கார்க்கியின் பார்வையில்

எந்திரன்: எல்லோரும் பார்த்து ஆதரிப்போம்…!

சனிக்கிழமை மாலை நன்பன் ஒருவனைப் பார்க்கச் சென்றிருந்தேன். நான் சென்ற நேரமாகப் பார்த்து மொத்த குடும்பமும் தொலைக்காட்சிப் பெட்டிக்குள் எகிறிக் குதித்து விடும் கொலைவெறியோடு எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவே நானும் ஆர்வத்தோடு என்ன நிகழ்ச்சி என்று கவனிக்க ஆரம்பித்தேன். அது எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா. மலேசியாவில் நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நடிகை “ராஜராஜ சோழன் காலத்தில் கப்பல் படையோடு வந்து கேதாரத்தைக் வென்றனர் தமிழர்கள்; இப்போது மீண்டும் மனங்களை வெல்ல எந்திரனாக வந்துள்ளனர்” என்று ஏதேதோ பில்டப் கொடுத்து நிகழ்ச்சியை இனிதே ஆரம்பித்தார்.

தொடர்ந்து மேடைக்கு வந்த நடிகர்களும் இன்னபிற அல்லுசில்லுகளும் தமக்கு பெரிய நகம் இருப்பதையும் சொரிந்து விடுவதில் தமக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்பதையும் எடுத்துக் காட்டியவாறே இருந்தனர். பெரும்பாலும் எல்லோரது பேசு பொருளின் நாயகனும் மேடையின் கீழே பத்தாயிரம் வருடம் வாழ்ந்து வரும் இமயமலை பாபாவிடம் கற்றுக் கொண்ட மோன தவத்தில் அமர்ந்திருந்த ரஜினி தான் என்பதை இங்கே குறிப்பிடத்தேவயில்லை என்றே நினைக்கிறேன். எம்.ஜி.ஆரும் சிவாஜியும் கிழண்டு போன காலத்தில் நடித்த திரைப்படங்களில் தமது சூப்பர் பவர் இமேஜையோ நடிப்புத் திறமையையோ நம்பியதை விட அன்றைக்கு புதிதாய் திரையுலகிற்கு வந்த இளவயது நாயகிகளின் தொடையையும் மார்பையுமே நம்பியிருந்த அதே அவலமான நிலைக்கு ரஜினி காந்தும் வந்து விட்டதை அவ்வப்போது காட்டிய டிரெய்லர் காட்சிகளில் உணர முடிந்தது.

ரஜினியின் வழக்கமான உத்திகளான அரசியல் கண்ணாமூச்சி, பஞ்சு டயலாக் சவடால், தலையைச் சொரியும் கிறுக்குத்தனங்கள் போன்றவை இனிமேல் தனது இரசிகர்களிடம் செல்ப் எடுக்காது என்பதை அவர் உணர்ந்திருக்க வேண்டும். பாபா பட வெளியீட்டு சமயத்தில் ஓவர் டோ சாகிப் போன ஆன்மீகவாதி வேடமும் எருமைக்கு பவுடர் அப்பிய கதையாக பல்லிளிக்க ஆரம்பித்து விட்டதால் அவரது இப்போதைய நம்பிக்கை ஓவர் பில்டப்பும் ஷங்கர் போன்ற பிரம்மாண்டங்களும் தான். ஷங்கரும் லேசுபட்டவரல்ல.. கம்யூட்டரையே சோசியக் கிளியாக்கி விட்ட மக்கள் கூட்டம் தான் தனது டார்கெட் ஆடியன்ஸ் என்பதை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். தொப்பையின் படம் வரைவது, தார் ரோட்டில் பட்டுப்புடவை டிசைன் வரைவது போன்ற உயர்ரக கலாரசனை கொண்டவர். அவரது மூளையில் உதிக்கும் இது போன்ற புதுமையான கற்பனைகளுக்கெல்லாம் கம்யூட்டர் தொழில்நுட்பத்தின் துணை இருக்கும் என்பதை தனியாகச் சொல்லவும் வேண்டுமா என்ன.

இந்தப்படம் இயந்திர மனிதன் சம்பந்தப்பட்டது என்பதை அந்த நிகழ்ச்சியின் மூலமும் முன்னோட்டக் காட்சிகளின் மூலமும் புரிந்து கொள்ள முடிந்தது. ஹாலிவுட் திரைப்படங்களோடு போட்டியிடும் திறமை கொண்டவர் என்று போற்றப்படும் ஷங்கரும், கிழண்டு ஓய்ந்து போன ரஜினியின் இன்றைய பரிதாப நிலையையும் இணைத்துப் பார்த்தால் நிச்சயமாக உலக அழகியோடு ரோபாட் போடும் குத்து டான்சு ஒன்று படத்தில் இடம் பெரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய தேதியில் அஜித் விஜய் போன்ற லுச்சா பயல்களே திரையில் தமது காதலியைப் பார்த்து “நான் நடந்தா அதிரடி, நான் ஆய் போகலைன்னா குசு வெடி” என்று காதல் மொழி பேசும் போது, வைரமுத்து போன்ற வார்த்தை வியாபாரியையும், ஹாலிவுட்டிலேயே தேங்காய் மூடிக் கச்சேரி நடத்தி வந்திருக்கும் ரகுமான் போன்ற ஹைடெக் பாகவதரையும் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? “இவன் பேர் சொன்னதும் நிலவும் தரைதட்டும், அடி அழகே உலகழகே இவன் எந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்” என்கிற காதல் ரசம் சொட்டும் இலக்கியத்தரமான கவிதை வரிகளைக் கேட்க முடிந்தது.

ரொம்ப காசு கொழுப்பு இருக்கிறவனெல்லாம் காதலியைக் கொஞ்சும் போது கூட பில்டப்போட தான் கொஞ்சுவானுக போலிருக்கு. பாவம் அந்தக் காதலிகள். கர்த்தாவே நீர் அவர்களுக்காகவும் மனமிரங்கும்.

விடாது கறுப்பு…!

எல்லா சொரிஞ்ஞர்களும் சொரிந்து முடிந்த பின் கடைசியாக தமிழக முதல்வரும் முத்தமிழ் அறிஞருமான மருத்துவர் கலைஞர் திரையில் தோன்றி வாழ்த்துச் செய்தி வாசித்தார். ஒரே கல்லில் அதிகபட்சம் எத்தனை மாங்காய் அடிக்க முடியும் என்பதை செயல்முறை விளக்கமாகக் காட்டினார். பேரனின் சன்பிக்சர்ஸ் செய்து வரும் செம்மொழிச் சேவையை பாராட்ட வேண்டும், ரஜினியைப் புகழ்ந்து அவரது ரசிகர்களை கவர் செய்ய வேண்டும், ரகுமானைப் புகழ்ந்து அவரது ரசிகர்களையும் கவர வேண்டும், மொத்தமாக தமிழர்களுக்கு குச்சி ஐஸ் விற்க வேண்டும், இத்தனையையும் தாண்டி திராவிட இயக்கத்தின் சமீப காலத்திய அரசியல் பண்பாட்டின் படி ‘கல்யாண வூட்லயும்…..; எளவூட்லயும்…..’ எனும் தத்துவத்தை நிலைநாட்டியாக வேண்டும். ஒரே பந்தில் நாலு சிக்ஸர் அடிக்க வேண்டிய நெருக்கடியான கட்டத்தில் தான் பேட்ஸ்மேன் களத்தில் இறங்கினார்.

ஆரம்ப வாக்கியத்திலேயே அவர் மற்ற சொரிஞ்ஞர்கள் எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதையும் தான் அகம் புறம் எனும் இலக்கிய எல்லைகளில் கரைகண்டவர் என்பதையும் நிறுவிக் காட்டிவிட்டார். புறத்தில் சொரியும் அதே நேரத்தில் அகத்தையும் சொரிந்து விட்டுக் கொள்ள வேண்டும் என்பது தான் அண்ணாவின் இதயத்திடம் இளவல் கற்றுக் கொண்ட அரசியல் ட்யூஷன்.  புரியும் விதமாகச் சொன்னால் ஒரே நேரத்தில் அடுத்தவனைப் பாராட்டியது போலவும் இருக்க வேண்டும் அதே நேரத்தில் தன்னையே பாராட்டிக் கொண்டது போலவும் இருக்க வேண்டும். இப்படியான ஒரு தருணத்தில் அவர் வீசிய கூக்ளி கீழ்கண்ட விதமாக வெளிப்பட்டு தமிழர்களின் விக்கெட்டுகளைச் சாய்த்தது – “ஒரு நாளின் இருபத்து நாலு மணி நேரமும் இயந்திரமாய் உழைக்கும் நான் எந்திரன் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்”

“தமிழர்களே தமிழர்களே.. நீங்கள் மலேசியாவுக்குப் போய் ஒளிந்து கொண்டால் மட்டும் நான் சும்மா விட்டு விடுவேனா அங்கேயும் வந்து ஆட்டையைக் கலைப்பேன்..” என்பது போல் இருந்தது அவர் தொடர்ந்து சொன்ன வாழ்த்துச் செய்தி. ஏற்கனவே அந்த அரங்கில் மாப்பிள்ளையாகவும் பொணமாவும் கொலுவீற்றிருந்த அரைக்கிழத்துக்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்திருக்கும்; ஆனாலும் பத்தாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வரும் பாபா கற்றுக் கொடுத்த யோக சாதனைகளின் தொடர் பயிற்சிகளின் மூலம் அவரது அகத்தின் அழகு முகத்தில் தெரியாத வண்ணம் பார்த்துக் கொண்டார். கஞ்சாவுக்கு இப்படியொரு மருத்துவ குணம் இருக்கிறது எனும் பேருண்மை முந்தாநேற்று தான் எனது சிறு மூளைக்கே எட்டியது.

எல்லோரும் கண்டிப்பாக படத்தைப் பார்க்க வேண்டும்.

படத்தின் பட்ஜெட் நூற்றம்பது கோடி என்றார்கள் சிலர். இருநூறு கோடி என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். வெள்ளையின் மதிப்பு அத்துனையென்றால் கறுப்பின் மதிப்பு எத்தனை இருக்கும் என்பதை யோசித்தால் லேசாகக் கிறுகிறுப்பே ஏற்படுகிறது. நிச்சயமாக இது ஹாலிவுட்டிற்கு கோலிவுட் விடுத்துள்ள சவால் தான். ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் போன்ற ஏப்பை சாப்பைகளெல்லாம் ஷங்கரின் தொழில்நுட்ப அறிவுக்கு முன் இனி பிச்சையெடுக்க வேண்டியது தான். இல்லையா பின்னே நவீன தொழில் நுட்பத்தை வைத்து அவனெல்லாம் பண்டோரா கிரகத்தை தான் உருவாக்கினான் – நம்மாளுக மாதிரி (எந்திரன்) சிட்டி டான்ஸ் எடுக்க முடியுமா? தொப்பைல அந்த தொங்கிப் போன சொங்கியோட மூஞ்சியத்தான் வரைய முடியுமா? என்ன ஒரே குறைன்னா… இந்த விஷயத்துல ஷங்கர் தனது முன்னோடியான இராம. நாராயணனுக்கு ஒரு பாராட்டைத் தெரிவித்திருக்கலாம். என்ன
இருந்தாலும் அம்மனையே கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் குத்து டான்ஸ் ஆட விட்டு ஷங்கருக்கே இந்த விசயத்தில் முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பது அவர் தானே.

இந்தியர்களுக்கும் ஆப்ரிக்கர்களுக்குமான ஏழைகளின் எண்ணிக்கைப் போட்டியில் அதிக மதிப்பெண்கள் எடுக்க வைத்து இந்தியர்களை முதலிடத்துக்கு கொண்டு வந்துள்ள நமது அரசு,
இன்னொரு பக்கம் சீனாவோடு வல்லரசு போட்டியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நமது திரைக்கலைஞர்களோ சீனா போன்ற அல்லுசில்லுகளோடு மோதாமல் டைரக்டாக அமெரிக்க
ஹாலிவுட்டின் மீதே தமது தாக்குதலை தொடுத்துள்ளனர். இந்தப் புனிதமான புனிதப்போரில் ஈடுபட்டுள்ள நமது கலைஞர் பெருமக்களுக்கு நாம் நமது ஆதரவை நல்க வேண்டியது நமக்கான வரலாற்றுக் கடமையாகிறது. எப்படிப் பார்த்தாலும் முதல் ஒரு வாரத்துக்கு ரஜினியின் ரசிகக்கோமுட்டிகளே இந்தத் திருப்பணியை பாலாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிறைவேற்றி விடுவார்கள். ஆனாலும் நூற்றுக்கணக்கான கோடிகளை பிக்பாக்கெட் அடிக்க ஒருவாரமும் ஊருக்குப் பத்து கோமுட்டிப்பயல்களும் மட்டும் அவர்களுக்குப் போதுமானதாக இருக்கும் என்று நான் எண்ணவில்லை.

அவர்கள் வருவார்கள். நம்மிடம் வருவார்கள். ஏன்னா தமிழன் நெத்தியில் தானே தெளிவாக எழுதப்பட்டுள்ளது. அவர்களை நமது வீட்டுக்கே கூட்டி வருவதை விட இலவசமாக் கொடுத்த
டீ.விக்கு வேறு என்ன புடுங்குற வேலை இருக்க முடியும்? நமது ஆதரவை எதிர்பார்த்து நமது வீடுகளுக்கே வரும் அவர்களை நாம் செமத்தையாக ஆதரித்து விடுவோம். நாம் ஆதரிக்கும்
ஆதரிப்பில் இன்னும் ஒரு பத்து வருசத்துக்காவது இந்த படத்தின் சாதனை முறியடிக்கப் பட முடியாததாக இருக்க வேண்டும். வேற எவனுக்கும் இப்படி இருநூறு கோடியில் படம் எடுக்க தில்லு வரவே கூடாது.

எனவே மக்களே.. இப்படி பெரும் பொருட் செலவில் ஹாலிவுட்டுக்கு சவால் விடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கலைப்படைப்பை – திரைக் காவியத்தை – திரை ஓவியத்தை நாம்
கட்டாயமாகப் பார்த்து நமது பர்மா பஜார் வியாபாரிகளின் வாழ்வில் ஒளியேற்றி வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து யாரும் அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் முயற்சியில் இறங்கிவிடாதீர்கள். ஒவ்வொருவரும் தனித்தனியே காசு கொடுத்து வாங்குங்கள் – ஏனென்றால் Piracy kills என்று திரைத்துறை ஜாம்பவான்களே சொல்கிறார்கள். பர்மா பஜார் வியாபாரிகள் ஏற்கனவே பாவம் கடும் தொழில் நசிவையும் காவல்துறை அடக்குமுறையையும் மீறி மக்களுக்காக இப்படி கலைச்சேவை புரிந்து வருகிறார்கள். அவர்களை நாம் ஆதரிப்போம்..!

எந்திரன்…. ஆபாசக் கவுண்ட்Down Starts…. 1,2,3

ஓகஸ்ட் 9, 2010 Posted by | எந்திரன், எந்திரன் பாடல்கள், ஏ.ஆர்.ரஹ்மான், சினிமா, சினிமா விமர்சனம், பதிவர் வட்டம், ரஜினி, ரஜினி காந்த், வடிவேலு, விவேக், வைரமுத்து | , , , , , , , , , , | 37 பின்னூட்டங்கள்

இராவணன் : இராமன் ஜெயித்த கதை..!

ஒரு கலைப் படைப்பு என்பது – கவிதையோ, ஓவியமோ, கதையோ, சினிமாவோ – தன்னுள் பல்வேறு அடுக்களைக் கொண்டதாய் (layers) உள்ளது. வெவ்வேறு அடுக்குகள் ஒன்றன் மீது ஒன்றாய் அடுக்கப்பட்டு பார்வையாளன் முன் ஒரு முழுமையான சித்திரமாய் வைக்கப்படுகிறது. அந்தப் படைப்பு எந்த வர்க்கத்திடம் எந்த சேதியைச் சொல்கிறது என்பதை இந்த அடுக்குகளுக்குள்ளான முரண்பாடுகளில் எந்த அடுக்கு வென்று மேலே துலக்கமாய்த் தெரிகிறது என்பதிலிருந்தே தீர்மானமாகிறது. இதில் கதாசிரியன் அல்லது படைப்பாளியின் பங்கு அவன் எந்த வர்க்கத்தை
சார்ந்தவனாயிருக்கிறான் என்பதைப் பொருத்து அவன் எந்த அடுக்கை முன்நகர்த்திச் செல்கிறான் என்பது தீர்மானிக்கப்படுகிறது. வெவ்வேறு வர்க்கப் பின்புலத்தைக் கொண்டிருக்கும் இரசிகன் அல்லது வாசகன், ஒரு படைப்பைக் காணும் போது அவன் வர்க்கத் தன்மைக்கு ஏற்ற மன எழுச்சியை அடைகிறான்.

இராவணன் படத்தைப் பொருத்தவரை இப்படி நம்மை படம் நெடுக வழிநடத்திச் செல்லும் இழை / அடுக்கு எதுவென்பதைப் பற்றியதே
இவ்விமரிசனம். கதைக்களன் இராமாயனம் என்பது பலவகைகளில் நிருவப்பட்டுள்ளது. பாத்திர அமைப்புகள் மற்றும் பாத்திரங்களின் உடல் மொழி வாயிலாகவே இது வலிந்து திணிக்கப்படுகிறது. மட்டுமல்லாமல், தற்சமயம் மத்திய இந்தியாவில் வளங்களைக் கைப்பற்ற இந்திய அரச
படைகள் பழங்குடியினர் மேல் தொடுத்திருக்கும் போரைத் தொடர்ந்து பொதுவில் வனங்கள், பழங்குடிகள் பற்றி இது வரையில் பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஒரு உயர் பிரிவினருக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்தப் படம் அவர்கள் பற்றி சாடை பேசுகிறது.

படத்தின் பெயர் இராவணன் என்பதாக இருப்பதால் பரவலாக இராவணனை நாயகனாக காட்டியிருக்கிறார்கள் என்று தமிழ் வலைபதிவர்கள் மத்தியில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நுணுக்கமாக அவதானிக்கும் போது இப்படைப்பு இராமனை அவனது சில வரலாற்றுப் பழிகளில் இருந்து காப்பாறி விடவே செய்கிறது. வால்மீகியின் இராமனை முன்பு ஒரு முறை கம்பன் காப்பாற்றினான் – இதோ இந்த இருபத்தோராம் நூற்றாண்டின் சினிமாக் கம்பன் இன்னுமொரு முறை இராமனை செலுலாய்டில் காப்பாற்றியுள்ளான்.

தன் தங்கையை போலீசுக்கு பயந்து கைவிட்ட மாப்பிள்ளையின் கையை வெட்டும் அதே வீரா, தங்கையைக் கற்பழித்த போலீசை உயிரோடு விட்டு
விடுகிறான். எந்தவித ஈவு இரக்கமும் இல்லாத – பழியுணர்ச்சி மிகுந்த – வீரா, சீதை மேல் பெரிய காரணங்கள் ஏதுமின்றி அனுதாபப்படுகிறான். தனது தனிப்பட்ட வாழ்க்கையின் சீரழிவுகளுக்குக் காரணமான போலீசு அதிகாரியின் மனைவின் மேல் அவனுக்கு மோகம் தோன்றுகிறது. கதை
முடிவில் இராவணனிடம் இருந்து சீதையை மீட்டுச் செல்லும் இராமன் சந்தேகம் கொள்கிறான். இந்த இடத்தில் அவனுடைய சந்தேகத்துக்கு புது
விளக்கம் கொடுத்து (‘யாருகிட்டே என்ன சொன்னா எங்கே யாரை தேடிப் போவாங்கன்னு தெரிஞ்சு தானே சொன்னீங்க எஸ்.பி சார்’ என்று
கிளைமேக்ஸில் கூவும் இடம்) ராமனின் யோக்கியதையைக் காப்பாற்றுகிறார். உண்மையில் இராவணன் இராமனை தொங்கு பாலத்தில்
காப்பாற்றவில்லை – இந்த இடத்தில் தான் காப்பாற்றுகிறான். இதே இடத்தில் தான் மணிரத்னமும் இராமனும் ஜெயிக்கிறார்கள் – இராவணன்
பாத்திரமும் படமும் தோற்கிறது.

சூர்பனகையாக வரும் பிரியாமணியின் கற்பழிப்புக் காட்சி பார்வையாளனுக்கு எந்த உறுத்தலும் ஏற்படாத வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா விசயம் கேள்விப்பட்டு ஓடி வந்து பார்க்கும் போது பிரியாமணி ‘எத்தனையோ தடுத்துப் பார்த்தேன் முடியவில்லை – ராத்திரி பூரா பழிவாங்கிட்டானுக’ என்று அழுகிறார். கவனியுங்கள் – ‘பழிவாங்கி’விட்டார்கள். மலைகிராம மக்களின் செயல்கள் ஜெண்டில்மேன் இரசிகர்களுக்கு ஒருவிதமாய் முகச்சுழிப்பு ஏற்படுத்தும் வண்ணம் படமாக்கப்பட்டுள்ளது. வீரா அந்த போலீசுக்காரனை கடத்தி வந்து மொட்டை அடிக்கும் வைபவத்தின் போது உடலெல்லாம் சேறு பூசிக் கொண்டு ‘ஹுவ்வா ஹுவ்வா’ என்று குதியாட்டம் போட்டுக் களிக்கிறார்கள். நியாயமாய் ஆத்திரப்பட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் இப்படி களிவெறியோடு கள்ளை ஊற்றிக் கொண்டும், சேறைப் பூசிக் கொண்டும் குதியாட்டமா போடுவார்கள்? இன்னும் பல்வேறு காட்சிகளிலும் மலைவாசி மக்கள் பற்றி பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் அதே சித்திரத்தைத் தான் ஜூம் பண்ணிக் காட்டுகிறது சந்தோஷ் சிவனின் காமிராக் கண்கள்.

வீரா ஒரு மலைவாசி அல்ல. அவன் மலைப்பகுதியை ஒட்டிய ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கட்டைப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பனின் ஒரு
நகல் வடிவம். வீரா யாருக்கு நல்லவன்? வீரப்பன் யாருக்கு நல்லவனோ அவர்களுக்குத்தான் வீராவும் நல்லவன். வீரப்பனை ஒழித்துக் கட்ட
அரசியல்வாதிகளுக்கு இருந்த நியாயமும் நாம் அவனை மறுப்பதற்குக் கொள்ளும் நியாயமும் வேறு வேறானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வீரப்பன் வாயிலிருந்து அஜீரணமாகி தமிழ்தேசிய ‘சரக்கு’ வழிந்து அதை கேவலப்படுத்தியது. இங்கோ பொருத்தமில்லாத இடத்தில் வீராவின்
வாயிலிருந்து ‘மேட்டுக்குடி’ எனும் வார்த்தை வருகிறது.

கைகள் கட்டிப்போடப்பட்ட நிலையில் ஐசுவரியாவுக்கு சாப்பாடு எடுத்து வருகிறான் வீராவின் அண்ணன். அப்போது ஐஸ்வரியா ‘நான் என்ன நாயா
தூக்கி தூரப் போடுங்கள் இதை’ என்கிறாள் – இது ஒரு சாதாரண சுயமரியாதை சம்பந்தப்பட்ட விசயம். இது மேட்டுக்குடிக்கு மட்டுமே
சொந்தமானதும் இல்லை – அடித்தட்டு மக்களுக்கு சம்பதமில்லாததும் இல்லை. ஆனால் அதைக் கேட்டு ஆத்திரப்படும் பிரபு ‘இது ஒரு மேட்டுக்குடி திமிர்’ என்று அறிவித்து மேட்டுக்குடி திமிரை சுயமரியாதையாக்குகிறார். நம்மிடம் இருந்து அதை அந்நியமாக்குகிறார் – இந்த இடங்களில் தான்
மணிரத்னமும் இராவணன் படமும் பார்வையாளர்களிடமிருந்து அந்நியப்பட்டு நிற்கிறது. எல்லாம் நல்லா இருக்கு ஆனா ஏதோவொன்னு
குறையுதே என்று பார்வையாளர்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள்.

அடுத்து ஒரு கலைப்படைப்பு என்பது அது எழுதப்பட்ட அல்லது வெளிப்பட்ட காலத்தின் சமூக பொருளாதார நிகழ்வுகளோடான தன்னைத்
தொடர்பு படுத்திக் கொள்கிறது. இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் அது அப்போது நடந்த ஆரிய திராவிட போரையும், திராவிடத்தின் மேல் ஆரியம் தனது மேலாதிக்கத்தை நிறுவியதையும் குறியீடாகக் கொண்டிருந்தது. தற்போது அதன் நீட்சியாக மத்திய இந்தியாவில் இராம சைனியமாக
இந்திய அரச படைகள் பழங்குடிகளின் வளங்களின் மேல் பாய்ந்து குதற காத்துக் கொண்டிருக்கும் நிலையும், இராவண சைனியமாக
மாவோயிஸ்டுகள் அதை எதிர்த்து நிற்கும் நிலையும் நிலவும் சூழல்.

தமது வாழ்க்கையில் வனாந்திரங்கள், மலைப்பிரதேசங்கள், அங்கே வாழும் மக்கள் என்று இன்னொரு உலகம் இருப்பதையே உணராத ஒரு
மக்கள் பிரிவு சமீப காலமாய் அவற்றைப் பற்றி படிக்க வேண்டிய ஒரு சூழல் எழுந்துள்ளது. தமது வாழ்வையும் வாழ்வாதாரங்களையும் காத்துக்
கொள்ள மத்திய இந்தியாவின் கோண்டுகளும், சந்தால்களும் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் பின்னே அணிதிரண்டு நிற்கிறார்கள். இதுவும் ஒரு இராமாயணம் தான். அன்று சீதையை நெருப்பாய்ச் சுட்டது பாப்பனியம் இன்றோ பார்ப்பனியமாய் சர்வதேச தரகு முதலாளிகள் அமர்ந்திருக்க, அவர்கள் நலன் காக்கும் ராமனின் பாத்திரத்தை மன்மோகனும், லட்சுமணனின் பாத்திரத்தை சிதம்பரமும், அனுமனின் பாத்திரத்தை சல்வாஜூடும் குண்டர்களும் ஏற்றுக் கிளம்பியுள்ளனர். ஆனால், இந்தக் கதையில் சீதையான இயற்கை வளங்களை இரவணர்களான கோண்டுக்கள் காத்து நிற்கிறார்கள். சீதையை கோண்டுக்களிடம் இருந்து ‘மீட்டு’ பன்னாட்டு தரகு முதலாளிகள் கையில் சேர்த்துவிட இராம சைன்னியம் தண்டகாரன்ய வனத்தை சுற்றி வளைத்து நிற்கிறது. அதை எதிர்த்து இராவண சைன்னியமாய் மாவோயிஸ்டு புரட்சியாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

உலகின் இரண்டாவது பெரிய இராணுவத்தை எதிர்த்து ஒன்றுமில்லாதவர்கள் நிற்கிறார்கள். பெரும் பீரங்கிகளையும் நெருப்பை உமிழும் விமானங்களையும் எதிர்த்து கோண்டுகளின் வில்லாளிகள் நிற்கிறார்கள். நொடிக்கு நூறு ஈயக்குண்டுகளை துப்பும் எந்திரத் துப்பாக்கிகளை எதிர்த்து எத்தனையோ நாள் பட்டினியோடும், பஞ்சடைத்த கண்களோடும் கையில் ஹைதர் காலத்துக் கட்டைத் துப்பாக்கிகளோடும் நிற்கிறது இராவண சைன்னியம். ஜெண்டில்மேன் அலுகோசுகளுக்கு இந்தச் சூத்திரம் புரியவில்லை. அது எப்படி சாத்தியம்? இது என்ன அநியாயம்? ஒரு
சக்தி மிக்க வல்லரசை ஓட்டாண்டிகள் படை இப்படி அலைக்கழிப்பது எப்படி சாத்தியமானது என்று திகைக்கிறார்கள். தமது வாழ்வில் முதன் முறையாய் யார் இந்த கோண்டுக்கள், யாரிந்த காட்டுவாசிகள் என்று கவனிக்கிறார்கள். இராவண சைன்னியத்தின் தாக்குதல் முறைகளும் அவர்கள் இராம சைன்னியத்திடமிருந்து ஆயுதங்களைக் கைப்பற்றிய காதைகளையும் முதலாளித்து பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து எழுதிக் குவிக்கிறார்கள்.

மணிரத்னம் காட்டுவாசிகளுக்கும் போலீசுக்குமான சண்டையைக் காட்டுகிறார். டீசெண்டு போலீசு – இண்டீசெண்டு காட்டுவாசிகள். பெண்ணைக்
கடத்திப் போய் மோகிக்கும் அழுக்குக் காட்டான் வீரா ஒரு கட்டப்பஞ்சாயத்துக்காரன். வீரப்பன் வாயில் தமிழ்தேசியம் ஒழுகுகிறது. எங்கள் ஊர் பக்கத்தில் இதை சாடை பேசுவது என்று சொல்வார்கள். நேராய் பேச துப்பில்லாதவர்கள் செய்யும் கோழைத்தனம். மாடு மேய்த்துத் திரும்பும் மக்களை ‘நம்ம்ம்ம்பி’ போலீசு அனுமதிக்கிறது – அவர்களுக்குள்ளே கலந்து வரும் வீரா கும்பல் அங்கே இருக்கும் இயந்திரத் துப்பாக்கிகளைக்
கொள்ளையடிக்கிறது. வீராவின் கும்பலை படத்தில் காட்டியவரையில் அவர்களிடம் அதிகபட்சம் இருந்த ஆயுதம் ஒரே ஒரு பிஸ்டல். அதுவும்
வீராவிடம் தான் இருந்தது. எனில் இந்த இயந்திரத் துப்பாக்கிக் கொள்ளை ஏன் காட்டப்படுகிறது என்பதை மணி சொல்லாமலே அவரின் ரசிகர்கள்
உணர்ந்து கொள்கிறார்கள்.

போலீசைக் கட்டிவைத்து எரிக்கிறார்கள் மக்கள் – காரண காரியம் ஏதும் சொல்லப்படவில்லை; அப்படியேதும் இல்லாமலே அவர்கள் செய்வார்கள்
என்பது போல் துவங்குகிறது ஆரம்பக் காட்சி. சம்பந்தமேயில்லாமல் தனது தனிப்பட்ட பகையுணர்ச்சிக்கும், கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைக்கும்
‘மேட்டுக்குடி’களோடு பிரச்சினை என்று வீரா பேசுகிறான். அவனோடு வரும் மலைகிராம மக்களோ எந்நேரமும் சேறும் சகதியும் பூசிக் கொண்டு
அலைகிறார்கள். மூங்கில் குடுவைகளில் கள்ளை நிரப்பி ஊற்றிக் கொண்டு ஹுவ்வா ஹுவ்வா என்று குதியாட்டம் போடுகிறார்கள்.

படத்தில் பெண்களுக்கிடையே ஒளிந்து கொண்டு இராவணனை இராமன் சுட்டான் என்பது போல் காட்டியுள்ளதாக சில தமிழ் வலைப்பதிவுகளில்
வாசிக்க நேர்ந்தது. அவர்கள் அறியாமையை நினைத்து சிரித்துக் கொண்டேன். அந்தக் காட்சிகளை அவர்கள் சரியாக கவனிக்கவில்லை. தேவ் (இராமன்) வீராவைக் (இராவணனை) கைது செய்யத் தேடி வருகிறான். அவன் கடமையை செய்ய விடாமல் பெண்கள் அவனைச் சூழ்ந்து
கொள்கிறார்கள். அவன் துப்பாக்கியை எடுத்து வாகாக குறிவைத்து இராவணனை அடிக்கிறான். அதாவது  ரவுடி வீராவை மலை கிராமப் பெண்கள் கேடயமாக நின்று காப்பாற்ற முனைவது போலவும் வேறு வழியில்லாமல் தேவ் பெண்கள் மத்தியிலிருந்து சுடுவது போலவும் தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதிகாச ராவணன் திராவிடர்களின் குறியீடாக இராமாயணத்தில் பயன்படுத்தப்பட்டான் என்பதை பல ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். வீரா எந்த வகையிலும் அந்த மலை கிராமத்து மக்களின் விடுதலைக்கோ மேம்பாட்டுக்கோ போராடியதாக காட்சிகள் இல்லை. என்பதை கணக்கில்
கொண்டால் எஞ்சியிருப்பது இதிகாச இராவணனின் சாயல் அல்ல, சுப்பிரமணியபுரத்திலிருந்து மஞ்சப்பையோடு கிளம்பி வந்த ஒரு பொருக்கிப் பயல் மட்டுமே. இதைத் தான் தற்போது ஏடுகளில் வெளியாகியிருக்கும் மணிரத்னத்தின் பேட்டியும் உறுதிப்படுத்துகிறது. தான் இந்தப் படத்தில்
வீராவின் பாத்திரப் படைப்பின் மூலம் உணர்த்த வந்தது இராவணனையோ இராமாயனத்தையோ அல்ல; இது போன்ற முரட்டு மனிதர்களுக்குள்ளும்
காதல் போன்ற உணர்வுகள் இருக்கும் என்பதையே என்றுள்ளார்.

பின் இராமயண கதைக்களனும், பழங்குடியினர் பின்னணியும் வீராவுக்கு எதற்கு? அது அவர்கள் நியாயத்தைப் பேச அல்ல; அவர்களை இழிவு
படுத்தவே என்பதை வெள்ளித்திரையில் தெளிவாக நிருவியுள்ளார் மணி ரத்னம். கதைக்களனையும் பின்னணியையும் படத்திலிருந்து உருவியெடுத்து விட்டால் மிஞ்சுவது ஒரு கட்டப்பஞ்சாயத்து ரவுடி பற்றிய கதை தான். ஒரு ரவுடியை பொருத்தமில்லாத இடத்தில் உலவவிட்டதில் தான்
மணிரத்னத்தின் அரசியல் அடங்கியிருக்கிறது.

-கார்க்கி

ஜூன் 23, 2010 Posted by | Alppaigal, இராவணன் விமர்சனம், சினிமா விமர்சனம், culture, Films, medias, politics | , , , | 4 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: