ஈரல்..!
“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு
“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.
ரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.
ரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின் கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.
சரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.
“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள இந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்” கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.
ரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.
“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”
நின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.
குமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.
“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்?” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.
“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”
“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்
“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”
“சரிடா.. நான் போறேன்”
ரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.
ஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.
“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”
அந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது. அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.
“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா? அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு?” அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.
அன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.
மிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் மாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி. அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.
ஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.
மாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.
பொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.
ரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.
___________________________________________________________________________________________
க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்
“டேய் பய்யா, ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே?” திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.
“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.
பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா? நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.
அங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.
வீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.
ரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
பூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”
வேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.
“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.
ரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.
பூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.
வேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்
__________________________________________________________________________________________
இரவு.
சிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.
வேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
சின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.
வேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர் அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –
“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே வேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”
சின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.
சண்முகத்தின் கதை..!
“நாயைக் கழுவி நடு வீட்டில வச்சாலும் அது நரகலைத் தான் தேடும்னு சொல்றது சரியாப் போச்சே” சரோஜா கோபாவேசத்தில் கத்தினாள்.
“ஏண்டி உன் ஜாதி என்ன அவன் ஜாதி என்ன. அவனோட போயி… எப்படிடீ.. ச்சீய். சொல்லவே நாக் கூசுது” சரோஜாவின் கோப இலக்கான சுசி பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள்.
“என்னாங்க.. இவ இனிமே நமக்கு வேணாங்க. தொலைச்சி தல முழுகிடலாம். கொண்டு போய் எங்கியாவது விட்டிருங்க. இல்லன்னா விஷம் வச்சிக் கொன்னுடலாம். என்னாங்க.. ஒங்களத்தான். நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன்.. நீங்க பேப்பர படிச்சிட்டு இருக்கீங்க”
“சரோ.. இப்ப என்ன ஊருல நாட்டுல நடக்காதது நடந்து போச்சி. வேணும்னா நான் டாக்டர் கிட்டே கூட்டிப் போய் அபார்ஷன் எதுனா பண்ண முடியுமான்னு பாக்கறேன். அதுக்கு ஏன் கொல்லனும்னு எல்லாம் யோசிக்கறே” சண்முகத்திற்கு தர்ம சங்கடமாய் இருந்தது.
“முடியவே முடியாது. என் மானமே போச்சி. இனிமே பக்கத்து வீட்டுக்காரி என்ன எப்படியெல்லாம் சாடை பேசப் போறான்னு உங்களுக்குப் புரியாது. இந்த அவமானத்துக்கு இவள கொன்னுடலாம். போங்க போயி எதுனா விஷம் வாங்கிட்டு வாங்க” சரோஜா யாரும் சொல்லிக் கேட்கும் நிலையைக் கடந்து விட்டாள்.
“பாவம் சரோ.. நாமே சோறு போட்டு வளர்த்துட்டு எப்படி கொல்ல மனசு வரும். வேணும்னா இவள கொண்டு போய் புளூ கிராஸ் கிட்டே குடுத்துடுவோமா?”
“அது என்ன புளூ கிராசோ என்ன எழவோ. இவ இனிமே இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” கறாராக பேசி விட்டு வெடுக்கென திரும்பிச் சென்று விட்டாள்.
சண்முகத்தை சுசி பரிதாபமாய் பார்த்தாள். காலையில் வந்திருக்க வேண்டிய பிஸ்கட் ஏன் இன்னும் வரவில்லை என்று சுசிக்கு இன்னும் புரியவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். தினத் தந்தியின் பக்கங்களைப் புரட்டினான். “ஆச வச்ச பொண்ணு மேல பாசம் வச்சி மோசம் போன மனமே….” ஆண்டியார் பாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையாவது இந்தாளுக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா என்று தோன்றியது.
கடுப்பாக பேப்பரை மடக்கி ஓரத்தில் போட்டான். எப்.எம் ரேடியோவில் தனுஷ் உருகிக் கொண்டிருந்தார் – “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்..”
‘காதலில் எங்கே விழுந்தேன். கக்கூசில் தான் விழுந்தேன்’ என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த தேவதைகள் எல்லோரும் சூனியக்காரிகளாக மாறும் தருணம் எது என்று சண்முகம் யோசித்துப் பார்த்தான். சரோஜாவும் அவனுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்த நாட்கள் நினைவிலாடியது.
“என்னாங்க.. ஒங்களத்தான். இங்க பாருங்களேன்” சண்முகம் அப்போது தான் கம்பெனியில் இருந்து வந்திருந்தான். அந்த நேரத்தில் அவனை யாரும் தொந்திரவு செய்வதை அவன் விரும்புவதேயில்லை. கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்து ஈசி சேரில் சாய்ந்ததும் ஒரு ஆழமான மயக்க நிலைக்குப் போய்விடுவான். அந்த முப்பது நிமிடங்களில் கடவுளே வரம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னாலும் கூட ‘போய்ட்டு அப்புறம் வாய்யா’ என்று சொல்லி விடுவான். அன்றைக்கு முழுவதும் அவன் வாங்கிய திட்டுகள், பெற்ற அவமானங்களை, அடைந்த சிறுமைகளை மெல்ல அசைபோட்டு மூளையின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றும் நேரம் அது.
“அட.. நான் கூப்பிடறது காதில் விழாதா ஒங்களுக்கு. இங்க பாருங்கன்னா” சரோ குழைந்தாள்.
“என்னம்மா” போடி என்று உதறிவிட சரோ என்ன கடவுளா.. காதலியாயிற்றே.
“நம்ம பக்கத்து வீட்டுல பூங்கொடியில்ல.. அவங்க வீட்ல புதுசா ஏ.சி போட்டிருக்காங்க. ஸ்பிளிட் ஏசியாம். ஒன்ர டன்னாம். வீடே ச்சில்லுன்னு எப்படி இருக்கு தெரியுமா. நாமளும் ஒன்னு வாங்கலாங்க..” ஈசி சேரின் வலது கையில் முட்டாக்கு போட்டுக் கொண்டே சொன்னாள்.
“நம்ம வீட்டுக்குப் பின்னாடி தான் ரெண்டு வேப்ப மரம் இருக்கே சரோ. நல்ல காத்தோட்டமான வீடும்மா.. இயற்கையான காத்து இருக்கும் போது நமக்கு எதுக்கும்மா ஏ.சியெல்லாம்” கண்ணை மூடிக் கொண்டே சொன்னான் சண்முகம்.
“……”
“சரோ…..” பதில் இல்லையென்றதும் கண்னைத் திறந்து பார்த்தான்.
சரோ பக்கத்திலில்லை. உள்ளே பாத்திரங்கள் உருளும் சப்தம் மட்டும் கேட்டது. அன்று தான் ஒரு தேவதை சூனியக்காரியாக மாறத் துவங்கியதன் முதல் அறிகுறியைக் கண்டான். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாக கழிந்தது. நான்காம் நாள் காலை சண்முகம் மொத்தமாக சரண்டராகி தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.
“சரோ..”
“…..”
“கிளம்பும்மா.. பஜாருக்கு போயி ஏ.சி என்னா விலை என்ன விவரம்னு கேட்டுட்டு வருவோம்”
இருபத்திரெண்டாயிரம் பி.எப் லோன் போட்டு ஒரே வாரத்தில் வீட்டில் ஏ.சி மாட்டப்பட்டது. சரோ சண்முகத்தைக் கொண்டாடினாள். அவன் முன்னயே உறவுகளுக்கு போன் போட்டு கணவனின் அக்கறையை பிரஸ்தாபித்தாள் – கூடவே தான் ஏ.சி வாங்கியதையும். உறவுகள் இவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அதற்குத்தானே உறவுகள்? நம்மைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட்டுக் கொண்டேயிருந்தால் தானே நாம்
வெற்றி பெற்றுள்ளோம் என்பதே உறுதியாகிறது என்றெல்லம் சண்முகம் நினைத்துக் கொண்டான். ஏ.சியின் ரீங்காரம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது – அடுத்த மாத கரண்டு பில் வரும் வரையில்.
“யெப்பா… யெப்பா… சீனு மாமா வந்துத்தாங்க.. மித்தாய் குதுத்தாங்க” பாலு கையில் சாக்லெட்டோ டு உள்ளே ஓடிவந்து சண்முகத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். பாலுவின் பின்னாலேயே சீனு. இருபத்தைந்து வருட நட்பு. பள்ளி நாட்களிலிருந்து மாறாத அதே சிரிப்போடு வந்தான்.
“யேய்.. என்னடா லீவு நாள்ல சினிமா கினிமான்னு பொண்டாட்டியோட சுத்தாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கே” இவனுக்கு வாயில் மட்டும் வாஸ்து சரியாய் இல்லை.
“டேய்.. மொதல்ல நீ அடக்கி வாசி. அவ காதுல கீதுல உளுந்துடப் போகுது” சண்முகம் ஒருமுறை அவஸ்தையோடு உள்ளே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.
“சரி சொல்லு எதுக்கு மிஸ்டு கால் குடுத்தே. நாலு வீடு தள்ளி தானே இருக்கேன். எழுந்து வர வேண்டியது தானே”
“அது… ஒரு சின்ன பிரச்சினைடா”
“என்ன திரும்ப சிஸ்டர் எதுனா வாங்கிக் குடுக்க சொல்றாங்களா”
“இல்லடா.. சுசிய கொல்லனுமாம்”
“ஏன்.. நாலு மாசம் முன்னே தான ஆசையா வாங்கிட்டு வந்தே? இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு?”
“அது வந்து மச்சி….” சண்முகத்துக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. காரணமும் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவுரவமானதில்லை என்பதால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.
“என்ன.. யாரையாவது கடிச்சிடுச்சா”
“ச்சே ச்சே.. அதில்ல.. அது வந்து.. எதிர் வீட்ல ஒரு நாட்டு நாய் இருக்கில்லே அதோட மேட்டிங் ஆய்டிச்சி போல. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கு” ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடித்தான்.
“அது நல்லது தானடா.. இப்படி கிராஸ் ஆனா குட்டிங்க வித்யாசமா, அழகா பிறக்குமே. அதில என்ன பிரச்சினை”
“அது தாண்டா பிரச்சினையே. சரோவுக்கு அது பிடிக்கலை. அது நாட்டு நாயி, சுசி பொமரேனியன்; ஒசந்த சாதி. அதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரி ஏதோ அசிங்கமா சொல்லிட்டாளாம். அது தான் இப்ப இதை தொலைச்சே ஆகனும்னு தலைகீழா நிக்கறா”
“கஷ்டம்டா.. நாய் கிட்டே கூடவா சாதியெல்லாம் பாப்பாங்க? சரி, இப்ப என்ன செய்யப் போறே. கொல்லப் போறியா” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்
“இல்ல கொல்ற ஐடியா எனக்கில்ல… ஆனா இந்த புளூ கிராஸ் ஆளுங்க கிட்ட கொடுத்துட்டா என்னான்னு யோசிக்கறேன். ஒங்க ஆபீஸ் பக்கத்துல தானே அவங்களோட ஆபீஸ் இருக்கு – அதான் ஒன்ன கூப்டேன்”
“ம்.. இந்த மாதிரியெல்லாம் அவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலையேடா. சரி.. நீயே கூட வா ஒரு எட்டு போய் கேட்டுட்டே வந்துடலாம்” சொல்லிக் கொண்டே சீனு எழுந்தான்.
“என்னாங்க.. போகும் போது அப்படியே இந்த சனியனையும் எடுத்துட்டுப் போயிருங்க. அவங்க வாங்கிக்கிடலைன்னா எங்கியாவது கண் காணாம விட்டுட்டு வந்துருங்க” சரோவின் அசரீரி கேட்டது. உள்ளேயிருந்தபடியே பேச்சு முழுவதையும் கவனித்திருக்கிறாள்.
சீனுவின் பைக் நிதானமான வேகத்தில் ஊர்ந்தது. சண்முகத்தின் கையில் சுசி சந்தொஷமாய் திமிரிக் கொண்டிருந்தது. அவள் தன்னை எங்கோ அழைத்துப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சண்முகத்திற்கு மனம் லேசாய் கணத்தது; நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. ஏ.சி விசயத்தில் தாழ்ந்து போனது தான் அதைத் தொட்டு வந்த மற்ற எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.
“என்னாங்க.. பூங்கொடி அக்கா வீட்ல புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க”
“என்னாங்க.. லதா மாமி வீட்ல புதுசா ஒரு சி.டி பிளேயர் வாங்கியிருக்காங்க”
“என்னாங்க.. மேரி ஆண்ட்டி வீட்ல புதுசா ஒரு டேபிள் டாப் வெட்கிரைண்டர் வாங்கியிருக்காங்க”
“என்னாங்க.. பின்னாடி வீட்ல புதுசா ஒரு வாசிங் மிசீன் வாங்கியிருக்காங்க”
மாதத் தவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வரவும் செலவும் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று ஒன்றோடு ஒன்று குத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. சண்முகம் கவலைப் பட ஆரம்பித்தான். ஒருநாள் தெருமுனை டீ கடையில் பூங்கொடி அக்கா புதிதாக ஒரு கள்ளப் புருசனை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று பொரணி பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் அரண்டே போய் விட்டான். லேசான நடுக்கத்தோடு வீட்டுக்கு வந்த போது பாலு வீர் வீரென்று கதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேகமாக உள்ளே ஓடினான் –
“இந்தாங்க.. இந்த மானக் கேட்டுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கே போயிருவேன்” சரோ அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் “சனியனே.. உன்ன இப்ப என்ன கொன்னா போட்டேன்.. ஏன் கத்தறே” பாலுவுக்கு இன்னொன்று முதுகில் கிடைத்தது.
“இப்ப என்ன நடந்துச்சி. நீ ஏண்டி குழந்தைய கை நீட்டறே… ஒங்கம்மா வீட்டுக்கு போவனும்னா மொதொ வேலையா அடுத்த பஸ்ஸ புடிச்சி போய்த் தொலை. இன்னொரு வாட்டி கை நீட்ற வேலை வச்சிக்கிட்டே…” சண்முகம் கல்யாணம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆத்திரப்பட்டான்.
“ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா.. எங்க வீட்ல நான் பொழச்ச பொழப்புக்கு உன்னிய மாதிரி ஒரு தரித்திரம் பிடிச்ச ஓட்டாண்டிய நம்பி வந்தேம் பாரு.. என்னச் சொல்லனும். நீ தானேய்யா எம் பின்னாடியே அலைஞ்சே.. நான் பேசாம சாகப் போறேன்..” சொல்லிக் கொண்டே அவள் உள்ளறையை நோக்கி ஓடவும் சண்முகத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பின்னாடியே ஓடினான்.. கையைப் பிடித்தான்.. காலைப் பிடித்தான்.. அழுதான்.. மீண்டும் மொத்தமாக சரண்டராகி தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொண்டான்.
பின்னர் இரவு பாலு உறங்கிய பின் மெதுவாக விபரம் என்னவென்று கேவல்களுக்கு இடையில் சரோ விவரித்தாள். பூங்கொடி வீட்டில் ஒரு பொமரேனியன் நாய் வாங்கியிருக்கிறார்களாம். பாலு அதோடு விளையாடச் சென்றானாம். அதற்கு பூங்கொடி ஏதோ சொல்லி விட்டாளாம்.
வேறென்ன அடுத்த மூன்றாவது நாள் – அதே இனத்தைச் சேர்ந்த, அதே நிறம் கொண்ட, அதே உயரம் கொண்ட ஒரு நாயை மூவாயிரம் அழுது வாங்கி வந்தான் சண்முகம். அதன் பின்னங்காலைத் தூக்கிப் பார்த்த சுசி ‘அய்யே.. பொட்ட நாயா’ என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ ‘பரவால்ல இருக்கட்டும்.. இதுக்கு சுசின்னு பேரு வைக்கலாங்க’ என்றாள் ஆசையாக.
சண்முகத்துக்கு ஆரம்பத்திலிருந்தே சுசியைப் பிடிக்கவில்லை. அது காலை நக்கும் போதும், தன் முன்னே குழைந்து நிற்கும் போதும், சாப்பாட்டு நேரத்தில் ஏங்கிப் பார்க்கும் போதும், விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் போதும்.. எனப் பல சந்தர்பங்களில் சுசியைத் தனது பிரதி பிம்பமாகவே அவனால் உணர முடிந்தது. அவன் கம்பெனியில் செய்து கொண்டிருப்பதை இங்கே சுசி செய்து
கொண்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்த அடிமைத்தனத்தை சண்முகத்தால் இரசிக்க முடிந்ததேயில்லை. ஆனால் அவனுக்கு சுசியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது. அது ஒரு சக அடிமையின் மேல் ஏற்படும் பரிதாபம்.
“சர்க்க்..” சீனு வண்டியைக் க்ரீச்சிட்டு நிறுத்தியதில் சண்முகத்தின் சிந்தனை கலைந்தது.
‘நாய் எல்லாரையும் கடிக்குது; வீட்டில் அசிங்கம் செய்கிறது’ என்று ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி புளூகிராஸ்காரர்கள் தலையில் அதைக் கட்டிவிட்டு சண்முகம் திரும்பினான். சுசிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன்னைச் சுற்றி தன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிற ஆனந்தம் இருந்திருக்குமோ அல்லது தான் இன்னதென்று விளங்காத காரணத்திற்காக பிரித்து விட்டுச் செல்கிறானே என்கிற சோகம் இருந்திருக்குமோ தெரியவில்லை – அது ஒரு சப்தத்தை எழுப்பியது. அது போன்ற ஒரு சப்தத்தை இது நாள் வரையில் சண்முகம் கேட்டதேயில்லை. அது நாயின் சப்தம் போன்றே இல்லை. அதில் சந்தோஷத்தையோ துக்கத்தையோ அல்லது வேறு உணர்ச்சியையோ அவனால் உணர முடியவில்லை. அவன் வெளிக் கதவை நெருங்கும் சமயம் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் – சுசி அவனையே பார்த்துக் கொண்டு நின்றது. தன் வாலை மிக மெதுவாக அசைத்தது. திரும்ப வந்து தன்னை அள்ளிக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்குமோ என்னவோ – சண்முகத்தின் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தத் தெருவின் கோடியில் இருந்த தேனீர் கடை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.
“அண்ணே ரெண்டு வில்ஸ் பில்டர் குடுங்க” பின்னாலேயே சீனுவும் வந்து சேர்ந்தான்.
“ஒன்னு போதும்ணே” என்று கடைக்காரரிடம் சொன்னவன் “கட் போட்டுக்கலாம்டா” என்றான் சண்முகத்தைப் பார்த்து.
காரமான புகை நுரையீரலின் சந்து பொந்துகளெல்லாம் நிறைந்து இறுக்கத்தைக் குறைத்தது. சண்முகம் கண்களைச் செருகிக் கொண்டே அதை அனுபவித்தான். ஏதோ தோன்றியவன் போல சீனு பக்கம் திரும்பி –
“க்காலி.. இந்த பொட்டச்சிங்களே இம்சடா மச்சி. இத்த வாங்கித்தா அத்த வாங்கித்தான்னு ஒரே நைநைன்னு அரிப்பு. ஒரு மனுசன் வெளில படற பாடுன்னா என்னான்னு தெரியுதா இவளுகளுக்கு… ச்சே.. கம்பெனிலயும் அடிம.. ஊட்லயும் அடிம… எங்க திரும்புனாலும் எல்லாரும் நெருக்கிட்டே இருந்தா ஒருத்தன் எங்க போவான்… பய்யனுக்காக பாக்க வேண்டியிருக்குடா… இல்லேன்னா தொலச்சி தல முழுவிடுவேன்” என்று சொல்லி விட்டு
ஆமோதிப்பான ஒரு தலையசைப்பை எதிர்பார்த்தான்.
“தப்பு அங்க மட்டும் இல்லடா சம்மு… ஓன் கிட்ட தான் பெரிய தப்பே இருக்கு” புகை மூக்கின் வழியே வழிந்து தீரும் வரை பொருத்திருந்து விட்டு “சின்னச் சின்னதா கேக்கும் போது தேவையா தேவையில்லையான்னு நீ யோசிச்சியா? அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா? சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம்? கஸ்டப்பட்டு பொண்டாட்டிய சந்தோசமா வச்சிக்கறவன்னு பேரு வாங்க ஆச
பட்டேல்ல.. அப்ப அனுபவி” இறக்கமேயில்லை சீனுவின் வார்த்தைகளில்.
“டேய் உனுக்கு என்னியப் பத்தி தெரியுமில்லே.. நானே மாச தவனை கட்ட முடியாம லோல்பட்டுகிட்டு இருக்கேன்… நான் இத்தன நாளும் சந்தோசமாத்தான் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் ஆடினேன்னு சொல்றியா..? செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா? உனக்கே அதெல்லாம் தெரியுமில்லே…”
“டே.. சாவறது என்ன அத்தன சுலபமா? சம்பாதிக்கறவன் நீ; வெளியுலகத்துல சுத்தறவன் நீ; அவங்க வீட்லயே அடஞ்சி கிடக்கறவங்க; அவங்க அப்படித்தான் எல்லாத்துக்கும் ஆசப் படுவாங்க. ஒரு பொருள் தேவையா தேவையில்லையான்னு வாங்கறக்கு முன்னாடியே ரெண்டு பேரும் உக்காந்து பொருமையா பேசியிருக்கனும். அவங்க கேட்க தயாரா இல்லைன்னா எப்படி தயார் படுத்தறதுன்னு நீ யோசிச்சிருக்கனும். ஆனா நீ பெருமைக்கு எருமை ஓட்டினே. சொந்தக்காரனுக நாலு பேரு மூஞ்சி முன்னாடி ‘ஆஹா சண்முகத்துக்கு சரோஜா மேல என்னா பாசம்’னு சொன்ன உடனே நீ வானத்துல பறந்தே. இன்னிக்கு நீ லோல்படும் போது அவனுக பக்கத்தில இல்ல பாத்தியா.”
சண்முகம் ஏதும் பேசத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான்.
“என்னைக்காவது உன்னோட சம்பளம் எவ்வளவு, பிடித்தம் போக கையில் வாங்கறது எத்தனை அப்படிங்கற உண்மையான விவரத்தை நீ வீட்ல சொல்லியிருக்கியா? அவங்களைப் பொருத்தவரை நீ காசு கேட்டா கொடுக்கற ஏ.டி.எம் மிசின் மாதிரி தானே நடந்துட்டு இருந்தே. மொதல்ல ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். வா.. போலாம்” என்றபடி பைக்கை உதைத்தான்.
சண்முகம் புதிதானவொரு நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். காற்று சில்லென்று வீசியது.