எந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…!
சனிக்கிழமை மாலை நன்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்ற நேரமாகப் பார்த்து மொத்த குடும்பமும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் எகிறிக் குதித்து விடும் கொலைவெறியோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவே நானும் ஆர்வத்தோடு என்ன நிகழ்ச்சி என்று கவனிக்க ஆரம்பித்தேன். அது எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. மலேசியாவில் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நடிகை “ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் படையோடு வந்து கேதாரத்தைக் வென்றனர் தமிழர்கள்; இப்போது மீண்டும் மனங்களை வெல்ல எந்திரனாக வந்துள்ளனர்” என்று ஏதேதோ பில்டப் கொடுத்து நிகழ்ச்சியை இனிதே ஆரம்பித்தார்.
தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர்களும் இன்னபிற அல்லுசில்லுகளும் தமக்கு பெரிய நகம் இருப்பதையும் சொரிந்து விடுவதில் தமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டியவாறே இருந்தனர். பெரும்பாலும் எல்லோரது பேசு பொருளின் நாயகனும் மேடையின் கீழே பத்தாயிரம் வருடம் வாழ்ந்து வரும் இமயமலை பாபாவிடம் கற்றுக் கொண்ட மோன தவத்தில் அமர்ந்திருந்த ரஜினி தான் என்பதை இங்கே குறிப்பிடத்தேவயில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கிழண்டு போன காலத்தில் நடித்த திரைப்படங்களில் தமது சூப்பர் பவர் இமேஜையோ நடிப்புத் திறமையையோ நம்பியதை விட அன்றைக்கு புதிதாய் திரையுலகிற்கு வந்த இளவயது நாயகிகளின் தொடையையும் மார்பையுமே நம்பியிருந்த அதே அவலமான நிலைக்கு ரஜினி காந்தும் வந்து விட்டதை அவ்வப்போது காட்டிய டிரெய்லர் காட்சிகளில் உணர முடிந்தது.
ரஜினியின் வழக்கமான உத்திகளான அரசியல் கண்ணாமூச்சி, பஞ்சு டயலாக் சவடால், தலையைச் சொரியும் கிறுக்குத்தனங்கள் போன்றவை இனிமேல் தனது இரசிகர்களிடம் செல்ப் எடுக்காது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். பாபா பட வெளியீட்டு சமயத்தில் ஓவர் டோ சாகிப் போன ஆன்மீகவாதி வேடமும் எருமைக்கு பவுடர் அப்பிய கதையாக பல்லிளிக்க ஆரம்பித்து விட்டதால் அவரது இப்போதைய நம்பிக்கை ஓவர் பில்டப்பும் ஷங்கர் போன்ற பிரம்மாண்டங்களும் தான். ஷங்கரும் லேசுபட்டவரல்ல.. கம்யூட்டரையே சோசியக் கிளியாக்கி விட்ட மக்கள் கூட்டம் தான் தனது டார்கெட் ஆடியன்ஸ் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். தொப்பையின் படம் வரைவது, தார் ரோட்டில் பட்டுப்புடவை டிசைன் வரைவது போன்ற உயர்ரக கலாரசனை கொண்டவர். அவரது மூளையில் உதிக்கும் இது போன்ற புதுமையான கற்பனைகளுக்கெல்லாம் கம்யூட்டர் தொழில்நுட்பத்தின் துணை இருக்கும் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்ன.
இந்தப்படம் இயந்திர மனிதன் சம்பந்தப்பட்டது என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலமும் முன்னோட்டக் காட்சிகளின் மூலமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஹாலிவுட் திரைப்படங்களோடு போட்டியிடும் திறமை கொண்டவர் என்று போற்றப்படும் ஷங்கரும், கிழண்டு ஓய்ந்து போன ரஜினியின் இன்றைய பரிதாப நிலையையும் இணைத்துப் பார்த்தால் நிச்சயமாக உலக அழகியோடு ரோபாட் போடும் குத்து டான்சு ஒன்று படத்தில் இடம் பெரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய தேதியில் அஜித் விஜய் போன்ற லுச்சா பயல்களே திரையில் தமது காதலியைப் பார்த்து “நான் நடந்தா அதிரடி, நான் ஆய் போகலைன்னா குசு வெடி” என்று காதல் மொழி பேசும் போது, வைரமுத்து போன்ற வார்த்தை வியாபாரியையும், ஹாலிவுட்டிலேயே தேங்காய் மூடிக் கச்சேரி நடத்தி வந்திருக்கும் ரகுமான் போன்ற ஹைடெக் பாகவதரையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? “இவன் பேர் சொன்னதும் நிலவும் தரைதட்டும், அடி அழகே உலகழகே இவன் எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்” என்கிற காதல் ரசம் சொட்டும் இலக்கியத்தரமான கவிதை வரிகளைக் கேட்க முடிந்தது.
ரொம்ப காசு கொழுப்பு இருக்கிறவனெல்லாம் காதலியைக் கொஞ்சும் போது கூட பில்டப்போட தான் கொஞ்சுவானுக போலிருக்கு. பாவம் அந்தக் காதலிகள். கர்த்தாவே நீர் அவர்களுக்காகவும் மனமிரங்கும்.
விடாது கறுப்பு…!
எல்லா சொரிஞ்ஞர்களும் சொரிந்து முடிந்த பின் கடைசியாக தமிழக முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மருத்துவர் கலைஞர் திரையில் தோன்றி வாழ்த்துச் செய்தி வாசித்தார். ஒரே கல்லில் அதிகபட்சம் எத்தனை மாங்காய் அடிக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கமாகக் காட்டினார். பேரனின் சன்பிக்சர்ஸ் செய்து வரும் செம்மொழிச் சேவையை பாராட்ட வேண்டும், ரஜினியைப் புகழ்ந்து அவரது ரசிகர்களை கவர் செய்ய வேண்டும், ரகுமானைப் புகழ்ந்து அவரது ரசிகர்களையும் கவர வேண்டும், மொத்தமாக தமிழர்களுக்கு குச்சி ஐஸ் விற்க வேண்டும், இத்தனையையும் தாண்டி திராவிட இயக்கத்தின் சமீப காலத்திய அரசியல் பண்பாட்டின் படி ‘கல்யாண வூட்லயும்…..; எளவூட்லயும்…..’ எனும் தத்துவத்தை நிலைநாட்டியாக வேண்டும். ஒரே பந்தில் நாலு சிக்ஸர் அடிக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் தான் பேட்ஸ்மேன் களத்தில் இறங்கினார்.
ஆரம்ப வாக்கியத்திலேயே அவர் மற்ற சொரிஞ்ஞர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதையும் தான் அகம் புறம் எனும் இலக்கிய எல்லைகளில் கரைகண்டவர் என்பதையும் நிறுவிக் காட்டிவிட்டார். புறத்தில் சொரியும் அதே நேரத்தில் அகத்தையும் சொரிந்து விட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அண்ணாவின் இதயத்திடம் இளவல் கற்றுக் கொண்ட அரசியல் ட்யூஷன். புரியும் விதமாகச் சொன்னால் ஒரே நேரத்தில் அடுத்தவனைப் பாராட்டியது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் தன்னையே பாராட்டிக் கொண்டது போலவும் இருக்க வேண்டும். இப்படியான ஒரு தருணத்தில் அவர் வீசிய கூக்ளி கீழ்கண்ட விதமாக வெளிப்பட்டு தமிழர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தது – “ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரமும் இயந்திரமாய் உழைக்கும் நான் எந்திரன் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”
“தமிழர்களே தமிழர்களே.. நீங்கள் மலேசியாவுக்குப் போய் ஒளிந்து கொண்டால் மட்டும் நான் சும்மா விட்டு விடுவேனா அங்கேயும் வந்து ஆட்டையைக் கலைப்பேன்..” என்பது போல் இருந்தது அவர் தொடர்ந்து சொன்ன வாழ்த்துச் செய்தி. ஏற்கனவே அந்த அரங்கில் மாப்பிள்ளையாகவும் பொணமாவும் கொலுவீற்றிருந்த அரைக்கிழத்துக்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்திருக்கும்; ஆனாலும் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாபா கற்றுக் கொடுத்த யோக சாதனைகளின் தொடர் பயிற்சிகளின் மூலம் அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார். கஞ்சாவுக்கு இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது எனும் பேருண்மை முந்தாநேற்று தான் எனது சிறு மூளைக்கே எட்டியது.
எல்லோரும் கண்டிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.
படத்தின் பட்ஜெட் நூற்றம்பது கோடி என்றார்கள் சிலர். இருநூறு கோடி என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். வெள்ளையின் மதிப்பு அத்துனையென்றால் கறுப்பின் மதிப்பு எத்தனை இருக்கும் என்பதை யோசித்தால் லேசாகக் கிறுகிறுப்பே ஏற்படுகிறது. நிச்சயமாக இது ஹாலிவுட்டிற்கு கோலிவுட் விடுத்துள்ள சவால் தான். ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற ஏப்பை சாப்பைகளெல்லாம் ஷங்கரின் தொழில்நுட்ப அறிவுக்கு முன் இனி பிச்சையெடுக்க வேண்டியது தான். இல்லையா பின்னே நவீன தொழில் நுட்பத்தை வைத்து அவனெல்லாம் பண்டோரா கிரகத்தை தான் உருவாக்கினான் – நம்மாளுக மாதிரி (எந்திரன்) சிட்டி டான்ஸ் எடுக்க முடியுமா? தொப்பைல அந்த தொங்கிப் போன சொங்கியோட மூஞ்சியத்தான் வரைய முடியுமா? என்ன ஒரே குறைன்னா… இந்த விஷயத்துல ஷங்கர் தனது முன்னோடியான இராம. நாராயணனுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்திருக்கலாம். என்ன
இருந்தாலும் அம்மனையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் குத்து டான்ஸ் ஆட விட்டு ஷங்கருக்கே இந்த விசயத்தில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பது அவர் தானே.
இந்தியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான ஏழைகளின் எண்ணிக்கைப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்து இந்தியர்களை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ள நமது அரசு,
இன்னொரு பக்கம் சீனாவோடு வல்லரசு போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நமது திரைக்கலைஞர்களோ சீனா போன்ற அல்லுசில்லுகளோடு மோதாமல் டைரக்டாக அமெரிக்க
ஹாலிவுட்டின் மீதே தமது தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்தப் புனிதமான புனிதப்போரில் ஈடுபட்டுள்ள நமது கலைஞர் பெருமக்களுக்கு நாம் நமது ஆதரவை நல்க வேண்டியது நமக்கான வரலாற்றுக் கடமையாகிறது. எப்படிப் பார்த்தாலும் முதல் ஒரு வாரத்துக்கு ரஜினியின் ரசிகக்கோமுட்டிகளே இந்தத் திருப்பணியை பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றி விடுவார்கள். ஆனாலும் நூற்றுக்கணக்கான கோடிகளை பிக்பாக்கெட் அடிக்க ஒருவாரமும் ஊருக்குப் பத்து கோமுட்டிப்பயல்களும் மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நான் எண்ணவில்லை.
அவர்கள் வருவார்கள். நம்மிடம் வருவார்கள். ஏன்னா தமிழன் நெத்தியில் தானே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அவர்களை நமது வீட்டுக்கே கூட்டி வருவதை விட இலவசமாக் கொடுத்த
டீ.விக்கு வேறு என்ன புடுங்குற வேலை இருக்க முடியும்? நமது ஆதரவை எதிர்பார்த்து நமது வீடுகளுக்கே வரும் அவர்களை நாம் செமத்தையாக ஆதரித்து விடுவோம். நாம் ஆதரிக்கும்
ஆதரிப்பில் இன்னும் ஒரு பத்து வருசத்துக்காவது இந்த படத்தின் சாதனை முறியடிக்கப் பட முடியாததாக இருக்க வேண்டும். வேற எவனுக்கும் இப்படி இருநூறு கோடியில் படம் எடுக்க தில்லு வரவே கூடாது.
எனவே மக்களே.. இப்படி பெரும் பொருட் செலவில் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலைப்படைப்பை – திரைக் காவியத்தை – திரை ஓவியத்தை நாம்
கட்டாயமாகப் பார்த்து நமது பர்மா பஜார் வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து யாரும் அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே காசு கொடுத்து வாங்குங்கள் – ஏனென்றால் Piracy kills என்று திரைத்துறை ஜாம்பவான்களே சொல்கிறார்கள். பர்மா பஜார் வியாபாரிகள் ஏற்கனவே பாவம் கடும் தொழில் நசிவையும் காவல்துறை அடக்குமுறையையும் மீறி மக்களுக்காக இப்படி கலைச்சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களை நாம் ஆதரிப்போம்..!
எந்திரன்…. ஆபாசக் கவுண்ட்Down Starts…. 1,2,3
3 idiots படமும் – வடக்கத்தியாரின் தென்னாட்டு வெறுப்பும்
இப்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது வெகுவாகக் குறைந்து விட்டது. அதிவும் இந்தி திரைப்படம்? சுத்தமாகக் கிடையாது – விளங்காத மொழியென்பதால் எப்போதுமே இந்தி திரைப்படம் பார்க்க விரும்பியதில்லை. சமீப நாட்களாக அலுவலக சுற்றுப்பயனமாக வட இந்தியாவில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதிலும் கடந்த ஒரு மாதமாக தில்லியில் தங்க வேண்டியாகிவிட்டபடியால், ஒரு பேயிங் கெஸ்ட் அக்காமடேஷனில் தங்கியிருக்கிறேன். என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர்கள் – ஒருவன் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவன் – ஒருவன் உத்திர பிரதேசம் – ஒருவன் நம்ம ஊர், கும்பகோணம்.
வந்தநாளிலிருந்தே எனக்கும் மற்ற இரு வடக்கத்தியானுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை. அனேகமாக நான் அறைக்கு பீஃப் பிரியாணி பார்சல் வாங்கி வந்து சாப்பிட்ட இரண்டாவது நாளிலிருந்தே கொஞ்சம் முறைப்பாகத் தான் போய்க் கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று ராகுல் ( ம.பி காரன்) எங்கள் எல்லோருக்குமாக சேர்த்து புதிதாக திரைக்கு வந்துள்ள 3 இடியட்ஸ் என்ற இந்திபடத்துக்கு டிக்கெட் வாங்கி வந்துவிட்டான். நான் ஆரம்பத்திலேயே எனக்கு இந்தி ஒரு எழவும் புரியாது என்று சொல்லிப்பார்த்தேன் – விடவில்லை. அதிலும் நம்ம கும்பகோணத்தான் ஒரு பார்ப்பான், இந்தி கற்று விடவேண்டும் என்று கடும் முனைப்புடன் இருக்கிறவன். மற்ற இருவருமாக சேர்ந்து இவனிடம் இந்தி படம் பார்த்தால் ஓரளவு இந்தி பேசக் கற்றுக் கொண்டு விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. ம்ம்… சொல்ல
மறந்து விட்டேன் – அவர்களும் பார்ப்பனர்கள் தான். ஒருத்தன் காயஸ்த் பார்ப்பான், இன்னொருவன் வேரெதோவொரு பார்ப்பான்.. என்னதான் பார்ப்பான்களாயிருந்தாலும், இவர்களுக்குள் ஒரு க்ளியரான டிமார்கேஷன் (பிரிவு) இருக்கும் – அதாவது நம்ம கும்பகோணத்தானுக்கும் வடக்கத்தியானுகளுக்கும். இதுல எவன் எவனை ஒதுக்கறான் என்று எனக்கு இதுவரை புரியவரவில்லை.
கிடக்கட்டும். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் நம்மாளு என்னைப் போட்டு நச்சியெடுத்து சம்மதிக்க வைத்துவிட்டான். படத்தைப் பற்றி நிறைய விமர்சனக்கட்டுரைகள் தமிழில் கூட வந்திருக்கிறது.. கதை என்று பார்த்தால்…. ஹீரோ ரான்ச்சோ ஒரு புத்திசாலி (ஆமிர்கான் ) கல்லூரி மானவன்(!). கூட்டாளிகளாக இன்னும் ரெண்டு மானவர்கள் – ஒரு மேல் நடுத்தர வர்க்க முசுலீம்(மாதவன்), ஒரு கீழ்நடுத்தரவர்க்க இந்து (பேரு தெரியலை). இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பின்னணி கொண்டவர்கள் – ஆமிர் பொரியியலை அதன் உண்மையான அர்த்தத்தில் கற்க விரும்புபவன் – நடைமுறையில் இருக்கும் கல்வித் திட்டத்தின் மேல் விமர்சனம் கொண்டவன். மாதவன் புகைப்படக்கலையில் ஆர்வம் கொண்ட மானவன் – அப்பாவின் கட்டாயத்துக்கு பொரியியல் கற்க வந்துள்ளவன். அந்த இன்னொருவன், வீட்டில் பொருளாதார நெருக்கடி – எப்படியோ படித்து ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற கட்டாயத்துக்கு பொரியியல் கற்க வந்துள்ளவன்.
இவர்கள் மூவரும் சேர்ந்து கல்லூரி நாட்களில் லூட்டியடிக்கிறார்கள். இப்படியாக வாத்தியார்களையும், கல்லூரி தாளாலரையும் கடுப்படித்து படித்து முடிக்கிறார்கள் – மாதவன் படித்து முடித்தவுடன் பொரியியல் துறையை விடுத்து தனக்கு விருப்பமான புகைப்படக்கலையை தேர்ந்தெடுக்கிறார் – ஆமிரின் ஆலோசனை. இன்னொரு மானவனுக்கு கேம்ப்பஸ்ஸில் வேலை
கிடைக்கிறது – ஆமீரின் உதவி+ஊக்கம்+etc. கதாநாயகியின் அக்காள் ஒரு பிள்ளையை பெற்றெடுக்கிறாள் – உபயம் ஆமிர் ( அதாவது பிரசவ
கட்டத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் ஒரு இக்கட்டான நெருக்கடியில் அப்பெண்ணுக்கு சுகப்பிரசவம் பார்க்கிறார் – ஹீரோவாச்சே, சும்மாவா?).
படம் நெடுக வரும் இன்னொரு பாத்திரம் – ராமலிங்கம் எனும் மானவன். இந்த பாத்திரப்படைப்பைப் பற்றி தான் எனது நெருடல் –
இவன் வரும் காட்சிகளை நான்(ங்கள்) காணவேண்டும் என்பதற்காகவே ராகுல் தனது கைக்காசைப் போட்டு டிக்கெட் வாங்கி வந்திருக்கிறான் என்பது எனது அனுமானம். இந்த ராமலிங்கம் போன்ற ஒரு பாத்திரத்தை நாமும் கூட நமது கல்லூரி வாழ்க்கையில் பார்த்திருப்போம். “ஏய் இது என்னோட டிபனாக்கும் – இது என்னோட பேணாவாக்கும் – இது என்னோட டிராப்ட்டராக்கும் – தொடாதே!” இந்த மாதிரி ஒரு அல்பை கேரக்டர்.
படித்து முடிக்கும் சமயத்தில் வரும் ஒரு ஆசிரியர் தின விழாவில், கல்லூரி தாளாலரை இம்ப்ரெஸ் செய்ய ராமலிங்கம் லைப்ரேரியன் உதவியுடன் ஒரு இந்தி உரையை தயாரிக்கிறான் – அதில் வரும் ஏதோவொரு வார்த்தையை மாற்றி “பலாத்கார்” என்று வரும்படி ஆமிர் செய்து விடுகிறான். ஏன்? ஏனென்றால் இந்த கேரக்டர் ஒரு அல்பையாச்சே. அந்த விழாவில் எல்லோர் முன்னிலையிலும் உரையை படித்து கடும் அவமானத்துக்குள்ளாகும் ராமலிங்கம், இந்த மூன்று நன்பர்களிடமும் வந்து, இன்னும் பத்து ஆண்டுகளில் தான் சொந்த வாழ்க்கையில் ஒரு உயர் நிலைக்கு வந்தபின் இவர்களை வந்து சந்திப்பதாக சவால் விட்டுச் செல்கிறான். முதல் காட்சியே பத்தாண்டு கழித்து ராமலிங்கம் இவர்களை சந்திக்க வருவதிலிருந்து தான் படம் ஆரம்பிக்கிறது. இவர்களில் ரான்ச்சோ(ஆமிர்) எங்கேயிருக்கிறார் என்று எவருக்கும் தெரியவில்லை – அவரைத் தேடிப்போகும் இடைவெளியில் ஃப்ளேஷ்பேக்காகத் தான் மொத்த கதையும் விரிகிறது.
ராமலிங்கம் தன்னை கல்லூரி முதலாண்டு முதல் வகுப்பில் அறிமுகப்படுத்திக் கொள்ளும் போதும் “I am Chattar Ramalingam born in Uganda, studied in Pondicherry” என்றே சொகிறான். ராமலிங்கம் எனும் கதாபாத்திரம் – தெளிவாக தமிழர்களின் உருவகமாகவே படத்தில் காட்டப்படுகிறது. அவன் தட்டுத்தடுமாறி இந்தி கற்றுக்கொள்ள முயல்கிறான் – இடையிடையே ஆங்கில வாக்கியங்கள் போட்டு பேசுகிறான். MTI – அதாவது மதர் டங் இன்ப்ளுயன்ஸ் என்பார்களல்லவா, தாய்மொழி பாதிப்புடன் பிற மொழிபேசுவது போலவே, தென்னாட்டு பாதிப்புடன் (accent) இந்தி பேசுகிறான். மொத்த திரையரங்கும் கைகொட்டிச் சிரிக்கிறது – ராகுல் எனது மற்றும் கும்பகோணத்தானின் முகபாவத்தை ஓரக்கண்ணில் கவனிப்பது தெரிந்தது
ராமலிங்கம் கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வும் கூட கச்சிதமாக தமிழர்களை நினைவுக்குக் கொண்டுவரும் படியான ஒரு தேர்வு. தில்லியில் வடகிழக்கிலிருந்து வேலைக்காகவும் படிப்புக்காகவும் இடம் பெயர்ந்து வரும் மக்களை இங்கே வடநாட்டினர் “சிங்க்கீஸ்” (சைனீஸ் என்பதன் சுருக்கம்) என்றே விளித்து கிண்டல் செய்கிறார்கள். அவர்களை இந்தியர்களாகவே வடக்கில் கருவதில்லை. அதே போல் தமிழர்களையும் அவர்கள் இந்தியர்களாக கருதுவதில்லையோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு. நான் வட இந்தியர்கள் என்று குறிப்பது ஊடகங்களை
மட்டுமல்ல – இங்கே சாதாரணமாக என்னோடு பழகுபவர்களும் கூட இதே போன்ற அணுகுமுறையை கையாளுவதைப் பார்த்திருக்கிறேன்.
இதைப் பிரதிபலிக்கும் விதமாகவே ராமலிங்கம் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் போது தான் உகாண்டாவில் பிறந்ததாக சொல்கிறான். வேறு சில இடத்திலும் இது அழுத்தமாக புரியும் விதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த கதாபாத்திரம் கோமாளித்தனமானதாக மட்டும் காட்டப்படாமல், ஒரு தந்திரசாலி, குயுக்தியானவன்.. என்பது போலவும் காட்டப்பட்டுள்ளது…ம்ம்ம்ம்.. ஒரு விதமான காமெடிக் வில்லன் போல! பரீட்சையில் தான் அதிக மார்க் வாங்க வேண்டும் என்பதற்காக பரீட்சைக்கு முந்தைய இரவு ஹாஸ்டலில் உள்ள அறைகளில் மற்ற மானவர்கள் அறியாமல் செக்ஸ் புத்தகத்தை வைக்கிறான். ஹீரோ கல்வித் திட்டத்தைப் பற்றி வகுப்பில் ஆசிரியரிடம் விமர்சித்துப் பேசுகிறான், அதற்கு ஆசிரியர் அந்த மானவனை(ஹீரோவை) கண்ணாபின்னாவென்று திட்டுகிறார் – மற்ற மானவர்களெல்லாம் அமைதியாக இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ராமலிங்கம் மட்டும் சத்தம் போட்டு சிரிப்பது போலவும், எகத்தாளமாக திரும்பி பார்க்கிறான்.
பொதுவாக நான் படிக்கும் காலத்தில் என்னைப் பொருத்தளவில், முதல் பென்ச்சில் உட்கார்ந்து கொண்டு, தலையை எண்ணை போட்டு படிய வாரிக்கொண்டு, சட்டையில் காலர்பட்டன் நெக்பட்டனெல்லாம் போட்டுக் கொண்டு, ஆசிரியர் ஏதாவது கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே முந்திரிக் கொட்டைத் தனமாக தான் மனப்பாடம் செய்து வைத்திருந்ததை வாந்தியெடுக்கும் மானவனைக் கண்டாலே பிடிக்காது. எட்டி உதைக்கலாமா என்று கூட தோன்றும். இந்த ராமலிங்கம் கதாபாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. ராமலிங்கம் ஒரு கோழை, காரியவாதி, சுயநலவாதி, துரோகி, இங்கிதம் தெரியாவன் (ராமலிங்கம் அடிக்கடி குசுவிடுவது போல காட்சிகள் உள்ளது) என்பதை மிக முயன்று நிறுவியுள்ளனர். இங்கே ராமலிங்கம் என்பது ஒரு கதாபாத்திரமாக அல்ல – தமிழர்களின் ஒரு குறியீடாகவே இருக்கிறது.
எப்படி?
பொதுவில் இங்கே (வடக்கில்) தமிழர்கள் காரியவாதிகள் என்றும் எப்படியாவது எதைச் செய்தாவது தங்கள் காரியம் செய்துமுடித்துக் கொள்வார்கள் என்பது போலவும் ஒரு கருத்து உள்ளது. ஆபீஸுக்கு பக்கத்தில் வாடிக்கையாக டீ குடிக்கும் கடையில் சாதாரணமாக என்னிடம் அந்த கடை முதலாளி ஒரு நாள் கேட்டார் – “நீங்கள் எப்படியோ எல்லா துறைகளிலும் முதலில் வந்துவிடுகிறீர்கள்.. குறைவான சம்பளத்துக்கும் கூட வேலை செய்கிறீர்கள், ஏதேதோ செய்து முதலிடத்துக்கு வந்து விடுகிறீர்கள்” என்றார் – அந்தக் கருத்தின் உருவகமாக ராமலிங்கம் கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது.
பொதுவில் தெற்கத்தியர்கள் (குறிப்பாக தமிழர்கள்) உலகமயமாக்களின் பின் உருவான ஐ.டி துறை, ஐ.டி சேவைத் துறை போன்றவைகளில் அதிகளவு வேலைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள் எனும் குமைச்சல் வடக்கில் இயல்பாகவே இருக்கிறது. அதற்குக் உண்மையான காரணம் அவர்களை விட ஒப்பீட்டு ரீதியில் ( BIMARU மாநிலங்கள் சில ஆப்ரிக்க நாடுகளை விட படு கேவலமான முறையில் உள்ளது) கல்வித்துறைக்
கட்டமைப்புகள் இங்கே வலுவாக இருப்பதாகும். ஆனால், வடக்கில் சாதாரணர்களிடையே ஏதோ தமிழர்கள் தந்திரமாக (அவர்களுக்கு
தென்னிந்தியா என்றாலே அது தமிழ்நாடு தான்) தமது வேலைகளைத் திருடிக் கொள்கிறார்கள் என்ற எண்ணம் இருக்கிறது.
இடைவேளைக்குப் பின் கதையில் ஒரு ட்விஸ்ட்.. அதாவது ஆமிர் உண்மையான ரான்ச்சோ அல்ல. ரான்ச்சோ என்பது ஒரு பெரிய பண்ணையாரின் பையன். ஆமிர் அந்த கிராமத்தில் நன்றாக படிக்கும் ஏழை மானவன் என்பதால், ரான்சோவின் பேரில் பொரியியல் படித்து பட்டத்தை ரான்சோவுக்கு கொடுத்துவிட வேண்டும் எனும் ஏற்பாட்டில் தான் படிக்கவே வருகிறான் (இது இன்னொரு நெருடல்). போலவே படித்து முடித்ததும் பட்டத்தை உண்மையான ரான்ச்சோவிடம்
கொடுத்துவிட்டு ஒரு ஒதுக்குப் புறமான கிராமத்தில் பள்ளி ஆசிரியராகவும் ஒரு விஞ்ஞானியாகவும் (!?) வாழ்ந்து வரும் ஆமிரின் உண்மையான பெயர் – ஃபுங்செக் வாங்க்டூ. இவரிடம் சில முக்கியமான பேட்டண்டுகள் இருக்கிறது. வாங்க்டூவிடம் ஒரு ஒப்பந்தம் போடும் வேலையாகத் தான் ராமலிங்கம் இந்தியா வருகிறான் – ஆனால் வாங்க்டூ தான் ஆமிர் என்று தெரியாது. அந்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை.
ஆமிரை கிராமத்தில் பொடியன்கள் மத்தியில் வைத்துப் பார்க்கும் ராமலிங்கம் முதலில் அவனைக் கேவலமாக பேசிவிடுகிறான்.. பிறகு அவனே தான் சந்திக்க வேண்டிய வாங்க்டூ என்று தெரியவரும் போது இதுவரை தான் பேசியதெல்லாம் சும்மா தாஷுக்காக என்றும் ஆமிர் தான் ஜெயித்து விட்டதாகவும் சொல்லி குழைகிறான். உச்சகட்டமாக தனது பேண்ட்டை கழட்டி ஜட்டியுடன் திரும்பி நின்று “நீ தான் பெரியாளு” என்பது போன்று ஏதோ இந்தியில் சொல்கிறான். ஆமிரும் மற்ற இரு நன்பர்களும் கேலியாக சிரித்துக் கொண்டே ஓடுகிறார்கள் – ராமலிங்கம் பேண்ட்டை இழுத்து விட்டுக் கொண்டே துரத்துகிறான் – காட்சி உறைந்து படம் முடிகிறது..
இந்த இறுதிக் காட்சி “தமிழர்கள் தமது காரியம் நடக்க வேண்டுமானால் எந்தளவுக்கும் இறங்கிப் போக தயங்காத சுயநலவாதிகள்” என்ற
வடநாட்டான் நம்மேல் கொண்டிருக்கும் கருத்தின் உருவகம்.
“ஆப்கோ ஹிந்தி மாலும்ஹேனா?”
“Sorry I dont know hindi”
என்று எனக்கும் ராகுலுக்கும் ஆரம்பத்தில் நடந்த அந்த உரையாடலைத் தொடர்ந்தே என்னை ஏதோ செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த உயிரினத்தைப் பார்ப்பது போலவே பார்க்க ஆரம்பித்து விட்டான். ஆக, நான் ராமலிங்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதும், ராமலிங்கத்தின் கோமாளித்தனங்களைப் பார்த்து கூட்டம் கைகொட்டிச் சிரிப்பதை பார்க்க வேண்டும் என்பதும் தான் அவன் நோக்கம். படம் நெடுக இடையிடையே அவன் என்னை
ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்ததை உணர முடிந்தது. நானாவது பரவாயில்லை – ஹிந்தியை முற்றிலுமாக புறக்கனித்து விட்டவன். ஹிந்தி தெரியாது என்று பெருமையாகவே சொல்லிக் கொள்பவன். ஆனால் சங்கரனின்( கும்பகோணம்) நிலையோ தர்மசங்கடமாகிவிட்டது. அவன் தட்டுத்தடுமாறி ஹிந்தி கற்றுக் கொள்ள முயன்று கொண்டிருப்பவன் – அவனுடைய பட்லர் இந்தியை தினப்படி அவர்கள் கிண்டலடிப்பது வழக்கம். இந்தப் படமோ அதில் உச்சகட்டமாகிவிட்டது.
திரையரங்கை விட்டு வெளியே வந்து நான் தனியே போய் தம்மடிக்க நின்றேன். சங்கரன் உர்ரென்று வந்து பக்கத்தில் நின்றான். “நீங்க
வேணா பாருங்க பாஸு.. சீக்கிரமா நல்லா இந்தி பேசக் கத்துக்குவேன்” என்றான். “கத்துக்கிட்டு?” என்றேன்… ஒன்றும் பதில் சொல்லவில்லை.
மொழியின் மேல் எனக்கு வெறுப்பெல்லாம் கிடையாது -நான் மொழிவெறியனுமல்ல- ஆனால் அது திணிக்கப்படுவது தான் எரிச்சலூட்டுகிறது. எனது இந்தப் பயனத்தில் தில்லியின் சில பகுதிகளுக்கு செல்ல நேர்ந்தது.. அதிலும் குறிப்பாக கால்காஜி பகுதியில் கணிசமான அளவில் தமிழர்கள் இருக்கிறார்கள்.கூலி வேலைகளில் அதிகம் ஈடுபட்டுள்ள உழைக்கும் மக்களான அவர்களிடம் பழகிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்கள் சொல்வது வேறு ஒரு கோணத்தையும் காட்டுகிறது. வடநாட்டைச் சேர்ந்த, மற்றும் பீகார், உ.பி, ம.பி போன்ற மாநிலங்களின் தொலைதூர கிராமங்களிலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பிற உழைக்கும் மக்கள் தமது வர்க்கத்தவரான தமிழர்களின் மேல் மொழிக் காழ்ப்பைக் காட்டுவதில்லை. இயல்பாக இவர்களும் இந்தி கற்றுக் கொள்கிறார்கள். புதிதாக வந்து சேரும் இந்தி பேசத்தெரியாத தமிழர்களுக்கும் மற்ற உழைக்கும் வடநாட்டினர் உதவியாகவே இருக்கிறார்கள். வேலைக்கான போட்டி மட்டுமே அவர்களிடம் நிலவுகிறாதேயொழிய தமிழன் எனும் காரணத்துக்காக அவர்கள் ஒதுக்கப்படுவதில்லை –
நடைபாதைகளின் ஒரே பகுதியை அவர்கள் தமக்குள் சச்சரவில்லாமல் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.
நடுத்தர, உயர்நடுத்தர, மற்றும் மேல்தர வர்க்கங்களிடையே இயல்பாகவே மதராஸிகள் மேல் வெறுப்பு இருக்கிறது. அவர்கள் வேலைகளை நாம் அபகரித்துக் கொள்கிறோம் எனும் பொறாமை இருக்கிறது. இயல்பாக இந்த குமுறல்களெல்லாம் அவர்களுக்கு சரியான கல்விக்கட்டமைப்பை உறுதி செய்து தராத அரசின் மேல் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்தக் குமுரல்களை ஊடகங்கள் வழியே தமிழர்கள் மேலான வெறுப்பாக மடைமாற்றி விட்டிருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஒரு சின்ன உதாரணம் தான். உடன் வேலை செய்யும் வேறு தென்னாட்டவர்களிடம் பேசும் போது இதே போன்ற கள்ளப்பரப்புரை தொடர்ந்து நடந்து வந்திருப்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
மக்களின் வாழ்க்கையை சீர்குலைத்துவரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் சமீபத்திய உலகளாவிய பொருளாதார பெருமந்தத்திற்குப் பின் மேலும் சீர்குலைவை நோக்கி சென்று வரும் நிலையில், மக்களின் கோபம் தம்மேல் திரும்பிவிடாமல் தடுத்து வைக்க இது போன்ற படங்களும் ஆளும் வர்க்கத்துக்குத் தேவையாய்த் தான் இருக்கிறது. பிராந்திய பகைமைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அளவுக்கு வளருவதை ஆளும் வர்க்கம் எப்போதுமே விரும்பத்தான் செய்யும்.ஆனால், இந்த முரண்பாடுகள் முற்றி வெடிக்கும் நிலை ஒரு நாள் ஏற்படும் போது – இந்தியா எனும் இந்த ஏற்பாடு சிதைந்து போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.