் தோழர்கள்? இன்னுமா இந்த உலகம் இவர்களை நம்புகிறது? தொழிலாளர்கள் தமது வர்க்க எதிரிகளை இனம் கண்டு
கொள்வதற்கு முன் இது போன்ற துரோகிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமைக்காக போராட ஸ்பான்ஸர் அவர்களை பிழியும் முதலாளி..! சி.பி.எம்மின் பரிணாம வளர்ச்சி அதை இன்னும் எங்கெங்கெல்லாம் கொண்டு போய் நிறுத்தப்போகிறதோ தெரியவில்லை.
இத்தனை வேலைப் போட்டிகளுக்கிடையிலும் அங்கே உள்ளூர்த் தொழிலாளிகளிடையேயும் வெளிமாநில தொழிலாளிகளிடையேயும் ஒருவிதமான ஒத்திசைவைக் காண முடிந்தது. மொழி, இனம், மதம் கடந்து தமது பாடுகளைத் தோள் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் அவர்கள் அந்தப் பாடுகளுக்குக் காரணமான சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களிலும் இணைவார்களானால் அந்த நாள் பகாசுர சங்கிலித் தொடர் நகைமாளிகை முதலாளிகளின் இறுதி நாளாயும் புதியதொரு சமுதாயத்தின் முதல் நாளாகவும் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாளாக இருக்கும்.
– கார்க்கி
இந்தியா விற்பனைக்கு..!!
சில மாதங்கள் முன்பு பி.டி கத்தரிக்காய்க்கு சந்தையில் விற்க அனுமதி வழங்குவதற்கு எதிராக இங்கே கடும் அமளி ஏற்பட்டது. ஜனநாயக
முற்போக்கு சக்திகளோடும், விஞ்சானிகள், அறிவுத் துறையினர், விவசாயிகள் பொது மக்கள் என்று பரவலாக பி.டி கத்தரிக்காய்க்கு ஒரு கடும் எதிர்ப்பு உருவாகியது. பரவலான எதிர்ப்புக் குரல்களோடு சேர்ந்து கொண்டு என்.ஜி.ஓக்கள் சிலரும் கூட வித விதமான வடிவங்களில்
பி.டி.கத்தரியை எதிர்த்து போராடிய காட்சிகளை நாம் மறந்திருக்க முடியாது.
மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கொஞ்ச நாட்கள் மக்கள் கருத்தறியும் கருத்தரங்கங்கள் என்ற பெயரில் நடத்திய
நாடகங்களையும் தொடர்ந்து பி.டி கத்தரி விஷயத்தில் ‘பொதுக்கருத்து’ ஒன்றை எட்டும் வரையில் அதை அனுமதிக்கப் போவதில்லை என்று
அறிவித்திருந்தார். உடனே ஆங்கில ஊடகங்கள் தொலைக்காட்சிகள் வாயிலாக என்.ஜி.ஓக்கள் தமது வெற்றியை அறிவித்துக் கொண்டாடி விட்டு வேறு வேலையைப் பார்க்கப் போய் விட்டார்கள்.
இதுவரையில் நீங்கள் கேட்டது திரைப்படத்தின் இடைவேளை வரையிலான கதையைத் தான். இடைவேளைக்குப் பின் தான் கதையில் மிக முக்கியமான திடுக்கிடும் திருப்பங்களும் சதிகளும் அரங்கேறுகிறது. கடந்த மாதத்தின் மத்தியில் இந்தியா அமெரிக்காவோடு விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மத்திய அமைச்சரவையின் இரகசிய ஒப்புதலோடு கையெழுத்திட்டிருக்கிறது. இதனடிப்படையில் இந்திய – அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கார்கில், மான்சாண்டோ போன்ற பன்னாட்டு ஏகபோக விதை நிறுவனங்களை பிரதிநிதிகளாக அமர்த்தியிருக்கிறது.
மேலும் அமெரிக்காவோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டு விவசாயத்தில் அன்னிய நேரடி தலையீட்டை அனுமதிப்பதற்கும் ஓசையில்லாமல் அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் நேரடியாக நமது விளைநிலங்களின் மேல் கைவைக்க முடியும். போதிய சட்ட அறிவு இல்லாத ஏழைவிவசாயிகளிடம் நேரடியாக ஏமாற்று ஒப்பந்தங்களைப் போட்டு நல்ல செழிப்பான விளைநிலங்களில் மரபணு மாற்ற விதைகளையும் வீரிய சக்தி கொண்ட உரங்களையும் கொட்டி விஷமாக்கப் போகிறார்கள்.
மேலும் ஏற்கனவே இருந்த தேசிய உயிரிதொழில் நுட்ப ஒழுங்காற்றுச் சட்டத்தில் ( National Biotechnology Regulatory Authority) திருத்தங்கள்
செய்து, உயிரிதொழி நுட்ப ஒழுங்காற்று சட்டம் எனும் பெயரில் இந்த பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற முயற்சிகள் நடந்து
வருகிறது.
இந்தச் சட்டம் உண்மையில் எவ்வகையிலும் ‘ஒழுங்காற்றப்’ போவதில்லை. இது உயிரிதொழில் நுட்பத்தில் உருவான பொருட்களை சந்தைப்படுத்துபவர்களையும் ஆராய்ச்சியையும் ‘ஒழுங்குபடுத்துவது’ போல ஒரு பாவ்லா காட்டுகிறது. அதாவது மரபணு மாற்றப் பயிர்களை பரிசோதிப்பதில் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது – ஆனால் அதற்காக அது ஏகப்பட்ட ஓட்டைகளுடனும், விதிகள் மீறப்பட்டதை சட்டரீதியாக நிரூபிப்பது கிட்டத்தட்ட இயலாத ஒன்றாக இருக்கும்படியும் சிக்கலான ஒரு நடைமுறையை முன்வைக்கிறது.
மறுபுறம், மிகக் கச்சிதமாக பொதுமக்களைக் கவ்வுகிறது. அந்தச் சட்டத்தின் 13(63)ம் பிரிவின் படி, மரபணு மாற்ற தொழில்நுட்பத்தை ஒருவர் எதிர்த்து பேச வேண்டும் என்றாலே தகுந்த ‘அறிவியல்’ ஆதாரத்தை கொண்டிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் ஆறு மாதத்திலிருந்து ஒருவருடம் வரைக்கும் சிறை தண்டனையோ அல்லது இரண்டு இலட்சம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படும். மற்றொரு பிரிவின் படி, மாநில அரசாங்கம் மரபணு தொழில்நுட்பம் தொடர்பாக கொண்டு வரும் எந்தவிதமான சட்டத்தையும் மத்திய அரசின் இந்தச் சட்டம் அமுக்கிவிடும். இதன் 27(1) பிரிவின் படி தகவல் அறியும் உரிமைச் சட்டம் கூட மரபணு மாற்றப் பயிர்கள் விஷயத்தில் செல்லுபடியாகாது.
இப்போது ஜெயராம் ரமேஷ் பின்வாங்கிய சூழலையும் அந்தப் பின்வாங்களையும் நினைவுபடுத்திப் பார்க்கலாம். மக்களிடையேயும், விஞ்ஞான அறிஞர்கள் மட்டத்திலும், விவசாயிகள் மத்தியிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு மற்றும் சில மாநில அரசுகள் மரபணு மாற்ற கத்தரிக்காயை தடை செய்யும் அரசாணை வெளியிட்டிருந்த சூழலில் தான் மத்திய அரசு பின்வாங்கியது. இப்போது போடப்படவிருக்கும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க எத்தனிக்கிறார்கள்.
நேரடியாக பன்னாட்டு நிறுவனங்கள் பிடியில் விவசாய நிலங்களை ஒப்படைக்க அமெரிக்காவோடு ஒப்பந்தம் – அவர்கள் விளைவிக்கும் மரபணு மாற்ற பயிர்களை சந்தைப்படுத்தும் போது எதிர்ப்புகள் உருவானால் அதை அடக்கி ஒடுக்க ஒரு சட்டம். சுதந்திரச் சந்தையைப் பற்றி வாய்கிழிய பேசும் ஆங்கில ஊடகங்கள் இந்த சுதந்திரச் சந்தையில் மக்களுக்கு இருக்கும் சுதந்திரங்கள் பறிக்கப்படுவதைப் பற்றி வாய் திறக்க மறுக்கின்றன. நாளைக்கு பி.டி காய்கறிகளையும் அரிசியையும் வாங்க மறுப்பீர்களானால் உங்கள் மேல் கூட இந்தச் சட்டம் பாயும். நீங்கள் எதைத் தின்ன வேண்டும் என்பதைக் கூட தீர்மானிக்க விடாத சுதந்திரம் தான் தனியார்மய தாசர்கள் பேசும் சுதந்திரச் சந்தை.
இது முதலாளிகளுக்கான – அதுவும் அமெரிக்க பன்னாட்டு கம்பெனி முதலாளிகளுக்கான – சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்டம். மக்கள் மேல் மரபணு மாற்றப் பயிர்களை தினிக்க பின்வாசல் வழியாய் நுழையப்போகும் கருப்புச் சட்டம். நேற்றைய செய்திகளில் குஜராத்தில் பி.டி பருத்தியில் அதன் விஷத்தையும் முறியடித்து தாக்கும் காய்ப்புழுக்கள் தோன்றி பரவுகிறது எனும் செய்தி படத்துடன் வெளியாகியிருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருமானால், இப்படிச் செய்தி வெளியிடுவதும், அதை நீங்கள் வாசித்து இன்னொருவரிடம் சொல்லுவதையும் கூட குற்றமாக்கி
தண்டிக்க முடியும்.
அவுரிச் செடி பயிரட மறுத்த விவசாயிகளை அன்றைக்கு பிரிடிஷ் காலனிய போலீசு அடித்து உதைத்து கட்டாயப்படுத்தியது. இன்றைக்கு மரபணு மாற்றப் பயிர்களை பயிரிடவும் – அதை சந்தையில் நீங்கள் வாங்கியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் சட்டமியற்றப்பட்டிருக்கிறது. அது காலனிய யுகம் என்றால் இது மறுகாலனிய யுகம். முதலில் பி.டி கத்தரியை அனுமதிக்கப் போவதாகச் சொல்லி ஒரு முன்னோட்டம் பார்த்து விட்டு; அதற்கு எந்த விதமான எதிர்ப்பு எந்த வகையிலெல்லாம் வருகிறது என்று ஆழம் பார்த்து விட்டு – இப்போது எதிர்ப்புகளை முற்றிலும் ஒடுக்க
பக்காவான சட்டங்களை இயற்றி நேரடியாக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்குதல் தொடுத்திருக்கிறது ஆளும் கும்பல்.
மக்கள் எதிர்ப்புகளை மக்களோடு மக்களாக ஊடுருவி அந்த எதிர்ப்புப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திச் சென்று சரியான தருணத்தில் கைகழுவி மக்களின் முதுகில் குத்தும் துரோகத்தை அன்றைக்கு காலனிய காலகட்டத்தில் காந்தியின் தலைமையில் இருந்த காங்கிரசு செய்தது என்றால் – இன்றைக்கு அதே வேளையை என்.ஜி.ஓக்கள் செய்கிறார்கள். இன்றைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரசு மேஸ்திரி வேலை பார்க்கிறது. பாத்திரங்கள் மட்டும் தான் மாறியிருக்கிறது – கதை அப்படியே தான் தொடர்கிறது.
பி.டி கத்தரியை எதிர்ப்பது போல் எதிர்த்து விட்டு – மத்திய அரசு தற்காலிகமாய் தள்ளிவைக்கிறோம் என்று சொன்னதையே வெற்றியாக அறிவித்து விட்டு இப்போது அரசு மீண்டும் கருப்புச் சட்டங்களின் மூலம் மரபணு தொழில்நுட்பத்தை பின்வாசல் வழியாக அனுமதித்திருக்கும் நிலையில் இரண்டு மாதங்கள் முன்பு வரையில் பிலிம் காட்டிக் கொண்டிருந்த என்.ஜி.ஓக்கள் இப்போது தலைமறைவாகி விட்டார்கள்.
இது உழைக்கும் மக்களும் விவசாயிகளும் தங்கள் எதிரிகளையும் துரோகிகளையும் அடையாளம் கண்டுணர்ந்து கொள்ள வேண்டிய தருணம். தமக்குள் ஒன்றுபட்டு இந்த அமெரிக்கதாசர்களைத் தோற்கடித்து தூக்கியெறியாத வரை விடிவுகாலம் கிடையாது. நாட்டின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியிருக்கும் இந்த நேரத்தில் மெய்யான நாட்டுப்பற்று கொண்டவர்கள் ஒன்றுபட்டு போராடி மக்கள் எதிரிகளையும் துரோகிகளையும் முறியடிக்க முன்வர வேண்டும்.
பீகாரின் 11% வளர்ச்சி: உண்மை என்ன?
முதலாளித்துவ ஊடகங்களும் ஆளும் வர்க்கமும் கூத்தாடுகின்றனர். பீகாரின் 11% ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் தான் இவர்களை இப்படி துள்ள வைத்துள்ளது. டைம்ஸ் ஆப் இண்டியா ஏட்டினால் தனது சந்தோசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இதற்காகவே ஒரு சிறப்பு வெளியீடு கொண்டு வந்துள்ளது. சென்றவருடம் பீகார் துனை முதல்வர் சுசீல் குமார் 16% வளர்ச்சி விகிதத்தை பீகார் எட்டியுள்ளது என்று சொன்னபோதாவது சில பொருளாதார அறிஞர்கள் அதில் இருந்த பொய்களை அம்பலப்படுத்தினர். ஆனால் இந்த முறை முதலாளித்துவ ஊடகங்களின் வெறிக்கூச்சல் எல்லாவற்றையும் அமுக்கி விட்டது. இனிமேல் இந்த ‘புள்ளிவிபரத்தை’ அம்பலப்படுத்தும் விரிவான ஆய்வரிக்கைகள் வெளியாகலாம்; அதற்கு முன் முதலாளித்துவ ஏடுகளில் வெளியான செய்திகளினூடேயே கவனித்த சில முரண்பாடுகள் மட்டும் இங்கே.
தொழிற்துறை வளர்ச்சி இந்த 11 சதவீதத்தில் எந்தவித பங்களிப்பும் செலுத்தாத நிலையில் சேவைத் துறையும் விவசாயத்துறையுமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. அதே கட்டுரையில், மூன்றாண்டுகள் வெள்ளமும் தொடர்ந்த வரட்சியையும் கடந்தே இந்த வளர்ச்சி வீதம் எட்டப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இது உண்மைதானா?
எப்படி இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளனர்?
அதற்கான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ முறையில் இதற்கு ஒரு எளிமையான சூத்திரம் சொல்கிறார்கள் (கீன்ஸுக்கு பின் வரும் முதலாளித்துவவாதிகள்). அது, மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + ( ஏற்றுமதி – இறக்குமதி ). இதன்படி மொ.உ.உ என்பது நுகர்வு, முதலீடு, அரசுசெலவினங்கள் இவற்றோடு ஏற்றுமதியை (அதிலிருந்து இறக்குமதி மதிப்பை கழித்துவிட்டு) கூட்டினால் வரும் சதவீதமாகும். தொழில்துறை வளர்ச்சி பீகாரில் இல்லை. மூன்றாண்டுகளாக வரட்சி, பஞ்சம் தொடர்ந்து வெள்ளம் என்பதால் விவசாயத்துறையின் பங்களிப்பு என்பதும் குறைவாகத்தானிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போது இந்த 11% விகிதத்திற்கு மிக அதிகளவில் பங்களித்திருப்பது தனிநபர் நுகர்வு என்பது தெளிவாகிறது. டைம்ஸ் செய்தியின் படியே பீகாரில் ஆட்டொமொபைல் விற்பனை 2009ல் 45% அதிகரித்திருக்கிறது.
அடுத்து, பீகாரின் சராசரி தனிநபர் நுகர்வும் சராசரி தனிநபர் வருமானமும் தேசிய சராசரியை விட படுபாதாளத்தில் இருக்கும் போது, மேலும் அது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து சரிந்து வரும் நேரத்தில் மாநிலத்தின் நுகர்வு சார்ந்து தூண்டப்பட்டுள்ள வளர்ச்சி 11 சதவீதம் என்பதன் அர்த்தம், சமீப காலத்தில் பணக்காரர்கள் செலவிடும் தொகை கூடியிருக்கிறது என்பது தான். இது அம்மாநிலத்தில் மோட்டார் வாகனங்கள், கார்களின் விற்பனை 45% அதிகரித்திருப்பதிலிருந்து புலனாகிறது. மேலும் முன்பைப் போல் அல்லாமல் இப்போது போலீசுத் துறை ஆட்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் திருடர்கள், கடத்தல்காரர்கள் பெரும்பாலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நடவடிக்கைகள், மேட்டுக்குடியினரை அதிகம் செலவழிக்கவும் தங்கள் செல்வத்தை டாம்பீகமாக காட்டிக் கொள்ளவும் (show off) துணிவைக் கொடுத்திருக்கிறது.
இன்னொருபுறம், பெரும் தரகு முதலாளிகள் குறிப்பாக சர்க்கரை ஆலைகளில் மாத்திரம் நாலாயிரம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். மாநில அரசு இம்முதலாளிகள் தமது சரக்குகளை சுலபமாக எடுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளில் செலவு செய்திருக்கிறது. இப்படி தனியார் தரகு முதலாளிகளின் முதலீடும், அரசு அவர்களின் நலனுக்காகச் செய்துள்ள முதலீடும், ஒரு சிறு மேட்டுக்குடியினரின் ஆடம்பர நுகர்வும் தான் இந்த 11% வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகள்.
இதையே சிறந்த ஆட்சி (good governance) என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு பத்து ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் பெருவாரியாக இருக்கும் ஒரு மாநிலத்தில், ஒரு சின்ன கும்பலின் ஆடம்பரங்களும் கேளிக்கைகளும் கூடியிருப்பதையே முன்னேற்றம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை வக்கிர புத்தியும் திமிரும் இருக்க வேண்டும்? முதலாளித்துவ ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டும் எந்தவொரு புள்ளிவிபரங்களுக்குள்ளும் புகுந்து நோண்டிப் பார்த்தால் இப்படியான புளுகுகளும் முரண்பாடுகளும் தான் மண்டிக்கிடக்கிறது.