கார்க்கியின் பார்வையில்

மஞ்சள் நிற பூதம் – 2ம் பகுதி..!

சமீபத்தில் ஒரு அவசர வேலையாக கோவை செல்ல வேண்டியிருந்தது. அப்போது நானும் எனது நன்பனும் காந்திபார்க் அருகே ஒரு பேக்கரியில்

தேனீர் அருந்திக் கொண்டிருந்தோம். பேக்கரியில் சப்ளையராக ஒரு அசாமிய இளைஞன் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தான். வங்க
மொழி பேசும் நபர்கள் பலரும் கூட பேக்கரிக்கு சாதாரணமாக வந்து சென்று கொண்டிருந்தனர். பின்னர் கவனித்ததில் தான் தெரிந்தது ஊரில் பல தொழில்களிலும் பல மட்டத்திலும் வடமாநிலங்கலிருந்தும் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் நிறைய பேர் வியாபித்திருக்கிறார்கள் என்பது.

கோவை விரைவில் ஒரு பல்கலாச்சார நகராக மாறிவிடும். இருக்கும் கலாச்சாரம் ஒழிந்து போவது கூட நல்லது தான். என் நன்பன் ஒரு சிறு
நகைப் பட்டரை வைத்திருப்பவன். அவன் காந்திபார்க்கின் பின்னேயிருக்கும் ஒரு சந்துக்குள் தனது பட்டரைக்கு அழைத்துச் சென்றான். அங்கும் பெரும்பாலும் வங்காளிகளே. கடந்த ஒரு பத்து ஆண்டுகளில் தான் இந்த இடப்பெயர்வு ஏற்பட்டுள்ளது. அவனோடு பேசியதிலிருந்தும் பின்னர் அதே துறையில் இருக்கும் வேறு சிலரோடு பேசியதிலிருந்து புதிதாக பல விஷயங்கள் தெரியவந்தது.

அதையெல்லாம் பற்றி காணும் முன் சில தகவல்கள் –

– கோவையில் மட்டும் ஆ·ப் சீஸனில் நாளொன்றுக்கு நூற்றம்பது கிலோ தங்க ஆபரணங்கள் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கும்
வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது. அட்சய திரிதியை, தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிருஸ்துமஸ் போன்ற பண்டிகை சீஸனில் என்ன
கணக்கு என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்கிறார்கள் – ஆனால் எல்லோரும் ஒட்டுமொத்தமாக ஒப்புக்கொள்வது என்னவென்றால், ஒழுங்காக பதியப்பட்ட கணக்கு எதுவும் கிடையாது என்பது தான்.

– அந்த நகரத்தில் வங்கத்தைச் சேர்ந்த நகைத் தொழிலாளிகள் மட்டுமே சுமார் நாற்பதாயிரம் பேருக்கும் மேல் இடம்பெயர்ந்து வந்துள்ளார்கள் இது அங்கே அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொல்லும் கணக்கு / இதே கோவை நகர பெங்காலி நகைத் தொழிலாளர் சங்கத் தலைவர் 25

ஆயிரம் என்கிறார்). இதுவும் தவிர கேரளத்தைச் சேர்ந்தவர்கள் வங்காளிகளுக்குக் குறையாத எண்ணிக்கையில் இடம்பெயர்ந்து வந்துள்ளனர்.

– கோவையில் மட்டும் சுமார் ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டு லட்சம் பேர்கள் வரை இத்தொழிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டுள்ளனர். இது நகைக்கடை, சேல்ஸ்மென், பட்டரைகள், பேக்டரிகள், டையிங் யூனிட் தொழிலாளிகள், சாக்கடையில் தங்கத் துகள் சலிப்பவர்களையும் உள்ளிட்ட தோராயமான கணக்கு.

– இன்றைய தேதியில் கோவையில் மட்டும் சுமார் பத்தாயிரம் யூனிட்டுகளும், நூற்றுக்குக்கும் அதிகமான பேக்ட்டரிகளும் இருப்பதாக இத்தொழிலில் உள்ள எனது நன்பன் சொல்கிறான். இந்த பேக்டரிகள் சில நேரடியாக ஏற்றுமதியிலும் கூட ஈடுபட்டிருக்கின்றன. ஒரு பேக்டரி என்பது முப்பதிலிருந்து ஐம்பது வரையிலான தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் – ஒரு யூனிட்டில் சுமார் பத்து தொழிலாளிகள் வரை வேலை செய்வார்கள். ஒரு பேக்டரியில் எல்லாவிதமான நகைகளும் உருவாக்கப்படும். யூனிட் என்பது சின்னச் சின்ன ஜாப் ஆர்டர் எடுத்து செய்யும் சிறிய பட்டரை.

– 2002ம் ஆண்டு உலக தங்க கவுன்ஸில் வெளியிட்ட அறிக்கையின் படி :- இந்திய தங்க வர்த்தகத்தின் மதிப்பு சுமார் 600 கோடி டாலர்கள்,
சுமார் ஐந்து லட்சம் தொழிலாளர்கள், ஒரு லட்சம் பட்டரைகளிலிருந்து தங்க நகை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். உலகத்திலிருக்கும் தங்கத்தில் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதம் வரை இந்தியாவில் இருக்கிறது.

– உலக கோல்டு கவுன்சிலின் மதிப்பீட்டின் படி சென்ற ஆண்டு அக்ஷய திரிதியை நாளை முன்னிட்டு விற்கப்பட்ட தங்கத்தின் அளவு மட்டும் 49 டன்கள்; இதில் 60% தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் விற்கப்பட்டுள்ளது. இதில் கேரளத்தில் மட்டும் 40% (அதாவது பத்து டன்கள் – அதாவது பத்தாயிரம் கிலோ!!!) தங்கம் விற்கப்பட்டுள்ளது.

இனி இந்த பிரம்மாண்டமான பளபளக்கும் புள்ளிவிபரங்களுக்குப் பின்னே காலகாலமாய் புழுங்கிச் சாகும் தொழிலாளிகள் நிலை குறித்தும் இத்தொழிலில் கடந்த சில ஆண்டுகளில் படிப்படியாய் நிகழ்ந்துவந்த மாற்றங்கள், அதற்குக் காரணமாயிருந்த மறுகாலனியாதிக்க பொருளாதார சூழல் குறித்தும் கொஞ்சம் பார்க்கலாம்.

1991 என்.ஆர்.ஐ இந்தியர்கள் இந்தியாவுக்குள் தங்கம் கொண்டு வருவதில் இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. மேலும் தங்கம் இறக்குமதி செய்வதில் இருந்த மற்ற கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டது. 1990ல் இருந்து 1998 காலகட்டம் வரை தங்கத்தின் தேவை ஆண்டுக்கு 15 சதவீதமாக வளர்ச்சியுற்றது. இது அதே காலகட்டத்தில் வளர்ந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட, எண்ணை சர்க்கரை உள்ளிட்ட மற்ற பொருட்களுக்கு இருந்த தேவையை  விட, உலகளவில் தங்கத்துக்கு இருந்த தேவையை விட அதிகமாகும். ( ஆதாரம் http://www.gold.org)

இப்படி வெள்ளமென உள்நுழைந்த தங்கம், நகை உருவாக்கத் தொழில் மாற்றத்தைக் கோருகிறது. அதே காலகட்டத்தில் சிறிய அளவிலான நகைக் கடைகளுக்குப் போட்டியாக வட்டார அளவிலான வீச்சு கொண்ட நகை மாளிகைகள் உருவாகத் தொடங்கியது. ஆசாரிகளின்
வாடிக்கையாளர்களில் ஒரு பெரும் பகுதியினர் இனிமேலும் அவர்களிடம் சென்று நாட்கணக்கில் காத்திருந்து அவர்கள் செய்து தரும் டிசைனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற நிலை மாறத் துவங்கியது. கடைக்குச் சென்றோமா பத்துக்கு இருபது டிசைகளைப் பார்த்தோமா அதில் ஒன்றைப் பொறுக்கியெடுத்தோமா என்று வேலை சுளுவாகியது. இந்தக் கடைகளும் கூட தமது ஷோரூம்களில் வைத்து விற்கும் நகைகளை ஏதாவது ஒரு பட்டறையில் தங்க பார்களைக் கொடுத்து முழு நகையாக செய்து வாங்கி வந்தன.

இது நகைப் பட்டரைகளுக்கு விழுந்த முதல் அடி. தமது வாடிக்கையாளர்களில் பெரும் பகுதியினரை அவர்கள் கவர்ச்சிகரமான ஷோரூம்கள் கொண்ட நகை மாளிகளிடம் இழந்தனர். நகை மாளிகைகளும் கூட இவர்களிடம் செய்து வாங்குகிறார்கள் என்றாலும் லாபம் முன்பை விடக் குறைவு தான். ஆனாலும் ஓரளவுக்கு வேலையிழப்போடு சமாளித்து வந்தவர்களுக்கு இன்னுமொரு இடி சங்கிலித்தொடர் நகை மாளிகைகளின்
வரவால் ஏற்பட்டது.

இந்த இடத்தில் சுதந்திரச் சந்தையின் போதகர்களாக இணையத்தில் செயல்பட்டு வருபவர்கள் இப்படியும் சொல்லலாம் – எந்த தொழிலிலும் நவீன மாற்றம் தவிர்க்கவியலாதது. இன்றைய நிலவரப்படியே நகைத் தொழிலில் நிறைய வேலைவாய்ப்பு உருவாகிவிட்டுள்ளது நீங்கள் தரும் விபரங்களிலேயே கூட உள்ளதே. எனவே தனியார்மயம் சரியானது தான் எனும் வாதத்தை முன்வைக்கலாம்.

மாற்றம் என்பது ஏற்கனவே உள்ள சக்திகள் (resourse) ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவதல்ல. அந்த சக்திகளின் நிலை மாற்றமாக இருக்க வேண்டும். இப்போது அறிமுகமான நவீன கருவிகள், தொழில்நுட்பங்கள் முன்பு இருந்த தொழிலாளிகளை உள்வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்; அவர்கள் அத்தனை நூற்றாண்டுகளாக – பரம்பரை பரம்பரையாக – கற்றுக் கொண்ட உத்திகளோடு இணைந்து முன்னேறியிருக்க வேண்டும் –
மாறாக தனது வரவையே அந்தத் தொழிலாளிகளின் தற்கொலைகள் மூலம் தான் முன்னறிவித்துக் கொண்டது.

தொன்னூறுகளின் இறுதியில் பாரம்பரிய நகைப்பட்டரை தொழிலாளிகள் நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டார்கள். பலர் வேறு தொழில்களுக்கு விரட்டப்பட்டனர். எஞ்சிய சிலர் தாம் அதுவரை கற்று வைத்திருந்த தொழில்நுட்பங்களை மறந்து கம்பி பட்டரையிலோ பால்ஸ் பட்டரையிலோ குறைகூலிக்கு மாரடிக்க வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டனர்.

1997ம் ஆண்டு தங்க இறக்குமதியில் இருந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டது. இனிமேல் தங்கத்திற்கு என்.ஆர்.ஐ இந்தியர்களையோ கடத்தல்காரர்களையோ சார்ந்திருக்க வேண்டியதில்லை எனும் நிலை உருவானது. தொன்னூறுகளின் இறுதியில் சங்கிலித் தொடர் நகைமாளிகைகள் உருப்பெறத் துவங்கியது. வட்டார அளவில் பிரபலமாயிருந்த டிசைன்கள் தவிர ஒரே கூரையின் கீழ் வெவ்வேறு பிராந்திய டிசைன்களை குவித்து வைக்க வேண்டியது அவசியமானது. ஈரோட்டிலிருக்கும் ஒரு நகை மாளிகையினும் நுழையும் நுகர்வோர் ஒருவனின் கண்முன்னே ஜெய்பூர் டிசைன், மலபார் டிசைன், பெங்காலி டிசைன் என்று அணிவகுக்கிறது.

பொருளாதார பின்புலம், பிற்போக்கு அடித்தளம் இயல்பாகவே இருந்து வந்த சேமிப்புப் பழக்கம் இவைகளின் காரணமாய் இந்தியர்களுக்கு இருக்கும் தங்க மோகம் உலகமயமாக்கல் சூழலில் முதலாளிகளுக்கு மெய்யாகவே ஒரு வாய்ப்பை தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்தது.
நாடெங்கும் பரவலாக பரவியது சங்கிலித் தொடர் நகைக் கடைகள். ஜாய் ஆலூக்காஸ், கல்யான் ஜுவல்லரி, ஸ்ரீ குமரன் நகை மாளிகை, ஜோ ஆலுக்காஸ் & சன்ஸ், மலபார் கோல்ட், ஆலாபட் ஜுவல்லரி, தனிஷ்க் என்று புற்றீசல் போலக் கிளம்பின.

இவர்களுக்கு ஏற்கனவே இருந்த தங்கவெறி போதுமானதாக இல்லை; புதிதாக வெறியுட்ட வேறு விஷயங்கள் தேவைப்பட்டது. ஒரு பத்துப்
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நாம் கேள்வியே பட்டிராத அக்ஷய த்ரிதியை என்ற ஒரு பண்டிகை பரணிலிருந்து தூசு தட்டி
எடுக்கப்பட்டது. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் என்று மாறி மாறி மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர். அக்ஷய திரிதியை நாளில் நகை வாங்கினால் ‘நல்லது’ என்றும் ‘ஐசுவரியம்’ பொங்கும் என்றும் மக்கள் நம்பவைக்கப்பட்டனர். போதும் போதாதற்கு மக்களிடையே நிலவும் சினிமாக் கவர்ச்சியையும் துனைக்கழைத்துக் கொண்டனர். பிரபலமான நடிகர்களை ப்ராண்டு அம்பாசிடர்களாக வைத்துக் கொள்வது, நடிகைகளை நடமாடும் நகைக்கடைகளாக விளம்பரங்களில் உலாத்த விடுவது என்று தங்க மோகத்தில் மக்களை மூழ்கடித்தனர்.

பெரும் நகைக்கடைகளில் இன்ன ஜாதிக்கு இன்ன தாலி என்று பரிந்துரைக்கவும், இன்ன ராசிக்கு இன்ன ராசிக்கல் என்று பரிந்துரைக்கவும் ஜோதிட ‘வல்லுனர்களை’ நியமித்து ஏற்கனவே நிலவிவந்த பிற்போக்குத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் தனது லாபவெறிக்கு முதலாளிகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஐரோப்பாவில் வளர்ந்து வந்த முதலாளித்துவம் நடப்பிலிருந்து பிற்போக்குத்தனங்களையெல்லாம் உடைத்து நொறுக்கியது – இங்கே முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு பிற்போக்குத்தனங்களே (பார்ப்பனியம்) கூட்டாளி.

இயல்பாகவே மேல் வர்க்கத்தாரின் மேல் பிரமிப்புடன் இருக்கும் உழைக்கும் அடித்தட்டு வர்க்கத்து மக்களும் கூட அந்த நாளில் ஒரு குந்துமணி அளவுக்காவது வாங்கித்தான் வைப்போமே என்று சிந்திக்கும் அளவுக்கு அக்ஷய த்ரிதியை ஒரு சடங்காகவே மாறிப்போனது. இதே சமயத்தில் மற்ற சேவைத் துறைகளிலும் ஐ.டி துறையிலும் ஏற்பட்ட வளர்ச்சியானது நுகர்வையே கலாச்சாரமாகக் கொண்ட புதிய ரக மேல்தட்டு வர்க்கம் ஒன்றை உருவாக்குகிறது. செயற்கையான முறையில் தேவையில் ஏற்படுத்தப்பட்ட மிதமிஞ்சிய வீக்கம் உற்பத்தியிலும் அதேவிதமான மாற்றத்தைக் கோருகிறது.

இந்த நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளில் பரவலாக சிறிய யூனிட்டுகளில் நவீன இயந்திரங்கள் இடம்பெறத் துவங்கின. இதற்கிடையில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பங்களை அறிந்து சந்தையின் போட்டியில் தங்களை தக்கவைத்துக் கொள்ள எடுத்துக் கொண்ட முயற்சிகளை சங்கிலித் தொடர் நகை மாளிகைகள் தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டியது ( ஆதாரம் – http://southasia.oneworld.net/Article/indian-goldsmiths-face-a-doomed-future) இணைப்பில் உள்ள கட்டுரையின் கடைசி பத்தியிலிருந்து – நவீன நகை மாளிகைகள் நடத்திய ஒரு நகைக் கண்காட்சியில் பாரம்பரிய நகைத் தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

ஓரளவுக்கு நவீன நகை மாளிகைகளின் தாக்குதலை சமாளித்து குற்றுயிரும் குலை உயிருமாக மிஞ்சிய நகைப்பட்டரைகள் பெரும்
நகைக்கடைகளுக்கு குறைந்த கூலிக்கு வேலை செய்து தரும் யூனிட்டுகளாக மாறிப்போனது. மொத்தமாக அவர்களின் வாடிக்கையாளர் அடித்தளமே ஆட்டம் கண்டு நொறுங்கிப் போனது. சிறுபட்டரைகளிடம் மிச்சம் மீதியிருந்த சுயேச்சைத் தன்மையையும் முற்றாக ஒழிந்து முழுக்க முழுக்க பெரிய நகைமாளிகைகளை அண்டியிருக்கும் அத்துக் கூலிகளாக முழுமையாக மாறிப்போயினர். சிறு பட்டரை முதலாளிகள் எல்லாம் வேலை எடுத்துச் செய்யும் ஏஜெண்டுகளாக மாற்றம் பெற்றனர்.

மேலும் இயந்திரங்களில் வேலை செய்ய வேறு மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். இவர்களுக்கும் சம்பளம் என்பது நிரந்தரமானதல்ல – மூன்றிலிருந்து நாலாயிரத்துக்குள் சம்பளம் இருக்கும் – மற்றபடி இன்செண்டிவ் அடிப்படையில் தான் வேலை செய்கிறார்கள். அதாவது இத்தனை கிராம் ஆபரண உற்பத்திக்கு இத்தனை இன்செண்டிவ் எனும் அடிப்படையில். கோவை நகரம் என்பது சென்னையை ஒப்பிடும் போது அதிகம் செலவு பிடிக்கும் நகரம். எத்தனை சிக்கனமாக வாழ்க்கை நடத்தினாலும் கூட நாலாயிரம் என்பது மாதத்தின் இருபதாவது நாளிலேயே தீர்ந்து போகும். எனவே இன்செண்டிவ் தான் தாக்குப்பிடிப்பதற்கும் ஊருக்கு ஏதோ கொஞ்சம் பணம் அனுப்புவதற்கும் இருக்கும் ஒரே வழி.

இந்தக் கால கட்டத்திற்குப் பின் ஒரே நகையை ஒரே பட்டரையில் தயாரிக்கும் பாணிக்கு முற்றுப்புள்ளி விழுந்தது. ஒரு நகையில் பல்வேறு அம்சங்களை வெவ்வேறு பட்டறைகளில் தயாரித்து பின்னர் இன்னொரு பட்டறையில் இணைத்துக் கொள்வது என்ற பாணி உருவெடுத்தது. நாடெங்கும் பரவிக்கிடந்த தங்கநகைத்
தொழிலாளர்கள் தமது சொந்த ஊர்களில் இருந்து ஒருசில நகரங்களில் வந்து குவிந்தனர். புகழ் பெற்ற ஜெய்பூர் மாடல், பெங்காலி மாடல், கேரள காசு மாலை, மாங்கா மாலை நகைகள் கோவையில் இருந்து தாயாராகிறது என்ற செய்தியின் பின்னே உள்ள நிதர்சனம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான கேரள நகைத் தொழிலாளர்களும், பெங்காலித் தொழிலாளர்களும் கோவையில் வந்து குவிந்துள்ளனர் என்பதாகும்.

இந்தப் பட்டறைகளில் நவீன முதலாளித்துவ பாணியிலான உற்பத்தி முறை பழைய நிலபிரபுத்துவ பாணி உறவுகளோடு கைகோர்த்துக் கொண்டு, தொழிலாளிகளை கசக்கிப் பிழிகிறது. அதாவது, 8 மணி நேரம் அல்லது குறிப்பிட்ட நேர அளவிலான வேலை என்று கிடையாது; நிலையான சம்பளமும் கிடையாது. மாறாக அட்சய திரிதியை, தீபாவளி, முகூர்த்த தினங்கள் போன்று எப்போது பரபரப்பான விற்பனை நடைபெறும் நாள் வருகிறதோ அப்போது பெரு நகைக்கடைகள் தங்கக் கட்டிகளை இது போன்ற பட்டறைகளுக்குக் கொடுத்து நகையாக வாங்குவார்கள். அந்த சமயத்தில் மட்டும் ஊழியர்களை கசக்கிப் பிழிவது; அதுவும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தூங்காமலும், இடையில் பட்டறையை விட்டு வெளியேற தடை விதிப்பதும் ( தங்கத் துணுக்குகளை நக இடுக்குகளில் மறைத்து எடுத்துச் சென்று விடுவார்கள் என்ற சந்தேகத்தில்) கழிவறை வரையில் கண்கானிப்பதும் என்று குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட காட்டுவதில்லை. தொழிலாளிகளும் அந்த நாட்களில் சம்பாதித்தால் தான் உண்டு. சீசன் அல்லாத நாட்களில் சம்பளம் கிடையாது.

முதலாளித்துவ பாணி இயந்திர உற்பத்தியாய் இருப்பதால் பால்ஸ் ஒரு பட்டறை, மோதிரம் ஒரு பட்டறை, கம்மலுக்கு ஒரு பட்டறை, கல் பதிக்க, கம்பி நீட்ட என்று உதிரி உதிரியாகத் தயாராகி, கடைசியில் ஒரு பட்டறையில் இணைக்கப்படுகிறது. இதன் உடன் விளைவாக ஒரு நகைத் தொழிலாளிக்கு முழுமையான ஒரு ஆபரணத்தை உருவாக்கும் நுட்பம் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாது போகிறது. டிசைன்களை உருவாக்க பட்டைய படிப்பு, கம்ப்யூட்டர் வடிவமைப்புக்கான படிப்பு என்று ஏற்பட்டதால் பாரம்பரிய தொழில் நுட்ப அறிவு முழுமையாக நிராகரிக்கப் பட்டு கிட்டத்தட்ட அழியும் தருவாயில் உள்ளது. முழுமையான ஆப்ரண உருவாக்கத் திரனும் நுட்பமும் கொண்ட தொழிலாளி வெறும் கம்பி இழுக்கும் வேலையோ கல்பதிக்கும் வேலையோ செய்யும்படிக்கு நிர்பந்திக்கப்படுகிறார். வேறு எந்த வழியும் இல்லாத நிலையில் குறைகூலிக்கு இது போன்ற
பட்டறையில் தொழிலாளியாய் வேலைக்குச் செல்கிறார்.

இப்படிப்பட்ட பட்டறைகள் பொதுவில் காற்றோட்டம் இல்லாமலும் அடைசலாகவும் தான் இருக்கும் (தப்பித்தவறி தங்கம் பட்டறை
முதலாளிகளுக்குத் தெரியாமல் வெளியேறுவதைத் தடுக்க) தொடர்ந்து உட்கார்ந்தே வேலை செய்வதால் மூலவியாதி, முதுகுவலி, தங்கம் உருவாக்குவதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களின் விளைவாய் ஆஸ்துமா போன்ற உபாதைகளோடு தான் பெரும்பாலான நகைத் தொழிலாளிகள் தமது வாழ்வை கழிக்க வேண்டியுள்ளது.

சீசன் உள்ள அந்த சில நாட்கள் தொழிலாளிகள் தங்கள் உயிரை தங்கத்தோடு சேர்த்து உருக்கியும், தமது சுயமரியாதையை வளைந்து நெளியும் அந்தத் தங்கக்கம்பியைப் போல நெளித்தும் சம்பாதிக்கும் சொற்பப் பணம் தான் எங்கோ ஒரு மேற்கு வங்க கிராமத்தில் மணியார்டருக்காக காத்துக் கிடக்கும்சொந்தங்களின் பசியாற்றப் போகிறது. நகைக்கடை ஷோரூம்களில் கண்ணாடி அலமாரிகளுக்குள் பளபளக்கும் ஒவ்வொரு நகைகளுக்கும் பின்னேயும் கோவையின் இருட்டுச் சந்துகளிலோ ஜெய்பூரின் நெரிசல் மிகுந்த தெருக்களிலோ உள்ள ஏதோ ஒரு பட்டறையின் உள்ளே கண் எரிச்சலோடு புழுங்கிச் சாகும் தொழிலாளியின் உழைப்பு மறைந்து கிடக்கிறது.

சென்ற தீபாவளி சமயத்தில் இதே நன்பனை அவன் பட்டரைக்கு பார்க்கப் போயிருந்த போது வங்கத்தைச் சேர்ந்த மூன்று தொழிலாளிகளோடு சேர்ந்து இவனும் தொடர்ந்து மூன்று நாட்கள் உறங்காமல் வேலைபார்த்துக் கொண்டிருந்தனர். தூக்கம் வராமல் இருக்க கணமான உணவு எதையும் உட்கொள்ளக் கூடாது – எனவே மூன்ற நாட்களும் டைகர் பிஸ்கட்டுகளை மட்டுமே சாப்பிட்டு தாக்குப்பிடித்து வேலை செய்து கொண்டிருந்தனர். தொடர்ந்து தூங்காவிட்டால் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும், ரத்தத்தில் யூரியாவின் அளவு அதிகரிக்கும் – தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
ஆனால் தண்ணீர் குடித்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்து போக வேண்டியிருக்கும் என்பதால் அவ்வப்போது உதடுகளை மட்டும் நனைத்துக் கொள்ள மட்டுமே தண்ணீர்.

ஊரே பண்டிகைக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த நேரம்.. பட்டாசுகளும் வாண வேடிக்கைகளுமாக வெளியில் எல்லோரும் குதூகலித்துக் கொண்டிருந்த போது காந்தி பார்க்கின் பின்னே இருந்த குறுகிய சந்துகளில் ஆயிரக்கணக்கானவர்கள் நாட்கணக்கில் தூக்கம் மறந்து தண்ணீர் மறந்து சோற்றை மறந்து உழைத்துக் கொண்டிருந்தனர்.

அந்த நகை எங்கோ ஒரு அல்பையின் கழுத்தை அலங்கரிக்குமோ அல்லது ஏதோவொரு முதிர்கண்ணியின் கழுத்தில் தூக்குக் கயிற்றை
மாட்டிவிடுமோ தெரியவில்லை ஆனால் அந்த நேரத்தில் அந்த இடத்தில் அந்த பெயர் தெரியாத தொழிலாளர்களின் உயிரை உருக்கியெடுத்துக் கொண்டிருந்ததை மட்டும் காண முடிந்தது.

ஆம்.. நிறைய வேலைகளை உலகமயமாக்கம் கொண்டுவந்துள்ளது; கூடவே அதேயளவுக்கு ஜோம்பிகளையும் உருவாக்கி விட்டிருக்கிறது – உழைக்கும் ஜோம்பிகள்..! இப்படி உழைக்கும் மக்களை நடைபிணங்களாய் மாற்றுவதும், மேல்நடுத்தர வர்க்க மக்களை ஏன் எதற்கு என்றில்லாமல் வாங்கிக் குவிக்கும் நுகர்வு இயந்திரங்களாய் மாற்றுவதும், நடுத்தர வர்க்க மக்களி மேலே பார்த்து ஏங்கி நிற்க வைப்பதுவுமான ஒரு சமூக எதார்த்தமே இந்த மறுகாலனியாதிக்க கால சமூக எதார்த்தம்.

நன்பனை சந்தித்து உரையாடிவிட்டு மனதெல்லாம் பாரமாக சலீவன் வீதியிலிருந்து காந்திபார்க் ரவுண்டானா அருகே உள்ள பேருந்து
நிலையத்துக்கு வந்தால் சி.ஐ.டி.யுவின் (சிபிஎம்) பேனர் ஒன்று வரவேற்றது – அதில் தொழிலாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கேட்டு போராடப்போவதாக அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. கீழே அந்த பேணர் உபயதாரராக “லக்ஷ்மி டையிங் வொர்க்ஸ்” என்று
போட்டிருந்தது.

இவர்கள் யாருக்குத் தோழர்கள்? இன்னுமா இந்த உலகம் இவர்களை நம்புகிறது? தொழிலாளர்கள் தமது வர்க்க எதிரிகளை இனம் கண்டு
கொள்வதற்கு முன் இது போன்ற துரோகிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டும். தொழிலாளர்கள் உரிமைக்காக போராட ஸ்பான்ஸர் அவர்களை பிழியும் முதலாளி..! சி.பி.எம்மின் பரிணாம வளர்ச்சி அதை இன்னும் எங்கெங்கெல்லாம் கொண்டு போய் நிறுத்தப்போகிறதோ தெரியவில்லை.

இத்தனை வேலைப் போட்டிகளுக்கிடையிலும் அங்கே உள்ளூர்த் தொழிலாளிகளிடையேயும் வெளிமாநில தொழிலாளிகளிடையேயும் ஒருவிதமான ஒத்திசைவைக் காண முடிந்தது. மொழி, இனம், மதம் கடந்து தமது பாடுகளைத் தோள் சேர்ந்து பகிர்ந்து கொள்ளும் அவர்கள் அந்தப் பாடுகளுக்குக் காரணமான சுரண்டலுக்கு எதிரான போராட்டங்களிலும் இணைவார்களானால் அந்த நாள் பகாசுர சங்கிலித் தொடர் நகைமாளிகை முதலாளிகளின் இறுதி நாளாயும் புதியதொரு சமுதாயத்தின் முதல் நாளாகவும் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் நாளாக இருக்கும்.

– கார்க்கி

மார்ச் 26, 2010 Posted by | culture, gold | , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நித்ய லீலைகளும் சாரு நிவேதிதாவும் பின்னே சில எதிர்வினைகளும்..!

காலை வழக்கம் போல பக்கத்துப் பெட்டிக்கடையில் முரசொலியும் தந்தியும் வாங்கச் சென்ற போது கடைக்காரர் ‘பாஸ்.. இன்னிக்கு தினகரன் வாங்குங்க.. செம்ம மேட்டரு’ என்றார்.. அந்த நொடியிலிருந்தே இந்த நாள் ஒரு இனிய நாளாகத் துவங்கியது. நித்தியின் நித்திய லீலைகள் ஒருபக்கம் என்றால் ‘பகவான்’ கல்கி வேறு இன்னொரு பக்கம் சீப்பட்டுக் கொண்டிருந்தார். வடக்கில் இச்சாதாரி சாமி என்றொருத்தன்… ம்ம்… இந்த வாரம் சாமியார் வாரம் போலிருக்கிறது.

காலையிலிருந்து இந்த நிமிடம் வரை நான் சந்தித்த நபர்களெல்லாம் ஒரு வித பரவசத்திலிருந்தார்கள் – பின்னே அது நடிகை ரஞ்சிதாவாச்சே. அப்போதே எனக்கு பதிவுலகில் இந்த மேட்டருக்கு என்ன விதமான எதிர்வினைகள் இருக்கும் என்று ஒருவிதமான அனுமானம் இருந்தது. பதிவர்கள் அதைப் பொய்யாக்கிவிடவில்லை என்பதை மாலை பிரவுசிங் செண்டரில் ஒரு ரெண்டு நேரம் செலவழித்த பின் உறுதியானது.

சென்ற மாதம் என்.டி திவாரி குத்தாட்டம் போட்டு மாட்டிக் கொண்ட போது பல செயின் மெயில்கள் வந்தது. அதிலாகட்டும் இப்போது இந்த சம்பவத்திலாகட்டும் ஒரு கணிசமான பிரிவினரின் எதிர்வினைகளில் சூடான பெருமூச்சை உணர முடிகிறது. ஒரு நன்பர் தேனீர் கடை உரையாடலின் போது சொன்னார் –

“என்பத்தஞ்சு வயசுல கெழவன் என்னா ஆட்டம் போட்டிருக்கான்? ச்சே.. மனுசன் என்னா சாப்டறான்னே தெரியலையே பாஸு..”

இன்றைக்கு வலைத்தளமொன்றில் ஒரு அன்பர் ‘ரஞ்சிதா செம்ம வெயிட்டாச்சே.. இவன் எப்படி சமாளிச்சான்?” என்று மறுமொழி எழுதியிருக்கிறார்.

“என்ன தான் சாமியாருக்கு சக்தியிருந்தாலும் மாத்திரைய போட்டுட்டு தான் களத்தில இறங்கியிருக்காரு” என்கிறார் டீக் கடையொன்றில்
மாலை முரசு வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்.

வலைத்தளங்களில் கண்ட வேறு சில மறுமொழிகளின் பின்னேயும், பல இடங்களில் கேட்க நேர்ந்த உரையாடல்களின் பின்னேயும் கூட
இதேவிதமான வெப்பப் பெருமூச்சுகளைக் காண முடிந்தது. செக்சின் மேல் தமக்கு இருக்கும் அச்சம், பிரமிப்பு, தனக்குக் கிடைக்க வில்லையே என்கிற பொறாமை போன்றவையே அம்மறுமொழிகளின் உள்ளார்ந்த அர்த்தமாக இருக்கிறது. பீனிஸ் என்வி போல ‘இந்த’ பொறாமைக்கு ஏதாவது பெயர் இருக்கிறதா என்று தெரியவில்லை. இவர்கள் போடும் கூச்சல் என்பது பெண் நாயைக் கவர நடந்த சண்டையில் தோற்றுப் போன சொரி நாய்கள் தெரு முனையில் நின்று ஊளையிடுமே அப்படித்தான் இருக்கிறது.

கைக்கும் வாய்க்கும் பத்தாத நடுதர வர்க்க அல்ப்பைகளுக்கு தமது பிரச்சினைக்கு நேரடிக் காரணம் யார் என்பதை புரிந்து கொள்ளும் அறிவு கிடையாது. ஒரு சாமானிய உழைக்கும் வர்க்கத் தொழிலாளிக்குத் தெரியும் தனது இல்லாமைக்கு யார் காரணம் என்று. படித்த நடுத்தர் வர்க்கமோ படித்த முட்டாள்கள்; கண்ணிருந்தும் குருடர்கள்.. இவர்களுக்கு மேல் வர்க்கத்தவர்களைப் பற்றிய கிசு கிசுக்களில் தான் அக்கறையே ஒழிய தன்னை வஞ்சித்த அந்த வர்க்கத்தை தோற்கடித்து தூக்கியெறிய வேண்டும் எனும் முனைப்போ அக்கறையோ கிடையாது. இந்தக் கிசு கிசுக்கள் தரும் கிளுகிளுப்பில் இரண்டொரு நாட்களை ஓட்டி விட்டு அடுத்து ஒரு சத்தியானந்தத்தையோ வித்தியானந்தத்தையோ தேடி ஓடிவிடும்.

அடுத்து சில அலுக்கோசுகள்.. “என்ன இருந்தாலும் சாமி செஞ்சதெல்லம் ஒரு தப்பா? அவரு ஒரு ஆண் – அவள் ஒரு பெண் – அவரிடம் காசு இருந்தது – அவளுக்கு அது தேவையாய் இருந்தது – அவருக்கு அரிப்பு இருந்தது – இவள் அதைச் சொரிந்து விட தயாராய் இருந்தாள்.. அது எப்புடி சன் டீவி பெட்ரூமுக்குள்ள போயி கேமரா வைக்கலாம்? மனித உரிமை மாட்டு உரிமை லொட்டு லொசுக்கு” என்று நீட்டி முழக்கிக் கொண்டிருக்கின்றனர்..

ஏண்டா… அந்தாளு நான் சாமி.. பிரம்மச்சாரி… ரொம்ப யோக்கியன்.. நீயும் வா யோக்கியனா இருக்க சொல்லித் தாரேன்னு சொல்லி காசு
வாங்கியிருக்கான்; என்னய பாரு எம் மூஞ்சிய பாருன்னு ஊரெல்லாம் போஸ்ட்டர் அடிச்சி ஒட்டி நல்லா கல்லா கட்டியிருக்கான்; அஞ்சு
வருசத்துக்கு மின்ன அட்ரஸ் இல்லாம அலைஞ்சிட்டிருந்த லூசுப் பயலுக்கு இன்னிக்கு ஆயிரங் கோடி சொத்திருக்குது.. இதெல்லாம் எங்கயிருந்த எப்படி வந்தது?

இதெல்லாம் அவனுடைய ஒழுக்க சீலன் முகமூடியின் மேல் நிறுவப்பட்ட இமேஜ் காரணமாகத்தானே சாத்தியப்பட்டது? இந்த அஞ்சு வருசத்தில் அவன் சம்பாதித்த ஆயிரக்கணக்கான கோடிகளும், உலகெங்கும் வாங்கிக் குவிக்கப்பட்ட சொத்துகளும் எந்த அடிப்படையில் அவனால் சேர்க்க முடிந்தது? அந்த அடிப்படையே நொறுங்கிக் கிடக்கும் போது உனக்கு அவனது தனி மனித உரிமை பரிபோனது தான் பிரச்சினையா? லட்சக்கணக்கானவர்கள் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டது உனக்கு பிரச்சினையாக இல்லையா?

எல்லா கார்பொரேட் சாமியார்களுக்கும் அமெரிக்கா தொடங்கி உலகெங்கும் கிளைகள் தொடங்கி ஒரு பிரம்மாண்டமான வலைப்பின்னலை ஐந்தாறு ஆண்டுகளுக்குள் நிறுவி விடுகிறார்கள்.. பத்து வருடங்களுக்குள் அறுவடையைத் தொடங்கி விடுகிறார்கள். ஹவாலா பணத்தைக் கொண்டு வருவது, கருப்பை வெள்ளையாக்குவது போன்ற பொருளாதாரக் குற்றங்கள் மூலமாகத்தான் ஓரு சில ஆண்டுகளிலேயே ஆயிரக்கணக்கான
கோடிகளில் புரளுகிறார்கள். இது அரசுக்குத் தெரியாமல் இருக்க அது ஒன்றும் வாயில் விரல் வைத்துச் சூப்பும் பாப்பா அல்ல; அரசுக்குத்
தெரியும். தெரிந்தே தான் இவர்களை நீடிக்க அனுமதிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு பஃபர் ஸோன் (buffer zone) தேவைப்படுகிறது. மக்களின் கோபம் தம்மை நோக்கித் திரும்பாமலிருக்க இது போன்றவர்கள் ஆளும் வர்க்கத்துக்குத் தேவை.

அட லூசுகளா.. நீங்கள் கண்ணை மூடி மூக்கைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது நமது நாட்டையே தூக்கிக் கொண்டு போகிறார்களேடா.. கண்ணைத் திறந்து பாருங்களடா என்று கத்த வேண்டும் போல தோன்றுகிறது.

சில நாட்கள் முன்பு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டுப் பிராந்தியத்திலிருக்கும் மக்களிடம் சென்று தான் பேசி அவர்கள் மீட்டெடுத்து சீர்படுத்துவதாகச் சொன்னானே.. அதன் அர்த்தம் இது தான். யார் யாரை மீட்டெடுப்பது; யார் யாரை சீர்படுத்துவது – தில்லிருந்தால் அவன் மட்டும் அங்கே கால் வைத்துப் பார்க்கட்டும் தெரியும் சேதி. எவனுக்கு வேண்டும் இங்கே நிம்மதியும் அமைதியும்? இந்த சாமியார் பாடுகள் உண்டாக்கப் பார்க்கும் அமைதி மயான அமைதி.. இவர்கள் ஏற்படுத்தப் பார்க்கும் நிம்மது மரணத்தின் நிம்மதி. இங்கே தனி மனித உரிமையாவது வெங்காயமாவது – கோடிக்கணக்கான மக்களின் உரிமையே நாசப்படுத்தப்பட்ட பிறகு தனிமனித உரிமையாம். அயோக்கிய ராஸ்கல்ஸ்

சில அப்பாவி நல்லவர்கள் சொல்கிறார்கள் “பெரியார்வாதிகளின் வேலையை இந்த சாமியார்கள் குறைத்து விடுகிறார்கள்” என்று.

இதெல்லாம் வெறும் நம்பிக்கை மட்டுமா? உலகம் தட்டை என்று நம்பியது வேண்டுமானால் நம்பிக்கை எனலாம் – அது உலகம் உருண்டை என்பதை விஞ்ஞானப் பூர்வமாக தெட்டத் தெளிவாக நிரூபனமாகும் ஒரு நாளுக்காக காத்திருந்து கலைந்து போய்விடும். ஆனால் இதுவோ வெறும் நம்பிக்கை அல்ல. நீங்கள் கரடியாய் கத்தினாலும் சரி.. ஜெயேந்திரன், பிரேமானந்தா, தேவநாதன், கல்கி, நித்தியானந்தன், இச்சாதாரி, கிச்சாதாரி என்று ஆயிரம் – லட்சம் சாமியார்கள் அம்பலப்பட்டு ஜட்டி கிழிந்து நின்றாலும் கூட – அடுத்த ரெண்டாவது வாரம் ஒரு xxxஆனந்தன் பின்னே போய் விழுவார்கள். அவனும் அயோக்கியனாகத்தானிருப்பான் எனும் அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

இந்த சாமியார்களெல்லாம் சல்லிவேர் தான். இந்த மதம், அதன் நம்பிக்கைகள், அதன் புரோக்கர்கள் என்று இதெல்லாம் நிலைத்து நிற்க
காரணமாயிருக்கும் இந்தப் பொருளாதாரச் சூழல் தான் ஆணி வேர். உடலுறவும் சுய இன்பமும் அளிக்கும் கண நேர நெகிழ்வுணர்ச்சியும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் இரண்டரை மணி நேர ஆன்மீக உரை அளிக்கும் புல்லரிப்பு ஒன்று தான் – புறநிலையில் ஓயாமல் அலைக்கழிக்கப்படும் மக்களுக்கு ஏதோவொன்றில் இளைப்பாருதல் தேவையாயிருக்கிறது – இரு கரம் நீட்டி அணைத்துக் கொள்ள அழைக்கிறார் டி.ஜி.எஸ் தினகரன்; அம்பானியும் மன்மோகன் சிங்கும் ஏறி மிதித்த வலி தெரியாமல் வாழும் கலையைச் சொல்லித் தருகிறேன் வாருங்கள் என்று கூப்பிடுகிறார் ஸ்ரீ ஸ்ரீ.

கான்சர் முற்றிப் போன நிலையில் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொன்றாக செயலிழக்கும். அப்போது கான்சருக்கு மருந்தளிப்பீர்களா அல்லது கைவலிக்கு அமிர்தாஞ்சன், இடுப்பு வலிக்கு மூவ், தலைவலிக்கு ஆக்சன் பைவ் ஹண்ட்ரட் என்று தனித்தனியாக மருத்து சாப்பிடுவீர்களா? “நோய் முதல் நாடி” – இந்த கார்ப்பொரேட் சாமியார் நோயின் மூலம் இந்த சமூகப் பொருளாதார அமைப்பு! இது நீடிக்கும் வரை இவர்கள் வந்து கொண்டேயிருப்பார்கள்.

கேள்விப்பட்டிருப்பீர்களே – இந்த வருடம் சபரி மலையில் போன வருடத்தை விட கூட்டமாம். இத்தனைக்கும் போன வருடம் தான் மகர ஜோதியின் பூலவாக்கு அம்பலமானது.

பெரியார் இயக்கத் தோழர்களே.. இன்னமும் நீங்கள் இருளில் தொலைந்த சாவியை வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறீர்களே.

அடுத்து சாரு நிவேதிதாவின் நிலை தான் உள்ளதிலேயே மிக வேடிக்கையாய் இருக்கிறது. இந்த மொத்த திரைப்படத்தில் கடைசியில் சீரியஸ் காமெடியனானது சாரு நிவேதிதா தான்.  இத்தனை நாட்களாக ஒரு அயோக்கியனுக்கு பிரண்ட் அம்பாஸிடராக இருந்து விட்டு, அம்புலிமாமா பாலமித்ரா பூந்தளிர் ரேஞ்சு கதைகளை உற்பத்தி செய்து விட்டுக் கொண்டு அந்த நாதாரி நாய்க்கு விளக்குப் பிடித்துக் கொண்டிருந்த எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் எப்படி இந்தாளால் இருக்க முடிகிறது என்று தெரியவில்லை. இயற்கை அவரின் இதயத்தை டில்லி எருமையின் தோலைப் போல படைத்திருக்குமோ என்னவோ.

இவரு ரொம்ப நல்லவராம்.. ஏமாளியாம்.. ஏமாந்துட்டாராம் – எருமை ஏரோப்ளேன் ஓட்டுகிறது என்கிறார் – இதையும் கூட இலக்கியம் என்பார்கள் அவரது சொம்பு தூக்கிகள்!

முதல் முறை தேட்டைக்குப் போகும் கள்ளனுக்கு உறுத்தும் – மனசு குத்தும்; அதே இருபதாவது முறை களவெடுக்கப் போனவனுக்கு? அதையே உணர்வுப் பூர்வமாய் ஆத்மார்த்தமாய் படைப்பூக்கத்தோடு மனப்பூர்வமாய் செய்வான். நீங்கள் பார்த்திருப்பீர்களே, சி.பி.எம் கட்சியினர் சிங்கூரிலும் நந்திகிராமிலும் அவர்கள் கட்சியினர் நடத்திய படுகொலைகளை எத்தனை உணர்வுப் பூர்வமாய் தற்காத்துப் பேசினார்கள் என்று. நீங்கள் படித்திருப்பீர்களே, எத்தனை முறை முறியடிக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டாலும் சொரனையே இல்லாமல் புளுகுகளையே எழுதிவரும் ஜெயமோனை. சா.நி கூட அப்படித்தான் – மரத்துப் போயிருக்கும். அவரைச் சொல்லும் எந்த வார்த்தைகளும் அவரது உள்ளத்தைக் குத்தாது. அதிகமாகப் போனால்
அப்ஸொலூட் வோட்கா ரெண்டு ஷாட் – ஸ்பான்ஸர் செய்யத்தான் இணையக் கோமாளிகள் சிலர் இருக்கிறார்களே.

இது ஜாடிக்கேத்த மூடி. கிருஷ்ணனின் கதையை வியாஸன் எழுதியதைப் போல – ராமனின் கதையை வால்மீகி எழுதியதைப் போல. வியாஸர்களுக்கு கிருஷ்ணன்கள் தேவை – இல்லாவிட்டால் செத்துப் போய் விடுவார்கள். கிருஷ்ணனின் இருப்பை வியாஸனும், வியாஸனின் இருப்பை கிருஷ்ணனுமே உறுதி செய்து கொள்கிறார்கள். நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன், இன்னும் சில மாதங்கள் போய் வேறு ஏதோவொரு ஆனந்தாவுக்கோ இல்லை இதே நித்தி ஒரு வேளை சுப்புணியைப் போல ஜஸ்ட் எஸ்க்கேப்பாகி விட்டால் அவருக்கேவோ மீண்டும் சாரு விளக்குப் பிடிக்கப் போவார்.
காலி டப்பாவுக்குள் எதையாவது போட்டால் தானே சப்தம் வரும்? சாருவுக்குள் எந்த எழவாவது இறங்கினால் தானே இலக்கியம் பீரிட்டடிக்கும்? வயது வேறு ஆகிவிட்டது இனிமேலுமா விந்து வங்கிக்குப் போய்க் கொண்டிருப்பது? ச்சே.. தமிழ் நாட்டு
தாஸ்த்தாவ்யெஸ்க்கிக்கு நேர்ந்த கதி இத்தனை கேவலமாய்ப் போயிருக்க வேண்டாம்.

அவர் மிக குழம்பிப்போய் இருக்கிறார். அனேகமாக நித்தியைக் கூப்பிட முயற்சித்து தோற்றிருப்பார்; முதலில் ‘அயோக்கியன், இரட்டை
ஆயுள் தண்டனை’ என்று ஒரு நாலு வரி போட்டுத் தூக்கினார். அடுத்து தியானபீட இணைய தளத்தில் வெளியான அறிவிப்பைப் பார்த்திருப்பார் – உடனே ‘அயோக்கியத்தனம் தான்… ஆனாலும் சாமிக்கு நெம்ப சக்தி’ என்று இழுத்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு கூக்ளி போன்றது – நாளைக்கு இப்படியும் சாயலாம் அப்படியும் சாயலாம். என்ன இருந்தாலும் பின்னவீனத்துவ இலக்கியவாதியில்லையா.. எத்தன பின்னவீனத்துவம்
படிச்சிருப்பாரு? இது கூட செய்யலைன்னா அப்புறம் அந்த எழவை படிச்சுத்தான் என்னாத்துக்கு?

கடைசியாக…

ஓயாமல் அலறும் கைப்பேசியால் அவதியுறும் லக்கி லூக் மெய்யாலுமே பரிதாபத்துக்குரியவர். என்ன செய்ய லக்கி, நாயை அடித்தால் பீயைச் சுமக்கத்தானே வேண்டும்?

– கார்க்கி

குறிப்பு: ஹலோ… இருங்க பாஸ் இன்னொரு மேட்டரையும் கேட்டுட்டு போங்க; சாருவோட இணைத்துல அவரோட மூஞ்சிய க்ளோசப்புல
போட்டிருக்காங்க – எதுக்கும் பாத்து பதனமா தொறங்க.

மார்ச் 3, 2010 Posted by | culture, politics | , , , , | 6 பின்னூட்டங்கள்

விளையாட்டுத் துறை – சில என்னங்கள்..!

சில நாட்கள் முன்னாள் ஹாக்கி வீரர்கள் சம்பள உயர்வு கேட்டு போராடிய செய்தி ஆங்கில பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்து கொண்டிருந்தது. அப்புறம் எப்போதுமே ஒலிம்பிக் விளையாட்டுகள் நடக்கும் போது ஒரே ஒரு மெடலாவது வாங்கி விட மாட்டோ மா..? என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தும் கட்டுரைகள் ஊடகங்களில் வருவதுண்டு.

‘அதெப்படி சார்… நூறு கோடி மக்கள் வாழற நாட்டுக்கு ஒரு பதக்கம் கூட ஜெயிக்கற அருகதை இல்லாமப் போயிடுமா? எல்லாம் பாலிடிக்ஸ் சார்…எங்க பாத்தாலும் கரப்ஷன்..” என்று அங்கலாய்க்கும் நடுத்தர வர்க்க குரல்களை நிறைய கேட்டிருப்போம். இது போன்ற ஒரு விவாதம் ஒன்றில் சில மாதங்களுக்கு முன் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் விவாதம் செய்தது நினைவுக்கு வருகிறது. இந்தத் துறையில் நேரடியான அனுபவம் இருப்பதால் இது பற்றி எனது கருத்துக்களை ஒரு பதிவாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம். ரீனா – செந்தில். நான் ஜித்தோ குகாய் கராத்தே பள்ளியில் ப்ரொவிஷனல் ப்ளாக் பெல்ட் பெற்ற தகுதியில் வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்த போது ரீனா எனது மானவி. பின்னர் ஜித்தோவில் எனது ப்ளாக் பெல்ட்டை உறுதி செய்ய எனது அப்போதைய மாஸ்ட்டர் மூவாயிரம் லஞ்சம் கேட்டதால் கோவித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அங்கே எனது சக மானவன் செந்தில். இந்த இருவருமே சர்வதேச அளவில் போட்டியிடும் அளவுக்கு தகுதி கொண்ட வீரர்கள். குறிப்பாக ரீனா 2003ம் ஆண்டு தமிழ்நாடு அளவிலான கத்தா / குமிட்டே என்று இருபிரிவிலும் இண்டர் டோ ஜோ போட்டிகளில் முதலிடம் வென்றவர்.

“ஒரு தேவதையின் மரணம்” என்ற ஒரு சிறுகதை சில நாட்களுக்கு முன் எழுதியிருப்பேன். அதில் வரும் ஜெனி எனும் கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பிரேஷன் ரீனா தான். எனக்கு அவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது அறிமுகம். அப்போது நான் அவரது பள்ளியில் விளையாட்டு வகுப்பு நேரத்தில் கராட்டே இன்ஸ்ட்ரக்டராக இருந்தேன். பின்னர் அவரது ஆர்வத்தைப் பார்த்து இலவசமாகவே எங்களது மெயின் டோஜோவுக்கு
வரவழைத்தேன். (டோஜோ என்பது பயிற்சி செய்யும் இடம் அல்லது பள்ளி என்று பொருள் கொள்ளலாம். மெயின் டோஜோ என்பதை தலைமைப் பள்ளி என்று சொல்லலாம்)

சேர்ந்து மூன்றே வருடங்களில் அவர் கருப்புப் பட்டை பெறும் அளவுக்கு ஆர்வமாக கற்றுக் கொண்டார். பெண்கள் என்றால் குழைவான உடல்வாகு கொண்டவர்கள், பயந்த சுபாவம் கொண்டவர்கள், அவர்களுக்கு தற்காப்புக் கலையெல்லாம் ஒத்துவராது என்கிற பொதுவான அபிப்ராயங்களை ரீனா உடைத்து நொறுக்கினார். மாநில அளவில் நடந்த சில போட்டிகளில் அனாயசியமாக வெற்றிகளைத் தட்டி வந்தார். நாங்களெல்லாம் அவர் மேல் மிக எதிர்பார்ப்போடு இருந்தோம். ஜப்பானில் நடக்கும் உலக அளவிலான போட்டிகளுக்கு அவரை அனுப்ப மற்ற மானவர்களெல்லாம் சேர்ந்து ஸ்பான்சர்ஷிப்புக்காக அலைந்து கொண்டிருந்தோம்.

இந்த காலகட்டத்தில் தான் எனக்கும் எங்கள் மாஸ்ட்டருக்கும் மனக்கசப்பாகி நான் ஜித்தோவில் இருந்து வெளியேறி டேக் வாண்டோவில் சேர்ந்தேன். அதற்க்குப் பின் சில ஆண்டுகளாக ரீனாவைப் பார்க்க முடியவில்லை. அப்புறம் ஒரு நான்கு வருடம் கழித்து எதேச்சையாக சாலையில் எதிர்பட்டார். அப்போது அவர் பழைய ரீனாவாக இருக்கவில்லை. உருக்குலைந்து போயிருந்தார். முன்பு கிராப் வைத்திருப்பார் – இப்போது நீளமாக தலைமுடி.
என்னோடு சரியாக பேசாமல் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். பின் நான் எனது பழைய நன்பர்களைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது தான் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்ததும் அவர் கனவர் இது போன்ற விளையட்டுக்களில் ரீனா ஈடுபடுவதை விரும்பவில்லை என்பதும் தெரிய வந்தது. கலியாணத்துக்குப் பின் ஒரு நாள் ரீனா பயிற்சியில் இருக்கும் போது டோஜோவுக்குள் புகுந்த அந்த ஆள் ரீனாவுக்கு பளீர் என்று ஒரு அறை விட்டு தர தரவென்று இழுத்துச் சென்றிருக்கிறான். அதன் பின் ரீனா எப்போதும் டோ ஜோவுக்கு வந்ததேயில்லை. ஒரு வேளை ரீனா தொடர்ந்து பயிற்சி செய்திருந்தால் இந்தியாவுக்கு ஒரு உலகக் கோப்பையை வாங்கிக் கொடுத்திருப்பாரோ என்னவோ.

எத்தனையோ ஆண் மானவர்களை குமிட்டேயில் அனாயசியமாக வீழ்த்தும் திறமை கொண்ட ரீனா அவள் கனவனை சும்மா ஒரு தட்டு தட்டியிருந்தாலே அவன் மூஞ்சி எட்டாகி இருக்கும். ஆனால் அப்படியெல்லாம் செய்துவிடும் அளவுக்கு சுதந்திரமான சிந்தனை கொண்ட பெண்களை நமது சமூகம் பஜாரி என்று தானே சொல்கிறது. ஒருவேளை ரீனா அப்படிச் செய்திருந்தால் இன்றைக்கு அவள் மெடல் வாங்கியிருப்பாளோ இல்லையோ வாழாவெட்டி எனும் பட்டத்தை வாங்கியிருப்பாள். மக்கள் தொகையில் சரிபாதி கொண்ட பெண்களை இப்படி மொக்கையாக்கி வைத்திருப்பது தான் நமது சமூக அமைப்பு. பொருளாதார ரீதியில் அவர்களை சார்பு நிலையில் இருக்க வைத்தே வீணடித்து விட்டது. ஏதோ லீணா மணிமேகலை போன்று நாலு கெட்ட வார்த்தைகள் பேசுவதையே பெண் விடுதலையின் உச்சம் என்று நினைத்துக் கொள்ளும்
அலுக்கோசுகள், அந்த நாலு கெட்ட வார்த்தைகளையும் கவனமாக அவரது கனவரை நோக்கி உதிர்க்காததன் மர்மம் என்னவென்று யோசிக்க வேண்டும்.

செந்தில் ஒரு டைலர். ஒரு ஆயத்த ஆடை தயார் செய்யும் கம்பெனியில் வேலை செய்து வந்தான். அங்கே குறிப்பான வேலை நேரம் கிடையாது. ஆர்டர் இருக்கும் போது இரவு பகலாக வேலை செய்தாக வேண்டும். இரவு முழுக்க வேலை செய்து விட்டு சிவந்த கண்களோடு காலையில் மைதானத்தில் வந்து எங்களோடு நிற்பான். உடல் தொய்ந்து போய் ஓய்வு கேட்டு கெஞ்சும். அந்த நிலையிலும் செந்தில் அடிக்கும் ஜம்ப்பிங் ரிவர்ஸ் சைடு கிக் எங்களுக்கெல்லாம் சிம்ம சொப்பனம். நான் மிகச் சிலரோடு தான் குமிட்டே பயிற்சி செய்ய அஞ்சி இருக்கிறேன். அதில் செந்தில் என்றால் எனக்கு எப்போதும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். தைய்யல் மிஷினை மிதித்து மிதித்து உரமேறிய கால்கள் அவன் கால்கள்.

டேக் வாண்டோ ஒலிம்பிக்கில் இருக்கிறது. அனேகமாக ஒலிம்பிக்கில் இருக்கும் ஒரே மார்ஷியல் ஆர்ட் டேக் வாண்டோ தான் – கராத்தே கூட ஒலிம்பிக்கில் இல்லை. செந்திலின் லட்சியமே எப்படியாவது இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வெல்ல வேண்டும் என்பது தான். வெறித்தனமாக பயிற்சியில் ஈடுபட்டிருப்பான். எந்த சூழ்நிலையிலும் வகுப்பை தவிர்த்ததேயில்லை. இந்த நிலையில் இரண்டாயிரத்தைந்தாம் ஆண்டு கொரியாவில் இருக்கும் டேக் வாண்டோவின் தலைமைப் பள்ளியில் இருந்து சில தலைசிறந்த வீரர்கள் இந்தியா வந்தார்கள். அதையொட்டி இந்திய அளவில் தேர்ந்தெடுக்கப் பட்ட மானவர்கள் அவர்களோடு மோதும் ஒரு போட்டி ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் செந்திலும் எங்கள்
டோஜோ சார்பில் இறங்கினோம்.

பொதுவாக டேக் வாண்டோ வைப் பொருத்த வரையில் கொரிய வீரர்களே முன்னனி வகிப்பார்கள் (குங்ஃபூ என்றால் சீனர்கள் கராட்டே என்றால் ஜப்பானியர்கள் என்பது போல) அந்தப் போட்டியில் அவர்கள் எந்தவிதமான சவாலையும் எதிர்பார்த்து வந்திருக்க மாட்டார்கள். ஆனால் செந்தில் அது வரையில் இருந்த மாயைகளை (Myth) நொறுக்கித் தள்ளினான். அவனது ரிவர்ஸ் சைட் கிக் அன்றைக்கு அற்புதங்களைக் காட்டியது.
கொரியர்கள் மிரண்டு போனார்கள். எங்கள் தலைமை இன்ஸ்ட்ரக்டர் இந்திய டேக் வாண்டோ வின் எதிர்காலம் செந்தில் என்று வீரர்களிடையே தனிப்பட்ட முறையில் பேசும் போது சொன்னார். அடுத்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு எப்படியும் தேர்வாகிவிடுவான் என்றும் எப்படியும் மெடல் தட்டிவிடுவான் என்றும் நாங்களெல்லாம் செந்தில் மேல் மிக எதிர்பார்ப்புடன் இருந்தோம். இந்த நிலையில் தான் அவனது குடும்பப் பிரச்சினைகள் ஒவ்வொன்றாக மேலெழுந்து அவனை நிர்மூலமாக்கியது.

செந்திலுக்கு மொத்தம் மூன்று அக்காக்கள். அவன் அப்பா சின்ன வயதிலேயே அவன் அம்மாவை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணோடு போய் விட்டார். பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு வந்து விட்டான். வீட்டில் சம்பாதிக்கும் ஒரே ஆள் செந்தில் தான். இந்த நிலையில் தான் செந்திலின் முதல் அக்காவுக்கு திருமணம் ஏற்பாடானது. திருமண செலவுகளை ஈடுகட்ட செந்தில் ஓவர் டைம் பார்க்கத் துவங்கினான். ஓவர் டைம் என்றால் நீங்கள் நினைப்பது போல் அல்ல – தொடர்ந்து மூன்று சிப்டுகள் வேலை செய்வான். ஆறே மாதத்தில் அறுபத்தைந்து கிலோவில் இருந்து ஐம்பது கிலோவாக எடை குறைந்தான். பின்னர் இரண்டாவது அக்கா.. மூன்றாவது அக்கா…

இடையில் எனது பொருளாதார நிலைமையும் என்னை ஊரை விட்டு விரட்டி விட்டது. பதினான்கு ஆண்டுகள் எத்தனையோ ஆசைகளோடு கற்று வந்த கலைகளை தூக்கி உடைப்பில் போட்டு விட்டு பிழைப்பைப் பார்க்க கிளம்பி விட்டேன். காலை எழுந்தவுடன் துவங்கும் ஓட்டம் இரவு படுக்கையில் மயங்கி விழும் வரையில் நிற்காது. இப்படியே சில ஆண்டுகள் போனதில் எனது பழைய நன்பர்கள் எல்லோரும் மறந்தே போனார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஊருக்குப் போயிருந்த போது செந்திலைத் தேடிக் கண்டுபிடித்து போய் பார்த்தேன். ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருக்குலைந்து போயிருந்தான். இளைத்த உருவம், களைத்துப் போய் அலைபாயும் கண்கள், தைய்யல் இயந்திரத்தை மிதித்து மிதத்து
ஸ்லிப் டிஸ்க் பிரச்சினை வேறு.. இந்தியாவுக்கு ஒரு தங்கப் பதக்கத்தை பெற்றுத் தரும் வல்லமை கொண்டிருந்தவன் இன்று எங்கோ ஒரு ரெடிமேட் துணிக் கடையில் இன்றைக்கு எப்படியாவது ஓவர் டைம் கிடைக்காதா ஒரு அம்பது ரூவா கூட கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான்.

இது தான் நிதர்சனம்..

இன்றைக்கான சோறை இன்றைக்கே சம்பாதித்தாக வேண்டிய நெருக்கடி. கல்யாணம் என்றாலே பெண் வீட்டை தேட்டை போடலாம் என்று கருதும் ஒரு சமூகத்தில் செந்தில் போன்று மூன்று சகோதரிகளைக் கொண்ட ஒருவன் எங்கிருந்து பதக்க லட்சியங்களைச் சுமப்பது? இது பொதுமைப்படுத்தும் முயற்சியல்ல – ஆனால், நாட்டில் பெருவாரியாக இருக்கும் கீழ்நடுத்தர ஏழைக் குடும்பங்களில் பதின்ம வயதுகளின்
இறுதியிலேயே பொருளாதார பாரத்தை சுமக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.. யாராவது “நூறு கோடி பேரு இருக்கற நாட்டுல ஒரு தங்கப் பதக்கம் கூடவா வாங்க வக்கில்ல” என்று நீட்டி முழக்குவதை பார்க்கும் போதெல்லாம்.. ” யோவ்.. உன்னோட இந்தியாவுல மொத்தமாவே மூனு கோடி பேரு தான்யா தேறுவாங்க.. மிச்சம் இருக்கற தொன்னுத்தியேழு கோடி பேரு எங்க இந்தியாவுல இருக்காங்கய்யா” என்று கத்த வேண்டும் என்று தோன்றும்.

நாள் ஒன்றுக்கு இருபது ரூபாய்களே சம்பாதிக்கும் மக்கள் என்பது சதவீதம் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் விளையாட்டையெல்லாம் ஒரு பிழைப்பாகவா பார்க்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் மாநில அளவில் முதல் இரண்டு இடங்கள் பெற்று சான்றிதழ் வைத்திருந்தால் ரயில்வே துறையில் டி.டி.ஆர் வேலை கிடைக்கலாம். அதுவும் கூட நிச்சயமில்லை. 1975 ஹாக்கி உலகக் கோப்பையில் வென்ற இந்திய அணியின் கேப்டனே இன்று ரயில்வே துறையில் தலைமை டிக்கெட் பரிசோதகராகத் தான் குப்பை கொட்டுகிறார் – இது இன்றைய டைம்ஸில் வந்திருக்கும் செய்தி. அதே நேரம் 83 கிரிக்கெட் உலகக் கோப்பை வென்ற கேப்டனின் நிலை இன்று என்ன?

இந்த பிரச்சினையில் பல பரிமாணங்கள் இருக்கிறது. அதில் லஞ்ச ஊழலும் ஒன்று. எனது நன்பன் வைபவ் பற்றி எனது வட இந்திய பயனக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன் நினைவிருக்கிறதா? அவன் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உ.பி கிரிகெட் அணியில் விளையாடியவன். ரஞ்சி கோப்பை போட்டியில் இறுதி செய்யப்படப் போகும் ஐம்பது பேரில் ஒருவனாக தேர்வாக அவனிடம் ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்கள். கேட்டது வேறு யாரும் இல்லை – இன்று ஆங்கிலச் சேனல்களில் கிரிக்கெட்டின் புனிதம் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளும் ஒரு முன்னாள் வீரர் தான். லாலு ப்ரஸாத்தின் மகன் டில்லி கிரிகெட் அணியில் விளையாடுகிறான்.

ஆனால் இந்த லஞ்ச ஊழலும் அரசியல்வாதிகளும் மட்டுமே இந்தியா விளையாட்டுத் துறையில் பிரகாசிக்காமல் போனதற்கு முதன்மைக் காரணம் அல்ல. அதைத் தாண்டி மிக முக்கியமான காரணம் பொருளாதாரமும் நமது சமூக அமைப்பு முறையும். இங்கே தான் சூத்திரன் பஞ்சமன் என்று ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே சமூக விலக்கம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்றைய உணவை சேகரிப்பதே பெரும்
பாடாக இருக்கும் போது, எப்படி விளையாட்டுத் துறைக்கு வந்து விட முடியும்? நமது சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி பெரிதாக சொல்லித் தெரியவேண்டியதில்லை. ரீனா போன்று எத்தனை பேர் தங்கள் கனவுகளை லட்சியங்களை மனதுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு சமையலறையில் புழுங்கிக் கொண்டிருப்பார்கள்? ஒரு சானியா மிர்ஸாவை கொண்டாடும் ஊடகங்கள் இப்படி கவனிப்பாரே இல்லாமல் திறமைகள் வீணடிக்கப்படும் லட்சக்கணக்கான சானியா மிர்ஸாக்களைப் பற்றி பேசுவதில்லை. இதே சானியா மிர்ஸா அழகியாக இல்லாமலும்
சிவந்த தோல் இல்லாமலும் இருந்திருந்தால் இப்படி ஒரு கவனிப்பை பெற்றிருப்பாரா என்பது இன்னொரு கேள்வி.

இந்தியாவுக்கு பதினோரு க்ராண்ட் ஸ்லாம் பெற்றுத் தந்த லியாண்டர் பயஸை விட பெரிதாக எதையும் சாதிக்காத சானியா மிர்ஸா ஊடகங்களில் கொண்டாடப்படுவது ஏனென்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா?

ஏன் கிரிக்கெட்டுக்கு இந்தளவுக்கு கவனிப்பும் முக்கியத்துவமும் தருகிறார்கள் என்பதை யோசித்திருக்கிறீர்களா? கொஞ்சம் கொஞ்சமாக இந்தியர்களின் தேசிய விளையாட்டே கிரிக்கெட் தான் என்று நம்பும் படிக்கு ஊடகங்கள் கடந்த ஒரு இருபது முப்பது ஆண்டுகளில் தொடர்ந்து பொதுபுத்தியில் பதிய வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு வீரர்கள் விளையாடுகிறார்களோ இல்லையோ பல விளம்பர காண்டிராக்டுகளில் கையெழுத்திட்டு விடுகிறார்கள். இவர்கள் மேல் – அதாவது இவர்களின் கவர்ச்சியின் மேல் – கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கும் கம்பெனிகள்
இவர்கள் அணியில் தேர்வாவது வரைக்கும் செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆமாம்.. கடைசியாக யுவராஜ் சிங் எப்போது உருப்படியாக விளையாடினார் என்று நினைவுக்கு வருகிறதா உங்களுக்கு? தொடர்ந்து ரஞ்சி கோப்பை மேட்சுகளில் நன்றாக விளையாடு தினேஷ் ஏன் தொடர்ந்து அணியில் இடம் பிடிப்பதில்லை?

உலகமயமாக்கல் எல்லா துறையையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு சேவை செய்யும் துறைகளாக மறுவார்ப்பு செய்து வருகிறது. பன்னாட்டு கம்பெனிகள் தமது பிரண்டு அம்பாஸிடர்களாக தேர்வாக ஏதோ கொஞ்சம் திறமையும் நல்ல அழகும் கொண்ட வீரர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கிறது – இவர்கள் தான் தவிர்க்கவியலாத படிக்கு அணிகளில் இடம் பெறுவர். சச்சின் டோனி போன்ற சில விதிவிலக்குகள் இருக்கலாம் (அப்படிப் பார்த்தாலும் எனது தனிப்பட்ட கருத்து சச்சினை விட காம்ப்ளி திறமையானவர் என்பதே) – இவர்கள் இயல்பிலேயே திறமை கொண்டவர்கள் – அதை பன்னாட்டு கம்பெனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன. ஆனால் இவர்கள் எல்லோரையும் விட எத்தனையோ திறமைசாலிகள் இந்த நூறு கோடி கூட்டத்துக்கு நடுவே எங்கோ இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் ஏன் வெளியே தெரிவதில்லை?

ஒலிம்பிக் போட்டிகளுக்கு இந்தியா அனுப்பும் அணிகளில் லட்சக்கணக்கான ரூபாய்கள் லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு வசதி கொண்ட மேல் நடுத்தர வர்க்க குடும்பத்துப் பிள்ளைகளே இருப்பர். உண்மையான திறமைசாலிகள் எங்கோ ஒரு மூலையில் தைய்யல் இயந்திரத்தை மிதித்து இடுப்பு ஒடிந்து கிடப்பார்கள். அவர்களின் கோப்பை வெல்லும் கனவுகளெல்லாம் தகர்ந்து போய் இன்றைக்கு ஓவர் டைம் கிடைத்தால் தேவலம் எனும் எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிப்ரவரி 3, 2010 Posted by | culture, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

கடந்து போன ஆண்டுகள்; நிலைத்து நிற்கும் எதார்த்தங்கள்..!

கோயமுத்தூரையும் சுந்தரி அக்காவையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை. முந்தையது சில கசப்பான அனுபவங்களுக்காக பிந்தையது அந்தக் கசப்புகளுக்கெல்லாம் மருந்தாக இருந்ததற்காக. வெளுத்த முகங்கள் எப்போதும் எனக்கு கொஞ்சம் அந்நியமாகத்தான் தோன்றுகிறது. அனேகமாக அதற்கு சுந்தரியக்கா கூட காரணமாய் இருக்கலாம். அக்கா நல்ல திராவிட நிறம். சிக்கலான தருணங்களை அவள் அனாயசியமாக கையாளுவதைக் கண்டிருக்கிறேன். முடிவுகள் எடுப்பதிலும் அதில் ஊன்றி நிற்பதிலும் அவளது உறுதி என்னை எப்போதும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவ்வகையில் அவளே எனது முன்மாதிரி அவளே எனக்கு அழகி.

இடையில் நடந்த சில நிகழ்வுகள் என்னை இந்த ஊரை விட்டு தூக்கியெரிந்து விட்டிருந்தது. அது எனக்கு சந்தோஷமாகவும் இருந்தது. சென்ற வருடம் வரையில் இங்கே வரவே கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்நினைப்பை பிடித்து வைத்திருந்த கடைசி இழை போன வருடம் அறுந்து போனவுடன் அக்காவைப் பார்க்கும் நினைவு எழுந்தது. பன்னிரண்டு வருடங்களாக வராத நினைவு!

“சார் வண்டிய எங்கியாவது நிப்பாட்டுங்க.. அவசரமா யூரின் போகனும்” எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் பேருந்து நடத்துனரிடம் கேட்டார்.

“ம்… கொஞ்சம் பிடிச்சி நிப்பாட்டி வையுங்க. இன்னும் பத்து நிமிசத்தில டீ குடிக்க நிறுத்துவோம்” அசட்டையாக பதில் வந்தது.

பேருந்து உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. தலைமயிரை பிய்த்துச் செல்லும் உத்வேகத்தோடு வீசும் காற்றுக்கு கண்களில் கண்ணீர் வழிகிறது. கண்களை மூடி நுரையீரல் திணரும் அளவுக்கு மூச்சுக் காற்றை உள்ளிழுத்தேன் – அந்தப் பரிச்சையமான மணம் நாசித் துவாரங்களின் உணர்ச்சி நரம்புகளை மீட்டிக் கொண்டே உள்நுழைகிறது – இது எனக்குப் பரிச்சயமான மணம் தான் – கோவையின் மணம்! வெளியில் ஏதோ நெடுஞ்சாலையோர தேனீர்க் கடையில் வண்டி நின்றது. ஒருவழியாக ‘சின்னத் தளபதி’ பரத்தின் நாராசமான சவடால்களுக்கு ஒரு பத்து நிமிட இடைவெளி. இந்தப் பயல் பேரரசுவை ஏதாவது செவ்வாய் கிரகத்துக்கோ சனி கிரகத்துக்கோ கிரகம் கடத்தி விட்டால் தமிழ்நாட்டில் பாதிப்பேருக்கு தலைவலி தீரும் என்று நினைக்கிறேன்.

தேனீர்க் கடை பலகை பெருமாநல்லூர் என்றது.

“கோயமுத்தூர் இன்னும் எவ்வளவு நேரமாகும் சார்” சிகரெட் பற்ற வைப்பதில் முனைப்பாய் இருந்த ஒரு நடுத்தர வயதுக்காரரிடம் கேட்டேன்.

“இன்னும் ஒரு ஒன்றரை மணி நேரமாகும் தம்பி” நட்பாய் புன்னகைத்தவர், “எங்கிருந்து வர்ரீங்க தம்பி?” பேச்சை வளர்க்க பிரியப்பட்டர் போல.

“பாண்டிச்சேரிங்க”

“என்ன விசமா?”

“இங்க கொஞ்சம் ஆபீஸ் வேலை இருக்குங்க”

“தங்கறதெல்லாம்?”

“…..” என்ன சொல்வதென்று விளங்கவில்லை.

சுந்தரி அக்காள் மேல் எனக்கு இருந்த ஒட்டுதல் தவிர்த்து பார்த்தால் கோயமுத்தூர் மேல் எனக்கு பெரிய ஒட்டுதல் இருந்ததில்லை. அக்காவை தவிர்த்து எனக்கு அங்கே கிடைத்ததெல்லாம் சில கசப்பான நினைவுகள் தான். எங்கள் பூர்வீகம் கோவை-பொள்ளாச்சி வழியில் இருக்கும் கிணத்துக்கடவு. நான் பிறந்தது, பன்னிரண்டு வயது வரை வளர்ந்தது எல்லாம் அங்கே தான். அங்கிருந்த அரசு உயர் நிலைப்பள்ளியில் தான் எட்டாம் வகுப்பு வரை படித்தேன். எனக்கு பாண்டியைப் போல் அல்லாமல் கோவையில் வெகுசில நன்பர்கள் தான் இருந்தனர். அதில் கோபால் மிக  நெருங்கிய நன்பன். அது ஆறாம் வகுப்பு ஆண்டிறுதி விடுமுறை நாள். காலையிலிருந்து மைதானத்தில் விளையாடிக் கலைத்துப் போயிருந்தோம். சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து விளையாடலாம் என்று நாங்கள் கிளம்பினோம். கோபாலின் வீடு சற்று தொலைவாக இருந்ததால் நான் அவனை எங்கள் வீட்டுக்குக் கூட்டிச் சென்றேன். அன்று வீட்டில் கவுச்சி எடுத்திருந்தனர். நானும் கோபாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அப்பத்தா வந்தாள்

“ஆரு கண்ணு அது?” கண்களை இடுக்கிக் கொண்டே கேட்டாள் – பார்வை கொஞ்சம் மந்தம்

“ஆத்தா இது கோபாலு.. என்ர ப்ரெண்டு” சத்தமாய்ச் சொன்னேன் – காதும் சரியாகக் கேட்பதில்லை

“அப்புடியா சாமி… உங்கூடு எங்கிருக்குது கண்ணு..” கோபாலைப் பார்த்துக் கேட்டாள். அப்பத்தாவுக்கு குரல் மட்டும் வென்கலம்.. கிணத்துக்கடவுசந்தையில் நின்று கத்தினால் பொள்ளாச்சியில் உறங்கும் குழந்தைகள் கூட எழுந்துவிடும் என்பார்கள்.

“நம்மூர்ல தானாத்தா” கோபாலு சோற்றைப் பிசைந்து கொண்டே சொன்னான்.

“உங்கைய்யன் பேரென்ன?” நெருங்கி வந்தாள்

“மருதனுங்க” கோபால் சொல்லி வாயை மூடும் முன் அவன் வட்டிலை ஆங்காரத்துடன் எட்டி உதைத்தாள் அப்பத்தா.

“ஏண்டா ஈனப்பயலே… சக்கிளி நாயி… ஈனச்சாதில பொறந்த நாயிக்கு வக்குவக தெரீ வேண்டாமாடா… ஆருட்டுக்கு வந்து திங்கரக்கு ஒக்காந்துக்கறேன்னு தெரீமாடா ஒனக்கு.. எந்திச்சு வெளீல போடா..”  வெறி வந்தது போல கூப்பாடு போட்டாள்…

“அய்யோ.. என்ர பேரனுக்கு தராதரந்தெரீலயே… ஈனச்சாதி பயலுகளோடயெல்லாம் பளகுறானே..” என்று புலம்பலாக ஆரம்பித்தவள்.. “இந்த நாறப்பொழப்ப பாக்கக் கூடாதுன்னு தாண்டா உங்காயி மண்டயப் போட்டுட்டா ராசி கெட்டவனே.. நீ பொறந்து உங்காயியத் தின்னுட்டே.. வளந்து பரம்பர மானத்தத் திங்கிறியாடா..” என்று கேட்டுக் கொண்டே என் காதைப் பிடித்து திருக ஆரம்பித்தாள்.. கண்களில் வழியும் கண்ணீரின் ஊடே கோபாலு விக்கித்துப் போன முகத்துடன் கையில் பிசைந்து வைத்திருந்த சோற்றுக் கவளத்தை கீழே நழுவ விட்டுக் கொண்டே வெளியேறுவது தெரிந்தது. அதற்குப் பின் என்னோடு கோபாலு பேசியதேயில்லை. இப்போதும் இடது காது மடலின் பின்னே ஒரு தழும்பு இருக்கிறது – எப்போதாவது தலைவாரும் போது அந்தத் தழும்பை வருட நேரிடும்; அப்போதெல்லாம் கோபாலின் நினைவு வரும்.

பின்னாளில் நாங்கள் பாண்டி வந்து சேர்ந்த சில வருடங்களில் அப்பத்தா இழுத்துக் கொண்டிருப்பதாக தகவல் வந்தது; அப்பா எத்தனை வற்புறுத்தியும் நான் வர மறுத்து விட்டேன். பின்னர் செத்துப் போய்விட்டதாகவும் தலைப் பேரன் வந்து முறை செய்ய வேண்டும் என்றும் கோவையில் இருந்து அப்பா அழைத்தார்.. நான் அப்போதும் பிடிவாதமாய் மறுத்து விட்டேன்.

“சார் வண்டி கெளம்புது.. எல்லா டிக்கெட்டும் ஏறியாச்சா” கண்டக்டரின் குரல் கலைத்தது. சிகரெட்டை விட்டெரிந்து விட்டு ஓடிப்போய் தொற்றிக் கொண்டேன். வண்டி கிளம்பியதும் ‘சின்னத் தளபதியின்’ இம்சை மீண்டும் தொடர ஆரம்பித்தது.. கண்களை இறுக மூடிக் கொண்டே பழைய நினைவுகளில் வலுக்கட்டாயமாய் என்னை ஆழ்த்திக் கொண்டேன்.

எங்கள் குடும்பத்தில் அகால மரணங்கள் சாதாரணம். எங்கள் தாத்தா வெள்ளைக்கார இராணுவத்தில் பணிபுரிந்தவர். பர்மாவில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது காயம் காரணமாக ஊர் திரும்பியவர் நிறைய தங்கம் கொண்டு வந்திருக்கிறார். அது நேர் வழியில் வந்ததாய் இருக்காது என்று ஊரில் பரவலாக கிசுகிசுத்துக் கொள்வார்கள். பட்டாளத்தில் இருந்து வந்தவுடன் நிறைய நிலங்களை வாங்கிப் போட்டார். மைனராக ஊர் சுற்றிக் கொண்டிருந்தவருக்கு ஊர்ப் பெண்களின் பாதுகாப்புக் கருதி அவசர அவசரமாக கல்யாணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவருடைய முதல் தாரம் கல்யாணம் ஆகி ஒரே வருடத்தில் தூக்குப் போட்டு செத்துப் போனாள்; அப்போது அவள் ஏழு  மாத கர்ப்பிணி. இரண்டே வாரத்தில் அப்பத்தாவை தாத்தா கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார். முதலில் எங்கள் பெரியப்பா, ஐந்து ஆண்டு இடைவெளியில் எங்கள் அப்பா. அப்பா பிறந்த ஆறு மாதத்தில் தாத்தா மாரடைப்பில் மரணமடைய அப்பத்தா தான் இருவரையும் வளர்த்திருக்கிறார்.

அங்கே விவசாயம் தான் பிரதானம். பெரும்பாலும் ஊரில் இருந்தவர்களிடம் சின்னதாகவாவது நிலம் இருந்தது. வாலாங்குளம் நிரம்பி வழியும் நாட்களில் இங்கே விவசாயம் செழிப்பாக நடக்கும். ஏப்ரல் தொடங்கி ஜூலை வரையில் மல்லாக்கொட்டை விளையும். ஊரின் ஒதுக்குப் புறத்தில் தலித் காலனி இருந்தது. தலித் காலனியை எல்லோரும் அங்கே வளவு என்று சொன்னார்கள். அப்பத்தா குமரியாய் இருந்த போது வளவுக்காரர்கள் ஊருக்குள் செருப்பில்லாமல் தான் வருவார்கள் போவார்களாம். காடாத் துணி தான் உடுத்திக் கொள்ள வேண்டுமாம். ஊர்காரர்களின் வயலுக்கு ஆள் கேட்டால் வந்தே தான் ஆகவேண்டுமாம். ‘காலமே கெட்டுப்போச்சு.. ஈனப்பயலுகெல்லாம் டுர்ருன்னு வண்டீல போறானுக’ என்று அப்பத்தா அடிக்கடி குமைந்து கொள்வதைப் பார்த்திருக்கிறேன்.

நான் ஏழாவது எட்டாவது படிக்கும் போது காலனியில் சிலரிடம் டி.வி.எஸ் மொபட் இருந்தது. வயதானவர்கள் மட்டுமே தப்படிக்க, சாவுச்சேதி சொல்ல, செத்த மாட்டை தூக்க, வயலில் கூலி வேலைக்கு என்று வந்தார்கள் – இளைஞர்கள் அந்த வேலைகளைத் தவிர்த்து விட்டுவெளியேறிச் சென்று கொண்டிருந்தார்கள் – ஊருக்கு வளவின் மேலிருந்த பொருளாதாரக் கட்டுப்பாடு தளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அது சாதிக்காரர்களுக்கு ஒரு பொருமலான காலகட்டமும் கூட. பொருளாதார ரீதியில் அவர்கள் வளவின் மேல் கொண்டிருந்த கட்டுப்பாடு தளர்ந்து போனாலும் வெத்துப் பெருமையும் வீன் இறுமாப்பும் கொண்டிருந்தார்கள் – அது காட்சிக்குப் பொருந்தாத வேடமாய் இருந்தது. கோயில் பூசாரி கனகவேலு கவுண்டரின் மகனும் வளவில் இருந்து பெருமாள் பையனும் டவுனில் ஒரே காண்டிராக்டரிடம் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். சில வருடங்கள் போன பின்னே பெருமாள் பையன் டவுனில் சில மேஸ்திரிகளிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டு சொந்தமாக பெயிண்டிங் காண்டிராக்ட் எடுத்து செய்யத் துவங்கியிருந்தார்.

ஒரு கட்டத்தில் பூசாரி மகன் பெருமாள் மகனிடம் வேலைக்கு செல்ல வேண்டிய நிலையும் கூட ஏற்பட்டது. இதை ஊருக்குள் புகைச்சலாயும் பரபரப்பாயும் பேசிக் கொண்டார்கள். அந்த வருடம் ஊர் நோம்பிக்கு பெருமாள் மகன் தப்படிக்க வராவிட்டால் அந்தக் குடும்பத்தோடு எண்ணை தண்ணி புழங்கக் கூடாதென்றும், பெருமாள் குடும்பமும் ரத்த சொந்தங்களும் ஊர் பொது சாலையை பயன்படுத்தக் கூடாது என்றும் ஊர் கூட்டம் போட்டு முடிவு செய்து தங்கள் அரிப்பை தணித்துக் கொண்டார்கள். அப்புறம் கொஞ்ச நாளில் பெருமாளும் அவர் மகனும் இங்கே அவர்கள் வீட்டை அப்படியே போட்டு விட்டு குடும்பத்தோடு டவுனில் சலீவன் வீதிக்கு குடிபெயர்ந்து விட்டார்கள்.

“வேண்டாங்கண்ணு.. அளுகாத கண்ணு.. இந்தா மருந்து வச்சிக்க” நான் சுந்தரி அக்கா மடியில் படுத்துக்கிடந்தேன். கண்ணீர் வற்றி கன்னங்களில் வெள்ளையாய் உப்புக் கோடிட்டிருந்தது. கண்கள் சிவந்து வீங்கியிருந்தது. அப்பத்தா திருகியதால் இரத்தம் வழிந்து கொண்டிருந்த காதிலும் அரக்க மட்டையால் அடித்ததால் வீங்கியிருந்த முதுகிலும் மருந்து போட்டுக் கொண்டிருந்தாள்.

“போக்கா.. நா உங்கூட பேசமாட்டேன். நீ அப்பத்தாள ஒரு வார்த்த கூட கேக்கலையில்ல.. போ.. எங்கூட பேசாத” அப்பத்தா அடிப்பதை அவள் தடுத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன்.

“……” அவளிடம் இருந்து மௌனம் தான் பதிலாக வந்தது.

“இனிமே நா என்ன கூப்புட்டாலும் அவன் நம்மூட்டுக்கு வரவே மாட்டான்”  தொண்டையெல்லாம் அடைத்துக் கொண்டு கேவலாய் வார்த்தைகள் வந்து விழுந்தது இன்னமும் நினைவில் இருக்கிறது. அதற்குப் பின் கோபாலு வீட்டுக்கு வரவும் இல்லை என்னோடு பேசவும் இல்லை. அந்த சம்பவத்துக்குப் பிறகு தான் மேலே சொன்ன வேறுபாடுகளெல்லாம் எனக்குப் புரிய ஆரம்பித்தது. அது எனக்கு கடும் வெறுப்பை உண்டாக்கியது.

ஏன் பேசக்கூடாது? ஏன் பழகக்கூடாது? ஏன் நம்வீட்டுக்கு அவர்கள் வரக்கூடாது? என்ற என் கேள்விகளுக்கு பதில் சொல்ல யாரும் இல்லை. நானே கவனித்துப் புரிந்து கொள்ள ஆரம்பித்தேன். ஒதுக்கப்படுவதன் வலி எனக்குத் தெரியும். ஊரில் என்னிடம் பேசக்கூடியவன் சந்திரன் மட்டும் தான். பட்டாளத்துக்காரர் குடும்பத்து வாரிசுகள் ராசி கெட்டவர்கள் என்று என்னோடு தங்கள் பிள்ளைகளை பழகவிடமாட்டார்கள். அக்காவோடும் ஊர்கார பெண்கள் பேசிப் பழகி நான் கண்டதில்லை. காலனியில் இருந்து பள்ளிக்கு வந்தவர்கள் தான் என்னோடு பழகினர் – விளையாட உடன் சேர்த்துக் கொண்டனர். எனது மொத்த வெறுப்பிற்கும் தாக்குதல் இலக்காக இருந்தது அப்பத்தா தான். அதற்குப் பின் ஒரு இரண்டு  வருடம் தான் கோவையில் இருந்திருந்தேன். அந்த இரண்டு வருடத்தில் ஒரு முறை கூட அப்பத்தாவுக்கு முகம் கொடுக்கவில்லை.

என் பெரியப்பாவின் மகள் தான் சுந்தரி அக்கா. சுந்தரி அக்கா பிறந்து ஒரு வருடத்தில் பெரியப்பா மோட்டார் ரூமில் ஷாக் அடித்து செத்துப் போய்விட, அந்த அதிர்ச்சியில் பெரியம்மாவும் கிணத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டாள். அதற்குப் பின் எட்டு வருடங்கள் கழித்து அப்பாவுக்கு கல்யாணம். நான் பிறக்கும் போதே அம்மாவை விழுங்கி விட்டேன். அன்றிலிருந்து சுந்தரியக்கா தான் எனக்கு அம்மா.

“அவுனாசி டிக்கெட்டெல்லாம் எறங்கு.. யோவ் சீக்கிரமா எறங்குய்யா” வண்டி கிளம்பி வேகமெடுத்தது. காற்று மீண்டும் தலைமயிரைக் கலைத்துச் செல்கிறது. இடது கைய்யால் கோதி விடும் போது மீண்டும் அந்த தழும்பு நிரடியது.

நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது அக்கா அடிக்கடி தனக்குள் சிரித்துக் கொண்டாள்; எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு வந்த போது சுந்தரியக்கா மாணிக்கத்தோடு ஓடிப்போய் விட்டாள் என்று சொன்னார்கள். மாணிக்கத்தின் அப்பா தான் பறையடித்து சாவுச் சேதி சொல்லும் ரங்கைய்யன். கோபாலுக்கு மாணிக்கம் அண்ணன் முறை.

ஒரு இரண்டு நாட்களுக்கு வீடே அமளி துமளிப் பட்டது. அப்பாவும் அப்பத்தாவும் வானத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தார்கள். எனக்கு இந்த விஷயம் முன்பே தெரியுமா என்று கேட்டு அப்பாவும் அப்பத்தாவும் மாறி மாறி அடித்தார்கள். பரம்பரை மானம், குல மானம், பெருமை இத்யாதி இத்யாதி…, ஒரு வாரம் கழித்து அப்பா என்னை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி கிளம்பி விட்டார். அப்பத்தா ‘என்ர கட்டை இந்த மண்ணுல தாண்டா வேகும்’ என்று சொல்லி வர மறுத்து விடவே நாங்கள் மட்டும் கிளம்பினோம். அதுவரையில் வேலைக்கு எதுவும் போகாமல் பண்ணையம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா, பாண்டியில் ஒரு தொழிற்சாலையில் பிட்டராக வேலைக்கு சேர்ந்தார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்த சாதி முறுக்கு நாள்பட நாள்பட மங்கி அவர் மறையும் நிலையில் மறைந்தே விட்டது.

பண்ணிரண்டு ஆண்டுகள் வழிந்து சென்றதன் இடையில் நிறைய விஷயங்கள் நிகழ்ந்து விட்டது. அப்பத்தா முடியாமல் இருந்த போது கவனித்துக் கொள்ள வந்த சொந்தங்கள் நிலம் நீச்சு என்று எல்லாவற்றையும் தந்திரமாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். கோர்ட்டு கேசு என்று அலைய அப்பாவுக்கு பொருளாதார பின்புலம் இல்லாமல் போய்விட்டதால் மௌனமாக அதை ஏற்றுக் கொண்டுவிட்டார். இன்னமும் தாத்தா பட்டாளத்திலிருந்து வந்து கட்டிய வீடு இருக்கிறது. அது அப்பத்தா சாவுக்குப் பின் அப்பா பெயருக்கு வந்திருந்தாலும் யாரும் பயன்படுத்தவில்லை.அதிகளவு அநியாய மரணங்கள் நடந்துள்ள வீடு என்பதால் வாங்கவும் எவரும்  வருவதில்லை.

போன வருடம் அவர் செத்துப் போனார். ஒரு வரும் இழுத்துக் கொண்டு கால், கை, கல்லீரல் என்று ஒவ்வொன்றாய் செயலிழந்து மெல்ல மெல்ல நிதானமாய் மரணம் படிப்படியாய் அவரைப் பற்றிப்படர்ந்தது. எந்த சாதிக்காரனோ சொந்தக்காரனோ எட்டிப்பார்க்கக் கூட வரவில்லை. கடைசி ஒரு வருடம் எனக்கு இன்னமும் வேலை கிடைக்காத நிலையில் அத்தியாவசியச் செலவுகளைக் கூட அவரோடு உடன் வேலை செய்த நன்பர்களே கவனித்துக் கொண்டிருந்தனர். அவரின் காரியங்களும் கூட நன்பர்கள் உதவியோடு நானே தனியாய் நின்று செய்தேன்.

எந்த ஈனச்சாதிக்காரன் அண்ணன் மகளை கொண்டோடி விட்டான் என்பதால் மானம் போய்விட்டது என்று ஊர்விட்டு ஊர் வந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவரின் கடைசி காலத்தில் அவருக்கு ஆதரவாய் நின்றார்கள். எந்த சாதியில் பிறந்ததற்காக முறுக்கிக் கொண்டு திரிந்தாரோ அதே சாதிக்காரர்கள் தான் அவர் சொத்துபத்துகளை ஏமாற்றி வாயில் போட்டுக் கொண்டனர். சாவை எதிர் நோக்கி நின்ற நாட்களில் தன்னறியாமல் அவர் சில முறை புலம்புவதைக் கேட்டிருக்கிறேன். “எல்லாம் ஏமாத்திட்டானுக தேவிடியா பசங்க…” “என்ர ரத்தமே என்ர சொத்த வாயில போட்டுட்டானுக…” “….அய்யோன்னு வந்த காசு அய்யோன்னு போச்சு….” “…..சாதி சனத்தை விட வெளியார நம்பலாம்…” துண்டுத் துண்டான வாசகங்கள்.

வேலை விஷயமாய் கோவை செல்ல வேண்டும் என ஆபீஸில் சொன்னவுடன் இதுவரையில் நான் புரிந்தரியாத உணர்ச்சியொன்று உண்டானது. அது சந்தோஷமா… மறக்க நினைக்கும் மரணங்களின் நினைவுகளா… இன்னதென்று விளங்கவில்லை. ஆனால் சுந்தரி அக்காவை பார்க்க வேண்டும் என்றும் கோபாலைப் பார்த்து பேச வேண்டுமென்றும் தீர்மாணித்துக் கொண்டேன். அப்பாவுக்கு பாண்டி வந்த புதிதில் அக்கா மேல் ஆத்திரம் – அதனால் துவக்கத்தில் அக்காவை தொடர்பு கொள்ளவோ விசாரித்தறிந்து கொள்ளவோ முயலவில்லை. அவரின் இறுதிக்காலத்தில் குற்ற உணர்ச்சியால் புழுங்கிக் கொண்டிருந்தார் – அப்போதும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை; என்னையும் விடவில்லை.

பேருந்து அவனாசி சாலையில் நுழைந்து லட்சுமி மில்ஸை கடந்தது. இந்த சாலையோரம் முன்பு இருந்த மரங்களை இப்போது காணவில்லை.

அண்ணா சிலையில் இறங்கி, உக்கடத்துக்கு ஒரு நகர பேருந்தில் சென்று இறங்கி, அங்கிருந்து பொள்ளாச்சி செல்லும் பேருந்தில் ஏறி கிணத்துக்கடவுக்கு சீட்டு வாங்கி உட்காரும் வரையில் மனமெல்லாம் ஒரு விதமாக பரபரப்பாக இருந்தது. கோவையின் தோற்றத்தில் நிறைய மாறுதல்கள் இருந்தது. நிறைய மரங்கள் வெட்டப்பட்டிருந்தது. பழைய மேம்பாலம் ஏறும் போது வலது பக்கம் இருந்த என்.டி.சி மில் பாழடைந்து நின்றது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது. பக்கத்து இருக்கையில் இருந்தவரோடு பேச்சுக் கொடுத்து பார்த்த போது கோவை பகுதியெங்கும் இருந்த பழைய மில்கள் மூடப்பட்டு விட்டதாக சொன்னார். பழைய ஓனர்களே புதிய மில்களைத் திறந்திருப்பதாகவும் மதுரை இராமநாதபுரம் பகுதிகளில் இருந்து இருபது வயதுக்கு உட்பட்டவர்களை அழைத்து வந்து காண்ட்ராக்ட் ஒர்க்கர்களாக வைத்து வேலை வாங்குவதாகவும் சொன்னார்.

மலுமிச்சம்பட்டி பிரிவைத் தாண்டி கிணத்துக்கடவை பேருந்து நெருங்க நெருங்க இதயத் துடிப்பு வேகமெடுத்ததை உணர முடிந்தது. கோவையிலிருந்து வரும் போது கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் சற்று சரிவான பகுதியில் இருக்கும். சாலை மேலிருந்து கீழ் நோக்கி இறங்கும். இறங்கியது. நான் படிக்கட்டுக்கு நகர்ந்து நின்றேன். வெளியில் ஒரு மின்னல் வேகத்தில் கடந்து சென்ற ஒரு தேனீர்க்கடை பெயர்ப்பலகை என்னை ஈர்த்தது – அதில் “மருதம் பேக்ஸ்” என்று எழுதியிருந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கி வடக்கே திரும்பி நடந்தேன்.

முதலில் ஒரு டீ குடிக்க வேண்டும். அப்புறம் அந்தப் பெயர்….?

ஊர் பெரியளவில் மாறுதல் இல்லாமல் அப்படியே இருந்தது. ‘செல்லாத்தா.. செல்ல மாரியாத்தா..” கூம்பு ஸ்பீக்கரில் இருந்து எல்.ஆர்.ஈஸ்வரியின்அலறல் ஓங்கி ஒலித்தது. மூன்று நிமிட நடையின் முடிவில் மருதம் பேக்ஸின் முன்னே நின்றேன். கல்லாவில் இருந்த முகம் ஒரு இனிய அதிர்ச்சியாகத் தாக்கியது – கோபால். என்னைப் பார்த்ததும் அவனுக்கும் பேச்சு எழவில்லை.

“டேய் குமரா.. எப்படிரா இருக்கே? எங்கடா போயிட்டே இத்தனை வருசமா? அப்பாவெல்லாம் சவுக்கியமா? என்னடா ஒரு லெட்டரில்லெ போனில்லெ, தகவலில்லெ..? கேள்விகள் கேள்விகள் கேள்விகள்.. இன்னும் கூட சிலவற்றைக் கேட்டான் நினைவில் இல்லை. நான் எதற்கும் பதில் சொல்லவில்லை. பதில் சொல்லும் அவசியமில்லாமல் அவனுக்கே விடை தெரிந்த கேள்விகள் தான் அவை.

“டேய் கோபாலு.. இப்பயாச்சும் எம்மேலெ கோவம் போச்சாடா…”

“உம்மேலெ எனக்கு என்னடா கோவம்.. அதெல்லாம் மறந்துட்டண்டா” என்றவன் உள்ளே திரும்பி “இங்கெ ஒரு ஸ்பெஷல் டீ ஒரு தேங்கா பன்” என்றான் ‘ஸ்பெஷல்’ கொஞ்சம் அழுத்தம் அதிகமாய் வந்தது.  அவன் மறக்கவுமில்லை; அது மறக்கக்கூடியதும் இல்லை.

“சொல்லுடா நீ இப்ப என்ன வேலை பாக்கறே? எந்த ஊர்ல இருக்கீங்க?…” மீண்டும் கேள்விகளை ஆரம்பிக்கப் பார்த்தவனை இடைமறித்தேன்.

“இரு இரு.. அதெல்லாம் ஒன்னும் பெரிய விசேஷமில்லெ.. அப்புறமா சொல்றேன். நீ எனக்கு முதல்ல ஒன்னு சொல்லு – உங்க அண்ணி இப்பஎங்க இருக்காங்க?”

“என்னடா மூனாவது மனுசனப் போல விசாரிக்கறே? உனக்கும் அக்கா தானடா? அவங்களைப் பத்தி நீ கேள்வியே படலியா?”மௌனமாக இருந்தேன்.

“அவங்க இங்க ப்ரீமியர் மில் ஸ்டாப்புல தாண்டா குடியிருக்காங்க. மாணிக்கண்ணன் சிட்கோவுல வேலைக்குப் போறாப்புல. அண்ணி மில்லுக்கு போறாங்க. ஒரு பய்யன் ஒரு புள்ள; ரண்டு பேரும் சுந்தராபுரத்துல படிக்கறாங்க”

“நீ அவுங்க ஊட்டுக்கு போவியா?”

“நா டவுனுக்கு போகையில எல்லாம் அவங்கூட்டுக்கு போயிட்டு தான் வருவேன்”

“ஆமா.. நாங்க ஊர விட்டு போனப்புறம் அவங்களுக்கு எதும் பிரச்சினையாகலையா?”

“ஆகாம என்ன.. கொஞ்ச நா ஊர்காரனுக ஜீப்புல ஆள் போட்டு தேடுனாங்க. அண்ணனுக்கு ஏதோ கச்சீல கொஞ்சம் பளக்கம் இருந்துருக்கு.. கை வச்சா பின்னால பெரிய பிரச்சினையாயிடும்னு பயிந்து போயி உட்டுட்டாங்க.. ஆனா அதுக்கப்புறம் கொஞ்ச வருசம் பள்ளிக்கூடத்துல தனித்தனி வகுப்பு வைக்கனும், பஸ்ஸ¤ல ஏறக்கூடாதுன்னு வெறப்பு காட்டிப் பாத்தாங்க.. இதெல்லாம் கேள்விபட்டு பெரியார் கச்சீல இருந்து ஆளுக வந்து ஒரே கலாட்டாவாயிடிச்சி.. இப்ப வேற வழியில்லாம அதையெல்லாம் விட்டுட்டாங்க. அதுக்கப்புறம் அதே மாதிரி ரெண்டு கேசு ஆயிடிச்சி”

“டேய் நான் எங்க வீடு, தோட்டமெல்லாம் பாக்கனும்டா.. அக்கா வீட்டுக்கும் போகனும். நீ கூட வர்றியா?” என்றேன். டீயும் பன்னும் வந்திருந்தது.

நானே எட்டி ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டேன்.

“தோட்டமா? எந்தக்காலத்துல இருக்க நீ? அதெல்லாம் ரண்டு கை மாறி இப்ப அங்க ஒரு பேக்டரி கட்டீருக்காங்க” என்றவன், “ரண்டு நிமிசம் பொறு கெளம்பிடலாம்”

டீயைக் குடித்துக் கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு ‘ரண்டு நிமிசத்துக்காக’ காத்திருக்கத் தொடங்கினேன். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களைக் கவனித்தேன். பெரும்பாலும் காலனியில் இருந்தும், நெடுஞ்சாலைப் பயனிகளுமே வாடிக்கையாளர்களாய் வந்தனர். ஊரில் இருந்து வருபவர்களெல்லாம் சாலையைக் கடந்து எதிர்சாரியில் இருந்த ‘கவுண்டர் பேக்கரி & டீ ஸ்டாலுக்கு” சென்றதைக் கவனிக்க முடிந்தது.

இடையிடையே வினோதமான தமிழ் உச்சரிப்போடு சிலர் வந்து செல்வதைக் கவனிக்க முடிந்தது. கேள்விக்குறியோடு கோபாலைப் பார்த்தேன்.

“இவிங்கெல்லாம் ஓரிசாவுலெர்தும் பீகார்லெர்ந்தும் வந்தவிங்கடா. இப்ப இந்தப் பக்கம் நெறய ·பவுண்டரி பேக்டரிகளெல்லாம் வந்துடிச்சி. அங்கெல்லாம் இவிங்காளுகளுக்குத்தான் இப்பல்லாம் வேல போட்டுக் குடுக்குறான். இங்க மின்ன மாதிரி தோட்டம் காடெல்லாம் கிடையாது. பெரும்பாலும் ப்ளாட் போட்டு வித்துட்டாங்க; பின்ன இந்த மாதிரி கம்பெனிகளும் ஒன்னுக்கு பத்து வெல குடுத்து நல்ல தண்ணி வசதி இருக்கற நெலத்த வாங்கறாங்க”

“வெவசாயமெல்லாம்?”

“அதெல்லாம் ஓய்ஞ்சி போயில் பல வருசமாச்சு. சில பேரு நெலத்த வித்துட்டு கந்து வட்டிக்கு விட்டுட்டு ஒக்காந்துருக்காங்க. இன்னும் சில பேரு அவிங்களாவே பிளாஸ்டிக் கம்பெனியோ, பவுண்டரி கம்பெனியோ ஆரம்பிச்சிருக்காங்க”

“வெளியூர்லேர்ந்து ஆள் வந்து வேல செய்யறளவுக்கு நம்மூர்ல ஆள்பஞ்சமாய்டிச்சா”

“ஆள் பஞ்சமில்லீடா.. நெலத்த வித்தவிங்களுக்கு அவிங்க நெலத்திலெயே எவனோ ஒருத்தனுக்கு வேல பாக்க மனசில்ல. மின்ன கூலி வேலை பாத்தவங்கெல்லாம் திருப்பூருக்கு போயிட்டாங்க. அதூம்போக நம்மாளுகன்னா நாள் கூலி நூத்தம்பது ரூவா தரனும். வடக்க இருந்து வர்றவிங்க அம்பது ரூவா கூலி பன்னண்டு மணி நேரம் நின்னு வேல பாக்க தயாரா இருக்காங்க.. ம்ஹ¤ம் அவுங்கூர்ல என்ன பஞ்சமோ என்ன எழவோ.. மேல இருவத்தஞ்சி ரூவா குடுத்தா டபுள் சிப்டு பாக்கவும் கூட தயாராத்தான் இருக்காங்க”

இடையில் அவன் மனைவி வந்து விடவே நாங்கள் அவனுடைய டி.வி.எஸ் 50யில் கிளம்பினோம். மாரியம்மன் கோயில் வீதியைக் கடந்து தெற்கு வீதிக்குள் நுழைந்து ஒரு சந்துக்குள் சிமெண்ட் சாலையில் பயணித்து குறுக்காய் ஓடும் தார்ச் சாலையைப் பிடித்து வலது புறம் திரும்பினால் கோட்டைவாசல் வீதி. வலது புறம் பத்தாவதாக இருந்தது எங்கள் பூர்வீக வீடு. கோபால் வண்டியை வீட்டின் முன் நிறுத்தினான். கோவி சுன்னாம்பு கலவையில் சாயம் போன மஞ்சள் நிறத்தில் வீடு நிமிர்ந்து நின்றது. நெல் காயப்போடும் முற்றத்தில் காறை பல இடங்களில் பெயர்ந்து கிடந்தது. பயன்பாட்டில் இல்லாத வீடுகளின் சிதிலத்தோடு அறுபதாண்டுகால கட்டிடத்துக்கான முதுமையும் சேர்ந்து அலங்கோலமாய் நின்றது கட்டிடம். முகப்பில் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு பொறித்திருந்தது – 1947. என்னவொரு பொருத்தம்! உள்ளே போய் பார்க்க வேண்டும் என்ற என்னம் இப்போது மாறி விட்டது.

“சரி போலாம் கோபாலு”

“ஏண்டா உள்ளெ போகலியா”

“போயி?”

அவன் வண்டியைக் கிளப்பினான். பத்து நிமிடத்தில் அந்தக் கம்பெனி வாசலில் நின்றோம். முன்பு இதே இடத்தில் ஒரு நூறு நூற்றம்பது தென்னை மரங்கள் நின்றது. இங்கிருக்கும் கிணற்றில் தான் நாங்கள் குளிப்பதும் குதித்து விளையாடுவதுமாக பொழுது போக்கிக் கொண்டிருப்போம். கேட்டில் சந்திரன் பெயரைச் சொன்னதும் விட்டார்கள் – வாட்சுமேனுக்கு என்னை அடையாளம் தெரிந்தது ‘தம்பி பட்டாளத்துக்காரரு பேரனுங்களா?’ என்றார். புன்னகைத்து விட்டு வரவேற்பை நோக்கி நடந்தோம்.

சந்திரனுக்கு இருபத்தைந்து வயதிலேயே தலையெல்லாம் நரைத்து, கண்கள் உள்ளே போய், நரம்புகளில் நடுக்கம் தோன்றி ஒரு நாற்பது வயதுக்காரனின் தோற்றத்தைக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான்..

“டே.. பூனக்கண்ணா..! வாடா வாடா..” உடன் வந்த கோபாலை பார்த்தது சுதி லேசாக இறங்கியது – பூனைக்கண்ணன் பள்ளியில் எனது பட்டப் பெயர். உரையாடல் பெரும்பாலும் வழக்கமான ‘எப்ப கலியாணம், எங்க வேலை, எப்ப வந்தே’.. என்பதை தொட்டுப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில் கோபாலை அவ்வப்போது அவஸ்த்தையுடன் பார்த்துக் கொண்டான்.

“சந்த்ரா.. இது மின்ன எங்க தோட்டம் தானே? வடக்கு மூலையில ஒரு மோட்டார் ரூம் இருக்குமேடா?”

“ஓ.. ஒங்க பெரியப்பன் செத்த எடம் தானே.. இப்ப அங்க லேபர்ஸ¤க்கு செட்டு போட்டு குடுத்திருக்காங்க. வா காட்றேன்” என்று திரும்பி நடந்தான் வடக்கு மூலையில் வரிசையாக தகர ஷெட் அமைத்திருந்தார்கள். சைக்கிள் ஷெட் போல நீளமாக இருந்தது. இடையில் ப்ளைவுட் தடுப்பு வைத்து அறைகள் ஆக்கி இருந்தார்கள். கதவு கிடையாது – பதிலாக ஒரு கோனி பையை கிழித்து மேல்கீழாக தொங்க விட்டிருந்தார்கள். சில குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தன. ஷெட்டுக்கு முன்பாக நீளமாக சாக்கடை ஓடிக்கொண்டிருந்தது. மொத்தத்திற்கும் சேர்த்து ஒரு பொது கழிப்பிடமும் குளியலறையும் கடைக்கோடியில் இருந்தது. அந்த இடத்தில் தான் முன்பு மோட்டார் ரூம் இருந்தது – ஒட்டி நின்ற அத்தி மரத்தைக் கொண்டு அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. ஒரு ‘அறைக்குள்’ தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன். கீழே காறை கிடையாது – மண் தரை தான். அதுவும் சமீபத்தில் பெய்த மழையால் சொத சொதவென்று இருந்தது. இது மனிதர்கள் வாழ்வதற்குத் தக்க இடமேயில்லை.

“எத்தினி குடும்பம்டா இங்க தங்கியிருக்காங்க?”

“அது ஒரு நாப்பது குடும்பம் இங்க தங்கீருக்கு. ஆம்பள பொம்பள பசங்க புள்ளைகன்னு மொத்தம் நூத்தியிருவது பேரு கம்பெனிக்கு வர்றாங்க”

அப்படியென்றால் எவரும் பிள்ளைகளை படிக்க அனுப்புவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததில் இது ஒரு நவீன சேரியென்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது. ·பவுன்டரி ஷாப்புக்குள் சென்றோம்; இது ஒரு டி.எம்.டி கம்பி தயாரிக்கும் கம்பெனி, இரும்பை உருக்கி கம்பியாக நீட்டிக் கொண்டிருந்தனர். இரும்பின் கடினத்தன்மைக்காக கார்பன், ·பெர்ரஸ் எனும் ஒரு கெமிக்கல் சுத்தமான உருக்கு போன்றவற்றோடு வேறு சில கெமிக்கல் கலவைகளையும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்த உலோகக் கலவை செந்நிறத்தில் கொதித்துக் கொண்டிருந்தது. எங்கும் கெமிக்கல் நெடி. வேலை செய்து கொண்டு நின்றவர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களையோ, கையுறை, காலுறை, தலைக்கவசம், கண்ணாடி போன்றவற்றையோ பாவிக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம் தான்.

அங்கே நின்றவர்களெல்லாம் பேயறைந்ததைப் போல இருந்தார்கள். மெலிந்த உருவத்தில் கண்கள் உள்ளே ஒடுங்கி, கைகளில் நடுக்கத்தோடு நின்றவர்களைப் பார்க்க உள்ளே ஏதோ பிசைவதைப் போலிருந்தது. அந்த கெமிக்கல் நெடி எனக்கும் லேசான தலைச்சுற்றலை உண்டாக்கியது.

“சரி போலாம்” என்றவாரே வெளியில் வந்தேன்.

பேசாமல் காம்பௌண்டை தாண்டி வெளியே வந்தோம். சந்திரன் வரவேற்பறையோடு நின்று விட்டான். நான் கோபாலின் முகத்தைப் பார்த்தேன். அவன் புரிந்து கொண்டு பேசத் துவங்கினான்,

“டேய்.. இவனுகளுக்கு எப்பவும் காலை நக்கிட்டு நிக்க ஆளுக இருந்துட்டே இருக்கனும்டா. பழகிட்டானுக. உனக்கு நியாபகம் இருக்காடா…மின்ன எங்காளுக ஊருக்குள்ளெ செருப்பு கூட போட்டுட்டு வர முடியாது. புதுத் துணி உடுத்துக்க முடியாது. இன்னிக்கும் பெருசா எதுவும் மாறலைடா. இப்பவும் நாங்க கோயிலுக்குள்ள போயிற முடியாது, என்ர கடைக்கு ஊர்காரனுக எவனும் வரமாட்டான், என்ர வயசுக்கு சின்னச் சின்ன  பொடியனெல்லாம் போடா வாடான்னு தான் கூப்பிடுவான். ஆனா ஒன்னுடா… இன்னிக்கு எங்க சோத்துக்கு இவனுகள நம்பி நிக்கலை. ஆனாலும் அவமானம் போகலைடா. நீயும் நானும் இப்ப வண்டீல வந்தமே.. ஊர்கானுக பார்வைய பாத்தியா? இன்னிக்கு திருப்பூருக்குப் போனா மாசம் மூவாயிரமாவது சம்பாதிக்கலாம். ஆனா ஊருக்குள்ள வந்தா இன்னமும் சக்கிளின்னு தாண்டா பாக்கறானுக. நாங்கெல்லாம் பொறப்புல சக்கிளியா போனோம்.. இவங்க எந்தூர்காரங்களோ என்ன பொறப்போ என்னவோ.. இங்க வந்து சக்கிளியா வாழ்ந்து பொழைக்கறாங்க.. முன்ன நாங்க பண்ணையத்த நம்பி வாயப்பாத்துட்டு நின்னோம்… இன்னிக்கு பண்ணையத்துக்கு பதிலா கம்பெனி.. எங்க எடத்துல ஒரிசாக்காரங்க. ஆனா காசு கூட கெடைக்கும் மரியாதையும் அந்தஸ்த்தும் கெடைக்வே கெடைக்காது.”

பின்னே நாங்கள் அக்காவைப் போய்ப் பார்த்ததும், அவள் என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு ஓவொன்று அழுததும், அம்மா ஏன் அழுகிறாள் என்றே புரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்ற அக்கா பிள்ளைகள் என்னை வினோதமாகப் பார்த்ததும், என்று வழக்கமான செண்டிமெண்ட் சமாச்சாரங்களை விடுத்துப் பார்த்தால் – அவள் ஒரு தேவதை போல வாழ்ந்து கொண்டிருப்பது புரிந்தது. மாணிக்கம் அத்தான் அவளை மிக மரியாதையுடன் நடத்தினார். மனிதர்களை மரியாதையாக நடத்துவது என்பது அதன் உண்மையான அர்த்தத்தில் அத்தானை விட வேறு யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அக்கா மனைவியெனும் பெயரில் ஒரு அடிமையாகவும் இல்லை, தான் பெரிய குடும்பத்திலிருந்து வந்தவள் எனும் திமிரில் அத்தானை அடக்கவும் இல்லை. இருவரும் மிக மிக அழகாக பொருந்திப் போயிருந்தனர்.

கோவையில் எனது வேலை முடிந்து மீண்டும் பாண்டி கிளம்பும் வரையில் அங்கே தான் தங்கியிருந்தேன்.

இந்த ஊரின் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது – ஆனால் உள்ளடக்கத்தில் அப்படியேதானிருக்கிறது. உள்ளூரில் அடிமைகளாய் இருந்தவர்கள் இப்போது வெளியூருக்கு அடிமைகளாய்ச் சென்றிருக்கிறார்கள். அந்த வெற்றிடத்தை நிறப்ப வெளியூரிலிருந்து புதிதாய் பல அடிமைகளைப் பிடித்து வந்திருக்கிறார்கள். இவ்வூரின் இனிமை உண்மையில் கசப்பின் மேல் தூவப்பட்ட சர்க்கரை தான். மேக்கப்பைக் கீறிப்பார்த்தால் உள்ளே அசிங்கங்கள் தான் புழுத்து நாறுகிறது.

ஜனவரி 13, 2010 Posted by | culture, short story | , , , , | 7 பின்னூட்டங்கள்

நான் கடவுள் விமர்சனம்

இணைய புத்திஜீவிகள் எல்லோரும் இந்தப் படத்தைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் “நமக்குத்தான் ஒருவேளை புரியலையோ” என்ற சந்தேகத்தில் “நல்லாத்தான் இருக்கு…….ஆனா….” என்று மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நான் பாலா படங்களைப் பார்ப்பதில்லை; நிறைய செயற்கைத்தனம் இருக்கும் என்பது ஒரு காரணம். இந்த முறை ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் நன்பனோடு பார்க்கப் போனேன்.

முதலில் ருத்ரன். காசி மாநகரத்தைச் சேர்ந்த அகோரி – அதாவது நமக்குப் புரியும் மொழியில், பினந்தின்னி சாமியார். இவனை காசியில் ஜாதக தோஷங்களுக்காக காசியில் நேர்ந்து விட்டு விட்ட தகப்பன் தேடிவரும் காட்சியில் தான் படம் ஆரம்பமாகிறது. ஒத்தாசைக்கு வரும் காசி நகர பார்ப்பான் ஜாதகக் காரணங்களுக்காக பிள்ளையை காசியில் விட்டு விட்டதாக தகப்பன் சொன்னதும் பொங்கியெழுகிறார். இந்தியில் திட்டுகிறார்; நம்மாளு காலில் விழுந்ததும் ‘சரி சரி பார்க்கலாம் என்கிறார்’ – எழுத்துப் பிச்சர் ஒடும் போது
ஜெயமோகன் பெயரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

படம் நெடுக இந்த நபரை எல்லா கதாபாத்திரங்களும் ஒருவித மிரட்சியுடன் பார்க்கிறார்கள். அட, நம்ம போலீசும் கோர்ட்டும் கூட இவனிடம் பம்முகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்குத் தெரிந்து எலும்பு வீசுபவனிடம் மட்டும் தான் இவர்கள் பம்முவார்கள். ஊருக்கு வந்து சேரும் பினந்தின்னிச் சாமி அங்கே கோயிலில் பிச்சையெடுக்கும் கூட்டம் ஒண்டும் ஒரு இடத்துக்குப் பக்கத்தில் தனது ஜாகையை அமைத்துக் கொள்கிறது. அங்கே இருக்கும் லோக்கல் சாமிகள் – போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதாக சொல்கிறான் ஒரு சாமி – வலித்துக் கொடுத்த கஞ்சாவைக் கூட தொடாமல் சுத்தபத்தமாக தனி கஞ்சா அடிக்கும் அளவுக்கு காசியைச் சேர்ந்த அகோரி தன் புனிதத் தன்மையை தமிழ் நாட்டில் காப்பாற்றிக்
கொள்கிறான். கடுமையான டயட் கண்ட்ரோலில் இருக்கும் அகோரி, நரமாமிசம் தவிர்த்து வேறு அசுத்த உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை.

அடிக்கடி சமஸ்கிருதத்தில் “அஹம் ப்ரம்ஹாஸ்மி…” என்று வானத்தைப் பார்த்துக் கூவிக் கொண்டிருப்பது இந்த நபரின் முக்கிய வேலைகளில் ஒன்று. ம்ம்ம்ம்….. நியாயமாகப் பார்த்தால்
இந்த ருத்ரனை அழைத்து வந்து – முரண்டு பிடித்தால் பொடனியில் ஒன்று போட்டாவது – மனநல மருத்துவரிடம் சேர்த்திருக்க வேண்டும். தெருவில் இப்படி பரிதாபத்துக்குரிய ஒருத்தனைப் பார்த்தால் நாம் அப்படித்தான் நினைப்போம்; ஆனால் படத்தில் வரும் இந்த மனநோயாளியை எல்லோரும் ரசிக்கிறார்கள்.

அடுத்து பிச்சைக்காரர்கள் – நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் மிருகங்களைப் பார்த்து ரசிக்கும் கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள் தானே? அதே போன்ற ஒரு ரசனையைத் தான் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் / குரூபிகள் தமக்குள் பேசிக்கொள்வதைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் ரசிகக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.

பார்வையாளன் இவர்களின் உலகத்தை ரசனையோடு பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்து அந்தக் காட்சிகளை இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பிச்சைக்காரர்கள் சமூகத்தில் உருவாகக் காரணமான சமூக அமைப்புமுறையின் மேல் எழ வேண்டிய கோபம் முதலாளி தாண்டவனைத் தாண்ட மாட்டேனென்கிறது. தாண்டவனின் கையாள் முருகன் பிச்சைக்காரர்களிடம் நெகிழும் இடங்களில் பார்வையாளனும் நெகிழ்கிறான்; பிச்சைக்காரர்களை “உருப்படிகள்” என்று விளிப்பதைக் கேட்டு சிரிக்கிறான். நயன்தாரா போல் வேடமிட்டு ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து வெட்கப்படுகிறான். இப்படி தம்மை நெகிழவும் சிரிக்கவும் வைத்த அந்த பிச்சைக்காரர்களில் ஒருவனான அங்கவீனமான சிறுவனை ஒரு மலையாள “முதலாளி” தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகு தான் பார்வையாளன் கோபப்படுகிறான். அந்த மக்களை புறக்கனித்து அவர்களுக்கு ஒரு
கொடூரமான வாழ்க்கையைப் பரிசளித்திருக்கும் இந்த சமூக அமைப்பின் மேலோ, இந்த அயோக்கியத்தனங்களுக்கு வால் பிடித்து நிற்கும் போலீசு உள்ளிட்ட அரசு அமைப்பின் மேலோ பாய்ந்திருக்க வேண்டிய கோபம், மலையாள முதலாளியையும் தாண்டவனையும் அகோரி ருத்ரன் “தண்டிப்பதன்” மூலன் சாந்தமடைகிறது.

படத்தில் பாடிப்பிச்சையெடுக்கும் குருட்டுப் பிச்சைக்காரி கதாபாத்திரத்திம் முதலில் ஒரு முதலாளியிடன் இருந்து அடுத்து இன்னொரு முதலாளி கையில் வந்து சேர்கிறாள். முகம்
கோரமான இன்னொரு முதலாளியிடம் காமுகியாய் அனுப்ப புது முதலாளி முடிவெடுக்க இவள் மறுக்கிறாள். அதன் காரணமாய் அவன் இவள் முகத்தை சுவற்றில் தேய்த்து கோரப்படுத்தி விடுகிறான். முகம் கோரப்பட்ட இவள் பினந்தின்னிச் சாமியிடம் வந்து மரண வரம் கேட்க, இவரும் சந்தோஷமாய் அதைக் கொடுத்தருளுகிறார்.

மொத்தம் மூன்று கொலைகள் ஆயிற்றா? அடுத்த காட்சியில் நியாயமாக கம்பியென்னத்தான் போயிருக்க வேண்டும்… ஆனால் நாம்மாளு காசியிலிருந்து ஸ்பெசலாய் எழுந்தருளி இருக்கும் அகோரியல்லவா? எனவே அடுத்த காட்சியில் கூலாக காசிக்கே போய்விடுகிறார். கொலைக்கு ஒன்று வீதம் மூன்று முறை கங்கையில் முங்கியெழுகிறார் – பின்னனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க தன் குருவை நோக்கி கம்பீரமாய் நடந்து வர, காட்சி உறைகிறது – பார்வையாளர்கள் பிச்சைக்காரப் பயல்களை மறந்து விட்டு சந்தோஷமாய் மனநிறைவோடு எழுந்து வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.

அகோரிகள், தாந்திரிகர்கள், காபாலிகர்கள், காலபைரவர்கள் என்பதெல்லாம் இந்து மதத்தின் தீவிர மனநோயாளிகளால் பின்பற்றப்படும்  ‘கல்ட்’கள் (cult). இதெல்லாம் தடைசெய்யப்பட
வேண்டிய பைத்தியக்காரத்தனங்கள்.ஆனால் இந்தப் படமோ அவர்கள் மேல் ஒரு வித மரியாதையை / பிரமிப்பை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குகிறது. கண் பார்வையற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க இரண்டு மூன்று ரவுடிகள் தூக்கிச் செல்ல முயன்றால், அங்கே இருக்கும் எல்லோரும் சேர்ந்து ‘பொது மாத்து’ கொடுத்திருக்க வேண்டும் – எங்கூர்ல எவனாவது இப்படி செஞ்சிருந்தான்னா ஊரே சேர்ந்து கிழிச்சிருப்பாங்க- இங்கே என்னடாவென்றால், எல்லோரும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, நம்மாளு மட்டும் அந்நியன் விக்ரம் போல பறந்து பறந்து அடிக்கிறார். ஏட்டைய்யா மரியாதையாக செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு நெருங்குகிறார் – எதுக்கு? – கஞ்சாவைக் கொடுக்க!

படம் நெடுக ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கடவுளைச் செல்லமாக பகடி செய்து கொள்கிறார்கள். ஓரிடத்தில் கிருஷ்ணனை “உள்பாவாடைக் களவானி” என்கிறான் ஒரு சிறுவன். உச்சமாக ஒரு கிழவர் கடவுளைத் “தேவிடியாப்பய” என்றும் சொல்கிறார்… இதையெல்லாம் கொண்டு இந்த படம் இந்துத்துவத்தை எதிர்த்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது.  பருண்மையாகப் பார்க்கையில் பார்வையாளர்கள் எல்லோருடைய ஒட்டுமொத்த கோபத்துக்கும் ஆளானா “பயங்கர” வில்லன் தாண்டவனை தண்டிப்பது ஒரு அகோரி தான்; எனவே திரையரங்கை விட்டு வெளியேறுகையில் அகோரியின் மேல் – இந்த வகை லூசுத்தனங்களை அனுமதித்திருக்கும் இந்து மதத்தின் மேல் – அருவெறுப்பு தோன்றுவதற்குப் பதில்
பார்வையாளனுக்கு ஆதர்சமும், பிரமிப்பும், மரியாதையும் தான் தோன்றுகிறது.

தினமலரின் பார்வையில் லோக்கல் சாமியார்கள் எப்படித்தெரிவார்களோ அப்படித்தான் படத்தில் வரும் லோக்கல் சாமியார்களும் ( கஞ்சா குடிக்கி சாமிகளாகட்டும் கையும் காலும்
இல்லாத சாமியாகட்டும்) காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே தினமலரின் பார்வையில் காஞ்சி சங்கராச்சாரி எப்படித் தெரிவானோ அப்படித்தான் அகோரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறான்.
அப்போ பிச்சைக்காரர்கள்? – அவர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு எண்டெர்டெயின்மெண்ட்! மிருகங்களை வேடிக்கை பார்த்து ரசிப்பதைப் போல பார்த்து ரசிக்கிறார்கள். மீண்டும் வடநாட்டில் இருந்து ஒரு பினந்தின்னிச் சாமி எழுந்தருள அவர்கள் பிரார்த்திக்க வேண்டியது தான்!! அந்த மீசைக்கார போலீசு இன்ஸ்பெக்டர் என்னவாயிருப்பார்? அவர் இன்னொரு தாண்டவனை உருவாக்குவதில் இப்போ பிஸியாக இருப்பாராயிருக்கும்.

படம் விட்டு வெளியே வரும் போது நன்பனிடம் கேட்டேன் –

“ஏண்டா.. அந்தப் பிச்சைக்காரங்களைப் பார்த்து அப்படி கெக்கே பெக்கேன்னு சிரிச்சிட்டு இருந்தியே…?”

“ஆமாண்டா… வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கனும் அப்பத்தாண்டா வாழ்க்கைய ரசிக்க முடியும்”

“இல்ல… அந்தப் பிச்சைக்காரர்களையும், குரூபிகளையும் இந்த சமூகம் புறக்கனிச்சிருக்கே, அதைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“என்ன பன்றது… பாவந்தான்… ஆனா, அது அவங்க விதி. நம்மாள முடிஞ்ச அஞ்சோ பத்தோ போடத்தான் நம்மாள முடியும். வேறென்னத்த செய்யச் சொல்றே?”

“அப்ப அந்த தாண்டவனைப் போல மாஃபியாக்கள்?”

“அதான் சாமியே தண்டனை கொடுத்திச்சில்லே?”

இயக்குனர் பாலா நிச்சயமாக ஜெயித்து விட்டார் என்று புரிந்தது.

மற்றபடி நல்ல பின்னனி இசை, புத்திசாலித்தனமான கேமராக் கோணங்கள், அருமையான ஒளிப்பதிவு…. blah, blah, blah, blah, blah….. அவ்வளவுதான்

– கார்க்கி

பிப்ரவரி 14, 2009 Posted by | culture, Films | 4 பின்னூட்டங்கள்

ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!

“யாத்ரியோ க்ருப்யா க்யான் தே… காடி நெம்பர் சார், சாத், ஷுன்யெ, தோ… – ப்ப்பாபாபாங்ங்ங்ங்…. தடக் தடக் தடக்…”
அறிவிப்பாளினியின் குரலைத் தின்று கொண்டே சோம்பலாய் நுழைந்தது அந்த ரயில்.

“சௌ ருப்யா தே தோ மஹராஜ்” என்றபடி எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தார் அந்த வயதான போர்ட்டர். ஒடுக்கு விழுந்த கருத்த முகம். உழைத்தே தேய்ந்து போன கெச்சலான உடல்.

“சௌ ருப்பா too much ஹே பாய். மே பச்சாஸ் ருப்யா தே ரஹாஹூ” ஆங்ரேஜியும் இந்தியும் கலந்து திக்கித்திக்கி சொன்னேன்.

“யே ஜாதா வெயிட் ஹே ஸாப்” இரண்டு பெரிய பயணப் பொதிகள்…

தெரியாத மொழியில் வேறென்ன பேரம் பேசி விட முடியும். மேலும் அவர் அந்த பெட்டிகளை தள்ளாடித் தள்ளாடி தூக்க முயன்றது மனதை என்னவோ செய்தது.

“அச்சா சலோ பாய்” என்றவாறே அவர் தலை மேல் அந்தப் பொதிகளை ஏற்ற உதவினேன்.

எனது சீட்டின் கீழே அவற்றை பெரும் சிரமத்தொடு சொறுகி விட்டு அவர் கையில் நூறு ரூபாய் தாளை கொடுத்த போது கேட்டார் –

“ஸாப் ஆப் மதராஸி ஹே?”

“ஜீ ஹாங்” இரண்டு வருடங்கள் முன்பு இந்த ஊரில் கால் வைத்த போது எதிர் கொண்ட அதே கேள்வி – ஊரை விட்டு கிளம்பும் போதும்

இரண்டு வருடங்கள்! இரண்டு முழு வருடங்கள்!!! நான் வேலை பார்க்கத் துவங்கிய பின் நீண்ட நாட்கள் தங்கிவிட்ட ஊர் இது தான்.

ரயில் மெல்ல சோம்பல் முறித்து நகரத் துவங்கியது. சன்னலோர இருக்கையில் சாய்ந்து பின்னோக்கிப் பாயும் காட்சிகளில் லயித்தேன். ரயில் பயணம் சந்தோஷமானது – அதில்
கிடைக்கும் அந்த நேர இடைவெளிக்காகவே ரயில் பயணத்தை நான் நேசிப்பதுண்டு. கொஞ்ச நேரத்தில் பச்சை வயல்கள் கடந்து போக ஆரம்பித்தது.. கண்களில் நழுவும் பசுமை..
மனதினுள் ஆழப்பதிந்து விட்ட சில பசுமையான நினைவுகளைத் தூண்டி விட ஆரம்பித்தது. திரும்பிப் பார்க்க வாய்ப்பே தராத தொடர்ந்த ஓட்டம். இப்படி ஆசுவாசமான தருணங்கள்
அபூர்வமாய் வாய்க்கும் சமயங்களில் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்து விடும். பழைய நாட்களை நினைப்பது என்றாலே எனக்கு அச்சமாகத் தான் இருக்கும். இன்றைய நாள் நரகம்
என்றால் முந்தைய நாட்கள் பாழும் நரகம். ஊர் ஊராய் ஓடத் தொடங்கி ஒன்பது வருடங்களாகி விட்டது.. எப்போது முடிவுறும் என்றே தெரியாத சாலையில் பயணிப்பது  போன்றதொரு
உணர்வு சமீப நாட்களாய் எழத்தொடங்கி விட்டது.

சாய்ந்து அழ தோள் இல்லாதவனின் தோல்வியும், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆட்களில்லாதவனின் வெற்றியும் பெரும் சோகங்கள். இந்த ஒன்பது வருட பயணத்தில் இப்படியான
சந்தர்ப்பங்கள் மாறி மாறி வந்தபின் இன்று சிரிப்போ அழுகையோ இயல்பாய் வர மறுக்கிறது. இயல்பான அன்போ காதலோ இல்லாத நாட்கள். கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க
நேரமும் வாய்ப்பும் இருந்தால் மட்டும் போதாது அது இனிமையானதாயும் இருந்திருக்க வேண்டும்.

“எடோ .. எந்தாடா ஈ ட்ரெஸ்ஸு… ஈ ஆபீஸுக்கு ட்ரெஸ் கோட் உண்டு அறியுமோ? போய்க்கோடா.. ட்ரெஸ் சேஞ்ச் செய்து வா….” முதல் வேலையில் முதல் நாள் அந்த மலையாள
மேனேஜர் முகத்தை உருக்கிய இறும்பு போல் வைத்துக் கொண்டு எரிந்து விழுந்த போது எனக்கு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது பிறக்க சரியாக நாலு மணி நேரமும்
முப்பத்தைந்து நிமிடங்களும் தான் இருந்தது. ஆம் அன்று தான் எனக்குப் பிறந்த நாள். நான் அன்று உடுத்திப் போயிருந்தது என் பிறந்த நாளுக்கு ஆசையாய் வாங்கியிருந்த புது உடுப்புகள்.

பத்தாம் வகுப்பு முடிந்து மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும் முடித்து கேம்பஸில் தேர்வாகி ஆறு மாதம் வேலைக்கான உத்தரவு வராமல் காத்திருந்து தேர்வு செய்திருந்த கம்பெனிக்கு
கடிதங்கள் மேல் கடிதங்களாக நான் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் வயதுத் தோழர்கள் காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஆறு மாதங்கள் வேலை நிச்சயமாகாத சூழலில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த போது எதிர் கொண்ட உறவுகளின் கேலிப் பார்வையும், அம்மாவின் குத்தல் பேச்சும் வேலை
கிடைத்த உடனே மறைந்த மாயம் சொல்லிக் கொடுத்த பாடம் – சொந்தங்கள் என்னும் மாளிகையின் அஸ்திபாரம் – பண்ம்!

“நீயெல்லாம் நல்லா கொட்டிக்கத்தாண்டா லாயக்கு – நீ கெட்ட கேட்டுக்கு முட்ட தோசை ஒன்னு தான் கொறை – அவனவன் படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்க,
நீ யென்னடான்னா தெள்ளவாரியா ஊர் சுத்திட்டு இருக்கே” ஆறு மாதம் முன்பு வரை சோறு ஊட்டி விட்ட அம்மா!

வாழ்க்கையிலேயே முதன்முதலாக மலச்சிக்கலால் அவதிப்பட்ட நாட்கள் அது தான். எதிர்காலம் குறித்த பயம் ஒரு பெரும் இருளைப் போல் என்னைச் சூழ்ந்திருந்த நாட்கள் அது!

அப்பாவின் தங்கைக்கு ஏற்பட்ட வைத்தியச் செலவுகளுக்காக வாங்கிய கடன் – என்னை கல்லூரியில் சேர்க்க வாங்கியிருந்த கடன் – அப்பாவுக்கு காலில் அடிப்பட்டு அந்த
வைத்தியத்திற்கு வாங்கிய கடன் – அவர் சரியாக தொழிலை கவனிக்க முடியாமல் நொடிந்து போயிருந்த நிலை.. என்று சுற்றிச் சுற்று கடன். பந்தம் பாசம் நேசம் காதல்
என்று அத்தனை வகை உறவுகளும் பணம் என்னும் அடித்தளத்தின் மேலேயே கட்டப்பட்டிருந்ததை எனக்கு வாழ்க்கை மண்டையில் ஆணி அடித்து இறக்கியதைப் போல்
கற்றுக் கொடுத்த நாட்கள் அது.

இந்த இடத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னுமொரு விஷயம் எனக்கும் அப்பாவுக்குமான உறவு. அது வரையில் – அதாவது நான் படித்து முடிக்கும் வரையில் – நான் அதிகம்
வெறுத்த ஒரு மனிதர் என் அப்பா தான். மிகக் கண்டிப்பானவர். நிறைய அடிப்பார். ஆனால் அந்த ஆறு மாதம் நான் வேலையற்று இருந்த நாட்களில் ஒரு முறையென்றால் ஒரு முறை
கூட கடுகடுப்பாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சில சமயங்களில் பரிதாபமாய் பார்ப்பார் – இப்போதும் கூட நேரில் பார்க்கும் போது சில சமயங்களில் அதே பரிதாபப் பார்வையை
உணர்ந்ததுண்டு. அந்தப் பார்வை – புதிதாய் போர்க்களத்துக்குப் போகும் வீரனை அடிபட்டு திரும்பி வரும் வீரன் பார்ப்பானே அதே பார்வை!. ஒரு வேளை அவர் கூட என் நிலையைக்
கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும் கூட உறவுகளின் போலித்தனத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அச்சடித்த மாயக்காகிதங்களை துரத்தி ஓய்ந்திருப்பார்.
ஒரு காலத்தில் என்னைப் போல் ஒரு பந்தையக் குதிரையாக இருந்திருப்பார். இப்போதோ கிழட்டு பந்தையக் குதிரை – என்னிலும் மோசமான ஒரு நிலை. பந்தையக் குதிரைகளுக்கு
மதிப்பு அது திறமையாக ஓடும் வரை தான்.

ஒரு வழியாக வேலை கிடைத்து கொஞ்ச நாளிலேயே திருப்பூருக்கு மாற்றலானது – “அய்யோ செல்வா.. நீயில்லாம இந்த வீடே வெறிச்சோடிப் போகுமே”… –  நான் சந்தோஷமாய்
திருப்பூர் கிளம்பினேன். அதே நேரத்தில் சகோதரிக்கு அவசர அவசரமாய்க் கல்யாண ஏற்பாடுகள் நடக்க, எழுபத்தையாயிரம் வரதட்சினை, நகை, பெரிய மண்டபத்தில் வரவேற்பு –
என் தலைமேல் ஒன்னறை லட்சம் புதிய கடனும் ஆறாயிரம் வட்டி கட்ட வேண்டிய பொறுப்பும் வந்து விழுந்தது.

திருப்பூரில் தங்கும் செலவும் போக்குவரத்து செலவுக்கு பெட்ரோல் காசும் கம்பெனி கொடுத்து விட எனக்கு சாப்பாட்டு செலவு மட்டும் தான். சம்பளம் அப்படியே வீட்டுக்கு
போய்விட வாரா வாரம் கிடைக்கும் லோக்கல் அலோவன்ஸில் தான் சாப்பாடு. அலைச்சலும் ஏற்றபடி அலோவன்ஸ் ஏறும் இறங்கும். சில சமயம் நூற்றைம்பது.. அதிக பட்சம் முன்னூறு.
பல வாரங்கள் அலோவன்ஸ் வர தாமதமாகும். அப்படியான சமயங்களில் மதிய உணவு வேர்க்கடலையும் அரை லிட்டர் தண்ணீரும் தான். காலையும் மாலையும் பாட்டியம்மா இட்லி.
அவர் பெயர் கூட இப்போது மறந்து விட்டேன். காலையும் மாலையும் இட்லி கொண்டு வருவார். அமிர்தம் போலிருக்கும் – காரணம் அதன் விலை – ஐம்பது பைசா!

திருப்பூர் ஒரு வினோதமான ஊர். ஒரு குட்டித் தமிழ்நாடு என்று சொல்லலாம். எல்லா வகை மனிதர்களையும் பார்க்கலாம். என்னை விட பலமடங்கு இளைய வயதில் வேலை பார்க்க
துவங்கியவர்களை அங்கே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன பிள்ளைகள் டையிங் செக்ஷன்களில் உடலெல்லாம் சாயத்தோடும் கெமிக்கல் வாசத்தோடும் கண்களில் எந்தக்
கனவுகளும் இல்லாத சிறுவர்கள். ம்ம்ம்ம்… அப்துல் கலாம் இது வரையில் கற்பனையில் கூட பார்த்திராத சிறுவர்கள். நாளொன்றுக்கு அய்ம்பது ரூபாய் வாங்குவார்களாயிருக்கும். அங்கே கம்பெனிகளெல்லாம் பழைய பண்ணைகளின் புதிய உருவம் தான். பெரும்பாலான கம்பெனிகள் கவுண்டமார்களுக்கும் நாயக்கர்களுக்கும் தான் சொந்தமாயிருக்கும்.
அவர்களுக்கும் சாதிவாரியாக சிண்டிகேட் எல்லாம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கம்பெனிகளில் பண்ணையார்த்தனம் கொடிகட்டிப் பறக்கும். முதலாளி பண்ணையார் –
மேனேஜர் – சூப்பர்வைசர்களெல்லாம் கங்கானிகள்! பதிநான்கு மணி நேரம் மிருகங்களைப் போல் அடைத்து வைத்து வேலை வாங்குவார்கள். அந்தச் சிறுவர்கள் தாம் உலகத் தரமான டிசர்ட்டுகளை உருவாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரங்களில் நாளெல்லாம் அலைந்து திரிந்தும் தீனி கிடைக்காத ஆடுகள் கிடைக்குத் திரும்புவதைப் போல – ஜோம்பிகளைப் போல – அவர்கள் வீடு திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். அதே ஊரில் தான் எந்த லேட்டஸ்ட் மாடல் காரானாலும் – உலகில் எந்த மூலையில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் – அடுத்த ஒரே மாதத்தில் சாலையில் ஓடிப் பார்த்திருக்கிறேன்.

கருமத்தம்பட்டி, அவினாசி, பெருமாநல்லூர், பெருந்துரை, கோபி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் என்று சுற்றுப்பட்டில் இருக்கும் சிறு நகரங்களில் இருந்து காலை
நேர திருப்பூர் பேருந்து எதிலாவது ஏறி ஒரு ஆறு மாதம் தொடர்ந்து பயணித்தால் வாழ்க்கைக்கான அத்தனை பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம். பள்ளிக்கூடத்திலிருந்து
பாதியிலேயே பிடுங்கியெறியப்பட்ட பிள்ளைகள். தாலிக்கு பவுன் சேர்க்கும் கனவுகளோடு பதின்மவயதுப் பெண்கள் -அவர்களை நெரிசலில் உரசிப் பார்க்கத் துடிக்கும் காலிகள்.
வரண்டு போன நிலத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டே அதற்கு காரணமான திருப்பூர் சாயப்பட்டரைக்கு வேலைக்காக பயனிக்கும் விவசாயி. ஊரில் சித்தாள் வேலை கிடைக்காத
வயதான பெண்மணி –

அந்தச் சூழல் முதலில் எனக்கு திருப்தி அளித்தது – குரூர திருப்தி. ஒரு அலட்சியமான கோணல் சிரிப்பு. இளக்காரமான பார்வை. உனக்கு நான் மேல் என்கிற இறுமாப்பு..

அந்த வருட தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. அந்த தீபாவளிக்குப் பின் நான் தீபாவளி கொண்டாடியதேயில்லை – வேறு எந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை.

பொதுவாக எனக்கு வரும் அலோவன்ஸ் என் சீனியரின் பெயருக்கு செக்காக வரும். அவரும் நானும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம் – பகல் நேரங்களில் அதுவே தான்
ஆபீஸும் கூட. அவர் அந்த சமயத்தில் தீபாவளிக்காக ஒரு வாரம் முன்பே விடுப்பில் சென்றுவிட்டார். அந்த தீபாவளி ஒரு மாதக் கடைசியில் வந்து சேர்ந்தது. ஒரு வாரமாக சீனியர் இல்லாததால் வண்டியில் பெட்ரோல் கூட கிடையாது. அன்று காலை என் தூங்கி எழுந்த போது பாக்கெட்டில் மொத்தமாக ஒரு மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தது. இண்டு இடுக்கிலெல்லாம் தேடியதில் இன்னுமொரு மூன்று ரூபாய் தேறியது. ஒரு மூன்று ரூபாயை தனியே வைத்தேன் “இது இட்லிக்கு” இன்னொரு மூன்று ரூபாயை பாக்கெட்டில் போட்டேன் “டீக்கும்
பிஸ்கட்டுக்கும்”

“மதியத்திற்கு?”

அறை முலையில் குவிந்து கிடந்த பழைய நாளிதழ்கள் கண்ணில் பட்டது. என் சீனியருக்கு தினசரி இரண்டு நாளிதழ்கள் வாசிக்கும் வழக்கம் – தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று.
ஒரு ஆறேழு மாதமாய் அது சேர்ந்திருந்தது. அலுவலக தொலைபேசியில் இருந்து அவருக்கு கூப்பிட்டேன்,

“பாஸ், செலவுக்கு காசு வேணும்… நம்ப ரூம்ல இருக்கற பேப்பரை வேஸ்ட்டுக்கு போட்டிடவா? நீங்க கன்வேயன்ஸ் வந்ததும் அதில் கழிச்சிக்கங்க”

“ஓக்கே டா”

மொத்தமாக ஒரு நாற்பது கிலோ தேறியது. அதற்குள் இட்லி வந்துவிட குளித்து சாப்பிட்ட உடன் அதை சிரமப்பட்டு வாசலுக்கு கொண்டு வந்தேன். இதையெப்படி கடைவரைக்கும்
சுமப்பது என்று குழம்பி நின்ற போது –

“என்னண்ணே, வேஸ்ட்டுக்கா?” எதிர் அறைப் பொடியன். மதுரைக்கு அந்தப்பக்கம் ஏதோ ஒரு ஊர். பக்கத்தில் ஏதோ கம்பெனியில் பேக்கிங் செக்ஷனில் வேலை. அவர்கள் ஒதுக்கிக்
கொடுத்திருந்த புறாக்கூண்டில் வசிக்கும் பத்துப் பொடியன்களில் ஒருவன்.

“ஆமாண்டா… நீ ஊருக்குப் போகலையா?”

“போனஸ் தரலைண்ணே”

“மற்றவங்களைக் காணலியே?”

“அவங்கெல்லாம் பக்கத்திலே ஈரோடு தானே.. நேத்தே கிளம்பிட்டாங்க”

“ஓ…”

“அண்ணே… சாப்ட காசில்லண்ணே.. இதக் கடை வரை தூக்கியாறேன்.. பத்து ரூவா தாரீங்களா?”

அன்றைக்கு நாங்களிருவரும் பகத்திலிருந்த “அன்பு” மெஸ்ஸில் சாப்பிட்டோம். இரண்டு அப்பளம் வைத்து அன்லிமிடட் மீல்ஸ். சர்வர் சோர்ந்து போகும் வரை வாங்கி வாங்கி சாப்பிட்டோம்.
அதற்குப் பின் மூன்று விஷயங்களை நான் செய்ததில்லை – ஒன்று – பண்டிகைகள் கொண்டாடுவதில்லை – இரண்டு – கஷ்ட்டப்பட்டு உழைப்பவர்களைப் பார்த்து ‘இவங்களுக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை” என்று திருப்தி அடைந்து கொள்வதில்லை – மூன்று – சாப்பிடும் பொருளை வீணாக்குவதில்லை.

ஒரு விஷயம் செய்வதுண்டு –

எப்போதெல்லாம் கண்ணதாசன் பாட்டான “உனக்கும் கீழே உள்ளவர் கோடி – நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற வரிகளை கேட்க நேர்கிறதோ அப்போதெல்லாம்

“தெவ்டியாப்பய… அயோக்கிய ர்ராஸ்கல்” என்று நினைத்துக் கொள்வதுண்டு.

ஒரு வருடம் திருப்பூர், அப்புறம் சென்னை, கொஞ்சம் நாள் பெங்களூர், கல்கட்டா, பிறகு ஒரு வருடம் டில்லி, இப்போது கடைசியாக இங்கே இரண்டு வருடம்.
சொந்த ஊர். சொந்த மக்கள். தாய் மொழி. நம்மவர்கள். என்று எல்லா பிடிப்புகளும் உதிர்ந்து மறைந்து விட்டது. காசில்லாதவன் / வேலையில்லாதவன் எந்த மொழிக்காரனாய்
இருந்தாலும் எந்த மதத்துக்காரனாய் இருந்தாலும் எந்த ஊர்க்காரனாய் இருந்தாலும் மதிப்பற்றவன் தான். உழைத்துப் பிழைப்பவனுக்கு இந்த நேசங்கள்,பிடிப்புகள் பற்றியெல்லாம் சிலாகித்துக்
கொள்ள எந்த இனிமையான நினைவுகளும் இருக்க வாய்ப்பில்லை. அந்த திருப்பூர் சிறுவனிடம் போய் தேசபக்தி~மொழிப்பற்று~மதம்~இனப்பற்று~சொந்தம்~பந்தம்~காதல்~அன்பு
என்று பேசிப்பாருங்கள் – காறித் துப்பி விட்டு தன் வேலையைப் பார்க்க போய்விடுவான். பத்து நிமிடம் நின்று காது கொடுத்து விட்டு லேட்டாகப் போனால் நாளைக்கு சோறு கிடைக்காது.

இது தான் உண்மை – வலிக்கும் உண்மை!

ரயில் ஏதோ ஒரு பெயர் தெரியாத ஸ்டேஷனில் நின்றது. வெளியே பயங்கரமாக மழை பெய்திருந்தது. சன்னலை உயர்த்தி வெளியே பார்த்தேன். தண்டவாளத்திற்கு பக்கவாட்டில் மழைத்
தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பாலித்தீன் காகிதம் இழுத்துக் கொண்டு நீரின் போக்கில் போனது.

நவம்பர் 17, 2008 Posted by | culture | 4 பின்னூட்டங்கள்

சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!

சாரு நிவேதிதா தொடங்கி.. ஜெயமோகன் வரையுள்ள இலக்கிய கழட்டிகளிடமும்.. வலைப்பூ உலகில் பல வடிவத்தில் (மன/மல)குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் சொறியர்களிடமும் ( மேற்படி கோமான்களுக்கு சொறிந்து விட்டுக் கொண்டிருப்பதே தம் கடன் என வாழும் அல்ப்பைகள்) கேட்கவென்றே சில சந்தேகங்கள் இருக்கிறது..

அதெப்படி உங்களுக்கு மட்டும் உலகமே சமூக/பொருளாதார ரீதியில் கொந்தளிப்பான சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில்  பின்நவீனம்/முன்நவீனம்/சைடுநவீனம்/அப்பர் & லோயர் நவீனம் என்று இலக்கிய அரிப்பு தீராமல் இருந்து கொண்டேயிருக்கிறது?

பக்கத்தில் நமது ரத்த சொந்தங்கள் வீடிழந்து நாடிழந்து உறவுகளை இழந்து பராரிகளாய் அலைந்து கொண்டிருக்கும் போதும் உங்களால் “குட்டிக்கதை” “புட்டிக்கதை” “காமக்கதை” என்று எந்த கூச்சமும் இல்லாமல் வாந்தியெடுக்க முடிகிறதே எப்படி?

சாதாரண மனிதன் ஒருவன் கூட அநியாய சாவுகளைக் கண்டு உள்ளம் குமுறும் போது உங்கள் “இலக்கிய” எழவெடுத்த மனமோ அதில் கூட அழகியலைத் தேடுகிறதே எப்படி?

எழவு வீட்டின் ஒப்பாரியில் இருக்கும் உலக இசையின் கூறு என்னவென்று தேடும் கூறுகெட்ட புத்தி உங்களுக்கு மட்டும் எப்படி?

அவன் கிள்ளினான் / இவன் ஏசினான் என்கிற ரீதியில் உங்கள் உலகத்தைச் சேர்ந்த சக மிருகங்களோடு மல்லுக்கட்ட எடுத்துக் கொள்ளும் அக்கறையில் ஒரு சதவீதமாவது ஈழத்தில் செத்துப் போன எங்கள் சகோதரனுக்காக ஒரு கவிதையோ / கட்டுரையோ எழுத எடுப்பதில்லையே ஏன்?

தாஸ்தாவெஸ்கி~டால்ஸ்டாய்~மிஷெல் பூக்கோ~இந்திய விவசாயி = இந்த வரிசையில் இறுதியில் வரும் இலக்கியவாதி குறித்து நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்களே?

ஏழு நிமிடம் பத்து வினாடிகளில் கடவுளை இசையாய்த் தேடும் உங்கள் காதுகளில் ரை இசையில் இன்பம் தேடும் உங்கள் காதுகளில் முப்பது வருடங்களாய் பக்கத்துத் தீவிலும்~ கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்து இந்திய வயல் வரப்புகளிலும் ஒலித்து வரும் ஒப்பாரி கேட்க வில்லை அல்லவா? அந்தக் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றினால் தான் என்ன?

சிதறும் ரத்தத் துளிகளில் ஓவிய நளினம் தேடும் உங்கள் கண்களில் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைச் சொறுகினால் தான் என்ன?

போங்கடா நீங்களும் உங்க இலக்கிய மசிரும்..

ஊரே சாவு வீடாய்க் கிடக்க கொண்டாட்டமாய் சினிமா விமர்சனம் எழுதிக்கொண்டிருக்கும் வலைப்பதிவன் அல்பையென்றால் இந்த இலக்கிய நாதாரிகளோ அறிவார்ந்த அல்பைகளாய் இருப்பார்கள் போலிருக்கிறது.

ஒக்ரோபர் 31, 2008 Posted by | Alppaigal, culture | 7 பின்னூட்டங்கள்

அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..

”ச்சை.. சனியனுங்க.. இப்பத்தான் கரெண்ட நிப்பாட்டனுமா நிம்மதியா சாப்புடக்கூட உடமாட்றானுக”

”இருய்யா மெளுகு வத்தி கொளுத்தறேன்”

”பாத்துப்போடி… வழியிலே சேர் கெடக்குது”

”ஆமா.. இது பெரிய்ய அரமனை.. இருந்தாலும் தடவிக்கிட்டு தானே போவனும்?”

”கெட்ட கேட்டுக்கு அரமன சொகுசு கேக்குது பாரு”

“உன்ர வாய்க்கு ஒன்னும் கொரயில்லைய்யா.. இந்தா சீக்கிரமா தின்னு முடி. மெளுகு வத்தி வெளிச்சத்துக்கு பூச்சி வரும்”

”அடிப்போடி.. இந்த ரேசன் அரிசியத் திங்கரதும் பூச்சியத் திங்கரதும் ஒன்னுதான்”

”ஒனக்கெல்லாம் ரூவாய்க்கு கிலோ அரிசி போட்டா அல்லைல கொளுப்பு கட்டுது”

”குடுக்கும் போது கிலோ ரூவாய்க்கு குடுக்கறான்.. அடுத்த நா காலைல காக்கிலோவுக்கு ரெண்டு ரூவா கேக்கறான்.. போடி நீயும் ரூவா அரிசியும்”

”நீ உங்கரக்கு ஆதரிச்சா பேள்ரதுக்கு வழியென்னங்கர”

” உங்கச் சோறு போட்டவன் இருக்கவனெல்லா பேள வழி இருக்கவனான்னு பாத்தா போடறான்?”

“செரி செரி சோத்தத் தின்னு முடி.. நரகலப் பத்தி பேசற நேரத்தப் பாரு”

”மணி ஒம்போதாகுது.. பய்யனெங்கடி?”

”ஆறாம்மவங்கிட்டெ புக்கு வாங்கப் போறேன்னு ஆறு மணிக்கிப் போனவன்… சேக்காளிகளோட சேந்து எங்கியாவது நாயமடிச்சிட்டிருப்பான்”

”சின்னப் பாப்பாளுக்கிறுக்கர பொறுப்பு இந்த நாயிக்கில்லே பாரு.. இஸ்கூல்லேர்ந்து வந்தமா படிச்சமா பொட்டாடம் தூங்குனமான்னு இல்லாம தெருப்பொறுக்கிட்டு அலையறான்.. பண்னெண்டாவது படிக்கறமே மார்க்கில்லேன்னா அப்பன மாறி நாமளும் கூலிக்குத் தான் போகனுமேன்னு பயமாச்சுமிருக்கா அவனுக்கு”

“அட சும்மாருய்யா.. மார்க்கெடுத்தா மட்டும் நீயென்ன டாக்டருக்கா படிக்க வச்சிரப்போறே?”

“நீ தாண்டி அவன செல்லங்கொஞ்சிக் கெடுக்கர”

”வக்கில்லாதவனுக்கு வாயி மட்டும் ஏளு மயிலு நீளமாம்மா..”

”இப்புடிப் பேசியே அவன் வீணளிஞ்சிப் போயிட்டாண்டி.. இந்த வருசம் அவனுக்கு பீசு கட்ட எத்தினி செரமப் பட்டோம்? ஏதோ ராயப்பன் தெரிஞ்சவனாகப் போயி ரண்டு வட்டிக்கி கொடுத்தொதவினான்,, இனி அடுத்தாப்புல காலேஜில சேக்கோனும்னா எவங்கிட்டேடி போய் நிக்கறதுன்னு நானே கவலயில இருக்கேன்”

”சரி உடுய்யா.. அவஞ்சோட்டுப் பசங்களப் பாத்தியா.. ஒவ்வொன்னும் கலர் கலரா உடுத்துக்கிட்டு பட்டாம்பூச்சி மாறி சுத்திக்கிட்டு இருக்குதுக.. நமக்கிருக்க வக்குக்கு சாயம் போன சட்டையத்தான் வாங்கிக் குடுக்க முடியுது.. அவனுக்கும் ஆசயிருக்காதா? கிரிக்கெட்டாடப் போகோனுமின்னாலும் சொந்தமா மட்ட வாங்கிட்டு வரச் சொல்றாங்களாமா.. ஏதோ சேக்காளிகளோட பேசறது அவனுக்கு சந்தோசம். அதையுமா நாம கெடுக்கோனும்?”

“இப்புடியே உட்டா அவனும் நாளைக்கு என்னிய மாறி கம்பி கட்டத்தான் லாயக்காவாண்டி. இந்த நாயிப் பொழப்பு நம்ம தலக்கட்டோடயே போகட்டும். இன்னிக்கு நா கண்டிசனா பேசறது அவனுக்கு கஸ்டமாத்தா இருக்கும்.. ஆனா நாளைக்கு அவங்குடும்பம் கடைல அரிசி வாங்கிச் சாப்புடும் போது நெனச்சிப் பாத்துக்குவான்.. அவனாவது அவம்பையனுக்கு நல்ல துணி வாங்கிக் குடுக்கட்டுமே”

“எல்லாஞ்செரிதான்யா.. இதெல்லா அவனுக்குப் புரியுமா? நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிப் போடற.. அவனும் மூஞ்சியத் தூக்கிட்டு உங்காமத் திங்காம சுருண்டு படுத்துக்கறான்.. சின்னப் பய்யன்யா.. வளர வேண்டிய வயசு. மத்தவிங்க ஊட்டு நெலமையும் நம்மூட்டு நெலமையும் புரியவா போகுது? தீவாளி வருது.. எல்லாரும் இப்பவே புதுசு புதுசா எடுத்துப் போட்டுட்டு அலையுதுக.. நாம ஒரு வருசமாச்சும் நோம்பியன்னிக்கு புதுசு வாங்கிக் குடுத்துருக்கமா?”

“இதெல்லா அவங்காது படப் பேசிப்போடாத.. இதெல்லா கேட்டா அவனுக்கு இன்னுங்கொஞ்சம் தொக்காயிடும்.. உப்பக் கஸ்டப்பட்டா பின்னாடிக்கி நல்ல நெலமைக்கி வந்துருவாண்டி. ”

”ஆசையிருக்குது ஆன மேல போக.. வகையிருக்குது வக்கத்த நெலைலன்னு சொன்னா மாறி இருக்குது நீ பேசறது..”

” நீ வேனாப் பாருடி.. எந்தலைய அடமானமா வச்சாவது எம்பய்யன இஞ்சினீராக்கத்தாம் போறேன்”

“இஞ்சினீராமா இன்ஞ்னீரு.. இஞ்சி விக்க அனுப்புனா இப்புடி மஞ்சச் சோத்தத் திங்கரக்கு பதிலா வெள்ளச்சோறாச்சும் திங்கலாம்..அவனும் ஆசப்பட்டத தின்னு விருப்பப்பட்டத உடுத்திக்குவான்”

“உன்ர கரி நாக்க வச்சிட்டு சும்மா இருடி..”

“என்ர கரி நாக்கு கெடக்கட்டும் கெடயில.. நீ மொதல்ல தின்னு முடிக்கர வழியப் பாரு”

ஒக்ரோபர் 1, 2008 Posted by | culture | 1 பின்னூட்டம்

ஒரு தேவதையின் மரணம்…!

போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை..  குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?

ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.

“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”

“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”

“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”

ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும்  ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“வீட்டுக்குப் போகலையா?”

“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”

“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”

“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”

“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”

“அதுக்கில்லே…”

“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”

“………..”

“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”

“அதெப்படி…..”

“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”

“நல்ல மார்க் வாங்கனும்”

“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”

“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”

எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..

“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”

“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”

“ம்…”

“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”

“ஆனா எப்படி…?”

“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”

“ச்சும்மா இருக்கேன்”

“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”

“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”

“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”

“ம்… சரி”

“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”

“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது

“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”

“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”

“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”

“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”

கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”

அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள்.  அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”

“போடி.. அது என் ஸ்டைல்”

“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”

“ம்ம்… சரி”

‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”

“ம்ம்.. சரி”

“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”

“எனக்கு தெரியலடி…”

“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”

“ம்ம்.. சரி”

எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.  ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..

ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..

“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“என்ன?”

“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”

“ஏன்?”

“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”

“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”

“அது சரியா வராதுடா..”

“ஏன்?”

“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”

நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..

முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.

கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.

“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.

“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..

“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”

“எங்கே?”

“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”

“எதுக்குடா?”

“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”

“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”

“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”

“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.

“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”

வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”

“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”

“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”

“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”

“சந்தோஷமா இருக்கா?”

“அதெப்படி நமக்குத் தெரியும்”

“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”

“இப்ப என்ன சொல்ல வர்றே”

“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”

“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”

“பொண்ணு?”

“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”

“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.

“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”

“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”

“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”

“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”

திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம்.  எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

” சரி நான் போறேன் ”

“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”

“வேணாம் நான் போறேன்”

“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.

“இல்ல போறேன்”

“சரி.. போ….”

செப்ரெம்பர் 15, 2008 Posted by | culture, short story | , | 20 பின்னூட்டங்கள்

சில பயணங்கள் சில அனுபங்கள்..

போன மாதம் பணி காரணமாக நானும் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த எனது ஜூனியரும் நாகபுரி செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு அரசு நிறுவனம். அங்கே பாதுகாப்பான
ஒரு அறையில் மிகவும் பாதுகாப்பாக பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு இயந்திரத்தைப் பார்த்தோம். அது மிகக் கவனமாய் உறை போட்டு மூடப்பட்டு இருந்தது. பார்த்த
உடனே தெரிந்து விட்டது அதன் உறைகளைக் கழற்றியே பல வருடங்கள் இருக்குமென்று. நாங்கள் பார்க்கப் போயிருந்த அதிகாரியை அது பற்றிக் கேட்டோ ம்.

அது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு இயந்திரமென்றும் அதன் விலை என்பது கோடியென்றும் இதே போன்ற இயந்திரம் மற்ற ஊர்களில் இருக்கும்
அதே நிறுவனத்தின் மற்றைய கிளைகளிலும் இருக்கிறதென்றும் பெருமையாகக் குறிப்பிட்டார். நாங்கள் அது ஏன் உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கிறது என்று கேட்டோ ம். அதற்கு அவர்
அதை எதற்கு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று அங்கே உள்ள ஒருவருக்கும் தெரியாது என்றும் அது வாங்கப்பட்ட
கடந்த ஒரு நான்கு ஆண்டுகளாகவே ஒரு முறை கூட இயக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வேலை முடிந்து சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருக்கும் போது உடன் வந்த எனது ஜூனியர் –

” என்ன அநியாயம் பாத்தீங்களா சார்.. நம்மளோட வரிப்பணமெல்லாம் எப்படி வீணாகுதுன்னு” என்றார்

“என்ன சொல்றீங்க.. புரியலையே” என்றேன்

“இல்ல.. அந்த இயந்திரத்தோட விலை என்பது கோடின்னா.. இவங்களோட பத்துக்கும் மேற்பட்ட கிளைகள்ல இப்படித்தானே சும்மா தூங்கிக்கிட்டு இருக்கும்?’

“ஆமா.. அதுக்கென்ன?”

“ஒரு என்னூறு கோடி ரூவா இப்படி அநியாயமா யாருக்கும் பயனில்லாம அனாமத்தா போயிடிச்சே?”

“சரி என்னா செய்யலாம்கறீங்க?”

“இல்ல சார் இந்த கவர்மெண்ட் சரியில்லைங்க”

“அப்ப எந்த கவர்மெண்ட் சரின்றீங்க? ஆபீசருங்கெல்லாம் ஒழுக்கமா என்ன?”

“எல்லாருக்கும் உள்கை இருக்குமில்லே? எல்லா நாயுங்களும் அயோக்கியனுங்க தான் சார்”

“அப்ப என்ன தான் பண்ணலாம்கறீங்க”

“இவனுக பூரா பேரையும் தொரத்தி வுட்டுப்பிட்டு.. நம்ம காசு நமக்கே பயன்படறா மாதிரி ஒரு கவர்மெண்டு உருவாகனும்க.. டோ ட்டலா எல்லாத்தையும் மாத்தனும் சார்”

“எல்லாம் சரிதான் யார் செய்யப்போறா? நீங்க அதுக்கெல்லாம் வேலை செய்யத் தயாரா?”

“………..”

சென்னை தான் வந்து சேர்ந்தது.. பதில் வரவில்லை

___________________________________________________________________________________________________

சில வாரங்களுக்கு முன் நன்பனுக்கு சேலத்தில் அவசர கல்யாணம் – காதல் கல்யாணம். திடீர் முடிவு. திடீர் அறிவிப்பு. எனவே திடீர் பயணம்.

சேலம் செல்ல கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்தில் ஏறினேன். ஏறும் போது நடத்துனரிடன் சேலம் போய்ச் சேர எத்தனை நேரமாகும் என்று கேட்டேன். அவர் ஏழு மணி நேரம்
ஆகுமென்றார். அப்போது மணி காலை பத்து. எப்படியும் ஐந்து மணிக்கு சேர்ந்து விடலாம் என்று ஏறி அமர்ந்து கொண்டேன்.

பேருந்து ஆரம்பத்திலிருந்தே நத்தை வேகத்தில் தான் நகர்ந்தது. எனக்கு அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்து வந்தார். தாம்பரம் தாண்டியதும் பேருந்து வேகம் பிடிக்கும்
என்று நாங்கள் பேசிக் கொண்டோ ம். தாம்பரமும் தாண்டியது. ஆனாலும் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. டிவிஎஸ் 50 வண்டிகள் கூட எங்கள் பேருந்தை முந்திக் கொண்டு
போகும் அளவு வேகத்தில் தான் எங்கள் பேருந்து போய்க் கொண்டிருந்தது. திண்டிவனம் தாண்டியதும் பயனிகள் பொருமையிழந்து விட்டார்கள்…

கடந்து செல்லும் நடத்துனரை ஒவ்வொருவரும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். நடத்துனர் பரிதாபமாகக் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்..

“சார் நான் என்னாங்க பன்றது.. வண்டி கண்டிசன் அவ்வளவு தான். நாப்பதுக்கு மேல போனா படுத்துக்கும்.. நானும் இது ரெண்டாவது சிப்டு பார்த்துட்டு இருக்கேன். ஆளுங்களும்
இல்ல… எப்பா எறங்கி வீட்டுக்குப் போயி படுக்கலாம்னு இருக்கு என்ன செய்யட்டும் சொல்லுங்க” என்றார்..

பயனிகள் ஒவ்வொருவரும் பாய்ந்து பிடுங்கி விட்டார்கள்.

“வண்டி வேகமாப் போகாதுன்னாக்க ஏன் சார் எடுக்கறீங்க? ஏறும் போதே சொல்லலாமில்லே? ஏன் சார் எங்க உயிர வாங்கறீங்க?”

“நான் என்னாங்க செய்யட்டும்? வண்டி கண்டிசன் சரியில்லே… ஸ்பேர் பார்ட்ஸ் எதுவும் ஒர்க்சாப்பில் இல்லை.. மெக்கானிக் இல்ல.. புதுசா ஆளுங்களும் எடுக்கறதில்ல..”

விழுப்புரம் வந்து சேரும் வரை ஒவ்வொருவரும் பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் கரித்துக் கொட்டிக் கொண்டு வந்தார்களே ஒழிய ஒருவர் கூட அரசு பேருந்தின் அந்த அவல
நிலைக்குக் காரணமான அரசையோ, அரசு போக்குவரத்துக் கழகத்தையோ பற்றி பேசவேயில்லை.. எல்லோரும் தங்கள் கோபத்தை நடத்துனர் மேலும் ஓட்டுனர் மேலும் கொட்டித்
தீர்த்தார்களே தவிர ஒருவர் கூட ஏன் இப்படி ஒரு அரசு நிறுவனம் நலிவுற்றுப் போனது என்பது பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

விழுப்புரம் தாண்டியதும் நடத்துனர் பொருக்கமாட்டாமல் குமுறித்தீர்த்து விட்டார்..

“யோவ் எறங்கறதுன்ன எறங்கி வேற வண்டில வாங்க சும்மா நைய்யிநைய்யின்னு கத்தாதீங்க.. என்கிட்டே உழுந்து புடுங்கறீங்களே.. போய் கவர்மெண்ட கேட்க வேண்டியது தானே?
இன்னும் நாலு வருச சர்வீஸ் இருக்கு எனக்கு.. ரெண்டு பொண்ணுக கல்யாணம் இருக்கேன்னு பல்லக் கடிச்சிட்டு வேலை பார்த்திட்டு இருக்கேன் நானே.. என்கிட்டே ஏன்யா
எகிறிட்டு இருக்கீங்க? இப்படிக் கேவலமான கண்டிசன்ல பஸ்ஸெல்லாம் மெயிண்டெய்ன் பண்ணி தனியார் திங்கறக்கு வழி விட்டிருக்கானே அதிகாரி அவனைப் போய் கேளுங்கைய்யா..
லாபத்துல தானே பஸ் கார்ப்பரேசன் போனிச்சி.. அப்புறம் ஏன் மெண்டெனன்ஸ் செய்யாம நஸ்டத்துக்கு கொண்டாந்தீங்கன்னு அங்க போய் கேளுங்கைய்யா.. வந்துட்டானுக”

ஒரு வழியாக சேலம் வந்து சேர்ந்தது… பயனிகள் எவருக்கும் சொரனை வந்ததா என்று தான் தெரியவில்லை..

___________________________________________________________________________________________________

குலதெய்வத்தை பத்தாண்டுகளாக நான் பார்க்காமல் இருப்பது தான் நான் கோயில் மாடு மாதிரி பொறுப்பில்லாமல் சுத்தக் காரணம் என்று எந்த ஜோசியக்காரனோ அப்பாவிடம்
போட்டுக் கொடுத்து விட.. போன வாரம் என்னை குடும்பமே சேர்ந்து தென் தமிழ்நாட்டில் இருக்கும் எங்கள் குல தெய்வக் கோயிலுக்கு தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

நான் பத்தாண்டுகளுக்கு முன் அவளைப் பார்த்தது.

அவள் ? இசக்கி.

அப்போதெல்லாம் அவளுக்கு கோயில் என்று எதுவும் பெரிதாக இருந்ததில்லை.. தெருவோரத்தில் ஒரு கீத்துக் கொட்டகைக்குள் தான் இருப்பாள்.. எங்கள் தூரத்து சொந்தத்தில் ஒரு
தாத்தா தான் பூசாரியாக இருந்தார். அந்தப் பழைய நினைவுகளோடும் அதே எதிர்பார்ப்போடும் போய்ப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.. புதிதாக கட்டிடம் எழும்பியிருந்தது. ஐந்தடி உரத்தில்
காம்பௌண்டு முளைத்திருந்தது. அதன் சுற்று முழுதும் காவியும் வெள்ளையுமாக வரிவரியாக இருந்தது. புதிதாக கிரில் கேட் போட்ட
கதவு முளைத்திருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் பந்தல் போட்டிருந்தார்கள்.. “எசக்கி கோயில்” என்ற தகரப்பலகையை காணவில்லை.. கிரில் கேட்டின் முகப்பில் “ஸ்ரீ இசக்கி அம்பாள்” என்று
எழுதியிருந்தது.. “இசக்கி” க்கும் “அம்பாளுக்கும்” நடுவே சமஸ்கிருத ஓம் போட்டிருந்தார்கள்.

“அப்பா கோயில இன்னும் நம்ம பூசாரித் தாத்தா தான் பார்த்துகிடறாரா?” என்று கேட்டேன்

“இல்லடா அவரு செத்துப் போயி தான் நாலு வருசமாகுதே.. இப்ப ஒரு குருக்கள் தான் பார்த்துக்கிட்டிருக்கார்”

“அந்தாளு பாப்பானா?”

“டேய் மரியாதையா பேசுடா.. அவரு குருக்கள்டா”

“குடுமி வச்சி பூணூல் போட்டிருக்கானா சொல்லு?”

“ஆமா அவங்க அய்யருமாருங்கடா..”

“அப்ப அவன் பாப்பான் தான்”

“நீ திருந்தவே மாட்டே..உனக்கு நாக்குல சனி”

“பார்த்தியா.. பாப்பான் வந்ததும் உன் சாமி பேரையே மாத்திட்டான் பாரு..”

“பேர்ல என்னடா இருக்கு..”

“பேர்ல தான் எல்லாமே இருக்கு.. முன்ன சாமி அதும் பாட்டுக்கு ரோட்டோ ரத்துல ஒக்காந்திருந்ததா? போற வர்ற எவன் வேணுமின்னாலும் கும்பிடலாம்.. தொட்டு கூட பாக்கலாம்..
ஆனா இப்ப பாத்தியா உனக்கும் சாமிக்கும் நடுவால இவன் வந்துட்டானில்லே? நம்ம தாத்தா தானே இந்த சாமிய இங்கே வச்சி கீத்துக் கொட்டாய் போட்டாரு.. இப்ப என்னாடான்னா
நீயே மூணாவதாள் மாதிரி வெளியே நின்னு அந்தாளுக்காக காத்துக்கிட்டிருக்கே. உள்ள என்ன பேங்கா நடக்குது? இதுக்கெதுக்கு கதவெல்லா? உனக்கு சாமிக்கும் நடுவாலே வர
இந்தாளு எதுக்கு?”

அப்போதைக்கு அவரிடம் இருந்து பேச்சேயில்லை.. வேண்டுதல் முடிந்து ஊருக்கும் வந்து விட்டோ ம். நேற்று போனில் கூப்பிட்டு கதவு கிரில் கேட்டெல்லாம் எடுத்து விடச்
சொல்லிவிட்டதாக சொன்னார். “குருக்களை” பத்திவிடச் சொல்லியிருக்கிறேன்.. பார்க்கலாமென்றிருக்கிறார்.

ஓகஸ்ட் 26, 2008 Posted by | culture | 4 பின்னூட்டங்கள்

%d bloggers like this: