கார்க்கியின் பார்வையில்

கல்வி – வியாபாரம் – நிர்பேசிங் கொலை..

சென்னை மதுரவாயலில் உள்ள எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்த நிர்பேசிங் என்ற மாணவர் ஜூலை 5ம் தேதி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நீலாங்கரையில் உள்ள தனது நண்பரைப் பார்க்க பைக்கில் வந்த அவரை வழிமறித்த சத்தியபாமா என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் சிலர் சுற்றிவளைத்து இரும்புக் கம்பிகளால் சராமாரியாக தாக்கி
கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவரும் கொலையைச் செய்தவர்களும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள்.

இம்மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போதே வட மாநிலங்களில் இருந்து புதிய மாணவர்களை இங்கே உள்ள கல்லூரிகளில் சேர்த்து விடும் தரகர் வேலை பார்த்து நிறைய கமிசன் சம்பாதித்து வந்துள்ளனர். மாணவர் நிர்பேசிங், தான் படித்து வரும் கல்லூரியில் தனது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவரை தரகு கமிசனுக்காக சேர்த்து விட்டுள்ளார். அதே மாணவரை சத்யபாமா கல்லூரியைச் சேர்ந்த இன்னொரு மாணவரும் தனது கல்லூரியில் சேர்த்து விட முயற்சித்துள்ளார். இந்த தரகுக் கமிசன் போட்டியில் சத்யபாமா கல்லூரி மாணவர் தோற்று விடவே, ஆத்திரம் கொண்ட அவர், தனது சக மாணவர்களை கூட்டு சேர்த்துக் கொண்டு நிர்பேசிங்கை தாக்கி கொன்றுள்ளார்.

பத்திரிகை செய்திகளின் படி சென்னையில் மட்டும் சுமார் பத்தாயிரத்திலிருந்து இருபதாயிரம் வரையில் வட மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். அதில் பெரும்பான்மையினர் கல்லூரி விடுதியில் தங்காமல் வெளியில் அறை எடுத்து தங்குவதோடு, சொந்தமாக மோட்டார் சைக்கிள், செல் போன் என்று ஊதாரித்தனமாக செலவுகள் செய்கின்றனர். தமது செலவுகளை ஈடுகட்ட இது போன்ற
தரகு வேலைகளில் ஈடுபடும் இவர்களுக்குள் எப்போதும் போட்டி இருந்து வந்துள்ளது. இது போன்ற ஒரு விவகாரத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வேறு ஒரு கல்லூரி மாணவன் ஒருவனை கடத்தி சிறை வைத்த சம்பவமும் நடந்துள்ளது.

முந்தைய சம்பவங்களில் தூங்கி வழிந்த காவல்துறை, இப்போது பிரச்சினை கொலை வரையில் சென்றுள்ளதால் தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சம்பவத்தில் ஈடுபட்ட 8 சத்தியபாமா கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளதாக கணக்கு காட்டியுள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இது வரை இந்த சம்பவம் பற்றி வாயைத் திறக்காமல் கமுக்கமாக இருக்கின்றன. கல்லூரி நிர்வாகத்துக்கோ அரசுக்கோ தெரியாமல் இரகசியமாக இது போன்ற செயல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பது தான் உண்மை. தனது கல்லா நிறைவதில் பிரச்சினை இல்லாத வரை கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் குளிர் காய்வதையே விரும்பும்.

கல்வி என்பது ஒரு சேவை என்பதாக இருந்த காலம் போய் வியாபாரமாக மாறி தற்போது சூதாட்டம் எனும் அளவுக்கு சீரழிந்துள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு நடந்த ப்ளஸ் டூ தேர்வில் 6.89 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதி சுமார் 5.87 லட்சம் மாணவர்கள் தேறியுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளது. இதில் எல்லா பிரிவுகளையும் உள்ளிட்டு ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு லட்சம் மாணவர்களை சேர்த்துக் கொள்ள முடியும். இதில் சுமார் 1.2 லட்சம் மாணவர் இருக்கைகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு மூலம் வரும் மாணவர்களால் நிரப்பப்படும். மீதம் உள்ள இடங்கள் தனியார் கல்வி நிர்வாக கோட்டாவில் வரும்.

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் நுழைவுத் தேர்வில் நல்ல சதவீதம் எடுத்து வரும் மாணவர்களும் கூட தனியார் கல்லூரிகளில் சேரும் போது அண்ணா பல்கலைக்கழகம்
நிர்ணயித்துள்ள செமஸ்டர் பீஸான முப்பத்தையாயிரம் அழ வேண்டும். இதுவே வருடத்துக்கு எழுபதாயிரம்; நாலு வருடத்துக்கு இரண்டு லட்சத்து என்பதாயிரம்! இதுவல்லாமல் லேப் கட்டணம், லைப்ரரி கட்டணம், பேருந்து கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணத்தைக் கறந்து விடுகிறார்கள். இப்படி கறக்கும் பணத்துக்கு ஏற்ப அந்த வசதிகளும் அப்படியொன்றும் சொல்லிக் கொள்ளும் தரத்தில் இருப்பதில்லை என்பது தனி கதை. நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களுக்கான கட்டணம் என்பது அந்தந்த தனியார் கல்லூரி நிர்வாகம் அவர்கள் இஸ்டத்துக்கு நிர்ணயிக்கும் கட்டணம் தான்.

இப்படி பொன் முட்டையிடும் வாத்தாக இருக்கும் மேனேஜ்மெண்ட் கோட்டா சீட்டுகளை நிரப்ப தனியார் கல்லூரிகளுக்குள் அடிதடியே நடக்கும். ஒவ்வொரு கல்லூரியும் வெளி மாநிலங்களில் தமக்கென பிள்ளை பிடித்துக் கொடுக்க ஏஜெண்டுகளை நியமித்துள்ளனர். இந்த பிள்ளைப் பிடிக்கிகள் ப்ளஸ் டூ ரிசல்ட் வரும் சமயங்களில் தமிழ் நாட்டு தனியார் கல்லூரிகளின் கவர்ச்சிகரமான ப்ரொபைல் ஒன்றை வைத்துக் கொண்டு ஏமாளிகளை வளைத்துப் பிடித்து லட்சக்கணக்கான ரூபாய்களை வாங்கிக் கொண்டு இங்கே சீட்டு பிடித்துக் கொடுக்கிறார்கள். துபாய் கேக்ரான் மேக்ரானில் கக்கூஸு அள்ளும் வேலைக்கு ஆள் பிடிப்பது போலத் தான் இது நடக்கிறது. ஹைதராபாத்தைச் சேர்ந்த எனது குடும்ப நன்பர் தேவசகாயம் பாபு தனது மகன் ரோஹன் பாபுவை சில வருடங்களுக்கு முன்பு இப்படித் தான் ஏமாந்து போய் சேலம் வினாயகா மிசன் கல்லூரியில் உயிரி பொரியியல்
படிப்பில் சேர்த்து விட்டார். கடைசி செமஸ்டரின் போது தான் அந்த பாடப் பிரிவுக்கு வினாயகா கல்லூரி முறையான அனுமதிமதி பெற்றிருக்காத விசயமே இவருக்கு தெரியவந்தது. இன்று அந்தப் பையன் லட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்து படித்தும் வேலையில்லாமல் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கிறான். மகனை இன்ஜினியர் ஆக்கி விட வேண்டும் எனும் கனவில் தனது சொத்துக்களையும் நகை நட்டுகளையும் விற்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு இப்போது அவர் அழுது புலம்பிக் கொண்டுள்ளார். நான்கு வருடங்களும் வீண் – படித்த படிப்பும் வீண்.

இப்படியெல்லாம் பிள்ளை பிடிக்கிகள் வைத்து சீட்டை நிரப்பியும் கூட சென்ற ஆண்டு சுமார் முப்பதாயிரம் சீட்டுகள் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தது. ஒரு பக்கம் பள்ளி கல்லூரி
கட்டணங்களை முறைப்படுத்த தனியார் நிர்வாகத்தோடு போராடிக் கொண்டிருப்பதாக சீன் போடும் அதே தமிழக அரசு தான் மறுபுறம் பொரியியல் கல்விக்கான மதிப்பெண் உச்ச வரம்பை ( கட் ஆஃப்) இந்த ஆண்டு தளர்த்தியுள்ளது. இது மேலும் தனியார் கல்லூரிகளிடம் அடிமாடுகளைக் கொண்டு சேர்ப்பதற்கே உதவும் என்பதைப் புரிந்து கொள்வது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஏஜெண்டுகளை நியமித்தும் கல்லா நிறையாததால் வெளி மாநில மாணவர்களே தரகர்களாக செயல்படுவதை கண்டும் காணாமலும் அங்கீகரிக்கிறார்கள் தனியார் கல்வி வியாபாரிகள்.

உலகமயமாக்கம் உருவாக்கி விட்டுள்ள நுகர்வு வெறி மாணவர்களைப் படிக்கும் காலத்திலேயே செல்போன், லேட்டஸ்ட் மாடல் பைக், விதவிதமான துணிமணிகள், கம்ப்யூட்டர் கேம்ஸ்  என்று ஊதாரித்தனமாக செலவு செய்ய தூண்டுகிறது. எப்படியாவது சம்பாதித்து விட வேண்டும் எனும் பிழைப்புவாத கண்ணோட்டத்திற்கு ஆட்படும் அவர்கள் தமது சொந்த மாநில அப்பாவி மாணவர்களை ஏமாற்றித் தரகு வேலை பார்க்க கொஞ்சமும் கூசுவதில்லை. அதுவே தொழில் போட்டி அளவுக்கு உயர்ந்து இப்போது கொலையில் சென்று முடிந்துள்ளது. இதெல்லாம் தெரியாத அப்பாவிகள் அல்ல அரசும் போலீசும். முன்பு ரெண்டாம் நம்பர் தொழிலும் சாராயத் தொழிலும் கல்லாக் கட்டியவர்களும் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளும் தான் இன்றைய கல்வித் தந்தைகள். கள்ளனும் காப்பானும் ஒருவனாகவே இருக்கும் ஒரு சமூக அமைப்பில் இது போன்ற விடயங்களில் போலீசின் சுயேச்சையான தலையீட்டை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் தான்.

ஒருபக்கம் பொரியியல் கல்வியின் மேல் தேவையற்ற மோகம் ஒன்றை பெற்றோர்கள் கொண்டிருக்கிறார்கள். நடப்பில் இருக்கும் பொரியியல் கல்வித் திட்டமே ஒரு டுபாக்கூர்; இந்த கல்வித் திட்டத்தால் ஒரு மாணவன் எந்த வகையிலும் தொழில்நுட்பங்களை முறையாகக் கற்றுத் தேர்ந்து விட முடியாது. நான்காண்டுகள் படித்து வரும் ஒரு பொரியியல் மாணவன் ஒரு டெக்னிக்கல் குமாஸ்தாவாக அடிமை வேலை பார்க்கத்தான் பயிற்றுவிக்கப்படுகிறான். இந்தியாவின் பொரியியல் கல்வி முறை குறித்தும் அதன் மொக்கைத் தனம் குறித்தும் பின்னர் விரிவாக எழுத ஆசை. பார்க்கலாம்.

தேர்தலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் மக்களை எப்படி இந்த ஓட்டு அரசியல் அமைப்பு முறை ஊழல் படுத்தியுள்ளதோ அதே போல் மாணவர்களை ஊழல் படுத்தும் ஒரு
போக்காகவே இதைக் காண முடிகிறது. லஞ்சம் வாங்கும் மக்கள் எப்படி தமது தார்மீக கோபத்தை இழந்து அரசியல் மொக்கைகளாகிறார்களோ அப்படியே மாணவர்களும் படிக்கும் காலத்திலேயே ஊழல் படுத்தப்பட்டு சமூக மொக்கைகளாக்கப்படுகிறார்கள். இளமைப் பருவத்துக்கே உரிய துடிப்பும் சமூக அக்கரையும் கோபமும் வழித்தெறியப்பட்டு பிழைப்புவாதிகாகிறார்கள் மாணவர்கள். பிழைப்புவாதம் என்பதை வேரிலிருந்தே நஞ்சாக ஊட்டி வளர்க்கிறது இந்த சமூக அமைப்பு. அதன் ஒரு வெளிப்பாடு அழகிரி பாணி இடைத் தேர்தல் என்றால் இன்னொரு பாணி வெளிப்பாடு தான் நிர்பேசிங்கின் கொலை.

ஜூலை 6, 2010 Posted by | கல்வி, பதிவர் வட்டம், culture, Education, politics | , , , , , | 3 பின்னூட்டங்கள்

தேர்வு – கல்விமுறை – சில அனுபவங்கள்..!

அது ஒரு தொழில் நகரம். நகரம் தான் தொழில் நகரம் ஒரு ஐந்து கிலோ மீட்டர் தாண்டிவிட்டால் விவசாயம் தான். நாங்கள் இருந்த பகுதி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதி. பெரும்பாலும் எல்லோரும் ஏதாவது ஒரு தொழில் பட்டறையில் வேலை செய்பவர்களாய் இருப்பார்கள் அல்லது சிறு விவசாயிகளாகவோ விவசாய கூலிகளாகவோ இருப்பார்கள். முதலில் என்னை வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தான் சேர்த்தார்கள். சேர்ந்த இரண்டாவது நாள் கல்லு சிலேட்டை எறிந்து டீச்சர் மண்டையை உடைத்து விட்டேன். அந்த அம்மாள் என்னை கையோடு இழுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து விட்டு நீ காசே குடுத்தாலும் இந்தப் பையனை நான் பார்த்துக் கொள்ள முடியாது என்று விட்டார். அப்போதெல்லாம் நான் நிறைய குறும்பு செய்வேனாம்..

எங்க அப்பா ஒன்றுக்கு பதிமூணு முறை யோசித்து விட்டு, ‘இவனையெல்லாம் புரியாத பாசை பேசற பள்ளிக்கூடத்துல சேர்த்தா தான் ஒளுங்கா பயந்துகிட்டு படிப்பான்’ என்று முடிவு செய்து பக்கத்து ஊரில் இருந்த ஆங்கில நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டார். அது ஒரு டிரஸ்ட்டினால் நடத்தப்பட்டு வந்த ஆங்கிலப் பள்ளி. அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்கள் இருந்தார்கள். கல்விக் கட்டணமும் அப்பாவின் மாதச் சம்பளத்துக்குள் கட்டுபடியாகும் அளவுக்குத் தான் இருந்தது. அதிகபட்சமாக பத்தாவது படிக்கும் போது மாத கட்டணமாக இருநூறு ரூபாய் கட்டியிருக்கிறேன்.  மற்றபடி மறைமுக கொள்ளை ஏதும் நடந்ததில்லை.

ஆங்கில வழிக் கல்வி என்னைப் பொருத்தளவில் ஒரு பயமுறுத்தும் பூச்சாண்டியாகத் தான் அறிமுகமானது. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் ஆங்கிலத்தின் மேல் தங்களுக்கு இருந்த பயத்தைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் போல வீட்டில் முதன்
முறையாக ஆங்கிலவழிக் கல்வி பயிலச் செல்பவர்களின் பிரச்சினை வேறு வகையானது. வீட்டில் ஆங்கிலம் படிப்பவர்கள் பேசுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பள்ளியில் எல்லா பாடமும் ஆங்கிலமாகவும் இரண்டு பாடங்கள் தமிழாகவும் இருக்கும் ( தமிழ் I & II).

இது ஒரு ரெண்டும் கெட்டான் நிலை. ஆங்கிலமும் மக்கார் பண்ணும் தமிழும் தகறாரு பண்ணும். சொன்னா சிரிக்காதீங்க – எனக்கு ஏபிசிடியே அஞ்சாவது வரைக்கும் ஒரு குத்துமதிப்பாத் தான் தெரியும். எட்டாவது வரைக்கும் ஆங்கில எழுத்து m சரியாக எழுத வராது. எங்க ஆங்கில வாத்தியார் தண்டனையாக “mummaa mumma mummy” என்று ஒரு நோட்டு முழுக்க எழுத வைத்து விரலை உடைத்தார். தமிழைப் பொருத்தவரை இப்பவும் க,ங,ச வரிசையாக சொல்ல முடியாது. திக்கும். தடுமாறும். ஆங்கில இலக்கணத்தைப் பொருத்தவரையில் சுத்தம். தமிழ் இலக்கணம் எனக்குப் புரிந்த லட்சணத்தைத் தான் நீங்களே அனுபவிக்கிறீர்களே. தமிழ் வீட்டிலும் வெளியிலும் பேசும் மொழியாக இருந்தாலும் கூட பள்ளியைப் பொருத்தவரை ஒரு நாளுக்கு ஒரே வகுப்பு தான் தமிழில் நடக்கும் என்பதால் கல்வி எனும் கோணத்தில் அதுவும் கூட அன்னியமாகிப் போனது.

என்றைக்காவது வீட்டுக்கு வரும் தூரத்து சொந்தக்கார மாமா முன் அப்பா பெருமையாக சொல்வார் – ‘எங்க பய்யன நாங்க இங்கிலீசு மீடியத்துல சேத்துருக்கோமாக்கும். டேய் இங்க வாடா குட்டி. மாமா கிட்ட இங்கிலீசுல பேசு’ என்பார் பாசமாக. என்னத்த பேச. ‘மை நேம் ஈஸ் சங்கரு’ என்பதற்கு மேல் வண்டி செல்ப் எடுக்காது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு நிற்பேன். மாமா போனதும் முதுகு வீங்கி விடும். ஏற்கனவே பூச்சாண்டியான ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக வில்லனாகவே ஆகிவிட்டது.

வகுப்பில் முதல் இரண்டு பென்ச்சில் அமரும் மானவர்களுக்கு வீட்டில் படித்தவர்கள் யாராவது இருந்தார்கள். வீட்டில் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட ஆட்கள் இருந்தார்கள். ஆங்கிலம் அவர்களுக்கு சுலபமாக பேச வந்தது. வகுப்பில் பாட சம்பந்தமான கேள்விகளை தன்னம்பிக்கையோடு கேட்டார்கள். ஆசிரியர்களும் அவர்கள் மட்டும் கேள்விகள் கேட்பதை வைத்துக் கொண்டு அவர்களே புத்திசாலிகள் என்று தீர்மானித்தார்கள். அவர்களுக்கே நல்ல ஊக்கமும் தந்தார்கள். கடைசி பென்சு டிக்கெட்டுகளான நாங்களோ பாடம் நடந்து கொண்டிருக்கும் போது அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ என்று ‘ஙே’ன்னு பாத்துட்டு இருப்போம்.

மெட்ரிகுலேசனில் படிக்கும் மானவன் பள்ளிக்கூடத்திலேயே தமிழில் பேசுவதா என்று கவுரவம் பார்க்கும் பள்ளி எங்களுடையது. அதனால் வகுப்பு லீடருக்கு யார் யார் தமிழில் பேசுகிறார்கள் என்று கண்காணித்து போட்டுக் குடுக்கும் வேலையும் கொடுத்து விட்டார்கள். தமிழில் பேசுவதற்கு தண்டனையாக சட்டையில் இருக்கும் வெள்ளை பட்டனை எடுத்து விட்டு கருப்பு பட்டன் வைத்து தைத்து விடுவார்கள். எங்கள் வகுப்பில் பெரும்பாலும் எல்லோருக்கும் சட்டையில் கருப்பு பட்டன் தான் இருந்தது.

நான் படித்திருந்த மெட்ரிகுலேசன் ஆங்கிலத்தின் பருப்பு தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே வேகவே இல்லை. பிற்காலத்தில் புதிதாகத்தான்
ஆங்கில உரையாடலைக் கற்றுக் கொண்டேன். ஒரு விசயம் அப்போது தான் உறைத்தது. எந்த மொழியையும் கற்க வேண்டுமானால் முதலில் அதைப் பேச வேண்டும்; பிறகு தான் எழுதப் படிக்க பழக வேண்டும். நாம் மற்ற மொழிகள் விசயத்தில் தலைகீழாக அணுகுகிறோம். அது தான் நமது ஆங்கில தடுமாற்றத்துக்கு அடிப்படையான காரணம். நாம் தமிழில் சிந்திக்கிறோம் – எனவே பாடங்களை தமிழில் படிப்பது சிறந்தது. ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாக சரியான அம்சத்தில் கற்க வேண்டும். எனக்குத் தெரிந்து நன்றாக ஆங்கிலம் பேச முடிந்தவர்களே கூட அதை சரியான அம்சத்தில் பேசுவதில்லை – நாம் பேசு ஆங்கிலம் பெரும்பாலும் Formalஆக இருக்கிறது.

அதாவது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அதே நடையில் தெருவில் காய்கறிக்காரரிடம் பேசினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நாம் பேசும் ஆங்கிலமும் இருக்கிறது. பேச்சு மொழியாக பேசாமல் எழுத்தில் இருப்பதைப் போன்ற ஒரு ஆவண மொழியாக பேசுகிறோம். இது மெட்ரிகுலேசனில் படித்த மானவனுக்கும் பொருந்தும். என்னைப் பொருத்தவரை மெட்ரிகுலேசன் கல்வி என்பது ஒரு கிரிமினல் வேஸ்ட். நாம் பாடங்களை தமிழில் படித்து விட்டு ஆங்கில உரையாடலை பாடதிட்டத்தில் சேர்த்து விட்டால் கூட போதும். ஆறாம் வகுப்புக்கு மேல் அங்கிலத்தை எழுத படிக்க சொல்லிக் கொடுத்தாலே போதுமானது.

பாடங்கள் புரியவில்லை என்பதை வைத்துக் கொண்டு எங்களை தத்தி என்றோ மக்கு என்றோ அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். எங்களில் திறமைசாலிகள் இருந்தனர். ஒவ்வொரு வருடமும் நடக்கும் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் நாங்கள் கோப்பைகளை அள்ளிக் குவிப்போம். வருடா வருடம் நடக்கும் பள்ளி ஆண்டுவிழா விஞ்ஞானக் கண்காட்சியில் கடைசி பெஞ்சு மானவர்களின் ஸ்டால்கள் தான் அசத்தும். இதுக்காகவே ஒன்பதாவது படிக்கும் போது எங்க வீட்டு டேப் ரெக்காடரை பிரித்து அதிலிருக்கும் மோட்டாரை தனியே எடுத்து. அதில் ஒரு காத்தாடியை இணைத்து – அதை பேட்டரியால் இயங்க வைத்து – ஒரு மோட்டார் படகு வடிவமைத்தோம்.  பரிசும் கிடைத்தது – வீட்டில் பெல்ட் அடியும் கிடைத்தது. அறிவிப்பு செய்யும் மைக்செட்டில் என்ன பிரச்சினை என்றாலும் மாப்பிள்ளை பெஞ்சு மானவர்கள் தான் சரிசெய்வார்கள். காலர் பட்டன் போட்ட ‘பழங்களுக்கு’ கரண்டு என்றால் பயம். எங்களுக்கு பரிட்சை என்றால் பயம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சமயம். எங்கள் நன்பர்களுக்கெல்லாம் மூலத்தில் ஜன்னி கண்டுவிட்டது. ஸ்டடி ஹாலிடேஸ் எனப்படும் அந்த கடைசி நாட்களில் புத்தகத்தை எடுத்தால் எல்லாம் புத்தம் புதிதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஓரளவு தெரிந்த பாடங்கள் கூட புதிதாக படிப்பது போல இருக்கிறது. பெயில் ஆகி விட்டால் வீட்டிலேயே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று அப்பா சொல்லியிருந்தார். அந்தப் பரீட்சை பயம் எனக்குள் ஏதோவொன்றை அசைத்திருக்கிறது. இன்றும் கூட அவ்வப்போது ஹால்டிக்கெட்டை மறந்து விட்டு பரீட்சைக்கு போய்விடுவதைப் போலவும், டைம்
டேபிளை சரியாக பார்க்காமல் வேதியல் பரீட்சைக்கு இயற்பியல் படித்து விட்டு போய்விடுவது போலவும் கனவுகள் வந்து கொண்டேயிருக்கிறது. பத்தாவது பொதுத் தேர்வுகள் எழுதி சரியாக பதினாலு வருடங்கள் போய் விட்டாலும் கூட இப்போதும் அந்தக் கனவு வரும் போது தூக்கம் களைந்து திடுக் என்று எழுந்து உட்கார்ந்து விடுவேன். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டும்; விரல்களெல்லாம் நடுங்கும்.

தேர்வு மைய்யம் இன்னொரு பள்ளி. அந்தப் பள்ளி வளாகத்துக்குள் பரீட்சை எழுத நுழையும் போதெல்லாம் இடுப்புக்குக் கீழே உணர்வற்றுப் போய் விடும். பயத்தில் கால்கள் இருப்பதையே உணர முடியாது. அப்படியே மிதந்து கொண்டே செல்வது போல் இருக்கும். தேர்வுகளுக்கு முன் ஆபத்பாண்டவனாக வந்தார் எங்கள் ஆசிரியர் சுப்பிரமனியன். அவர் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கை வைத்து தான் நாங்கள் தேர்வில் வெற்றி பெற்றோம். அதாவது தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களிடம் அவற்றை கத்தை கத்தையாக கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஒவ்வொரு விடையாக முழுவதும் படித்துப் பார்க்கும் நேரம் இருக்காது என்றும் சொன்னவர், ஒரு விடையின் முதல் வரியும் கடைசி வரியும் சரியாக இருக்க வேண்டும் என்றும், நன்றாக மார்ஜின் விட்டு எழுத வேண்டும் என்றும், படங்களைத் தெளிவாக போட வேண்டும் என்பதிலும்
கவனம் செலுத்தச் சொன்னார். மேலும், விடைத்தாளில் சரியான வாக்கியங்களின் கீழும் துனைத் தலைப்புகளின் கீழும் பென்சிலால் அடிக் கோடிட்டு காட்ட வேண்டும் என்றும் சொன்னர். இப்படியாக விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் நாங்கள் செய்த டெக்கரேசன் வேலைகளில் ஏமாந்து போய் தான் எங்களை பாசாக்கி இருக்க வேண்டும்.

சீக்கிரம் வேலைக்குச் சென்று சம்பாதித்தாக வேண்டிய குடும்பச் சூழல் என்னை பண்ணிரண்டாம் வகுப்பு வரை படிக்க அனுமதிக்கவில்லை. அப்பா தனது நன்பரிடம் மேற்கொண்டு என்னை எங்கே சேர்க்கலாம் என்று அலோசனை கேட்டிருக்கிறார். ஒரு போர் மேன் ரேஞ்சுக்கு கலெக்டரிடமா கேட்டிருப்பார் – அவர் தனது சூப்பர்வைசர் நன்பரிடம் தான் கேட்டிருந்தார். அவரும் பாலிடெக்னிக் சேர்த்து விடுங்கள் என்று ஆலோசனை சொல்லவே வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் தேற்றியாகி விட்டது. இனி இந்த பட்ஜெட்டுக்குள் ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவை பிடிக்க வேண்டும்.

எனக்கு மெக்கானிக்கல் படிக்க வேண்டும் என்று ஆசை. பள்ளி நாட்களில் பெரிய பரீட்சை லீவு விட்டவுடன் அப்பா என்னை அவரது நன்பரின் பைக் மெக்கானிக் செட்டுக்கு அனுப்பி வைப்பார். சும்மா சுத்தினா கெட்டுப் போயிடுவேனோன்னு பயம். ஓரளவு பணக்கார பசங்கள் எல்லாம் செஸ் கிளாஸ், நீச்சல் கிளாஸ் என்று போவார்கள் – அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கிளாசும் அபாகஸ¤ம் இத்தனை பிரபலமாகவில்லை. எனக்கு மெக்கானிக் வேலை பிடித்து இருந்தது. இன்ஞ்சின் இறக்கி ஏத்துவதைத் தவிர மற்ற எல்லா வேலையும் நானே செய்வேன். என்றாவது ஒருநாள் ஒரு பெரிய மெக்கானிக் ஆக வேண்டும் என்பது என் பள்ளி நாட்களின் கனவு. பழுதடைந்த ஒரு இயந்திரத்தை சீர்படுத்தி மீண்டும் இயங்க வைத்திருக்கிறீர்களா
நீங்கள்? அந்த சத்தமிருக்கிறதே… ஹ… அது தான் அதி உன்னதமான சங்கீதம். அந்தக் கணம் தான் சொர்க்கம். நான் இயந்திரவியல் படிக்க
வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் டிப்ளமா மெக்கானிக்கல் எங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை.

அப்பா எனது படிப்பு எதுவென்று முடிவு செய்து விட்டு பணத்தை தயார் செய்யவில்லை – பணத்தை தயார் செய்து விட்டு அதற்குள் அடங்கும்
படிப்பை முடிவு செய்தார். மின்னணுவியல் தான் கிடைத்தது – சரியாகச் சொன்னால் ஒத்துவந்தது. அப்போது மின்னணுவியல் படிப்புக்கு அத்தனை செல்வாக்கு இல்லை. மேலும் நான் சேர்ந்த கல்லூரியில் மின்னணுவியல் அரசு உதவி பெற்று வந்த துறை என்பதால் அதற்கான கட்டணம் குறைவு – வருடத்திற்கே ஆயிரத்து நூத்தி என்பது ரூபா தான் கட்டணம். டொனேசனாக இருபத்திரண்டாயிரம் கொடுத்து விட்டு மீதம் இருந்த மூவாயிரத்தில்
இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்க்கு கேஸ் அடுப்பு வாங்கினார் – அதுவரையில் மன்னெண்ணை பம்பு ஸ்டவ் தான். மிஞ்சிய எண்ணூறு ரூபாவுக்கு மூன்று கலர் சட்டையும் இரண்டு பேண்ட்டும் எடுத்துக் கொடுத்தார் – இனிமேல் சீருடை கிடையாதல்லவா.

கல்லூரி வந்து முதல் செமஸ்டர் வரும் வரைக்கும் தமிழ் மீடியத்தில் இருந்து வந்த மானவர்கள் எல்லாம் ஆங்கில மீடியத்தில் இருந்து வந்த
மானவர்களை அச்சத்தோடு தான் பார்த்தார்கள். பாடமெல்லாம் ஆங்கிலம் – நாங்கள் வேறு ஆங்கில மீடியம் – எனவே நாங்கள் நன்றாகப் படித்து விடுவோம் என்று அவர்களாகவே தீர்மானித்து விட்டார்கள். செமஸ்டர் முடிவுகள் வந்ததும் தான் அவர்களுக்கும் நிம்மதியானது எங்களுக்கும் நிம்மதியானது.

நான் படித்த பாலிடெக்னிக் மானவர்களும் எனது பள்ளித் தோழர்களைப் போன்ற வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள் தான். எனது வகுப்பில் ஒரே ஒரு மானவனைத் தவிற யாரும் பைக்கில் வந்ததில்லை. எல்லோரும் பஸ் பாஸ் தான். நான் வீட்டை அடமானம் வைத்து பணம் கட்டியிருந்தேன் என்றால் அவர்கள் காட்டையோ நகையையோ அடமானம் வைத்து வந்தவர்கள். யாரும் விரும்பிய படிப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கி நின்று விடவில்லை. இது தான் தலையெழுத்து என்று ஏற்றுக் கொண்டனர். ஆனால் துரதிருஸ்டவசமாக பள்ளியில் கிடைத்த அளவுக்கு நல்ல ஆசிரியர்கள் இங்கே கிடைக்கவில்லை.

ஒரு தியரி பேப்பருக்கு மொத்தம் ஐந்து யூனிட்டுகள். ஒவ்வொரு யூனிட்டிலிருந்தும் இருபது மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரும். ஆசிரியர்கள் பொதுவாக மூன்று யூனிட்டுகள் தான் நடத்துவார்கள். கடைசி இரண்டு யூனிட்டுக்கு பதில் கடந்த ஐந்து ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களின் நகலைக் கொடுத்து விடுவார்கள் – அதற்கு கறாராக காசு வாங்கிவிடுவார்கள். நாமே தான் படித்துக் கொள்ள வேண்டும். கட்டிய காசு வீணாகப் போய் விடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. நூலகத்திற்குச் சென்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து படித்தார்கள் – படித்தேன்.

மூன்று வருடம் ஏதேதோ தகிடுதத்தம் செய்து படித்து முடித்து விட்டு வேலைக்கு வந்த பின் தான் தெரிந்தது அந்த மூன்று வருடம் முக்கி முக்கி படித்தது எனது வேலைக்கு எந்தவிதத்திலும் பயன்படப் போவதில்லை என்று. அந்த மூன்று வருடம் மட்டுமல்ல – அதற்கு முன் பத்து வருடங்கள் படித்த படிப்பினாலும் வாழ்க்கைக்குப் பெரிதாக பயனில்லை என்பதும் மிகத் தாமதமாக விளங்கியது.

சர்வீஸ் என்ஜினியர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் பயிற்சியின் போது –

“இது தான் மானிட்டர், இது கீ-போர்டு, இது மவுஸ், இது சி.பி.யு. என்ன தெரியுதா.. எதுனா கேள்வி இருந்தா கேளுங்க. கூச்சப்படாதீங்க”
டிரெய்னிங் ஆபீஸர் வேலாயுதம் சொல்லி முடித்ததும் நான் கேட்டேன்,

“புரியுது சார்.. இதுல எது சார் கம்ப்யூட்டரு?”

மூன்று வருட படிப்பு அந்தளவுக்குத் தான் எங்களை தயாரித்து அனுப்பியிருந்தது. அப்போது இருந்த பாலிடெக்னிக் பாடதிட்டத்தின் படி மின்னணுவியல் துறையில் ஒரே ஒரு பாடம் தான் கம்ப்யூட்டர் இருந்தது. அதுவும் மகா மொக்கை. பிராக்டிகலுக்கு இரண்டு மூன்று பாடாவதி கம்ப்யூட்டர்களை வைத்திருந்தார்கள். அதையும் பக்கத்தில் போய் தொட அணுமதிக்க மாட்டார்கள். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்கு வெளியில் இருந்து கைநீட்டிக் காட்டுவார்களா – பிராக்டிகல் நேரம் சுபமே முடிந்தது! மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் நான் மிகுந்த
சிரமப்பட்டு படித்த AND gate, OR gate எல்லாம் மிக மிக மிக ஆரம்ப பாடம் என்று வேலைக்கு வந்ததும் தான் புரிந்தது. எங்கள் பாடதிட்டத்தில் இருந்த மைக்ரோ பிராசசர் காலாவதியாகி இரண்டு தசாப்தங்களாவது ஆகியிருந்தது.

பாலிடெக்னிக் லேபில் முதல் நாளே நான் லேப் அசிஸ்டெண்ட் ரகுநாத் சாரிடம் செம்ம மாத்து வாங்கினேன். ரெஸிஸ்டரின் இரண்டு முனைகளையும் U வடிவத்தில் வளைத்து லேப் டெஸ்கில் இருந்த ப்ளக் பாயிண்டில் நுயூட்ரலுக்கும் ·பேசுக்கும் இடையில் சொருகினால் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். படபடவென்று எல்லா ப்யூஸ¤ம் பிடுங்கிக் கொண்டது. அது ஏன் அப்படியானது என்று விளக்குவதற்கு பதில் எல்லார் முன்பும் போட்டு சாத்து சாத்தென்று சாத்திவிட்டார். லேபில் இருக்கும் உபகரணங்கள் எல்லாமே பாடாவதி – இதில் இதைத் தொடாதே அதைத் தொடாதே என்று ஆயிரம் கட்டுப்பாடுகள் வேறு.

படிப்பது என்பது வேறு என்றும் வேலை அனுபவம் வேறு என்றும் பிறகு புரிந்தது. இன்னொரு விசயம் என்னவென்றால் நமது கல்வி முறை என்பது நம்மை புதிதாக எதையும் முயற்சிக்கும் படி தூண்டுவதில்லை – ஏற்கனவே இருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அதுவும் ஒரு முப்பது வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைப் பற்றி தான் பேசுகிறது. அதுவும் எப்படி பேசுகிறது – பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து விட்டு ஊருக்குப் போய் சொல்லுவதைப் போல எட்டி நின்று பேசுகிறது. நம்மையும் பயமுறுத்தி தூர நிற்க வைத்து விடுகிறது. உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை.

நாம் எதையும் புதிதாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்களாக கல்லூரியில் இருந்து வெளிவருவதில்லை. கல்லூரியை விட்டு வெளியேறியதும் நமக்கு முதலில் கிடைப்பது திகைப்பும் அச்சமும் தான். நாம் படித்ததில் பெரும்பாலானவை நடப்பிலேயே இருக்காது. சைக்கிள் மெக்கானிசம் படித்து விட்டு வந்தவன் சைக்கிளே வழக்கொழிந்து போய் விட்டதை பார்க்கிறான். அவனிடம் நீங்கள் EFI டெக்னாலஜியோடு வரும் பைக்கைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னால் அவனால் என்ன செய்ய முடியும்?

நடப்பில் இருப்பதை புதிதாக படித்து புரிந்து கொண்டு பிரமிப்பதற்குள்ளாகவே நடுத்தர வயதை எட்டிவிடுகிறோம். அதற்கு மேல் ரிஸ்க் எடுத்து புதிய விசயங்களில் ஆர்வத்தை திருப்ப நமது குடும்ப அமைப்பு முறை அனுமதிப்பதில்லை. அதற்குள் சுயதிருப்தி எனும் ஆழமான ஒரு மோனநிலையில் அமிழ்ந்து போகிறோம். தொழில்நுட்பத் துறையில் நாம் பெரிதாக புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் எதையும் நிகழ்த்தவில்லை என்பதற்கு அடிப்படையில் உற்பத்தி முறையின் கெட்டிப்பட்டுப்போன தன்மை ஒரு காரணம் – அதே கெட்டிப்பட்டுப் போன தன்மை தான் இப்படி ஒரு கல்வி முறையை நடப்பில் வைத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக இறுகிப் போன ஒரு உற்பத்தி முறை. மத்தியானம் தயிர் சோறு சாப்பிட்டது மாதிரியான ஒரு சொத்துடைமை வடிவம். நல்ல விவசாயம் – வயித்துக்கு சோறு – வருசத்துக்கு ஒரு பிள்ளையை பெத்துப் போட்டு விட வேண்டியது. ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று பிச்சைக்காரனைப் பார்க்கிலும் நாம் பரவாயில்லை என்று நிம்மதியை நாடிக் கொண்டிருந்த சைக்கிள் கேப்பில் உலகம் எங்கேயோ போய்விட்டது. இப்போது மேற்கில் உருவாக்குகிறார்கள் நாம் அதை வெறுமனே மெயிண்டெய்ன் செய்து கொண்டிருக்கிறோம். அதிகபட்சம் ஓரிரண்டு செழுமைப்படுத்தல்கள் நம்மவர்களால் செய்யப்பட்டிருக்கலாமே ஒழிய நடப்பில் இருப்பதை மொத்தமாக புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு எதையும் நாம் செய்துவிடவில்லை.

உறைந்து போன நிலையில் இருக்கும் சமுதாய ஒழுங்கு அந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்ள ஏதுவான ஒரு கல்வி முறையை வைத்துள்ளது. ஓரிரண்டு கல்விச் சீர்திருத்தங்களால் ஒட்டுமொத்தமாக ஒரு பலன் கிடைக்க வாய்ப்பில்லை. நடப்பில் இருக்கும் சமுதாய ஒழுங்கைக் கலைத்துப் போட்டு புதிதானவொரு சமுதாய ஒழுங்கை உருவாக்குவதில் தான் புதிய சிந்தனைகளின் உருவாக்கமும் புதிய நுட்பங்களின் உருவாக்கமும் அடங்கியிருக்கிறது என்பதை பின்னர் நான் கற்றுக் கொண்ட மார்சியம் எனக்குப் புரியவைத்தது.

– Kaargi

மே 6, 2010 Posted by | culture, Education, Uncategorized | , | 20 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: