எந்திரன் யாருக்கு சவால் விடுகிறான்?
நேற்றுத்தான் எனக்கு எந்திரனை தரிசிப்பதற்கான பெரும் பேறு வாய்க்கப்பெற்றது. நல்ல பிரிண்ட். நன்றி மலேசியா.
ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன் – ரஜினியின் ரசிகப்பெருமக்களே, உங்களோடு மல்லுக்கட்டுவது இப்பதிவின் நோக்கம் அல்ல அல்ல அல்லவே அல்ல. ஏற்கனவே இப்படத்தின் வியாபார ஏகபோகத்தனத்தை விமர்சித்தும், இப்படத்தை அதிக விலை கொடுத்துப் பார்ப்பதன் பின்னுள்ள வக்கிரம் குறித்தும், ரஜினி என்கிற நமுத்துப் போன பட்டாசை விமர்சித்தும் நிறைய கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டன. அவற்றுள் உங்களுக்காக நான் பரிந்துரைப்பது வினவு கட்டுரைகளை. இன்னொரு பக்கம் ரஜினியின் ரசிகர்களால் படத்தின் இண்டு இடுக்குகள், சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வெளியேறி – “தமிழேன்ண்டா…” பாணி விமர்சனங்களும் வலைப்பூக்களில் நிறையவே இறைந்து கிடக்கிறது. எனவே அந்த எல்லைக்குள் நான் நுழையவேயில்லை. அதற்கு வெளியே இந்தத் திரைப்படம் குறித்து சொல்ல எனக்குச் சில விடயங்கள் உள்ளன. எனினும், எந்திரனை முன்வைத்து எனது உரையாடல் இருக்கப்போவதால், படத்தைப் பற்றிய எனது சுருக்கமான விமர்சனத்தை மட்டுமே வைக்கிறேன்.
நீங்கள் இப்போது கண்களை மூடிக் கொண்டு தமிழ்த் திரைப்படத்தின் கருப்பு வெள்ளை காலத்துக்குச் செல்லுங்கள். விட்டலாச்சார்யாவின் ஒரு திரைப்படம். பெயர்….? ‘பரஞ்சோதியும் பாசக்கார பூதமும்’ என்று வைத்துக் கொள்ளுங்களேன்… சுந்தராபுரி என்கிற ஒரு தேசத்தில் பரஞ்சோதி என்கிற ஒரு நல்லவன் இருக்கிறான். அவன் தான் நம்ம ஹீரோ. அவனிடம் ஒரு பூதம் இருக்கிறது. அது ஒரு நல்ல பூதம். பூத உலகில் இருக்கும் மற்ற குட்டி பூதங்களையெல்லாம் விட சிறந்த பல சக்திகளைக் கொண்ட பூதம். அந்தக் கதையில் வில்லன் ஒரு கெட்ட மந்திரவாதி. அவனிடம் இருக்கும் பூதங்கள் சோப்ளாங்கி ரக பூதங்கள். அவன் எப்படியாவது ஹீரோவிடம் இருக்கும் நல்ல பூதத்தைக் கவர்ந்து விட முயல்கிறான். அதன் வல்லமையை வைத்து தானே அந்த தேசத்தின் அரசனாகி விட நினைக்கிறான். பரஞ்சோதியின் பூதத்தை எப்படியோ ஏமாற்றிக் கவர்ந்து விடும் வில்லன், நாட்டில் பல அக்கிரமங்களைச் செய்யத் துவங்குகிறான். பரஞ்சோதியும் ஏழு மலை, ஏழு கடல் தாண்டி இருக்கும் ஒரு குட்டித் தீவில் ஒரு தங்கக் கூண்டில் வசிக்கும் கிளியின் உடலில் ஒளிந்திருக்கும் கெட்ட மந்திரவாதியின் உயிரை எடுத்து பாசக்கார பூதத்தையும் நாட்டையும் காப்பாற்றுகிறான். அவன் அந்த முயற்சியின் இருக்கும் போது பரஞ்சோதியின் காதலி கெட்ட மந்திரவாதியின் கவனத்தை தன்பால் ஈர்த்து வைத்திருக்க ‘என் மணாளா…… என் கண்ணாளா…ஆஆஆஆ…” என்று ஒரு பாடலைப் பாடி பரதநாட்டியம் ஆடுகிறார்.
நீங்கள் இப்போது ஒரு முப்பதாண்டுகள் முன்னேறி வருகிறீர்கள். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் வருடம். ஈஸ்ட்மென் கலரில் ஒரு ஏவிஎம் திரைப்படம். பெயர்…..? ‘தாயே தெய்வமே’ என்று வைத்துக் கொள்ளுங்களேன். இந்தக் கதையில் ஹீரோ ஜெய்சங்கர் ஒரு யானை வளர்க்கிறார். அது பலம் பொருந்தியது. அது நல்ல பல காரியங்களைச் செய்கிறது. இதில் வில்லனாக வரும் அசோகன், அந்த யானையை எப்படியாவது ஜெய்சங்கரிடம் இருந்து கவர்ந்து அதை ஸ்மக்லிங் (கோல்டு பிஸ்கோத்து) செய்ய வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். நல்லவிதமாகக் கேட்டுப் பார்த்து தராத ஜெய்சங்கரிடம் இருந்து அந்த யானையை எப்படியோ கவர்ந்து விடும் வில்லன், அதை கெட்ட காரியங்களுக்காக பயன்படுத்த ஆரம்பிக்கிறார். ஜெய்சங்கர் சும்மா இருப்பாரா…? வட்டமாக கவ்பாய் தொப்பி மாட்டிக் கொண்டு, முதுகுக்குப் பின்னே இரட்டைக் குழல் துப்பாக்கியும், இடையில் இரண்டு
ரிவால்வரும் பொருத்திய பெல்டையும், மார்புக்குக் குறுக்கே தோட்டா பெல்ட்டையும் வரிந்து கட்டிக் கொண்டு வில்லனைத் தேடி போகிறார். அவருக்க்கு பக்க வாத்தியமாக டைட் பேண்ட் மாட்டிய ஹீரோயினும் பாங்கோ டிரம்ஸுடன் எம்.எஸ்.விஸ்வநாதனும் கூடவே வேறு குதிரைகளில் போகிறார்கள். எம்.எஸ்.வி டிரம்ஸ் வாசிக்க, ஹீரோயின் வில்லன் முன் ஒரு கிளப் டேன்ஸ் ஆடும் சைக்கிள் கேப்பில் யானையை மீட்டுவிடும் ஜெய்சங்கர், வில்லனைக் கொன்று யானையைத் திருத்துகிறார். சுபம்.
போதும் போதும்.. கண்ணைத் திறந்து தொலையுங்கள்.
இப்போது இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு. எந்திரன் விமர்சனம் கீழே –
பரஞ்சோதி = ஜெய்சங்கர் = வசீகரன் (ரஜினி)
பாசக்கார பூதம் = பாசக்கார யானை = பாசக்கார எந்திரன் (சிட்டி)
கெட்ட மந்திரவாதி = கெட்ட அசோகன் = கெட்ட விஞ்ஞானி (வில்லன்)
ஹீரோயின் = ஹீரோயின் = ஹீரோயின் (ஐசுவரியா -அலைஸ் – ஒலக அழகி)
மணாளனே…. = கிளப் டான்ஸ் = அரிமா அரிமா
ஊஊஊ… = டிடும் டடும் குடும் (MSV) = ஷக் திக் ஷக் ஹூக் ஹிக் ஹாஆஆங்ங் (AR.Rahman)
மாடர்ன் தியேட்டர்ஸ் = ஏ.வி.எம் = கலாநிதி மாறன்
விட்டலாச்சார்யா = ஆர்.சுந்தரம் = ஷங்கர்
எந்திரன் விமர்சனம் முற்றிற்று.
வேற எந்த வெங்காயமும் என் கண்களுக்குப் புலப்படாமல் போனதற்கு என் கண்களின் கோளாறே காரணம் என்று சொல்லிக் கொள்கிறேன்.
இந்தத் திரைக்காவியத்தை தமிழ் திரைப்படங்களின் உச்சம் என்றும், ஹாலிவுட்டுக்கே விடுக்கப்பட்ட சவால் என்றும் எழுதப்படும் கட்டுரைகள் சிலவற்றை வாசிக்க நேர்ந்தது. பொதுவில் சாதாரண இரசிகர்களின் கண்ணோட்டமும் அப்படியே இருக்கிறது. அதைப் பற்றித்தான் இந்தப் பதிவு. முதலில் நவீனம், முன்னேற்றம், வளர்ச்சி என்பதை எவ்வாறு நாம் புரிந்து கொள்கிறோம் என்பதில் இருக்கும் கோளாரு தான் இத்திரைப்படத்தின் தொழில் நேர்த்தி நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் மயக்கத்தின் காரணம். கொஞ்சம் நேரம் ஆனாலும் பரவாயில்லை – நாம் இந்த நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கொஞ்சம் அறுத்துப் பார்த்து விட்டு திரும்ப எந்திரனுக்கு வருவோம்.
இந்தியாவில் எதில் நவீனம் இல்லை? எல்லாமே நவீனம் தானே…. விவசாயத்திலிருந்து ஆரம்பிப்போமே. நிலத்தை உழ டிராக்டர். களை புடுங்க மிஷின். கதிர் அறுக்க மிஷின். கதிர் அடிக்க மிஷின். தென்னை மரம் ஏறக்கூட மிஷின் வந்து விட்டதாம். போக்குவரத்து வாகனங்கள் என்று பார்த்தால்… அலுங்காமல் குலுங்காமல் சாலையைத் தழுவிக் கொண்டே ஓடும் வோல்வோ பஸ்கள் வந்தாயிற்று, நெடுஞ்சாலைகளைக் கிழித்துப் பறக்கும் ஹார்லி டேவிட்சன் இருக்கிறது, ஆவ்டி கார்கள், பி.எம்.டபிள்யூ கார்கள்… சரி நம்ம இராணுவத்தைப் பார்ப்போமே.. ஒலியை விட வேகமாய் பறக்கும் நூற்றுக்கணக்கான சுகோய் Su-30 MKI ரக போர் விமானங்கள், ஒலியை விட வேகமாய் பறந்து தாக்கும் ஏவுகணைகள், அணு ஆயுதங்கள், தாக்கி விட்டு ஒளிந்து கொள்ளும் விசேடமான டாங்கிகள், அடுத்த தலைமுறைக்கான யுத்த தளவாடங்கள்…. இன்னும் கணினிகள், மூன்றாம் தலைமுறை அலைவரிசை
சேவைகள், செல்போன்கள், ஜட்டிகள், பனியன்கள்..
இதெல்லாம் நவீனமோ, வளர்ச்சியோ, முன்னேற்றமோ இல்லை என்கிறேன்..
‘அடப் போங்க சார்… இத்தினி இருந்தும்… நீங்க என்னடான்னா இன்னும் பழைய பல்லவியையே பாடறீங்களே..’ என்கிறீர்களா? ஒரே ஒரு கேள்வி. இத்தனை ஆள் அம்பு யானை சேணையெல்லாம் இருக்கே…. அப்புறம் ஏன் பாகிஸ்தான் லொள்ளு பண்ணும் போது திருப்பி அடிக்க முடியாம அமெரிக்கா கிட்ட ஓடுறாங்க? புள்ளியியல் ரீதியில் பார்த்தால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு போர் என்று வந்தால், அது ஆரம்பிப்பதற்கு முன்பே முடிந்து விடுமாம். இந்தியாவின் எண்ணிக்கை பலம் அப்படி. ஆனா முடியலையே… ஏன்? நீங்க என்பதுகளில் வரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதில் வில்லன் ஸ்டைலாக ஒரு சுழல் நாற்காலியில் அமர்ந்து பைப் புகைத்துக் கொண்டிருப்பான். அவன் அடியாட்கள் எல்லாம் பார்த்தீர்கள் என்றால் பாடிபில்டர்களாக இருப்பார்கள். பயில்வான் தான்.. வஸ்தாது தான்… எல்லாம் தெரியும் தான்… ஆனா சுயமா அடிக்க முடியாதே…. அது தான் இந்தியா.
ஆக, கருவிகளில் வரும் மாற்றங்களைக் கொண்டு மட்டும் நவீனத்தையும் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் அளவிடுதாக இருந்தால் இந்தியா வஸ்தாது தான் – எந்திரன் ஹாலிவுட்டுக்கு
சவால் தான். ஆனால், அந்த மாற்றத்தை எந்தவகையில் பயன்படுத்துகிறோம், அது நம் சிந்தனையில் எவ்வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது, கருவிகளிலான (தொழில்நுட்பம்) மாற்றம் வாழ்நிலையில் எவ்வாறான மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது என்பதையும் சேர்த்துப் பார்த்தால் தான் நமக்கு முழு சித்திரமும் கிடைக்கும். கணினிகளை ஜோதிடம் பார்க்கவும், வேறு ஒரு நாட்டுக்கு கணக்கெழுதித் தரவும் மட்டும் பயன்படுத்தி விட்டு என் கிட்டயும் கம்ப்யூட்டர் இருக்கு அதனால நானும் ரவுடி தான் என்றால் என்ன அர்த்தம்? அப்படித்தான் நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
ஒரு நவீன ஹாலிவுட் திரைப்படத்தில் இருக்கும் அத்தனை தொழில்நுட்பங்களும் எந்திரனிலும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு இரண்டு ஹாலிவுட் படங்களைப் பார்ப்போம்.
2004ம் ஆண்டு வெளியான ஐ.ரோபாட் மற்றும் 2009ம் ஆண்டு வெளியான சர்ரோகேட்ஸ். இரண்டிலும் மனிதனுக்கும் இயந்திரப் பயன்பாட்டிற்கும் இடையில் எழும் முரண்பாட்டை
பிரதானமாய்க் கையாளுகிறார்கள். மனிதனுக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்படும் இயந்திரங்கள் ஒரு கட்டத்தில் சிந்திக்கும் திறனையும் பெற்று ஆதிக்க நிலையை அடைகிறது.
இயல்பான வாழ்க்கைக்குத் திரும்பும் மனித வேட்கைக்கும் அதை அனுமதிக்க மறுக்கும் இயந்திரங்களுக்கும் இடையே நிகழும் முரண்பாட்டைக் காணலாம். இவ்விரு திரைப்படங்களும்
கூட அமெரிக்க மசாலாத்தனம் கொண்ட வணிகக் குப்பைகள் தான். அதிலும், அவர்கள் குறிவைக்கும் வணிக இலக்கு என்பது எந்நேரமும் அச்சத்திலிருக்கும் சராசரி அமெரிக்கர்களின் உளவியல்.
அமெரிக்கர்களின் இந்த அச்சத்தின் வெளிப்பாடுகளை அவர்களது வெகுசன வணிக சினிமாக்களில் காணலாம். ஒரு பல்லி திடீர் என்று பெரிதாகி ஊருக்குள் புகுந்து விடுவது (கோட்ஸில்லா) , ஒரு பழங்காலப் பிராணி திடீரென்று உயிர்பெற்று ஊருக்குள் புகுந்து விடுவது (ஜுராசிக் பார்க்).. அயல்கிரகத்து மனிதர்கள், வினோதமான பூச்சிகள், வினோதமான கடல் உயிரினங்கள்… என்று அம்புலிமாமா தரத்திலான கற்பனையில் கொஞ்சம் தொழில்நுட்பத்தைக் கலந்தால் ஒரு பாக்ஸ் ஆபிஸ் ப்ளாக் பஸ்ட்டர் தயார். இந்த வணிக சினிமா சூத்திரத்தினுள்ளும் கூட அவர்கள் தமது மக்கள் வாழ்வின் மேல் கொண்டிருக்கும் அச்சத்தையே அச்சாரமாகக் கொண்டு சிந்திக்கிறார்கள். ஆனால் எந்திரன் ஒரு சராசரி இந்தியனின் பாமரத்தனமான கற்பனையளவுக்குக் கூட – அதாவது ஒரு கந்தசாமியின் அளவுக்குக் கூட – கதைக்களனுக்காக மெனக்கெடவில்லை. அப்படியே விட்டலாச்சார்யாவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் கொண்டு வந்துள்ளார்கள்.
கல்லூரி நாட்களில் சில நண்பர்கள் கோல்டு பிளேக் கிங்ஸ் பாக்கெட்டினுள் துண்டு பீடியை வைத்துக் கொண்டு சீன் போடுவார்கள் – அதன் வெள்ளித்திரை வடிவம் தான் எந்திரன்.
ஒரு டெரா பைட் வேகமும் ஒரு ஸெட்டா பைட் நினைவுத் திறனும் கொண்ட எந்திரன் என்ன செய்கிறான்? மருதாணி வைக்கிறான். ஸ்டைலாக நடந்து தன் இடுப்பில் கைவைக்கிறான். நாயகியைக் காப்பாற்ற பொறுக்கிகளின் மூஞ்சியில் கை வைக்கிறான். பாட்டுப்பாடி பரதநாட்டியம் ஆடுகிறான். கருநாடக சங்கீதம் பாடுகிறான். மருத்துவச்சி வேலை செய்கிறான். மொத்தத்தில் முதல் பாதியில் எந்திரன் மயிலாப்பூருக்கும் நங்கநல்லூருக்கும் இடையில் அலைந்து கொண்டிருக்கிறான். இரண்டாவது பாதியில் நிறைய பேரைக் கொல்கிறான், ஹீரோவின் டாவு மேலேயே கண் வைக்கிறான். இந்த ரெண்டாவது காரணம் ஒன்று போதாதா? ஒரு மருவை ஒட்டிக் கொண்டு வில்லனின் கோட்டையில் புகும் ஹீரோ, நாயகியை வில்லன் முன் டான்ஸ் ஆட வைத்து அந்த கேப்பில் ஜெயித்து விடுகிறான்.
இது தான் ஹாலிவுட் தர கற்பனையா? இதே இருநூற்றம்பது கோடியைத் தூக்கி இராம நாராயணனிடம் கொடுத்திருந்தால் இதைவிட அருமையான ஒரு படத்தை எடுத்திருப்பார்.
எனக்கு ஹாலிவுட் திரைப்படமான அவதார் நினைவுக்கு வந்தது. அதில் தொழில்நுட்பத்தின் மேண்மைக்கும் அதன் உருவாக்க நேர்த்திக்கும் கிடைத்த பாராட்டு என்பது அது எப்படி எதன் மேல் கையாளப்பட்டது என்பதைக் கொண்டே கிடைத்தது. அது ஒரு அந்நிய தேச திரைப்படம் தான். ஒரு அமெரிக்க வெள்ளையரின் கற்பனை தான். ஆனாலும் கூட அது நம்மிடம் ஏதோவொன்றைச் சொன்னது. நமது சமகாலத்தின் நிகழ்வுகளின் மீதான நமது கோபத்தை அது மீட்டியது. வெவ்வேறு நாடுகளையும் இனங்களையும் சேர்ந்த மக்கள் தங்களை அந்த கிராபிக்ஸ் பொம்மைகளிடம் கண்டார்கள். இன்காக்கள், மாயன்கள், ஆப்ரிக்கக் கருப்பர்கள் தொடங்கி இன்றைய கோண்டுக்கள் வரையிலான பூர்வகுடி மக்களை பண்டோரா கிரகத்து மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவதாரின் வடிவம் அதன் உள்ளடக்கத்திற்கு உட்பட்டு நின்றது – துருத்திக் கொண்டிருக்கவில்லை.
நம்மிடமும் கணினிகள் இருக்கிறது தான். அது கணினியின் வேலையைச் செய்யவில்லை – கிளியின் வேலையைச் செய்கிறது
அன்றைக்கு ஆர்.எஸ் மனோகரிடம் தொழில் நுட்பம் இருந்தது. எம்.ஆர்.ராதாவிடம் அது இல்லை – அதைவிட ஆயிரம் மடங்கு வீரியமான நவீனமான சிந்தனை இருந்தது. இன்று ஆர்.எஸ் மனோகராக ஷங்கர் இருக்கிறார்.. ஆனால் ஒரு எம்.ஆர்.ராதா இல்லை. அப்படி ஒருவர் தோன்றுவதற்கான வாய்ப்புகளை சன் குழுமத்தின் வியாபார ஏகபோகம் ஏறத்தாழ ஒழித்துக் கட்டிவிட்டது என்றே சொல்லலாம்.
– to be contd….