ஈரல்..!
“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூறு
“ராமா ராமா பெல் அடி ராமகிருஷ்ணா பெல் அடி சீதா சீதா பெல் அடி சீக்கிரமா பெல் அடி” – நூற்றியொன்று.
ரத்தினம் தலையுயர்த்திப் பார்த்தான். கணக்கு வாத்தியார் சோதிலிங்கம் கையில் பாட புத்தகத்தை வைத்துக் கொண்டு அதில் எதையோ தீவிரமாகத் தேடும் பாவனையில் தலை கவிழ்ந்திருந்தார். கடைவாயில் இருந்து கோழை ஒரு ஜவ்வு இழையைப் போலக் கீழிறங்கி புத்தகத்தைத் தொட்டுத் தொட்டு மேலேறி காகிதத்தை ஈரமாக்கிக் கொண்டிருந்தது. ரத்தினம் வகுப்பறையின் சன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; வாட்சுமேன் கோயிந்தசாமி கையில் இரும்புக் கழியுடன் ஹெச்.எம் அறை முன் தொங்க விடப்பட்டுள்ள தண்டவாள இரும்புத் துண்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது தெரிந்தது.
ரத்தினத்தின் மனதுக்குள் குபுக் என்று சந்தோஷம் பொங்கியது. அவனுக்குத் தெரியும், கடைசி வகுப்புக்கு சோதி அய்யா வந்தவுடன் வீட்டுப் பாடம் எழுதாதவர்களை வரிசையாகக் கூப்பிட்டு புறங்கையில் ஸ்கேலை குறுக்குவாக்கில் வைத்து ஆளுக்கு ஐந்து அடி போடுவார், பின் ரத்தினத்தை அழைத்து டீ சொல்லி விட்டு வர அனுப்புவார், டீ வந்து உறிஞ்சிய பின் கரும்பலகையில் இரண்டு கணக்குகளை எழுதி எல்லோரையில் நோட்டில் குறித்துக் கொள்ளச் சொல்விட்டு நாற்காலியில் அமருவார்.
சரியாக அந்த நேரத்தில் அனந்த ராமன் சொல்லிக் கொடுத்த “பெல்லு மந்திரத்தை” நூற்றியொரு முறை சொன்னால் பெல் அடிக்கப் படும். அடிக்கப் பட்டது. “டாங், டாங், டாங், டாங், டாங்” கணீரென்று ஒலித்த சத்தத்தில் பதறி எழுந்த சோதி வாத்தியார் அவசர அவசரமாகக் கடைவாயைத் துடைத்துக் கொண்டார்.
“பசங்களா, போர்டுல இருக்கிற உதாரணத்தைப் போலவே உங்க புக்குல இருக்கிற மத்த கணக்குகளப் போட்டுட்டு வந்து நாளைக்கி காட்டனும். ஒழுங்கா வீட்டுப் பாடம் செய்யாதவிங்கள இந்த வருச பெரிய பரிட்சைல பெயில் ஆக்கிடுவோம்” கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக சொல்லும் அதே வாக்கியத்தை அதே ராகத்தோடு அதே உச்சரிப்பில் அதே முகபாவத்தோடு ஒரு அனிச்சை செயலைப் போல சொல்லி விட்டுக் கிளம்பினார்.
ரத்தினம் இதற்காகவே காத்திருந்ததைப் போல துள்ளியெழுந்தான். பரபரவென்று தனது புத்தகங்களைச் சேகரித்து பைக்குள் திணித்துக் கொண்டு வெளியே ஓடினான். முகமெங்கும் ஒரு பூரிப்பு. எதிரில் நிற்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போன்றதொரு பாவனையில் ஒரு சிரிப்பு முகத்தில் உறைந்து போயிருந்தது.
“யேய் ரத்துனா நில்லுரா… நில்லுரான்னா..”
நின்றான். அது குமரன். அதே ஊர். வேறு தெரு.
குமரன் கையில் ஒரு நசுங்கிய அலுமினிய போசி (சிறிய கும்பா) இருந்தது.
“இந்தாடா… சோத்து போசிய உட்டுட்டுப் போறே. என்னடா அத்தினி அவசரம்?” குமரன் கொஞ்சம் தடித்தவன். அதனால் ஓடுவது கொஞ்சம் சிரமம். இளைக்கும். இளைத்தது.
“இல்லீடா.. இன்னிக்கு எங்கூட்ல மாடு கண்ணு போடப்போகுதுன்னு அம்மா சொல்லுச்சு. இன்னேரம் போட்ருக்கும். மாடு கண்ணு போட்டா சீம்பால் கெடைக்குமாமாடா. அது செம்ம ரேஷ்ட்டா இருக்குமாமாடா. எனக்கு தனியா எடுத்து வக்கிறேன்னு அம்மா சொல்லுச்சு. அதாண்டா சீக்கிரம் போறேன். நா அதத் தின்னதேயில்லீடா. நீயும் வாடா உனக்கும் தர்றேன்”
“அய்யய்யோ.. நானெல்லாம் உங்கூடு இருக்கற பக்கம் வந்தாலே எங்கப்பாரு அடிப்பாரு. நான் மாட்டேன்பா” குமரனின் பதில் சுருக்கென்று குத்தியது. ரத்தினத்தின் முகவாட்டம் குமரனுக்குள் ஏதோ செய்திருக்க வேண்டும்
“அதுக்கில்லீடா.. அது வந்து.. அது ஒரே இனிப்பா இருக்கும்டா. எங்கூட்ல எங்கம்முச்சி எப்பப்பாத்தாலும் அத வச்சி ஊட்டிட்டே இருக்கும். தின்னுத் தின்னு ஒரே போரு. எனக்குப் புடிக்கவே புடிக்காது”
“சரிடா.. நான் போறேன்”
ரத்தினம் சோத்து போசியை புத்தகப் பையில் கிடைத்த இடைவெளிக்குள் திணித்து விட்டு பள்ளியை விட்டு வெளியேறி ஓடினான். அது போளுவபட்டி அரசினர் மேல் நிலைப் பள்ளி. அதில் ரத்தினம் ஐந்தாம் வகுப்பில் படித்தான். போளுவபட்டி பல்லடத்திலிருந்து குண்டடம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பெரிய ஊர். அக்கம் பக்கத்து ஊர்களுக்கெல்லாம் சேர்த்து இது ஒன்று தான் பள்ளிக்கூடம். ரத்தினத்தின் ஊர் பெரியகவுண்டம்பாளையம் அது மெயின் ரோட்டிலிருந்து ஒரு நாலு கிலோமீட்டர் உள்ளடங்கி இருக்கும் சின்ன ஊர். மொத்தம் இருநூறு வீடுகள். ஆயிரம் பேர். அதில் நாற்பது வீடுகள் அருந்ததியர் காலனியில் இருந்தது. அங்கே தான் ரத்தினத்தின் அப்பா வேலனின் குடிசையும் இருந்தது. அங்கிருந்து பள்ளிக்கூடம் ஆறு கிலோமீட்டர்.
ஊரிலேயே பெரிய படிப்பை மீசைக்கார கவுண்டரின் மகன் தான் படித்திருந்தான். அவர் தான் ஊர்கவுண்டரும் கூட. அந்தப் பெரிய படிப்பு – பத்தாம் வகுப்பு. லோன் வின்னப்பம், லெட்டர் என்று எதுவாக இருந்தாலும் அவன் தான் எழுதித் தரவேண்டும். அதில் அவருக்கு நிறைய பெருமையிருந்தது.
“எம்மவன் படிச்ச படிப்புக்கு கோயமுத்தூரு சில்லாவுக்கே கலெக்கிட்டரு ஆகிருப்பான்.. நாந்தான் சில்லாவுக்கு கலெக்கிட்டரா இருக்கறத விட ஊருக்கு மவராசனா இருக்கட்டும்னு சொல்லி நிறுத்திப் போட்டேன்”
அந்த மெத்தப்படித்த மவராசனுக்கு பதினேழு வயதாகி மீசை முளை விட்ட போது ஆசையும் முளை விட்டது. கொத்து வேலைக்கு வந்த பெண்ணிடம் கையைப் பிடித்து இழுத்து குறும்பு செய்யப் போக, அது பஞ்சாயத்தானது. பஞ்சாயத்தின் தலைவர் மீசைக்காரக்கவுண்டர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் ரத்தினத்தின் பாட்டி. அப்போது வயது நாற்பது. அப்போது ரத்தினத்தின் அப்பா வேலனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை – இருபது வயது.
“ஏண்டா நாயிகளா.. நாங்க குடுத்த வேலைய செஞ்சிட்டு நாங்க போட்ட சோத்த தின்னுட்டு எங்கூட்டுப் பய்யனுக மேலெயே பிராது குடுக்கறீங்களாடா? அவம் படிப்பு எத்தினின்னு தெரியுமாடா ஒங்களுக்கு?” அந்த ஒவ்வொரு “நாங்க” மேலும் ஆயிரம் கிலோ இரும்பை வைத்தது போல் அத்தனை கணம். “ஒழுங்கா மருவாதையா போயிருங்க. உங்கர சோத்துல நீங்களே மண்ணைப் போட்டுக்காதீங்க” என்று காலம் காலமாகக் கொடுக்கப்படும் வழக்கமான அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து எந்த சலசலப்புக்கும் இடமின்றி பஞ்சாயத்து கலைந்தது.
அன்று வேலன் இரண்டு தீர்மாணங்கள் எடுத்தார். ஒன்று – எப்படியாவது, என்றைக்காவது இவர்களின் பண்ணையத்தை நம்பிப் பிழைப்பதில்லை எனும் நிலையை எட்டுவது. இரண்டு – தலையை அடமானம் வைத்தாவது தனது பிள்ளைகளை ஊர்கவுண்டன் மவனை விட ஒரு வருசம் அதிகம் படிக்க வைத்து விட வேண்டும் என்பது.
மிகுந்த போராட்டத்திற்கிடையே, எவர் எவரின் காலையோ பிடித்து பாங்கில் மாட்டு லோன் வாங்கி ஒரு மாட்டையும் வாங்கி வந்தார். ஊரில் மேய்ச்சல் நிலம் எனப்படும் அனைத்தும் குடியானவர்களிடமே இருந்ததால், அந்த மாட்டிற்கு மேய்ச்சல் நிலமே கிடைக்காத நெருக்கடி. அரை வயிறு கால் வயிறு கஞ்சியைக் குடித்து மிஞ்சிய காசில் தீவனம் வாங்கிப் போட்டு அந்த மாட்டை வளர்க்க படாத பாடெல்லாம் பட்டார் வேலன்.
ஓரளவுக்கு மாடு பருவத்துக்கு வந்ததும் அடுத்த பிரச்சினை ஆரம்பித்தது. இணை சேர்க்க வேண்டும். அதற்கு பொலி காளை வேண்டும். அந்த வட்டாரத்தில் பொலி காளைகளை வைத்திருந்தவர்களெல்லாம் கொஞ்சம் வசதியான கவுண்டர்கள். ஏறியிறங்கிய அத்தனை இடங்களிலும் வேலன் அவமானப்பட்டார். கேலியான வார்த்தைகளில் உடலும் மனமும் கூசியது.
மாட்டை விற்கலாம் என்றாலும் வாங்குவாரில்லை. லோன் கொடுத்த பாங்கில் இருந்து ஒவ்வொரு முறை ஃபீல்டு ஆபீசர் வந்து செல்வதும் எமன் வந்து செல்வது போன்ற ஒரு அனுபவமானது. வாங்கிய கடனுக்கான வட்டி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்த நிலையில் கடைசியாக வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு அடிமாடாக அனுப்பிவிடுவது என்று முடிவுக்கு வந்த போது தான் எதேச்சையாக செயற்கைக் கருத்தரிப்பு முறையைப் பற்றி கேள்விப்பட்டார்.
பொன்டாட்டி, அப்பன், ஆயி, மாமன், மச்சான், அங்காளி, பங்காளி என்று அந்தக் காலனியில் இருந்த நாற்பது குடும்பங்களைச் சேர்ந்த அவனது அத்தனை சொந்தக்காரர்களுக்கும் இது ஒரு உணர்வு ரீதியிலான பிரச்சினையானது. எப்படியாவது ஒருத்தன் மேல வந்துட்டா மற்றவர்களுக்கு நம்பிக்கைக்கான சின்ன ஆதாரமாவது கிடைக்கும் என்று அவர்கள் நம்பியிருக்க வேண்டும். பெற்ற கூலியில் ரகசியமாக ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்களாகக் கொடுத்து வேலனுக்கு உதவினர். மாடு சினை பிடித்தது. அவர்கள் அந்த மாட்டைக் கொண்டாடினர்.
ரத்தினம் அந்த மாட்டுக்கு ரங்குலு என்று என்று பெயர் வைத்திருந்தான். ரங்குலு தாவரங்களை அதிகம் காணாமல் தீவனத்தை மட்டும் தின்று வளர்ந்ததால் அவளுக்கு பச்சைத் தாவரங்களின் மேல் காதல் இருந்தது. ரத்தினம் தினமும் பள்ளியில் இருந்து வரும் வழியில் தாத்தாப் பூச் செடியின் தழைகளை பறித்து வந்து கொடுப்பான். சாப்பிட்டு விட்டு ரத்தினத்தின் முகத்தில் தன் நீண்ட நாவினால் நக்குவாள் ரங்குலு – அந்த சொர சொரப்பு ரத்தினத்துக்கு மிகவும் பிடிக்கும்.
___________________________________________________________________________________________
க்ரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்
“டேய் பய்யா, ரோட்டை ஒழுங்கா பாத்துப் போடா. அத்தினி அவசரமா ஓடிப் போயி ராக்கெட்டா உடப்போறே?” திடீர் ப்ரேக்கால் லேசாக நிலைகுலைந்து சரிந்த சைக்கிளை நிமிர்த்திக் கொண்டே சொன்னார் அவர்.
“ஸாரீங்….” ரத்தினம் சொல்லி விட்டு திரும்பவும் ஓடத் துவங்கினான். ஓட்டத்தின் ஊடாக சாலையோரம் வளர்ந்திருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகளை கை நிறைய பறித்துக் கொண்டான்.
பதினைந்து நிமிட ஓட்டத்தில் ஊர் வந்தது. மூன்று நிமிட நடையில் வளவு வந்தது. பட்டத்தரசியின் குட்டிக் கோயிலைக் கடந்து இடது புறம் திரும்பிய சந்தில் மூன்றாவது வீடு ரத்தினத்தின் வீடு. அவன் அந்தத் சந்தில் திரும்பும் போதே தன் வீட்டின் முன் ஒரு கூட்டம் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். ரங்குலு குட்டி போட்டிருக்க வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான். ஒரு கணம் சந்தோசப்பட்டான் – உடனே கவலைப்பட்டான். இத்தனை பேருக்கும் சீம்பால் போதுமா? நமக்கும் சீம்பால் மீதமிருக்க வேண்டுமே என்று நினைத்தான்.
அங்கே ஒரு சுடுகாட்டின் அமைதி நிலவியது. எல்லார் முகமும் இறுகிப் போயிருந்தது. ரங்கய்யன் தரையில் குந்த வைத்திருந்தார். பூசாரி பெருமாளு நிலத்தை வெறித்துக் கொண்டு நின்றார். ரங்குலு குட்டி போட்டதற்கு இவர்கள் ஏன் சிரிக்காமல் நிற்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டே கூட்டத்தைப் பிளந்து கொண்டு குடிசையை நெருங்கினான் ரத்தினம்.
வீட்டுப் படலை சாய்வாகத் திறந்து கிடந்தது. அதன் உள்ளே ரங்குலுவின் தலை தெரிந்தது. அது தரையில் இருந்தது. கண்கள் திறந்தேயிருந்தது. ரத்தினம் குழப்பத்தோடு படலைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான். ராங்குலு தரையில் கிடந்தாள். கடவாயோரம் ரத்தம் வழிந்து அடர் சிவப்பில் கோடிட்டு இருந்தது. நாக்கு லேசாகத் துருத்திக் கொண்டிருந்தது. அவள் நாக்கைக் கடித்துக் கொண்டிருந்தாள் – முகத்தில் வேதனை இருந்தது. பக்கத்தில் அழகான ஒரு கன்றுக்குட்டியும் கிடந்தது. வெள்ளையில் கருப்புப் புள்ளிகள் நிறைய இருந்தது. இரண்டும் செத்துக் கிடந்தது.
ரத்தினத்தின் கையிலிருந்த தாத்தாப் பூச் செடியின் தழைகள் அனிச்சையாய் தவறிக் கீழே விழுந்தது. அது ரங்குலுவின் மூடாத கண்களை மறைத்துக் கொண்டது. வேலன் கன்றுக்குட்டியின் பக்கத்தில் அமர்ந்திருந்தார். ரத்தினத்தின் அம்மா சின்னமணி ரங்குலுவின் பக்கத்தில் அமர்ந்திருந்தாள்.
பூசாரி பெருமாளு தான் அந்த அமைதியின் மேல் முதல் கல்லைப் போட்டார் – “சரி வேலா.. இன்னும் எத்தினி நேரந்தான் பாத்துட்டே இருக்கறது. ஆக வேண்டிய சோலியப் பாக்கனுமே…”
வேலன் உணர்ச்சியற்ற முகத்தோடு நிமிர்ந்தார். மீண்டும் கன்றுக்குட்டியை நோக்கிக் குணிந்து கொண்டார்.
“மனுசனுகளா இவனுக. செனையா இருக்கற மாடு ஏதோ யாரும் கெவுனிக்காத நேரத்துல ஊர்காரங்க வீதிக்குப் போயிருக்கு. அங்கியே வலிவந்து மாரியாத்தா கோயலுக்குப் பக்கத்துல குட்டிய ஈனியிருக்கு. அதுக்கு என்ன தெரியும் இது வளவு அது ஊருன்னு. இந்த வாயில்லாத சீவனப் போட்டு அடிச்சே கொன்னிருக்கானுகளே… அந்தக் குட்டி என்னா அளகா இருக்கு.. அதக் கூட கொல்லனும்னா இவுனுகளுக்கு எத்தினி கல்லு மனசு இருக்கோனும்.. கன்னிமாரு சாமீ.. உங்களுக்கெல்லாம் கண்ணில்லாமப் போச்சா.. ஆத்தா பட்டத்தரசி… உனக்குக் கூட காதில்லியா… இதக் கேப்பாரே இல்லியா….” கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரற்றினார்.
ரத்தினத்துக்குப் பாதி புரிந்தது. பாதி புரியவில்லை. வேலனின் முகத்தைப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தது. அதிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டேயிருந்தது. தனக்கு இன்று சீம்பால் கிடைக்காது என்பது ரத்தினத்துக்குப் புரிந்தது. ரோட்டுக்கு அந்தப் பக்கம் ரங்குலு குட்டி போட்டு விட்டால் என்ன தவறு என்பது புரியவில்லை. நாளையிலிருந்து தாத்தாப் பூச் செடியை ஆசை ஆசையாய்த் தின்ன ரங்குலு இருக்க மாட்டாள் என்பது புரிந்தது. வளவில் வளர்ந்ததில் ரங்குலு அப்படி என்ன பாவம் செய்தவளாகி விட்டாள் என்பது புரியவில்லை.
பூசாரி பெருமாளு மீண்டும் ஆரம்பித்தார், “எத்தினி நேரத்துக்குப் பாத்துக் கிட்டே நிப்பீங்க. எளவட்டப் பயலுக சேந்து ஆக வேண்டியத பாருங்க” இதைச் சொல்லும் போது அவர் யாருடைய முகத்தையும் பார்ப்பதைத் தவிர்த்தார்.
வேலன் மீண்டும் நிமிர்ந்து பார்த்தான், மீண்டும் தலை கவிழ்ந்தான். இம்முறை அவன் பார்வையில் ஒப்புதல் தெரிந்தது. கூட்டத்திலிருந்து ஒரு நாலு பேர் முன் வந்தார்கள். அதில் ஒருவன் கையில் கசாப்புக் கத்தி இருந்தது. இரண்டு பேர் அந்த அழகான கன்றுக்குட்டியை அள்ளித் தூக்கினர். அதில் ஒருத்தன், “யாராவது போயி இதுக்கு மட்டும் ஒரு குழி தோண்டுங்க” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்
__________________________________________________________________________________________
இரவு.
சிம்னி விளக்கின் வெளிச்சம் அந்தக் குடிசைக்குள் சோகையான ஒரு வெளிச்சத்தை ஏற்படுத்தியிருந்தது. ச்சுருட்டென்று மூக்கை உறிஞ்சிக் கொண்டாள் சின்னமணி. அவள் அடுப்பின் முன் அமர்ந்திருந்தாள். அடுப்பின் மேலே ஒரு ஈயச் சட்டியிருந்தது. அதன் மேல் ஒரு வளைந்து நெளிந்த ஈயத் தட்டு மூடி வைக்கப்பட்டிருந்தது. அதன் இடைவெளியிலிருந்து சின்னச் சின்ன இழைகளாய் ஆவி வெளியேறிக் கொண்டிருந்தது. உள்ளே பங்குக் கறி வெந்து கொதித்துக் கொண்டிருந்தது.
வேலன் அந்தப் பானையையே உறுத்துப் பார்த்துக் கொண்டேயிருந்தார். மாலை அவர் முகத்தில் கப்பியிருந்த சோகம் இப்போதில்லை. ரத்தினத்திற்கு புரியாத ஒரு பார்வையோடு அமர்ந்திருந்தான். பள்ளிக்கூடத்தில் எல்லோரிடமும் சீம்பால் குடிக்கப் போவதாகச் சொல்லியிருந்தான். நாளை எல்லோரும் கேட்பார்கள். அவர்களுக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
சின்னமணி சேலை முந்தியை பானையின் கழுத்தைச் சுற்றி அதைப் பிடித்து பானையை அடுப்பிலிருந்து இறக்கிக் கிளறினாள். எழுந்து வந்து வேலன் முன்பும் ரத்தினத்தின் முன்பும் வட்டில்களைப் போட்டாள். சுடு சோறைப் போட்டு குழம்புப் பானையைக் கிளறி ரத்தினத்திற்கு முதலில் ஊற்றினாள். ரத்தினம், ஆவி அடங்கும் வரை பொறுத்திருந்து விட்டு மேலாகத் தெரிந்ததை கையில் எடுத்துப் பார்த்தான். அது ஈரல் – ரங்குலுவின் ஈரல்.
வேலன் ரத்தினத்தின் தலையை வருடினார். ரங்குலுவையும் அவள் ஈன்ற கன்றையும் ஊர்க்காரர்கள் சேர்ந்து அடித்தே கொன்று போட்டார்கள் என்று வீரய்யன் வந்து சொல்லிச் சென்ற போது மௌனமானவர் அப்போது முதன் முறையாக வாய் திறந்தார் –
“சாப்டு கன்னு. நல்லா சாப்டு. ஈரல் ஒடம்புக்கு நல்லது. சீக்கிரமா நாமெல்லாம் திலுப்பூருக்குப் போயிராங்கன்னு. நானும் அம்மாவும் அங்க கம்பெனிக்கு வேலைக்குப் போயிருவோம். நமக்கு இனிமே பண்ணையம் இல்ல கன்னு. பண்ணையமும் இல்ல பண்ணாட்டும் இல்ல. நாமெல்லாம் இனிமே நல்லா திங்கோனும். நமக்கு இனிமே ஒடம்பு நல்லா வலுவா இருக்கோனும். உன்னோட காலத்திலயும் நாம அடி வாங்கிட்டே இருக்கக் கூடாது. அடிச்சா திருப்பியடிக்க வலுவு வேணுங்கன்னு. உன்னோட காலத்துலயாவது சோத்துக்கு எவங்காலையும் சுத்தக்கூடாது கன்னு. நமக்கெல்லாம் இந்த ஊரே வேண்டாங்கன்னு. தின்னு சாமி. நல்லாத் தின்னு”
சின்னமணி எழுந்து சென்று சிம்னி விளக்கின் திரியைத் தூண்டி வைத்தாள்.