மட்டக் குதிரை…!
வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.
“சனியன்…” மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து வந்ததால், உள்ளங்காலின் தோல் இளகி விட்டிருந்தது. செருப்பிலிருந்து எப்போதும் நழுவிக் கொண்டேயிருந்தது. நனைந்து விட்ட ஜட்டியின் பக்கவாட்டு எலாஸ்டிக் வார் ஒரு கூரான கத்தியைப் போல் உள் தொடையின் இடுக்கில் உராய்ந்து உராந்து புண்ணாக்கி விட்டிருந்தது; அவன் கால்களை அகட்டி வைத்து நடந்து கொண்டே பைக்கைத் தள்ள மிக சிரமப்பட்டான்.
நுரையீரல் காரமான சிகரெட்டுப் புகைக்கு மிகவும் ஏங்கியது. மழை நாளின் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஊரே கம்பளியினுள் முடங்கி விட்டிருந்ததால். கடைகளும் கூட கண்கள் மூடித் தூங்கிக் கொண்டிருந்தது. கீழ் வரிசைப் பற்கள் மேல் வரிசைப் பற்களோடு ஒரு கடும் சண்டையைத் துவங்கியிருந்தது. சட்டு சட்டென்று கீழ் வரிசைப் பற்கள் தொடர்ந்து அடித்ததாலோ, இல்லை உச்சந்தலையில் தொடர்ந்து மழைத் துளிகள் இடித்ததாலோ மண்டையின் இரு பக்கமிருந்தும் ஒரு வலி புறப்பட்டு புருவ மத்தியில் சந்தித்து கைகுலுக்கிக் கொண்டது. ஒரு மாதிரி பச்சை நிறத் திரையொன்று கண்களைச் சூழ்வதை உணர்ந்தான். குளிருக்கு இறுகிப் போயிருந்த அடிவயிற்றின் தசைகள் இடது பக்கமாக இழுத்துக் கொண்டது. இன்னும் ஒரு பத்து நிமிடங்கள் தாக்குப் பிடிக்கலாம்; வண்டியை அப்படியே போட்டு விட்டு ஓரமாகப் படுத்து விடலாமா என்று யோசித்தான்… பச்சை நிறம் அடர் பச்சையானது. அதன் அடர்த்தி இன்னும் இன்னும் கூடிக் கொண்டே போய் ஆழமான இருளானது.
“என்ன சொல்றீங்க முரளி? தெரிஞ்சு தான் பேசறீங்களா? இது காலண்டர் இயர் எண்ட் தெரியுமில்லே? இன்னும் இந்த க்வாட்டருக்கான பில்லிங் முடியலை. அதுக்குள்ளே பொண்டாட்டி கூப்பிட்டா.. புள்ளைக்கு ஒடம்பு செரியில்லைன்னு… கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாமெ பேசறீங்க? அதான் இன்னும் நீங்க இப்படியே இருக்கீங்க” இருளின் ஏதோவொரு மூலையிலிருந்து அந்தக் குரல் எழுந்தது.
கீழே குனிந்தான். தரை கண்ணுக்குப் புலப்படவில்லை. இடுப்புக்குக் கீழ் எல்லாமே இருளாய்க் கிடந்தது. மிக அதிசயமாகச் சற்றுத் தொலைவில் ஒரு மெர்குரி விளக்கு சோகையாய் எரிவது புலப்பட்டது. உடலின் எஞ்சிய சக்தியையெல்லாம் திரட்டி வண்டியைத் தள்ளினான். வண்டியின் முன் சக்கரம் விளக்குக் கம்பத்தில் இடிக்கவும் இவன் அதைக் கீழே விட்டு சரியவும் சரியாக இருந்தது.
“ஹேய்.. தோ பாரேன். யாரோ கீழ விழுந்திடாங்க” எங்கிருந்தோ ஒரு கீச்சுக் குரல் கேட்டது.
“அப்பா.. அப்பா எழுந்திருப்பா யாரோ விழுந்திட்டாங்க” இன்னொரு கீச்சுக் குரல் தொடர்ந்து கேட்டது.
பச்சை நிறம் இருளின் மையத்திலிருந்து உற்பத்தியாகி முழுவதும் வியாபித்தது. சின்னச் சின்னக் குமிழாய் உற்பத்தியானது பச்சை. ஒவ்வொரு குமிழும் பெரிதாகி வெடித்தது. கண்களுக்குள் அடர் பச்சையும் இருளும் மாறி மாறி முன்னும் பின்னுமாய் வந்து கொண்டேயிருந்தது.ஏதேதோ சப்தங்கள் இன்ன திசையென்றில்லாமல் எல்லா திசைகளிலிருந்தும் ஈட்டியைப் போல் வந்து கொண்டேயிருந்தது. அந்த ஈட்டிகளின் மூலமும் இலக்கும் ஒன்றேதானோவென்று முரளி குழம்பிப் போனான்.
“அப்பா…எனக்கு எக்ஸ் பாக்ஸ் கேம்ஸ் வேணும்ப்பா..” என்று குழைவாய் ஒன்று..
“இந்தாங்க… ஒங்களைத்தானே… தீபாவளி பர்ச்சேசுக்கு என்னிக்குங்க போலாம்?” என்று கொஞ்சலாய் ஒன்று..
“இதப்பாருங்க.. வீட்டு ஓனரம்மா ரொம்பத்தான் பன்றாங்க; நமக்கே நமக்குன்னு ஒரு புறக்கூண்டாச்சும் பாருங்க”என்று அதட்டலாய் ஒன்று…
“முரளி.. இஃப் யு கான்ட்; ப்ளீஸ் க்விட். ப்ளீஸ் புட் இன் யுவர் பேப்பர்ஸ். நத்திங் மோர் டு ஸே..”என்று மிரட்டலாய்…
“அண்ணே… அவங்க அண்ணி வீட்லேர்ந்து அவரோட அண்ணனுக்கு கார் வாங்கித் தந்திருக்காங்கலாம்” என்று எதிர்பார்ப்போடு…
“யு ஆர் அவுட் டேட்டட் முரளி. ஸாரி டு ஸே திஸ். வீ நீட் சம் யெங் ப்ளட்..” அதட்டலாய்…
“சார் ப்ளீஸ்… ஐ காட் மெனி கமிட்மென்ட்ஸ். ஐ வில் ட்ரை டு கிவ் மை பெஸ்ட்” கெஞ்சலாய்…
“ஓக்கே.. ஸ்பென்ட் சம் எக்ஸ்ட்ரா டைம். புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க. அக்கௌன்டிங் அப்ளிகேஷனை சேப்புக்கு மாத்திருக்கோம். படிங்க. நிறையப் படிங்க. நிறைய தெரிஞ்சுக்கங்க. வீ டோன்ட் சே யூ டோன்ட் வான்ட். பட் வீ நீட் திங்ஸ் டு மூவ்…” கட்டளையாய்…
முரளி ஒரு குதிரை. அப்படித்தான் அவன் தன்னை நினைத்துக் கொண்டான். அவன் ஓட வேண்டும். தங்கைக்காய், மனைவிக்காய், மகனுக்காய், கம்பெனிக்காய்…. உண்பதும் கழிவதும் உறங்குவதும் புணர்வதும் பினங்குவதும் சிரிப்பதும் அழுவதும் கூட ஓட்டத்தின் ஊடாகத்தான். ஓட்டம் வேறு குதிரை வேறல்ல. ஓடாதவொன்றைக் குதிரையல்ல. அவன் அப்படித்தான் நம்பினான். குதிரையின் கடிவாளம் உலகத்தை அதற்கு மறுத்து விடுகிறது. அம்மா, அப்பா, சகோதரி, மனைவி, பிள்ளை, அதிகாரி என்று கணக்கற்ற கடிவாளங்களைக் கட்டியிருந்தான்; அதையொரு வரமென்று நம்பினான்.
குளிர் கொஞ்சம் குறைவது போலிருந்தது. இருளின் நிறம் இப்போது வெளிர் பச்சையானது. மசமசப்பாய் ஏதேதோ உருவங்கள் தோன்றி பக்கவாட்டில் கடிவாளத்தின் மறைப்பில் ஒதுங்குவது தெரிந்தது. ஹோவென்ற கூச்சல் இருபுறமிருந்தும் கேட்டுக் கொண்டேயிருந்தது. வேகமான ஓட்டத்திற்கு ஆரவாரித்தது. வேகம் குறைந்த சமயங்களில் எள்ளலாய் ஒலித்தது. முரளி மிக வேகமாய் ஓட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டான். குடும்பம், சமூகம், கம்பெனி என்று அவன் மேல் மாறி மாறியும் ஒரே நேரத்திலும் சவாரி செய்தார்கள். மறுப்பது பாவம் என்று அவனது சமூகம் அவனுக்கு போதித்தது. காலில் விழுந்தாவது பணி உயர்வு பெற்றுக் கொள்வது கெட்டிக்காரத்தனம்.எவன் காலையாவது வாரி விட்டு மேலே செல்வது புத்திசாலித்தனம். கடன்பட்டாவது கார் வாங்குவது கெட்டிக்காரத்தனம். அவன் சமூகம் அவனது ஓட்டத்தினூடாய் அவனுக்கு நிறைய போதித்தது.
வாழ்க்கைக்காக ஓட்டமில்லை; ஓட்டத்துக்காகவே வாழ்க்கை. வேலை செய்யவே வாழ்கை. தொண்டூழியம் செய்யவே வாழ்க்கை. முதலாளியின் கருணை பாக்கியம். அந்தக் கருணையை சம்பாதிக்க கொல்ல வேண்டுமா கொல்; திருட வேண்டுமா திருடு; பொய் பேச வேண்டுமா பேசு; காலில் விழ வேண்டுமா விழுந்து நக்கு. முரளி ஒரு குதிரை. எதிர்க் கேள்வி கேட்காமல் ஓடுவதற்கென்றே திட்டமிட்டு வளர்க்கப்பட்ட குதிரை. அவன் சமூகம் அதைச் சாமர்த்தியம் என்றது. ‘பெஸ்ட் வொர்க்கர் அவர்டா’ என்று கொண்டாடியது.
அதற்கு அவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த விலை அவன் வாழ்க்கை.
பச்சை நிறத்தின் அடர்த்தி இன்னும் லேசானது. முரளிக்குக் கனவொன்று தோன்றியது. அது ஒரு நல்ல காலை. நிறைய கம்பளிப் புழுக்கள் ஓடிக் கொண்டிருக்கிறத.பெரிய கூட்டம். உலகின் கம்பளிப் புழுக்களெல்லாம் ஒன்றாய் திரண்டு விட்டதைப் போன்றதொரு ப்ரும்மாண்டப் பேரணி அது. வேகம் மிக வேகம். கூட்டத்தின் வேகத்திற்கு இணையாய் ஓடாத புழுக்கள் நசுங்கிச் செத்தன. பிணங்களின் மேல் ஏறிச் சென்றன பின் வந்த புழுக்கள். தனது கூட்டிலிருந்து தலை நீட்டிப் பார்க்கும் பச்சை நிறக் கம்பளிப் புழுவொன்று இன்னெதென்று தெரியாமல் அந்தக் கம்பளிக் கூட்டத்தைத் தொடர்கிறது.எங்கே ஓடுகிறோம்; தெரியவில்லை.ஏன் ஓடுகிறோம்; புரியவில்லை. ஆனாலும் தொடர்ந்தது. அது ஒரு பைத்தியக்காரக் கூட்டம். நீண்ட ஓட்டத்தின் இறுதியில் ஒரு மைதானத்தை அந்தப் பேரணி அடைந்தது.
மைதானத்தின் மத்தியில் ஒரு பெரிய கம்பம் நடப்பட்டிருந்தது. அதன் மேல் எல்லா புழுக்களும் வேகமாய் ஏறிக் கொண்டிருந்தன.எதையோ பிடிக்கப் போகும் வேகம். பச்சை நிறப்புழுவும் அதன் மேல் வெறியோடு ஏறியது. முன்னே சென்ற புழுவைக் கீழே இழுத்துப் போட்டு; பின்னே வரும் புழுவின் தலையில் எட்டி நெம்பி.. சாமர்த்தியம் கொண்ட புழுக்களெல்லாம் அப்படித்தான் ஏறிக் கொண்டிருந்தன. மேலே ஏதோவொன்று இருக்க வேண்டும் என்று எல்லோரும் நம்பினர். நிறைய புழுக்கள் அந்தக் கம்பத்தின் பாதிலேயே பிய்த்தெரியப்பட்டு கீழே விழுந்து செத்துப் போனது.எப்படியோ அடித்துப் பிடித்து உச்சியை அடைந்தது பச்சைப் புழு.
அங்கே கம்பத்தின் உச்சியில்… ஒன்றுமில்லை. வெறுமை. வானம். வெட்டவெளி. வேறெதுவுமில்லை. துணுக்குற்ற பச்சைப் புழு எதைத் தேடி இத்தனை வேகமாய் ஓடினோம் என்று திகைத்து அசைவற்று நின்றது. கம்பத்தின் உச்சியை தொட பின்னாலேயே வந்த அடுத்த புழு தனக்கான இடத்தைப் பிடிக்க, அசைவற்று நின்ற பச்சைப் புழுவை கம்பத்தினின்று இழுத்துக் கீழே எறிந்து விட்டு மேலே வந்தது. கம்பத்தின் உச்சியிலிருந்து கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தது பச்சைப் புழு. பட்டென்று விழித்தான் முரளி.
“அம்மா இங்க பாரேன் இவரு முழிச்சுக் கிட்டாரு” கீச்சுக் குரல். சின்னப் பெண்.எண்ணை காணாத தலை முடி. முரளி மல்லாந்து படுத்திருந்தான். கீழே வழவழப்பான ப்ளாஸ்டிக் கித்தான் விரிக்கப்பட்டிருந்தது. தலைக்கு நேர் மேலே, மூன்றடி உயரத்தில் மரப்பலகையால் அடித்த கூரை தெரிந்தது. பக்கவாட்டில் இருபுறமும் இரண்டிரண்டு சைக்கிள் டயர்கள் தெரிந்தது. முரளி குழம்பினான். சுற்றிலும் தெரிந்த காட்சிகளில் லேசக பச்சை நிறம் ஒரு பாசம் போலப் படிந்திருந்தது. எழுந்து கொள்ள முயன்றான். முடியவில்லை
அது மோட்டார் இணைக்கப்பட்ட ஒரு நான்கு சக்கர சைக்கிள் வண்டி என்பது புரிந்தது. அதன் கீழே ப்ளாஸ்டிக் கித்தான் விரித்து ஒரு சின்னக் குடும்பம் ஒண்டிக் கொண்டிருந்தது. முன் பின் டயர்களின் இடையே வெள்ளை நிற சிமென்டு சாக்குப் பைகளில் துணிமணிகள் நிறைத்து செருகப்பட்டிருந்தது. கால்மாட்டில் ஒரு மண்ணென்னை ஸ்டவ்வும் மிகச் சில ஈயப்பாத்திரங்களும் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இடதில் ஒரு சிருவனும், வலதில் ஒரு சிருமியும் குந்தவைத்திருந்தனர். அந்த வண்டியின் பின்பக்கமிருந்து ஹேன்டில் வரை மேல் புறமாக ஒரு ப்ளாஸ்டிக் கித்தான் மறைத்து நின்றது. முன் சக்கரத்தின் பக்கத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி குறுகி அமர்ந்திருந்தார்.
முன் சக்கரத்தின் இடைவெளியில் கித்தான் கொஞ்சமாகப் பிளந்திருந்தது. அது வாயில். அதன் ஊடாகப் பார்த்த போது முரளியின் பைக் தெரிந்தது. முரளிக்கு இப்போது நினைவு தெளிவானது. கடைசியாக விழுந்த இடத்தின் அருகே இருந்த நடைமேடையின் மேலே நிறுத்தப்பட்டிருந்த பார வண்டியின் கீழே இருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டான். வெளியே ஏதோ பேச்சுக் குரல் கேட்டது.
” என்னா சார் பேசறீங்க. பாரு சார் எத்தினி மழ பேஞ்சிருக்கு. எத்தினி தண்ணி தேங்கிக் கிடக்கு. வண்டி வராது சார்”
“முனுசாமி.. இது ரொம்ப அர்ஜென்டு. இப்பயே லோடு போய்ச் சேரலைன்னா எனக்கு பத்தாயிரம் நட்டமாகும். பத்து வருசமா என் கடைக்கு நீ தான் லோடு அடிக்கிறே. இப்ப வர முடியாதுன்னு தகறாரு பண்ணாத. பின்ன நாளைக்கு நான் வேற வண்டி பாக்க வேண்டி இருக்கும். இப்ப நீ கிராக்கி பண்ணிட்டிருந்தா நாளைக்கு சோத்துல மண்ணு விழும். அவ்வளவு தான் சொல்ல முடியும்”
“சார்.. பொண்டாட்டி புள்ளைங்கள்லாம் வண்டிக்குக் கீழ தான் ஒண்டிக்கிட்டிருக்காங்க இன்னிக்கு. வண்டி இன்னிக்கு ராவுக்கு வராதுன்னா வராது சார். நீ வேற வண்டி பாக்கனும்னா பாத்துக்க. நான் ஒன்னியும் உன்னெ நம்பிப் பொழைக்கல. உன் கட இல்லேன்னா ஊர்ல எனக்கு ஆயிரம் கட இருக்கு. கைல வண்டி இருக்கு. ஒடம்பில தெம்பு இருக்கு.என்னோட சோறு நீ போட்டதில்ல. நான் ஒழைக்கறேன் நான் திங்கறேன். நீ ஒன்னும் எனக்குப் பிச்ச போடலை. மொதல்ல இப்ப எடத்தை காலி பண்ணு.எதுவா இருந்தாலும் காலைல பேசிக்கலாம்.”
தொடர்ந்து கார் இஞ்சின் ஒன்றின் ஆத்திரமான உருமல் கேட்டது. தார்ச் சாலையை ரப்பர் டயர்கள் கீறிப் புறப்படும் ஓசை கேட்டது. முரளியின் கண்களைப் பீடித்திருந்த பச்சை நிறம் சட்டென்று மறைந்து ஒரு வெளிச்சம் பரவியது. பார்வையின் இரு பக்கத்தையும் மறைத்து நின்ற ஏதோவொன்று சட்டென்று விலகியது போல் இருந்தது.
குறிப்பு : இக்கதையின் நாயகன் முரளி இல்லை.