கடந்து போன ஆண்டுகள்; நிலைத்து நிற்கும் எதார்த்தங்கள்..!
கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அனாயசியமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி அவளே எனக்கு அழகி.
இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெரிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!
“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.
“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.
பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேனீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கிரகம் கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.
தேனீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.
“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.
“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.
“பாண்டிச்சேரிங்க”
“என்ன விசமா?”
“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”
“தங்கறதெல்லாம்?”
“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.
சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள் தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கே தான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நன்பர்கள் தான் இருந்தனர். அதில் கோபால் மிக நெருங்கிய நன்பன். அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் கலைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்
“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்
“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை
“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வென்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.
“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.
“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்
“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.
“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீ வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..” வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…
“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்.. கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.
பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.
“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெரிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.
எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.
அங்கே விவசாயம் தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணி தான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தே தான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.
அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீன் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.
ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.
“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.
“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.
“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.
“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்” தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.
ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும் தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள் தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தா தான். அதற்குப் பின் ஒரு இரண்டு வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.
என் பெரியப்பாவின் மகள் தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்கா தான் எனக்கு அம்மா.
“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கைய்யால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பா தான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.
ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.
பண்ணிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவும் எவரும் வருவதில்லை.
போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வரும் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நன்பர்களே கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் காரியங்களும் கூட நன்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.
எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவர் சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.
வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தரியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.
பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.
அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.
மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.
முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?
ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின்அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.
“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள் தான் அவை.
“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”
“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது. அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.
“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.
“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்பஎங்க இருக்காங்க?”
“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியே படலியா?”மௌனமாக இருந்தேன்.
“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”
“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”
“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டு தான் வருவேன்”
“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”
“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸ¤ல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”
“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.
நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.
“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”
டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயனிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.
இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.
“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”
“வெவசாயமெல்லாம்?”
“அதெல்லாம் ஓய்ஞ்சி போயில் பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”
“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”
“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரனும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹ¤ம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”
இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுன்னாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காறை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற என்னம் இப்போது மாறி விட்டது.
“சரி போலாம் கோபாலு”
“ஏண்டா உள்ளெ போகலியா”
“போயி?”
அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில் தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பை நோக்கி நடந்தோம்.
சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..
“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.
“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”
“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோனி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில் தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.
“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”
“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”
அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. ·பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம் தான்.
அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.
“சரி போலாம்” என்றவாரே வெளியில் வந்தேன்.
பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,
“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன பொடியனெல்லாம் போடா வாடான்னு தான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்வே கெடைக்காது.”
பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவொன்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.
கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கே தான் தங்கியிருந்தேன்.
இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரை தான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள் தான் புழுத்து நாறுகிறது.
வட இந்திய பயண அனுபவங்கள்..!!
பொதுவில் பயண அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் எனும் என்னம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுப் போட்டு மொத்த விஷயமும் நமுத்துப் போய்விடும். பிறகு நேரம் கிடைத்து எழுதலாம் என்று உட்கார்ந்தால் அந்தப் பயண நினைவுகள் ஏதோ மங்களான நினைவுகளாகத்தான் தேறும். ஆனால் இந்த முறை எழுதியே ஆகவேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்ததற்கு வழக்கமான காரணங்களைத் தாண்டி வேறு சில காரணங்களும் கூட இருக்கிறது.
பயண அனுபவம் என நான் கருதுவது செல்லும் ஊர்களின் அழகியல் அம்சங்களை பட்டியலிட்டுக் காட்டுவது எனும் அம்சத்தில் அல்ல. மாறாக மாறுபட்ட கலாச்சாரம், மற்றும் அந்தக் கலாச்சாரத்தில் அடித்தளமாய் இருக்கும் பொருளாதாரம், அந்தப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படும் அங்குள்ள மனிதர்களிடையே நிலவும் உறவுகள், அந்த உறவுகளினிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பதிந்து வைப்பதைத் தான். வடநாட்டுப் பயணம் என்பது என்னளவில் ஒரு முக்கியமான திருப்புமுனை. ஒரு நாலைந்து ஆண்டுகள் முன்பு இந்தியா எனும் மாய நினைவுகளோடே தில்லியில் வந்திறங்கியவனை ஒரு உலுக்கு உலுக்கி நாம் உண்மையில் ஒரு எல்லைக்குள் இருக்கும் பல தேசத்தவர் என்பதை உணர வைத்தது. இது ஏன் என்று தேடப்போய்த்தான் ஏற்கனவே வேறு சில சிறப்பான காரணங்களால் அளவு ரீதியில் ஏற்பட்டுவந்த பல மாற்றங்களோடு சேர்ந்து மார்க்சியம் நோக்கி நகரும் ஒரு பன்பு மாற்றமாக உருவெடுத்தது.
இப்போது மீண்டும் தில்லி. இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.
தில்லி என்பது ஒரு அடையாளம். ஆளும் வர்க்க / மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆணவத்தினுடைய அடையாளம். தில்லி துரோகத்தின் அடையாளம். தனது வளர்ச்சிக்கு உரமாய் இருந்தவர்களையெல்லாம் சீரணித்துச் சக்கையாகத் துப்பி விடும் துரோகத்தின் அடையாளம். புறக்கணிப்பைப் புறக்கணித்து இந்நகரின் மேண்மைக்காய் உழைத்து உழைத்து நடைபாதைகளில் கண்களில் வெறுமை தெறிக்கத் தங்கியிருக்கும் அந்த உழைக்கும் மக்களுடைய தியாகத்தின் அடையாளமும் இதே தில்லி தான்.
இப்போது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தப் போகிறார்கள் அதற்காக நகரத்துக்கு மேக்கப்போடும் வேலை
வெகு வேகமாக நடந்து வருகிறது. முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்ட உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்.
குர்காவ்ன், நோய்டா போன்ற சாடிலைட் நகரங்களில் வானை எட்டிப் பிடிக்க நிற்கும் பளபளப்பான ஒவ்வொரு கட்டிடத்திடமும் நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகளுண்டு. நான் வந்து சேர்ந்த இரண்டாவது நாளில் நோய்டாவில் நடைபாதையில் தங்கியிருந்த ஒரு கூலித் தொழிலாளி – ஒரு முதியவர் – நடுக்கும் குளிரில் செத்துப் போயிருந்தார். அவர் கட்டிடத் தொழிலாளியாய் பணிபுரிந்த கட்டடத்திற்கு மிக அருகாமையிலேயே அவர் ஒரு நடைபாதையோரம் வாழ்ந்து வந்தார். ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. ஆனால் அந்தக் கட்டிடத்திலியங்கும் அலுவகங்களில் வேலை பார்க்கும் எவரும் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட அருகில் வரவில்லை. இங்கே ஏழ்மையையும் வருமையையும் தொற்று நோயைப் போல பார்த்து ஒதுக்குகிறார்கள்.
அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த மரணம் ஒரு செய்தியாக வருமா என்ற எதிர்பார்ப்பில் தினசரிகளை வாங்கிப் படித்தேன். அவற்றில் வருகிற புத்தாண்டை வரவேற்கும் கட்டுரைகளும், இந்த பத்தாண்டுகளில் நடந்த முக்கியமான நடப்புகளான ப்ரிட்னி ஸ்பியர்சுக்கு எத்தனை முறை மேலாடை விலகியது, டைகர் வுட்ஸ் எத்தனை பெண்களோடு படுத்தார் என்பது போன்ற உலகச் செய்திகள் தான் வந்திருந்தது. நடிகர்களின், பிரபலமான மேட்டுக்குடியினரின் குண்டியை நோண்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா விரலை நீட்டுகிறது – எல்லோரும் காசுகொடுத்து அதை முகர்ந்து பார்க்கிறார்கள். உள்ளூர்ச் செய்திகளிலும் பிரதானமாய் நடிக நடிகர்களின் படுக்கையறை சமாச்சாரங்கள் தான் இடம்பிடிக்கிறது.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ‘Buzzy stop’ என்று ஒரு சப்ளிமெண்ட் தருகிறார்கள் – அதன் பக்கங்களின் எண்ணிக்கை 40. செய்திகளின் பக்கங்கள் – 30.எதற்கு எது சப்ளிமெண்ட் என்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை. நம்மூரில் சரோஜா தேவி புத்தகம் என்று ஒரு காலத்தில் வருமே.. அதன் தரத்திற்குத் தான் இங்கே செய்தித்தாள்கள் வருகிறது. அரசியல்வாதிகளைக் கொள்கைகளைக் கொண்டு விமர்சிப்பதில்லை – மாறாக அவர்களின் ஆளுமைகளைக் கொண்டும் கவர்ச்சியைக் கொண்டும் (personality & charisma) தான் விமர்சிக்கிறார்கள் பத்திரிகைகளில்.
இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசித்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்.
வடக்கில் பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களை BIMARU என்கிறார்கள். இம்மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதாலும் அந்தந்த வட்டாரங்களில் பிழைக்க வேறு வழியில்லாததாலும் வீசியெறியப்படும் மக்கள் தில்லியில் தான் வந்து குவிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். இவர்கள் பெரும்பாலும் வசிப்பது நடைபாதைகளில் தான். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்படி பிள்ளை குட்டிகளோடு இடம் பெயர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. குர்காவ்ன், நோய்டா மற்றும் தில்லியின் பல பகுதிகளில் நடைபாதைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். மொத்த குடும்பமே ஏதோவொரு கூலி வேலைக்குச் சென்றால் தான் ஜீவனத்தை ஓட்ட முடியும். இவர்களுக்கான சுகாதார
வசதிகளோ, இந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்க ஏற்பாடோ எதுவும் கிடையாது. இவர்கள் இத்தனை சிரமத்துக்குள்ளும் ஒரு பெருநகரத்துக்கு இடம் பெயர்ந்து வர வெறுமே பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.
இங்கே வந்த சில நாட்களில் வேலை தள்ளிப் போய்க்கொண்டு இருந்ததால் கூட ஒரு பீகாரி நன்பனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு லும்பினி செல்லக் கிளம்பிவிட்டேன். பேருந்தில் அயோத்தி வரை செல்வது, அங்கே எனது கல்லூரி நன்பன் சரவணரகுபதியும் அவனது நன்பனும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதும், தொடர்ந்து லும்பினிக்கு இரண்டு புல்லட்டுகளில் சென்றுவிட்டு மீண்டும் அயோத்தியிருந்து தில்லிக்கு பேருந்தில் பயணம் என்பது திட்டம். இந்தப் பயனத்தின் இடையில் ஒரு நாள் ஏதாவது ஒரு சிறிய டவுனில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் பயனிப்பது என்றும் முடிந்தவரையில் தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியே பயனிப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டே கிளம்பினோம்.
திட்டமிட்டபடி வழியில் அயோத்தியில் என் நன்பன் சரவணனும் அவன் நன்பன் வைபவ் த்ரிபாத்தியும் எங்களோடு இனைந்து கொண்டனர். அங்கிருந்து இரண்டு புல்லட்களில் கோரக்பூர் கிளம்பினோம் – கிளம்பும் போதே மதியம் 3 ஆகிவிட்டது. பஸ்ட்டி எனும் நகரத்தைத் தாண்டியதும் ஒரு கிராமத்தில் வைபவ்வின் உறவினர் வீட்டில் தங்கினோம். அடுத்த நாள் விடியகாலை சீக்கிரம் எழுந்து திறந்த வெளிப் புல்கலைக்கழகத்தைத் தேடி நடந்த போது ஒரு தலித் குடியிருப்பைக் கடந்தோம் – காலை ஒரு மூன்று மணியிருக்கும். குடிசைகளில் அந்த நேரத்துக்கே சமையல் வேலை
நடப்பதைக் காண முடிந்தது. வைபவ்விடம் விசாரித்தேன் – பொதுவாக இங்கே மொத்த குடும்பமும் பண்ணைகளின் நிலத்தில் வேலைக்குச் சென்று விடவேண்டும் என்பதால், காலையிலேயே மொத்த நாளுக்கும் சேர்த்து சப்பாத்தி சுட்டு வைத்துக்கொள்கிறார்கள். சப்ஜி என்று எதுவும் கிடையாது; ஒரு பச்சைமிளகாயை எடுத்து சப்பாத்தியை அதில் சுருட்டி அப்படியே சாப்பிட வேண்டியது தான். இதுவே தான் மதியத்துக்கும் இதுவே தான் இரவுக்கும். கோதுமையை பண்ணையாரே கொடுத்துவிடுவார் – கூலியில் பெரும்பாலும் கழித்து வடுவார். கூலியென்று பார்த்தாலும் ஆணுக்கு இருபது ரூபாயும் பெண்ணுக்கு பத்து ரூபாய்களும் தான்; சிறுவர்களின் வேலைக்கெல்லாம் கூலி கிடையாது. பெரும்பாலும் கூலிக்கு பதிலாய் தானியங்கள் கொடுத்து விடுவார்களாம்.
இதில் வேலை முடிந்ததா வீட்டுக்கு வந்தோமா என்றெல்லம் கிடையாது; பண்ணையார் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் போய் நிற்க வேண்டும். இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்பவர்களாம்; இப்போது பண்ணையாருக்கு முடிவெட்டுபவரின் தந்தை பண்ணையாரின் தந்தைக்கு வெட்டியிருப்பார் – இவர் மகன் பண்ணையாரின் மகனுக்கு எதிர்காலத்தில் முடிவெட்டுவார் – இப்படி! இங்கே பெரும் பண்ணைகளிடம் தான் நிலங்கள் மொத்தமும் குவிந்துள்ளது. தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களே (தமிழ்நாட்டைப் போலத்தான்). மொத்த குடும்பமும் – குஞ்சு குளுவான்கள் முதற்கொண்டு கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியென்பதே கிடையாது.
பெரும்பாலும் அங்கே நான் கவனித்தது நமது மாநிலத்துக்கும் அங்கேயுள்ள நிலைமைகளுக்கு மலையளவு இருந்த வித்தியாசத்தை. உத்திர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உயர்சாதியினருக்கு சட்டமே கிடையாது என்பது போல் தான் தெரிகிறது. சர்வசாதாரணமாக அங்கே நாட்டுத் துப்பாக்கிகள் தூக்கிய குண்டர்களுடன் உயர்சாதிப் பண்ணைகள் நடமாடுவதைக் கவனித்து இருக்கிறேன். பேருந்துகளில் அவர்கள் ஏறினால் டிக்கெட் எடுப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் தலித்துகள் இருக்கைகள் காலியாய் இருந்தாலும் உட்காருவதில்லை – குறிப்பாக இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு உயர் சாதிக்காரர் உட்கார்ந்து இருந்தால் அருகில் ஒரு தலித் உட்கார முடியாது.
நிலப்பிரபுத்துவம் தனது உச்சகட்ட கொடுமைகளை அங்கே கட்டவிழ்த்து விட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. முசாகர் எனும் ஒரு சாதியினரைப் பற்றி எனது பீகாரி நன்பன் சொன்னான் – தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் எனக்கு (இங்கே இரட்டைக் குவளையை முறையைக் கண்டிருந்தாலும் கூட) அவர்களைப் பற்றி கேள்வியுற்றதெல்லாம் கடுமையான வியப்பை உண்டாக்கியது. அங்கே வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வளைக்குள் நுழைவது போலத்தானிருக்குமாம்.
குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமாம். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக்
கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாதாம். இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு
முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள். எனக்குத் தமிழகமும் பெரியாரும் நினைவுக்கு வந்தார் – உண்மையில் அந்த தாடிக்காரக் கிழவனுக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.
இது போன்ற சமூகக் காரணிகள் பொருளாதாரக் காரணிகளோடு இணைந்து தான் அவர்களை தில்லிக்கு விரட்டுகிறது – இங்கே தில்லியின் கருணையற்ற இதயத்தை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ நிர்பந்திக்கிறது. BIMARU மாநிலங்களின் பலபகுதிகளின் பொருளாதார நிலையும் சமூக ஒடுக்குமுறையும் நமது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.
“இப்பெல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறா?”
“நீங்க சாதி இருக்குன்னு சொல்றதாலே தான் சாதி இருக்கு – இல்லேன்னு சொல்லிப்பாருங்க; சாதியே இல்லை” என்று நொண்ணை
பேசும் உண்மைத்தமிழன், கோவி.கண்ணன் போன்ற அல்டாப்புகளை பீகாரின் ஏதாவதொரு கிராமத்துக்கு ஒரிரு மாதங்களுக்காவது பார்சல் கட்டி அனுப்பி விடவேண்டும்.
நாங்கள் பஸ்ட்டியிலிருந்து காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டோ ம் – வழியில் வைபவ்வின் புல்லட் இஞ்சின் சீஸ் ஆகி விட்டது. ஊரில் எனது வண்டியை நானே பெரும்பாலும் பழுது பார்ப்பதால் எனக்கு ஓரளவுக்கு புல்லட் மெக்கானிசம் தெரியும். ஒருவழியாக இஞ்சின் ஆயிலை முற்றாக வெளியேற்றிவிட்டு ஸ்பேராக கொண்டு சென்றிருந்த இஞ்சின் ஆயிலை நிரப்பிய பின் ஸ்டார்ட் ஆனது. பழைய ஸ்டாண்டர்டு புல்லட்டில் இது ஒரு தொல்லை. வெளியேற்றிய இஞ்சின் ஆயிலுக்குள் கைவிட்டுத் துழாவியதில் சின்னதாக சிலஉலோகத் துணுக்குகள் தட்டுப்பட்டது – அப்படியானால், பிஸ்ட்டனும் போரும் அடிவாங்கியிருக்கிறது என்று அவனிடம் சொன்னேன். மிதமான வேகத்தில் கோரக்பூர் சென்றபோது மாலை நான்கு. ஒரு மெக்கானிக்கைப் பிடித்து ரீபோரிங் செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் தங்க இடம் பார்க்கவும், ஊரைச் சுற்றிப்பார்க்கவும் கால்நடையாகக் கிளம்பிவிட்டோ ம்.
இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் – நான் அங்குள்ள சாதி ஒடுக்குமுறைகள் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் பற்றியும் அவர்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது. அவர்களிடம் நம் மாநிலம் பற்றி நிறைய சொன்னேன். பிரதானமாக அவர்களுக்கு இருந்த ஆச்சர்யங்கள் இரண்டு – 1) அது ஏன் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்? 2) அது எப்படி கருணாநிதி ராமரைப் பற்றி இழிவாகப் பேசியும் தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்.. நீண்ட நேரமாக அவர்களுக்கு பெரியார், அவருக்கு முன் இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபுகள் போன்றவற்றை விளக்கினேன். மற்றபடி அங்குள்ள நிலைமைகளை அவர்களிடம் கேட்டறிந்ததனூடாகவும் இந்தப் பயனத்தில் இடையிடையே நிறுத்தி நேரில் கண்டவற்றினூடாகவும் எனக்கு பளிச்சென்று தெரிந்தவொன்று – தமிழ்நாட்டுக்கும் வட நாட்டிற்கும் இருந்த மலையளவிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகள்.
தமிழ்நாட்டில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுகிறார்கள் – இரட்டைக்குவளை முறையை இன்னும் ஒழிக்க முடியாத திராவிட ஆட்சி என்று உண்மைத்தமிழன் வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.. இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடும் செய்திகள் வருவதாலேயே அது நடப்பில் இருப்பது இவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் ஆண்டைகள் தம்மேல் ஏவிவிடும் ஒடுக்குமுறையை கேள்வி வரைமுறையில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதல்ல; அங்குள்ள பொருளாதாரச் சூழல் அவர்களை போராடும் ஒரு நிலைக்கு அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.
தமிழ்நாட்டில் ஒதுகுபுற கிராமங்களில் இருந்து அதிகபட்சம் மூன்று மணிநேர பேருந்துப் பயன தூரத்தில் ஏதேனும் ஒரு சிறு நகரமாவது இருக்கும். பேருந்துக் கட்டணமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு – பேருந்து இணைப்பின் அடர்த்தியும் வடக்கை ஒப்பிடும் போது அதிகம். கிராமப்புறங்களில் நிலத்தின் மேல் தலித்துகளுக்கு பொதுவாக இந்தியா முழுவதிலும் உரிமை கிடையாது. சாதி இந்துக்கள் தான் நிலங்களை வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே கிராமப்புறத்தில் தலித்துகள் கூலிவேலை பார்ப்பவராயும், சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்பவராயும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ( குறிப்பான சில விதிவிலக்குகள் இருக்கலாம்) தலித்துகள் முற்று முழுக்க தமது சோற்றுக்கு கிராமப்புற பண்ணையை நம்பித்தானிருக்க வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு கூலி வேலையாக வரும் தலித்துகள் இயல்பாகவே தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது அங்கு நிலவும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாமல் போராட எத்தனிக்கிறார்கள்.
உதாரணமாக நான் திருப்பூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது பக்கத்தில் ஒரு ஷெட்டில் கோவையின் ஏதோ ஒரு ஒதுக்குப்புற
கிராமத்திலிருந்து இங்குள்ள பனியன் பட்டரையில் வேலைக்காக வந்திருந்தவர்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசிப்பார்த்த போது, அங்கே அவர்கள் கிராமத்தில் கவுண்டர்கள் இவர்களை மோசமான முறையில் ஒடுக்கிவந்ததும், இவர்கள் அதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன், அந்த வட்டாரத்திலிருக்கும் கவுண்டர்களெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு தமது நிலத்தில் வேலை தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும், எனவே இவர்கள் வீட்டுக்கொருவராகக் கிளம்பி திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டதாகவும் தெரியவந்தது. இதில், இங்கும் அவர்கள் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி ஏதாவதொரு ஆதிக்க சாதிக்காரனாகத்தானிருப்பான், ஆனால் – அவர்கள் கிராமத்தில் சந்தித்த ஒடுக்குமுறை பிரதானமாக சாதி ரீதியிலானதும் அதற்கு சற்றும் குறையாத பொருளாதாரச் சுரண்டலும் – இங்கே பொருளாதார ஒடுக்குமுறையே பிரதானமானது; சாதி ரீதியிலான ஒடுக்குமுறையின் கணம் லேசாகக் குறைந்து அது தன் வடிவத்திலிருந்து மாறுபட்டு பொருளார அம்சங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த இடத்தில் தமிழ்நாடு திராவிட ஆட்சிகளால் சொர்க புரியாகிவிட்டது எனும் அர்த்தத்தில் சொல்லவதாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமானம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது. இங்கே மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தொழில்நிறுவனங்களில் குறைகூலிக்குச் செல்ல நிலபிரபுத்துவம் நிர்பந்திக்கிறது. மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளும் நிலபிரபுத்துவமும் கைகோர்த்துக் கொள்வது இந்த அம்சத்தில் தான். அமெரிக்கனுக்கு குறைந்த விலையில் டீசர்ட் கிடைக்க ஆலாந்துரையைச் சேர்ந்த கவுண்டனும் ஒரு மறைமுகக் காரணமாகிறான். ஒடுக்குமுறையானது அதன் வடிவத்தில் மாறுபட்டு வருகிறது – ஆனால் ஒடுக்குமுறைக்கான பிரதான காரணமான வளங்களின் மேல் அதிகாரமற்று இருப்பது அப்படியே தான் தொடருகிறது.
ஆனால் இங்கே வடக்கில் நிலைமை சற்று வேறு விதமானது – சமூக ரீதியாக இன்னமும் மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இங்கே எளிதில் இடம்பெயர நகரங்கள் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. நாங்கள் பயனம் செய்த போது, காலையில் ஒரு நகரத்தைக் கண்டோ மென்றால், மாலையில் தான் அடுத்த நகரத்தைப் பார்க்க முடியும். அங்கும் இடம்பெயர்ந்து வருபவருக்கெல்லாம் வேலை கொடுக்குமளவிற்கு தொழிற்சாலைகள் ஏதும் இருக்காது. கிராமத்தில் ஆண்டைகளின் ஒடுக்குமுறையைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து கிடப்பதைத் தாண்டி வேறு வாய்ப்புகள் குறைவு.
இப்போது இதன் பிண்ணனியில் வடக்கிலும் மத்தியிலும் சிலபகுதிகளில் மாவோயிஸ்டுகள் செலுத்திவரும் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே சாதி ரீதியில் / சமூக ரீதியில் / பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மாவொயிஸ்டுத் தோழர்கள் கம்யூனிஸ்டுகளாய் அல்ல; ஒரு மீட்பராகவோ, ஒரு தேவதூதராகவோ தான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம்
மட்டுமல்லஆண்டாண்டு காலமாய் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் கீழ் புழுங்கிச் சாகும் மக்களின் விடுதலையும் கூட அந்தக் குழாயிலிருந்து நெருப்புப் பிழம்பாய்ப் புறப்படும் ஈயக்குண்டுகளின் உள்ளே தான் சூல் கொண்டு இருக்கிறது. மாவொயிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களின் மனங்களில் அசைக்கமுடியாத மாவீர்களாய் (invincible heros) வீற்றிருப்பார்கள் என்பதை மற்ற பகுதிகளில் நான் கண்ட நிலைமை எனக்கு உணர்த்தியது.
அந்த மக்கள் காக்கிச் சீருடையுடனும், கையில் கட்டிய சிவப்புப் பட்டையுடனும், போலீசிடம் இருந்து பறித்த ஹைதர் காலத்துக்
கட்டைத் துப்பாக்கிகளோடும், பாதவுரை அணியாத வெறும் கால்களோடும், பசியில் உள்ளடங்கிய கண்களோடும், மலேரியா காய்ச்சல் மருந்துகளோடும் என்றைக்காவது வந்து சேரப்போகும் மக்கள் விடுதலைப் படையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தில்லியின் நடைபாதையில் தமக்கான இடத்தைத் தேடிக் கிளம்பிவிட வேண்டியது தான் – அங்கே இரத்தத்தை உறையவைக்கும் டிசம்பரின் கருணையற்ற குளிரும் – இரத்தத்தை ஆவியாக்கக் காத்திருக்கும் ஏப்ரல் வெயிலும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது.
கோரக்பூரின் ஒதுக்குப்புற சந்துகளில் நான் சில தாக்கூர்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியோடும் கண்களில் மரண பீதியோடும் வலம் வருவதைக் காண நேர்ந்தது. கிராமப்புறங்களின் அரசு இயந்திரமே இல்லை எனும் நிலையென்றால்; சிறு நகரங்களில் அந்த இயந்திரத்தின் அச்சாக ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். பெரும்பாலும் உழைக்கும் தலித் மக்களுக்காகவென்று பேச பிரதான ஓட்டுக் கட்சிகள் எவையும் கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்திலாவது ஓட்டுப்பொறுக்கிகள் ஏழைக் கிழவிகளைக் கட்டிப்பிடிப்பது போல போஸ் கொடுப்பதும், தலித் காலனிக்குள்
வருவதும் என்று ஓட்டுப் பொறுக்கவாவது ஸ்டண்ட் அடிப்பார்கள். வடக்கின் நிலைவேறு – நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில் தான் சாதி அரசியலே நடக்கிறது.
அடுத்தநாள் கோரக்பூரிலிருந்து காலை கிளம்பினோம் – அந்த மெக்கானிக் விடியவிடிய வேலை பார்த்திருக்கிறார். நிதானமான வேகத்தில் சென்று மகராஜ்கன்ச் எனும் இடத்தில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து லும்பினி சென்றடைந்தோம். புத்தர் பிறந்த இடம் இது தான். எனக்கு அதில் பெரிய அளவு ஆர்வம் இல்லை – போனது ஊரைச் சுற்ற – ஒரே இடத்தில் தேங்கி நிற்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அயோத்தி நோக்கி கிளம்பினோம். எனக்கு அயோத்தியில் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அங்கே இடிக்கப்பட்ட மசூதியையும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இராமன் கோயிலையும் காணவேண்டும் – முடிந்தால் சில போட்டோ க்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆவல்.
இதை நான் சரவணனிடம் சொல்லப்போக, அவன் பதறிவிட்டான். அது அங்கே கூட்டம் அதிகம் வரும் நாளென்றும், குறிப்பாக பண்டாரங்கள் அதிகமாக வருவார்கள் என்றும், வடநாட்டுச் சாமியார்கள் பொதுவில் காட்டான்களென்றும் சொல்லி பயமுறுத்தவே அந்த திட்டத்தை உடைப்பில் போட்டுவிட்டு நானும் எனது நன்பனும் பேருந்தில் தில்லிக்குக் கிளம்பிவிட்டோ ம்.
__________________________________________________________________________________________________________________________
இன்று டிசம்பர் 31. அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே தெருவில் நடக்கும் கும்மாளங்களை வேடிக்கை பார்த்து நிற்கிறேன்.
சிகரெட்டின் காரமான புகை நுரையீரலெங்கும் பரவி குளிரை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது.. நாளை திரும்பவும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர். இன்னும் இன்னும் இப்படி தில்லிக்கு வந்து குளிரிலும் வெயிலிலும் வதைபட்டுச் சாக எத்தனையோ முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்
உத்திரபிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து நாளும் நாளும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மாயாவதியின் தங்க நிறச் சிலைகள்
சிரித்துக் கொண்டிருந்ததை வரும் வழியில் பல இடங்களில் காண நேர்ந்தது.
அந்தச் சிலைகள் யாரைப் பார்த்து சிரிக்கிறது?