கார்க்கியின் பார்வையில்

இன்னும் கொஞ்சம் வாழ்க்கை..!

அது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஒரு குட்டி தீபாவளி
போல இருக்கும். மில்லில் அன்றைக்குத் தான் சம்பளம் கொடுப்பார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்கு வரும் போது அப்பா எனக்கும்  அண்ணாவுக்கும் லாலா கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வருவார். அம்மா வீட்டில் ஒரு பழைய உஷா தையல் மிஷின் ஒன்றை வைத்து தெரிந்தவர்களுக்கு கிழிந்த பழைய துணியெல்லாம் தைத்துக் கொடுப்பாள். தையல் மிசின் இருக்கும் மூலையிலேயே பக்கத்து திட்டில் ஒரு பழுப்பேரிய டப்பா இருக்கும். அதில் அம்மாவுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களைப் போட்டு வருவாள். அது முழுக்க நிரம்பி வழியும் மாதத்தில் எனக்கும் அண்ணாவுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய்கள் கிடைக்கும்.

ஏழாம் தேதிக்கு அடுத்து வரும் சனிக்கிழமை எனக்கு இன்னுமொரு கொண்டாட்டமான நாள். அப்பாவுக்கு வார லீவு நாள் சனிக்கிழமை தான்.
சிலவுக் கணக்கை எழுதிய பின் அந்த மாதத்துக்கான மளிகை சாமான் வாங்கும் நாள் தான் அடுத்து வரும் முதல் சனிக்கிழமை. பொருட்களை
பிடித்துக் கொள்ள என்னையும் சைக்கிளின் பின்னே அமர வைத்து கூட்டிப் போவார். டவுனைப் பார்க்கப் போகும் சந்தோசத்தை விட எனக்கு நாங்கள் பொருள் வாங்கப் போகும் கடையில் கணக்கெழுதும் கணேசனைப் பார்க்கப் போகும் சந்தோசம் தான் தூக்கலாக இருக்கும்.

எங்கள் வீடு தாராபுரம் தாண்டி வெள்ளகோயில் போகும் வழியில் மூலனூரில் இருந்தது. பக்கத்தில் ஓரளவுக்கு பெரிய டவுன் என்றால் அது தாராபுரம் தான். தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நீங்கள் திருப்பூர் செல்லும் வழியில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் வந்தால் ஒரு ரவுண்டானா
இருக்கும். அதில் வலது புறம் திரும்பி ஒரு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஒரு நால் ரோடு சந்திப்பு வரும் – அந்த இடத்திற்கு பூக்கடை
நிறுத்தம் என்று பெயர். அதில் இடது புறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால் இடது புறம் கரூர் வைசியா பேங்கிற்கு நேர் எதிரே வலது புறத்தில் பால் பாண்டி டிரேடர்ஸ் இருக்கும்.

பதினைந்து வருடத்திற்கு முன் ஊக்கு முதல் சகல மளிகை சாமானும் விற்கும் பெரிய கடை அந்த வட்டாரத்திலேயே பால் பாண்டி டிரேடர்ஸ் தான். எந்த நேரமும் ஐம்பதுக்கும் குறையாமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள். போனதும் கணேசனிடம் முதலில் பில் போட வேண்டும். பில் என்பது கையால் ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்படும் சிட்டை தான். அந்த சிட்டையின் கடைசியில் மொத்த தொகை போட்டிருப்பார்கள். அதை கல்லாவில் அண்ணாச்சியிடம் கட்ட வேண்டும். பின் அந்த பில்லின் நீளத்தைப் பொருத்து அதை உள்ளே வேலை செய்யும் கடைப் பையனிடம் கணக்கெழுதிய கணேசனே கொடுப்பார். பொருட்கள் கட்டப்பட்டு சரிபார்க்கப் படும் வரையில் கல்லாவுக்கு நேர் எதிராக போடப் பட்டிருக்கும் அரிசி மூடைகளில் அப்பா அமர்ந்திருப்பார். கணேசன் என்னைக் கூப்பிட்டு தன் அருகேயே அமர வைத்துக் கொள்வார்.

அரிசி மூடைகள் வரிசையாக வைத்திருக்கும் பகுதிக்கு நேர் பின்னே தான் கணேசன் அமர்ந்து பில் போட்டுக் கொண்டிருப்பர். அங்கேயிருந்து
அவரைத் தெளிவாக கவனிக்க முடியும். கனேசனைப் பார்த்தவர்கள் முதலில் ஆச்சர்யப்படுவார்கள். அவருக்கு காதும் மூளையும் தலையில்
இருக்கிறதா இல்லை கைகளில் இருக்கிறதா என்று ஒரு குழப்பம் வரும்.

“அண்ணாச்சி, கொள்ளு ஒரு கிலோ, து.பருப்பு ரெண்டுகிலோ, க.எண்ணை அஞ்சு லிட்டர்,. மஞ்சள் கால் கிலோ, ச.மாவு ரெண்டு கிலோ, ம.மாவு
ரெண்டு கிலோ, வெ.ரவை ரெண்டு கிலோ, கோ.ரவை ஒரு கிலோ, ப.பருப்பு ஒரு கிலோ, ஊதுபத்தி ரெண்டு ரோலு, ஒட்டகம் மார்க் அரப்பு அரை கிலோ, புலி மார்க் சீயக்கா அரை கிலோ, ஐய்யார் இருவது சின்ன சிப்பம், பச்சரிசி ரெண்டு கிலோ, உளுந்து ஒரு கிலோ, கடுகு அம்பது கிராம், கேரளா குண்டு மிளகு நூறு கிராம், சீரகம் நூறு கிராம், மல்லி நூறு கிராம், புளி ஒரு கிலோ, கல் உப்பு அரை கிலோ, சக்கரை மூணு கிலோ, திரி ரோஸ் டீ தூள் நூறு கிராம், கண்ணன் காபி தூல் நூறு கிராம், சூப்பர் மேக்ஸ் பிளேடு நாலு, ரெண்டு நட்ராஜ் பென்சில்.. அப்புறம் அவ்வளது தான் – சீக்கிரம் பில்லப் போடுங்க” மாத சம்பளக்காரர்கள் இப்படி தாறுமாறாக ஒப்பித்து விட்டு அவசரப் பட்டுக் கொண்டு நிற்பார்கள்.

அவர் ஒவ்வொரு பொருளின் பெயரையும் அளவையும் சொல்லி முடித்த பிண்ண நொடியில் அது எழுதப்பட்டு அதற்கான விலையும் எழுதப்பட்டு விடும். இந்த மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் விலை ஏறி இறங்கும். காலையில் அண்ணாச்சி அன்றைய விலை நிலவரத்தை வரிசையாக கிலோவுக்கு இத்தனை என்று சொல்லுவதை கனேசன் ஒரு டீயை உறிஞ்சியபடி கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் வாடிக்கையாளர்கள் பல்வேறு அளவைகளில் சொல்வதை அவர் சொல்லி முடிக்கும் முன்னரே மனதுக்குள் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து விலையை வரிசையாக எழுதி, கீழே கோடு கிழித்த அடுத்த பத்து நொடிகளில் வரிசையாக எல்லா தொகையையும் கூட்டி மொத்த தொகையை எழுதி விடுவார். வேலை செய்யும் அனுபவம் கொண்ட பையனிடம் கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் சின்ன பில்லை கொடுக்க வேண்டும். அவசரம் அல்லாத பெரிய பில்லையும் கூட புதிய பையனுக்கு அவ்வப்போது கொடுக்க வேண்டும் – அவனும் பயிற்சி பெற்று தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா.

இந்த நுணுக்கமான அவதானிப்புகள் எல்லாம் பில்லை எழுதி, பொருளுக்குண்டான விலையை அதன் அளவுக்கேற்ப எழுதி, அதன் மொத்த மதிப்பை கூட்டி எழுதும் அந்த நேரத்திற்குள்ளேயே முடிந்து விடும். இதையெல்லாம் கை எழுதிக் கொண்டிருக்கும் போதே வாய் விசாரிப்புகளில் இறங்கியிருக்கும்.

“என்ன அண்ணாச்சி, பையன காலேஜுல சேத்துட்டியளா. எத்தன ரூவா கட்டினிய?”

“அத ஏங்க கேக்கறீங்க.. வாங்குன ஒன்னார்ருவா மார்க்குக்கு இன்சினீருக்குப் படிக்கனுமாம் தொரைக்கு. பணம் பொரட்டத்தான் இப்போ நாயா அலைஞ்சிட்டு இருக்கேன்” அந்த நடுத்தர வயது சலிப்புக்கு உடனே ஆறுதல் வரும்..

“விடுங்கண்ணாச்சி.. நாம தான் படிக்க வைக்க ஆளில்லாம இன்னிக்கு லோல்படுறோம்.. நம்ம பிளையளாவது படிக்கட்டுமே.. காச என்ன முடிஞ்சா
கொண்டு போறம்… இன்னாங்க பில்ல பிடிங்க. காச அங்க கல்லாவுல கட்டுங்க” சிட்டையை அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே திரும்பி “ஏல..
செல்லதொர இங்க வால. அண்ணாச்சிக்கு இந்த லிஸ்ட்ட வெரசாக் கட்டித் தா. ஒரு கலரு ஒடச்சி கொடு – நீங்க அந்தா அந்த மூடைல
இருங்கண்ணாச்சி.. பய சீக்கிரமா போட்டுத் தருவான்”

அத்தனை கவனமான வேலைக்கு இடையிலும், விசாரிப்புகளுக்கு இடையிலும், உள்ளே யார் சும்மா நிற்கிறார்கள் என்கிற கவனிப்புகளுக்கு
இடையிலும், எந்நேரமும் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலிக்கு இடையிலும், முகத்தில் நிரந்தரமாய் ஒரு சிரிப்பு தேங்கியிருக்கும். முகத்தின் அமைப்பே சிரிப்பது போல் தானோ என்று நான் சந்தேகப் பட்டதும் உண்டு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளை கணேசன் அழைத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். கடையில் கூட்டம் குறைவாய் இருக்கும் நாளில் ஏதாவது பில்லை என்னிடம் கொடுத்து மொத்த தொகையை கூட்டித் தரச் சொல்வார். நான் திணருவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அதே கணக்கை தனது மின்னல் வேக பாணியில் போட்டு விட்டு ‘நாங்கெல்லாம் அந்தக் கால எட்டாவதாக்கும்; அந்தக்கால எட்டாவதும் இந்தக் கால எம்மேயும் ஒன்னுதான் தெரியுமாடே’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்.

என்னிடம் அவருக்கு தனி அக்கரை உண்டு. நான் அப்பாவோடு போகும் போதெல்லாம் தனியே என்னிடம் விசாரிப்பார். அவரின் சட்டையின் மேல்
பை பெரிதாக இருக்கும் அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருக்கும். அதில் கையை விட்டு அள்ளி எத்தனை வருகிறதோ அத்தனையும் எனக்கே கொடுப்பார். மளிகைக் கடைகளில் ரோஜா பாக்கு, பான் பராக் போன்ற லாகிரி வஸ்துக்களை மொத்தமாக வாங்க ஊக்குவிக்கும் பொருட்டு
அதன் முகவர்கள் சின்னச் சின்னதாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். நீங்கள் இந்த முப்பது நாப்பது ரூபாய் விலையில் விற்கும் டிஜிடல் வாட்ச்சை எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதெல்லாம் அது போன்ற வாட்சுகளே அனேகமாக கிடைப்பதில்லை. முன்பு அது போன்ற வாட்சுகளை சும்மா இலவச இணைப்பாக கொடுப்பார்கள். அதுவும் ஓரிரண்டு மாதத்துக்கு ஓடும். பச்சை மஞ்சள் நீலம் ரோஸ் என்று கலர் கலரான ப்ளோரஸண்ட் நிற வாரில் மிக்கி மௌஸ், டாம் & ஜெர்ரி படம் எல்லாம் போட்டிருக்கும்.

கணேசன் வேலை செய்வதைப் பார்த்து எனக்கும் என்றாவது ஒரு நாள் கணக்கெழுதும் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்ட காலம்
ஒன்று இருந்தது. பத்தாவதற்குப் பின் அப்பா என்னை பழனியில் பாலிடெக்னிக் படிக்க அனுப்பி விட்டார். அங்கே பாட்டி தாத்தாவின் வீட்டில்
நின்று படித்துக் கொண்டு ஆறு மாதம் ஒருமுறை தான் மூலனூருக்கு வருவேன். பாலிடெக்னிக் முடிந்து ஒருவழியாக ஒரு கம்ப்யூட்டர் சர்வீஸ்
கம்பெனியில் சேர்ந்தேன். ஒரு ஆறு ஆண்டு காலம் வாழ்கையும் பிழைப்பும் என்னை எனது சொந்த மண்ணில் இருந்து பிய்த்து எடுத்து விட்டது.
வீட்டுக்குப் போகும் நாளில் எல்லாம் அம்மாவோடும் அப்பாவோடும் செலவிடவே நேரம் பத்தாத நிலையில் பால்பாண்டி டிரேடர்சும் அப்பாவோடு சைக்கிளில் போன நினைவுகளும் ஏறக்குறைய மறந்தே விட்டது.

இரண்டாயிரத்து மூன்றாம் வருட வாக்கில் நான் எங்கள் கம்பெனியின் திருப்பூர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது காலையில்
தலைமை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு –

“சங்கர், உங்களுக்கு ஒரு இன்ஸ்டாலேஷன் செட்யூல் ஆகி இருக்குங்க” மேரியின் அதே வழக்கமான சலிப்பூட்டும் குரல்

“அப்படியா.. கஸ்டமர் அட்ரஸ், காண்டாக்ட் போன் நெம்பர் எல்லாம் சொல்லுங்க மேடம்” அசுவாரசியமாய் காதைக் குடைந்து கொண்டே
நோட் பேடை கையில் எடுத்துக் கொண்டேன்.

“நோட் பண்ணிக்குங்க – எம்.எஸ் பால்பாண்டி டிரேடர்ஸ், பூக்கடை ரோடு, தாராபுரம். காண்டாக்ட் நேம் – மிஸ்டர். பால்பாண்டி

நிமிர்ந்து உட்கார்ந்தேன் – ‘பால்பாண்டி டிரேடர்ஸ்’… தாராபுரம்… உய்ய்ய்ய்…! வாயிலிருந்து உற்சாகமாய் விசில் புறப்பட்டது.

“ஹல்லோ.. சங்கர்..! வாட் ஈஸ் திஸ்???” மேரியின் குரலில் லேசான சூடு.

“இ..இல்ல அ..அயாம்.. சா.. சாரிங்க. அ.. அது வந்து தாராபுரம் எங்க சொந்த ஊரு. அதான் எக்ஸைட்மெண்ட்ல…” திக்கித் திக்கி வந்து விழுந்தது
வார்த்தைகள்.

“ம்ம்ம்.. இட்ஸ் ஓக்கே. டேக் கேர் ஆஃப் த இன்ஸ்டலேஷன். முடிச்சிட்டு ரிப்போர்ட் அனுப்புங்க. பை” தட்டென்று போனை அறைந்து சாத்தினாள்.

என்ன தான் நமக்கு தொழில்நுட்பங்கள் நிறைய தெரிந்திருந்தாலும், வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயர்ந்திருந்தாலும் அதை பக்கத்திலிருந்து
பார்க்க ஆட்களிலில்லாதது ஒரு கொடுமை. நமது திறனை நாம் அயல் ஆட்களிடம் நிரூபிப்பதில் இருக்கும் பெருமிதத்தை விட நமக்குத் தெரிந்த
நபர்களின் முன் அதை காட்டுவதில் ஒரு அல்ப திருப்தி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா. கடைக்குப் போன என்னைப் பார்த்து அடையாளம்
தெரியாமல் சீட்டில் இருந்து எழுந்த அண்ணாச்சி ‘வாங்க சார். உட்காருங்க சார். டீ குடிக்கறீங்களா சார்’ என்று குழைந்த போது எனக்கு அதே அல்ப திருப்தி ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுப் போனது.

“என்ன அண்ணாச்சி என்னை அடையாளம் தெரியலையா?” கையில் இருந்த டூல்ஸ் பேக்கை அவர் டேபிளின் மேல் வைத்துக் கொண்டே கேட்டேன்.

“யாரு…. அட! நம்ம மணி மவனா நீ. என்னப்பா அளே அடையாளம் தெரியாம மாறிட்டயே. டவுசர போட்டு மூக்குல ஒழுக்கிட்டு வந்து நிப்பா நீ..
இப்ப இஞ்சினியரா..”

அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் கணேசன். கொஞ்சம் நரை முடிகள் வாங்கியிருந்தார். கண்ணில் ஒரு திக்கான கண்ணாடி ஏறியிருந்தது. வழக்கமான அவரது டேபிளுக்கு பதில் புதிதாக ஒரு கம்ப்யூட்டர் டேபிள் இருந்தது. அதன் அருகிலேயே இரண்டு அட்டைப் பெட்டிகள் – மானிட்டரும், சி.பி.யுவும்.

“சரி அண்ணாச்சி.. நான் சீக்கிரம் சிஸ்டத்த இன்ஸ்டால் பண்ணிடறேன்” திரும்பிப் பார்க்காமல் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே கணேசனின்
இடத்திற்குச் சென்றேன்.

என்றுமில்லாத அதிசயமாய் கணேசன் பதட்டமாய் இருந்தார். என்னை முதலில் ஓரிரு வினாடிகள் வெறுமையாய்ப் பார்த்தார். மெதுவாய்
புன்னகைத்தார். அவரது கைகள் அந்த அழுக்கேறிய, கூர்மையான முனைகள் மழுங்கி ஒரு நீள் வட்ட வடிவத்துக்கே வந்து விட்ட – மழுங்கிப் போன
கிளிப்பில் கத்தையாய் சிட்டைகளை லூசாக பற்றியிருந்த – கார்ட் போர்டு அட்டையை இறுக்கமாக பிடித்திருந்தது. அதில் லேசாய் நடுக்கம் இருந்தது. அது முதுமை காரணமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

“என்னண்ணே… சவுக்கியமா இருக்கீங்களா”

அந்த அட்டையை டேபிளின் மேல் வைத்தார். எழுந்து நின்று அவரை விட உயரமாய் வளர்ந்து விட்ட என் தோள்களை இரு கைகளாலும்
பற்றினார். எனது இரு புஜங்களின் வழியே அவர் உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டே வந்து எனது இரு மணிக்கட்டுகளையும் பற்றினார்.
இடது கையில் புதிதாய் நான் வாங்கிக் கட்டியிருந்த டைட்டன் வாட்சை பார்த்தார். ஒரு பெருமிதமான புன்னகை அவரது முகத்தில் எழுந்தது.

“நல்லா இருக்கேன் தம்பி.. ” ஏதோ கேட்க வேண்டும் போல் அவரது முகம் என்னை எதிர்பார்த்தது.

“என்னண்ணே..” என்றேன் அவரது பழுப்பேறிய கண்களுக்குள் பார்த்துக் கொண்டே.

“அ..அது.. வ..வந்து…”

“சொல்லுங்கண்ணே”

“இந்தக் கம்பியூட்டரை எத்தனை நாளிலே படிக்க முடியும் தம்பி” அவரது கண்கள் என் முகத்திலிருந்து விலகி உள்ளே அண்ணாச்சியை ஒரு முறை
பார்த்தது.

“ஆப்பரேட் பண்ண எப்படியும் அடிப்படை தெரிஞ்சிருக்கணும்ணே. எப்படியும் ஆறு மாசமோ இல்லை ஒரு வருசமோ ஆகலாம் – ஆர்வத்தைப்
பொருத்து” என்றேன். எனக்கு அந்தக் கேள்வியின் பொருள் புரியவில்லை.

அவர் முகத்தில் ஒரு ஆயாசம் தோன்றியது. எனது மணிக்கட்டுகளை விடுவித்தவர். அவர் சீட்டில் அமர்ந்தார். அந்த சிட்டை பேடை ஏக்கத்துடன்
பற்றிக் கொண்டார்.

அன்று நான் அந்த சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்யும் போது கணேசன் கம்ப்யூட்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். இன்ஸ்டலேசன் முடிந்து
டேலி சாப்ட்வேரை திறந்து எப்படி கூட்டல் கழித்தல் கணக்கு போட வேண்டும், வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது என்பது எப்படி என்பதை
நான் விளக்கிக் கொண்டிருந்த போது அவரது கண்கள் ஒரு பசியெடுத்த புலியின் கூண்டுக்குள் தவறி விழுந்து விட்ட மானின் கண்களைப் போல
அலைபாய்ந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து கிளம்பும் போது கணேசன் என் தோளைப் பிடித்து இருத்தினார். அவரது மேல் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சில ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி எனது கையில் திணித்தார்.

“என்ன.. கணேசா.. இன்னும் ரெண்டு நாள்ல அந்த கம்பியூட்டர கத்துகிடுவியாலே… அந்த அட்டைய தூக்கி தூர போட்டுட்டு இனிம கம்பியூட்டர்ல வேல பாக்க கத்துக்கல” அண்ணாச்சி உற்சாகமாய் கணேசனிடம் சொல்லிக் கொன்டிருந்த போது நான் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினேன். பஸ்ஸில் தாராபுரத்திலிருந்து மூலனூர் வரும் வரையில் எனக்கு கணேசனின் கண்களே நினைவிலாடியது. வில்லுப்பாட்டு வித்வானை பாப் சாங் பாட நிர்பந்திப்பது போல் இருந்து அந்த சூழ்நிலை.

அதற்குப் பின் எனது பணிச்சூழல் என்னை இந்தியாவின் பரப்பெங்கும் மேற்கும்-கிழக்குமாய், வடக்கும்-தெற்குமாய் அலைக்கழித்தது. எத்தனையோ
ஊர்கள், எத்தனையோ கணேசன்கள், எத்தனையோ அனுபவங்கள்… போன மாதம் இரண்டு வார லீவில் மீண்டும் ஊருக்குப் போயிருந்தேன். எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் எனக்கு தாராபுரத்தின் நினைவும், கணேசனின் நினைவும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது.
அவரைப் போய் சந்திக்கலாம் என்று கிளம்பினேன்.

இந்த ஏழு வருடத்தில் தாராபுரம் பெரிதாக மாறவேயில்லை. சாலைகள் மட்டும் கொஞ்சம் அகலமாகியிருந்தது. பால்பாண்டி டிரேடர்ஸ் கூட அதிகம் மாறவில்லை. கல்லாவில் அண்ணாச்சியின் சாடையில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே அண்ணாச்சியின் புகைப்படம்
ஒன்று மாலையோடு தொங்கிக் கொண்டிருந்தது. எனது பார்வை கணேசனின் இடத்திற்குச் சென்றது – அங்கே அவர் இல்லை. அந்த டேபிளில் – நான் இன்ஸ்டால் செய்த சிஸ்டத்தின் முன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் கணேசனிடம் நான் முன்பு எப்போதும் பார்க்கும் வாஞ்சை இல்லை. டென்ஷனாக இருந்தான். டேலியில் ஏதோ கோளாரு போல அந்த மங்கிய ஸ்க்ரீனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்கள் கூட்டம் முன்பைப் போல இல்லை. முன்பு இருந்ததை விட பாதி தான் இருந்தது.

“என்ன சார் வேணும்?” கல்லாவில் இருந்த இளைஞன் கேட்டான்.

“இல்ல.. இங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… கணேசன்னு பேரு.. அவரைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…” சுற்றிலும் பார்வையை ஓட்டிக்
கொண்டே சொன்னேன்.

“ஓ… அவரா.. இருக்காரே.. உள்ள பாக்கிங் செக்சனில் இருக்கார். வரச் சொல்லவா..”

“இல்லங்க. வேணாம். நானே போய் பார்த்துக்கிறேன்”

கணேசன் கிழண்டு போயிருந்தார். நிறைய மெலிந்திருந்தார். கண்ணாடி பழுப்பேறியிருந்தது. அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி நடுங்கும் கைகளால் ஏதோ பருப்பை பொட்டலமாக மடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விரல்களின் இடுக்கில் அந்த பொட்டலம் விழ முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் நேரே அவர் முன் போய் நின்றேன். ஒரு சின்ன போராட்டத்துக்குப் பின் சனல் கயிரால் ஒருவழியாக பொட்டலத்தைக் கட்டி முடித்தவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

“யேய்.. சங்கரு….என்னப்பா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே” அவரது கை அனிச்சையாக அவரது சட்டை பாக்கெட்டுக்குச் சென்றது.
காலியான பாக்கெட்டைத் தடவி விட்டு ஏமாற்றமாய் கீழிறங்கியது.

“அது… அண்ணாச்சி மவன் கொஞ்சம் வெறைப்பான ஆளு. மிட்டாய்க்கெல்லாம் சம்பளத்துல பிடிச்சிக்கிறாரு..” வரட்சியாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“பரவாயில்லண்ணே… வாங்க டீ சாப்பிடுவோமா”

“சரி வா..”

வெளியேறும் போது அவர் அந்த பய்யனைத் திரும்பிப் பார்த்தார் – அவன் இன்னும் டேலியோடு போராடிக் கொண்டிருந்தான். நமுட்டுச் சிரிப்போடு
என்னைப் பார்த்தார். அதில் ஏதோவொரு செய்தி இருந்தது – எனக்குப் புரியவில்லை. எனக்கு மனம் கணத்துக் கிடந்தது. ஒரு காலத்தில் இதே கடையில் கணக்கராய் இருந்தவர்.. இன்று இதே கடையில் தொழில் கற்றுக் கொள்ள வந்த சின்னப் பயல்களோடு சேர்ந்து பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கிறார். கால மாற்றம் தான் என்றாலும்.. நானும் கூட அவரின் இந்த நிலைக்கு காரணமாய் இருந்துள்ளேன் என்பது எனக்கு உறுத்தலாய் இருந்தது. எத்தனை கணேசன்களின் கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் நான் உலைவைத்திருப்பேனோ என்ற கவலை என்னை வாட்டியது. நாங்கள் சாலையைக் கடந்து எதிரே கரூர் வைசியா பேங்கை ஒட்டி இருந்த பாய் கடைக்குப் போனோம்.

“என்னண்ணே இந்த வயசுக்கப்புறம் உங்கள பொட்டலம் மடிக்க விட்டுட்டாங்களே” எனக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

“அதனால என்னப்பா… அதுவும் ஒரு வேலை தானே” அவர் டீயை ஊதிக் குடிப்பதில் மும்முரமாய் இருந்தார்.

“இல்லண்ணே.. இதே கடைல நீங்க மதிப்பா சட்ட மடிப்புக் கலையாம கணக்கெழுதிட்டு இருந்தீங்க.. இப்ப அதே கடைல சின்னப் பசங்களோட
நின்னு வேல பாக்கீங்களே.. அதுக்கு நானும் ஏதோவொரு வகையில காரணமா போனது கஸ்டமா இருக்குண்ணே”

டீ தம்ளரை வைத்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்தார். லேசாக சிரித்தார். அது என்னை சீண்டுவது போலிருந்தது.

“என்னண்ணே.. இப்படிச் சிரிக்கிறீங்க”

“பின்ன சிரிக்காம என்னப்பா… ஏதோ பழைய சிவாஜி படத்துல வரும் ரங்காராவ் நிலமையில நான் இருக்கதா நினைச்சியா நீ.. அது என்ன
சொல்லுவாங்க… ஆங்! வாழ்ந்து கெட்ட மாதிரி. வாழ்ந்தா தானே கெட முடியும். ம்ம்ம்…. அன்னிக்கு நீ இந்த கம்பியூட்டர போட்டுக் குடுத்துட்டு
போன நாள்ல எனக்கு ரொம்ப கஸ்டமாத் தான் இருந்தது. எத்தனையோ வருசமா இதே கடைல கணக்கெழுதிருக்கேன்… நான் படிச்ச படிப்பு வேற.. நான் போட்ட கணக்கு வேற… இது புதுசா வந்தது. எனக்கும் பயம் தான். ரெண்டு நா டயம் குடுத்தாரு அண்ணாச்சி. எனக்கு ஒரு எழவும் புரியலை. புரிஞ்சிக்கிடற வயசும் தாண்டியாச்சி. கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி பொட்டலம் மடிக்க போட்டாரு – சம்பளத்தயும் அதுக்கு தக்க கம்மி பண்ணிட்டாரு. எத்தனையோ வருசம் கூடவே வேலை பாத்த கடைப் பய்யன்களே ஒருத்தனும் ஏன்னு கேக்க வரல…”

டீ தம்ளரை கையிலெடுத்தவர் ‘சர்க்’ என்று உறிஞ்சி அதன் சுவையைக் கண் மூடி இரசித்தார். பின் தொடர்ந்தார்..

“கூட நின்னு ஏன்னு நியாயம் கேக்க நாதியில்லைங்கறது தான் எதார்த்தம். இந்த வயசுக்கப்புறம் என்னாலும் தனியா நின்று ரோசம் காட்ட முடியலை. வச்சிக் காப்பாத்த புள்ளைங்களும் இல்லை. ஏத்துக்கிட்டேன். வேற வழியில்லாம ஏத்துக்கிட்டேன். ஆனா.. எனக்கு இன்னிக்கு நடந்தது தான் எனக்குப் பதிலா புதுசா வந்திருக்கவனுக்கும் நடக்கும். சிட்டைல கணக்கெழுதிட்டு இருந்த என்னைக் கம்பியூட்டர் வந்து தூக்கி வீசிச்சி. கம்பியூட்டர்ல வேல பாக்கவன வேற எதுனா அதை விட பெருசா ஒன்னு வந்து தூக்கி வீசும். எனக்கு இந்தப் பிள்ளைய பாத்தா பாவமா இருக்கும். நான் நின்ன மேனிக்கு கீழ விழுந்தவன் – லேசாத் தான் அடிபட்டுச்சி. ஆனா.. ஒசரத்துல நின்னு கீழ விழுந்தா? அன்னிக்கும் ஏன்னு கேக்க நாதியத்து தான் நிக்கனும். நாமெல்லாம் கூலிக்காரங்க சங்கரு… நான் சின்னக் கூலிக்காரன்.. நீ பெரிய கூலிக்காரன். கூலிக்குத் தக்க அடி தான் விழும் தம்பி”

“நம்ம வீடுகள்ல பழைய பொருளைப் புது பொருள் வந்து மாத்தி வைக்கும். அதுக்கெல்லாம் உயிர் இல்லை தம்பி. ஆனா நமக்கு உயிர் இருக்கு.
குடும்பம் இருக்கு. நாம் கூட்டுக்குத் திரும்பினா வாயைப் பிளந்துகிட்டு குஞ்சுகள் காத்துக் கிடக்கும். நாமும் பழசாவோம்.. அறிவு பழசாகும்.. புதுசா
ஏதோவொன்னு வந்து நிக்கும். ஆனா.. புதுசை நாம் கத்துக்கற அளவுக்கு முதலாளிங்க யாரும் நமக்கு நேரம் தர்றதில்ல.. வேலை செய்யற நாள்ல கசக்கி பிழிஞ்சு நம்மோட சாரெல்லாத்தையும் உறிஞ்சிட்டு சக்கையா துப்பிடறாங்க. நாமெல்லாம் தனித்தனியா நிக்கறோம். தனித்தனியா
தோக்கிறோம். தனித்தனியா விழுந்திடறோம். பக்கத்தில் நின்னவன் விழும் போது நாமும் விழப்போறம் – நம்மையும் தள்ளி விடப்போறான்னு
புரிஞ்சிக்கிடறதில்லை.. தனித்தனியான மாடுகளை நாளுக்கொன்னா நரி மெஞ்ச மாதிரி ஆகுது நம்ம நிலமை” பேசி முடித்து விட்டு மிச்சமிருந்த
டீயை உறிஞ்சத் தொடங்கினார்.

எனக்கு பேச்சே எழவில்லை. அந்தக் கணத்தில் – இந்த வாழ்க்கை.. இந்த வசதி.. இந்த நாளின் எனது மேன்மை.. நானே சுயமாய் உருவாக்கியது என்று நினைத்த ஒரு அழகிய மாளிகை.. எல்லாம் என் கண்முன்னே நழுவிச் செல்வது போல் ஒரு காட்சி தோன்றியது. ஐயோ… நான் – நான் எனது இளமையெல்லாம் தொலைந்து.. ஒரு நடுவயதினனாய்.. தனியனாய்  நிற்கிறேன். என் காலடியில் பூமி நழுவிச் செல்கிறது. நான் கிழண்டு
போய் விட்டேன். நான் இனி இளைமை முறுக்குத் தெறிக்கும் பந்தையக் குதிரையல்ல. மட்டக் குதிரை. என்னால் இனி பந்தையத்தில் ஓட முடியாது. யாருக்கும் நான் தேவையில்லை.. என்னைச் சுற்றிலும் புதிதாய்ச் சில குதிரைகள்.. அவை என்னைப் பார்த்து சிரிக்கிறது. உறுதியான பல் வரிசை தெரிய சிரிக்கிறது.. அது – அது.. இல்லை.. அது குதிரைகளல்ல.. அங்கே கம்ப்யூட்டரில் டேலியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞன் போல் தெரிகிறது. இல்லை அது குதிரைகள் தான்.. இல்லை.. அது அந்தப் பையன் தான். அவன் தோள் மேல் அண்ணாச்சி அமர்ந்திருந்தார். அண்ணாச்சிகள் அமர்ந்திருந்தனர். கையில் ஏதோ உறுத்தியது.. அது.. இன்னொரு கை. அது யாருடைய கையோ.. திரும்பிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே இன்னொரு மட்டக் குதிரை. அதைத் தொடர்ந்து இன்னொன்று. அதைத் தொடர்ந்து இன்னொன்று. நாங்கள் ஓடினோம். அண்ணாச்சியை நோக்கி ஓடினோம்… அண்ணாச்சிகளை நோக்கி ஓடினோம்…

“தம்பி.. தம்பி..” கணேசன் என் தோளை உலுக்கிக் கொண்டிருந்தார். “என்னப்பா டீ கிளாஸைக் கீழ போட்டுட்டியே. ஒடம்பு சரியில்லையா?”

“இல்லை.. ஒன்னுமில்லை” முகம் முழுக்க வேர்த்திருந்தது. “சரி போலாம்”

“ம்ம்.. இந்தா.. இதை வச்சிக்க” அவர் எனது வலது கை உள்ளங்கையில் சில ஆரஞ்சு மிட்டாய்களை வைத்தார். என்னைப் பார்த்து திருப்தியாய் சிரித்தார். அது என்னை உணர வைத்த திருப்தி. திரும்பி கடையை நோக்கி நடந்தார்.

மே 25, 2010 Posted by | culture, short story, Uncategorized | , , , , | 5 பின்னூட்டங்கள்

சண்முகத்தின் கதை..!

“நாயைக் கழுவி நடு வீட்டில வச்சாலும் அது நரகலைத் தான் தேடும்னு சொல்றது சரியாப் போச்சே” சரோஜா கோபாவேசத்தில் கத்தினாள்.

“ஏண்டி உன் ஜாதி என்ன அவன் ஜாதி என்ன. அவனோட போயி… எப்படிடீ.. ச்சீய். சொல்லவே நாக் கூசுது” சரோஜாவின் கோப இலக்கான சுசி பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்னாங்க.. இவ இனிமே நமக்கு வேணாங்க. தொலைச்சி தல முழுகிடலாம். கொண்டு போய் எங்கியாவது விட்டிருங்க. இல்லன்னா விஷம் வச்சிக் கொன்னுடலாம். என்னாங்க.. ஒங்களத்தான். நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன்.. நீங்க பேப்பர படிச்சிட்டு இருக்கீங்க”

“சரோ.. இப்ப என்ன ஊருல நாட்டுல நடக்காதது நடந்து போச்சி. வேணும்னா நான் டாக்டர் கிட்டே கூட்டிப் போய் அபார்ஷன் எதுனா பண்ண முடியுமான்னு பாக்கறேன். அதுக்கு ஏன் கொல்லனும்னு எல்லாம் யோசிக்கறே” சண்முகத்திற்கு தர்ம சங்கடமாய் இருந்தது.

“முடியவே முடியாது. என் மானமே போச்சி. இனிமே பக்கத்து வீட்டுக்காரி என்ன எப்படியெல்லாம் சாடை பேசப் போறான்னு உங்களுக்குப் புரியாது. இந்த அவமானத்துக்கு இவள கொன்னுடலாம். போங்க போயி எதுனா விஷம் வாங்கிட்டு வாங்க” சரோஜா யாரும் சொல்லிக் கேட்கும் நிலையைக் கடந்து விட்டாள்.

“பாவம் சரோ.. நாமே சோறு போட்டு வளர்த்துட்டு எப்படி கொல்ல மனசு வரும். வேணும்னா இவள கொண்டு போய் புளூ கிராஸ் கிட்டே குடுத்துடுவோமா?”

“அது என்ன புளூ கிராசோ என்ன எழவோ. இவ இனிமே இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” கறாராக பேசி விட்டு வெடுக்கென திரும்பிச் சென்று விட்டாள்.

சண்முகத்தை சுசி பரிதாபமாய் பார்த்தாள். காலையில் வந்திருக்க வேண்டிய பிஸ்கட் ஏன் இன்னும் வரவில்லை என்று சுசிக்கு இன்னும் புரியவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். தினத் தந்தியின் பக்கங்களைப் புரட்டினான். “ஆச வச்ச பொண்ணு மேல பாசம் வச்சி மோசம் போன மனமே….” ஆண்டியார் பாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையாவது இந்தாளுக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா என்று தோன்றியது.

கடுப்பாக பேப்பரை மடக்கி ஓரத்தில் போட்டான். எப்.எம் ரேடியோவில் தனுஷ் உருகிக் கொண்டிருந்தார் – “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்..”

‘காதலில் எங்கே விழுந்தேன். கக்கூசில் தான் விழுந்தேன்’ என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த தேவதைகள் எல்லோரும் சூனியக்காரிகளாக மாறும் தருணம் எது என்று சண்முகம் யோசித்துப் பார்த்தான். சரோஜாவும் அவனுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்த நாட்கள் நினைவிலாடியது.

“என்னாங்க.. ஒங்களத்தான். இங்க பாருங்களேன்” சண்முகம் அப்போது தான் கம்பெனியில் இருந்து வந்திருந்தான். அந்த நேரத்தில் அவனை யாரும் தொந்திரவு செய்வதை அவன் விரும்புவதேயில்லை. கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்து ஈசி சேரில் சாய்ந்ததும் ஒரு ஆழமான மயக்க நிலைக்குப் போய்விடுவான். அந்த முப்பது நிமிடங்களில் கடவுளே வரம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னாலும் கூட ‘போய்ட்டு அப்புறம் வாய்யா’ என்று சொல்லி விடுவான். அன்றைக்கு முழுவதும் அவன் வாங்கிய திட்டுகள், பெற்ற அவமானங்களை, அடைந்த சிறுமைகளை மெல்ல அசைபோட்டு மூளையின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றும் நேரம் அது.

“அட.. நான் கூப்பிடறது காதில் விழாதா ஒங்களுக்கு. இங்க பாருங்கன்னா” சரோ குழைந்தாள்.

“என்னம்மா” போடி என்று உதறிவிட சரோ என்ன கடவுளா.. காதலியாயிற்றே.

“நம்ம பக்கத்து வீட்டுல பூங்கொடியில்ல.. அவங்க வீட்ல புதுசா ஏ.சி போட்டிருக்காங்க. ஸ்பிளிட் ஏசியாம். ஒன்ர டன்னாம். வீடே ச்சில்லுன்னு எப்படி இருக்கு தெரியுமா. நாமளும் ஒன்னு வாங்கலாங்க..” ஈசி சேரின் வலது கையில் முட்டாக்கு போட்டுக் கொண்டே சொன்னாள்.

“நம்ம வீட்டுக்குப் பின்னாடி தான் ரெண்டு வேப்ப மரம் இருக்கே சரோ. நல்ல காத்தோட்டமான வீடும்மா.. இயற்கையான காத்து இருக்கும் போது நமக்கு எதுக்கும்மா ஏ.சியெல்லாம்” கண்ணை மூடிக் கொண்டே சொன்னான் சண்முகம்.

“……”

“சரோ…..” பதில் இல்லையென்றதும் கண்னைத் திறந்து பார்த்தான்.

சரோ பக்கத்திலில்லை. உள்ளே பாத்திரங்கள் உருளும் சப்தம் மட்டும் கேட்டது. அன்று தான் ஒரு தேவதை சூனியக்காரியாக மாறத் துவங்கியதன் முதல் அறிகுறியைக் கண்டான். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாக கழிந்தது. நான்காம் நாள் காலை சண்முகம் மொத்தமாக சரண்டராகி தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

“சரோ..”

“…..”

“கிளம்பும்மா.. பஜாருக்கு போயி ஏ.சி என்னா விலை என்ன விவரம்னு கேட்டுட்டு வருவோம்”

இருபத்திரெண்டாயிரம் பி.எப் லோன் போட்டு ஒரே வாரத்தில் வீட்டில் ஏ.சி மாட்டப்பட்டது. சரோ சண்முகத்தைக் கொண்டாடினாள். அவன் முன்னயே உறவுகளுக்கு போன் போட்டு கணவனின் அக்கறையை பிரஸ்தாபித்தாள் – கூடவே தான் ஏ.சி வாங்கியதையும். உறவுகள் இவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அதற்குத்தானே உறவுகள்? நம்மைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட்டுக் கொண்டேயிருந்தால் தானே நாம்
வெற்றி பெற்றுள்ளோம் என்பதே உறுதியாகிறது என்றெல்லம் சண்முகம் நினைத்துக் கொண்டான். ஏ.சியின் ரீங்காரம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது – அடுத்த மாத கரண்டு பில் வரும் வரையில்.

“யெப்பா… யெப்பா… சீனு மாமா வந்துத்தாங்க.. மித்தாய் குதுத்தாங்க” பாலு கையில் சாக்லெட்டோ டு உள்ளே ஓடிவந்து சண்முகத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். பாலுவின் பின்னாலேயே சீனு. இருபத்தைந்து வருட நட்பு. பள்ளி நாட்களிலிருந்து மாறாத அதே சிரிப்போடு வந்தான்.

“யேய்.. என்னடா லீவு நாள்ல சினிமா கினிமான்னு பொண்டாட்டியோட சுத்தாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கே” இவனுக்கு வாயில் மட்டும் வாஸ்து சரியாய் இல்லை.

“டேய்.. மொதல்ல நீ அடக்கி வாசி. அவ காதுல கீதுல உளுந்துடப் போகுது” சண்முகம் ஒருமுறை அவஸ்தையோடு உள்ளே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“சரி சொல்லு எதுக்கு மிஸ்டு கால் குடுத்தே. நாலு வீடு தள்ளி தானே இருக்கேன். எழுந்து வர வேண்டியது தானே”

“அது… ஒரு சின்ன பிரச்சினைடா”

“என்ன திரும்ப சிஸ்டர் எதுனா வாங்கிக் குடுக்க சொல்றாங்களா”

“இல்லடா.. சுசிய கொல்லனுமாம்”

“ஏன்.. நாலு மாசம் முன்னே தான ஆசையா வாங்கிட்டு வந்தே? இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு?”

“அது வந்து மச்சி….” சண்முகத்துக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. காரணமும் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவுரவமானதில்லை என்பதால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.

“என்ன.. யாரையாவது கடிச்சிடுச்சா”

“ச்சே ச்சே.. அதில்ல.. அது வந்து.. எதிர் வீட்ல ஒரு நாட்டு நாய் இருக்கில்லே அதோட மேட்டிங் ஆய்டிச்சி போல. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கு” ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடித்தான்.

“அது நல்லது தானடா.. இப்படி கிராஸ் ஆனா குட்டிங்க வித்யாசமா, அழகா பிறக்குமே. அதில என்ன பிரச்சினை”

“அது தாண்டா பிரச்சினையே. சரோவுக்கு அது பிடிக்கலை. அது நாட்டு நாயி, சுசி பொமரேனியன்; ஒசந்த சாதி. அதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரி ஏதோ அசிங்கமா சொல்லிட்டாளாம். அது தான் இப்ப இதை தொலைச்சே ஆகனும்னு தலைகீழா நிக்கறா”

“கஷ்டம்டா.. நாய் கிட்டே கூடவா சாதியெல்லாம் பாப்பாங்க? சரி, இப்ப என்ன செய்யப் போறே. கொல்லப் போறியா” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்

“இல்ல கொல்ற ஐடியா எனக்கில்ல… ஆனா இந்த புளூ கிராஸ் ஆளுங்க கிட்ட கொடுத்துட்டா என்னான்னு யோசிக்கறேன். ஒங்க ஆபீஸ் பக்கத்துல தானே அவங்களோட ஆபீஸ் இருக்கு – அதான் ஒன்ன கூப்டேன்”

“ம்.. இந்த மாதிரியெல்லாம் அவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலையேடா. சரி.. நீயே கூட வா ஒரு எட்டு போய் கேட்டுட்டே வந்துடலாம்” சொல்லிக் கொண்டே சீனு எழுந்தான்.

“என்னாங்க.. போகும் போது அப்படியே இந்த சனியனையும் எடுத்துட்டுப் போயிருங்க. அவங்க வாங்கிக்கிடலைன்னா எங்கியாவது கண் காணாம விட்டுட்டு வந்துருங்க” சரோவின் அசரீரி கேட்டது. உள்ளேயிருந்தபடியே பேச்சு முழுவதையும் கவனித்திருக்கிறாள்.

சீனுவின் பைக் நிதானமான வேகத்தில் ஊர்ந்தது. சண்முகத்தின் கையில் சுசி சந்தொஷமாய் திமிரிக் கொண்டிருந்தது. அவள் தன்னை எங்கோ அழைத்துப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சண்முகத்திற்கு மனம் லேசாய் கணத்தது; நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. ஏ.சி விசயத்தில் தாழ்ந்து போனது தான் அதைத் தொட்டு வந்த மற்ற எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க.. பூங்கொடி அக்கா வீட்ல புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. லதா மாமி வீட்ல புதுசா ஒரு சி.டி பிளேயர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. மேரி ஆண்ட்டி வீட்ல புதுசா ஒரு டேபிள் டாப் வெட்கிரைண்டர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. பின்னாடி வீட்ல புதுசா ஒரு வாசிங் மிசீன் வாங்கியிருக்காங்க”

மாதத் தவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வரவும் செலவும் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று ஒன்றோடு ஒன்று குத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. சண்முகம் கவலைப் பட ஆரம்பித்தான். ஒருநாள் தெருமுனை டீ கடையில் பூங்கொடி அக்கா புதிதாக ஒரு கள்ளப் புருசனை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று பொரணி பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் அரண்டே போய் விட்டான். லேசான நடுக்கத்தோடு வீட்டுக்கு வந்த போது பாலு வீர் வீரென்று கதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேகமாக உள்ளே ஓடினான் –

“இந்தாங்க.. இந்த மானக் கேட்டுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கே போயிருவேன்” சரோ அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் “சனியனே.. உன்ன இப்ப என்ன கொன்னா போட்டேன்.. ஏன் கத்தறே” பாலுவுக்கு இன்னொன்று முதுகில் கிடைத்தது.

“இப்ப என்ன நடந்துச்சி. நீ ஏண்டி குழந்தைய கை நீட்டறே… ஒங்கம்மா வீட்டுக்கு போவனும்னா மொதொ வேலையா அடுத்த பஸ்ஸ புடிச்சி போய்த் தொலை. இன்னொரு வாட்டி கை நீட்ற வேலை வச்சிக்கிட்டே…” சண்முகம் கல்யாணம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆத்திரப்பட்டான்.

“ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா.. எங்க வீட்ல நான் பொழச்ச பொழப்புக்கு உன்னிய மாதிரி ஒரு தரித்திரம் பிடிச்ச ஓட்டாண்டிய நம்பி வந்தேம் பாரு.. என்னச் சொல்லனும். நீ தானேய்யா எம் பின்னாடியே அலைஞ்சே.. நான் பேசாம சாகப் போறேன்..” சொல்லிக் கொண்டே அவள் உள்ளறையை நோக்கி ஓடவும் சண்முகத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பின்னாடியே ஓடினான்.. கையைப் பிடித்தான்.. காலைப் பிடித்தான்.. அழுதான்.. மீண்டும் மொத்தமாக சரண்டராகி தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொண்டான்.

பின்னர் இரவு பாலு உறங்கிய பின் மெதுவாக விபரம் என்னவென்று கேவல்களுக்கு இடையில் சரோ விவரித்தாள். பூங்கொடி வீட்டில் ஒரு பொமரேனியன் நாய் வாங்கியிருக்கிறார்களாம். பாலு அதோடு விளையாடச் சென்றானாம். அதற்கு பூங்கொடி ஏதோ சொல்லி விட்டாளாம்.

வேறென்ன அடுத்த மூன்றாவது நாள் – அதே இனத்தைச் சேர்ந்த, அதே நிறம் கொண்ட, அதே உயரம் கொண்ட ஒரு நாயை மூவாயிரம் அழுது வாங்கி வந்தான் சண்முகம். அதன் பின்னங்காலைத் தூக்கிப் பார்த்த சுசி ‘அய்யே.. பொட்ட நாயா’ என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ ‘பரவால்ல இருக்கட்டும்.. இதுக்கு சுசின்னு பேரு வைக்கலாங்க’ என்றாள் ஆசையாக.

சண்முகத்துக்கு ஆரம்பத்திலிருந்தே சுசியைப் பிடிக்கவில்லை. அது காலை நக்கும் போதும், தன் முன்னே குழைந்து நிற்கும் போதும், சாப்பாட்டு நேரத்தில் ஏங்கிப் பார்க்கும் போதும், விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் போதும்.. எனப் பல சந்தர்பங்களில் சுசியைத் தனது பிரதி பிம்பமாகவே அவனால் உணர முடிந்தது. அவன் கம்பெனியில் செய்து கொண்டிருப்பதை இங்கே சுசி செய்து
கொண்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்த அடிமைத்தனத்தை சண்முகத்தால் இரசிக்க முடிந்ததேயில்லை. ஆனால் அவனுக்கு சுசியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது. அது ஒரு சக அடிமையின் மேல் ஏற்படும் பரிதாபம்.

“சர்க்க்..” சீனு வண்டியைக் க்ரீச்சிட்டு நிறுத்தியதில் சண்முகத்தின் சிந்தனை கலைந்தது.

‘நாய் எல்லாரையும் கடிக்குது; வீட்டில் அசிங்கம் செய்கிறது’ என்று ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி புளூகிராஸ்காரர்கள் தலையில் அதைக் கட்டிவிட்டு சண்முகம் திரும்பினான். சுசிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன்னைச் சுற்றி தன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிற ஆனந்தம் இருந்திருக்குமோ அல்லது தான் இன்னதென்று விளங்காத காரணத்திற்காக பிரித்து விட்டுச் செல்கிறானே என்கிற சோகம் இருந்திருக்குமோ தெரியவில்லை – அது ஒரு சப்தத்தை எழுப்பியது. அது போன்ற ஒரு சப்தத்தை இது நாள் வரையில் சண்முகம் கேட்டதேயில்லை. அது நாயின் சப்தம் போன்றே இல்லை. அதில் சந்தோஷத்தையோ துக்கத்தையோ அல்லது வேறு உணர்ச்சியையோ அவனால் உணர முடியவில்லை. அவன் வெளிக் கதவை நெருங்கும் சமயம் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் – சுசி அவனையே பார்த்துக் கொண்டு நின்றது. தன் வாலை மிக மெதுவாக அசைத்தது. திரும்ப வந்து தன்னை அள்ளிக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்குமோ என்னவோ – சண்முகத்தின் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தத் தெருவின் கோடியில் இருந்த தேனீர் கடை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.

“அண்ணே ரெண்டு வில்ஸ் பில்டர் குடுங்க” பின்னாலேயே சீனுவும் வந்து சேர்ந்தான்.

“ஒன்னு போதும்ணே” என்று கடைக்காரரிடம் சொன்னவன் “கட் போட்டுக்கலாம்டா” என்றான் சண்முகத்தைப் பார்த்து.

காரமான புகை நுரையீரலின் சந்து பொந்துகளெல்லாம் நிறைந்து இறுக்கத்தைக் குறைத்தது. சண்முகம் கண்களைச் செருகிக் கொண்டே அதை அனுபவித்தான். ஏதோ தோன்றியவன் போல சீனு பக்கம் திரும்பி –

“க்காலி.. இந்த பொட்டச்சிங்களே இம்சடா மச்சி. இத்த வாங்கித்தா அத்த வாங்கித்தான்னு ஒரே நைநைன்னு அரிப்பு. ஒரு மனுசன் வெளில படற பாடுன்னா என்னான்னு தெரியுதா இவளுகளுக்கு… ச்சே.. கம்பெனிலயும் அடிம.. ஊட்லயும் அடிம… எங்க திரும்புனாலும் எல்லாரும் நெருக்கிட்டே இருந்தா ஒருத்தன் எங்க போவான்… பய்யனுக்காக பாக்க வேண்டியிருக்குடா… இல்லேன்னா தொலச்சி தல முழுவிடுவேன்” என்று சொல்லி விட்டு
ஆமோதிப்பான ஒரு தலையசைப்பை எதிர்பார்த்தான்.

“தப்பு அங்க மட்டும் இல்லடா சம்மு… ஓன் கிட்ட தான் பெரிய தப்பே இருக்கு” புகை மூக்கின் வழியே வழிந்து தீரும் வரை பொருத்திருந்து விட்டு “சின்னச் சின்னதா கேக்கும் போது தேவையா தேவையில்லையான்னு நீ யோசிச்சியா? அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா? சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம்? கஸ்டப்பட்டு பொண்டாட்டிய சந்தோசமா வச்சிக்கறவன்னு பேரு வாங்க ஆச
பட்டேல்ல.. அப்ப அனுபவி” இறக்கமேயில்லை சீனுவின் வார்த்தைகளில்.

“டேய் உனுக்கு என்னியப் பத்தி தெரியுமில்லே.. நானே மாச தவனை கட்ட முடியாம லோல்பட்டுகிட்டு இருக்கேன்… நான் இத்தன நாளும் சந்தோசமாத்தான் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் ஆடினேன்னு சொல்றியா..? செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா? உனக்கே அதெல்லாம் தெரியுமில்லே…”

“டே.. சாவறது என்ன அத்தன சுலபமா? சம்பாதிக்கறவன் நீ; வெளியுலகத்துல சுத்தறவன் நீ; அவங்க வீட்லயே அடஞ்சி கிடக்கறவங்க; அவங்க அப்படித்தான் எல்லாத்துக்கும் ஆசப் படுவாங்க. ஒரு பொருள் தேவையா தேவையில்லையான்னு வாங்கறக்கு முன்னாடியே ரெண்டு பேரும் உக்காந்து பொருமையா பேசியிருக்கனும். அவங்க கேட்க தயாரா இல்லைன்னா எப்படி தயார் படுத்தறதுன்னு நீ யோசிச்சிருக்கனும். ஆனா நீ பெருமைக்கு எருமை ஓட்டினே. சொந்தக்காரனுக நாலு பேரு மூஞ்சி முன்னாடி ‘ஆஹா சண்முகத்துக்கு சரோஜா மேல என்னா பாசம்’னு சொன்ன உடனே நீ வானத்துல பறந்தே. இன்னிக்கு நீ லோல்படும் போது அவனுக பக்கத்தில இல்ல பாத்தியா.”

சண்முகம் ஏதும் பேசத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னைக்காவது உன்னோட சம்பளம் எவ்வளவு, பிடித்தம் போக கையில் வாங்கறது எத்தனை அப்படிங்கற உண்மையான விவரத்தை நீ வீட்ல சொல்லியிருக்கியா? அவங்களைப் பொருத்தவரை நீ காசு கேட்டா கொடுக்கற ஏ.டி.எம் மிசின் மாதிரி தானே நடந்துட்டு இருந்தே. மொதல்ல ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். வா.. போலாம்” என்றபடி பைக்கை உதைத்தான்.

சண்முகம் புதிதானவொரு நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். காற்று சில்லென்று வீசியது.

மே 14, 2010 Posted by | culture, short story, Uncategorized | , , | 3 பின்னூட்டங்கள்

தேர்வு – கல்விமுறை – சில அனுபவங்கள்..!

அது ஒரு தொழில் நகரம். நகரம் தான் தொழில் நகரம் ஒரு ஐந்து கிலோ மீட்டர் தாண்டிவிட்டால் விவசாயம் தான். நாங்கள் இருந்த பகுதி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதி. பெரும்பாலும் எல்லோரும் ஏதாவது ஒரு தொழில் பட்டறையில் வேலை செய்பவர்களாய் இருப்பார்கள் அல்லது சிறு விவசாயிகளாகவோ விவசாய கூலிகளாகவோ இருப்பார்கள். முதலில் என்னை வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தான் சேர்த்தார்கள். சேர்ந்த இரண்டாவது நாள் கல்லு சிலேட்டை எறிந்து டீச்சர் மண்டையை உடைத்து விட்டேன். அந்த அம்மாள் என்னை கையோடு இழுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து விட்டு நீ காசே குடுத்தாலும் இந்தப் பையனை நான் பார்த்துக் கொள்ள முடியாது என்று விட்டார். அப்போதெல்லாம் நான் நிறைய குறும்பு செய்வேனாம்..

எங்க அப்பா ஒன்றுக்கு பதிமூணு முறை யோசித்து விட்டு, ‘இவனையெல்லாம் புரியாத பாசை பேசற பள்ளிக்கூடத்துல சேர்த்தா தான் ஒளுங்கா பயந்துகிட்டு படிப்பான்’ என்று முடிவு செய்து பக்கத்து ஊரில் இருந்த ஆங்கில நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டார். அது ஒரு டிரஸ்ட்டினால் நடத்தப்பட்டு வந்த ஆங்கிலப் பள்ளி. அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்கள் இருந்தார்கள். கல்விக் கட்டணமும் அப்பாவின் மாதச் சம்பளத்துக்குள் கட்டுபடியாகும் அளவுக்குத் தான் இருந்தது. அதிகபட்சமாக பத்தாவது படிக்கும் போது மாத கட்டணமாக இருநூறு ரூபாய் கட்டியிருக்கிறேன்.  மற்றபடி மறைமுக கொள்ளை ஏதும் நடந்ததில்லை.

ஆங்கில வழிக் கல்வி என்னைப் பொருத்தளவில் ஒரு பயமுறுத்தும் பூச்சாண்டியாகத் தான் அறிமுகமானது. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் ஆங்கிலத்தின் மேல் தங்களுக்கு இருந்த பயத்தைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் போல வீட்டில் முதன்
முறையாக ஆங்கிலவழிக் கல்வி பயிலச் செல்பவர்களின் பிரச்சினை வேறு வகையானது. வீட்டில் ஆங்கிலம் படிப்பவர்கள் பேசுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பள்ளியில் எல்லா பாடமும் ஆங்கிலமாகவும் இரண்டு பாடங்கள் தமிழாகவும் இருக்கும் ( தமிழ் I & II).

இது ஒரு ரெண்டும் கெட்டான் நிலை. ஆங்கிலமும் மக்கார் பண்ணும் தமிழும் தகறாரு பண்ணும். சொன்னா சிரிக்காதீங்க – எனக்கு ஏபிசிடியே அஞ்சாவது வரைக்கும் ஒரு குத்துமதிப்பாத் தான் தெரியும். எட்டாவது வரைக்கும் ஆங்கில எழுத்து m சரியாக எழுத வராது. எங்க ஆங்கில வாத்தியார் தண்டனையாக “mummaa mumma mummy” என்று ஒரு நோட்டு முழுக்க எழுத வைத்து விரலை உடைத்தார். தமிழைப் பொருத்தவரை இப்பவும் க,ங,ச வரிசையாக சொல்ல முடியாது. திக்கும். தடுமாறும். ஆங்கில இலக்கணத்தைப் பொருத்தவரையில் சுத்தம். தமிழ் இலக்கணம் எனக்குப் புரிந்த லட்சணத்தைத் தான் நீங்களே அனுபவிக்கிறீர்களே. தமிழ் வீட்டிலும் வெளியிலும் பேசும் மொழியாக இருந்தாலும் கூட பள்ளியைப் பொருத்தவரை ஒரு நாளுக்கு ஒரே வகுப்பு தான் தமிழில் நடக்கும் என்பதால் கல்வி எனும் கோணத்தில் அதுவும் கூட அன்னியமாகிப் போனது.

என்றைக்காவது வீட்டுக்கு வரும் தூரத்து சொந்தக்கார மாமா முன் அப்பா பெருமையாக சொல்வார் – ‘எங்க பய்யன நாங்க இங்கிலீசு மீடியத்துல சேத்துருக்கோமாக்கும். டேய் இங்க வாடா குட்டி. மாமா கிட்ட இங்கிலீசுல பேசு’ என்பார் பாசமாக. என்னத்த பேச. ‘மை நேம் ஈஸ் சங்கரு’ என்பதற்கு மேல் வண்டி செல்ப் எடுக்காது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு நிற்பேன். மாமா போனதும் முதுகு வீங்கி விடும். ஏற்கனவே பூச்சாண்டியான ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக வில்லனாகவே ஆகிவிட்டது.

வகுப்பில் முதல் இரண்டு பென்ச்சில் அமரும் மானவர்களுக்கு வீட்டில் படித்தவர்கள் யாராவது இருந்தார்கள். வீட்டில் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட ஆட்கள் இருந்தார்கள். ஆங்கிலம் அவர்களுக்கு சுலபமாக பேச வந்தது. வகுப்பில் பாட சம்பந்தமான கேள்விகளை தன்னம்பிக்கையோடு கேட்டார்கள். ஆசிரியர்களும் அவர்கள் மட்டும் கேள்விகள் கேட்பதை வைத்துக் கொண்டு அவர்களே புத்திசாலிகள் என்று தீர்மானித்தார்கள். அவர்களுக்கே நல்ல ஊக்கமும் தந்தார்கள். கடைசி பென்சு டிக்கெட்டுகளான நாங்களோ பாடம் நடந்து கொண்டிருக்கும் போது அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ என்று ‘ஙே’ன்னு பாத்துட்டு இருப்போம்.

மெட்ரிகுலேசனில் படிக்கும் மானவன் பள்ளிக்கூடத்திலேயே தமிழில் பேசுவதா என்று கவுரவம் பார்க்கும் பள்ளி எங்களுடையது. அதனால் வகுப்பு லீடருக்கு யார் யார் தமிழில் பேசுகிறார்கள் என்று கண்காணித்து போட்டுக் குடுக்கும் வேலையும் கொடுத்து விட்டார்கள். தமிழில் பேசுவதற்கு தண்டனையாக சட்டையில் இருக்கும் வெள்ளை பட்டனை எடுத்து விட்டு கருப்பு பட்டன் வைத்து தைத்து விடுவார்கள். எங்கள் வகுப்பில் பெரும்பாலும் எல்லோருக்கும் சட்டையில் கருப்பு பட்டன் தான் இருந்தது.

நான் படித்திருந்த மெட்ரிகுலேசன் ஆங்கிலத்தின் பருப்பு தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே வேகவே இல்லை. பிற்காலத்தில் புதிதாகத்தான்
ஆங்கில உரையாடலைக் கற்றுக் கொண்டேன். ஒரு விசயம் அப்போது தான் உறைத்தது. எந்த மொழியையும் கற்க வேண்டுமானால் முதலில் அதைப் பேச வேண்டும்; பிறகு தான் எழுதப் படிக்க பழக வேண்டும். நாம் மற்ற மொழிகள் விசயத்தில் தலைகீழாக அணுகுகிறோம். அது தான் நமது ஆங்கில தடுமாற்றத்துக்கு அடிப்படையான காரணம். நாம் தமிழில் சிந்திக்கிறோம் – எனவே பாடங்களை தமிழில் படிப்பது சிறந்தது. ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாக சரியான அம்சத்தில் கற்க வேண்டும். எனக்குத் தெரிந்து நன்றாக ஆங்கிலம் பேச முடிந்தவர்களே கூட அதை சரியான அம்சத்தில் பேசுவதில்லை – நாம் பேசு ஆங்கிலம் பெரும்பாலும் Formalஆக இருக்கிறது.

அதாவது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அதே நடையில் தெருவில் காய்கறிக்காரரிடம் பேசினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நாம் பேசும் ஆங்கிலமும் இருக்கிறது. பேச்சு மொழியாக பேசாமல் எழுத்தில் இருப்பதைப் போன்ற ஒரு ஆவண மொழியாக பேசுகிறோம். இது மெட்ரிகுலேசனில் படித்த மானவனுக்கும் பொருந்தும். என்னைப் பொருத்தவரை மெட்ரிகுலேசன் கல்வி என்பது ஒரு கிரிமினல் வேஸ்ட். நாம் பாடங்களை தமிழில் படித்து விட்டு ஆங்கில உரையாடலை பாடதிட்டத்தில் சேர்த்து விட்டால் கூட போதும். ஆறாம் வகுப்புக்கு மேல் அங்கிலத்தை எழுத படிக்க சொல்லிக் கொடுத்தாலே போதுமானது.

பாடங்கள் புரியவில்லை என்பதை வைத்துக் கொண்டு எங்களை தத்தி என்றோ மக்கு என்றோ அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். எங்களில் திறமைசாலிகள் இருந்தனர். ஒவ்வொரு வருடமும் நடக்கும் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் நாங்கள் கோப்பைகளை அள்ளிக் குவிப்போம். வருடா வருடம் நடக்கும் பள்ளி ஆண்டுவிழா விஞ்ஞானக் கண்காட்சியில் கடைசி பெஞ்சு மானவர்களின் ஸ்டால்கள் தான் அசத்தும். இதுக்காகவே ஒன்பதாவது படிக்கும் போது எங்க வீட்டு டேப் ரெக்காடரை பிரித்து அதிலிருக்கும் மோட்டாரை தனியே எடுத்து. அதில் ஒரு காத்தாடியை இணைத்து – அதை பேட்டரியால் இயங்க வைத்து – ஒரு மோட்டார் படகு வடிவமைத்தோம்.  பரிசும் கிடைத்தது – வீட்டில் பெல்ட் அடியும் கிடைத்தது. அறிவிப்பு செய்யும் மைக்செட்டில் என்ன பிரச்சினை என்றாலும் மாப்பிள்ளை பெஞ்சு மானவர்கள் தான் சரிசெய்வார்கள். காலர் பட்டன் போட்ட ‘பழங்களுக்கு’ கரண்டு என்றால் பயம். எங்களுக்கு பரிட்சை என்றால் பயம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சமயம். எங்கள் நன்பர்களுக்கெல்லாம் மூலத்தில் ஜன்னி கண்டுவிட்டது. ஸ்டடி ஹாலிடேஸ் எனப்படும் அந்த கடைசி நாட்களில் புத்தகத்தை எடுத்தால் எல்லாம் புத்தம் புதிதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஓரளவு தெரிந்த பாடங்கள் கூட புதிதாக படிப்பது போல இருக்கிறது. பெயில் ஆகி விட்டால் வீட்டிலேயே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று அப்பா சொல்லியிருந்தார். அந்தப் பரீட்சை பயம் எனக்குள் ஏதோவொன்றை அசைத்திருக்கிறது. இன்றும் கூட அவ்வப்போது ஹால்டிக்கெட்டை மறந்து விட்டு பரீட்சைக்கு போய்விடுவதைப் போலவும், டைம்
டேபிளை சரியாக பார்க்காமல் வேதியல் பரீட்சைக்கு இயற்பியல் படித்து விட்டு போய்விடுவது போலவும் கனவுகள் வந்து கொண்டேயிருக்கிறது. பத்தாவது பொதுத் தேர்வுகள் எழுதி சரியாக பதினாலு வருடங்கள் போய் விட்டாலும் கூட இப்போதும் அந்தக் கனவு வரும் போது தூக்கம் களைந்து திடுக் என்று எழுந்து உட்கார்ந்து விடுவேன். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டும்; விரல்களெல்லாம் நடுங்கும்.

தேர்வு மைய்யம் இன்னொரு பள்ளி. அந்தப் பள்ளி வளாகத்துக்குள் பரீட்சை எழுத நுழையும் போதெல்லாம் இடுப்புக்குக் கீழே உணர்வற்றுப் போய் விடும். பயத்தில் கால்கள் இருப்பதையே உணர முடியாது. அப்படியே மிதந்து கொண்டே செல்வது போல் இருக்கும். தேர்வுகளுக்கு முன் ஆபத்பாண்டவனாக வந்தார் எங்கள் ஆசிரியர் சுப்பிரமனியன். அவர் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கை வைத்து தான் நாங்கள் தேர்வில் வெற்றி பெற்றோம். அதாவது தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களிடம் அவற்றை கத்தை கத்தையாக கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஒவ்வொரு விடையாக முழுவதும் படித்துப் பார்க்கும் நேரம் இருக்காது என்றும் சொன்னவர், ஒரு விடையின் முதல் வரியும் கடைசி வரியும் சரியாக இருக்க வேண்டும் என்றும், நன்றாக மார்ஜின் விட்டு எழுத வேண்டும் என்றும், படங்களைத் தெளிவாக போட வேண்டும் என்பதிலும்
கவனம் செலுத்தச் சொன்னார். மேலும், விடைத்தாளில் சரியான வாக்கியங்களின் கீழும் துனைத் தலைப்புகளின் கீழும் பென்சிலால் அடிக் கோடிட்டு காட்ட வேண்டும் என்றும் சொன்னர். இப்படியாக விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் நாங்கள் செய்த டெக்கரேசன் வேலைகளில் ஏமாந்து போய் தான் எங்களை பாசாக்கி இருக்க வேண்டும்.

சீக்கிரம் வேலைக்குச் சென்று சம்பாதித்தாக வேண்டிய குடும்பச் சூழல் என்னை பண்ணிரண்டாம் வகுப்பு வரை படிக்க அனுமதிக்கவில்லை. அப்பா தனது நன்பரிடம் மேற்கொண்டு என்னை எங்கே சேர்க்கலாம் என்று அலோசனை கேட்டிருக்கிறார். ஒரு போர் மேன் ரேஞ்சுக்கு கலெக்டரிடமா கேட்டிருப்பார் – அவர் தனது சூப்பர்வைசர் நன்பரிடம் தான் கேட்டிருந்தார். அவரும் பாலிடெக்னிக் சேர்த்து விடுங்கள் என்று ஆலோசனை சொல்லவே வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் தேற்றியாகி விட்டது. இனி இந்த பட்ஜெட்டுக்குள் ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவை பிடிக்க வேண்டும்.

எனக்கு மெக்கானிக்கல் படிக்க வேண்டும் என்று ஆசை. பள்ளி நாட்களில் பெரிய பரீட்சை லீவு விட்டவுடன் அப்பா என்னை அவரது நன்பரின் பைக் மெக்கானிக் செட்டுக்கு அனுப்பி வைப்பார். சும்மா சுத்தினா கெட்டுப் போயிடுவேனோன்னு பயம். ஓரளவு பணக்கார பசங்கள் எல்லாம் செஸ் கிளாஸ், நீச்சல் கிளாஸ் என்று போவார்கள் – அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கிளாசும் அபாகஸ¤ம் இத்தனை பிரபலமாகவில்லை. எனக்கு மெக்கானிக் வேலை பிடித்து இருந்தது. இன்ஞ்சின் இறக்கி ஏத்துவதைத் தவிர மற்ற எல்லா வேலையும் நானே செய்வேன். என்றாவது ஒருநாள் ஒரு பெரிய மெக்கானிக் ஆக வேண்டும் என்பது என் பள்ளி நாட்களின் கனவு. பழுதடைந்த ஒரு இயந்திரத்தை சீர்படுத்தி மீண்டும் இயங்க வைத்திருக்கிறீர்களா
நீங்கள்? அந்த சத்தமிருக்கிறதே… ஹ… அது தான் அதி உன்னதமான சங்கீதம். அந்தக் கணம் தான் சொர்க்கம். நான் இயந்திரவியல் படிக்க
வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் டிப்ளமா மெக்கானிக்கல் எங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை.

அப்பா எனது படிப்பு எதுவென்று முடிவு செய்து விட்டு பணத்தை தயார் செய்யவில்லை – பணத்தை தயார் செய்து விட்டு அதற்குள் அடங்கும்
படிப்பை முடிவு செய்தார். மின்னணுவியல் தான் கிடைத்தது – சரியாகச் சொன்னால் ஒத்துவந்தது. அப்போது மின்னணுவியல் படிப்புக்கு அத்தனை செல்வாக்கு இல்லை. மேலும் நான் சேர்ந்த கல்லூரியில் மின்னணுவியல் அரசு உதவி பெற்று வந்த துறை என்பதால் அதற்கான கட்டணம் குறைவு – வருடத்திற்கே ஆயிரத்து நூத்தி என்பது ரூபா தான் கட்டணம். டொனேசனாக இருபத்திரண்டாயிரம் கொடுத்து விட்டு மீதம் இருந்த மூவாயிரத்தில்
இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்க்கு கேஸ் அடுப்பு வாங்கினார் – அதுவரையில் மன்னெண்ணை பம்பு ஸ்டவ் தான். மிஞ்சிய எண்ணூறு ரூபாவுக்கு மூன்று கலர் சட்டையும் இரண்டு பேண்ட்டும் எடுத்துக் கொடுத்தார் – இனிமேல் சீருடை கிடையாதல்லவா.

கல்லூரி வந்து முதல் செமஸ்டர் வரும் வரைக்கும் தமிழ் மீடியத்தில் இருந்து வந்த மானவர்கள் எல்லாம் ஆங்கில மீடியத்தில் இருந்து வந்த
மானவர்களை அச்சத்தோடு தான் பார்த்தார்கள். பாடமெல்லாம் ஆங்கிலம் – நாங்கள் வேறு ஆங்கில மீடியம் – எனவே நாங்கள் நன்றாகப் படித்து விடுவோம் என்று அவர்களாகவே தீர்மானித்து விட்டார்கள். செமஸ்டர் முடிவுகள் வந்ததும் தான் அவர்களுக்கும் நிம்மதியானது எங்களுக்கும் நிம்மதியானது.

நான் படித்த பாலிடெக்னிக் மானவர்களும் எனது பள்ளித் தோழர்களைப் போன்ற வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள் தான். எனது வகுப்பில் ஒரே ஒரு மானவனைத் தவிற யாரும் பைக்கில் வந்ததில்லை. எல்லோரும் பஸ் பாஸ் தான். நான் வீட்டை அடமானம் வைத்து பணம் கட்டியிருந்தேன் என்றால் அவர்கள் காட்டையோ நகையையோ அடமானம் வைத்து வந்தவர்கள். யாரும் விரும்பிய படிப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கி நின்று விடவில்லை. இது தான் தலையெழுத்து என்று ஏற்றுக் கொண்டனர். ஆனால் துரதிருஸ்டவசமாக பள்ளியில் கிடைத்த அளவுக்கு நல்ல ஆசிரியர்கள் இங்கே கிடைக்கவில்லை.

ஒரு தியரி பேப்பருக்கு மொத்தம் ஐந்து யூனிட்டுகள். ஒவ்வொரு யூனிட்டிலிருந்தும் இருபது மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரும். ஆசிரியர்கள் பொதுவாக மூன்று யூனிட்டுகள் தான் நடத்துவார்கள். கடைசி இரண்டு யூனிட்டுக்கு பதில் கடந்த ஐந்து ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களின் நகலைக் கொடுத்து விடுவார்கள் – அதற்கு கறாராக காசு வாங்கிவிடுவார்கள். நாமே தான் படித்துக் கொள்ள வேண்டும். கட்டிய காசு வீணாகப் போய் விடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. நூலகத்திற்குச் சென்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து படித்தார்கள் – படித்தேன்.

மூன்று வருடம் ஏதேதோ தகிடுதத்தம் செய்து படித்து முடித்து விட்டு வேலைக்கு வந்த பின் தான் தெரிந்தது அந்த மூன்று வருடம் முக்கி முக்கி படித்தது எனது வேலைக்கு எந்தவிதத்திலும் பயன்படப் போவதில்லை என்று. அந்த மூன்று வருடம் மட்டுமல்ல – அதற்கு முன் பத்து வருடங்கள் படித்த படிப்பினாலும் வாழ்க்கைக்குப் பெரிதாக பயனில்லை என்பதும் மிகத் தாமதமாக விளங்கியது.

சர்வீஸ் என்ஜினியர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் பயிற்சியின் போது –

“இது தான் மானிட்டர், இது கீ-போர்டு, இது மவுஸ், இது சி.பி.யு. என்ன தெரியுதா.. எதுனா கேள்வி இருந்தா கேளுங்க. கூச்சப்படாதீங்க”
டிரெய்னிங் ஆபீஸர் வேலாயுதம் சொல்லி முடித்ததும் நான் கேட்டேன்,

“புரியுது சார்.. இதுல எது சார் கம்ப்யூட்டரு?”

மூன்று வருட படிப்பு அந்தளவுக்குத் தான் எங்களை தயாரித்து அனுப்பியிருந்தது. அப்போது இருந்த பாலிடெக்னிக் பாடதிட்டத்தின் படி மின்னணுவியல் துறையில் ஒரே ஒரு பாடம் தான் கம்ப்யூட்டர் இருந்தது. அதுவும் மகா மொக்கை. பிராக்டிகலுக்கு இரண்டு மூன்று பாடாவதி கம்ப்யூட்டர்களை வைத்திருந்தார்கள். அதையும் பக்கத்தில் போய் தொட அணுமதிக்க மாட்டார்கள். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்கு வெளியில் இருந்து கைநீட்டிக் காட்டுவார்களா – பிராக்டிகல் நேரம் சுபமே முடிந்தது! மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் நான் மிகுந்த
சிரமப்பட்டு படித்த AND gate, OR gate எல்லாம் மிக மிக மிக ஆரம்ப பாடம் என்று வேலைக்கு வந்ததும் தான் புரிந்தது. எங்கள் பாடதிட்டத்தில் இருந்த மைக்ரோ பிராசசர் காலாவதியாகி இரண்டு தசாப்தங்களாவது ஆகியிருந்தது.

பாலிடெக்னிக் லேபில் முதல் நாளே நான் லேப் அசிஸ்டெண்ட் ரகுநாத் சாரிடம் செம்ம மாத்து வாங்கினேன். ரெஸிஸ்டரின் இரண்டு முனைகளையும் U வடிவத்தில் வளைத்து லேப் டெஸ்கில் இருந்த ப்ளக் பாயிண்டில் நுயூட்ரலுக்கும் ·பேசுக்கும் இடையில் சொருகினால் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். படபடவென்று எல்லா ப்யூஸ¤ம் பிடுங்கிக் கொண்டது. அது ஏன் அப்படியானது என்று விளக்குவதற்கு பதில் எல்லார் முன்பும் போட்டு சாத்து சாத்தென்று சாத்திவிட்டார். லேபில் இருக்கும் உபகரணங்கள் எல்லாமே பாடாவதி – இதில் இதைத் தொடாதே அதைத் தொடாதே என்று ஆயிரம் கட்டுப்பாடுகள் வேறு.

படிப்பது என்பது வேறு என்றும் வேலை அனுபவம் வேறு என்றும் பிறகு புரிந்தது. இன்னொரு விசயம் என்னவென்றால் நமது கல்வி முறை என்பது நம்மை புதிதாக எதையும் முயற்சிக்கும் படி தூண்டுவதில்லை – ஏற்கனவே இருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அதுவும் ஒரு முப்பது வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைப் பற்றி தான் பேசுகிறது. அதுவும் எப்படி பேசுகிறது – பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து விட்டு ஊருக்குப் போய் சொல்லுவதைப் போல எட்டி நின்று பேசுகிறது. நம்மையும் பயமுறுத்தி தூர நிற்க வைத்து விடுகிறது. உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை.

நாம் எதையும் புதிதாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்களாக கல்லூரியில் இருந்து வெளிவருவதில்லை. கல்லூரியை விட்டு வெளியேறியதும் நமக்கு முதலில் கிடைப்பது திகைப்பும் அச்சமும் தான். நாம் படித்ததில் பெரும்பாலானவை நடப்பிலேயே இருக்காது. சைக்கிள் மெக்கானிசம் படித்து விட்டு வந்தவன் சைக்கிளே வழக்கொழிந்து போய் விட்டதை பார்க்கிறான். அவனிடம் நீங்கள் EFI டெக்னாலஜியோடு வரும் பைக்கைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னால் அவனால் என்ன செய்ய முடியும்?

நடப்பில் இருப்பதை புதிதாக படித்து புரிந்து கொண்டு பிரமிப்பதற்குள்ளாகவே நடுத்தர வயதை எட்டிவிடுகிறோம். அதற்கு மேல் ரிஸ்க் எடுத்து புதிய விசயங்களில் ஆர்வத்தை திருப்ப நமது குடும்ப அமைப்பு முறை அனுமதிப்பதில்லை. அதற்குள் சுயதிருப்தி எனும் ஆழமான ஒரு மோனநிலையில் அமிழ்ந்து போகிறோம். தொழில்நுட்பத் துறையில் நாம் பெரிதாக புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் எதையும் நிகழ்த்தவில்லை என்பதற்கு அடிப்படையில் உற்பத்தி முறையின் கெட்டிப்பட்டுப்போன தன்மை ஒரு காரணம் – அதே கெட்டிப்பட்டுப் போன தன்மை தான் இப்படி ஒரு கல்வி முறையை நடப்பில் வைத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக இறுகிப் போன ஒரு உற்பத்தி முறை. மத்தியானம் தயிர் சோறு சாப்பிட்டது மாதிரியான ஒரு சொத்துடைமை வடிவம். நல்ல விவசாயம் – வயித்துக்கு சோறு – வருசத்துக்கு ஒரு பிள்ளையை பெத்துப் போட்டு விட வேண்டியது. ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று பிச்சைக்காரனைப் பார்க்கிலும் நாம் பரவாயில்லை என்று நிம்மதியை நாடிக் கொண்டிருந்த சைக்கிள் கேப்பில் உலகம் எங்கேயோ போய்விட்டது. இப்போது மேற்கில் உருவாக்குகிறார்கள் நாம் அதை வெறுமனே மெயிண்டெய்ன் செய்து கொண்டிருக்கிறோம். அதிகபட்சம் ஓரிரண்டு செழுமைப்படுத்தல்கள் நம்மவர்களால் செய்யப்பட்டிருக்கலாமே ஒழிய நடப்பில் இருப்பதை மொத்தமாக புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு எதையும் நாம் செய்துவிடவில்லை.

உறைந்து போன நிலையில் இருக்கும் சமுதாய ஒழுங்கு அந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்ள ஏதுவான ஒரு கல்வி முறையை வைத்துள்ளது. ஓரிரண்டு கல்விச் சீர்திருத்தங்களால் ஒட்டுமொத்தமாக ஒரு பலன் கிடைக்க வாய்ப்பில்லை. நடப்பில் இருக்கும் சமுதாய ஒழுங்கைக் கலைத்துப் போட்டு புதிதானவொரு சமுதாய ஒழுங்கை உருவாக்குவதில் தான் புதிய சிந்தனைகளின் உருவாக்கமும் புதிய நுட்பங்களின் உருவாக்கமும் அடங்கியிருக்கிறது என்பதை பின்னர் நான் கற்றுக் கொண்ட மார்சியம் எனக்குப் புரியவைத்தது.

– Kaargi

மே 6, 2010 Posted by | culture, Education, Uncategorized | , | 20 பின்னூட்டங்கள்

அங்காடித் தெரு – விமர்சனங்கள் மேலான விமர்சனம்..!

முதலிலேயே சொல்லி விடுகிறேன் – இது வித்தியாசமான திரைப்படம்; வித்தியாசமான கதைக் களம்; சாமர்த்தியமான
ஷார்ப்பான வசனங்கள்; தென் தமிழகத்து நாடார் இளைஞர்கள் மேல் அதே சாதி முதலாளிகள் அவிழ்த்து விடும் சுரண்டலை முதன் முறையாக பேசிய படம்; பல பின்னவீனத்துவ குறியீடுகளை கொண்ட படம் (அதெல்லாம் என்னான்னு கேட்காதீங்க – எனக்குத் தெரியாது); நாயகியின் உடல் மொழி ஒரு எட்டாவது உலக அதிசயம்; ஜெயமோகனுக்கு ஜெய் – ம்ம்ம்ம்….இந்தக் கடிவாளமிடப்பட்ட முற்போக்குக் கழுதைகள் சுற்றித் திரியும் ஊரில் அக்கப்போரில் இருந்து தப்பிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது..

படத்தில் சொன்ன விஷயங்களைக் கொண்டு நல்ல பல விமர்சனக் கட்டுரைகள் வலைத்தளங்களில் வெளியானது.. ஆனால் இதில் சொல்லாத சில விஷயங்களும் இருக்கிறது; அல்லது சொன்ன விஷயங்களின் இடைவெளிக்குள் வேறு சில உண்மைகளும்
பொதிந்திருக்கிறது. அதில் ஒன்று சரவணா ஸ்டோ ர்ஸுக்கு எந்த விதத்திலும் குறையாமல் ஊழியர்களை ஒடுக்கிச் சுரண்டும் இன்னொரு கடையினருக்கு டைட்டிலில் நன்றி தெரிவித்திருப்பது. பொதுவில் நாடார் சாதி முதலாளிகள் மிக அடிப்படையிலேயே சுரண்டலும், போலிப் பெருமிதமும் கொண்டவர்களாக இருக்கையில் ஒரு குறிப்பிட்ட கடையை குறி வைத்தது போல திரைக்கதையை அமைத்திருப்பது இன்னொன்று. அடுத்து முக்கியமாக நான் கருதுவது ஒடுக்குமுறையின் மேலான கோபத்துக்கு கச்சிதமாக மடை போட்டு ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் செலுத்தியிருப்பது.

இங்கே பதிவுலகில் அங்காடித் தெரு நாயகன் நாயகிக்கு நடந்த கொடுமைகளைப் பார்த்து குமுறியவர்களின் குமுறல் உணர்ச்சி எத்தகையது? இந்த உணர்ச்சி ஓரிரு பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் வடிந்து போய் விடுமா இல்லை அதைத் தாண்டிச் சென்று வினையாற்றுமா? “அடப்பாவமே இவாளெல்லாம் இந்த ம்ருஹங்களை அடச்சி வச்சி கஷ்ட்டப்படுத்தறாளே” என்று மிருகக் காட்சி சாலையின் கூண்டுகளுக்கு முன் நின்று உச்சுக் கொட்டும் பரிதாப உணர்ச்சிக் குரல்களைக் கேட்டிருக்கிறீர்களா? அரசியல் ஏதுமற்ற வெறும் பரிதாபம் தான் அது. டிக்கெட்டுக்கான நேரக் கெடு முடிந்து மிருகக்காட்சி சாலையின் கேட்டைக் கடந்த உடன் வடிந்து போகும் பரிதாப உணர்ச்சி அது. இங்கே திரையரங்கை விட்டு வெளியேறி ஒரு பதிவும் சில பின்னூட்டங்களும் வரையில் தாக்குப் பிடித்து நிற்பது கொஞ்சம் பாராட்டக் கூடியது தான்.

அடப்பாவிகளா சொந்த சாதிக்காரனைக் கூட இந்த அண்ணாச்சிகள் இப்படிக் கொடுமைப்படுத்துகிறார்களே.. என்று பரிதாபம் காட்டுபவர்கள் விஷயத்தின் முழு உண்மையை அறிந்தவர்களல்ல. தமிழ்நாட்டில் சொந்த சாதியினரைத் தான் சுலபத்தில் சுரண்ட முடியும். பிரிக்காலில் ஏழை நாயுடுகள், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏழை நாடார்கள், சக்தி குழுமங்களில் ஏழை கவுண்டர்கள்.. இப்படி இங்கே தொழில் நிறுவனங்கள் எல்லாம் சாதிச் சங்கங்களின் கிளைகள் போலத் தானே விளங்குகிறது. திருமாவுக்கு தலித்துகள் எப்படியோ ராமதாஸுக்கு வன்னியர்கள் எப்படியோ அப்படித்தான் அண்ணாச்சிகளுக்கு அவர்களது ஊழியர்கள். அண்ணாச்சிகள் கடும் உழைப்பாளிகள் என்பது உண்மை – அதிகாலையில் எழுந்து மார்கெட்டுக்குப் போய் காய்கறிகள் வாங்கி வருவதில் தொடங்கி இரவு பதினோரு மணிக்கு கடையெடுத்து வைக்கும் வரை அவர்களின் உழைப்பு அசாதாரணமானது – இது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை, அதே சாதியைச் சேர்ந்த எல்லா பணக்கார முதலாளிகளும் அதே அளவு உழைப்பாளிகள் இல்லையென்பதும், அவர்களின் வெற்றிக்கு உழைப்பு மட்டுமே காரணமில்லை என்பதும்.

தமிழகம் முதலாளித்துவம் ஓரளவு வளர்ந்த மாநிலம் என்பது நமக்குத் தெரியும். ஆனால் மத்திய காலத்திய ஐரோப்பாவைப் போல் அல்லாமல் அந்த மூலதனம் என்பது தனது வளர்ச்சிக்கு நடப்பிலிருக்கும் அத்தனை பிற்போக்கு அம்சங்களையும் (பார்ப்பனியத்தை) தனக்குள் சுவீகரித்துக் கொண்டே வளர்ந்துள்ளது. இங்கே உள்ளூர் மூலதனமும் தொழிற்சாலைகளும் சாதிச் சங்கங்களைப் போலவே அணி சேர்ந்து நிற்கிறது.

யார் இந்த சாதிக்காரர்கள்? ஒரு சாதியினர் தொழில்களில் அதிகளவு ஈடுபடுவதால் மட்டுமே அந்த மொத்த சாதியினரும் தொழில்மயமாகி விட்டதாக சொல்லி விடமுடியுமா? ஒரு சாதியின் எல்லா அங்கத்தினரும் சமமான சமூக அந்தஸ்த்து கொண்டவர்களா?

இல்லை என்பது தான் பதில். உதாரணமாக, நாடார்கள் என்று குறிப்பிடுவது முதலில் ஒரே சாதி அல்ல. அது ஒரு அம்ப்ரெல்லா பெயர் (Umbrella name) சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நாடார்கள் என்று ஒரு சாதி கிடையாது (அது ஒரு பட்டம் (அ) சிறப்புப் பெயர்). சாணார், கிராமனி, பணிக்கர், ஈழுவ, என்று பல பெயர்களில் அழைக்கப்பட்டவர்களை இணைத்து தான் இன்றைய நாடார் சாதியே உருவாக்கப்பட்டது. அதில் ‘நாடான்’ என்பது அப்பகுதியில் நிலங்களை வைத்திருந்த சிலருக்கு இருந்த சிறப்புப் பெயர். ஒரு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தழுவிய சாதி என்பது வெகு சிலது தான். பார்ப்பனர்கள் பரவலாக தமிழகம் தழுவி இருந்தனர். நாயக்கர்கள், செட்டியார்களும் தமிழகம் தழுவி இருந்தனர். இவர்களுக்கு அதற்கான வரலாற்றுப் பின்புலம் இருந்தது.

இதையெல்லாம் அவ்வளவு எளிதில் இன்றைய நாடார்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். செப்புப்பட்டையம் தாமிரப் பட்டயம் என்று தங்களை சந்திர குல ஷத்ரியர்களாக காட்டிக் கொள்ளும் முனைப்பு இன்றைய நாடார்களுக்கு நிறையவே இருக்கிறது – ஆனால் இன்றும் அரசு ஆவணக் காப்பகத்தில் இருக்கும் அன்றைய ஆவனங்களும் கால்டுவெல் போன்றோர் எழுதிய குறிப்புகளும் அவர்களுடைய பாண்டிய குல பெருமைக்கு தடையாகவே இருக்கிறது.

இன்றைக்கு இடைநிலைக் கட்டத்திலிருக்கும் சாதிகள் ஒவ்வொரு வட்டாரத்துக்குட்பட்டவை தான். உதாரணமாக இன்றைக்கு குரும்பர் என்று அழைக்கப்படும் சாதியிலேயே குரும்பர், குரும்பா, குருபா, உள்ளு குருபா, ஹாலு குருபா என்று பல ‘பிரிவுகள்’ இருக்கின்றது. இந்தப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான கலாச்சார பின்னணி, பொருளாதார பின்னணி இருக்கிறது. ஆனால் நாடார்கள் என்று ஒரே பெயரால் அழைக்கப்படுபவர்கள் மத்தியில் இன்றைக்கு இந்த உட்பிரிவுகள் மிகவும் மெல்லியதாய் இருக்கிறது – அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது. தென்மாவட்டங்களில் இருந்த சாணார், கிராமணி போன்றவர்களையும் சேர்த்து இணைத்து ‘மாஸ்’ காட்டுவதில் ஏற்கனவே ஆதிக்க நிலையில் இருந்த நாடார்களின் நலனும் இருந்தது.

இன்றைக்கு பெரும் தொழிலதிபர்களாக இருக்கும் நாடார்கள் எல்லோரும் பனையேறிகள் அல்ல. பழைய பனையேறிகள் எல்லோரும் சின்ன மளிகைக்கடை நடத்துவோராகவோ அல்லது பெரும் முதலாளிகளிடம் கூலிக்கு வேலை பார்ப்பவராகவோ தான் இருக்கிறார்கள். டோண்டு சொல்வது போல எல்லா நாடார்களும் அரசை எதிர்பார்க்காமல் சுயமாக தொழில் செய்து தானே சுயம்புவாக முன்னேறி விடவில்லை. ஏற்கனவே ஊரில் நிலம் நீச்சு என்று இருந்தவர்கள் தான் பெரும்பாலும் தொழில்களைக் கைப்பற்றியுள்ளனர். ஊரில் பராரியாக இருந்த பனையேறி இங்கும் பராரியாகத் தான் இருக்கிறார். பணம் படைத்த நாடார்களுக்கு பனையேறிகளின் எண்ணிக்கை பலம் தேவை அவ்வளவு தான்; மற்றபடி அவர்கள் வேறு யாரும் தம்மை பனையேறி என்று அழைப்பதையே கூட கேவலமாக கருதிக் கொள்வார்கள்.

மேலும் இந்த நவீன கொத்தடிமைத்தனம் ரங்கநாதன் தெருவோடு முடிந்து விடுவதோ – நாடார்களின் தனிச் சிறப்போ அல்ல. இதை விட கேடு கெட்ட கொத்தடிமைத்தனத்தைக் கண்டிருக்கிறேன். ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் எம்ஜாலில் இருக்கும் வீரமணி பிஸ்கட் இண்டஸ்ட்ரீஸில் அங்காடித்தெருவில் காட்டியதை விட ஆயிரம் மடங்கு அதிக கொத்தடிமைத்தனத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறார் அதன் முதலாளி வீரமணி நாடார் – இது நான் நேரில் கண்டது. வீரமணி நாடாரை மிஞ்சும் கொத்தடிமைத் தனத்தை கடப்பா மாவட்டம் கிரானைட் குவாரிகளில் ரெட்டிகளும், கம்மவார் நாயுடுகளும் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். பிரிக்காலின் நாயுடு முதலாளியின் கொடுமையும், சக்தி குரூப் கவுண்டர் முதலாளியின் கொடுமைகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. இவர்களுக்கெல்லாம் அப்பன்மார்கள் தான் வால்மார்ட், ஜீ.ஈ, கோக், பெப்சி முதலான பன்னாட்டு முதலாளிகள். சீனத்தில் பல தொழிலாளர்களை அடைத்து வைத்து அவர்களுக்கு சரியான ஊதியம் கூட தராமல் கசக்கிப் பிழிந்து தயாரிக்கப்படும் பொம்மைகளோடு தான் உங்கள் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

“என்னா இருந்தாலும் இந்த சைனீஸ் கூட்ஸ் எல்லாம் ரொம்ப சீப்பு சார்” என்று சப்புக் கொட்டிக் கொண்டே “அங்காடித் தெரு பார்த்தீங்களா… ராஸ்கல்ஸ் என்னா கொடுமை சார்..?” என்று அங்கலாய்த்துக் கொள்ளும் குரல்களை சமீபமாக நிறைய கேட்கிறேன்.

மூலதனத்துக்கு சாதி, மொழி, இனம், எல்லைகள் என்று எதுவுமே கிடையாது. அங்காடித் தெரு அஞ்சலியின் சோகத்திற்கு எந்த அளவிலும் குறையாத சோகம் அந்த சீனத்துத் தொழிலாளியின் சோகம். உணர்ச்சிக்கு அறிவு கிடையாது. இன்னார் மேல் கோபம் – அதைவிட அதிக அநியாயம் செய்த இன்னொருவர் மேல் கோபமில்லை என்று பகுத்துப் பார்க்கும் அறிவு உணர்ச்சிக்கு இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அது போலி உணர்ச்சி. அங்காடித் தெரு அஞ்சலிக்கு ஏற்பட்ட சோகத்துக்காக அண்ணாச்சிகளின் மேல் ஆத்திரப்படும் மக்கள் அதை விட அதிக சோகத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகளின் மேலும் ஆத்திரப்பட வேண்டும். அப்போது தான் அது நேர்மையான உணர்ச்சியாக இருக்கும்.

திரையரங்கை விட்டு வெளியேறியதும் எழும் கண நேர உணர்ச்சியின் உந்துதலுக்கு ஆயுசு எத்தனை நேரம்? இதே பதிவுலகில் எத்தனையோ
பதிவுகளில் “சுதந்திரச் சந்தையில் விளையும் போட்டியால் சேவைகளின் விலைகள் குறைந்து நுகர்வோருக்கு நலனே விளைகிறது” என்று அதியமான் பேசியபோதெல்லாம், அந்த குறைந்த விலை ‘ரங்கநாதன் தெரு சட்டையின்’ பின்னே வழியும் அஞ்சலியின் கண்ணீரை எத்தனை பேர் கண்டுணர்ந்தீர்கள்?

அங்காடித் தெரு திரைப்படத்தில் எனக்கு இருக்கும் விமர்சனம் ஒன்று தான். நடந்த சம்பவங்களை ஒரு சில தனிநபர்களோடு சுருக்கி
விட்டிருக்கிறார்கள்.. எங்கள் செல்போன் சேவையில் கட்டணம் குறைவு என்று கூவியழைக்கும் விளம்பரங்களுக்குப் பின்னும் ஒரு அண்ணாச்சி இருக்கிறார் – என்ன.. அவரு கொஞ்சம் பெரிய அண்ணாச்சி; பேரு கொஞ்சம் ஸ்டைலா அனில் அம்பானின்னு இருக்கும். குறைந்த விலையில் நிறைந்த நுகர்வு என்பதன் பின்னணியில் தொழிலாளர்களை சுரண்டுவது தான் ரங்கநாதன் தெரு அண்ணாச்சிகளின் அடித்தளம் என்றால் அதுவே தான் அம்பானிகளின் அடித்தளமும் கூட. என்ன.. அவர்கள் கொஞ்சம் ஹைடெக் என்பதோடு தமக்கு சாதகமாய் அரசு அரசாங்கம் சட்டம் போலீசு என்று சகலத்தையும் வளைக்கும் வல்லமை கொண்ட பெரிய அண்ணாச்சிகள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகனின் உணர்ச்சி கடிவாளம் போட்டது போல ஒரு குறிப்பிட்ட திசையிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தையும் அதன் முதலாளியையும் மாத்திரம் நோக்கிப் பயணப்படுகிறது – அது நேர்மையான உணர்ச்சியாக பொதுவான சுரண்டலை எதிர்த்துக் கிளர்ந்து எழ மறுக்கிறது.

வலைத்தளங்களில் வந்த விமர்சணங்கள் ரங்கநாதன் தெருவின் ஒரு சில அண்ணாச்சிகளின் மேல் ஒரு சில நாட்களுக்கு மட்டும் தாக்குப்பிடிக்கும் செல்லக் கோபமாக சுருங்கி விட்டது தான் வருத்தம். நேர்மையாகப் பார்த்தால் இது உலகளாவிய மூலதனத்தின் சுரண்டலுக்கு எதிரான கோபமாக வளர்ந்திருக்க வேண்டும். ஆனால், இது எட்டி நின்று வேடிக்கை பார்த்து உச்சுக் கொட்டி நகர்ந்து விடும் குட்டிமுதலாளித்துவ போலி உணர்ச்சி. இதற்கு வக்கணை பேச மட்டும் தான் தெரியும்; வினையாற்றத் துப்புமில்லை யோக்கியதையுமில்லை. மிருகக் காட்சி சாலையின் மிருகங்களின் மேல் வெளிப்படும் பரிதாபத்திற்கும் அஞ்சலியின் மேல் இவர்கள் காட்டும் கரிசனத்துக்கும் வேறுபாடு என்று பார்த்தால் ஒன்றுமில்லை
தான்.

ஏப்ரல் 5, 2010 Posted by | Alppaigal, culture, Films, Uncategorized | , | 20 பின்னூட்டங்கள்

மஞ்சள் நிற பூதம்…!

பாவம் புண்ணியம் சாபம் என்பதெல்லாம் ஒருவேளை உண்மையாக இருக்குமானால் உலகிலேயே மிக அதிக பாவத்தையும் சாபத்தையும் சுமந்து வரும் ஒரு வஸ்த்து தங்கமாய்த் தான் இருக்க முடியும். உங்கள் இதயத்துக்குக் காதுகள் இருக்குமானால் அழகான வளைவுகளோடும், நுண்ணிய வேலைபாடுகளோடும் பெண்களின் கழுத்தில் ஆடும் நகைகளின் உரசல் சப்த்தத்தில் நீங்கள் ஐரோப்பிய தங்க வேட்டையர்களின் துப்பாக்கிச் சப்தங்களையும், அந்த ஈயக் குண்டுகளால் லட்சக் கணக்கில் உயிர்களை விட்ட செவ்விந்தியர்களின் கதறல்களையுமே கேட்டிருப்பீர்கள். அந்தத் தங்க வேட்டையர்கள் முத்து காமிக்ஸில் கேப்டன் டைகரின் சகாவாக வரும் கிழட்டுத் தங்க வேட்டையன் ஜிம்மியைப் போன்ற கோமாளிகளல்ல.. இரத்த வெறியாலும் கொலை வெறியாலும் உந்தித் தள்ளப்பட்ட மத்திய காலத்திய ப.சிதம்பரங்கள்.

தங்கம் மரணத்தின் நிழல். புனிதமாகப் போற்றப்படும் திருமணச் சடங்களின் மங்களக் குறியீடான அதே தங்கம் தான் கோடிக்கணக்கான செவ்விந்தியர்கள் அம்மைக் கிருமி தோய்ந்த கம்பளிக்குள் வெளிப்படுத்திய மரணக் கேவல்களின் குறியீடும் கூட. வரலாறு என்பது சிதம்பரங்களின் விரும்பியபடியெல்லாம் எழுதப்படும் என்றால் இன்னும் ஒரு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் முத்து காமிக்ஸில் டெக்ஸ் வில்லருக்கும் கிட் கார்சனுக்கும் பதில் மன்மோகனும் சிதம்பரமும் நாயகர்களாக வரக் கூடும். டெக்ஸுக்கும் கார்சனுக்கும் செவ்விந்திர்களிடமிருந்து கைப்பற்ற
தங்கமும் நிலமும் இருந்தது என்றால் இவர்கள் கண் முன்னே எண்ணற்ற கனி வளங்களும் நிலமும் விரிகிறது. அன்று அமெரிக்க கண்டத்திலும் ஆப்ரிக்க கண்டத்திலும் இன்று கோலார் சுரங்கத்தின் இருட்டுப் பொந்துகளுக்குள்ளும் இந்த மஞ்சள் உலோகம் விளைவித்த மரணங்களின் எண்ணிக்கையை ஆயிரம் ஹிட்லர்கள் வந்தாலும் அடித்துக் கொள்ள முடியாது.

தங்கம் என்பது வக்கிரம். நாளுக்கு இருபது ரூபாய்கள் சம்பாதிக்கும் மக்களை 80 சதவீதம் கொண்ட அதே நாடு தான் உலகத்தில் உற்பத்தியாகும் தங்கத்தில் 25% சதவீதத்தை நுகர்கிறது. ஓரிரு பவுன் குறைந்து போனதால் சமையலறை விபத்துகளின் கருகிப் போன மலர்களைக் கொண்டிருக்கும் அதே நாட்டில் தான் வருடத்துக்கு 800 டன் தங்க நகைகள் நுகரப்படுகிறது. ஜெயா-சசியின் அந்தப் புகழ் பெற்ற நிழற்படத்தை
அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியுமா?

அதே தங்கம் மனித உழைப்பின் உச்சத்தைக் குறிக்கும் குறியீடாகவும் இருப்பது ஒரு நகை முரண் தான். மலைகளின் கணத்தை ஒத்த கடும் பாறைகளைப் பிறந்து, பூமிக்கு அடியில் – பிராணவாயு குறைந்த அந்த சுரங்கத்துக்குள் – பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி – உயிரைப் பனயம் வைத்து வெட்டியெடுத்து வரும் ஒரு டன் கச்சாப் பொருளில் இருந்து ஓரிரு கிராம் தங்கத்தைப் பிரித்தெடுப்பதிலாகட்டும்; அந்தத் தங்கத்தை எங்கோவொரு பட்டரையின் இருட்டு மூலையில் தலைக்கு மேல் தொங்கும் குண்டு பல்பின் வெளிச்சத்தில் நாளெல்லாம் சூழ்ந்து நிற்கும் அமிலத்தின் நெடியை சுவாசித்து ஆஸ்த்துமாவை சம்பளமாகவும், மூல நோயை போனஸாகவும் பெற்று ஓரு அழகான நகையாக வார்த்தெடுப்பதிலாகட்டும்; அது அந்த நகையில் காணும் நெளிவு சுழிவுகளின் அழகு மாத்திரமல்ல – அது உழைப்பின் அழகு. அங்கே ஜொலிப்பது வெறும் உலோகமல்ல –  உழைப்பு.

எழுதப்பட்டுள்ள வரலாற்றின் சுவடுகள் நெடுக இந்த மஞ்சள் உலோகம் பற்றிய குறிப்புகளும் அதற்காக சிந்தப் பட்ட சிவப்பு இரத்தமும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இந்தியவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தீர்க்கமான வரலாறு இப்போது கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே சிதறிய அளவில் கிடைக்கும் குறிப்புகளில் தங்கத்தின் பயன்பாடு  குறிக்கப்பட்டுள்ளது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பஞ்ச நதியைக் கடந்து வரும் ஆரியர்கள் இங்கே வாழ்ந்து வந்த ‘அசுரர்கள்’ தமது கழுத்துகளில் மஞ்சளான ஏதோவொரு உலோகத்தாலான அணிகலன்களை அணிந்துள்ளார்கள் என்றும் அவர்கள் நாகரீகமில்லாமல் வீடுகளுக்குள் வாழ்கிறார்கள் என்றும் அவர்களை அழிக்க படைகளோடு வந்து உதவுமாறும் தமது படைத்தலைவன் இந்திரனை வேண்டியழைப்பது சதபத பிரமானம் எனும் ஒரு பழமையான பிரமானத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. மிட்டானிய மன்னன் டுஷ்ரட்டா ‘எகிப்து தெருக்களில் இருக்கும் தூசை விட அங்கே தங்கம் அதிகமுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடோ டிகளான ஆரியர்கள் ஆரம்பத்தில் தங்கத்தைக் கண்டு அஞ்சினாலும் பிற்பாடு அதை சுவீகரித்துக் கொண்டனர். காட்டுமிராண்டிச் சடங்குகளாய் இருந்த பார்ப்பணிய சடங்குகள் நிலைபெற்று மதமாக மாறிய போது அவர்கள் உருவாக்கிய கடவுளர்களை நடமாடும் ஜூவெல்லரிக் கடைகளாய்ப் படைத்தனர். அந்தக் கடவுளர்கள் தங்கத்தேர்களில் ஊர்சுற்றியலைவதும், தங்கக் கிரீடம் வைத்துக் கொண்டிருப்பதும்,
கையிலிருந்து தங்க காசுகள் பீரிட்டுப் பாய்வதும் என்று தங்கம் தூய்மையின் குறியீடாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டது. தங்கம் வைத்திருப்பது ஐசுவரியத்தை கொடுக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளால் கலாச்சார அரங்கில் தங்கத்தின் முக்கியத்துவம் சிறிது சிறிதாக நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு பொருளின் மதிப்பு அதன் உருவாக்கத்தில் செலுத்தப்படும் உழைப்பு மற்றும் அது எத்தனை எளிதில் கிடைக்கிறது என்பதைக் கொண்டு தீர்மானமாகும். தங்கத்தின் உருவாக்கத்திற்கு அளவற்ற உழைப்பு தேவைப்பட்டதோடு அது அரிதாகக் கிடைக்கக் கூடியதாயும் இருந்தது. மேலும் அது சீக்கிரத்தில் பொலிவிழக்காத தன்மையும் கொண்டிருந்தது. இவையெல்லாவற்றோடும் சேர்ந்து அதற்கு உலகெங்கும் இருந்த மதம் மற்றும் காலாச்சாரங்களில் இருந்த செல்வாக்கால் அது ஒரு மதிப்பு மிக்க உயர்ந்த இடத்தை இயல்பாகவே பெற்றது. ஒரு கட்டத்தில் அது பொதுவான
பரிவர்த்தனை நானயமாகவும் இருந்தது. சமீபத்தில் எழுபதுகள் வரையில் உலத்தின் பொதுவான வர்த்தக நாணயமான அமெரிக்க டாலரின் மதிப்பும் கூட அவர்களிடம் இருந்து ரிசர்வ் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டது.

சாதாரண உழைக்கும் மக்களுக்கு தங்கம் என்பது நிலையான ஒரு சேமிப்பு. அதன் மங்காத தன்மை, நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் பண்பு, எப்போது வேண்டுமானாலும் அதை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் தன்மை ஆகியவற்றால் உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களும் தங்கத்தை சேமிப்புக்கான ஒரு பொருளாகவே தங்கத்தை மதித்தனர். மேட்டுக்குடியினர் தங்கம் வாங்கும் போது அதில் அதிகளவு வேலைப்பாடுகள் நுணுக்கங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நடுத்தர வர்க்கத்தினரோ குறைவான வேலைப்பாடுகளும் நுணுக்கங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பினர் – அது சேதாரம் குறைவு என்பதாலும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நகைப் பெட்டகமான அடகுக் கடையில் அதிகமாக மதிப்பிடப்படும் என்பதாலும் தான்.

இங்கே பொதுவில் தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்தது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார். ஒரு நகையின் டிசைன்/ மாடல்
போன்றவற்றைத் தீர்மாணிப்பதில் இருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார். இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

மேலும் இவ்வகையிலான உற்பத்தியில் பெரும்பாலும் ஒரு குறிப்பாக ஆசாரி சாதியினரே கோலோச்சினர். ஆசாரிகளிலும் நகை வேலை செய்வோர், மரவேலை செய்வோர், இரும்பு வேலை செய்வோர், சிற்ப வேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர் என்று வெவ்வேறு உட்பிரிவினர். இதில் பார்ப்பனியம் நகை வேலை செய்யும் ஆசாரிகளுக்கு மட்டும் பூனூல் மாட்டி அழகு பார்த்திருக்கிறது என்பது இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லா
விட்டாலும் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு.

இந்தப் பட்டரைகளில் வேலை கற்றுக் கொள்வதும் அத்தனை எளிதல்ல. பல ஆண்டுகள் எடுபிடியாக வேலை செய்தாக வேண்டும். சாதி பிரதானம் என்பதால் சொந்தக்காரர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து தொழில் கற்றுத் தருவார்கள். பொதுவாக பள்ளிப் படிப்பை முடித்தோ முடிக்காமலோ
தொழிலுக்கு வந்தால் தான் திருமணத்துக்கு முன் சொந்தமாக பட்டரை போடும் அளவுக்குக் கற்றுத் தேற முடியும். தொழில் நெருக்கமாக நடக்காத பகுதிகளில் (உதாரணமாக திருநெல்வேலி என்று வைத்துக் கொள்வோம்) ஒரே ஆசாரியே கம்மல், மூக்குத்தி, ஆரம், ஒட்டியானம், மோதிரம், தாலி என்று எல்லா ஆபரனங்களையும் செய்யும் திறன் பெற்றிருந்தால் தான் பட்டரை போட முடியும் – எனவே அந்தப் பகுதிகளில் பெரும்பாலும்
ஆசாரிகளின் குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாகவோ அல்லது தனிக்குடித்தனமாய் இருந்தாலும் தொழில் ஒன்றாகவோ தான் இருக்கும். ஏனெனில் இந்த எல்லா வேலைகளையும் கற்றுத் தேற நடுத்தர வயதாகி விடும் (ஆர்டரும் அடிக்கடி வராது).

நகைத் தொழில் நெருக்கமாக நடக்கும் கோவை போன்ற பகுதிகளில் கம்மல் ஆசாரி, தாலி ஆசாரி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவோ அல்லது ஓரிரண்டு வகைகளுக்கு ஒருவராகவோ இருப்பார்கள்.

இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்பு பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயம் எழவில்லை. இந்தியாவில் வரலாற்று ரீதியாக முதலாளித்துவ உற்பத்தி வளராமல் தேங்கியதற்கு என்ன காரணமோ அதே காரணமே தங்க நகைத் தொழிலின் உற்பத்தி முறை வளராமல் தேங்கியதற்கும் காரணியாக இருந்தது.

இதே நிலை ஏறக்குறைய தொன்னூறுகளின் துவக்கம் வரையில் அப்படியே தான் நீடித்தது – பொருளாதார தாராளமயமாக்கம் புகுத்தப்படும் வரை. உலகமயம் தாராளமயம் தனியார்மயம் மற்ற துறைகளில் ஏற்படுத்தியதைப் போலவே தங்க நகைத் தொழிலிலும் பெரும் மாற்றங்களைக் கோரியது. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் நுகர்வு வெறியுடன் கூடிய ஒரு புதிய ரக மேல் நடுத்தர வர்க்கம் ஒன்று புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் உருப்பெற்று எழுந்தது.

பொதுவில் நகைகள் நுகர்வு என்பது தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஒரு மாற்றத்துக்குள்ளாகிறது. மறுகாலனியதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் திணிக்கப்பட்ட வங்கிச் சீர்திருத்தங்களின் காரணமாக சேமிப்புக்கான வட்டி வீதம் குறைக்கப்பட்டது; இது மக்களை தேக்குமர திட்டம், சவுக்குமர திட்டம் போன்ற பிளேடு கம்பெனிகளின் பின்னே விரட்டியடிக்கிறது. அவர்களின் கவர்ச்சிகரமான வட்டி சதவீதங்களால் மயங்கி அங்கே முதலீடு செய்து கடுமையாக பதம் பார்க்கப்பட்டவர்களுக்கு எப்போதும் நிலையாக உயரும் தங்கத்தின் விலை ஒரு கவர்ச்சிகரமான சேமிப்பு இலக்கானது.

இதுவும் போக, எழுந்து வந்த ஐ.டி துறை போன்ற சேவைத் துறைகளால் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டதால், அத்துறைகளின்
மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பு கூடி, வரதட்சினைக் கொள்ளையின் அளவும் கூடியது. இன்னொரு பக்கம் புதியதாக உருவான புதிய ரக மேல் நடுத்தர் வர்க்கத்தாரின் வெறி கொண்ட நுகர்வு.

இது காசுக்கொழுப்பா அல்லது மாப்பிள்ளை வீட்டார் அடித்த கொள்ளையா?

விளைவாக நகைகள் நுகர்வும் அதன் தொடர்ச்சியாக அதன் உருவாக்கத்திலும் அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொன்னூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கியது.

தெற்கின் தங்கப் பட்டறையாக திகழ்ந்த கோவை மாநகரில் 98 குண்டு வெடிப்புகளுக்குப் பின் பொருளாதார ரீதியில் இரண்டு பேரிடி விழுந்தது. ஒன்று பஞ்சாலைகள் பரவலாக மூடத் தொடங்கியது – இரண்டு தங்கப் பட்டறை தொழில் ஒரு பெரும் வீழ்ச்சிக்குட்பட்டு தங்க நகை ஆசாரிகளும் தொழிலாளர்களும் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளத் தொடங்கியது. அந்த ஆண்டுகளில் மக்களிடையே “துலுக்கன் குண்டு வெச்சி நம்ம கோயமுத்தூர நாசப்படுத்திட்டாங்க – மில்லுகளும் தங்கப் பட்டரைகளும் மூட துலுக்கன் வெச்ச குண்டு தான் காரணம்” என்று பரவலாக பிரச்சாரம் செய்யப் பட்டது.

அந்த நேரத்தில் பரவலாக மில்கள் மூடப்படுவதும் ஓடும் மில்களில் ‘நோ வொர்க்’ கொடுப்பதும் சாதாரணம். நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ஜே ஜே என்று நகைப் பட்டரைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி
போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று இருந்தது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள் சுமார் 300 நகைத்
தொழிலாளிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டார்கள். முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போய், 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழில் வீழ்ச்சி 98க்குப் பின் உணரப்பட்டாலும், இந்த வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை. ஆனால் அது குண்டு வெடிப்பு சம்பவம் வரைக்கும் ஒரு செய்தியாக ஆகாமல் இருந்தது – குண்டு வெடிப்பு என்பது காக்காய் உட்கார்ந்ததைப் போலத்தான்; பனம்பழம் ஏற்கனவே விழத் தயாராய்த்தான் இருந்தது.

ஏன் அந்த வீழ்ச்சி ஏற்பட்டது? என்பது பற்றியும் பொதுவில் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் மற்ற தொழில்களை எப்படி நிர்மூலமாக்கியதோ – அதாவது, முதலில் ஒரு உலுக்கு உலுக்கி அந்தத் தொழிலில் இருப்பவர்களை நெருக்கடிக்குள்ளாக்குவது; அடுத்து அந்தத் தொழிலை மேலிருந்து கீழ் வரை தனது தேவைக்குத் தக்கவாறு மறுவார்ப்பு செய்து தனக்குக் கீழ் கொண்டு வந்து தனது தொங்கு சதையாக, ஆக்சிலரி யூனிட்டாக மாற்றி குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுவது – அதே பாணியில் நகை உருவாக்கத் தொழிலிலும் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அது எவ்வாறு என்பதையும் உதாரணங்களோடு அடுத்து வரும் பகுதிகளில் விளக்க முயல்கிறேன்.

அடுத்து மறுகாலனியாதிக்கத்தின் உடன் விளைவாக ஏற்பட்டுள்ள பெருமளவிலான தொழிலாளிகளின் இடப் பெயர்வு தங்க நகைத் தொழிலாளர்கள் விஷயத்திலும் நடந்துள்ளது. குறிப்பாக கேரளம், மேற்கு வங்கம் போன்ற வெளிமாநில தொழிலாளர்களும், இதே மாநிலத்தின் வேறு மாவட்டத்திலிருந்தும் குறிப்பாக ஒரே இடத்தில் தொழிலாளர்கள் குவிய வேண்டிய நிர்பந்தத்தை உண்டாக்கியது. இது போன்ற விசயங்களையும் நேரடி உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.

(தொடரும்)

குறிப்பு :

1) இந்தக் கட்டுரையின் தொடரும் பாகங்களில் சங்கிலித்தொடர் நகை மாளிகைகள் வரவு; அதனால் பாதிக்கப்பட்ட பாரம்பரிய பட்டரைகள்; வங்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளிகள்; அந்தத் தொழிலாளிகளிடம் நடத்திய உரையாடல்கள் (முடிந்தால் ஒலி வடிவில்); அவர்களின் பணிச் சூழல், வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கலாம் என்று உத்தேசம்.

2) இணையத்தை பாவிப்பதில் இருக்கும் சிக்கல் காரணமாக மறுமொழிகள் உடனே வெளியிடமுடியாமல் போகலாம்.

பிப்ரவரி 26, 2010 Posted by | Uncategorized | 4 பின்னூட்டங்கள்

பீகாரின் 11% வளர்ச்சி: உண்மை என்ன?

முதலாளித்துவ ஊடகங்களும் ஆளும் வர்க்கமும் கூத்தாடுகின்றனர். பீகாரின் 11% ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் தான் இவர்களை இப்படி துள்ள வைத்துள்ளது. டைம்ஸ் ஆப் இண்டியா ஏட்டினால் தனது சந்தோசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இதற்காகவே ஒரு சிறப்பு வெளியீடு கொண்டு வந்துள்ளது. சென்றவருடம் பீகார் துனை முதல்வர் சுசீல் குமார் 16% வளர்ச்சி விகிதத்தை பீகார் எட்டியுள்ளது என்று சொன்னபோதாவது சில பொருளாதார அறிஞர்கள் அதில் இருந்த பொய்களை அம்பலப்படுத்தினர். ஆனால் இந்த முறை முதலாளித்துவ ஊடகங்களின் வெறிக்கூச்சல் எல்லாவற்றையும் அமுக்கி விட்டது. இனிமேல் இந்த ‘புள்ளிவிபரத்தை’ அம்பலப்படுத்தும் விரிவான ஆய்வரிக்கைகள் வெளியாகலாம்; அதற்கு முன் முதலாளித்துவ ஏடுகளில் வெளியான செய்திகளினூடேயே கவனித்த சில முரண்பாடுகள் மட்டும் இங்கே.

தொழிற்துறை வளர்ச்சி இந்த 11 சதவீதத்தில் எந்தவித பங்களிப்பும் செலுத்தாத நிலையில் சேவைத் துறையும் விவசாயத்துறையுமே இந்த வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியிருக்கிறது என்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா. அதே கட்டுரையில், மூன்றாண்டுகள் வெள்ளமும் தொடர்ந்த வரட்சியையும் கடந்தே இந்த வளர்ச்சி வீதம் எட்டப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இது உண்மைதானா?

எப்படி இந்த வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளனர்?

அதற்கான உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜி.டி.பி) எப்படி கணக்கிடுகிறார்கள் என்பதை சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். முதலாளித்துவ முறையில் இதற்கு ஒரு எளிமையான சூத்திரம் சொல்கிறார்கள் (கீன்ஸுக்கு பின் வரும் முதலாளித்துவவாதிகள்). அது, மொ.உ.உ = நுகர்வு + முதலீடு + அரசு செலவினங்கள் + ( ஏற்றுமதி – இறக்குமதி ). இதன்படி மொ.உ.உ என்பது நுகர்வு, முதலீடு, அரசுசெலவினங்கள் இவற்றோடு ஏற்றுமதியை (அதிலிருந்து இறக்குமதி மதிப்பை கழித்துவிட்டு) கூட்டினால் வரும் சதவீதமாகும். தொழில்துறை வளர்ச்சி பீகாரில் இல்லை. மூன்றாண்டுகளாக வரட்சி, பஞ்சம் தொடர்ந்து வெள்ளம் என்பதால் விவசாயத்துறையின் பங்களிப்பு என்பதும் குறைவாகத்தானிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். இப்போது இந்த 11% விகிதத்திற்கு மிக அதிகளவில் பங்களித்திருப்பது தனிநபர் நுகர்வு என்பது தெளிவாகிறது. டைம்ஸ் செய்தியின் படியே பீகாரில் ஆட்டொமொபைல் விற்பனை 2009ல் 45% அதிகரித்திருக்கிறது.

அடுத்து, பீகாரின் சராசரி தனிநபர் நுகர்வும் சராசரி தனிநபர் வருமானமும் தேசிய சராசரியை விட படுபாதாளத்தில் இருக்கும் போது, மேலும் அது ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து சரிந்து வரும் நேரத்தில் மாநிலத்தின் நுகர்வு சார்ந்து தூண்டப்பட்டுள்ள வளர்ச்சி 11 சதவீதம் என்பதன் அர்த்தம், சமீப காலத்தில் பணக்காரர்கள் செலவிடும் தொகை கூடியிருக்கிறது என்பது தான். இது அம்மாநிலத்தில் மோட்டார் வாகனங்கள், கார்களின் விற்பனை 45% அதிகரித்திருப்பதிலிருந்து புலனாகிறது. மேலும் முன்பைப் போல் அல்லாமல் இப்போது போலீசுத் துறை ஆட்கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் திருடர்கள், கடத்தல்காரர்கள் பெரும்பாலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நடவடிக்கைகள், மேட்டுக்குடியினரை அதிகம் செலவழிக்கவும் தங்கள் செல்வத்தை டாம்பீகமாக காட்டிக் கொள்ளவும் (show off) துணிவைக் கொடுத்திருக்கிறது.

இன்னொருபுறம், பெரும் தரகு முதலாளிகள் குறிப்பாக சர்க்கரை ஆலைகளில் மாத்திரம் நாலாயிரம் கோடிகளுக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறார்கள். மாநில அரசு இம்முதலாளிகள் தமது சரக்குகளை சுலபமாக எடுத்துச் செல்ல ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீட்டில் சாலைகள், பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகளில் செலவு செய்திருக்கிறது. இப்படி தனியார் தரகு முதலாளிகளின் முதலீடும், அரசு அவர்களின் நலனுக்காகச் செய்துள்ள முதலீடும், ஒரு சிறு மேட்டுக்குடியினரின் ஆடம்பர நுகர்வும் தான் இந்த 11% வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகள்.

இதையே சிறந்த ஆட்சி (good governance) என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு பத்து ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் பெருவாரியாக இருக்கும் ஒரு மாநிலத்தில், ஒரு சின்ன கும்பலின் ஆடம்பரங்களும் கேளிக்கைகளும் கூடியிருப்பதையே முன்னேற்றம் என்று சொல்ல வேண்டுமானால் எத்தனை வக்கிர புத்தியும் திமிரும் இருக்க வேண்டும்? முதலாளித்துவ ஊடகங்கள் ஊதிப் பெருக்கிக் காட்டும் எந்தவொரு புள்ளிவிபரங்களுக்குள்ளும் புகுந்து நோண்டிப் பார்த்தால் இப்படியான புளுகுகளும் முரண்பாடுகளும் தான் மண்டிக்கிடக்கிறது.

ஜனவரி 16, 2010 Posted by | Uncategorized | , , , | 1 பின்னூட்டம்

வட இந்திய பயண அனுபவங்கள்..!!

பொதுவில் பயண அனுபவங்களை எழுதி வைக்க வேண்டும் எனும் என்னம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுப் போட்டு மொத்த விஷயமும் நமுத்துப் போய்விடும். பிறகு நேரம் கிடைத்து எழுதலாம் என்று உட்கார்ந்தால் அந்தப் பயண நினைவுகள் ஏதோ மங்களான நினைவுகளாகத்தான் தேறும். ஆனால் இந்த முறை எழுதியே ஆகவேண்டும் என்று தீர்மானமாக முடிவு செய்ததற்கு வழக்கமான காரணங்களைத் தாண்டி வேறு சில காரணங்களும் கூட இருக்கிறது.

பயண அனுபவம் என நான் கருதுவது செல்லும் ஊர்களின் அழகியல் அம்சங்களை பட்டியலிட்டுக் காட்டுவது எனும் அம்சத்தில் அல்ல. மாறாக மாறுபட்ட கலாச்சாரம், மற்றும் அந்தக் கலாச்சாரத்தில் அடித்தளமாய் இருக்கும் பொருளாதாரம், அந்தப் பொருளாதாரத்தால் தீர்மானிக்கப்படும் அங்குள்ள மனிதர்களிடையே நிலவும் உறவுகள், அந்த உறவுகளினிடையே ஏற்படும் முரண்பாடுகள் போன்றவற்றைக் கண்டு பதிந்து வைப்பதைத் தான். வடநாட்டுப் பயணம் என்பது என்னளவில் ஒரு முக்கியமான திருப்புமுனை. ஒரு நாலைந்து ஆண்டுகள் முன்பு இந்தியா எனும் மாய நினைவுகளோடே தில்லியில் வந்திறங்கியவனை ஒரு உலுக்கு உலுக்கி நாம் உண்மையில் ஒரு எல்லைக்குள் இருக்கும் பல தேசத்தவர் என்பதை உணர வைத்தது.  இது ஏன் என்று தேடப்போய்த்தான் ஏற்கனவே வேறு சில சிறப்பான காரணங்களால் அளவு ரீதியில் ஏற்பட்டுவந்த பல மாற்றங்களோடு சேர்ந்து  மார்க்சியம் நோக்கி நகரும் ஒரு பன்பு மாற்றமாக உருவெடுத்தது.

இப்போது மீண்டும் தில்லி. இந்தப் பயணம் ஒருமாத அளவுக்குக் குறுகியவொன்றாயிருந்தாலும் முந்தைய அனுபவங்களின் நினைவுகள் மீண்டும் அவ்வப்போது உரசிச் செல்வதை உணர முடிந்தது.

தில்லி என்பது ஒரு அடையாளம். ஆளும் வர்க்க / மேட்டுக்குடி வர்க்கத்தினரின் ஆணவத்தினுடைய அடையாளம். தில்லி துரோகத்தின் அடையாளம். தனது வளர்ச்சிக்கு உரமாய் இருந்தவர்களையெல்லாம் சீரணித்துச் சக்கையாகத் துப்பி விடும் துரோகத்தின் அடையாளம். புறக்கணிப்பைப் புறக்கணித்து இந்நகரின் மேண்மைக்காய் உழைத்து உழைத்து நடைபாதைகளில் கண்களில் வெறுமை தெறிக்கத் தங்கியிருக்கும் அந்த உழைக்கும் மக்களுடைய தியாகத்தின் அடையாளமும் இதே தில்லி தான்.

இப்போது காமென்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை தில்லியில் நடத்தப் போகிறார்கள் அதற்காக நகரத்துக்கு மேக்கப்போடும் வேலை
வெகு வேகமாக நடந்து வருகிறது. முகத்திலிருக்கும் கரும்புள்ளிகளை அசிங்கமாகப் பார்ப்பதைப் போல பாதையோரங்களை அடைத்துக் கிடக்கும் உழைக்கும் மக்களையும் அசிங்கமாகப் பார்க்கிறது அரசு. தில்லி மெட்ரோவின் பாதைகளை அமைக்க உயரமான கான்க்ரீட் தூண்களை அமைக்கும் தொழிலாளிகள், அம்மாநகரத்தின் அழகிய வானுயர்ந்த கட்டிடங்களை அமைக்கும் தொழிலாளிகள், இன்னும் பூங்காக்கள், பாலங்கள்.. என்று அந்நகரத்தின் அழகை மெருகூட்ட உழைக்கும் மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் கிடையாது. அழகுபடுத்தல் முடிந்ததும், அதன் ஒரு அங்கமாய் அதற்காக வேர்வை சிந்தியவர்களையும் கூட தூக்கியெறியப் போகிறார்கள்.

குர்காவ்ன், நோய்டா போன்ற சாடிலைட் நகரங்களில் வானை எட்டிப் பிடிக்க நிற்கும் பளபளப்பான ஒவ்வொரு கட்டிடத்திடமும் நம்மிடம் சொல்ல ஓராயிரம் கதைகளுண்டு. நான் வந்து சேர்ந்த இரண்டாவது நாளில் நோய்டாவில் நடைபாதையில் தங்கியிருந்த ஒரு கூலித் தொழிலாளி – ஒரு முதியவர் – நடுக்கும் குளிரில் செத்துப் போயிருந்தார். அவர் கட்டிடத் தொழிலாளியாய் பணிபுரிந்த கட்டடத்திற்கு மிக அருகாமையிலேயே அவர் ஒரு நடைபாதையோரம் வாழ்ந்து வந்தார். ஒருவேளை அந்தக் கட்டிடத்துக்கு மட்டும் உயிரும், இதயமும், கண்களும் இருந்திருந்தால் தன்னை பார்த்துப் பார்த்து வளர்த்த அம்முதியவரின் மரணத்துக்காக அழுதிருக்குமோ என்னவோ. ஆனால் அந்தக் கட்டிடத்திலியங்கும் அலுவகங்களில் வேலை பார்க்கும் எவரும் சும்மா வேடிக்கை பார்க்கக் கூட அருகில் வரவில்லை. இங்கே ஏழ்மையையும் வருமையையும் தொற்று நோயைப் போல பார்த்து ஒதுக்குகிறார்கள்.

அடுத்த மூன்று நாட்களுக்கு இந்த மரணம் ஒரு செய்தியாக வருமா என்ற எதிர்பார்ப்பில் தினசரிகளை வாங்கிப் படித்தேன். அவற்றில் வருகிற புத்தாண்டை வரவேற்கும் கட்டுரைகளும், இந்த பத்தாண்டுகளில் நடந்த முக்கியமான நடப்புகளான ப்ரிட்னி ஸ்பியர்சுக்கு எத்தனை முறை மேலாடை விலகியது, டைகர் வுட்ஸ் எத்தனை பெண்களோடு படுத்தார் என்பது போன்ற உலகச் செய்திகள் தான் வந்திருந்தது. நடிகர்களின், பிரபலமான மேட்டுக்குடியினரின் குண்டியை நோண்டி டைம்ஸ் ஆஃப் இந்தியா விரலை நீட்டுகிறது – எல்லோரும் காசுகொடுத்து அதை முகர்ந்து பார்க்கிறார்கள். உள்ளூர்ச் செய்திகளிலும் பிரதானமாய் நடிக நடிகர்களின் படுக்கையறை சமாச்சாரங்கள் தான் இடம்பிடிக்கிறது.

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ‘Buzzy stop’ என்று ஒரு சப்ளிமெண்ட் தருகிறார்கள் – அதன் பக்கங்களின் எண்ணிக்கை 40. செய்திகளின் பக்கங்கள் – 30.எதற்கு எது சப்ளிமெண்ட் என்றே விளங்கிக் கொள்ள முடியவில்லை. நம்மூரில் சரோஜா தேவி புத்தகம் என்று ஒரு காலத்தில் வருமே.. அதன் தரத்திற்குத் தான் இங்கே செய்தித்தாள்கள் வருகிறது. அரசியல்வாதிகளைக் கொள்கைகளைக் கொண்டு விமர்சிப்பதில்லை – மாறாக அவர்களின் ஆளுமைகளைக் கொண்டும் கவர்ச்சியைக் கொண்டும் (personality & charisma) தான் விமர்சிக்கிறார்கள் பத்திரிகைகளில்.

இங்கே மூன்று உலகங்கள் இருக்கிறது – ஒன்று உலகத்து இன்பங்களையெல்லாம் சாத்தியப்பட்ட எல்லா வழிவகைகளிலும் துய்க்கும் நுகர்வு வெறியோடு அலைபவர்களின் உலகம்.. அடுத்த உலகம் அருகிலேயே இருக்கிறது – அது வெயிலென்றும் குளிரென்றும் பாராமல் ஓயாமல் உழைத்து எங்கோ பீகாரிலோ உத்திர பிரதேசத்திலோ மத்தியபிரதேசித்திலோ ஒரிசாவிலோ இருக்கும் வயதான பெற்றோர்களுக்கு மாதம் நூறு ரூபாய்களாவது அனுப்ப வேண்டுமே எனும் தவிப்பில் உழலும் இடம்பெயர்ந்த உழைப்பாளிகளின் உலகம். மூன்றாவது உலகம் இவை இரண்டுக்கும் இடையிலிருந்து கொண்டு தமக்கு மேலே உள்ள உலகத்தவர்களின் ஆடம்பரக் கார்களைப் பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டே கடன்பட்டாவது ஒரு மாருதி 800 வாங்கி ஓட்டுவதை பெருமையாக நினைக்கும் நடுத்தர வர்க்க மக்களின் உலகம்.

வடக்கில் பிகார், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி ஆகிய மாநிலங்களை BIMARU என்கிறார்கள். இம்மாநிலங்களில் விவசாயம் பொய்த்துப் போனதாலும் அந்தந்த வட்டாரங்களில் பிழைக்க வேறு வழியில்லாததாலும் வீசியெறியப்படும் மக்கள் தில்லியில் தான் வந்து குவிகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். இவர்கள் பெரும்பாலும் வசிப்பது நடைபாதைகளில் தான். லட்சக்கணக்கான குடும்பங்கள் இப்படி பிள்ளை குட்டிகளோடு இடம் பெயர்ந்து வந்துள்ளதைக் காண முடிகிறது. குர்காவ்ன், நோய்டா மற்றும் தில்லியின் பல பகுதிகளில் நடைபாதைகளில் இவர்கள் வசிக்கிறார்கள். மொத்த குடும்பமே ஏதோவொரு கூலி வேலைக்குச் சென்றால் தான் ஜீவனத்தை ஓட்ட முடியும். இவர்களுக்கான சுகாதார
வசதிகளோ, இந்தக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்க ஏற்பாடோ  எதுவும் கிடையாது. இவர்கள் இத்தனை சிரமத்துக்குள்ளும் ஒரு பெருநகரத்துக்கு இடம் பெயர்ந்து வர வெறுமே பொருளாதாரக் காரணங்கள் மட்டும் தான் இருக்கும் என்று நான் நம்பவில்லை.

இங்கே வந்த சில நாட்களில் வேலை தள்ளிப் போய்க்கொண்டு இருந்ததால் கூட ஒரு பீகாரி நன்பனையும் கூட்டு சேர்த்துக் கொண்டு லும்பினி செல்லக் கிளம்பிவிட்டேன். பேருந்தில் அயோத்தி வரை செல்வது, அங்கே எனது கல்லூரி நன்பன் சரவணரகுபதியும் அவனது நன்பனும் எங்களோடு சேர்ந்து கொள்வார்கள் என்பதும், தொடர்ந்து லும்பினிக்கு இரண்டு புல்லட்டுகளில் சென்றுவிட்டு மீண்டும் அயோத்தியிருந்து தில்லிக்கு பேருந்தில் பயணம் என்பது திட்டம். இந்தப் பயனத்தின் இடையில் ஒரு நாள் ஏதாவது ஒரு சிறிய டவுனில் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் மீண்டும் பயனிப்பது என்றும் முடிந்தவரையில் தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகியே பயனிப்பது என்றும் தீர்மானித்துக் கொண்டே கிளம்பினோம்.

திட்டமிட்டபடி வழியில் அயோத்தியில் என் நன்பன் சரவணனும் அவன் நன்பன் வைபவ் த்ரிபாத்தியும் எங்களோடு இனைந்து கொண்டனர். அங்கிருந்து இரண்டு புல்லட்களில் கோரக்பூர் கிளம்பினோம் – கிளம்பும் போதே மதியம் 3 ஆகிவிட்டது. பஸ்ட்டி எனும் நகரத்தைத் தாண்டியதும் ஒரு கிராமத்தில் வைபவ்வின் உறவினர் வீட்டில் தங்கினோம். அடுத்த நாள் விடியகாலை சீக்கிரம் எழுந்து திறந்த வெளிப் புல்கலைக்கழகத்தைத் தேடி நடந்த போது ஒரு தலித் குடியிருப்பைக் கடந்தோம் – காலை ஒரு மூன்று மணியிருக்கும். குடிசைகளில் அந்த நேரத்துக்கே சமையல் வேலை
நடப்பதைக் காண முடிந்தது. வைபவ்விடம் விசாரித்தேன் – பொதுவாக இங்கே மொத்த குடும்பமும் பண்ணைகளின் நிலத்தில் வேலைக்குச் சென்று விடவேண்டும் என்பதால், காலையிலேயே மொத்த நாளுக்கும் சேர்த்து சப்பாத்தி சுட்டு வைத்துக்கொள்கிறார்கள். சப்ஜி என்று எதுவும் கிடையாது; ஒரு பச்சைமிளகாயை எடுத்து சப்பாத்தியை அதில் சுருட்டி அப்படியே சாப்பிட வேண்டியது தான். இதுவே தான் மதியத்துக்கும் இதுவே தான் இரவுக்கும். கோதுமையை பண்ணையாரே கொடுத்துவிடுவார் – கூலியில் பெரும்பாலும் கழித்து வடுவார். கூலியென்று பார்த்தாலும் ஆணுக்கு இருபது ரூபாயும் பெண்ணுக்கு பத்து ரூபாய்களும் தான்; சிறுவர்களின் வேலைக்கெல்லாம் கூலி கிடையாது. பெரும்பாலும் கூலிக்கு பதிலாய் தானியங்கள் கொடுத்து விடுவார்களாம்.

இதில் வேலை முடிந்ததா வீட்டுக்கு வந்தோமா என்றெல்லம் கிடையாது; பண்ணையார் எப்போது கூப்பிடுகிறாரோ அப்போதெல்லாம் போய் நிற்க வேண்டும். இவர்களெல்லாம் பரம்பரை பரம்பரையாக தொண்டூழியம் செய்பவர்களாம்; இப்போது பண்ணையாருக்கு முடிவெட்டுபவரின் தந்தை பண்ணையாரின் தந்தைக்கு வெட்டியிருப்பார் – இவர் மகன் பண்ணையாரின் மகனுக்கு எதிர்காலத்தில் முடிவெட்டுவார் – இப்படி! இங்கே பெரும் பண்ணைகளிடம் தான் நிலங்கள் மொத்தமும் குவிந்துள்ளது. தலித்துகள் பெரும்பாலும் நிலமற்றவர்களே (தமிழ்நாட்டைப் போலத்தான்). மொத்த குடும்பமும் – குஞ்சு குளுவான்கள் முதற்கொண்டு கூலி வேலைக்குச் சென்றாக வேண்டும். பிள்ளைகளுக்குக் கல்வியென்பதே கிடையாது.

பெரும்பாலும் அங்கே நான் கவனித்தது நமது மாநிலத்துக்கும் அங்கேயுள்ள நிலைமைகளுக்கு மலையளவு இருந்த வித்தியாசத்தை.  உத்திர பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் உயர்சாதியினருக்கு சட்டமே கிடையாது என்பது போல் தான் தெரிகிறது. சர்வசாதாரணமாக அங்கே நாட்டுத் துப்பாக்கிகள் தூக்கிய குண்டர்களுடன் உயர்சாதிப் பண்ணைகள் நடமாடுவதைக் கவனித்து இருக்கிறேன். பேருந்துகளில் அவர்கள் ஏறினால் டிக்கெட் எடுப்பதில்லை. பேருந்துகளில் ஏறும் தலித்துகள் இருக்கைகள் காலியாய் இருந்தாலும் உட்காருவதில்லை – குறிப்பாக இரண்டு பேர் அமரும் இருக்கையில் ஒரு உயர் சாதிக்காரர் உட்கார்ந்து இருந்தால் அருகில் ஒரு தலித் உட்கார முடியாது.

நிலப்பிரபுத்துவம் தனது உச்சகட்ட கொடுமைகளை அங்கே கட்டவிழ்த்து விட்டிருப்பதை அவதானிக்க முடிந்தது. முசாகர் எனும் ஒரு சாதியினரைப் பற்றி எனது பீகாரி நன்பன் சொன்னான் –  தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் எனக்கு (இங்கே இரட்டைக் குவளையை முறையைக் கண்டிருந்தாலும் கூட) அவர்களைப் பற்றி கேள்வியுற்றதெல்லாம் கடுமையான வியப்பை உண்டாக்கியது. அங்கே வீடுகளின் உயரத்தைக் கூட சாதிதான் தீர்மானிக்கிறது. தாக்கூரின் வீடு பார்ப்பானின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், யாதவர்களின் வீடு தாக்கூர்களின் வீட்டை விட உயரம் குறைவாய் இருக்க  வேண்டும், தலித்துகளின் வீடுகள் யாதவர்களின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும், முசாகர்களின் வீடுகள் தலித்துகளின் வீடுகளை விட உயரம் குறைவாய் இருக்க வேண்டும். கதவுகளும் அவ்வாறே அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதால், முசாகர்களின் வீட்டுக்குள் நுழைவது என்பது எலி வளைக்குள் நுழைவது போலத்தானிருக்குமாம்.

குடியிருப்புகள் அமைந்திருக்கும் திசைகூட காற்றின் திசைக்கு ஏற்ப தான் இருக்க வேண்டுமாம். அதாவது தலித்துகளின் குடியிருப்பைக்
கடந்து மேல்சாதியினரின் குடியிருப்புக்குக் காற்று செல்லக் கூடாதாம். இந்த மாதத்தில் ஓலைக் குடிசையாய் இருந்த தனது வீட்டை ஒரு
முசாகர் காரை வீடாக கட்டிவிட்டதற்காக அதை இடித்துத் தள்ளியிருக்கிறார்கள் மேல்சாதி இந்துக்கள். எனக்குத் தமிழகமும் பெரியாரும்  நினைவுக்கு வந்தார் – உண்மையில் அந்த தாடிக்காரக் கிழவனுக்கு நாம் நிறையவே கடன்பட்டிருக்கிறோம்.

இது போன்ற சமூகக் காரணிகள் பொருளாதாரக் காரணிகளோடு இணைந்து தான் அவர்களை தில்லிக்கு விரட்டுகிறது – இங்கே தில்லியின் கருணையற்ற இதயத்தை சகித்துக் கொண்டு தொடர்ந்து வாழ நிர்பந்திக்கிறது. BIMARU மாநிலங்களின் பலபகுதிகளின் பொருளாதார நிலையும் சமூக ஒடுக்குமுறையும் நமது கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

“இப்பெல்லாம் யாரு சார் சாதி பார்க்கிறா?”

“நீங்க சாதி இருக்குன்னு சொல்றதாலே தான் சாதி இருக்கு – இல்லேன்னு சொல்லிப்பாருங்க; சாதியே இல்லை” என்று நொண்ணை
பேசும் உண்மைத்தமிழன், கோவி.கண்ணன் போன்ற அல்டாப்புகளை பீகாரின் ஏதாவதொரு கிராமத்துக்கு ஒரிரு மாதங்களுக்காவது பார்சல் கட்டி அனுப்பி விடவேண்டும்.

நாங்கள் பஸ்ட்டியிலிருந்து காலையில் சீக்கிரமாகவே கிளம்பி விட்டோ ம் – வழியில் வைபவ்வின் புல்லட் இஞ்சின் சீஸ் ஆகி விட்டது. ஊரில் எனது வண்டியை நானே பெரும்பாலும் பழுது பார்ப்பதால் எனக்கு ஓரளவுக்கு புல்லட் மெக்கானிசம் தெரியும். ஒருவழியாக இஞ்சின் ஆயிலை முற்றாக வெளியேற்றிவிட்டு ஸ்பேராக கொண்டு சென்றிருந்த இஞ்சின் ஆயிலை நிரப்பிய பின் ஸ்டார்ட் ஆனது. பழைய ஸ்டாண்டர்டு புல்லட்டில் இது ஒரு தொல்லை. வெளியேற்றிய இஞ்சின் ஆயிலுக்குள் கைவிட்டுத் துழாவியதில் சின்னதாக சிலஉலோகத் துணுக்குகள் தட்டுப்பட்டது – அப்படியானால், பிஸ்ட்டனும் போரும் அடிவாங்கியிருக்கிறது என்று அவனிடம் சொன்னேன். மிதமான வேகத்தில் கோரக்பூர் சென்றபோது மாலை நான்கு. ஒரு மெக்கானிக்கைப் பிடித்து ரீபோரிங் செய்யச் சொல்லிவிட்டு நாங்கள் நால்வரும் தங்க இடம் பார்க்கவும், ஊரைச் சுற்றிப்பார்க்கவும் கால்நடையாகக் கிளம்பிவிட்டோ ம்.

இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம் – நான் அங்குள்ள சாதி ஒடுக்குமுறைகள் விவசாயம் மற்றும் பிற தொழில்கள் பற்றியும் அவர்களிடமிருந்து கேட்டறிய முடிந்தது. அவர்களிடம் நம் மாநிலம் பற்றி நிறைய சொன்னேன். பிரதானமாக அவர்களுக்கு இருந்த ஆச்சர்யங்கள் இரண்டு – 1) அது ஏன் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்க்கிறீர்கள்? 2) அது எப்படி கருணாநிதி ராமரைப் பற்றி இழிவாகப் பேசியும் தமிழ் நாட்டு மக்கள் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள்.. நீண்ட நேரமாக அவர்களுக்கு பெரியார், அவருக்கு முன் இருந்த பார்ப்பனிய எதிர்ப்பு மரபுகள் போன்றவற்றை விளக்கினேன். மற்றபடி அங்குள்ள நிலைமைகளை அவர்களிடம் கேட்டறிந்ததனூடாகவும் இந்தப் பயனத்தில் இடையிடையே நிறுத்தி நேரில் கண்டவற்றினூடாகவும் எனக்கு பளிச்சென்று தெரிந்தவொன்று – தமிழ்நாட்டுக்கும் வட நாட்டிற்கும் இருந்த மலையளவிலான சமூகப் பொருளாதார வேறுபாடுகள்.

தமிழ்நாட்டில் சாதி ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுகிறார்கள் – இரட்டைக்குவளை முறையை இன்னும் ஒழிக்க முடியாத திராவிட ஆட்சி என்று உண்மைத்தமிழன் வினவு தளத்தில் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.. இரட்டைக்குவளை முறையை எதிர்த்து போராடும் செய்திகள் வருவதாலேயே அது நடப்பில் இருப்பது இவருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், வடக்கிலோ ஒடுக்குமுறையை எதிர்த்து தலித்துகள் போராடுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் அவர்கள் ஆண்டைகள் தம்மேல் ஏவிவிடும் ஒடுக்குமுறையை கேள்வி வரைமுறையில்லாமல் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதல்ல; அங்குள்ள பொருளாதாரச் சூழல் அவர்களை போராடும் ஒரு நிலைக்கு அனுமதிப்பதில்லை என்பதே காரணம்.

தமிழ்நாட்டில் ஒதுகுபுற கிராமங்களில் இருந்து அதிகபட்சம் மூன்று மணிநேர பேருந்துப் பயன தூரத்தில் ஏதேனும் ஒரு சிறு நகரமாவது இருக்கும். பேருந்துக் கட்டணமும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவு – பேருந்து இணைப்பின் அடர்த்தியும் வடக்கை ஒப்பிடும் போது அதிகம். கிராமப்புறங்களில் நிலத்தின் மேல் தலித்துகளுக்கு பொதுவாக இந்தியா முழுவதிலும் உரிமை கிடையாது. சாதி இந்துக்கள் தான் நிலங்களை வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே கிராமப்புறத்தில் தலித்துகள் கூலிவேலை பார்ப்பவராயும், சாதி இந்துக்களுக்கு தொண்டூழியம் செய்பவராயும் இருக்கிறார்கள். இந்த நிலையில், தமிழ்நாட்டைப் பொருத்தளவில் ( குறிப்பான சில விதிவிலக்குகள் இருக்கலாம்) தலித்துகள் முற்று முழுக்க தமது சோற்றுக்கு கிராமப்புற பண்ணையை நம்பித்தானிருக்க வேண்டும் எனும் கட்டாயம் கிடையாது. அருகிலிருக்கும் நகரங்களுக்கு கூலி வேலையாக வரும் தலித்துகள் இயல்பாகவே தமது கிராமங்களுக்குத் திரும்பும் போது அங்கு நிலவும் ஒடுக்குமுறையை சகித்துக் கொள்ள முடியாமல் போராட எத்தனிக்கிறார்கள்.

உதாரணமாக நான் திருப்பூரில் சில ஆண்டுகள் தங்கியிருந்த போது பக்கத்தில் ஒரு ஷெட்டில் கோவையின் ஏதோ ஒரு ஒதுக்குப்புற
கிராமத்திலிருந்து இங்குள்ள பனியன் பட்டரையில் வேலைக்காக வந்திருந்தவர்கள் சேர்ந்து தங்கியிருந்தனர். அவர்களிடம் பேசிப்பார்த்த போது, அங்கே அவர்கள் கிராமத்தில் கவுண்டர்கள் இவர்களை மோசமான முறையில் ஒடுக்கிவந்ததும், இவர்கள் அதை எதிர்த்து போராட ஆரம்பித்தவுடன், அந்த வட்டாரத்திலிருக்கும் கவுண்டர்களெல்லாம் சேர்ந்து இவர்களுக்கு தமது நிலத்தில் வேலை தரக்கூடாது என்று முடிவு செய்து விட்டதாகவும், எனவே இவர்கள் வீட்டுக்கொருவராகக் கிளம்பி திருப்பூருக்கு வேலைக்கு வந்துவிட்டதாகவும் தெரியவந்தது. இதில், இங்கும் அவர்கள் வேலைசெய்யும் கம்பெனி முதலாளி ஏதாவதொரு ஆதிக்க சாதிக்காரனாகத்தானிருப்பான், ஆனால் – அவர்கள் கிராமத்தில் சந்தித்த ஒடுக்குமுறை பிரதானமாக சாதி ரீதியிலானதும் அதற்கு சற்றும் குறையாத பொருளாதாரச் சுரண்டலும் – இங்கே பொருளாதார ஒடுக்குமுறையே பிரதானமானது; சாதி ரீதியிலான ஒடுக்குமுறையின் கணம் லேசாகக் குறைந்து அது தன் வடிவத்திலிருந்து மாறுபட்டு பொருளார அம்சங்களை தன்னோடு சேர்த்துக் கொண்டிருக்கிறது.

இந்த இடத்தில் தமிழ்நாடு திராவிட ஆட்சிகளால் சொர்க புரியாகிவிட்டது எனும் அர்த்தத்தில் சொல்லவதாக புரிந்து கொள்ள வேண்டாம். தமிழ்நாட்டில் ஒடுக்குமுறையின் பரிமானம் வேறு தளத்துக்கு நகர்ந்து விட்டது. இங்கே மக்கள் தமது பாரம்பரிய வாழிடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு தொழில்நிறுவனங்களில் குறைகூலிக்குச் செல்ல நிலபிரபுத்துவம் நிர்பந்திக்கிறது. மறுகாலனியாதிக்க பொருளாதாரக் கொள்கைகளும் நிலபிரபுத்துவமும் கைகோர்த்துக் கொள்வது இந்த அம்சத்தில் தான். அமெரிக்கனுக்கு குறைந்த விலையில் டீசர்ட் கிடைக்க ஆலாந்துரையைச் சேர்ந்த கவுண்டனும் ஒரு மறைமுகக் காரணமாகிறான். ஒடுக்குமுறையானது அதன் வடிவத்தில் மாறுபட்டு வருகிறது – ஆனால் ஒடுக்குமுறைக்கான பிரதான காரணமான வளங்களின் மேல் அதிகாரமற்று இருப்பது அப்படியே தான் தொடருகிறது.

ஆனால் இங்கே வடக்கில் நிலைமை சற்று வேறு விதமானது – சமூக ரீதியாக இன்னமும் மூன்னூறு ஆண்டுகளுக்கு முந்தைய நிலைமை தான் பெரும்பாலான பகுதிகளில் நிலவுகிறது. இங்கே எளிதில் இடம்பெயர நகரங்கள் கைக்கெட்டும் தொலைவில் இல்லை. நாங்கள் பயனம் செய்த போது, காலையில் ஒரு நகரத்தைக் கண்டோ மென்றால், மாலையில் தான் அடுத்த நகரத்தைப் பார்க்க முடியும். அங்கும் இடம்பெயர்ந்து வருபவருக்கெல்லாம் வேலை கொடுக்குமளவிற்கு தொழிற்சாலைகள் ஏதும் இருக்காது. கிராமத்தில் ஆண்டைகளின் ஒடுக்குமுறையைச் சகித்துக் கொண்டு அடிபணிந்து கிடப்பதைத் தாண்டி வேறு வாய்ப்புகள் குறைவு.

இப்போது இதன் பிண்ணனியில் வடக்கிலும் மத்தியிலும் சிலபகுதிகளில் மாவோயிஸ்டுகள் செலுத்திவரும் செல்வாக்கைப் புரிந்து கொள்ள முடியும். இங்கே சாதி ரீதியில் / சமூக ரீதியில் / பொருளாதார ரீதியில் ஒடுக்கப்படும் உழைக்கும் மக்களுக்கு மாவொயிஸ்டுத் தோழர்கள் கம்யூனிஸ்டுகளாய் அல்ல; ஒரு மீட்பராகவோ, ஒரு தேவதூதராகவோ தான் தெரிவார்கள் என்று நினைக்கிறேன். அவர்களின் துப்பாக்கிக் குழாயிலிருந்து அதிகாரம்
மட்டுமல்லஆண்டாண்டு காலமாய் நிலபிரபுத்துவ ஒடுக்குமுறையின் கீழ் புழுங்கிச் சாகும் மக்களின் விடுதலையும் கூட அந்தக் குழாயிலிருந்து நெருப்புப் பிழம்பாய்ப் புறப்படும் ஈயக்குண்டுகளின் உள்ளே தான் சூல் கொண்டு இருக்கிறது. மாவொயிஸ்டுகள் தமது கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களின் மனங்களில் அசைக்கமுடியாத மாவீர்களாய் (invincible heros) வீற்றிருப்பார்கள் என்பதை மற்ற பகுதிகளில் நான் கண்ட நிலைமை எனக்கு உணர்த்தியது.

அந்த மக்கள் காக்கிச் சீருடையுடனும், கையில் கட்டிய சிவப்புப் பட்டையுடனும், போலீசிடம் இருந்து பறித்த ஹைதர் காலத்துக்
கட்டைத் துப்பாக்கிகளோடும், பாதவுரை அணியாத வெறும் கால்களோடும், பசியில் உள்ளடங்கிய கண்களோடும், மலேரியா காய்ச்சல் மருந்துகளோடும் என்றைக்காவது வந்து சேரப்போகும் மக்கள் விடுதலைப் படையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். இல்லாவிட்டால், தில்லியின் நடைபாதையில் தமக்கான இடத்தைத் தேடிக் கிளம்பிவிட வேண்டியது தான் – அங்கே இரத்தத்தை உறையவைக்கும் டிசம்பரின் கருணையற்ற குளிரும் – இரத்தத்தை ஆவியாக்கக் காத்திருக்கும் ஏப்ரல் வெயிலும் இவர்களுக்காகக் காத்திருக்கிறது.

கோரக்பூரின் ஒதுக்குப்புற சந்துகளில் நான் சில தாக்கூர்கள் துப்பாக்கி ஏந்திய காவலாளியோடும் கண்களில் மரண பீதியோடும் வலம் வருவதைக் காண நேர்ந்தது. கிராமப்புறங்களின் அரசு இயந்திரமே இல்லை எனும் நிலையென்றால்; சிறு நகரங்களில் அந்த இயந்திரத்தின் அச்சாக ஆதிக்க சாதியினரே இருக்கிறார்கள். பெரும்பாலும் உழைக்கும் தலித் மக்களுக்காகவென்று பேச பிரதான ஓட்டுக் கட்சிகள் எவையும் கிடையாது. தமிழ்நாட்டில் தேர்தல் சமயத்திலாவது ஓட்டுப்பொறுக்கிகள் ஏழைக் கிழவிகளைக் கட்டிப்பிடிப்பது போல போஸ் கொடுப்பதும், தலித் காலனிக்குள்
வருவதும் என்று ஓட்டுப் பொறுக்கவாவது ஸ்டண்ட் அடிப்பார்கள். வடக்கின் நிலைவேறு – நிலபிரபு எந்தக் கட்சியை நோக்கி கைகாட்டுகிறானோ அதற்கு ஓட்டுப் போட்டு விட வேண்டும். இந்த நிலபிரபுக்கள் வெவ்வேறு ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களாயிருப்பார்கள் – இந்த நிலபிரபுக்கள் மட்டத்தில் தான் சாதி அரசியலே நடக்கிறது.

அடுத்தநாள் கோரக்பூரிலிருந்து காலை கிளம்பினோம் – அந்த மெக்கானிக் விடியவிடிய வேலை பார்த்திருக்கிறார். நிதானமான வேகத்தில் சென்று மகராஜ்கன்ச் எனும் இடத்தில் இந்திய நேபாள எல்லையைக் கடந்து லும்பினி சென்றடைந்தோம். புத்தர் பிறந்த இடம் இது தான். எனக்கு அதில் பெரிய அளவு ஆர்வம் இல்லை – போனது ஊரைச் சுற்ற – ஒரே இடத்தில் தேங்கி நிற்பதில் அர்த்தமில்லை என்பதால் மீண்டும் அயோத்தி நோக்கி கிளம்பினோம். எனக்கு அயோத்தியில் ஒரு நாள் கழிக்க வேண்டும் என்று விருப்பம் இருந்தது. அங்கே இடிக்கப்பட்ட மசூதியையும், ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட இராமன் கோயிலையும் காணவேண்டும் – முடிந்தால் சில போட்டோ க்கள் எடுக்க வேண்டும் என்றும் ஆவல்.

இதை நான் சரவணனிடம் சொல்லப்போக, அவன் பதறிவிட்டான்.  அது அங்கே கூட்டம் அதிகம் வரும் நாளென்றும், குறிப்பாக பண்டாரங்கள் அதிகமாக வருவார்கள் என்றும், வடநாட்டுச் சாமியார்கள் பொதுவில் காட்டான்களென்றும் சொல்லி பயமுறுத்தவே அந்த திட்டத்தை உடைப்பில் போட்டுவிட்டு நானும் எனது நன்பனும் பேருந்தில் தில்லிக்குக் கிளம்பிவிட்டோ ம்.
__________________________________________________________________________________________________________________________

இன்று டிசம்பர் 31. அறைக்கு வெளியே குளிரில் நடுங்கிக் கொண்டே தெருவில் நடக்கும் கும்மாளங்களை வேடிக்கை பார்த்து நிற்கிறேன்.
சிகரெட்டின் காரமான புகை நுரையீரலெங்கும் பரவி குளிரை விரட்டப் போராடிக் கொண்டிருக்கிறது.. நாளை திரும்பவும் ஊருக்குக் கிளம்ப வேண்டும். மீண்டும் மீண்டும் நோய்டாவில் குளிரில் பற்கள் கிட்டித்து செத்துக் கிடந்த அந்தக் முதியவர் நினைவுக்கு வருகிறர். இன்னும் இன்னும் இப்படி தில்லிக்கு வந்து குளிரிலும் வெயிலிலும் வதைபட்டுச் சாக எத்தனையோ முதியவர்கள், பெண்கள், குழந்தைகள்
உத்திரபிரதேசத்தின் ஏதோவொரு கிராமத்திலிருந்து நாளும் நாளும் வந்து கொண்டேயிருக்கிறார்கள்.. மாயாவதியின் தங்க நிறச் சிலைகள்
சிரித்துக் கொண்டிருந்ததை வரும் வழியில் பல இடங்களில் காண நேர்ந்தது.

அந்தச் சிலைகள் யாரைப் பார்த்து சிரிக்கிறது?

ஜனவரி 4, 2010 Posted by | Uncategorized | , | 3 பின்னூட்டங்கள்

The Great Global food and financial crisis (Courtesy: USA)!!!

சண்டே இந்தியன் அரிந்தம் சௌத்ரி முதலாளித்துவ பத்திரிக்கையாளரானாலும் பிரச்சினையின் மைய்யமான காரணத்தை மிகவும் நெருங்கியிருக்கிறார். அவர் எழூதிய தலையங்கம் இங்கே –

The Great Global food and financial crisis (Courtesy: USA)!!!

 

I write this editorial in context of the ongoing food and financial crisis that the world is reeling under and coupled with other reasons how the United States had been instrumental in creating this global catastrophe. It all started in March of 2003, when President George Bush’s Administration decided to engage Iraq, to capture those ‘WMDs’ which the Late Saddam Hussain possessed. At that time oil prices were hovering around USD 25-30 per barrel and everything seemed to be in order as far as the economics of energy was concerned. And then Iraq happened, and with it changed the global oil economics forever. Till date, Iraq has cost the US upwards of USD 2 trillion but worse that that has been the effect that Iraq( the second largest oil supplier in the world) went into war, and as a result all supplies got disrupted from there, oil now trades at USD 100 per barrel!! And this cataclysmic rise in oil price has thrown every possible stratesgy and calculation completely out of sync for most nations across the world. As if this in itself was not enough, US, in order to mitigate its ever growing energy needs within the economy, has stepped up its drive towards bio-fuels, by providing illogical subsidies which has completely skewed the food grain productions across the world. In fact on the account of lavish subsidies and supporting regulations, farmers across the world have replaced food grains and have been producing fuel crops for extraction of ethanol. Nothing can be more unfortunate than farmers finding it more feasible to divert corn towards production of ethanol. This, coupled with some other climatic disorders, has created havoc in the agriculture sector pushing food grain prices to record levels. According to world bank, prices of staple food have gone up by a whopping 80% since 2005, pushing more than 100 million people below poverty levels. The effect of diversion of food grains has been so damaging that 21 of 36 African countries have been severely affected, with food riots spreading like wildfire, as reported by FAO. Almost 40 peple have been killed in Cameroon, some 200 and 24 arrested in Burkina Faso and Senegal respectively. Not just in Africa, even Asia has not been spared of this crisis. There are reports that rice in Thailand is currently being sold at more than USD 800 per ton which was around USD 100 not very long ago. While the first thing that the Cuban leader Fidel Castro severely criticized the USA on in his first interaction after his hospitalization was this very fact, Hugo Chavez, the Venezuelan Premier, who has been vehemently opposing the American drive of diverting crops, captures the entire American hypocrisy by saying that – “The FAO(Food and Agricultural Organisation) is soliciting $500 million to alleviate the food crisis, while the United States spends $500 million per day in Iraq”.

 

Well, that is not the only inhuman gift the Americans have given the world recently. Along with food, the other American endowment that the world is grappling with is the financial crisis. This crisis too started brewing almost five years back, coinciding with the American military engagement with Iraq. It was around that time that the US banks found new markets in highly indebted, lower middle income families with very poor credibility. And thus, sheer greed instigated them to recklessly borrow short term funds and lend them to consumers with poor credibility at high interest rates. In fact the entire drive was also supported by the Federal Reserve as it kept reducing the rate, thus pumping further liquidity into the American money markets. This not only prompted consumers and speculators on a buying binge but also escalated real estate prices to crazy levels. This boom not only further indebted the highly indebted American population but also had a contagion effect on the real estate prices across the world. It is reported that, on an average, indebtedness of American house holds has reached a staggering 140%of which mortgage payments comprise of 95% of their incomes( I had first predicted this crisis due to over indebtedness of the Americans in my book The Great Indian Dream pg 131). Though at all times it was known to the Federal Reserve and the established bankers that they have been bothered till the time business was brisk. But then the moment defauld rate started piling the entire house of cards came tumbling down which took away almost USD 7.7 trillion dollars global stock markets. As per Standard and Poors, this year in January alone the global stock markets lost a whopping USD 5.5 trillion dollars on account of the American sub-prime crisis.

 

All in all, the global citizens have always been at receiving end of American capitalism . But then this time they have been paying an exorbitant price for their experiments and his adventurisms. And the bigger concern is that it is going to get worse with time. It doesn’t matter who becomes the next President of US, whether a Republican or a Democrat, given the damage that they have created, it would take years to restore some sense of normalcy in the global ooil and economic order. And unfortunately, by that time it would be time again for some ‘other engagements’ because without that it is impossible for the incumbent American President to seek re-election!!! It is indeed sad that the world is becoming growingly uni-polar and the dominating pole is a pole of shameless inhumanity and greed. Undoubtedly a new world order is the call of the day.

 

Editorial of May 2008 issue – India today and tomorrow By Arindam Chaudhuri

 

மே 9, 2008 Posted by | Uncategorized | , | 2 பின்னூட்டங்கள்

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

செப்ரெம்பர் 30, 2007 Posted by | Uncategorized | 1 பின்னூட்டம்

   

%d bloggers like this: