கார்க்கியின் பார்வையில்

மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.

“சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து வந்ததால், உள்ளங்காலின் தோல் இளகி விட்டிருந்தது. செருப்பிலிருந்து எப்போதும் நழுவிக் கொண்டேயிருந்தது. நனைந்து விட்ட ஜட்டியின் பக்கவாட்டு எலாஸ்டிக் வார் ஒரு கூரான கத்தியைப் போல் உள் தொடையின் இடுக்கில் உராய்ந்து உராந்து புண்ணாக்கி விட்டிருந்தது; அவன் கால்களை அகட்டி வைத்து நடந்து கொண்டே பைக்கைத் தள்ள மிக சிரமப்பட்டான்.

நுரையீரல் காரமான சிகரெட்டுப் புகைக்கு மிகவும் ஏங்கியது. மழை நாளின் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஊரே கம்பளியினுள் முடங்கி விட்டிருந்ததால். கடைகளும் கூட கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களோடு ஒரு கடும் சண்டையைத் துவங்கியிருந்தது. சட்டு சட்டென்று கீழ் வரிசைப் பற்கள் தொடர்ந்து அடித்ததாலோ, இல்லை உச்சந்தலையில் தொடர்ந்து மழைத் துளிகள் இடித்ததாலோ மண்டையின் இரு பக்கமிருந்தும் ஒரு வலி புறப்பட்டு புருவ மத்தியில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டது. ஒரு மாதிரி பச்சை நிறத் திரையொன்று கண்களைச் சூழ்வதை உணர்ந்தான். குளிருக்கு இறுகிப் போயிருந்த அடிவயிற்றின் தசைகள் இடது பக்கமாக இழுத்துக் கொண்டது. இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம்; வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓரமாகப் படுத்து விடலாமா என்று யோசித்தான்… பச்சை நிறம் அடர் பச்சையானது. அதன் அடர்த்தி இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போய் ஆழமான இருளானது.

“என்ன சொல்றீங்க முரளி? தெரிஞ்சு தான் பேசறீங்களா? இது காலண்டர் இயர் எண்ட் தெரியுமில்லே? இன்னும் இந்த க்வாட்டருக்கான பில்லிங் முடியலை. அதுக்குள்ளே பொண்டாட்டி கூப்பிட்டா.. புள்ளைக்கு ஒடம்பு செரியில்லைன்னு… கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமெ பேசறீங்க? அதான் இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க” இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து அந்தக் குரல் எழுந்தது.

கீழே குனிந்தான். தரை கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புக்குக் கீழ் எல்லாமே இருளாய்க் கிடந்தது. மிக அதிசயமாகச் சற்றுத் தொலைவில் ஒரு மெர்குரி விளக்கு சோகையாய் எரிவது புலப்பட்டது. உடலின் எஞ்சிய சக்தியையெல்லாம் திரட்டி வண்டியைத் தள்ளினான். வண்டியின் முன் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடிக்கவும் இவன் அதைக் கீழே விட்டு சரியவும் சரியாக இருந்தது.

“ஹேய்.. தோ பாரேன். யாரோ கீழ விழுந்திடாங்க” எங்கிருந்தோ ஒரு கீச்சுக் குரல் கேட்டது.

“அப்பா.. அப்பா எழுந்திருப்பா யாரோ விழுந்திட்டாங்க” இன்னொரு கீச்சுக் குரல் தொடர்ந்து கேட்டது.

பச்சை நிறம் இருளின் மையத்திலிருந்து உற்பத்தியாகி முழுவதும் வியாபித்தது. சின்னச் சின்னக் குமிழாய் உற்பத்தியானது பச்சை. ஒவ்வொரு குமிழும் பெரிதாகி வெடித்தது. கண்களுக்குள் அடர் பச்சையும் இருளும் மாறி மாறி முன்னும் பின்னுமாய் வந்து கொண்டேயிருந்தது.ஏதேதோ சப்தங்கள் இன்ன திசையென்றில்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஈட்டியைப் போல் வந்து கொண்டேயிருந்தது. அந்த ஈட்டிகளின் மூலமும் இலக்கும் ஒன்றேதானோவென்று முரளி குழம்பிப் போனான்.

“அப்பா…எனக்கு எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் வேணும்ப்பா..” என்று குழைவாய் ஒன்று..

“இந்தாங்க… ஒங்களைத்தானே… தீபாவளி பர்ச்சேசுக்கு என்னிக்குங்க போலாம்?” என்று கொஞ்சலாய் ஒன்று..

“இதப்பாருங்க.. வீட்டு ஓனரம்மா ரொம்பத்தான் பன்றாங்க; நமக்கே நமக்குன்னு ஒரு புறக்கூண்டாச்சும் பாருங்க”என்று அதட்டலாய் ஒன்று…

“முரளி.. இஃப் யு கான்ட்; ப்ளீஸ் க்விட். ப்ளீஸ் புட் இன் யுவர் பேப்பர்ஸ். நத்திங் மோர் டு ஸே..”என்று மிரட்டலாய்…

“அண்ணே… அவங்க அண்ணி வீட்லேர்ந்து அவரோட அண்ணனுக்கு கார் வாங்கித் தந்திருக்காங்கலாம்” என்று எதிர்பார்ப்போடு…

“யு ஆர் அவுட் டேட்டட் முரளி. ஸாரி டு ஸே திஸ். வீ நீட் சம் யெங் ப்ளட்..”  அதட்டலாய்…

“சார் ப்ளீஸ்… ஐ காட் மெனி கமிட்மென்ட்ஸ். ஐ வில் ட்ரை டு கிவ் மை பெஸ்ட்” கெஞ்சலாய்…

“ஓக்கே.. ஸ்பென்ட் சம் எக்ஸ்ட்ரா டைம். புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அக்கௌன்டிங் அப்ளிகேஷனை சேப்புக்கு மாத்திருக்கோம். படிங்க. நிறையப் படிங்க. நிறைய தெரிஞ்சுக்கங்க. வீ டோன்ட் சே யூ டோன்ட் வான்ட். பட் வீ நீட் திங்ஸ் டு மூவ்…” கட்டளையாய்…

முரளி ஒரு குதிரை. அப்படித்தான் அவன் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் ஓட வேண்டும். தங்கைக்காய், மனைவிக்காய், மகனுக்காய், கம்பெனிக்காய்…. உண்பதும் கழிவதும் உறங்குவதும் புணர்வதும் பினங்குவதும் சிரிப்பதும் அழுவதும் கூட ஓட்டத்தின் ஊடாகத்தான். ஓட்டம் வேறு குதிரை வேறல்ல. ஓடாதவொன்றைக் குதிரையல்ல. அவன் அப்படித்தான் நம்பினான். குதிரையின் கடிவாளம் உலகத்தை அதற்கு மறுத்து விடுகிறது. அம்மா, அப்பா, சகோதரி, மனைவி, பிள்ளை, அதிகாரி என்று கணக்கற்ற கடிவாளங்களைக் கட்டியிருந்தான்; அதையொரு வரமென்று நம்பினான்.

குளிர் கொஞ்சம் குறைவது போலிருந்தது. இருளின் நிறம் இப்போது வெளிர் பச்சையானது. மசமசப்பாய் ஏதேதோ உருவங்கள் தோன்றி பக்கவாட்டில் கடிவாளத்தின் மறைப்பில் ஒதுங்குவது தெரிந்தது. ஹோவென்ற கூச்சல் இருபுறமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வேகமான ஓட்டத்திற்கு ஆரவாரித்தது. வேகம் குறைந்த சமயங்களில் எள்ளலாய் ஒலித்தது. முரளி மிக வேகமாய் ஓட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். குடும்பம், சமூகம், கம்பெனி என்று அவன் மேல் மாறி மாறியும் ஒரே நேரத்திலும் சவாரி செய்தார்கள். மறுப்பது பாவம் என்று அவனது சமூகம் அவனுக்கு போதித்தது. காலில் விழுந்தாவது பணி உயர்வு பெற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்.எவன் காலையாவது வாரி விட்டு மேலே செல்வது புத்திசாலித்தனம்.  கடன்பட்டாவது கார் வாங்குவது கெட்டிக்காரத்தனம். அவன் சமூகம் அவனது ஓட்டத்தினூடாய் அவனுக்கு நிறைய போதித்தது.

வாழ்க்கைக்காக ஓட்டமில்லை; ஓட்டத்துக்காகவே வாழ்க்கை. வேலை செய்யவே வாழ்கை. தொண்டூழியம் செய்யவே வாழ்க்கை. முதலாளியின் கருணை பாக்கியம். அந்தக் கருணையை சம்பாதிக்க கொல்ல வேண்டுமா கொல்; திருட வேண்டுமா திருடு; பொய் பேச வேண்டுமா பேசு; காலில் விழ வேண்டுமா விழுந்து நக்கு. முரளி ஒரு குதிரை. எதிர்க் கேள்வி கேட்காமல் ஓடுவதற்கென்றே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை. அவன் சமூகம் அதைச் சாமர்த்தியம் என்றது. ‘பெஸ்ட் வொர்க்கர் அவர்டா’ என்று கொண்டாடியது.

அதற்கு அவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலை அவன் வாழ்க்கை.

பச்சை நிறத்தின் அடர்த்தி இன்னும் லேசானது. முரளிக்குக் கனவொன்று தோன்றியது. அது ஒரு நல்ல காலை. நிறைய கம்பளிப் புழுக்கள் ஓடிக் கொண்டிருக்கிறத.பெரிய கூட்டம். உலகின் கம்பளிப் புழுக்களெல்லாம் ஒன்றாய் திரண்டு விட்டதைப் போன்றதொரு ப்ரும்மாண்டப் பேரணி அது. வேகம் மிக வேகம். கூட்டத்தின் வேகத்திற்கு இணையாய் ஓடாத புழுக்கள் நசுங்கிச் செத்தன. பிணங்களின் மேல் ஏறிச் சென்றன பின் வந்த புழுக்கள். தனது கூட்டிலிருந்து தலை நீட்டிப் பார்க்கும் பச்சை நிறக் கம்பளிப் புழுவொன்று இன்னெதென்று தெரியாமல் அந்தக் கம்பளிக் கூட்டத்தைத் தொடர்கிறது.எங்கே ஓடுகிறோம்; தெரியவில்லை.ஏன் ஓடுகிறோம்; புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தது. அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம். நீண்ட ஓட்டத்தின் இறுதியில் ஒரு மைதானத்தை அந்தப் பேரணி அடைந்தது.

மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய கம்பம் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எல்லா புழுக்களும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தன.எதையோ பிடிக்கப் போகும் வேகம். பச்சை நிறப்புழுவும் அதன் மேல் வெறியோடு ஏறியது. முன்னே சென்ற புழுவைக் கீழே இழுத்துப் போட்டு; பின்னே வரும் புழுவின் தலையில் எட்டி நெம்பி.. சாமர்த்தியம் கொண்ட புழுக்களெல்லாம் அப்படித்தான் ஏறிக் கொண்டிருந்தன. மேலே ஏதோவொன்று இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். நிறைய புழுக்கள் அந்தக் கம்பத்தின் பாதிலேயே பிய்த்தெரியப்பட்டு கீழே விழுந்து செத்துப் போனது.எப்படியோ அடித்துப் பிடித்து உச்சியை அடைந்தது பச்சைப் புழு.

அங்கே கம்பத்தின் உச்சியில்… ஒன்றுமில்லை. வெறுமை. வானம். வெட்டவெளி. வேறெதுவுமில்லை. துணுக்குற்ற பச்சைப் புழு எதைத் தேடி இத்தனை வேகமாய் ஓடினோம் என்று திகைத்து அசைவற்று நின்றது. கம்பத்தின் உச்சியை தொட பின்னாலேயே வந்த அடுத்த புழு தனக்கான இடத்தைப் பிடிக்க, அசைவற்று நின்ற பச்சைப் புழுவை கம்பத்தினின்று இழுத்துக் கீழே எறிந்து விட்டு மேலே வந்தது. கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தது பச்சைப் புழு. பட்டென்று விழித்தான் முரளி.

“அம்மா இங்க பாரேன் இவரு முழிச்சுக் கிட்டாரு” கீச்சுக் குரல். சின்னப் பெண்.எண்ணை காணாத தலை முடி. முரளி மல்லாந்து படுத்திருந்தான். கீழே வழவழப்பான ப்ளாஸ்டிக் கித்தான் விரிக்கப்பட்டிருந்தது. தலைக்கு நேர் மேலே, மூன்றடி உயரத்தில் மரப்பலகையால் அடித்த கூரை தெரிந்தது. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டிரண்டு சைக்கிள் டயர்கள் தெரிந்தது. முரளி குழம்பினான். சுற்றிலும் தெரிந்த காட்சிகளில் லேசக பச்சை நிறம் ஒரு பாசம் போலப் படிந்திருந்தது. எழுந்து கொள்ள முயன்றான். முடியவில்லை

அது மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர சைக்கிள் வண்டி என்பது புரிந்தது. அதன் கீழே ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து ஒரு சின்னக் குடும்பம் ஒண்டிக் கொண்டிருந்தது. முன் பின் டயர்களின் இடையே வெள்ளை நிற சிமென்டு சாக்குப் பைகளில் துணிமணிகள் நிறைத்து செருகப்பட்டிருந்தது. கால்மாட்டில் ஒரு மண்ணென்னை ஸ்டவ்வும் மிகச் சில ஈயப்பாத்திரங்களும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இடதில் ஒரு சிருவனும், வலதில் ஒரு சிருமியும் குந்தவைத்திருந்தனர்.  அந்த வண்டியின் பின்பக்கமிருந்து ஹேன்டில் வரை மேல் புறமாக ஒரு ப்ளாஸ்டிக் கித்தான் மறைத்து நின்றது. முன் சக்கரத்தின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி குறுகி அமர்ந்திருந்தார்.  

முன் சக்கரத்தின் இடைவெளியில் கித்தான் கொஞ்சமாகப் பிளந்திருந்தது. அது வாயில். அதன் ஊடாகப் பார்த்த போது முரளியின் பைக் தெரிந்தது. முரளிக்கு இப்போது நினைவு தெளிவானது. கடைசியாக விழுந்த இடத்தின் அருகே இருந்த நடைமேடையின் மேலே நிறுத்தப்பட்டிருந்த பார வண்டியின் கீழே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.

” என்னா சார் பேசறீங்க. பாரு சார் எத்தினி மழ பேஞ்சிருக்கு. எத்தினி தண்ணி தேங்கிக் கிடக்கு. வண்டி வராது சார்”

“முனுசாமி.. இது ரொம்ப அர்ஜென்டு. இப்பயே லோடு போய்ச் சேரலைன்னா எனக்கு பத்தாயிரம் நட்டமாகும். பத்து வருசமா என் கடைக்கு நீ தான் லோடு அடிக்கிறே. இப்ப வர முடியாதுன்னு தகறாரு பண்ணாத. பின்ன நாளைக்கு நான் வேற வண்டி பாக்க வேண்டி இருக்கும். இப்ப நீ கிராக்கி பண்ணிட்டிருந்தா நாளைக்கு சோத்துல மண்ணு விழும். அவ்வளவு தான் சொல்ல முடியும்”

“சார்.. பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் வண்டிக்குக் கீழ தான் ஒண்டிக்கிட்டிருக்காங்க இன்னிக்கு. வண்டி இன்னிக்கு ராவுக்கு வராதுன்னா வராது சார். நீ வேற வண்டி பாக்கனும்னா பாத்துக்க. நான் ஒன்னியும் உன்னெ நம்பிப் பொழைக்கல. உன் கட இல்லேன்னா ஊர்ல எனக்கு ஆயிரம் கட இருக்கு. கைல வண்டி இருக்கு. ஒடம்பில தெம்பு இருக்கு.என்னோட சோறு நீ போட்டதில்ல. நான் ஒழைக்கறேன் நான் திங்கறேன். நீ ஒன்னும் எனக்குப் பிச்ச போடலை. மொதல்ல இப்ப எடத்தை காலி பண்ணு.எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”

தொடர்ந்து கார் இஞ்சின் ஒன்றின் ஆத்திரமான உருமல் கேட்டது. தார்ச் சாலையை ரப்பர் டயர்கள் கீறிப் புறப்படும் ஓசை கேட்டது.  முரளியின் கண்களைப் பீடித்திருந்த பச்சை நிறம் சட்டென்று மறைந்து ஒரு வெளிச்சம் பரவியது. பார்வையின் இரு பக்கத்தையும் மறைத்து நின்ற ஏதோவொன்று சட்டென்று விலகியது போல் இருந்தது.

குறிப்பு : இக்கதையின் நாயகன் முரளி இல்லை.

திசெம்பர் 23, 2010 Posted by | புனைவு, புனைவு முயற்சி, culture, short story | 11 பின்னூட்டங்கள்

இன்னும் கொஞ்சம் வாழ்க்கை..!

அது நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு மாதமும் ஏழாம் தேதி ஒரு குட்டி தீபாவளி
போல இருக்கும். மில்லில் அன்றைக்குத் தான் சம்பளம் கொடுப்பார்கள். அன்றைக்கு மட்டும் வீட்டுக்கு வரும் போது அப்பா எனக்கும்  அண்ணாவுக்கும் லாலா கடையில் இருந்து பலகாரங்கள் வாங்கி வருவார். அம்மா வீட்டில் ஒரு பழைய உஷா தையல் மிஷின் ஒன்றை வைத்து தெரிந்தவர்களுக்கு கிழிந்த பழைய துணியெல்லாம் தைத்துக் கொடுப்பாள். தையல் மிசின் இருக்கும் மூலையிலேயே பக்கத்து திட்டில் ஒரு பழுப்பேரிய டப்பா இருக்கும். அதில் அம்மாவுக்குக் கிடைக்கும் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நாணயங்களைப் போட்டு வருவாள். அது முழுக்க நிரம்பி வழியும் மாதத்தில் எனக்கும் அண்ணாவுக்கும் ஆளுக்கு பத்து ரூபாய்கள் கிடைக்கும்.

ஏழாம் தேதிக்கு அடுத்து வரும் சனிக்கிழமை எனக்கு இன்னுமொரு கொண்டாட்டமான நாள். அப்பாவுக்கு வார லீவு நாள் சனிக்கிழமை தான்.
சிலவுக் கணக்கை எழுதிய பின் அந்த மாதத்துக்கான மளிகை சாமான் வாங்கும் நாள் தான் அடுத்து வரும் முதல் சனிக்கிழமை. பொருட்களை
பிடித்துக் கொள்ள என்னையும் சைக்கிளின் பின்னே அமர வைத்து கூட்டிப் போவார். டவுனைப் பார்க்கப் போகும் சந்தோசத்தை விட எனக்கு நாங்கள் பொருள் வாங்கப் போகும் கடையில் கணக்கெழுதும் கணேசனைப் பார்க்கப் போகும் சந்தோசம் தான் தூக்கலாக இருக்கும்.

எங்கள் வீடு தாராபுரம் தாண்டி வெள்ளகோயில் போகும் வழியில் மூலனூரில் இருந்தது. பக்கத்தில் ஓரளவுக்கு பெரிய டவுன் என்றால் அது தாராபுரம் தான். தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து நீங்கள் திருப்பூர் செல்லும் வழியில் ஒரு இரண்டு கிலோ மீட்டர் வந்தால் ஒரு ரவுண்டானா
இருக்கும். அதில் வலது புறம் திரும்பி ஒரு இரண்டு கிலோ மீட்டர் சென்றால் ஒரு நால் ரோடு சந்திப்பு வரும் – அந்த இடத்திற்கு பூக்கடை
நிறுத்தம் என்று பெயர். அதில் இடது புறம் திரும்பி ஒரு கிலோ மீட்டர் சென்றால் இடது புறம் கரூர் வைசியா பேங்கிற்கு நேர் எதிரே வலது புறத்தில் பால் பாண்டி டிரேடர்ஸ் இருக்கும்.

பதினைந்து வருடத்திற்கு முன் ஊக்கு முதல் சகல மளிகை சாமானும் விற்கும் பெரிய கடை அந்த வட்டாரத்திலேயே பால் பாண்டி டிரேடர்ஸ் தான். எந்த நேரமும் ஐம்பதுக்கும் குறையாமல் வாடிக்கையாளர்கள் நின்று கொண்டிருப்பார்கள். போனதும் கணேசனிடம் முதலில் பில் போட வேண்டும். பில் என்பது கையால் ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுக்கப்படும் சிட்டை தான். அந்த சிட்டையின் கடைசியில் மொத்த தொகை போட்டிருப்பார்கள். அதை கல்லாவில் அண்ணாச்சியிடம் கட்ட வேண்டும். பின் அந்த பில்லின் நீளத்தைப் பொருத்து அதை உள்ளே வேலை செய்யும் கடைப் பையனிடம் கணக்கெழுதிய கணேசனே கொடுப்பார். பொருட்கள் கட்டப்பட்டு சரிபார்க்கப் படும் வரையில் கல்லாவுக்கு நேர் எதிராக போடப் பட்டிருக்கும் அரிசி மூடைகளில் அப்பா அமர்ந்திருப்பார். கணேசன் என்னைக் கூப்பிட்டு தன் அருகேயே அமர வைத்துக் கொள்வார்.

அரிசி மூடைகள் வரிசையாக வைத்திருக்கும் பகுதிக்கு நேர் பின்னே தான் கணேசன் அமர்ந்து பில் போட்டுக் கொண்டிருப்பர். அங்கேயிருந்து
அவரைத் தெளிவாக கவனிக்க முடியும். கனேசனைப் பார்த்தவர்கள் முதலில் ஆச்சர்யப்படுவார்கள். அவருக்கு காதும் மூளையும் தலையில்
இருக்கிறதா இல்லை கைகளில் இருக்கிறதா என்று ஒரு குழப்பம் வரும்.

“அண்ணாச்சி, கொள்ளு ஒரு கிலோ, து.பருப்பு ரெண்டுகிலோ, க.எண்ணை அஞ்சு லிட்டர்,. மஞ்சள் கால் கிலோ, ச.மாவு ரெண்டு கிலோ, ம.மாவு
ரெண்டு கிலோ, வெ.ரவை ரெண்டு கிலோ, கோ.ரவை ஒரு கிலோ, ப.பருப்பு ஒரு கிலோ, ஊதுபத்தி ரெண்டு ரோலு, ஒட்டகம் மார்க் அரப்பு அரை கிலோ, புலி மார்க் சீயக்கா அரை கிலோ, ஐய்யார் இருவது சின்ன சிப்பம், பச்சரிசி ரெண்டு கிலோ, உளுந்து ஒரு கிலோ, கடுகு அம்பது கிராம், கேரளா குண்டு மிளகு நூறு கிராம், சீரகம் நூறு கிராம், மல்லி நூறு கிராம், புளி ஒரு கிலோ, கல் உப்பு அரை கிலோ, சக்கரை மூணு கிலோ, திரி ரோஸ் டீ தூள் நூறு கிராம், கண்ணன் காபி தூல் நூறு கிராம், சூப்பர் மேக்ஸ் பிளேடு நாலு, ரெண்டு நட்ராஜ் பென்சில்.. அப்புறம் அவ்வளது தான் – சீக்கிரம் பில்லப் போடுங்க” மாத சம்பளக்காரர்கள் இப்படி தாறுமாறாக ஒப்பித்து விட்டு அவசரப் பட்டுக் கொண்டு நிற்பார்கள்.

அவர் ஒவ்வொரு பொருளின் பெயரையும் அளவையும் சொல்லி முடித்த பிண்ண நொடியில் அது எழுதப்பட்டு அதற்கான விலையும் எழுதப்பட்டு விடும். இந்த மளிகைப் பொருட்கள் ஒவ்வொரு நாளும் விலை ஏறி இறங்கும். காலையில் அண்ணாச்சி அன்றைய விலை நிலவரத்தை வரிசையாக கிலோவுக்கு இத்தனை என்று சொல்லுவதை கனேசன் ஒரு டீயை உறிஞ்சியபடி கேட்டுக் கொண்டிருப்பார். பின்னர் வாடிக்கையாளர்கள் பல்வேறு அளவைகளில் சொல்வதை அவர் சொல்லி முடிக்கும் முன்னரே மனதுக்குள் கூட்டி, கழித்து, பெருக்கி, வகுத்து விலையை வரிசையாக எழுதி, கீழே கோடு கிழித்த அடுத்த பத்து நொடிகளில் வரிசையாக எல்லா தொகையையும் கூட்டி மொத்த தொகையை எழுதி விடுவார். வேலை செய்யும் அனுபவம் கொண்ட பையனிடம் கொடுக்க வேண்டும். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பையனிடம் சின்ன பில்லை கொடுக்க வேண்டும். அவசரம் அல்லாத பெரிய பில்லையும் கூட புதிய பையனுக்கு அவ்வப்போது கொடுக்க வேண்டும் – அவனும் பயிற்சி பெற்று தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா.

இந்த நுணுக்கமான அவதானிப்புகள் எல்லாம் பில்லை எழுதி, பொருளுக்குண்டான விலையை அதன் அளவுக்கேற்ப எழுதி, அதன் மொத்த மதிப்பை கூட்டி எழுதும் அந்த நேரத்திற்குள்ளேயே முடிந்து விடும். இதையெல்லாம் கை எழுதிக் கொண்டிருக்கும் போதே வாய் விசாரிப்புகளில் இறங்கியிருக்கும்.

“என்ன அண்ணாச்சி, பையன காலேஜுல சேத்துட்டியளா. எத்தன ரூவா கட்டினிய?”

“அத ஏங்க கேக்கறீங்க.. வாங்குன ஒன்னார்ருவா மார்க்குக்கு இன்சினீருக்குப் படிக்கனுமாம் தொரைக்கு. பணம் பொரட்டத்தான் இப்போ நாயா அலைஞ்சிட்டு இருக்கேன்” அந்த நடுத்தர வயது சலிப்புக்கு உடனே ஆறுதல் வரும்..

“விடுங்கண்ணாச்சி.. நாம தான் படிக்க வைக்க ஆளில்லாம இன்னிக்கு லோல்படுறோம்.. நம்ம பிளையளாவது படிக்கட்டுமே.. காச என்ன முடிஞ்சா
கொண்டு போறம்… இன்னாங்க பில்ல பிடிங்க. காச அங்க கல்லாவுல கட்டுங்க” சிட்டையை அவரிடம் கொடுத்து விட்டு உள்ளே திரும்பி “ஏல..
செல்லதொர இங்க வால. அண்ணாச்சிக்கு இந்த லிஸ்ட்ட வெரசாக் கட்டித் தா. ஒரு கலரு ஒடச்சி கொடு – நீங்க அந்தா அந்த மூடைல
இருங்கண்ணாச்சி.. பய சீக்கிரமா போட்டுத் தருவான்”

அத்தனை கவனமான வேலைக்கு இடையிலும், விசாரிப்புகளுக்கு இடையிலும், உள்ளே யார் சும்மா நிற்கிறார்கள் என்கிற கவனிப்புகளுக்கு
இடையிலும், எந்நேரமும் அமர்ந்திருப்பதால் ஏற்படும் முதுகு வலிக்கு இடையிலும், முகத்தில் நிரந்தரமாய் ஒரு சிரிப்பு தேங்கியிருக்கும். முகத்தின் அமைப்பே சிரிப்பது போல் தானோ என்று நான் சந்தேகப் பட்டதும் உண்டு. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிள்ளைகளை கணேசன் அழைத்து தன்னருகே உட்கார வைத்துக் கொள்வார். கடையில் கூட்டம் குறைவாய் இருக்கும் நாளில் ஏதாவது பில்லை என்னிடம் கொடுத்து மொத்த தொகையை கூட்டித் தரச் சொல்வார். நான் திணருவதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அதே கணக்கை தனது மின்னல் வேக பாணியில் போட்டு விட்டு ‘நாங்கெல்லாம் அந்தக் கால எட்டாவதாக்கும்; அந்தக்கால எட்டாவதும் இந்தக் கால எம்மேயும் ஒன்னுதான் தெரியுமாடே’ என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்வார்.

என்னிடம் அவருக்கு தனி அக்கரை உண்டு. நான் அப்பாவோடு போகும் போதெல்லாம் தனியே என்னிடம் விசாரிப்பார். அவரின் சட்டையின் மேல்
பை பெரிதாக இருக்கும் அதில் நிறைய ஆரஞ்சு மிட்டாய்கள் இருக்கும். அதில் கையை விட்டு அள்ளி எத்தனை வருகிறதோ அத்தனையும் எனக்கே கொடுப்பார். மளிகைக் கடைகளில் ரோஜா பாக்கு, பான் பராக் போன்ற லாகிரி வஸ்துக்களை மொத்தமாக வாங்க ஊக்குவிக்கும் பொருட்டு
அதன் முகவர்கள் சின்னச் சின்னதாக பரிசுப் பொருட்கள் தருவார்கள். நீங்கள் இந்த முப்பது நாப்பது ரூபாய் விலையில் விற்கும் டிஜிடல் வாட்ச்சை எல்லாம் பார்த்திருக்க மாட்டீர்கள். இப்போதெல்லாம் அது போன்ற வாட்சுகளே அனேகமாக கிடைப்பதில்லை. முன்பு அது போன்ற வாட்சுகளை சும்மா இலவச இணைப்பாக கொடுப்பார்கள். அதுவும் ஓரிரண்டு மாதத்துக்கு ஓடும். பச்சை மஞ்சள் நீலம் ரோஸ் என்று கலர் கலரான ப்ளோரஸண்ட் நிற வாரில் மிக்கி மௌஸ், டாம் & ஜெர்ரி படம் எல்லாம் போட்டிருக்கும்.

கணேசன் வேலை செய்வதைப் பார்த்து எனக்கும் என்றாவது ஒரு நாள் கணக்கெழுதும் வேலை பார்க்க வேண்டும் என்று ஆசைப் பட்ட காலம்
ஒன்று இருந்தது. பத்தாவதற்குப் பின் அப்பா என்னை பழனியில் பாலிடெக்னிக் படிக்க அனுப்பி விட்டார். அங்கே பாட்டி தாத்தாவின் வீட்டில்
நின்று படித்துக் கொண்டு ஆறு மாதம் ஒருமுறை தான் மூலனூருக்கு வருவேன். பாலிடெக்னிக் முடிந்து ஒருவழியாக ஒரு கம்ப்யூட்டர் சர்வீஸ்
கம்பெனியில் சேர்ந்தேன். ஒரு ஆறு ஆண்டு காலம் வாழ்கையும் பிழைப்பும் என்னை எனது சொந்த மண்ணில் இருந்து பிய்த்து எடுத்து விட்டது.
வீட்டுக்குப் போகும் நாளில் எல்லாம் அம்மாவோடும் அப்பாவோடும் செலவிடவே நேரம் பத்தாத நிலையில் பால்பாண்டி டிரேடர்சும் அப்பாவோடு சைக்கிளில் போன நினைவுகளும் ஏறக்குறைய மறந்தே விட்டது.

இரண்டாயிரத்து மூன்றாம் வருட வாக்கில் நான் எங்கள் கம்பெனியின் திருப்பூர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது காலையில்
தலைமை அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு –

“சங்கர், உங்களுக்கு ஒரு இன்ஸ்டாலேஷன் செட்யூல் ஆகி இருக்குங்க” மேரியின் அதே வழக்கமான சலிப்பூட்டும் குரல்

“அப்படியா.. கஸ்டமர் அட்ரஸ், காண்டாக்ட் போன் நெம்பர் எல்லாம் சொல்லுங்க மேடம்” அசுவாரசியமாய் காதைக் குடைந்து கொண்டே
நோட் பேடை கையில் எடுத்துக் கொண்டேன்.

“நோட் பண்ணிக்குங்க – எம்.எஸ் பால்பாண்டி டிரேடர்ஸ், பூக்கடை ரோடு, தாராபுரம். காண்டாக்ட் நேம் – மிஸ்டர். பால்பாண்டி

நிமிர்ந்து உட்கார்ந்தேன் – ‘பால்பாண்டி டிரேடர்ஸ்’… தாராபுரம்… உய்ய்ய்ய்…! வாயிலிருந்து உற்சாகமாய் விசில் புறப்பட்டது.

“ஹல்லோ.. சங்கர்..! வாட் ஈஸ் திஸ்???” மேரியின் குரலில் லேசான சூடு.

“இ..இல்ல அ..அயாம்.. சா.. சாரிங்க. அ.. அது வந்து தாராபுரம் எங்க சொந்த ஊரு. அதான் எக்ஸைட்மெண்ட்ல…” திக்கித் திக்கி வந்து விழுந்தது
வார்த்தைகள்.

“ம்ம்ம்.. இட்ஸ் ஓக்கே. டேக் கேர் ஆஃப் த இன்ஸ்டலேஷன். முடிச்சிட்டு ரிப்போர்ட் அனுப்புங்க. பை” தட்டென்று போனை அறைந்து சாத்தினாள்.

என்ன தான் நமக்கு தொழில்நுட்பங்கள் நிறைய தெரிந்திருந்தாலும், வாழ்க்கையில் ஒரு நிலைக்கு உயர்ந்திருந்தாலும் அதை பக்கத்திலிருந்து
பார்க்க ஆட்களிலில்லாதது ஒரு கொடுமை. நமது திறனை நாம் அயல் ஆட்களிடம் நிரூபிப்பதில் இருக்கும் பெருமிதத்தை விட நமக்குத் தெரிந்த
நபர்களின் முன் அதை காட்டுவதில் ஒரு அல்ப திருப்தி இருப்பதை கவனித்திருக்கிறீர்களா. கடைக்குப் போன என்னைப் பார்த்து அடையாளம்
தெரியாமல் சீட்டில் இருந்து எழுந்த அண்ணாச்சி ‘வாங்க சார். உட்காருங்க சார். டீ குடிக்கறீங்களா சார்’ என்று குழைந்த போது எனக்கு அதே அல்ப திருப்தி ஒரு முறை எட்டிப் பார்த்து விட்டுப் போனது.

“என்ன அண்ணாச்சி என்னை அடையாளம் தெரியலையா?” கையில் இருந்த டூல்ஸ் பேக்கை அவர் டேபிளின் மேல் வைத்துக் கொண்டே கேட்டேன்.

“யாரு…. அட! நம்ம மணி மவனா நீ. என்னப்பா அளே அடையாளம் தெரியாம மாறிட்டயே. டவுசர போட்டு மூக்குல ஒழுக்கிட்டு வந்து நிப்பா நீ..
இப்ப இஞ்சினியரா..”

அண்ணாச்சி பேசிக் கொண்டிருக்க திரும்பிப் பார்த்தேன். அதே இடத்தில் கணேசன். கொஞ்சம் நரை முடிகள் வாங்கியிருந்தார். கண்ணில் ஒரு திக்கான கண்ணாடி ஏறியிருந்தது. வழக்கமான அவரது டேபிளுக்கு பதில் புதிதாக ஒரு கம்ப்யூட்டர் டேபிள் இருந்தது. அதன் அருகிலேயே இரண்டு அட்டைப் பெட்டிகள் – மானிட்டரும், சி.பி.யுவும்.

“சரி அண்ணாச்சி.. நான் சீக்கிரம் சிஸ்டத்த இன்ஸ்டால் பண்ணிடறேன்” திரும்பிப் பார்க்காமல் அவருக்கு பதில் சொல்லிக் கொண்டே கணேசனின்
இடத்திற்குச் சென்றேன்.

என்றுமில்லாத அதிசயமாய் கணேசன் பதட்டமாய் இருந்தார். என்னை முதலில் ஓரிரு வினாடிகள் வெறுமையாய்ப் பார்த்தார். மெதுவாய்
புன்னகைத்தார். அவரது கைகள் அந்த அழுக்கேறிய, கூர்மையான முனைகள் மழுங்கி ஒரு நீள் வட்ட வடிவத்துக்கே வந்து விட்ட – மழுங்கிப் போன
கிளிப்பில் கத்தையாய் சிட்டைகளை லூசாக பற்றியிருந்த – கார்ட் போர்டு அட்டையை இறுக்கமாக பிடித்திருந்தது. அதில் லேசாய் நடுக்கம் இருந்தது. அது முதுமை காரணமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.

“என்னண்ணே… சவுக்கியமா இருக்கீங்களா”

அந்த அட்டையை டேபிளின் மேல் வைத்தார். எழுந்து நின்று அவரை விட உயரமாய் வளர்ந்து விட்ட என் தோள்களை இரு கைகளாலும்
பற்றினார். எனது இரு புஜங்களின் வழியே அவர் உள்ளங்கையைத் தேய்த்துக் கொண்டே வந்து எனது இரு மணிக்கட்டுகளையும் பற்றினார்.
இடது கையில் புதிதாய் நான் வாங்கிக் கட்டியிருந்த டைட்டன் வாட்சை பார்த்தார். ஒரு பெருமிதமான புன்னகை அவரது முகத்தில் எழுந்தது.

“நல்லா இருக்கேன் தம்பி.. ” ஏதோ கேட்க வேண்டும் போல் அவரது முகம் என்னை எதிர்பார்த்தது.

“என்னண்ணே..” என்றேன் அவரது பழுப்பேறிய கண்களுக்குள் பார்த்துக் கொண்டே.

“அ..அது.. வ..வந்து…”

“சொல்லுங்கண்ணே”

“இந்தக் கம்பியூட்டரை எத்தனை நாளிலே படிக்க முடியும் தம்பி” அவரது கண்கள் என் முகத்திலிருந்து விலகி உள்ளே அண்ணாச்சியை ஒரு முறை
பார்த்தது.

“ஆப்பரேட் பண்ண எப்படியும் அடிப்படை தெரிஞ்சிருக்கணும்ணே. எப்படியும் ஆறு மாசமோ இல்லை ஒரு வருசமோ ஆகலாம் – ஆர்வத்தைப்
பொருத்து” என்றேன். எனக்கு அந்தக் கேள்வியின் பொருள் புரியவில்லை.

அவர் முகத்தில் ஒரு ஆயாசம் தோன்றியது. எனது மணிக்கட்டுகளை விடுவித்தவர். அவர் சீட்டில் அமர்ந்தார். அந்த சிட்டை பேடை ஏக்கத்துடன்
பற்றிக் கொண்டார்.

அன்று நான் அந்த சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்யும் போது கணேசன் கம்ப்யூட்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். இன்ஸ்டலேசன் முடிந்து
டேலி சாப்ட்வேரை திறந்து எப்படி கூட்டல் கழித்தல் கணக்கு போட வேண்டும், வரவு செலவு கணக்கை நிர்வகிப்பது என்பது எப்படி என்பதை
நான் விளக்கிக் கொண்டிருந்த போது அவரது கண்கள் ஒரு பசியெடுத்த புலியின் கூண்டுக்குள் தவறி விழுந்து விட்ட மானின் கண்களைப் போல
அலைபாய்ந்து கொண்டிருந்தது. வேலை முடிந்து கிளம்பும் போது கணேசன் என் தோளைப் பிடித்து இருத்தினார். அவரது மேல் சட்டை பாக்கெட்டில் கை விட்டு சில ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி எனது கையில் திணித்தார்.

“என்ன.. கணேசா.. இன்னும் ரெண்டு நாள்ல அந்த கம்பியூட்டர கத்துகிடுவியாலே… அந்த அட்டைய தூக்கி தூர போட்டுட்டு இனிம கம்பியூட்டர்ல வேல பாக்க கத்துக்கல” அண்ணாச்சி உற்சாகமாய் கணேசனிடம் சொல்லிக் கொன்டிருந்த போது நான் திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து கிளம்பினேன். பஸ்ஸில் தாராபுரத்திலிருந்து மூலனூர் வரும் வரையில் எனக்கு கணேசனின் கண்களே நினைவிலாடியது. வில்லுப்பாட்டு வித்வானை பாப் சாங் பாட நிர்பந்திப்பது போல் இருந்து அந்த சூழ்நிலை.

அதற்குப் பின் எனது பணிச்சூழல் என்னை இந்தியாவின் பரப்பெங்கும் மேற்கும்-கிழக்குமாய், வடக்கும்-தெற்குமாய் அலைக்கழித்தது. எத்தனையோ
ஊர்கள், எத்தனையோ கணேசன்கள், எத்தனையோ அனுபவங்கள்… போன மாதம் இரண்டு வார லீவில் மீண்டும் ஊருக்குப் போயிருந்தேன். எனோ தெரியவில்லை இப்போதெல்லாம் எனக்கு தாராபுரத்தின் நினைவும், கணேசனின் நினைவும் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருக்கிறது.
அவரைப் போய் சந்திக்கலாம் என்று கிளம்பினேன்.

இந்த ஏழு வருடத்தில் தாராபுரம் பெரிதாக மாறவேயில்லை. சாலைகள் மட்டும் கொஞ்சம் அகலமாகியிருந்தது. பால்பாண்டி டிரேடர்ஸ் கூட அதிகம் மாறவில்லை. கல்லாவில் அண்ணாச்சியின் சாடையில் ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே அண்ணாச்சியின் புகைப்படம்
ஒன்று மாலையோடு தொங்கிக் கொண்டிருந்தது. எனது பார்வை கணேசனின் இடத்திற்குச் சென்றது – அங்கே அவர் இல்லை. அந்த டேபிளில் – நான் இன்ஸ்டால் செய்த சிஸ்டத்தின் முன் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் முகத்தில் கணேசனிடம் நான் முன்பு எப்போதும் பார்க்கும் வாஞ்சை இல்லை. டென்ஷனாக இருந்தான். டேலியில் ஏதோ கோளாரு போல அந்த மங்கிய ஸ்க்ரீனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். வாடிக்கையாளர்கள் கூட்டம் முன்பைப் போல இல்லை. முன்பு இருந்ததை விட பாதி தான் இருந்தது.

“என்ன சார் வேணும்?” கல்லாவில் இருந்த இளைஞன் கேட்டான்.

“இல்ல.. இங்க எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர்… கணேசன்னு பேரு.. அவரைப் பார்க்கலாம்னு தான் வந்தேன்…” சுற்றிலும் பார்வையை ஓட்டிக்
கொண்டே சொன்னேன்.

“ஓ… அவரா.. இருக்காரே.. உள்ள பாக்கிங் செக்சனில் இருக்கார். வரச் சொல்லவா..”

“இல்லங்க. வேணாம். நானே போய் பார்த்துக்கிறேன்”

கணேசன் கிழண்டு போயிருந்தார். நிறைய மெலிந்திருந்தார். கண்ணாடி பழுப்பேறியிருந்தது. அழுக்கேறிய வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி நடுங்கும் கைகளால் ஏதோ பருப்பை பொட்டலமாக மடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். விரல்களின் இடுக்கில் அந்த பொட்டலம் விழ முயற்சித்துக் கொண்டிருந்தது. நான் நேரே அவர் முன் போய் நின்றேன். ஒரு சின்ன போராட்டத்துக்குப் பின் சனல் கயிரால் ஒருவழியாக பொட்டலத்தைக் கட்டி முடித்தவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

“யேய்.. சங்கரு….என்னப்பா ஆளே அடையாளம் தெரியாம மாறிட்டே” அவரது கை அனிச்சையாக அவரது சட்டை பாக்கெட்டுக்குச் சென்றது.
காலியான பாக்கெட்டைத் தடவி விட்டு ஏமாற்றமாய் கீழிறங்கியது.

“அது… அண்ணாச்சி மவன் கொஞ்சம் வெறைப்பான ஆளு. மிட்டாய்க்கெல்லாம் சம்பளத்துல பிடிச்சிக்கிறாரு..” வரட்சியாய் சிரித்துக் கொண்டே சொன்னார்.

“பரவாயில்லண்ணே… வாங்க டீ சாப்பிடுவோமா”

“சரி வா..”

வெளியேறும் போது அவர் அந்த பய்யனைத் திரும்பிப் பார்த்தார் – அவன் இன்னும் டேலியோடு போராடிக் கொண்டிருந்தான். நமுட்டுச் சிரிப்போடு
என்னைப் பார்த்தார். அதில் ஏதோவொரு செய்தி இருந்தது – எனக்குப் புரியவில்லை. எனக்கு மனம் கணத்துக் கிடந்தது. ஒரு காலத்தில் இதே கடையில் கணக்கராய் இருந்தவர்.. இன்று இதே கடையில் தொழில் கற்றுக் கொள்ள வந்த சின்னப் பயல்களோடு சேர்ந்து பொட்டலம் மடித்துக் கொண்டிருக்கிறார். கால மாற்றம் தான் என்றாலும்.. நானும் கூட அவரின் இந்த நிலைக்கு காரணமாய் இருந்துள்ளேன் என்பது எனக்கு உறுத்தலாய் இருந்தது. எத்தனை கணேசன்களின் கண்ணியத்திற்கும் கவுரவத்திற்கும் நான் உலைவைத்திருப்பேனோ என்ற கவலை என்னை வாட்டியது. நாங்கள் சாலையைக் கடந்து எதிரே கரூர் வைசியா பேங்கை ஒட்டி இருந்த பாய் கடைக்குப் போனோம்.

“என்னண்ணே இந்த வயசுக்கப்புறம் உங்கள பொட்டலம் மடிக்க விட்டுட்டாங்களே” எனக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது.

“அதனால என்னப்பா… அதுவும் ஒரு வேலை தானே” அவர் டீயை ஊதிக் குடிப்பதில் மும்முரமாய் இருந்தார்.

“இல்லண்ணே.. இதே கடைல நீங்க மதிப்பா சட்ட மடிப்புக் கலையாம கணக்கெழுதிட்டு இருந்தீங்க.. இப்ப அதே கடைல சின்னப் பசங்களோட
நின்னு வேல பாக்கீங்களே.. அதுக்கு நானும் ஏதோவொரு வகையில காரணமா போனது கஸ்டமா இருக்குண்ணே”

டீ தம்ளரை வைத்தார். நிமிர்ந்து என்னைப் பார்த்தார். லேசாக சிரித்தார். அது என்னை சீண்டுவது போலிருந்தது.

“என்னண்ணே.. இப்படிச் சிரிக்கிறீங்க”

“பின்ன சிரிக்காம என்னப்பா… ஏதோ பழைய சிவாஜி படத்துல வரும் ரங்காராவ் நிலமையில நான் இருக்கதா நினைச்சியா நீ.. அது என்ன
சொல்லுவாங்க… ஆங்! வாழ்ந்து கெட்ட மாதிரி. வாழ்ந்தா தானே கெட முடியும். ம்ம்ம்…. அன்னிக்கு நீ இந்த கம்பியூட்டர போட்டுக் குடுத்துட்டு
போன நாள்ல எனக்கு ரொம்ப கஸ்டமாத் தான் இருந்தது. எத்தனையோ வருசமா இதே கடைல கணக்கெழுதிருக்கேன்… நான் படிச்ச படிப்பு வேற.. நான் போட்ட கணக்கு வேற… இது புதுசா வந்தது. எனக்கும் பயம் தான். ரெண்டு நா டயம் குடுத்தாரு அண்ணாச்சி. எனக்கு ஒரு எழவும் புரியலை. புரிஞ்சிக்கிடற வயசும் தாண்டியாச்சி. கொஞ்சம் கூட யோசிக்காம தூக்கி பொட்டலம் மடிக்க போட்டாரு – சம்பளத்தயும் அதுக்கு தக்க கம்மி பண்ணிட்டாரு. எத்தனையோ வருசம் கூடவே வேலை பாத்த கடைப் பய்யன்களே ஒருத்தனும் ஏன்னு கேக்க வரல…”

டீ தம்ளரை கையிலெடுத்தவர் ‘சர்க்’ என்று உறிஞ்சி அதன் சுவையைக் கண் மூடி இரசித்தார். பின் தொடர்ந்தார்..

“கூட நின்னு ஏன்னு நியாயம் கேக்க நாதியில்லைங்கறது தான் எதார்த்தம். இந்த வயசுக்கப்புறம் என்னாலும் தனியா நின்று ரோசம் காட்ட முடியலை. வச்சிக் காப்பாத்த புள்ளைங்களும் இல்லை. ஏத்துக்கிட்டேன். வேற வழியில்லாம ஏத்துக்கிட்டேன். ஆனா.. எனக்கு இன்னிக்கு நடந்தது தான் எனக்குப் பதிலா புதுசா வந்திருக்கவனுக்கும் நடக்கும். சிட்டைல கணக்கெழுதிட்டு இருந்த என்னைக் கம்பியூட்டர் வந்து தூக்கி வீசிச்சி. கம்பியூட்டர்ல வேல பாக்கவன வேற எதுனா அதை விட பெருசா ஒன்னு வந்து தூக்கி வீசும். எனக்கு இந்தப் பிள்ளைய பாத்தா பாவமா இருக்கும். நான் நின்ன மேனிக்கு கீழ விழுந்தவன் – லேசாத் தான் அடிபட்டுச்சி. ஆனா.. ஒசரத்துல நின்னு கீழ விழுந்தா? அன்னிக்கும் ஏன்னு கேக்க நாதியத்து தான் நிக்கனும். நாமெல்லாம் கூலிக்காரங்க சங்கரு… நான் சின்னக் கூலிக்காரன்.. நீ பெரிய கூலிக்காரன். கூலிக்குத் தக்க அடி தான் விழும் தம்பி”

“நம்ம வீடுகள்ல பழைய பொருளைப் புது பொருள் வந்து மாத்தி வைக்கும். அதுக்கெல்லாம் உயிர் இல்லை தம்பி. ஆனா நமக்கு உயிர் இருக்கு.
குடும்பம் இருக்கு. நாம் கூட்டுக்குத் திரும்பினா வாயைப் பிளந்துகிட்டு குஞ்சுகள் காத்துக் கிடக்கும். நாமும் பழசாவோம்.. அறிவு பழசாகும்.. புதுசா
ஏதோவொன்னு வந்து நிக்கும். ஆனா.. புதுசை நாம் கத்துக்கற அளவுக்கு முதலாளிங்க யாரும் நமக்கு நேரம் தர்றதில்ல.. வேலை செய்யற நாள்ல கசக்கி பிழிஞ்சு நம்மோட சாரெல்லாத்தையும் உறிஞ்சிட்டு சக்கையா துப்பிடறாங்க. நாமெல்லாம் தனித்தனியா நிக்கறோம். தனித்தனியா
தோக்கிறோம். தனித்தனியா விழுந்திடறோம். பக்கத்தில் நின்னவன் விழும் போது நாமும் விழப்போறம் – நம்மையும் தள்ளி விடப்போறான்னு
புரிஞ்சிக்கிடறதில்லை.. தனித்தனியான மாடுகளை நாளுக்கொன்னா நரி மெஞ்ச மாதிரி ஆகுது நம்ம நிலமை” பேசி முடித்து விட்டு மிச்சமிருந்த
டீயை உறிஞ்சத் தொடங்கினார்.

எனக்கு பேச்சே எழவில்லை. அந்தக் கணத்தில் – இந்த வாழ்க்கை.. இந்த வசதி.. இந்த நாளின் எனது மேன்மை.. நானே சுயமாய் உருவாக்கியது என்று நினைத்த ஒரு அழகிய மாளிகை.. எல்லாம் என் கண்முன்னே நழுவிச் செல்வது போல் ஒரு காட்சி தோன்றியது. ஐயோ… நான் – நான் எனது இளமையெல்லாம் தொலைந்து.. ஒரு நடுவயதினனாய்.. தனியனாய்  நிற்கிறேன். என் காலடியில் பூமி நழுவிச் செல்கிறது. நான் கிழண்டு
போய் விட்டேன். நான் இனி இளைமை முறுக்குத் தெறிக்கும் பந்தையக் குதிரையல்ல. மட்டக் குதிரை. என்னால் இனி பந்தையத்தில் ஓட முடியாது. யாருக்கும் நான் தேவையில்லை.. என்னைச் சுற்றிலும் புதிதாய்ச் சில குதிரைகள்.. அவை என்னைப் பார்த்து சிரிக்கிறது. உறுதியான பல் வரிசை தெரிய சிரிக்கிறது.. அது – அது.. இல்லை.. அது குதிரைகளல்ல.. அங்கே கம்ப்யூட்டரில் டேலியோடு சண்டை போட்டுக் கொண்டிருந்த இளைஞன் போல் தெரிகிறது. இல்லை அது குதிரைகள் தான்.. இல்லை.. அது அந்தப் பையன் தான். அவன் தோள் மேல் அண்ணாச்சி அமர்ந்திருந்தார். அண்ணாச்சிகள் அமர்ந்திருந்தனர். கையில் ஏதோ உறுத்தியது.. அது.. இன்னொரு கை. அது யாருடைய கையோ.. திரும்பிப் பார்த்தேன். அங்கே என்னைப் போலவே இன்னொரு மட்டக் குதிரை. அதைத் தொடர்ந்து இன்னொன்று. அதைத் தொடர்ந்து இன்னொன்று. நாங்கள் ஓடினோம். அண்ணாச்சியை நோக்கி ஓடினோம்… அண்ணாச்சிகளை நோக்கி ஓடினோம்…

“தம்பி.. தம்பி..” கணேசன் என் தோளை உலுக்கிக் கொண்டிருந்தார். “என்னப்பா டீ கிளாஸைக் கீழ போட்டுட்டியே. ஒடம்பு சரியில்லையா?”

“இல்லை.. ஒன்னுமில்லை” முகம் முழுக்க வேர்த்திருந்தது. “சரி போலாம்”

“ம்ம்.. இந்தா.. இதை வச்சிக்க” அவர் எனது வலது கை உள்ளங்கையில் சில ஆரஞ்சு மிட்டாய்களை வைத்தார். என்னைப் பார்த்து திருப்தியாய் சிரித்தார். அது என்னை உணர வைத்த திருப்தி. திரும்பி கடையை நோக்கி நடந்தார்.

மே 25, 2010 Posted by | culture, short story, Uncategorized | , , , , | 5 பின்னூட்டங்கள்

சண்முகத்தின் கதை..!

“நாயைக் கழுவி நடு வீட்டில வச்சாலும் அது நரகலைத் தான் தேடும்னு சொல்றது சரியாப் போச்சே” சரோஜா கோபாவேசத்தில் கத்தினாள்.

“ஏண்டி உன் ஜாதி என்ன அவன் ஜாதி என்ன. அவனோட போயி… எப்படிடீ.. ச்சீய். சொல்லவே நாக் கூசுது” சரோஜாவின் கோப இலக்கான சுசி பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்னாங்க.. இவ இனிமே நமக்கு வேணாங்க. தொலைச்சி தல முழுகிடலாம். கொண்டு போய் எங்கியாவது விட்டிருங்க. இல்லன்னா விஷம் வச்சிக் கொன்னுடலாம். என்னாங்க.. ஒங்களத்தான். நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன்.. நீங்க பேப்பர படிச்சிட்டு இருக்கீங்க”

“சரோ.. இப்ப என்ன ஊருல நாட்டுல நடக்காதது நடந்து போச்சி. வேணும்னா நான் டாக்டர் கிட்டே கூட்டிப் போய் அபார்ஷன் எதுனா பண்ண முடியுமான்னு பாக்கறேன். அதுக்கு ஏன் கொல்லனும்னு எல்லாம் யோசிக்கறே” சண்முகத்திற்கு தர்ம சங்கடமாய் இருந்தது.

“முடியவே முடியாது. என் மானமே போச்சி. இனிமே பக்கத்து வீட்டுக்காரி என்ன எப்படியெல்லாம் சாடை பேசப் போறான்னு உங்களுக்குப் புரியாது. இந்த அவமானத்துக்கு இவள கொன்னுடலாம். போங்க போயி எதுனா விஷம் வாங்கிட்டு வாங்க” சரோஜா யாரும் சொல்லிக் கேட்கும் நிலையைக் கடந்து விட்டாள்.

“பாவம் சரோ.. நாமே சோறு போட்டு வளர்த்துட்டு எப்படி கொல்ல மனசு வரும். வேணும்னா இவள கொண்டு போய் புளூ கிராஸ் கிட்டே குடுத்துடுவோமா?”

“அது என்ன புளூ கிராசோ என்ன எழவோ. இவ இனிமே இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” கறாராக பேசி விட்டு வெடுக்கென திரும்பிச் சென்று விட்டாள்.

சண்முகத்தை சுசி பரிதாபமாய் பார்த்தாள். காலையில் வந்திருக்க வேண்டிய பிஸ்கட் ஏன் இன்னும் வரவில்லை என்று சுசிக்கு இன்னும் புரியவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். தினத் தந்தியின் பக்கங்களைப் புரட்டினான். “ஆச வச்ச பொண்ணு மேல பாசம் வச்சி மோசம் போன மனமே….” ஆண்டியார் பாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையாவது இந்தாளுக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா என்று தோன்றியது.

கடுப்பாக பேப்பரை மடக்கி ஓரத்தில் போட்டான். எப்.எம் ரேடியோவில் தனுஷ் உருகிக் கொண்டிருந்தார் – “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்..”

‘காதலில் எங்கே விழுந்தேன். கக்கூசில் தான் விழுந்தேன்’ என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த தேவதைகள் எல்லோரும் சூனியக்காரிகளாக மாறும் தருணம் எது என்று சண்முகம் யோசித்துப் பார்த்தான். சரோஜாவும் அவனுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்த நாட்கள் நினைவிலாடியது.

“என்னாங்க.. ஒங்களத்தான். இங்க பாருங்களேன்” சண்முகம் அப்போது தான் கம்பெனியில் இருந்து வந்திருந்தான். அந்த நேரத்தில் அவனை யாரும் தொந்திரவு செய்வதை அவன் விரும்புவதேயில்லை. கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்து ஈசி சேரில் சாய்ந்ததும் ஒரு ஆழமான மயக்க நிலைக்குப் போய்விடுவான். அந்த முப்பது நிமிடங்களில் கடவுளே வரம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னாலும் கூட ‘போய்ட்டு அப்புறம் வாய்யா’ என்று சொல்லி விடுவான். அன்றைக்கு முழுவதும் அவன் வாங்கிய திட்டுகள், பெற்ற அவமானங்களை, அடைந்த சிறுமைகளை மெல்ல அசைபோட்டு மூளையின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றும் நேரம் அது.

“அட.. நான் கூப்பிடறது காதில் விழாதா ஒங்களுக்கு. இங்க பாருங்கன்னா” சரோ குழைந்தாள்.

“என்னம்மா” போடி என்று உதறிவிட சரோ என்ன கடவுளா.. காதலியாயிற்றே.

“நம்ம பக்கத்து வீட்டுல பூங்கொடியில்ல.. அவங்க வீட்ல புதுசா ஏ.சி போட்டிருக்காங்க. ஸ்பிளிட் ஏசியாம். ஒன்ர டன்னாம். வீடே ச்சில்லுன்னு எப்படி இருக்கு தெரியுமா. நாமளும் ஒன்னு வாங்கலாங்க..” ஈசி சேரின் வலது கையில் முட்டாக்கு போட்டுக் கொண்டே சொன்னாள்.

“நம்ம வீட்டுக்குப் பின்னாடி தான் ரெண்டு வேப்ப மரம் இருக்கே சரோ. நல்ல காத்தோட்டமான வீடும்மா.. இயற்கையான காத்து இருக்கும் போது நமக்கு எதுக்கும்மா ஏ.சியெல்லாம்” கண்ணை மூடிக் கொண்டே சொன்னான் சண்முகம்.

“……”

“சரோ…..” பதில் இல்லையென்றதும் கண்னைத் திறந்து பார்த்தான்.

சரோ பக்கத்திலில்லை. உள்ளே பாத்திரங்கள் உருளும் சப்தம் மட்டும் கேட்டது. அன்று தான் ஒரு தேவதை சூனியக்காரியாக மாறத் துவங்கியதன் முதல் அறிகுறியைக் கண்டான். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாக கழிந்தது. நான்காம் நாள் காலை சண்முகம் மொத்தமாக சரண்டராகி தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

“சரோ..”

“…..”

“கிளம்பும்மா.. பஜாருக்கு போயி ஏ.சி என்னா விலை என்ன விவரம்னு கேட்டுட்டு வருவோம்”

இருபத்திரெண்டாயிரம் பி.எப் லோன் போட்டு ஒரே வாரத்தில் வீட்டில் ஏ.சி மாட்டப்பட்டது. சரோ சண்முகத்தைக் கொண்டாடினாள். அவன் முன்னயே உறவுகளுக்கு போன் போட்டு கணவனின் அக்கறையை பிரஸ்தாபித்தாள் – கூடவே தான் ஏ.சி வாங்கியதையும். உறவுகள் இவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அதற்குத்தானே உறவுகள்? நம்மைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட்டுக் கொண்டேயிருந்தால் தானே நாம்
வெற்றி பெற்றுள்ளோம் என்பதே உறுதியாகிறது என்றெல்லம் சண்முகம் நினைத்துக் கொண்டான். ஏ.சியின் ரீங்காரம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது – அடுத்த மாத கரண்டு பில் வரும் வரையில்.

“யெப்பா… யெப்பா… சீனு மாமா வந்துத்தாங்க.. மித்தாய் குதுத்தாங்க” பாலு கையில் சாக்லெட்டோ டு உள்ளே ஓடிவந்து சண்முகத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். பாலுவின் பின்னாலேயே சீனு. இருபத்தைந்து வருட நட்பு. பள்ளி நாட்களிலிருந்து மாறாத அதே சிரிப்போடு வந்தான்.

“யேய்.. என்னடா லீவு நாள்ல சினிமா கினிமான்னு பொண்டாட்டியோட சுத்தாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கே” இவனுக்கு வாயில் மட்டும் வாஸ்து சரியாய் இல்லை.

“டேய்.. மொதல்ல நீ அடக்கி வாசி. அவ காதுல கீதுல உளுந்துடப் போகுது” சண்முகம் ஒருமுறை அவஸ்தையோடு உள்ளே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“சரி சொல்லு எதுக்கு மிஸ்டு கால் குடுத்தே. நாலு வீடு தள்ளி தானே இருக்கேன். எழுந்து வர வேண்டியது தானே”

“அது… ஒரு சின்ன பிரச்சினைடா”

“என்ன திரும்ப சிஸ்டர் எதுனா வாங்கிக் குடுக்க சொல்றாங்களா”

“இல்லடா.. சுசிய கொல்லனுமாம்”

“ஏன்.. நாலு மாசம் முன்னே தான ஆசையா வாங்கிட்டு வந்தே? இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு?”

“அது வந்து மச்சி….” சண்முகத்துக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. காரணமும் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவுரவமானதில்லை என்பதால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.

“என்ன.. யாரையாவது கடிச்சிடுச்சா”

“ச்சே ச்சே.. அதில்ல.. அது வந்து.. எதிர் வீட்ல ஒரு நாட்டு நாய் இருக்கில்லே அதோட மேட்டிங் ஆய்டிச்சி போல. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கு” ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடித்தான்.

“அது நல்லது தானடா.. இப்படி கிராஸ் ஆனா குட்டிங்க வித்யாசமா, அழகா பிறக்குமே. அதில என்ன பிரச்சினை”

“அது தாண்டா பிரச்சினையே. சரோவுக்கு அது பிடிக்கலை. அது நாட்டு நாயி, சுசி பொமரேனியன்; ஒசந்த சாதி. அதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரி ஏதோ அசிங்கமா சொல்லிட்டாளாம். அது தான் இப்ப இதை தொலைச்சே ஆகனும்னு தலைகீழா நிக்கறா”

“கஷ்டம்டா.. நாய் கிட்டே கூடவா சாதியெல்லாம் பாப்பாங்க? சரி, இப்ப என்ன செய்யப் போறே. கொல்லப் போறியா” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்

“இல்ல கொல்ற ஐடியா எனக்கில்ல… ஆனா இந்த புளூ கிராஸ் ஆளுங்க கிட்ட கொடுத்துட்டா என்னான்னு யோசிக்கறேன். ஒங்க ஆபீஸ் பக்கத்துல தானே அவங்களோட ஆபீஸ் இருக்கு – அதான் ஒன்ன கூப்டேன்”

“ம்.. இந்த மாதிரியெல்லாம் அவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலையேடா. சரி.. நீயே கூட வா ஒரு எட்டு போய் கேட்டுட்டே வந்துடலாம்” சொல்லிக் கொண்டே சீனு எழுந்தான்.

“என்னாங்க.. போகும் போது அப்படியே இந்த சனியனையும் எடுத்துட்டுப் போயிருங்க. அவங்க வாங்கிக்கிடலைன்னா எங்கியாவது கண் காணாம விட்டுட்டு வந்துருங்க” சரோவின் அசரீரி கேட்டது. உள்ளேயிருந்தபடியே பேச்சு முழுவதையும் கவனித்திருக்கிறாள்.

சீனுவின் பைக் நிதானமான வேகத்தில் ஊர்ந்தது. சண்முகத்தின் கையில் சுசி சந்தொஷமாய் திமிரிக் கொண்டிருந்தது. அவள் தன்னை எங்கோ அழைத்துப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சண்முகத்திற்கு மனம் லேசாய் கணத்தது; நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. ஏ.சி விசயத்தில் தாழ்ந்து போனது தான் அதைத் தொட்டு வந்த மற்ற எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க.. பூங்கொடி அக்கா வீட்ல புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. லதா மாமி வீட்ல புதுசா ஒரு சி.டி பிளேயர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. மேரி ஆண்ட்டி வீட்ல புதுசா ஒரு டேபிள் டாப் வெட்கிரைண்டர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. பின்னாடி வீட்ல புதுசா ஒரு வாசிங் மிசீன் வாங்கியிருக்காங்க”

மாதத் தவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வரவும் செலவும் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று ஒன்றோடு ஒன்று குத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. சண்முகம் கவலைப் பட ஆரம்பித்தான். ஒருநாள் தெருமுனை டீ கடையில் பூங்கொடி அக்கா புதிதாக ஒரு கள்ளப் புருசனை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று பொரணி பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் அரண்டே போய் விட்டான். லேசான நடுக்கத்தோடு வீட்டுக்கு வந்த போது பாலு வீர் வீரென்று கதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேகமாக உள்ளே ஓடினான் –

“இந்தாங்க.. இந்த மானக் கேட்டுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கே போயிருவேன்” சரோ அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் “சனியனே.. உன்ன இப்ப என்ன கொன்னா போட்டேன்.. ஏன் கத்தறே” பாலுவுக்கு இன்னொன்று முதுகில் கிடைத்தது.

“இப்ப என்ன நடந்துச்சி. நீ ஏண்டி குழந்தைய கை நீட்டறே… ஒங்கம்மா வீட்டுக்கு போவனும்னா மொதொ வேலையா அடுத்த பஸ்ஸ புடிச்சி போய்த் தொலை. இன்னொரு வாட்டி கை நீட்ற வேலை வச்சிக்கிட்டே…” சண்முகம் கல்யாணம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆத்திரப்பட்டான்.

“ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா.. எங்க வீட்ல நான் பொழச்ச பொழப்புக்கு உன்னிய மாதிரி ஒரு தரித்திரம் பிடிச்ச ஓட்டாண்டிய நம்பி வந்தேம் பாரு.. என்னச் சொல்லனும். நீ தானேய்யா எம் பின்னாடியே அலைஞ்சே.. நான் பேசாம சாகப் போறேன்..” சொல்லிக் கொண்டே அவள் உள்ளறையை நோக்கி ஓடவும் சண்முகத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பின்னாடியே ஓடினான்.. கையைப் பிடித்தான்.. காலைப் பிடித்தான்.. அழுதான்.. மீண்டும் மொத்தமாக சரண்டராகி தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொண்டான்.

பின்னர் இரவு பாலு உறங்கிய பின் மெதுவாக விபரம் என்னவென்று கேவல்களுக்கு இடையில் சரோ விவரித்தாள். பூங்கொடி வீட்டில் ஒரு பொமரேனியன் நாய் வாங்கியிருக்கிறார்களாம். பாலு அதோடு விளையாடச் சென்றானாம். அதற்கு பூங்கொடி ஏதோ சொல்லி விட்டாளாம்.

வேறென்ன அடுத்த மூன்றாவது நாள் – அதே இனத்தைச் சேர்ந்த, அதே நிறம் கொண்ட, அதே உயரம் கொண்ட ஒரு நாயை மூவாயிரம் அழுது வாங்கி வந்தான் சண்முகம். அதன் பின்னங்காலைத் தூக்கிப் பார்த்த சுசி ‘அய்யே.. பொட்ட நாயா’ என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ ‘பரவால்ல இருக்கட்டும்.. இதுக்கு சுசின்னு பேரு வைக்கலாங்க’ என்றாள் ஆசையாக.

சண்முகத்துக்கு ஆரம்பத்திலிருந்தே சுசியைப் பிடிக்கவில்லை. அது காலை நக்கும் போதும், தன் முன்னே குழைந்து நிற்கும் போதும், சாப்பாட்டு நேரத்தில் ஏங்கிப் பார்க்கும் போதும், விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் போதும்.. எனப் பல சந்தர்பங்களில் சுசியைத் தனது பிரதி பிம்பமாகவே அவனால் உணர முடிந்தது. அவன் கம்பெனியில் செய்து கொண்டிருப்பதை இங்கே சுசி செய்து
கொண்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்த அடிமைத்தனத்தை சண்முகத்தால் இரசிக்க முடிந்ததேயில்லை. ஆனால் அவனுக்கு சுசியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது. அது ஒரு சக அடிமையின் மேல் ஏற்படும் பரிதாபம்.

“சர்க்க்..” சீனு வண்டியைக் க்ரீச்சிட்டு நிறுத்தியதில் சண்முகத்தின் சிந்தனை கலைந்தது.

‘நாய் எல்லாரையும் கடிக்குது; வீட்டில் அசிங்கம் செய்கிறது’ என்று ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி புளூகிராஸ்காரர்கள் தலையில் அதைக் கட்டிவிட்டு சண்முகம் திரும்பினான். சுசிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன்னைச் சுற்றி தன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிற ஆனந்தம் இருந்திருக்குமோ அல்லது தான் இன்னதென்று விளங்காத காரணத்திற்காக பிரித்து விட்டுச் செல்கிறானே என்கிற சோகம் இருந்திருக்குமோ தெரியவில்லை – அது ஒரு சப்தத்தை எழுப்பியது. அது போன்ற ஒரு சப்தத்தை இது நாள் வரையில் சண்முகம் கேட்டதேயில்லை. அது நாயின் சப்தம் போன்றே இல்லை. அதில் சந்தோஷத்தையோ துக்கத்தையோ அல்லது வேறு உணர்ச்சியையோ அவனால் உணர முடியவில்லை. அவன் வெளிக் கதவை நெருங்கும் சமயம் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் – சுசி அவனையே பார்த்துக் கொண்டு நின்றது. தன் வாலை மிக மெதுவாக அசைத்தது. திரும்ப வந்து தன்னை அள்ளிக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்குமோ என்னவோ – சண்முகத்தின் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தத் தெருவின் கோடியில் இருந்த தேனீர் கடை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.

“அண்ணே ரெண்டு வில்ஸ் பில்டர் குடுங்க” பின்னாலேயே சீனுவும் வந்து சேர்ந்தான்.

“ஒன்னு போதும்ணே” என்று கடைக்காரரிடம் சொன்னவன் “கட் போட்டுக்கலாம்டா” என்றான் சண்முகத்தைப் பார்த்து.

காரமான புகை நுரையீரலின் சந்து பொந்துகளெல்லாம் நிறைந்து இறுக்கத்தைக் குறைத்தது. சண்முகம் கண்களைச் செருகிக் கொண்டே அதை அனுபவித்தான். ஏதோ தோன்றியவன் போல சீனு பக்கம் திரும்பி –

“க்காலி.. இந்த பொட்டச்சிங்களே இம்சடா மச்சி. இத்த வாங்கித்தா அத்த வாங்கித்தான்னு ஒரே நைநைன்னு அரிப்பு. ஒரு மனுசன் வெளில படற பாடுன்னா என்னான்னு தெரியுதா இவளுகளுக்கு… ச்சே.. கம்பெனிலயும் அடிம.. ஊட்லயும் அடிம… எங்க திரும்புனாலும் எல்லாரும் நெருக்கிட்டே இருந்தா ஒருத்தன் எங்க போவான்… பய்யனுக்காக பாக்க வேண்டியிருக்குடா… இல்லேன்னா தொலச்சி தல முழுவிடுவேன்” என்று சொல்லி விட்டு
ஆமோதிப்பான ஒரு தலையசைப்பை எதிர்பார்த்தான்.

“தப்பு அங்க மட்டும் இல்லடா சம்மு… ஓன் கிட்ட தான் பெரிய தப்பே இருக்கு” புகை மூக்கின் வழியே வழிந்து தீரும் வரை பொருத்திருந்து விட்டு “சின்னச் சின்னதா கேக்கும் போது தேவையா தேவையில்லையான்னு நீ யோசிச்சியா? அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா? சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம்? கஸ்டப்பட்டு பொண்டாட்டிய சந்தோசமா வச்சிக்கறவன்னு பேரு வாங்க ஆச
பட்டேல்ல.. அப்ப அனுபவி” இறக்கமேயில்லை சீனுவின் வார்த்தைகளில்.

“டேய் உனுக்கு என்னியப் பத்தி தெரியுமில்லே.. நானே மாச தவனை கட்ட முடியாம லோல்பட்டுகிட்டு இருக்கேன்… நான் இத்தன நாளும் சந்தோசமாத்தான் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் ஆடினேன்னு சொல்றியா..? செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா? உனக்கே அதெல்லாம் தெரியுமில்லே…”

“டே.. சாவறது என்ன அத்தன சுலபமா? சம்பாதிக்கறவன் நீ; வெளியுலகத்துல சுத்தறவன் நீ; அவங்க வீட்லயே அடஞ்சி கிடக்கறவங்க; அவங்க அப்படித்தான் எல்லாத்துக்கும் ஆசப் படுவாங்க. ஒரு பொருள் தேவையா தேவையில்லையான்னு வாங்கறக்கு முன்னாடியே ரெண்டு பேரும் உக்காந்து பொருமையா பேசியிருக்கனும். அவங்க கேட்க தயாரா இல்லைன்னா எப்படி தயார் படுத்தறதுன்னு நீ யோசிச்சிருக்கனும். ஆனா நீ பெருமைக்கு எருமை ஓட்டினே. சொந்தக்காரனுக நாலு பேரு மூஞ்சி முன்னாடி ‘ஆஹா சண்முகத்துக்கு சரோஜா மேல என்னா பாசம்’னு சொன்ன உடனே நீ வானத்துல பறந்தே. இன்னிக்கு நீ லோல்படும் போது அவனுக பக்கத்தில இல்ல பாத்தியா.”

சண்முகம் ஏதும் பேசத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னைக்காவது உன்னோட சம்பளம் எவ்வளவு, பிடித்தம் போக கையில் வாங்கறது எத்தனை அப்படிங்கற உண்மையான விவரத்தை நீ வீட்ல சொல்லியிருக்கியா? அவங்களைப் பொருத்தவரை நீ காசு கேட்டா கொடுக்கற ஏ.டி.எம் மிசின் மாதிரி தானே நடந்துட்டு இருந்தே. மொதல்ல ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். வா.. போலாம்” என்றபடி பைக்கை உதைத்தான்.

சண்முகம் புதிதானவொரு நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். காற்று சில்லென்று வீசியது.

மே 14, 2010 Posted by | culture, short story, Uncategorized | , , | 3 பின்னூட்டங்கள்

அவன்..!

காலையிலொன்றும் உச்சியிலொன்றும் மாலையிலொன்றுமாக நாளுக்கு மூன்று முறை பேருந்து வந்து செல்லும் கிராமம் அது. சூரியன் எட்டிப்பார்க்காத மூன்று மணிக்கே அந்த ஊர் விழித்துக் கொள்ளும். நாத்து நடுவது, களை பிடுங்குவது, மருந்தடிப்பது, மேய்ச்சலுக்கு ஆடு மாடுகளை ஒட்டிச் செல்வது, வேலாங்குளத்தில் விளைந்த கீரையை சந்தையில் விற்பது, என்று கிழடு கட்டைகளைத் தவிர ஊரே ஏதாவது ஒரு வேலை செய்தாக வேண்டும். அந்த நேரத்திலேயே கந்தசாமி பாய்லரில் கொதிக்கும் தண்ணீரை பைப்பில் பிடித்து கண்ணாடித் தேனீர்க் கோப்பைகளைக் கழுவிக் கொண்டிருந்தான். இடது கை புறமாக பிளாஸ்டிக் கோப்பைகள் சில தொங்கிக் கொண்டிருந்தது. சிலர் பெஞ்சில் உட்கார்ந்திருந்தனர். கீழே சிலர் குந்தவைத்து உட்கார்ந்திருந்தனர்.

அங்கே தான் அவனும் இருந்தான்.
அவனுக்கு முழியே சரியில்லை. கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடுவது போல முறைத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தான். சுற்றிலும் இருந்தவர்கள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தங்களுக்குள் தேனீர் அருந்திக் கொண்டே சுவாரசியமாய் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கோ நிலை கொள்ளவில்லை; காலை மாற்றி மாற்றி நின்று பார்த்தான். பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் நழுவிப் போய்க் கொண்டேயிருந்தது.
“கவுண்டரய்யா.. நீங்க என்ன சொல்லுங்க.. நம்ம கந்த்சாமி போடற டீய அடிக்கறக்கு இந்த சில்லாவுலயே வேற ஆளு கெடையாதுங்கறேன்” அழுக்கு முண்டா பனியன் ஒன்று கை வைத்த பனியன் போட்டுக் கொண்டு பெஞ்சியில் குந்தியிருந்த ‘கவுண்டரய்யாவைப்’ பார்த்து சிலாகித்துக் கொண்டது.

“இல்லாமையா பின்ன? சுத்துப் பட்டு ஊர்லயெல்லாம் மாதாரிகளுக்கும் நமக்கும் ஒரே கெளாசாம்பா.. நம்ம கந்த்சாமி தான் இன்னும் சுத்தபத்தமா கட நடத்திட்டிருக்கான்..” மண்டைக்கு மேலிருந்த மயிர் நரைத்துப் போன கவுண்டரைய்யா, தனக்கு மண்டைக்குள்ளும் நரைத்துப் போய் விட்டதென்பதை உணர்த்தியது.

இடையில் புகுந்து கொண்ட கந்தசாமி அவன் பங்குக்கு,
“சுத்தந்தானுங்களே முக்கியம்.. எங்கப்பாரு காலத்திலேருந்தே நாங்க சாப்பாட்டுக் கட நடத்தறோம்.. அவரு காலத்திலேயே மாதாரிகளுக்குத் தேங்காச் செரட்டைல தான் டீ குடுப்போம்.. ஏதோ இன்னிக்கு காலம் மாறுனதால பிளாஸ்டிக் தம்ளர்ல குடுக்கறோம்.”
காலை நேரமானதால் கொஞ்சம் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முந்தைய நாள் ஞாயிற்றுக் கிழமை – உள்ளே போன ஆட்டையோ கோழியையோ வெளியே தள்ள சூடான டீ அவசியமாக இருந்ததால் சனக் கூட்டம் மற்ற நாட்களை விட அதிகமாகவே இருந்தது. அதில் சிலர் இந்த ‘சுத்தப் பேச்சில்’ கலந்து கொண்டு தங்கள் ஊர் சுத்தபத்தமாக இருக்கிறது என்பதில் தங்களுக்கு இருந்த பெருமிதத்தை வெளிப்படுத்திக் கொண்டனர்.

அவனுக்கு ஆத்திரம் அதிகமாகி விட்டதோ என்னவோ தன்னையே மறந்து விட்டான் போல.. அவன் கால்களுக்குக் கீழே கிடக்கும் மலத்தை மிதிப்பதைக் கூட உணராமல் முறைத்துக் கொண்டே நின்றான்.. முகத்தின் பாதியைக் கண்களே எடுத்துக் கொண்டது போல அப்படி ஒரு முறைப்பு!

அந்தக் கூட்டத்தில் சிலருக்கு இந்தப் பேச்சுக்களில் சுத்தமாக ஒப்புதலே இல்லை.. ஆனாலும் ‘ஐயாவை’ எதிர்த்துப் பேச பயந்து கொண்டு வாயை  மூடிக் கொண்டு நின்றனர். இவன் அவர்களையும் பார்த்தான் – அதே கோபத்தோடு. எதிரிகள் மேல் வரும் ஆத்திரத்தை விட இப்படி பேசாமல் கழுத்தறுக்கும் கோழைகள் மேல் தான் வெறி அதிகம் வரும் என்பது எத்தனை உண்மை!

அவன் ஒரு முடிவோடு எழுந்தான். தன்னுடைய இறகுகளை படபடவென அடித்துக் கொண்டே பறந்து போய் கவுண்டரய்யாவின் டீ கிளாசின் மேல் உட்கார்ந்தான்.

“அடச்சீ… இந்த ஈச்சித் தொல்லை தாங்கலப்பா” கவுண்டரய்யா சலித்துக் கொண்டே அவனை விரட்ட, அவன் நேரே போய் முண்டாசுக்காரரின் கிளாசின் விளிம்பில் உட்கார்ந்தான். அவனும் விரட்டியடிக்கவே… அங்கே இது வரை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு எதுவும் பேசாமல் நின்று கொண்டிருந்தவன் ஒருவன் தம்ளரிலும் போய் உட்கார்ந்தான்.

அவர்கள் மீண்டும் தேனீரின் சுவையை சிலாகித்துக் கொண்டனர்!
ஒன்றும் பேசாதவன் எல்லாவற்றையும் கவனித்தான். அவன் முக பாவனையில் இருந்து வெட்க்கப்பட்டானா இல்லை அவமானமடைந்தானா என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு பெரு மூச்சை விட்டுக் கொண்டே நடையைக் கட்டினான்.

அவன் இப்போது சந்தோஷத்தில் பறந்து கொண்டிருந்தான் – காலில் இருந்த மலம் இப்போது சுத்தமாகி விட்டிருந்தது. முன்னங்காலை வாயில் வைத்துப் பார்த்தான் – தேனீர் கசந்தது.

ஜனவரி 19, 2010 Posted by | short story | , , | 1 பின்னூட்டம்

கடந்து போன ஆண்டுகள்; நிலைத்து நிற்கும் எதார்த்தங்கள்..!

கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அனாயசியமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி அவளே எனக்கு அழகி.

இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெரிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!

“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.

“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.

பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேனீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கிரகம் கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.

தேனீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.

“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.

“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.

“பாண்டிச்சேரிங்க”

“என்ன விசமா?”

“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”

“தங்கறதெல்லாம்?”

“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.

சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள் தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கே தான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நன்பர்கள் தான் இருந்தனர். அதில் கோபால் மிக  நெருங்கிய நன்பன். அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் கலைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்

“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்

“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை

“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வென்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.

“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.

“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்

“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.

“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீ வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..”  வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…

“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்.. கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.

பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.

“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெரிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.

எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு  மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.

அங்கே விவசாயம் தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணி தான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தே தான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீன் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.

“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்”  தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.

ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும் தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள் தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தா தான். அதற்குப் பின் ஒரு இரண்டு  வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.

என் பெரியப்பாவின் மகள் தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்கா தான் எனக்கு அம்மா.

“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கைய்யால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பா தான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.

ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.

பண்ணிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவும் எவரும்  வருவதில்லை.

போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வரும் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நன்பர்களே கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் காரியங்களும் கூட நன்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.

எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவர் சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.

வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தரியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.

பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.

அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.

மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.

முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?

ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின்அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.

“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள் தான் அவை.

“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”

“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது.  அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.

“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.

“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்பஎங்க இருக்காங்க?”

“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியே படலியா?”மௌனமாக இருந்தேன்.

“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”

“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”

“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டு தான் வருவேன்”

“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”

“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸ¤ல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”

“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.

நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.

“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”

டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயனிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.

இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.

“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”

“வெவசாயமெல்லாம்?”

“அதெல்லாம் ஓய்ஞ்சி போயில் பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”

“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”

“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரனும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹ¤ம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”

இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுன்னாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காறை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற என்னம் இப்போது மாறி விட்டது.

“சரி போலாம் கோபாலு”

“ஏண்டா உள்ளெ போகலியா”

“போயி?”

அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில் தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பை நோக்கி நடந்தோம்.

சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..

“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.

“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”

“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோனி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில் தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.

“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”

“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”

அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. ·பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம் தான்.

அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.

“சரி போலாம்” என்றவாரே வெளியில் வந்தேன்.

பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,

“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன  பொடியனெல்லாம் போடா வாடான்னு தான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்வே கெடைக்காது.”

பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவொன்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.

கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கே தான் தங்கியிருந்தேன்.

இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரை தான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள் தான் புழுத்து நாறுகிறது.

ஜனவரி 13, 2010 Posted by | culture, short story | , , , , | 7 பின்னூட்டங்கள்

அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!

“…..OK. Let me look in to the problem and come back to you shortly.. Thanks for calling. Bye” அரை மணி நேரமாய் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கனிடமிருந்து
கத்தரித்துக் கொண்டு தலையில் மாட்டியிருந்த ஹெட்போனை உருவிக்கொண்டே திரும்பினான் சேல்லி.. இல்லை செல்வா என்னும் செல்வேந்திரன். அமெரிக்க வாய்
கோணிவிடக்கூடாது என்பதற்காக செல்வேந்திரன் “சேல்லி” ஆகியிருந்தான்.

“ஹேய் பாலா.. வர்றியா ஒரு தம் போட போறேன்.. கம்பெனி குடு” என்றான் பாலா எனப்படும் பாலமுருகனாகிய என்னைப் பார்த்து.

“சரி வா ”

இது ஒரு ரிமோட் சப்போர்ட் செண்டர். அமெரிக்கனுக்கு அரித்தால் சொறிந்து விட வேண்டும் – அதாவது அவனது சிஸ்டத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் நாங்கள் இங்கிருந்து
சரிசெய்ய வேண்டும். அன்புமணியின் புண்ணியத்தால் கம்பெனிக்குள் புகைப்பிடிக்க தடையென்பதால் கம்பெனி கேட்டுக்கு நேர் எதிரே இருக்கும் பெட்டிக்கடை தான் போயாக
வேண்டும். ஒரு கிலோமீட்டர் நடை.

“Bull shit.. what the hell they are thinking” என்றான்

“என்னடா என்ன பிரச்சினை?”

“These bloody politicians… நம்ம நாட்டில தம்மடிக்கக் கூட சுந்தந்திரமில்லே. ஏதோ சர்வாதிகார நாடு மாதிரியில்லே இருக்கு”

“ஓ.. தம்மடிக்க விட்டிருந்தா இந்தியா முழு சுந்தந்திரம் உள்ள நாடுன்னு அர்த்தமாயிடுமா?”

“…….” பேசாமல் தனது ஐ-பாடின் இயர் போனைக் காதுக்குள் சொறுகிக் கொண்டே ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை…’ என்று முணுமுணுத்துக் கொண்டே நடையைப் போட்டான்.

மணி அண்ணன் எங்களை தூரத்தில் பார்த்த போதே இரண்டு தம்ளரில் டீயை ஊற்றிவிட்டு ஒரு சிகரெட்டை தனியே எடுத்து வைத்தார். பக்கத்தில் வந்ததும்
அவரின் டிரேட் மார்க் சினேகமான புன்னகையை வீசினார்.

“என்னா சார் காலையிலேர்ந்து காணமே”

“கொஞ்சம் வேலை அதிகம்ணா” ஒரு டீயை நான் எடுத்துக் கொண்டு ஒன்றை அவனிடம் நீட்டினேன். சிகரெட்டை அவனே பொறுக்கியெடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.

மணி அண்ணான் அழுக்குத் தண்ணீர் நிரம்பியிருந்த டிரேயில் கிடந்த தம்ளர்களை அள்ளிக் கொண்டு கொஞ்சம் தள்ளியிருந்த கழுவும் இடம் நோக்கி சென்ற போது தான் அந்த
நாயைக் கவனித்தேன். சாப்பிட்டு இரண்டு நாட்களாகியிருக்கும் போலிருந்தது. வயிறு முதுகெலும்போடு ஒட்டியிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து பெட்டிக் கடையின் குப்பைகள்
போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு அட்டைப் பெட்டியினுள் தலையை நுழைத்து ஏதாவது கிடைக்குமா என்று துழாவிக் கொண்டிருந்தது. அடிக்கடி தலையை உயர்த்தி சற்று தொலைவில்
உட்கார்ந்து தம்ளர்களைக் கழுவிக்கொண்டிருந்த மணி அண்ணா மேல் ஒரு கண் பார்த்துக் கொள்வது மீண்டும் தலையை பெட்டிக்குள் நுழைத்து துழாவுவதுமாய் இருந்தது. உள்ளே
ஏதோ அகப்பட்டிருக்க வேண்டும் போல – வரட் வரட் என்ற சத்தத்தோடு அதை வெளியே இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மணி கவனித்து விட்டார்.

கவனித்ததும் மெல்ல ஓசைப்படாமல் நடந்து குப்பை பெட்டியை நோக்கி வந்தார். நாய் உள்ளே ஏதோ அகப்பட்டுக் கொண்ட சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாய் தலையை மேலே
தூக்கவில்லை. அதற்குள் மணி நாயின் பக்கவாட்டில் வந்து நின்றவர் அதன் வயிற்றைப் பார்த்து ஓங்கி ஒரு உதை விட்டார். நாயின் வயிற்றுக்குள் ஒரு பிரளயமே நடந்திருக்க
வேண்டும்.

கொல்ல்ல் கொல்ல்லென்று ஈனசுவரத்தில் அலறிக்கொண்டே சுருண்டு போய் ஒரு பத்தடி தள்ளி விழுந்தது. தலையைப் பரிதாபமாய் தூக்கிப் பார்த்து விட்டு ஓடி விட்டது. இதைப்
பார்த்துக் கொன்டிருந்த செல்வாவுக்கு சட்டென்று முகம் சிவந்து விட்டது…

“Ohhh my fucking God….  யோவ்.. அந்த நாய் என்னய்யா பாவம் பண்ணிச்சி. ஏன்யா அதை அடிச்சே. Rascal இரு இரு புளூக்ராஸ்க்கு போன் பன்றேன்.. உன்னையெல்லாம் உள்
ளே
தள்ளினாத்தான்யா புத்தி வரும்…” என்று பொறிந்து தள்ளிக்கொண்டே மொபைல் போனை பாக்கெட்டில் இருந்து உருவினான்.

“சார்… இந்த நாயிங்க பெட்டில இருக்க குப்பைய அள்ளிட்டுப் போய் கம்பெனி கேட்டுக்கு முன்னே போட்டிருது சார். உங்க கம்பெனிகாரங்க போன வாரம் வந்து சத்தம்
போட்டாங்க சார். இனி குப்பை விழுந்தா பெட்டிக் கடைய காலி பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லிட்டாங்க சார். நம்ப பொழப்பே இத நம்பித் தான் சார் ஓடுது.. என்னா சார்
பண்ணட்டும் நான்.. இங்கே நாளுக்கு எறநூறு டீ ஓடுது.. அத நம்பித்தான் சார் எங்க குடும்பமே சாப்பிடுது” முடிந்த வரையில் அதிக “சார்” இருக்கும் படி பார்த்துக்கொண்டார்.

“அதுக்காக நாயை அப்படியா ஒதப்பே? மனசுல ஈரமேயில்லையா மேன்” உச்சஸ்தாயியில் கத்தினான் செல்வா.

“செல்வா… விடு – நீ கெளம்பு மொதல்லே” இந்த நேரம் அவனிடம் எதுவும் பேசி புரியவைத்து விட முடியாது என்று எனக்குத் தெரியும்.

அவரிடம் திரும்பி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண் காட்டிவிட்டு இரண்டு டீக்கும் அவனது சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுத்து விட்டு அவன் தோளைப் பற்றி நடத்திக் கூட்டி வந்தேன்.

“ச்சே.. என்னா மனுசங்க பாத்தியா பாலா.. அந்த ஜீவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்.. அதுவே பாவம் பசியோட இருந்தது.”  இன்னும் முகம் சிவந்திருந்தது.

“அந்த நாய் பாவம் தான்.. ஏன் மணி பாவமில்லையாடா? அவர் குடும்பமே அந்தக் கடைய நம்பித்தான் இருக்கு, நாய்க்கு அவர் பாவம் பார்த்தா அவங்களுக்கெல்லாம் யார் சோறு
போடறது? நீ போடுவியா?”

“இல்ல…. ஆனாலும்…”

“ச்சீ நிப்பாட்டுடா.. ஒன் ஜீவ காருன்யத்த பெட்ரோல் ஊத்திக் கொளுத்த – மனுசனும் ஜீவன் தாண்டா.. ஏன் இந்த ஜீவன் மேல மட்டும் காருண்யம் வர மாட்டேங்குது உனக்கு?”

“அது… அது…” வார்த்தையைத் தேட ஆரம்பித்தான். பின் நிறுத்தி விட்டு என்னை ஏறிட்டுப் பார்த்தான். ‘நீயெல்லாம் மனுசனா இல்ல மிருகமா’ என்கிற மாதிரி ஒரு பார்வையை வீசி
விட்டு ஐ-பாடின் இயர் போனை மீண்டும் பொறுத்திக் கொண்டான் – “நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழையில்” மீண்டும் நனைய ஆரம்பித்தான்.

‘இவனுக மண்டையில அமில மழை தான் பெய்யனும்’ என்று நினைத்துக் கொண்டேன்.

திசெம்பர் 18, 2008 Posted by | short story | | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு தேவதையின் மரணம்…!

போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை..  குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?

ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.

“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”

“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”

“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”

ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும்  ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“வீட்டுக்குப் போகலையா?”

“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”

“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”

“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”

“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”

“அதுக்கில்லே…”

“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”

“………..”

“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”

“அதெப்படி…..”

“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”

“நல்ல மார்க் வாங்கனும்”

“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”

“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”

எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..

“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”

“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”

“ம்…”

“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”

“ஆனா எப்படி…?”

“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”

“ச்சும்மா இருக்கேன்”

“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”

“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”

“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”

“ம்… சரி”

“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”

“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது

“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”

“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”

“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”

“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”

கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”

அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள்.  அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”

“போடி.. அது என் ஸ்டைல்”

“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”

“ம்ம்… சரி”

‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”

“ம்ம்.. சரி”

“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”

“எனக்கு தெரியலடி…”

“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”

“ம்ம்.. சரி”

எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.  ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..

ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..

“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“என்ன?”

“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”

“ஏன்?”

“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”

“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”

“அது சரியா வராதுடா..”

“ஏன்?”

“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”

நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..

முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.

கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.

“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.

“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..

“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”

“எங்கே?”

“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”

“எதுக்குடா?”

“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”

“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”

“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”

“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.

“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”

வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”

“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”

“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”

“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”

“சந்தோஷமா இருக்கா?”

“அதெப்படி நமக்குத் தெரியும்”

“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”

“இப்ப என்ன சொல்ல வர்றே”

“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”

“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”

“பொண்ணு?”

“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”

“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.

“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”

“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”

“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”

“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”

திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம்.  எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

” சரி நான் போறேன் ”

“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”

“வேணாம் நான் போறேன்”

“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.

“இல்ல போறேன்”

“சரி.. போ….”

செப்ரெம்பர் 15, 2008 Posted by | culture, short story | , | 20 பின்னூட்டங்கள்

கண்ணாடித் திரை

அவனை பதினேழு வருடம் கழித்து சந்திப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. வேலை முடிந்து ஆபீசில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அவனைப் பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் கடைசி நாள் சான்றிதழ் வாங்கும் நாளன்று பார்த்தது தான். அதற்குப் பின்எங்கே போனான் என்னவானான் என்கிற ஒரு தகவலும் இல்லாமல் போய் விட்டது. தாளாத மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தேன்.

“டேய் சுந்தரா.. எப்படி இருக்கேடா.. இத்தனை நாளா எங்கேடா போயிருந்தே..எப்போ இந்த ஊருக்கு வந்தே?” கொஞ்சம் முன்வழுக்கையும் இளந்தொந்தியுமாக இருந்தான் எங்கள் கல்லூரிக் கால ரோமியோ. கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் ஒரு ஐந்து வயதை கூட்டிக் காட்டியது.

“ம்ம்ம் நல்லா இருக்கண்டா.. இங்கே வந்து ரெண்டு மாசமாச்சு நீ எப்படி இருக்கே” ஏதோ சொல்லமுடியாத அவஸ்த்தையில் கண்கள் அலைபாய்ந்தபடியே பேசினான். நான் அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்.

“நானும் நல்லா இருக்கேன்.. அப்புறம் கல்யாணமெல்லாம் ஆயாச்சா?” என்று உரையாடலை நீட்டும் உத்தேசத்தோடு கேள்வியை வீசினேன்.

“ஆயாச்சு.. ஒரு பையன். ஐந்தாவது படிக்கிறான்” துண்டுத்துண்டான பதில்கள். எதிர்கேள்வியில்லை. ஏதோ அவசர வேலைக்குச் செல்பவனைப்  போல கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தான்.

“ஓ.. என்னடா ஒரு மாதிரியா பரபரப்பா இருக்கே? எதுனா அவசர வேலையா” கேட்டதும் அவன் முகத்தில் பல்பு எரிந்தது. இந்தக் கேள்விக்குத் தான் காத்திருந்தான் போல; உடனே பதில் வந்தது..

“ஹிஹி.. அமாண்டா.. கொஞ்சம் முக்கியமான ஒரு வேலை. ஒத்தரை பாக்க வர்றேன்னு சொல்லிருக்கேன் அதான் அவசரமா போயிட்டிருக்கேன் ஒன்னோட மொபைல் நெம்பர் கொடேன்.. அப்புறமா காண்டாக்ட் பன்றேன்” ஒருகையால் செல்பேசியை எடுத்துக் கொண்டே எதிர் காலை வீசி பைக் சீட்டை ஆரோகனித்தான். அவன் வண்டியின் டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்தது. உள்ளே எதையோ தினித்து வைத்திருந்தான்.

“சரி சரி.. உன் நெம்பர் கொடு மிஸ்டு கால் தர்றேன்”

மிஸ்டு கால் கொடுத்து விட்டு எனது செல்பேசியில் அவனது எண்ணை சேமித்துக் கொண்டே அடிக் கண்ணால் அவனைப் பார்த்தால் அவன் எனது எண்ணை சேமிக்காமல் பைக் சாவியை திருகிக் கொண்டிருந்தான்..

“டேய் சேவ் பண்ணிக்கடா”

“அப்புறம் பண்ணிக்கறேண்டா., மிஸ்டு கால் லிஸ்டிலே இருக்குமில்லே”

“சரி சரி எங்கே தங்கியிருக்கேன்னு சொல்லு நான் அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வர்றேன்” என்றேன். அவன் பைக்கை உதைத்து அதை புகை கக்க வைத்துக் கொண்டே பேசினான்,

“நேத்தாஜி நகர் தெரியுமில்லே.. அங்கே சிம்பொனி அப்பார்ட்மெண்ட்; ரெண்டாவது ப்ளோர்..  டோர் நெம்பர் 204” நான் குறித்துக் கொண்டேனா என்று கூட கவனிக்காமல் கியர் மாற்றி “சரிடா அப்புறம் கூப்பிடறேன்” என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திறாமல் பறந்தே போய் விட்டான்.

எனக்கு இப்போது ஆச்சரியம் கூடிப்போயிருந்தது; அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி கிண்டலுடன் எழுதப்பட்ட நகைச்சுவைகளைப் படித்திருந்தாலும் இப்போது அதுவே எனக்கும் நடப்பது வியப்பாக இருந்தது. ஏனெனில் நானும் அதே அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் தான் இரண்டு வருடங்களாக குடியிருக்கிறேன். ரெண்டு மாதமாக எனக்குக் கீழே உள்ள தளத்தில் வசிக்கும் நன்பனை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

‘போடா மவனே.. போ உனக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.

வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என் மனதைப் போலவே சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. பதினேழு வருடங்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.. இப்போதெல்லாம் கல்லூரி நன்பர்கள் தொடர்பு விட்டுப் போவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.. ஈமெயில் செல்போன் என்பதெல்லாம் அன்றைக்கு நாங்கள் கற்பனையே செய்து பார்த்திராத ஒன்று. அந்தக் கடைசி நாளில் கண்களில் கண்ணீரோடு ஒரு சின்ன அட்றஸ் புக்கில் எல்லோருடைய வீட்டு முகவரியையும் எழுதி வாங்கியது தான்; அதிலும் ஒரு பக்கத்தில் முகவரியும் அதன் எதிர்பக்கத்தில் அவர்கள் உதிர்த்த ஏதாவது ‘தத்துவ முத்தும்’ இருக்கும். அன்று பலர் வீட்டில் டெலிபோன் கூட இருக்காது. நன்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் அந்த புத்தகத்தை        தடவிப்பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இதோ இன்றைக்கு ஏற்பட்டது போன்ற எதிர்பாராத இனிய ஆச்சர்யங்கள் எப்போதாவது தான் நிகழ்கிறது – இந்த நிமிடம் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.

பழைய நினைவுகளோடே வந்ததாலோ இல்லை போக்குவரத்து நெரிசல் இல்லாததாலோ என்னவோ சீக்கிரமே அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்து விட்டேன். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டை நோக்கி திரும்பும் போது தான் கவனித்தேன். டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்த அந்த பைக் – ஸ்ப்ளெண்டர். ‘அட நம்மாளு வண்டியாச்சே.. எங்கியோ போயிட்டிருக்கேன்னு சொன்னானே..’

எதற்கும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள குனிந்து வண்டியின் சைலன்சரை தொட்டுப் பார்த்தேன். சூடாக இருந்தது. அப்படியானால் நம்மாளே தான். ‘எங்கேயோ போறேன்னு இவன் எதுக்கு டுபாக்கூர் வுட்டான்’ மணியைப் பார்த்தேன் ஏழாகியிருந்தது..

‘ம்ம்ம்.. இன்னிக்கே அவனுக்கு சர்ப்ரைஸைக் கொடுத்துட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் நெம்பர் பித்தானை அழுத்தினேன்.

************************************************************************************************************
“ஏங்க இன்னிக்கு லேட்? எங்கே ஊதுங்க பாக்கலாம்?” இது வீட்டுக்குள் நுழைந்ததும் நடக்கும் வழக்கமான செக்கிங் தான். போன வாரம் நானும் எனது இடதொரு பாகமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தோம். ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்னு கணக்குப் போட்டா மாசம் அறுநூறு ரூபா ஆவுது ஒங்க புகை செலவுக்கு. காசு என்னா மரத்துலயா காய்க்குது? அதனாலே ஒழுங்கா மரியாதையா புகை விடற பழக்கத்தை விட்டொழிக்கறீங்க’ என்று கண்டிப்பான கட்டளை போட்டிருந்தாள்

“ஹேய்.. எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தால், எனது வாரிசு நான் உள்ளே வந்ததுகூடத் தெரியாமல் வீடியோ கேம்ஸில் ஆழ்ந்து கிடந்தான்.
இவனுக்கு தெரிந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று வீடு – அடுத்தது பள்ளி. இது இரண்டுக்கும் வெளியே ஒரு உலகமோ மனிதர்களோ இருப்பதே அவனுக்கு வீடியோ கேம்ஸில் வரும் க்ராபிக்ஸ் மனிதர்களை வைத்துத் தான் தெரியும். எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தேன். அரசுப் பள்ளியில் படிக்கத்தான் எங்களுக்கெல்லாம் வசதியிருந்தது. தமிழ்வழிக் கல்வி தான். ஆனால் உலகம் குறித்து என் மகனை விட அவன் வயதில் எனக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வீட்டின் பொருளாதாரம் குறித்தும் அறியவைக்கப்பட்டிருந்தோம்.  ஒவ்வொரு பெரிய பரீட்சை விடுமுறையிலும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் விளையும் கீரையைக் அதிகாலை நேரத்திலேயே போய் பறித்து வந்து கட்டுக் கட்டி வீடு வீடாக விற்போம். கிடைக்கும் காசை சேர்த்து வைத்து தான் அடுத்த வருடத்திற்கான புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்க வேண்டும்.

அந்த நாட்களின் மாலை நேரமெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக
இருக்கும்; மாரியம்மன் கோயில் திடல் புழுதியில் கபடி விளையாடிக் கொண்டிருப்போம். சிராய்ப்புகள் இல்லாமல் வீட்டுக்குப் போனதாக சரித்திரமே கிடையாது. அப்போதெல்லாம் கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. விதம் விதமான விளையாட்டுகள் இருக்கும். கில்லி தாண்டு, பம்பரம், கரடி விளையாட்டு, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோலி விளையாட்டின் அந்தப் பாட்டை
இப்போதும் சில நேரங்களில் ஹம் செய்வதுண்டு – “ஐய்யப்பஞ்சோலை.. அறுமுகதகடி… ஏழுவாலிங்கம்.. எட்டுமுத்துக் கோட்டை…” இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. எங்கள் விளையாட்டுகள் ஒன்று உடலுக்குப் பயிற்சியாக இருக்கும் அல்லது பையன்கள் மத்தியில் கூட்டுறவான ஒரு நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.

 எங்கள் ஊரில் இருந்த என் வயதுச் சிறுவர்களெல்லாம் எனக்கு நன்பர்கள் தான். எல்லோரும் மற்றெல்லார் வீட்டுக் கதையும் அத்துப்படியாகத் தெரியும். ஒவ்வொருத்தன் வீட்டிலும் என்னப் பிரச்சினை, அது எப்படித் தீர்ந்தது என்பதை பேசிக் கொள்வோம். அந்த
அனுபவங்கள் இப்போதும் கைகொடுக்கிறது.

இவனுக்கோ விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸைத் தவிர்த்து கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பத்து வயதுப் பையன் நட்டமாய் வளராமல் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே போய் இப்போது ஒரு உருண்டையான உருவத்தை அடைந்திருக்கிறான். இப்போதே சைனஸ் பிரச்சினை வேறு.. எடுத்ததற்கெல்லாம் பிடிவாதம். நினைத்தை நினைத்த நேரத்தில் வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதம். என் தந்தை எனக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கேட்டு.. அப்புறம் உரமூட்டை சாக்குகளை சாக்கு வியயபாரி இஸ்மாயில் பாயிடம் ஒரு வருடத்துக்கு போட்டு அந்தக் காசை ஒரு வருடம் கழித்து மொத்தமாய் வாங்கி; அப்படி வந்த காசில் தான் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் எதையாவது வாங்கிக் கொடு என்று கேட்கவே பயமாக இருக்கும். எங்கள் முன்னே வைத்துத் தான் அப்பாவும் அம்மாவும் பணச் சிக்கல்களையெல்லாம் பேசிக் கொள்வார்களென்பதால் இயல்பாகவே அந்தத் தயக்கம் இருந்தது. என் மகனோ நாங்கள் பேசிக் கொள்ளும் போது ஒரு ‘டீசெண்ட் டிஸ்டென்ஸ் மெயிண்டென்ய்’ பண்ணுகிறான். ரொம்பநாள் கழித்து தான் தெரிந்தது –
அப்படிச் செய்யச் சொல்லி தான் அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். 

எங்கள் விடலை வாழ்க்கைக்கும் இன்றைய நகர வாழ்க்கைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்..  இந்த நகர வாழ்க்கையும் அப்பார்ட்மெண்ட வாசமும் ஏதோ நான் சிறையில் இருப்பது போன்றதொரு பிரமையைத் தான் தருகிறது. பாருங்களேன்.. கீழே எனது நன்பன்
குடிவந்து இரண்டு மாதங்களாகிறது.. நான் கவனிக்கவே இல்லை!! எங்கள் ஊரிலெல்லாம் புதிதாக எவர் வந்தாலும் அதைப் பற்றி எல்லோருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.. சுந்தரின் மகனும் என் மகனும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தால் இவனுக்கு அது நல்லது தான்.. அட்லீஸ்ட் வீட்டை விட்டு வெளியேவாவது போகிறானா பார்க்க வேண்டும். சமூக உறவுகளோ நன்பர்களோ இல்லாமல் இவன் வளருவது எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

“என்னாங்க.. சப்பாத்திக்கு மாவு உருட்டித் தாங்க நான் கிழங்கு செய்யறேன்” துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே வந்தால் மனைவியின் அழைப்பு.

“இரு இரு இப்ப வேணாம்.. நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனில்லே என் ப்ரெண்டு சுந்தர் பத்தி.. அவன் இங்கே ரெண்டாவது ப்ளோரில் தான் குடிவந்து இருக்கான்.. போய் பார்த்திட்டு வந்து ஆரம்பிக்கலாம்”

“எப்ப வந்தாராம்.. நீங்க என்கிட்டே சொல்லவே இல்லையே..?”

“எனக்கே இன்னிக்குத் தான் தெரியும்மா.. சரி சரி கிளம்பு போயிட்டு வந்துடலாம். டேய் தம்பி நீயுந்தான் கெளம்பு கெளம்பு.. சீக்கிரம்”

ஒரு கொலைவெறிப் பார்வையை வீசி விட்டு எந்த வார்த்தையும் பேசாமல் வாசலுக்கு வெளியே போய் நின்று கொண்டான். ‘எல்லாம் நேரம்டா.. எங்கப்பன் கிட்டே இந்த முறுக்கை நான் காட்டியிருந்தா கண்ணை நோண்டியிருப்பான்; உங்கப்பன் ஈவாயன்றதால தானே இந்த லுக்கு.. இரு வச்சிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டேன். ஆரம்பத்தில் செல்லம் கொடுத்தது என் தவறு; இப்போது என்னத்தைப் புலம்பி என்னத்தச் செய்ய?

*************************************************************************************************************
டோர் நெம்பர் 204.

உள்ளே ஹோவென்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். இந்த திடீர் விஜயம் அவனை எப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த போதே காலடிச் சத்தம் கேட்டது.

அவன் தான்.. அவனே தான். பார்த்தவுடனே முகம் அஷ்டகோனலாகிப் போனது. அசடு வழிய சிரித்துக் கொண்டே.

“டே டேய்… நீ நீ எப்படிடா.. இங்க..? சங்கடத்துடன் வந்த வார்த்தைகளுக்குள் அதை விட சங்கடமான கேள்வி. ஹாங்..அப்புறம் நான் முக்கியமாய் எதிர்பார்த்த அந்த ஆச்சரியம் மிஸ்ஸிங்.

“ராஸ்கல்.. நான் உன் அட்ரஸ் கேட்டேனே.. பதிலுக்கு நீ கேட்டியாடா? நானும் இதே அப்பார்ட்மெண்டில் தாண்டா ரெண்டு வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். இது என் வைஃப் இது பையன். இவனும் ஐந்தாவது தான் படிக்கிறான்”

“ஹிஹி.. வாங்க வாங்க சிஸ்டர்” இப்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டான்.

“வாங்க வாங்கன்னு சொல்லிட்டே நந்தி மாதிரி வாசலை அடைச்சு நிக்கிறாயே; வழிய விடு மொதல்ல” எங்களுடையதைப் போன்ற அதே விதமான ப்ளாட் தான். சிட்டவுட் தாண்டி ஹாலுக்குள் நுழைந்தால் இருபத்தோரு இன்ஞ் தொலைக்காட்சியின் திரைக்குள்ளே தலையை நுழைக்காத குறையாக இன்னொரு உருண்டை உருவம். அவன் மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..

“இது என் பையன். ராகுல் இங்க பாரேன் யாரு வந்திருக்கான்னு..” இவன் அழைப்பு சுவற்றில் மோதிய பந்தாக திரும்பி வந்தது. தலையைத் திருப்பாமலேயே “ஹலோ அங்கிள்” ஒன்றை வீசினான்.

“அவனுக்கு கிரிக்கெட்னா சரியான பயித்தியமாக்கும்” சுந்தரின் வார்த்தைகளில் பெருமிதம் அலைமோதியது. இப்போது தான் விளங்கியது இவன் ஏன் மாலை என்னை தவிர்த்து விட்டு பறந்தான் என்று. இப்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்ன சொல்வது என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உள்பக்கமாய் திரும்பி “பாப்பு.. இங்கெ வாயேன்” என்றான்.

“யாருங்க” என்றவாறே உள்ளேயிருந்து அவன் மனைவி வெளியே வந்தாள்.

“இது யார் தெரியுமா.. செந்தில்நாதன். என் பிரெண்டு. அது அவன் வைஃப். அது அவங்க பையன். இதே ஊரில் தான் இவனுக்கும் வேலை. நம்ம அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கான். ஐந்தாவது ப்ளோரில” தந்திவாக்கியங்களில் அறிமுகத்தை முடித்து வைத்தான். அவள் எனக்கு கையை கூப்பிவிட்டு என் மனைவியை நோக்கி ஒரு சினேகமான பார்வையை வீசினாள்.

“ஒரு நிமிஷம் இருங்க காபி கொண்டு வர்றேன்” என்றவாறே உள்ளே திரும்பினாள். உடனே நம்மாள் “நானும் வந்து ஹெல்ப் பண்ணலாமா”    என்றவாறே எழுந்து விட்டாள்.

“அட.. என்னாங்க கேட்டுக்கிட்டு, தாராளமா வாங்களேன்” அவர்களிருவரும் சமையலறை நோக்கி நகர்ந்து விடவே நான் சுந்தரின் பக்கம்  திரும்பினேன். அவனோ டி.வி பக்கம் மும்முரமாய் இருக்கவே நானும் அந்தப் பக்கம் திரும்பினேன். ஏதோ கிரிக்கெட் மாட்ச் நடந்து
கொண்டிருந்தது. இடையிடையே சில பெண்கள் இடையை அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.

“ஹேய் என்னடா இது.. கிரிக்கெட்டுக்கு மத்தில டாண்சு ஆடறாங்களே இதென்னடா கூத்து?” இப்போது தான் நான் இதைப் பார்க்கிறேன்.

அவன் தலையைத் திருப்பாமலேயே பதில் சொன்னான் “இது ஐ.பி.எல் மேட்ச். டொண்டி டொண்டி. அவங்க சியர் லீடர்ஸ்” மறுபடியும் தந்தி வாக்கிய பதில்கள். அட.. இவனுக்கு என்னதானாச்சு..? சரி.. அவனுக்கு ஆர்வமான இடத்திலேர்ந்தே பேச்சைத் தொடங்குவோம் என்று நினைத்து,

“ஆமா எந்தெந்த நாடுகள் விளையாடறாங்க?” என்றேன்.

விருட்டென்று திரும்பினான் “டேய் உனக்கு ஐ.பி.எல் பத்தி தெரியாதா?” என்று விட்டு பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“எனக்கு எப்படா இதிலெல்லாம் விருப்பமிருந்தது? எனக்குத் தெரிஞ்சி சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு விளையாடறார். போன உலகக் கோப்பையை நாம் தோத்துட்டோம்.. இப்படி தலைப்புச் செய்தியா வர்ற மேட்டர் மட்டும் தான் எனக்குத் தெரியும். அதிலும் இப்பல்லாம் பேப்பர் கூட முழுசா படிக்க நேரமிருக்கறதில்லே”

“அடப்பாவி… இதாண்டா இன்னிக்கு ஹாட் நியூஸே.. அதாவது.. உலக அளவில பேமஸான வீரர்களும் உள்ளூர் வீரர்களுமா சேர்ந்து அணிகளை அமைச்சிருக்காங்க. அவங்களுக்குள்ளே ஆளுக்கு இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும் விதமா ரூல்ஸை மாத்தி வைச்சி விளையாடறாங்க. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளெல்லாம் அணிகளை விலைக்கு வாங்கி, இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்காங்க” என்றான்.

“அப்ப இப்ப விளையாடற டீம் எதெது?”

“இது சென்னை டீமும் டெல்லி டீமும்.. தோ.. மஞ்ச சட்டை போட்ட டீம் தான் நம்ம சென்னை டீம்” என்றான்.. திரும்பிப் பார்த்தேன்.. மஞ்சள் சட்டை போட்ட வெள்ளையன் ஒருவன் பந்து வீச ஓடிக் கொண்டிருந்தான்.

“என்னடா அவனைப் பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்?” என்றேன் மீண்டும்.

இந்த முறை அவனிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது.. “டேய் அதான் சொன்னேனே வெளியூர் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் சேர்ந்து விளையாடுவார்கள் என்று” என்றான்

“அப்ப சென்னை டீமில் எத்தனை பேர்டா நம்மாளுக?”

“ஒரு ரெண்டு மூனு பேர் இருப்பாங்க” தலையைத் திருப்பாம பதில் சொன்னான்.

‘ரெண்டு மூனு தமிழ்காரங்க இருக்கற டீமை எப்படி சென்னை டீம்னு சொல்றாங்க’ என்று தோன்றியதை கேட்கவில்லை. இந்த எழவு எனக்கு எப்போதும் புரியப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.

ஹோவென்ற அந்த இரைச்சலுக்கு மத்தியில் எங்களுக்குள் ஒர் மயான அமைதி நிலவியது. இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். தொடர்பு விட்டுப்போன நன்பர்கள் குறித்து, அவன் வேலை குறித்து, பழைய நினைவுகள்.. ஆனால் அவனோ எதையும்
கேட்கும் நிலையில் இல்லை. நிறைய பேச்சு சப்தம் அந்த அறையில் இருந்து எழுந்தது; ஆனால் அவையெல்லாம் டீ.வி திரைக்குள்ளிருந்து. என் பக்கமாக அவன் திரும்புவதாயில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், அவன் மனைவியும் என் மனைவியும் சமையலறையில் இருந்து வெளியே வந்தனர் – கைகளில் காபிக் கோப்பைகளோடு.

காபி அருந்தும் போது கூட அவன் திரும்பவேயில்லை. விளையாட்டு எந்தளவுக்கு கவர்ந்ததோ அதேயளவுக்கு விளம்பரங்களும் அங்கேயிருந்த எல்லோரையும் கவர்ந்தது. என் மனைவியும் மகனும் விளம்பரங்களை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளூர பயம் ஆரம்பித்து விட்டது.. ‘ இந்த மாதம் ‘இன்ப்ளேஷன்’ நோயால் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் எனது பர்ஸ் ஏற்கனவே மெலிந்து கிடக்கிறது; இவர்கள்
இனிமேல் புதிதாய் ஏதேதும் பூதத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது’ என்கிற சிந்தனை வேறு வாட்டிக் கொண்டிருந்தது.

ஏண்டா வந்தோமென்றாகி விட்டது எனக்கு. அழைப்பில்லாத கல்யாண வீட்டுக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் எந்த உரையாடலும் இன்றி ஹோவென்ற அந்த இரைச்சலின் பின்னனி இசையுடன் இப்படியே கழிந்திருந்த நிலையில்.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அந்த இரைச்சல் என் மூளைக்குள் அமிலத்தைக் கொட்டுவது போலிருந்தது.

“டேய் நாங்க அப்ப கிளம்பறோமே..” இதற்காவது திரும்புவான் என்று எதிர்பார்த்தேன்

“ம்ம் சரிடா” தலையைத் திருப்பாமலேயே பதிலை வீசினான்.

“சரிங்க அப்ப நாங்க வர்றோம்.. ஞாயித்துக் கிழமை நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க அஞ்சாவது மாடில தான் இருக்கோம்” என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்தேன். கூடவே என் மனைவியும், பெரும் கடுப்போடு என் மகனும் எழுந்து விட்டனர்.

நாங்களே கதவைத் திறந்து வெளியே வந்து சாத்தி விட்டு லிப்டை நோக்கி நடையைப் போட்டோ ம். கடும் ஏமாற்றமாக இருந்தது… எத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த நன்பன்.. புதிப்பிக்கப் போகும் நட்பைக் குறித்து மகிழ்ச்சியாக வீட்டிலிருந்து கிளம்பினேன்.. இப்போது சோர்வாக உணர்கிறேன். போதைக்கு ஆட்பட்டவனைப் போல டி.வி திரையை வெறிக்கும் நன்பன் எனக்கு வினோதமாய் தென்பட்டான். எல்லோரும் நடமாடும் பண்டங்களாகிவிட்டாகளோவென்கிற சந்தேகம் எழுகிறது. 

விளையாட்டு என்னும் நிலையைக் கடந்து கிரிக்கெட் வேறொருதளத்தை அடைந்துவிட்டது புரிந்தது. ஆட்டத்தின் இடையே கவர்ச்சியான உடையலங்காரத்தோடும்
ஆபாசமான உடலசைவுகளோடு ஆடும் பெண்கள். பரபரப்பு, ஆபாசம், வக்கிரம் என்று ஒரு நீலப்படத்தின் சகல அம்சங்களோடும் இருக்கிறது. விளம்பரங்களை வெறித்துப் பார்க்கும் பொடிசுகள் நம் மனதுக்குள் கலவரத்தை விதைக்கிறார்கள். ஏற்கனவே என் வாரிசு பெரும் பிடிவாதக்காரன்..இப்போது என்னென்ன எழவை மனதுக்குள் குறித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லை.

என் மகன் தான் கேட்டது கிடைக்கப் பெற்றால் தான் என்னோடு சகஜமாக பேசவே செய்கிறான். அந்தளவுக்கு இந்த விளம்பரங்கள் பொருட்களை வலுக்கட்டாயமாக மூளைக்குள்ளேயே திணித்து விடுகிறது. மனித உறவுகளே கூட வணிகமயமாகிவிட்ட போது விளையாட்டுகள் எம்மாத்திரம்.. அதிலும் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டின் இடையிடையே தோன்றும் விளம்பரங்களோ வீரிய ஒட்டுரக வகையைச் சேர்ந்தவை. திரையில் சிக்ஸர் அடித்த அதே வீரர் இடைவெளியில் வந்து ‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்றால் என் மகன் வீட்டில் செய்த நவதானிய சத்துமாவை காறித்துப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

எப்போது படுத்தேன் எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை; இதே நினைவுகளோடே உறங்கிப் போனேன்… அன்றைக்குக் கனவில் நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் நிற்பது போலொரு காட்சி தோன்றியது. அக்கூட்டத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எல்லோரும் என்னோடு பேசினர், நானும் எல்லோரோடும் பேசினேன்.. ஆனால் எவருக்கும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. எங்கள் எல்லோரையும் ஏதோவொரு திரை – கண்களுக்குத் தெரியாத கண்ணாடித் திரை – மறித்து நிற்பது போலிருந்தது. தொட்டு விடும் தூரத்தில் தான் சுந்தர் தெரிந்தான்; ஏதோ பேசினான் எனக்குக் கேட்கவில்லை. எனது சப்தமும் அவனுக்குக் கேட்டிருக்காது. எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாத உணர்வொன்று அனைவரையும் ஆட்கொண்டது. இயந்திரம் போன்ற இறுக்கமான முகத்தோடே என் மகன் என்னைக் கடந்து போகிறான்.. வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உன்னோடு பேச்சு மட்டும் என்ன கேடு என்று அவன் முகம் சொன்னது மட்டும் எனக்குக் கேட்டது.. அந்தத் திரை சப்தங்களை மறித்தது போய் காற்றைக்கூட மறிக்கத் துவங்கிவிட்டதோ..  மூச்சுத் திணறுவது போலிருக்கிறது. சப்தங்களோ காற்றோ கூட இல்லை.. மரணாவஸ்த்தையாக இருக்கிறது.. ஆயினும் சிலர் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது..  

சட்டென்று விழிப்பு வந்தது – தொப்பலாக வியர்த்திருந்தேன். அந்தத் திரை…அந்தத் திரை… அதை… உடைத்து நொருக்கத் தான் வேண்டும்..!

 

 

மே 21, 2008 Posted by | culture, short story | | 3 பின்னூட்டங்கள்

ஊமைப் பட்டாசுகள்!

“ஹம்ப்க்” ஒரே தம்மில் லாவகமாய் அந்த வெங்காய மூட்டையை ஏற்றிக் கொடுத்தான் துரை.

அது தாராபுரத்தின் ஒரு சின்ன காய்காறிச் சந்தை. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வரும் வெங்காயமும் தக்காளியும் தரம் பிரிக்கப்பட்டு சென்னையின் பெரிய சந்தை ஒன்றுக்கு லாரிகளில் லோடடிப்பார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள் அது. பண்டிகை நாளுக்கான எந்த பரபரப்பும் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது சந்தை. போன வருடம் இதே நாளில் எள்ளுப் போட்டால் கீழே என்னையாகி விழும் கூட்ட நெறிசல் இருந்தது துரையின் மனதில் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தது.

“ஐய்யே.. கொஞ்சம் மெதுவாத்தான் தாயேன்… ஸ்லிப்பாவுதுபா…” வழுக்கிய ஒரு முனையை அட்ஜஸ் செய்து மேலே தூக்கிக் கொண்டே சொன்னார் பெரிசு.

பெரிசுக்கு என்ன வயதென்றே எவராலும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அனேகமாக இந்த சந்தை செயல்பட ஆரம்பித்த துவக்க நாட்களிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். பெயர் கூட இன்னதென்று எவருக்கும் தெரியாது – அதைப்பற்றி எவரும் கவலைப்பட்டது கூட கிடையாது – எல்லோருக்கும் அவர் “பெருசு” தான். சந்தை அடைந்த பின் ரோட்டின் எதிர்ப்புரத்தில் இருக்கும் ராயப்பன் டீக்கடையின் திண்ணை தான் பெரிசின் ஜாகை. பச்சைக் கலரில் ஒன்றும் நீலக்கலரில் ஒன்றுமாக இரண்டு முண்டா பனியன்கள் உண்டு அவரிடம். மிகக் கூர்மையாக கவனித்தால் தான் அதன் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். பெரிசுக்கு பேச்சுக் கூட்டாளி துரை தான். வேறு எவரிடமும் அவர் அனாவசியமாகப் பேசி யாரும் கவனித்ததே இல்லை.

“என்னாங்கடா அங்க பேச்சு? எத்தினி மூட்டைய ஏத்திருக்கீங்க?” இருபதுகளின் துவக்கத்தில் இருந்த செட்டியார் மகன் முப்பதுகளின் இறுதியில் இருந்த துரையையும் பெரிசையும் அதட்டல் குரலில் கேட்டுக் கொண்டே மண்டியில் இருந்து வெளியே வந்தான். ஆட்காட்டி விரலை அடையாளமாய்ச் சொருகி ஒரு குமுதத்தைக் கைவிரல்களில் பற்றியிருந்தான். நாளைய ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் புக் பண்ண போக முடியாமல் நாற்றம் பிடித்த வெங்காய மண்டிக்குள் திணித்து விட்டு திருப்பதிக்கு சேத்ராடனம் கிளம்பி விட்ட அப்பனின் மேலான எரிச்சல் மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. உழைப்பேயறியாத ஊளைச் சதை அல்லைகளில் பிதுங்கிக் கொண்டிருந்தது. வெயில்படாத தேகத்தில் பரவலாக ஒரு மினுமினுப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

“நூத்தம்பது மூட்ட ஆச்சுது மொதலாளி; இன்னும் ஒரு அறுபது தேறும்” பெரிசு பதில் சொல்லவில்லை.

“ஜல்தியா ஏத்துங்கடா.. மெட்றாசுல இருந்து போன் வருது.. வண்டிய அனுப்பனும்ல..”

“செரி மொதலாளி ஒரு டீயப் போட்டுட்டு வந்துடறோம்..” துரையின் பதிலுக்கு செட்டியார் மகன் மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே டேபிளுக்குத் திரும்பினான். ஆட்காட்டி விரல்கொண்டு அடையாளம் வைத்திருந்த குமுதத்தின் நடுப்பக்கத்தை திருப்பிக் கொண்டே ப்ளாஸ்டிக் வலைச் சேரில் சாய்ந்தான்.

துரையும் பெரிசும் ரோட்டைக் கடப்பதைக் கண்ட ராயப்பன் இரண்டு கண்ணாடித் தம்ளர்களை வென்னீரில் ஒரு அலாவு அலாவி பாய்லரின் பைப் முன்பு வைத்தான்.. “ஆத்தாமப் போடு ராயப்பா.. அப்புடியே சின்னக்கட்டு யோகி பீடி ஒன்னு” என்ற துரை இரண்டு போண்டாவை எடுத்து ஒன்றை பெரிசின் கையில் திணித்தான்.

“தொரை.. அறுபது மூட்டைக்கு இது காணுமா..? சாயந்திரமா மேட்டுப்பாளையத்திலேர்ந்து தக்காளி டெம்போ வேற வருது..”

ராயப்பனின் அழுக்கடைந்த எப்.எம் ரேடியோ கரகரப்பாக, “இது ஒன் ஜீரோ பைவ் பாய்ண்ட் நைன் சூரியன் எப்.எம். நீங்கள் கேட்டிக் கொண்டிருப்பது நேயர் விருப்பம். நேரமிப்போது இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்…..” என்றபடியே உளரலைத் தொடர்ந்து கொண்டே போனது..

“கேட்டியா பெரிசு.. மணி ஏற்கனவே ரெண்டே முக்கா.. சாப்புடப்போனா மணி மூன்ற ஆய்டும். இவிங்கய்யன் மாறி இவனுக்கு பொறுமையே இல்ல.. சும்மாவே கத்திட்டு இருக்கான்..” என்றவாறே ரோட்டின் எதிர்ப்புறத்தில் மண்டியினுள் குமுதத்தில் தலையைக் கவிழ்த்துக் கிடந்த செட்டியார் மகனை சுட்டிக் காட்டினான் துரை.

சின்னக்கட்டு யோகியைப் பிரித்து அதில் ஒன்றை உதட்டோ ரம் சொருகி வெட்டுப்பல்லால் கடித்த படியே.. ” இந்த செட்டிப் பயலுக்கு மூளைல கரையான் புடிச்சிருக்கு போல.. ஏற்கனவே யாவாரம் டல்லு.. ஊரே பூராம் பெரிய பெரிய காய்கடைகள ஏசி போட்டு தொறந்து வச்சிருக்கான்.. போன நோம்பிக்கும் இந்த நோம்பிக்கும் எத்தினி வித்தியாசம்..? போன வருசம் இதே நாளு நானும் நீயுமா ஐநூறு மூட்டைய ஏத்துனோம் ஒவ்வொரு நாளும் மூன்னூறு மூட்டைக்கு கொறவில்லாம ஏத்துவோம்.. இப்ப என்னாடான்னா… நாளுக்கு நூத்தம்பது மூட்ட தேறுனாலே அதிகம்னு வண்டியோடுது.. இத்தினிக்கும் போன வருசம் பத்து மண்டி; இந்த வருசம் நாலு தான் பொழச்சுக் கெடக்குது.. யாவாரமே இப்புடி தெடுமாறிக்கிட்டுக் கொடக்க இந்த செட்டிப்பய பொறுப்பில்லாத மவனக் கொண்டாந்து ஒக்கார வச்சிட்டு திருப்பதிக்குப் போயிருக்கான். அவன் வாரதுக்குள்ளாற இவன் உள்ள
யாவாரத்துக்கும் மொட்டையடிச்சிடுவான் போலிருக்கு…”

நீளமாய்ப் பேசிய பெரிசு புகையை வெளியே தள்ளினார் பெரிசு..

“ட்ட்ட்ட்ட்ட்டொம்ம்ம்ம்”

செவிப்பாறையின் அதிரலில் துரை ஒரு முறை தோளைக் குறுக்கிக் கொண்டான் ” யார்ராவன் கேணப்பொச்சு.. நாளைக்கித்தான நோம்பி.. இப்பயே காதக் கிழிக்கிறானுங்க” முணுமுணுத்துக் கொண்டே துரை திரும்பிப்பார்த்தான். தெருமுனையில் சில பையன்கள் அடுத்த பட்டாசைப் பற்றவைக்க அதன் திரியை நக நுணியால்
கிள்ளியவாறே வந்து கொண்டிருந்தனர். பெரிசு எந்த பாதிப்புமில்லாமல் கடைசியாக ஒருதரம் இழுத்து விட்டு பீடியைத் தூர எறிந்தவாறே ஆமோதிப்பாய் பார்த்தார்.

காலையில் இருந்து சலிக்காமல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததில் அனேகமாய் மறந்தே போய் விட்டிருந்த அந்த விஷயம் துரையின் மனதில் மீண்டும் மேலே எழுந்தது – நாளைக்கு தீபாவளி!

“நோம்பியன்னிக்கு வெடிச்சா பத்தாதா? ஒரு நா மின்னயே வெடிசி ‘எங்கூட்டுக் காசு காரியாகுது பாரு’ன்னு ஊரையேக் கூட்டனுமா?” பெரிசிடமிருந்து ஆசுவாசமாய் அந்த வார்த்தைகள் வெளியேறியது..

துரை கஷ்ட்டமாய் எச்சிலை விழுந்தியவாறே லுங்கியை உயர்த்தி உள்ளே போட்டிருந்த நீல டவுடரின் வலது பக்கப்பையினுள் கையை விட்டு வெளியே எடுத்தான். கூடவே கொஞ்சம் கசங்கிக் கோணலாகிப் போயிருந்த சிரிப்புடன் காந்திக் காகிதங்களும் வெளியே வந்தது. துரை அந்த கோனல் சிரிப்புகளை நேராக்கி நோட்டுகளை ஒரு வரிசையாய் அடுக்கினான். மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்த்தான் – நானூறு! இன்றோடு இருபது நாட்களாய் ஓவர் டைம் செய்து சேர்த்த காசு. மூட்டைக்கு ஒரு ரூபாய் கூலி என்று போட்டால் ‘இன்னிக்கு எப்டியும் ஒரு நூறு சேர்ந்துடும்’ என்று நினைத்துக் கொண்டான்..
இருபது நாட்களுக்குப் பின்னும் அய்னூரு ரூபாய் தான் தேற்ற முடிந்தது என்பது அவனுக்கு ஆற்றாமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கையில் இருந்த காகிதங்களில் காந்தியின் சிரிப்பில் ஏதோ ஒரு குரூரத்தன்மை இருப்பதாகப் பட்டது அவனுக்கு.. ‘மவனே நீ யாரோ எவரோ… ஆனா என்னிக்காவது கைல மாட்டினே… ங்கொய்யால’ மனதுக்குள் கருவிக் கொண்டே அந்தத் தாள்களை மீண்டு வலது பக்க பையினுள் திணித்துக் கொண்டான்.

இன்னும் பற்ற வைக்க மறந்த பீடியை பற்ற வைத்து உதட்டுக்குக் கொடுத்தான். புகை காரமாக தொண்டையைக் கடந்து நுரையீரலை நிரப்பியது. இறுக்கமாக இருந்த ஏதோவொன்று உள்ளே தளர்ந்தது. எப்படி சமாளிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினான்.. காலையில் கிளம்பும் போது சின்னவன் சொல்லியனுப்பிய வார்த்தைகள் வேறு உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“யப்போவ் நீ ஏன் எனுக்கு இன்னியும் புது டிரஸ் எடுக்கல? இன்னிக்கு வரும்போது புதுத்துணி.. பட்டாசு..லட்டு எல்லாம் வாங்கிட்டுவாப்பா..
சேகருக்கெல்லாம் போன வாரமே துணி எடுத்தாச்சு தெரீமா?” பத்து வயது சிந்தனைக்கு அப்பனை யாரோடு ஒப்பிடுவது என்று கூடத் தெரியவில்லை. கடைசி வாக்கியத்தை முடிக்கும் போது சின்னவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

“சரிடா கண்ணு” நம்பிக்கையே இல்லாமல் நம்பிக்கை சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது… “கமலாவுக்கு இன்னிக்கு முறுக்குக் கம்பெனில வாரக் கூலி கொடுத்துடுவாங்க.. அது ஒரு நானூறூ.. நம்மளோடது ஒரு அய்நூறூ.. மொத்தமா ஒரு தொள்ளாயிரம் தேறுது.. இதில பெரியவனுக்கும் சின்னவனுக்கும் துணி..அப்புறம் பட்டாசு பலகாரம்….- ம்ஹூம் இது பத்தவே பத்தாது.. என்ன செய்யலாமென்ற கேள்வி உள்ளே பிடுங்கித் தின்றது

பெரியவன் ஏதும் பேசவில்லை. பதின்ம வயதுகளின் மைய்யத்திலிருக்கும் அவனுக்கு அரைகுறையாய் நிலவரம் புரிந்தது.
அவன் பார்வையாலேயே சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டான். திங்கட் கிழமை புதுத் துணியோடு பள்ளிக்கு வரும் பையன்கள் மத்தியில் பழையதைப் போட்டுக் கொண்டு போவது இன்னும் முழுமையாய் உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவனுக்குள்ளே எப்படிக் கூசும் என்பதை துரையால் உணர முடிந்தது.

இருபது நாட்களாக பதினாறு மணிநேரம் வேலை செய்து பார்த்தாகி விட்டது. மதிய வேளையில் வெறும் போண்டா டீயுடன் இருபது நாட்களாக சமாளித்தும் பார்த்தாகி விட்டது. ஆனாலும் ஐநூறு தான் தேறி இருக்கிறது. போன வருடம் தீபாவளி சமயத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சந்தையை நினைத்துப் பார்த்தான். அடுத்த வருடத்தைப் பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது. பத்து வயதில் தாய் தகப்பனை இழந்து விட்டு அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த பொது அள்ளி அனைத்துக் கொண்ட சந்தை. போன வருடமெல்லாம் ஒவ்வொரு காய்க்கும் தனித்தனியே ஒரு நான்கைந்து மண்டிகளாவது இருக்கும். வெங்காயத்துக்கு மட்டுமே பத்து மண்டிகள் இருந்த நாட்கள் அது. இன்றோ அதில் பாதி ஆவியாகி விட்டது. சென்னைக்கு லோடடிக்கும் லாரிகளும் பாதியாய்க் குறைந்து விட்டது. அவன் கண் முன்னேயே அந்த சந்தை தனது இறுதி மூச்சை விட்டுக்
கொண்டிருக்கிறது. வேலை குறைய குறைய ஒவ்வொருவராய் குடும்பத்தோடு திருப்பூருக்கு கூலிகளாய்ப் போய் விட்டனர். துரைக்கு என்னவோ இந்த சந்தையை விட்டுப் போக மனமே இல்லை. தனது தந்தையே மரணப்படுக்கையில் இருப்பது போலத் தோன்றியது அவனுக்கு. எல்லாரும் போனாலும் கடைசி வரைக்கும் தனியாளாகவாவது இங்கே தான் இருக்க வேண்டும் என்று வைராக்கியமாய் நினைத்துக் கொண்டான். அதைத் தன் கடமையாகவே
கருதினான் அவன்.

அவனுக்கும் அந்த சந்தைக்குமான உறவு உணர்வுப்பூர்வமாய் இருந்தது.. பண்டிகைக்கால இயலாமைகளால் சந்தையை வெறுக்க வேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சினான்.. ஒருகணம் அவனுக்குள் கொண்டாட்டங்கள் மேலேயே வெறுப்பு மேலிட்டது

“அடச்சே இந்தப் நோம்பி எளவு வந்தாலே பெரிய தொல்லையாப் போச்சு. உங்கத்திங்கவே கூலியெல்லாம் சரியாப்போகுது.. இதில பட்டாசு பலகாரம் துணிமனி.. நாய் பொழப்புடா சாமி…” தன்னை மறந்து வார்த்தைகள் வெளியே வந்துவிட்டது.

வேறேதோ சிந்தனையிலிருந்த பெரிசு திரும்பிப் பார்த்தார்; ஏதும் பேசாமல் அடுத்த பீடியை உருவிக் கொண்டார்.

“ஏய் சீக்கிரமா வாங்கடா…” செட்டியார் மகன் ரோட்டின் எதிர்ப்புறத்திலிருந்து தனது புது அதிகாரத்தை சோதித்துப் பார்த்தான். தூரத்தில் மேட்டுப்பளைய தக்காளி டெம்போ வளைவில் சிரமமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.. நீண்டதொரு பெருமூச்சுடன் துரை எழுந்தான்.

                                         0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0

“வெங்காய மூட்ட எறநூத்திப் பத்துங்க.. அப்பால தக்காளிக் கூட ஒரு எளுபதுங்க மொத்தமா எறநூத்தியெம்பதுங்க” இரவு மணி பத்தாகிவிட்டது.. செட்டியாரி மண்டி தான் கடைசியாக இயங்கிக் கொண்டிருந்தது.

“இந்தா இதில முன்னூறு இருக்கு. இருவதுருவா தீவாளிக்காசு. பப்பாதியாப் பிரிச்சுக்கங்க.. கோட்டரப் போட்டுட்டு மல்லாந்துடாம வூட்டுக்குப் போற வளியாப் பாரு…. என்னா..?” செட்டி மகன் தனது முதலாளி முறுக்கைக் காட்டினான்.

துரை உள்ளே குமைந்தான் ‘இந்த லூசுப்பய மவங் கிட்ட எவம் பேசுவான்’ என்று நினைத்துக் கொண்டு “சரிங்க” என்றவாறே திரும்பினான். லேசாகத் தூரல் போட்டது.. மண்டி சந்தில் சாய்த்து நிறுத்தியிருந்த சைக்கிளை வெளியே எடுத்து உருட்டிக் கொண்டே ரோட்டைக் கடந்து ராயப்பன் டீக்கடை நோக்கிப்
போனான். பெரிசு டீக்கடைத் திண்ணையில் சாய்ந்து கொண்டு கடைசியாய் மிஞ்சிய இரண்டு பீடியில் ஒன்றை உருவி பற்ற வைத்துக் கொண்டிருந்தார்.

“தா.. பெரிசு.. ஒன்னோட பாதி நூத்தம்பது ரூவா” என்று பணத்தை இடது கையால் நீட்டிக் கொண்டே வலது கையால் கடைசி பீடியை பெரிசின்
கையிலிருந்து உருவினான் துரை.

“அதையும் நீயே வச்சுக்க.. அப்பால திருப்பித்தா போதும்.. அப்படியே இந்தா இதில ஒரு முன்னூறு இருக்கு இதையும் வச்சிக்க” என்றபடியே
கசங்கிய ரூபாய்த் தாள்களை துரையின் கையில் திணித்தார் பெரிசு. வாங்கத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் துரை..

“அட என்னப்பா அப்புடிப்பாக்குறே? எனுக்குத் தெரியாதா நீயேன் ஒரு பத்திருபது நாளா இஞ்சியத்தின்னவன் மாறி அலைஞ்சிட்டிருக்கேன்னு…
இருக்கவனுக்கு கொடுத்துதவ ஆயிரம் பேர் இருக்கான்.. நமக்குன்னு வேற யார் இருக்கா? ஒனக்காவது குடும்பம் இருக்கு; எனக்காரு இருக்கா? நாளைக்கு ஒனக்கு நோம்பி.. எனக்கு நாளைக்கு ஒரு நா லீவு.. காசிருந்தா நாளைக்கு ஒரு ஆப்ப உள்ள உட்ருப்பேன்.. பரவால்ல தொர..
கெளம்பரக்கு மின்னாடி பாய் கடைல போய் முட்டிக்குலுங்கர என்னை ஒரு புட்டி வாங்கிக் கொடுத்துட்டுப் போ…” என்றபடியே கரைந்து போயிருந்த பீடியைத் தூர எரிந்தார் பெரிசு.

துரைக்கு திடீரென்று உற்சாகம் முட்டிக் கொண்டு கிளம்பியது. அப்பாடா…வென்றிருந்தது அவனுக்கு..

“சரி சரி பேந்தப் பேந்தப் முழிச்சிட்டு நிக்க வேணாம்.. கெளம்பு. மணி இப்பயே பத்தாச்சு. மூலனூருக்குப் போய்ச்சேர இன்னும் ஒருமணி நேரமாகும் ஒனக்கு. அதுக்கு மின்ன பொடிசுகளுக்கு துணிமனிய வேறெ வாங்கனும்.. கெளம்பு கெளம்பு”

மழை வலுத்திருந்தது.. சாரலாய் ஆரம்பித்தது இப்போது வானமே பொத்துக் கொண்டது போல் ஊற்றியது. துரை எல்லா ரூபாய்த் தாள்களையும் இரண்டு பாலித்தின் கவருக்குள் போட்டு சுருட்டி கால்சட்டைப் பாக்கெட்டில் சொருகி வைத்தான்.. என்னென்ன வாங்க வேண்டும் என்பதை மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே கடைவீதிப் பக்கமாய் சைக்கிளை மிதித்தான். மழைத்தண்ணீர் ரோட்டில் மூட்டளவையும் தாண்டி ஆறாக ஓடியது.

ராவுத்தர் பாய் புதிதாக ஒரு தார்பாய் பந்தல் போட்டு பட்டாசுக்கடை ஒன்றைத் திறந்திருந்தார். அதன் எதிரே சைக்கிளை ஸ்டாண்டு போட்டு விட்டு,

“பாய்.. நமக்கு ஒரு ரெண்டு கட்டு கம்பி மத்தாப்பு, அஞ்சு கட்டு கேப் வெடி, ரெண்டு துப்பாக்கி, மூனு கட்டு பிஜிலி, ரெண்டு கட்டு பெரிய லச்சுமி வெடி, அணு குண்டு ரெண்டு பாக்கெட்டு, சர வெடி நாலு கட்டு, பூவாளி ரெண்டு பாக்கெட்டு, ராக்கெட்டு ரெண்டு பாக்கெட்டு கட்டுங்க.. நான் போயி இனிப்பும் பசங்கலுக்கு துணியும் எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறே சாலையின் எதிர்ப்புறத்தில் ப்ளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு புதிதாய் முளைத்திருந்த துணிக்கடைகளைப் பார்த்து நடையை எட்டிப் போட்டான் துரை.

ராவுத்தர் கடையைக்கு நாலுகடை தள்ளி புதிதாய் மின்னும் பெயர்ப்பலகையோடு ஒரு புதிய  சூப்பர் மார்க்கெட் கடை திறந்திருந்தார்கள்.. தெரு முழுவதும்
அடைத்துக் கொண்டு  அதன் வாடிக்கையாளர்களின் கார்கள் நின்றிருந்தது.. பாதிக் கார்களில் ஆட்கள் இருந்தார்கள்.. கதவைத் திறந்தால் உள்ளே பாய்ந்து வரத் தயாராய்
மழைத்தண்ணீர் காத்துக் கொண்டிருக்க, உள்ளே அடைத்த கதவுகளுக்குள் புழுக்கம் தாளாமல் நெளிந்து கொண்டிருந்தார்கள்.. துரைக்கு அவர்களின் முகவோட்டைத்தைக் காணவே வேடிக்கையாய் இருந்தது. அந்தக் கடைக்கு எதிர்ச்சாரியில் தான் தார்ப்பாலின் துணிக்கடைகள் இருந்தது.. போலீசுக்காரன் ஒருத்தன் “அனுமதியில்லாமல்” கடை போட்டதற்காக ரோட்டோ ரக் கடைக்காரர்களிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தான்.. ராவுத்தர் ஏற்கனவே அந்தப் போலீசுக் காரனுக்கான மாமூலை பட்டாசாகக் கட்டி வைத்து விட்டார்.

மீண்டும் துரைக்கு சில ஆண்டுகளின் முந்தைய நினைவு தட்டியது.. அப்போதெல்லாம் இந்தக் கடைவீதிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்.. இப்போதோ அந்த இடத்தைக் கார்கள் தான் அடைத்திருக்கிறது.. ‘அந்த மனிதர்களெல்லாம் எங்கே தான் போயிட்டாங்க…?’ துரையின் மனம் விடை தெரியாத அந்தக் கேள்வியை எழுப்பிப் பார்த்தது. எதிர்ச்சாரியில் இருந்த ரோட்டோ ரத் துணிக்கடைகளிலும் பெரிதாகக் கூட்டமில்லை. நகை நட்டுகளை அடமானம் வைத்து வாங்கிய சரக்கை எப்படித் தள்ளுவது என்கிற கவலை அவர்கள் முகங்களில் தெரித்தது…

எல்லாம் வாங்கி விட்டுக் கிளம்பும் போது மணி பதினொன்று முப்பது ஆகிவிட்டது. மூலனூர் போய்ச் சேரும் போது பண்ணிரண்டு தாண்டிவிட்டது. இன்னும் மழை ஊற்றிக் கொண்டிருந்தது… தொப்பலாக நனைந்திருந்தான் துரை. வீட்டில் இன்னும் அறுபது வாட்ஸ் பல்பு சோகையாய் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் வெடிக்கும் வெடியோசை பம்மலாய்க் கேட்டது.சின்னவன் இன்னும் தூங்கவில்லை போலும்.. தன் அம்மாவிடம், அப்பா எப்போ வருவார் என்றூ விசாரித்துக் கொண்டிருந்தது துரைக்குக் கேட்டது. வீட்டுக்கு முன்னிருந்த மட்டைப் பந்தலுக்குக் கீழே சைக்கிளை சார்த்தி நிறுத்திவிட்டு கேரியரில் இருந்த பெரிய பட்டாசு பார்சலையும், முன்னே ஹேண்டிலில் ஊசலாடிக் கொண்டிருந்த துணிப் பையையும் அவிழ்த்து எடுத்தான். பனியனுக்குள் சொருகி வைத்திருந்த இனிப்புப் பார்சலை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டான்..

“கமலா.. கதவத் தொற…”  கண்களின் எரிச்சலையும் தாண்டி சின்னவனின் முகம் போகும் போக்கைக் காண துரைக்கு ஆவலாய் இருந்தது…

“அப்பாடா.. ஒங்க வாரிசு போட்டு கொடஞ்சி எடுத்திட்டான்.. அடேய்ய்ய்.. ஒங்கப்பன் வந்தாச்சி பாரு” என்று கதவைத் திறந்து கொண்டே உள்ளே
திரும்பி குரல் கொடுத்தாள் கமலம்.

“ஹேய்ய்ய்….” என்று கத்திக் கொண்டே வந்த சின்னவன் பார்சல்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு நேரே பாய்க்கு ஓடினான். சப்தம் கேட்டு பெரியவனும் விழித்துக் கொண்டான்.

“என்ன செய்திருக்கே” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தான் துரை.. பொடியன்கள் இருவருமாகச் சேர்ந்து கொண்டு பார்சல்கள் ஒவ்வொன்றால் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“காலைல ஆக்குனது அப்பிடியே இருக்கு. ரசம் வச்சு கருவாடு வருத்திருக்கேன்” என்றபடியே அவளும் திரும்பிப் பார்த்தாள். சின்னவன் முக்கியமாய் பட்டாசுக் கட்டுகளை பிரித்துக் கொண்டிருந்தான்.

“அடேய்… அதையெல்லாம் ஏண்டா இப்பயே பிரிக்கிறே.. காலைல பாத்துக்கலாம் போய் படுங்கடா” என்று கத்தினாள்..

“வுடு கமலா.. வருசத்தில ஒரு நாளு…” என்ற துரையின் மனதில் பெரிசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய மூன்னூற்றைம்பது நினைவுக்கு வந்தது.

“எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான்; இவனுக ரெண்டு பேரும் கெட்டுப் போறானுக” கமலா அதே அறையில் இன்னொரு பக்கத்தில்
படுதா கட்டிப் பிரித்திருந்த சமயலறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னாள்..

“வுடுறீ… சின்னப் பசங்க.. அப்புடித்தான் இருப்பாங்க” பனியனைக் கழட்டி அறையின் குறுக்கே ஓடிய கொடியில் போட்டான் துரை. அதிலேயே தொங்கிய துண்டை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்திருந்த துரை சின்னவனின் குதூகலத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சின்னவன் உலகத்தையே மறந்து சர வெடிகளையெல்லாம் தனித்தனியே பிரிப்பதில் மூழ்கி இருந்தான்.

“அதையேண்டா பிரிக்கிறே…?”

“அப்பத்தான்பா ரொம்ப நேரம் வெடிக்க முடியும்..” சின்னவன் திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

“காலைல பார்த்துக்கலாம் வா படு.. கமலா லைட்ட ஆப் பண்ணிடு”

                                              0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o

“யப்போய்.. எழுந்திரிச்சி வாப்பா.. பாலா எனக்குத் தராம அவனே வெடிக்கிறான்” சின்னவனின் குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது.. முழங்கையால் முட்டுக் கொடுத்து தட்டுத் தடுமாறி எழுந்து பார்த்தான் துரை. தலைக்கு மேலே அறுபது வாட்ஸ் பல்பை சுற்றி இரண்டு மூன்று பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது. கால்மூட்டுகளைப் பிடித்துக் கொண்டே பாயில் இருந்து எழுந்தான்.. தலைக்கு மேலே ஒரு பாறாங்கல்லையே வைத்தது போல் ஒரு பாரம் அழுத்தியது. வெளியே வந்து பார்த்தான்; இன்னும் முழுவதுமாக விடியவில்லை..

அத்தனை நேரத்திலும் “பொடு பொடு” வென்று எங்கோ தூரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. பெரியவன் கையில் பாலித்தின் பையை வைத்திருந்தான். அந்தப் பையில் முந்தைய இரவு வெடிச் சரத்தில் இருந்து உதிர்த்த பட்டாசுகளை நிரப்பியிருந்தான்..

“யேய்.. தம்பிக்கும் கொடேண்டா…” வாயில் லேசாக கசப்பாக உணர்ந்தான். ‘இதென்னடா எழவு.. காய்ச்சலோ..?’ என்று நினைத்துக் கொண்டான்.

“அப்பா.. அவன் பத்த வெச்சிட்டு பக்கத்திலேயே நிக்கிறான்.. வெடிக்கவே தெரியலெ” என்று திரும்பிப் பார்க்காமலேயே குரல் கொடுத்தான் பெரியவன்.

“ரெண்டு பேரும் மொதல்ல பல்லு வெளக்கிக் குளிச்சிட்டு வாங்க; உங்கம்மா எங்கெ போயிருக்கா?” உள்ளே திரும்பிப் பார்த்தான்; கமலத்தைக் காணவில்லை..

“இன்னிக்குத் தண்ணி வர்ற நாளு..” இதற்கும் பெரியவன் திரும்பிப் பார்க்கவில்லை..

“சண்ட போடாம வெடிங்க” என்று விட்டு பந்தலடியில் சார்த்தியிருந்த சைக்கிள் கேரியரில் குடம் கட்டும் தாம்புக் கயிரை சொருகிக் கொண்டு
பெருமாள் கோயிலை நோக்கி அழுத்த ஆரம்பித்தான்.

கோயில் கருவறைக்கு நேர் எதிரே தான் வீதி பைப் உள்ளது. அந்த அதிகாலை மூன்று மணிக்கு பைப்பில் அவ்வளவாக கூட்டமில்லை. கமலம் வீட்டிலிருந்த ஐந்து ப்ளாஸ்டிக் குடங்களுடனும் அங்கே நின்றிருந்தாள்.. அவர்கள் தெருவில் இருந்த வேறு சில பெண்களும் அவர்கள் கனவன்மார்களுமாக அங்கே ஒரு சின்னக் கூட்டம் இருந்தது.

“என்னெ எழுப்ப வேண்டியது தானே?’ என்றபடியே சைக்கிளை ஸ்டாண்டு போட்டான் துரை..

“மேலெல்லாம் கொதிச்சிட்டிருந்தது.. அனத்திட்டு இருந்தீங்க. அதான் ரெவ்வெண்டா நானே கொண்டாந்திரலாம்னு வந்தேன்..” அவளும் இன்னும் குளித்திருக்கவில்லை..

“ம்ம்ம்ம் நல்லா தலைய வலிக்குது. ஒரே பாரமா இருக்கு”

பெருமாள் கோயிலில் இருந்து மணிச்சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர் – அந்த காலை நேரத்திலேயே கீழ்தெரு உஷா மாமியும் அவரது மருமகளும் எண்ணை தேய்த்துக் குளித்து விட்டுக் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். பெருமாளும் அவர் சம்சாரமும்
அணிந்திருந்த பழைய துணிமனிகளை குருக்கள் எடுத்து வந்து பந்தல் மேல் எரிந்து விட்டு புதிதாய் பட்டுப் பீதாம்பரமும், பச்சைப் பட்டையும்
உஷா மாமியிடம் இருந்து வாங்கிக் கொண்டு உள்ளே கருவறைக்குள்ளே நுழைந்தார்..

“யோவ் உனுக்கு ஏன்யா இந்த வருசம் துணியெடுக்கல” அவளுக்கு எடுக்காததை அவள் கேட்கவில்லை

“இதுக்கே கடன்; நமக்கு பொங்கலுக்குப் பாத்துக்கலாம்” அவளுக்கும் சேர்த்தே பதில் சொன்னான் துரை

“நாம என்ன பெருமாளா.. ஊரான் எடுத்துக்குடுக்க” பச்சைப் பட்டின் பளபளப்பு இன்னும் அவள் கண்ணுக்குள்ளேயே நின்றது.

தாம்புக்கயிரில் கட்டி இரண்டு குடங்களை பக்கங்களுக்கு ஒன்றாய் தொங்கவிட்ட துரை, மூன்றாவதை கேரியரின் மேல் வைத்தான். கமலம் இடுப்பில் ஒன்றை ஏற்றிக் கொண்டு,

“விஜயாக்கா, இதக் கொஞ்சம் தலைக்கு ஏத்திக் கொடேன்…” என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள்..

அங்கே சின்னவனும் பெரியவனுமாக எதை யார் வெடிப்பது என்கிற சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். துரை பட்டாசுச் சண்டைகளில் கலந்து கொள்ளவில்லை இந்த சின்னச் சின்ன சண்டைகளாவது அவர்களின் உலகத்தை சுவாரசியமாக வைத்திருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான். கமலம் பாய்கடையில் இருந்து அனாசின் வாங்கி வந்து கொடுத்தாள். உப்புமாவைத் தின்று விட்டு மாத்திரை போட்டுப் படுத்தவன் மதியம் தான் எழுந்தான். சின்னவனுக்கு மதியத்திற்குப் பின் முகம் சுருங்கி விட்டது; வெடிகளெல்லாம் அனேகமாக தீர்ந்து விட்டது. இன்னும் புஸ்வானமும் சங்குச்சக்கரமும் தான் மீதமிருந்தது..
காலையில் போலில்லாமல் மதிய நேரத்தில் பட்டாசுச் சத்தங்கள் குறைந்து விட்டது. ‘எல்லோரும் டீ.வி முன் ஒக்காந்துட்டானுவலா இல்லை நம்ம கேசு தானா’ என்று நினைத்துக் கொண்டான் துரை. அவ்வப்போது எங்கோ தூரத்தில் வெடிக்கும் பட்டாசுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் சின்னவன் ஏக்கமாய் துரையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

“யப்பா.. நாளிக்கி நம்ப வீட்டு மின்னே தானே பட்டாசுக் காயிதம் நெறயக் கெடக்கும்?..” சந்தேகமும் ஏக்கமுமாகக் கேட்டான் சின்னவன்.. துரை பதில் சொல்லாமல் அவனையே பார்த்தான்,

“சொல்லுப்பா.. மத்தப் பயங்கெல்லாம் என்னெக் கிண்டல் பண்ணுவாங்கப்பா..”

துரைக்கு உடல் வலியைத் தாண்டி உள்ளே வலித்தது.. சின்னவன் இன்னும் வீடு என்னும் கருவறைக்குள் அமைதியாக உறங்கும் குழந்தையாகவே இருந்தான். அவன் சமுதாயத்துக்குள் நுழையும் பிரசவகாலம் இன்னும் வரவில்லை. அவனது உலகம் அவனோடு இன்னும் பெரிதாக முரண்படவில்லை.. கூழாங்கற்களை அவன் இன்னும் அரிய வைரங்களைப் போல சேகரித்து வைக்கும் நாட்களில் தான் இருந்தான்.”பெரியவர்களின்” உலகத்தோடான அவன் முதல் சந்திப்பை இவன் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறானோ.. இன்னும் எத்துனை நாட்களுக்கு இவனை இப்படியே அடைகாக்க முடிமோ என்றெல்லாம் நினைக்கையில் துரைக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. தான் ஒரு குறைப்பிரசவக் குழந்தையாகவே சமுதாயத்துக்குள் திணிக்கப்பட்டதை எண்ணிப்பார்த்தான்; அதுவே இன்று தன்னை கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

வீட்டுச் சூழலும் வீட்டைச் சுற்றி இருக்கும் சூழலும் இன்னும் சின்னவனை மாசுபடுத்தியிருக்கவில்லை. சைக்கிள் ஓட்டும் துரை அவனுக்கு ஒரு பெரிய அதிசயமாகவும் ஒரு நாயகன் போலவும் தோன்றினான். ஆனால் பெரியவனுக்கோ கொஞ்சம் போல புரிய ஆரம்பித்து விட்டது; அவன் சமுதாயத்துக்குள் பிரசவிக்கப்பட்டு விட்டான். “காம்ப்ளான் பையன்களை” விளையாட்டு மைதானங்களில் பார்த்திருக்கிறான். தான் இன்னும் பழையகஞ்சி பையனாகவே இருப்பது ஏன் என்கிற கேள்வி அவனுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. புதுமணம் மாறாத புத்தகங்களை சுமந்து வரும் பையன்களிடையே அரைவிலைக்கு வாங்கிய பழைய புத்தகங்களையே தான் இன்னும் சுமந்து செல்லும் நிலைமை ஏன் என்பது புரியத்துவங்கிய போது அவன் அமைதியாகிவிட்டான். அவனது அந்த உலகம் அவனை ஊமையாக்கி விட்டது. எப்போதும் ஏதோவொன்றைப் பேசிக்கொண்டிருக்கும்  தம்பியை அவன் இப்போதெல்லாம் கரிசனமாகப் பார்க்கிறான். அவனுக்குத் தெரியும் சீக்கிரம் சின்னவனும் ஊமையாக்கப்படுவான் என்று.

மாலை இருள் கவிந்ததும் சின்னவன் முகத்தில் மீண்டும் கொஞ்சம் ஒளி வந்தது. கொஞ்சம் நேரம் மிஞ்சிய பட்டாசுகளில் சிலவற்றை மட்டும் கொளுத்தியவன் பாதி வெடிகளைஒரு கவரில் போட்டுக் கட்டி அட்டாலியில் போட்டான்..

“அதையேண்டா மிச்சம் வைக்கிறே.. கொளுத்தித் தீர்க்க வேண்டியது தானே?” கமலா பஜ்ஜிக்காக வாழைக்காயை நீள்வாக்கில் அரிந்து கொண்டே கேட்டாள்.

“அதெல்லாம் காத்தியை தீபத்தன்னிக்கு வெடிக்கப் போறன்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே பதில் சொன்னான்.. ‘அன்றைக்கு நீயென்ன புதிதாய் வாங்கித் தரவா போகிறாய்?’ என்ற குத்தல் கேள்வி அந்த பதிலில் ஒளிந்திருந்தது..

“ம்ம்ம் இவனுகளுக்கு கஷ்ட்டந்தெரியாம வளக்குறது எங்கே கொண்டு போய் விடுமோ” என்றாள் துரையைப் பார்த்துக் கொண்டே.. அதனை அவன் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“எத்தினிக் காசு… எல்லாம் ஒரே ஒரு நா கூத்துக்குக் கரியாப் போச்சி..ஆமா இத்தினியும் வாங்கக் காசு ஏதுய்யா??”

“பெரிசு கிட்டே கைமாத்து வாங்கினேன்” எப்படித் திருப்பிக் கொடுப்பது என்கிற கேள்வி முட்டிக்கொண்டு கிளம்பியது. இன்னும் இதற்கு எத்தனை நாட்கள் மதியவேளையை போண்டாவோடு சமாளிப்பது என்று கணக்குப் போடத்துவங்கினான்.

காலையில் சீக்கிரம் எழுந்து விட்டதால் பொடியன்கள் இருவரும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே தூங்கப் போய் விட்டனர். துரைக்கு ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும்
இவன்களிருவரும் எழுந்திருக்கும் முன்பே சந்தைக்குக் கிளம்புபவன், அவர்கள் உறங்கிய பின் தான் வீடு சேர்வான். வருடத்திற்கு ஓரிரு நாட்களில் தான் தனது மகன்களை அவனால் பகல் வெளிச்சத்தில் பார்க்க பேச முடியும்.. ஞாயிறு சனியென்று வார ஓய்வு நாளே இல்லாத ஓட்டம் அது.. வாழ்க்கை துரையை துரத்திய துரத்தலில் வயிற்றை சமாளித்த நேரம் போக மகன்களுடன் கொஞ்சி விளையாடவெல்லாம் நேரத்தை அவனுக்கு மிச்சம் வைக்கவில்லை. துரையைப் பொருத்தளவில் ஓய்வு என்பது உறக்கம் தான்; உறக்கம் என்பது மயக்கம் தான். ஒவ்வொரு நாள் படுக்கையில் விழும்போதும் மறுநாள் விடியும் என்பது மட்டும் தான் அவனுக்கு அச்சமாக இருந்தது.

திடீரென ஏதோ பேச்சு சப்தம் சப்தம் கேட்டு துரை திரும்பிப் பார்த்தான், சின்னவன் ஏதோ உளரிக் கொண்டிருப்பது கேட்டது… “நாங்க தான் நெறய வெடிச்சம்….” துரைக்கு திடீர் என்று தான்
அது உறைத்தது. சட்டென்று எழுந்து வீட்டு முற்றத்திற்குப் போய் பார்த்தான்.. அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்ததில் இங்கே கொஞ்சம் பட்டாசுக் காகிதங்கள் குறைவாக இருப்பதாகப் பட்டது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.. அப்படியே தெருக்கோடி வரை ஒரு நடை சென்று ஆங்காங்கே காற்றில் குமித்துக் கிடக்கும் சிதறிய காகிதங்களை சேகரித்து வீட்டு முன் பரப்பி வைத்தான். வாசல்படிக்கு மீண்டும்
வந்து அங்கேயிருந்து ஒரு தரம் சுற்றிப் பார்த்தான், திருப்தியாக இருந்தது.. ‘ராத்திரி காத்து அடிச்சித் தொலைக்கக் கூடாதே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..

காலையில் மீண்டும் தனது ஓட்டத்தைத் துவங்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே பாயில் சரிந்தவன் கண்களை மூடினான்..
அதுவரையில் இருந்த இருள் மறைந்தது..

 – Kaargi

நவம்பர் 9, 2007 Posted by | culture, short story | | 5 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: