கார்க்கியின் பார்வையில்

குஜராத் : தோல்வி யாருக்கு?

ஆங்கில ஊடகங்களை குஜராத் தேர்தல் என்னும் கண்கட்டு வித்தை அடைத்துக் கொண்டு பல வண்ண ஜாலங்களை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருக்கிறது. தற்சமயம் எந்த நடிகையின் படுக்கையறை சமாச்சாரங்களையும் விட ‘சுவாரசியமான’ பல காட்சிகளை இந்தத் தேர்தல் தன்னுள் கொண்டிருப்பதால் ஊடகங்கள் இதை ஒரு திருவிழாவுக்கு ஒப்பாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. மேடையில் ஜாலக்காரன் தனது அங்க அசைவுகளில் மக்களைக்
கட்டிப் போட்டு விட்டு லாவகமாக தனது சித்து வேலையைக் காட்டுவது போல, இந்த ஊடகங்கள் உண்மையான நிலைமையை பார்க்கவிடாமல் நமது கண்ணில் மண்ணைத் தூவுகிறார்கள்.

இந்தத் தேர்தல்களில் யார் வெல்லப்போகிறார்கள் என்பது பல அரங்க உரையாடல்கள் மூலம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல்களில் ஒருவேளை காங்கிரஸ் கூட வெல்லக்கூடும். அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நிகழ்ந்தால் இரண்டு காரணங்களை ஊடகப் புலிகள் முன்வைக்கும் வாய்ப்பு இருக்கிறது – 1) இந்துத்துவம் தோற்கடிக்கப்பட்டு விட்டது 2) குஜராத்திகள் இதைவிட வேகமான வளர்ச்சியை கோருகிறார்கள்… ஒரு வேளை பார’தீய’ சனதா வென்றால் – 1) இந்துத்துவம் வென்றது 2) குஜராத்திகள் கடந்த அய்ந்து ஆண்டுகள் மோடி செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்களால் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இந்த ஊடக விவாதங்களில் கேள்விக்கப்பாற்பட்டதாக மோடி குஜராத்தில் செயல்படுத்திய ‘வளர்ச்சித்’ திட்டங்களை முன்வைக்கிறார்கள். அப்படி குஜராத் என்ன தான் வளர்ந்து விட்டது? மாநில அரசே ஒப்புக்கொண்ட தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 500 ஆனால் “பல்வேறு காரணங்களுக்காக” உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் எண்ணிக்கையோ 6,055 ( http://in.news.yahoo.com/071011/32/6lu61.html ) இதற்கெல்லாம் காரணம் புதிய பொருளாதாரக் கொள்கைகளும், அதன் விளைவாக விளை பொருட்களுக்கு விலைகிடைக்காததும் முடிவில்
கடன் சுமை என்னும் மீள முடியாத வலையில் சிக்கிக் கொள்வதும் தான்.குஜராத், இந்தியாவில் தரகு முதலாளிகளின் சூரையாட்டத்திற்கான ஒரு இடமாகவே இருக்கிறது. உழைக்கும் மக்களோ நாட்டின் பிற மாநிலங்களைவிட மிக அதிகமாகவே சுரண்டப்படுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பே கூட்டுறவு வங்கிகள் நாசமாகிப் போனதால் சிறு தொழில்கள் ஆதரிப்பார் இன்றி நலிவடைந்து வருகிறது. கடற்கரையோரங்கள் இரால் பண்ணைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மீன் பிடித் தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

 ஆனால் இதையெல்லாம் வெளிப்படையாக பேச முடியாத சிக்கலில்
காங்கிரசு இருக்கிறது. மன்மோகன் சிங்கோ மோடியின் இந்தப் பிரச்சாரத்துக்கு மறைமுகமாக வலு சேர்க்கும் விதத்தில் “குஜராதின் வளர்ச்சிக்கு மோடி மட்டுமே உரிமை கொண்டாடி விட முடியாது” என்று வெட்கம் கெட்டத்தனமாக பேசுகிறார்.

(http://timesofindia.indiatimes.com/India/Gujarat_doesnt_owe_its_growth_to_

Modi_alone_PM/articleshow/2615710.cms)ஒருவேளை மோடியின் வளர்ச்சிப் பிரச்சாரத்தைப் அம்பலப்படுத்தி காங்கிரசு பேசியிருந்தால் அது சேம் சைடு கோல் ஆகியிருக்கும். ஏனெனில் நாட்டின் பிற பகுதிகள் எப்படி “வளர்கிறதோ” அப்படித்தான் குஜராத்தும் “வளர்கிறது”. உண்மையில் .

காங்கிரசு – பாஜக இடையே  பொருளாதாரக் கொள்கையில் எந்த வேறுபாடும் கிடையாது. இருவரும் உலகவங்கியின் தாசர்கள். இருவரும் வளர்ச்சி என்பது விவசாயிகள் தற்கொலை எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப உயரும் புள்ளிகள் என்று மனப்பூர்வமாக நம்புகிறவர்கள். இந்த விசயத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாகத் தான் நடந்து கொள்ள முடியும். இந்த அம்சத்தில் இருவருக்கும் முக்கியமான முரண்பாடுகள் கிடையாது. இப்படியாக குஜராத்தில் ஏற்பட்டுள்ள “வளர்ச்சி” பற்றி இருவருமாக மாறி மாறி பேசிக்கொண்டிருந்தால் மக்களே ஒரு கட்டத்தில் காறித் துப்பி இருவரையுமே தூக்கி அரபிக் கடலில்
எறிந்திருப்பார்கள். 

எனவே சமயம் பார்த்து காத்துக் கிடந்த மோடி, சோனியா சாதரணமாக “மரண வியாபாரிகள்” என்று சொன்னவுடன் ( பிற்பாடு தேர்தல் கமிசன்
இதற்கு சம்மன் அனுப்பிய போது சோனிய அப்படியே பல்டியடித்து விட்டார்) தனது பிரியமான இந்துவெறிப் பிரச்சாரத்தை துவங்கி, மத்திய வர்க்க இந்துக்களிடையே ஏற்கனவே ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் இந்து வெறியின் சார்ஜ் இறங்காமல் பார்த்துக் கொண்டார்.

காங்கிரசுக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை அதன் போலி மதச்சார்பற்ற முகமூடி. தேசிய அளவில் தான் ஒரு மதச்சார்பற்ற
கட்சி என்று வேசம் கட்டியாக வேண்டிய நெருக்கடியில் அந்தக் கட்சி இருக்கிறபடியால் அதன் மைய்யக் கமிட்டித் தலைவர்கள் தமது பிரச்சாரக் கூட்டங்களில் மோடியை எதிர்த்தும், இந்துத்துவத்தை “எதிர்த்தும்” பேசியாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் அதே நேரம் அக்கட்சியின் குஜராத் மாநிலக் கமிட்டிக்கோ இந்துத்துவத்தை எதிர்த்து லேசாக செருமக் கூட தயாராக இல்லை. ஏறக்குறைய ‘பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்’ என்பது தான் காங்கிரசின் பாணி அரசியல்; ஒரு பக்கம் முஸ்லிம் ஓட்டுக்களும் தேவை – அதே நேரம் இந்துத்துவத்துக்கு எந்த பங்கமும் வந்துவிடக் கூடாது.

காந்தியால் பண்படுத்தப்பட்ட நிலமான குஜராத்தில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல பத்தாண்டுகளாக பொறுமையாக தமது பாணியிலான இந்துத்துவத்தை விதைத்திருக்கிறார்கள். இது அந்த விதைப்பின் அறுப்புக்காலம். யார் அறுப்பது என்பதே இந்த இப்போதைக்கு இருவருக்குமிடையேயான போட்டியாக இருக்கிறது. காங்கிரசு பல ஆண்டுகளாக இந்துத்துவ கும்பலின் இந்த வேலையை அடிமட்ட அளவில் எதிர்க்கும் அரசியலை செய்யவில்லை. அப்படிச் செய்வது அதன் திட்டத்திலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் காங்கிரசுக்கு இந்துத்துவத்தை எப்படிச் செயல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் மாறுபட்ட கருத்து இருக்கலாம்.. ஆனால் நிச்சயமாக எதிர்க்க வேண்டும் என்கிற திட்டம் இல்லை.

காங்கிரசின் இந்த இக்கட்டை மிகச்சரியாக புரிந்து வைத்திருக்கும் மோடியோ அடித்து விளையாடுகிறார். குஜராத்தி கவுரவமே காங்கிரசின்
“மரண வியாபாரி” பேச்சால் அழிந்து போய் விட்டதாக ஆரம்பித்த மோடி, தொடர்ந்து சோராபுத்தீன் படுகொலையை பகிரங்கமாக ஒரு
தேர்தல் பிரச்சார மேடையில் வைத்து நியாயப்படுத்தும் அளவுக்கும் போய் விட்டார். இந்த கொலை வழக்கு உச்சா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அங்கே குஜராத் மாநில அரசே, “இது ஒரு திட்டமிட்ட படுகொலை” என்று ஒப்புக்கொண்டு எதிர்தரப்பாக போலீசு அதிகாரி
வன்சாராவை நிறுத்தி வாதாடி வருகிறது. இப்போது மோடியின் இந்தப் பேச்சால், உண்மையில் வன்சாராவும் மோடியும் எதிர் எதிர் தரப்பில்
அல்ல – ஒரே பக்கத்தில் தான் நிற்கிறார்கள் என்று தெள்ளத்தெளிவாக புரிந்து விட்டது.

இந்த இடத்தில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் – ராமனை கேள்வி கேட்ட கருணாநிதி விசயத்தில் பொச்சில் நெருப்புப் பிடித்தமாதிரி துள்ளிக்குதித்த உச்சா நீதிமன்றம், மோடி விவகாரத்திலோ கமுக்கமாக இருக்கிறது. இத்தனைக்கும் சோராபுத்தீனைக் கொன்றவனை திட்டம் தீட்டிக் கொடுத்தவன் விசாரிக்கிறான் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்ட பின்னும் மோடியை எதிர்த்து வாயைத் திறக்காமல் கப்-சிப் என்று பொத்திக் கொண்டு நிற்கிறது உச்சாநிதீ மன்றம். தேர்தல் கமிசனர் கோபாலஸ்வாமியோ ( நெற்றியில் நாமம்!) மோடியின் பேச்சுக்களை தொலைக் காட்சியில் தான் பார்த்தேன் – இன்னும் எழுத்துப்பூர்வமான புகார் எதுவும் வரவில்லை என்கிறார். பார்ப்பனிய சார்பு கொண்ட அரசு இயந்திரங்கள் இருக்கும் வரை மோடி போன்ற கள்ளனே காப்பானாகவும் வலம் வர எந்தத் தடையும் இல்லை!

தேர்தலில் வெற்றி பெற எந்த அளவுக்கும் இறங்கிப் போக தயாராக இருக்கும் காங்கிரசு, பா.ஜ.காவில் சீட்டு மறுக்கப்பட்டவர்களைத் தேடிப்
பிடித்து தங்கள் கட்சி சார்பாக போட்டியிடுமாறு சீட்டு வழங்கியிருக்கிறார்கள். இதில் கொள்கையோ லட்சியமோ ஒரு மசிரும் இல்லை; ஒரே நோக்கம் பதவி – அதற்கு இந்துத்துவம் ஒரு பாதையானால் அதிலும் பயனிக்க காங்கிரசு தயாராகவே இருக்கிறது. எனவே காங்கிரசின் வெற்றி என்பது எந்தவிதத்திலும் இந்துத்துவத்தின் தோல்வியாகிவிடாது. காங்கிரசுக்கு இந்துத்துவத்தை எப்படி அமுல்படுத்துவது என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடு இருக்கலாம் ஆனால் நிச்சயமாக அதனோடு எந்த முரண்பாடும் கிடையாது.

மொத்தத்தில் காங்கிரசோ பா.ஜ.கவோ யார் வென்றாலும் அந்த வெற்றி உலகவங்கியின் வெற்றியாகவும், இந்துத்துவத்தின் வெற்றியாகவுமே இருக்கும். அங்கே மனித பண்பும், மனித நேயமும், மதச்சார்பற்ற அரசியலும் சர்வ நிச்சயமாக தோற்கடிக்கப்படப் போகிறது. கண்ணுக்கெட்டிய தொலைவில் குஜராத்தின் விடியல் தென்படவில்லை!

-கார்க்கி

திசெம்பர் 12, 2007 Posted by | politics | | 1 பின்னூட்டம்

   

%d bloggers like this: