கார்க்கியின் பார்வையில்

சண்முகத்தின் கதை..!

“நாயைக் கழுவி நடு வீட்டில வச்சாலும் அது நரகலைத் தான் தேடும்னு சொல்றது சரியாப் போச்சே” சரோஜா கோபாவேசத்தில் கத்தினாள்.

“ஏண்டி உன் ஜாதி என்ன அவன் ஜாதி என்ன. அவனோட போயி… எப்படிடீ.. ச்சீய். சொல்லவே நாக் கூசுது” சரோஜாவின் கோப இலக்கான சுசி பரிதாபமாய் விழித்துக் கொண்டிருந்தாள்.

“என்னாங்க.. இவ இனிமே நமக்கு வேணாங்க. தொலைச்சி தல முழுகிடலாம். கொண்டு போய் எங்கியாவது விட்டிருங்க. இல்லன்னா விஷம் வச்சிக் கொன்னுடலாம். என்னாங்க.. ஒங்களத்தான். நான் பாட்டுக்கு பேசிட்டேயிருக்கேன்.. நீங்க பேப்பர படிச்சிட்டு இருக்கீங்க”

“சரோ.. இப்ப என்ன ஊருல நாட்டுல நடக்காதது நடந்து போச்சி. வேணும்னா நான் டாக்டர் கிட்டே கூட்டிப் போய் அபார்ஷன் எதுனா பண்ண முடியுமான்னு பாக்கறேன். அதுக்கு ஏன் கொல்லனும்னு எல்லாம் யோசிக்கறே” சண்முகத்திற்கு தர்ம சங்கடமாய் இருந்தது.

“முடியவே முடியாது. என் மானமே போச்சி. இனிமே பக்கத்து வீட்டுக்காரி என்ன எப்படியெல்லாம் சாடை பேசப் போறான்னு உங்களுக்குப் புரியாது. இந்த அவமானத்துக்கு இவள கொன்னுடலாம். போங்க போயி எதுனா விஷம் வாங்கிட்டு வாங்க” சரோஜா யாரும் சொல்லிக் கேட்கும் நிலையைக் கடந்து விட்டாள்.

“பாவம் சரோ.. நாமே சோறு போட்டு வளர்த்துட்டு எப்படி கொல்ல மனசு வரும். வேணும்னா இவள கொண்டு போய் புளூ கிராஸ் கிட்டே குடுத்துடுவோமா?”

“அது என்ன புளூ கிராசோ என்ன எழவோ. இவ இனிமே இங்க இருக்கக் கூடாது அவ்வளவு தான் சொல்லிட்டேன்” கறாராக பேசி விட்டு வெடுக்கென திரும்பிச் சென்று விட்டாள்.

சண்முகத்தை சுசி பரிதாபமாய் பார்த்தாள். காலையில் வந்திருக்க வேண்டிய பிஸ்கட் ஏன் இன்னும் வரவில்லை என்று சுசிக்கு இன்னும் புரியவில்லை. அவரவர்க்கு அவரவர் கவலை என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். தினத் தந்தியின் பக்கங்களைப் புரட்டினான். “ஆச வச்ச பொண்ணு மேல பாசம் வச்சி மோசம் போன மனமே….” ஆண்டியார் பாடிக் கொண்டிருந்தார். ஞாயிற்றுக் கிழமையாவது இந்தாளுக்கு லீவு கொடுக்க மாட்டாங்களா என்று தோன்றியது.

கடுப்பாக பேப்பரை மடக்கி ஓரத்தில் போட்டான். எப்.எம் ரேடியோவில் தனுஷ் உருகிக் கொண்டிருந்தார் – “தேவதையைக் கண்டேன் காதலில் விழுந்தேன்..”

‘காதலில் எங்கே விழுந்தேன். கக்கூசில் தான் விழுந்தேன்’ என்று சண்முகம் நினைத்துக் கொண்டான். இந்த தேவதைகள் எல்லோரும் சூனியக்காரிகளாக மாறும் தருணம் எது என்று சண்முகம் யோசித்துப் பார்த்தான். சரோஜாவும் அவனுக்கு ஒரு தேவதையாகத் தெரிந்த நாட்கள் நினைவிலாடியது.

“என்னாங்க.. ஒங்களத்தான். இங்க பாருங்களேன்” சண்முகம் அப்போது தான் கம்பெனியில் இருந்து வந்திருந்தான். அந்த நேரத்தில் அவனை யாரும் தொந்திரவு செய்வதை அவன் விரும்புவதேயில்லை. கம்பெனியில் இருந்து வீட்டுக்கு வந்து ஈசி சேரில் சாய்ந்ததும் ஒரு ஆழமான மயக்க நிலைக்குப் போய்விடுவான். அந்த முப்பது நிமிடங்களில் கடவுளே வரம் கொடுக்க வருகிறேன் என்று சொன்னாலும் கூட ‘போய்ட்டு அப்புறம் வாய்யா’ என்று சொல்லி விடுவான். அன்றைக்கு முழுவதும் அவன் வாங்கிய திட்டுகள், பெற்ற அவமானங்களை, அடைந்த சிறுமைகளை மெல்ல அசைபோட்டு மூளையின் இண்டு இடுக்குகளில் இருந்து வெளியேற்றும் நேரம் அது.

“அட.. நான் கூப்பிடறது காதில் விழாதா ஒங்களுக்கு. இங்க பாருங்கன்னா” சரோ குழைந்தாள்.

“என்னம்மா” போடி என்று உதறிவிட சரோ என்ன கடவுளா.. காதலியாயிற்றே.

“நம்ம பக்கத்து வீட்டுல பூங்கொடியில்ல.. அவங்க வீட்ல புதுசா ஏ.சி போட்டிருக்காங்க. ஸ்பிளிட் ஏசியாம். ஒன்ர டன்னாம். வீடே ச்சில்லுன்னு எப்படி இருக்கு தெரியுமா. நாமளும் ஒன்னு வாங்கலாங்க..” ஈசி சேரின் வலது கையில் முட்டாக்கு போட்டுக் கொண்டே சொன்னாள்.

“நம்ம வீட்டுக்குப் பின்னாடி தான் ரெண்டு வேப்ப மரம் இருக்கே சரோ. நல்ல காத்தோட்டமான வீடும்மா.. இயற்கையான காத்து இருக்கும் போது நமக்கு எதுக்கும்மா ஏ.சியெல்லாம்” கண்ணை மூடிக் கொண்டே சொன்னான் சண்முகம்.

“……”

“சரோ…..” பதில் இல்லையென்றதும் கண்னைத் திறந்து பார்த்தான்.

சரோ பக்கத்திலில்லை. உள்ளே பாத்திரங்கள் உருளும் சப்தம் மட்டும் கேட்டது. அன்று தான் ஒரு தேவதை சூனியக்காரியாக மாறத் துவங்கியதன் முதல் அறிகுறியைக் கண்டான். மூன்று நாட்கள் பேச்சுவார்த்தையில்லை. அன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு இரவும் ஒரு யுகமாக கழிந்தது. நான்காம் நாள் காலை சண்முகம் மொத்தமாக சரண்டராகி தன் தோல்வியை ஒப்புக் கொண்டான்.

“சரோ..”

“…..”

“கிளம்பும்மா.. பஜாருக்கு போயி ஏ.சி என்னா விலை என்ன விவரம்னு கேட்டுட்டு வருவோம்”

இருபத்திரெண்டாயிரம் பி.எப் லோன் போட்டு ஒரே வாரத்தில் வீட்டில் ஏ.சி மாட்டப்பட்டது. சரோ சண்முகத்தைக் கொண்டாடினாள். அவன் முன்னயே உறவுகளுக்கு போன் போட்டு கணவனின் அக்கறையை பிரஸ்தாபித்தாள் – கூடவே தான் ஏ.சி வாங்கியதையும். உறவுகள் இவர்களைப் பார்த்து பொறாமைப்பட்டனர். அதற்குத்தானே உறவுகள்? நம்மைப் பார்த்து யாரேனும் பொறாமைப்பட்டுக் கொண்டேயிருந்தால் தானே நாம்
வெற்றி பெற்றுள்ளோம் என்பதே உறுதியாகிறது என்றெல்லம் சண்முகம் நினைத்துக் கொண்டான். ஏ.சியின் ரீங்காரம் ஒரு சங்கீதமாய் ஒலித்தது – அடுத்த மாத கரண்டு பில் வரும் வரையில்.

“யெப்பா… யெப்பா… சீனு மாமா வந்துத்தாங்க.. மித்தாய் குதுத்தாங்க” பாலு கையில் சாக்லெட்டோ டு உள்ளே ஓடிவந்து சண்முகத்தை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான். பாலுவின் பின்னாலேயே சீனு. இருபத்தைந்து வருட நட்பு. பள்ளி நாட்களிலிருந்து மாறாத அதே சிரிப்போடு வந்தான்.

“யேய்.. என்னடா லீவு நாள்ல சினிமா கினிமான்னு பொண்டாட்டியோட சுத்தாம பேஸ்த் அடிச்சா மாதிரி ஒக்காந்துருக்கே” இவனுக்கு வாயில் மட்டும் வாஸ்து சரியாய் இல்லை.

“டேய்.. மொதல்ல நீ அடக்கி வாசி. அவ காதுல கீதுல உளுந்துடப் போகுது” சண்முகம் ஒருமுறை அவஸ்தையோடு உள்ளே திரும்பிப் பார்த்துக் கொண்டான்.

“சரி சொல்லு எதுக்கு மிஸ்டு கால் குடுத்தே. நாலு வீடு தள்ளி தானே இருக்கேன். எழுந்து வர வேண்டியது தானே”

“அது… ஒரு சின்ன பிரச்சினைடா”

“என்ன திரும்ப சிஸ்டர் எதுனா வாங்கிக் குடுக்க சொல்றாங்களா”

“இல்லடா.. சுசிய கொல்லனுமாம்”

“ஏன்.. நாலு மாசம் முன்னே தான ஆசையா வாங்கிட்டு வந்தே? இவ்வளவு முடியோட பொமரேனியன் நாய் கிடைக்கறது கஸ்டம்டா. எங்க வீட்ல நாய் பூனையெல்லாம் புடிக்காது, இல்லன்னா நானே எடுத்துட்டு போய்டுவேன். இப்ப அதோட என்ன தகறாரு?”

“அது வந்து மச்சி….” சண்முகத்துக்கு எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. காரணமும் அப்படி சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கவுரவமானதில்லை என்பதால் தர்மசங்கடத்துடன் நெளிந்தான்.

“என்ன.. யாரையாவது கடிச்சிடுச்சா”

“ச்சே ச்சே.. அதில்ல.. அது வந்து.. எதிர் வீட்ல ஒரு நாட்டு நாய் இருக்கில்லே அதோட மேட்டிங் ஆய்டிச்சி போல. இப்ப ப்ரெக்னெண்டா இருக்கு” ஒரு வழியாக இழுத்து இழுத்து சொல்லி முடித்தான்.

“அது நல்லது தானடா.. இப்படி கிராஸ் ஆனா குட்டிங்க வித்யாசமா, அழகா பிறக்குமே. அதில என்ன பிரச்சினை”

“அது தாண்டா பிரச்சினையே. சரோவுக்கு அது பிடிக்கலை. அது நாட்டு நாயி, சுசி பொமரேனியன்; ஒசந்த சாதி. அதுவும் இல்லாம பக்கத்து வீட்டுக்காரி ஏதோ அசிங்கமா சொல்லிட்டாளாம். அது தான் இப்ப இதை தொலைச்சே ஆகனும்னு தலைகீழா நிக்கறா”

“கஷ்டம்டா.. நாய் கிட்டே கூடவா சாதியெல்லாம் பாப்பாங்க? சரி, இப்ப என்ன செய்யப் போறே. கொல்லப் போறியா” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டான்

“இல்ல கொல்ற ஐடியா எனக்கில்ல… ஆனா இந்த புளூ கிராஸ் ஆளுங்க கிட்ட கொடுத்துட்டா என்னான்னு யோசிக்கறேன். ஒங்க ஆபீஸ் பக்கத்துல தானே அவங்களோட ஆபீஸ் இருக்கு – அதான் ஒன்ன கூப்டேன்”

“ம்.. இந்த மாதிரியெல்லாம் அவங்க வாங்கிப்பாங்களான்னு தெரியலையேடா. சரி.. நீயே கூட வா ஒரு எட்டு போய் கேட்டுட்டே வந்துடலாம்” சொல்லிக் கொண்டே சீனு எழுந்தான்.

“என்னாங்க.. போகும் போது அப்படியே இந்த சனியனையும் எடுத்துட்டுப் போயிருங்க. அவங்க வாங்கிக்கிடலைன்னா எங்கியாவது கண் காணாம விட்டுட்டு வந்துருங்க” சரோவின் அசரீரி கேட்டது. உள்ளேயிருந்தபடியே பேச்சு முழுவதையும் கவனித்திருக்கிறாள்.

சீனுவின் பைக் நிதானமான வேகத்தில் ஊர்ந்தது. சண்முகத்தின் கையில் சுசி சந்தொஷமாய் திமிரிக் கொண்டிருந்தது. அவள் தன்னை எங்கோ அழைத்துப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். சண்முகத்திற்கு மனம் லேசாய் கணத்தது; நினைவுகள் மீண்டும் பின்னோக்கிச் சென்றது. ஏ.சி விசயத்தில் தாழ்ந்து போனது தான் அதைத் தொட்டு வந்த மற்ற எல்லா பிரச்சினைக்கும் காரணம் என்று சண்முகம் நினைத்துக் கொண்டான்.

“என்னாங்க.. பூங்கொடி அக்கா வீட்ல புதுசா ஒரு பிரிட்ஜ் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. லதா மாமி வீட்ல புதுசா ஒரு சி.டி பிளேயர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. மேரி ஆண்ட்டி வீட்ல புதுசா ஒரு டேபிள் டாப் வெட்கிரைண்டர் வாங்கியிருக்காங்க”

“என்னாங்க.. பின்னாடி வீட்ல புதுசா ஒரு வாசிங் மிசீன் வாங்கியிருக்காங்க”

மாதத் தவனைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வரவும் செலவும் ‘நீ முந்தி நான் முந்தி’ என்று ஒன்றோடு ஒன்று குத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. சண்முகம் கவலைப் பட ஆரம்பித்தான். ஒருநாள் தெருமுனை டீ கடையில் பூங்கொடி அக்கா புதிதாக ஒரு கள்ளப் புருசனை பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்று பொரணி பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்ததும் அரண்டே போய் விட்டான். லேசான நடுக்கத்தோடு வீட்டுக்கு வந்த போது பாலு வீர் வீரென்று கதறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. வேகமாக உள்ளே ஓடினான் –

“இந்தாங்க.. இந்த மானக் கேட்டுக்கு நான் எங்கம்மா வீட்டுக்கே போயிருவேன்” சரோ அடித் தொண்டையிலிருந்து கத்தினாள் “சனியனே.. உன்ன இப்ப என்ன கொன்னா போட்டேன்.. ஏன் கத்தறே” பாலுவுக்கு இன்னொன்று முதுகில் கிடைத்தது.

“இப்ப என்ன நடந்துச்சி. நீ ஏண்டி குழந்தைய கை நீட்டறே… ஒங்கம்மா வீட்டுக்கு போவனும்னா மொதொ வேலையா அடுத்த பஸ்ஸ புடிச்சி போய்த் தொலை. இன்னொரு வாட்டி கை நீட்ற வேலை வச்சிக்கிட்டே…” சண்முகம் கல்யாணம் நடந்து ஐந்தாண்டுகளுக்குப் பின் முதல் முறையாக ஆத்திரப்பட்டான்.

“ஓஹோ அந்தளவுக்கு போயாச்சா.. எங்க வீட்ல நான் பொழச்ச பொழப்புக்கு உன்னிய மாதிரி ஒரு தரித்திரம் பிடிச்ச ஓட்டாண்டிய நம்பி வந்தேம் பாரு.. என்னச் சொல்லனும். நீ தானேய்யா எம் பின்னாடியே அலைஞ்சே.. நான் பேசாம சாகப் போறேன்..” சொல்லிக் கொண்டே அவள் உள்ளறையை நோக்கி ஓடவும் சண்முகத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது. பின்னாடியே ஓடினான்.. கையைப் பிடித்தான்.. காலைப் பிடித்தான்.. அழுதான்.. மீண்டும் மொத்தமாக சரண்டராகி தற்காலிகமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொண்டான்.

பின்னர் இரவு பாலு உறங்கிய பின் மெதுவாக விபரம் என்னவென்று கேவல்களுக்கு இடையில் சரோ விவரித்தாள். பூங்கொடி வீட்டில் ஒரு பொமரேனியன் நாய் வாங்கியிருக்கிறார்களாம். பாலு அதோடு விளையாடச் சென்றானாம். அதற்கு பூங்கொடி ஏதோ சொல்லி விட்டாளாம்.

வேறென்ன அடுத்த மூன்றாவது நாள் – அதே இனத்தைச் சேர்ந்த, அதே நிறம் கொண்ட, அதே உயரம் கொண்ட ஒரு நாயை மூவாயிரம் அழுது வாங்கி வந்தான் சண்முகம். அதன் பின்னங்காலைத் தூக்கிப் பார்த்த சுசி ‘அய்யே.. பொட்ட நாயா’ என்றாள். பின்னர் என்ன நினைத்தாளோ ‘பரவால்ல இருக்கட்டும்.. இதுக்கு சுசின்னு பேரு வைக்கலாங்க’ என்றாள் ஆசையாக.

சண்முகத்துக்கு ஆரம்பத்திலிருந்தே சுசியைப் பிடிக்கவில்லை. அது காலை நக்கும் போதும், தன் முன்னே குழைந்து நிற்கும் போதும், சாப்பாட்டு நேரத்தில் ஏங்கிப் பார்க்கும் போதும், விரட்டி விட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் போதும்.. எனப் பல சந்தர்பங்களில் சுசியைத் தனது பிரதி பிம்பமாகவே அவனால் உணர முடிந்தது. அவன் கம்பெனியில் செய்து கொண்டிருப்பதை இங்கே சுசி செய்து
கொண்டிருப்பதாகவே அவன் கருதினான். அந்த அடிமைத்தனத்தை சண்முகத்தால் இரசிக்க முடிந்ததேயில்லை. ஆனால் அவனுக்கு சுசியின் மேல் ஒரு பரிதாபம் இருந்தது. அது ஒரு சக அடிமையின் மேல் ஏற்படும் பரிதாபம்.

“சர்க்க்..” சீனு வண்டியைக் க்ரீச்சிட்டு நிறுத்தியதில் சண்முகத்தின் சிந்தனை கலைந்தது.

‘நாய் எல்லாரையும் கடிக்குது; வீட்டில் அசிங்கம் செய்கிறது’ என்று ஏதேதோ பொய்க் காரணங்களைச் சொல்லி புளூகிராஸ்காரர்கள் தலையில் அதைக் கட்டிவிட்டு சண்முகம் திரும்பினான். சுசிக்கு என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. தன்னைச் சுற்றி தன்னவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்கிற ஆனந்தம் இருந்திருக்குமோ அல்லது தான் இன்னதென்று விளங்காத காரணத்திற்காக பிரித்து விட்டுச் செல்கிறானே என்கிற சோகம் இருந்திருக்குமோ தெரியவில்லை – அது ஒரு சப்தத்தை எழுப்பியது. அது போன்ற ஒரு சப்தத்தை இது நாள் வரையில் சண்முகம் கேட்டதேயில்லை. அது நாயின் சப்தம் போன்றே இல்லை. அதில் சந்தோஷத்தையோ துக்கத்தையோ அல்லது வேறு உணர்ச்சியையோ அவனால் உணர முடியவில்லை. அவன் வெளிக் கதவை நெருங்கும் சமயம் ஒரு முறை திரும்பிப் பார்த்தான் – சுசி அவனையே பார்த்துக் கொண்டு நின்றது. தன் வாலை மிக மெதுவாக அசைத்தது. திரும்ப வந்து தன்னை அள்ளிக் கொள்வான் என்று எதிர்பார்த்திருக்குமோ என்னவோ – சண்முகத்தின் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். அந்தத் தெருவின் கோடியில் இருந்த தேனீர் கடை நோக்கி நடையை எட்டிப் போட்டான்.

“அண்ணே ரெண்டு வில்ஸ் பில்டர் குடுங்க” பின்னாலேயே சீனுவும் வந்து சேர்ந்தான்.

“ஒன்னு போதும்ணே” என்று கடைக்காரரிடம் சொன்னவன் “கட் போட்டுக்கலாம்டா” என்றான் சண்முகத்தைப் பார்த்து.

காரமான புகை நுரையீரலின் சந்து பொந்துகளெல்லாம் நிறைந்து இறுக்கத்தைக் குறைத்தது. சண்முகம் கண்களைச் செருகிக் கொண்டே அதை அனுபவித்தான். ஏதோ தோன்றியவன் போல சீனு பக்கம் திரும்பி –

“க்காலி.. இந்த பொட்டச்சிங்களே இம்சடா மச்சி. இத்த வாங்கித்தா அத்த வாங்கித்தான்னு ஒரே நைநைன்னு அரிப்பு. ஒரு மனுசன் வெளில படற பாடுன்னா என்னான்னு தெரியுதா இவளுகளுக்கு… ச்சே.. கம்பெனிலயும் அடிம.. ஊட்லயும் அடிம… எங்க திரும்புனாலும் எல்லாரும் நெருக்கிட்டே இருந்தா ஒருத்தன் எங்க போவான்… பய்யனுக்காக பாக்க வேண்டியிருக்குடா… இல்லேன்னா தொலச்சி தல முழுவிடுவேன்” என்று சொல்லி விட்டு
ஆமோதிப்பான ஒரு தலையசைப்பை எதிர்பார்த்தான்.

“தப்பு அங்க மட்டும் இல்லடா சம்மு… ஓன் கிட்ட தான் பெரிய தப்பே இருக்கு” புகை மூக்கின் வழியே வழிந்து தீரும் வரை பொருத்திருந்து விட்டு “சின்னச் சின்னதா கேக்கும் போது தேவையா தேவையில்லையான்னு நீ யோசிச்சியா? அது பத்தி சிஸ்டர் கிட்டே எடுத்து சொன்னியா? சிஸ்டருக்கு வெட்டிப் பெருமைன்னா ஒனக்கு மட்டும் என்னவாம்? கஸ்டப்பட்டு பொண்டாட்டிய சந்தோசமா வச்சிக்கறவன்னு பேரு வாங்க ஆச
பட்டேல்ல.. அப்ப அனுபவி” இறக்கமேயில்லை சீனுவின் வார்த்தைகளில்.

“டேய் உனுக்கு என்னியப் பத்தி தெரியுமில்லே.. நானே மாச தவனை கட்ட முடியாம லோல்பட்டுகிட்டு இருக்கேன்… நான் இத்தன நாளும் சந்தோசமாத்தான் அவ இழுக்கற இழுப்புக்கெல்லாம் ஆடினேன்னு சொல்றியா..? செத்துப் போயிடுவேன்னு அவ எத்தன தரம் மெரட்டியிருக்கா? உனக்கே அதெல்லாம் தெரியுமில்லே…”

“டே.. சாவறது என்ன அத்தன சுலபமா? சம்பாதிக்கறவன் நீ; வெளியுலகத்துல சுத்தறவன் நீ; அவங்க வீட்லயே அடஞ்சி கிடக்கறவங்க; அவங்க அப்படித்தான் எல்லாத்துக்கும் ஆசப் படுவாங்க. ஒரு பொருள் தேவையா தேவையில்லையான்னு வாங்கறக்கு முன்னாடியே ரெண்டு பேரும் உக்காந்து பொருமையா பேசியிருக்கனும். அவங்க கேட்க தயாரா இல்லைன்னா எப்படி தயார் படுத்தறதுன்னு நீ யோசிச்சிருக்கனும். ஆனா நீ பெருமைக்கு எருமை ஓட்டினே. சொந்தக்காரனுக நாலு பேரு மூஞ்சி முன்னாடி ‘ஆஹா சண்முகத்துக்கு சரோஜா மேல என்னா பாசம்’னு சொன்ன உடனே நீ வானத்துல பறந்தே. இன்னிக்கு நீ லோல்படும் போது அவனுக பக்கத்தில இல்ல பாத்தியா.”

சண்முகம் ஏதும் பேசத் தோன்றாமல், செய்யத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டு நின்றான்.

“என்னைக்காவது உன்னோட சம்பளம் எவ்வளவு, பிடித்தம் போக கையில் வாங்கறது எத்தனை அப்படிங்கற உண்மையான விவரத்தை நீ வீட்ல சொல்லியிருக்கியா? அவங்களைப் பொருத்தவரை நீ காசு கேட்டா கொடுக்கற ஏ.டி.எம் மிசின் மாதிரி தானே நடந்துட்டு இருந்தே. மொதல்ல ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க. எல்லாம் சரியாப் போகும். வா.. போலாம்” என்றபடி பைக்கை உதைத்தான்.

சண்முகம் புதிதானவொரு நம்பிக்கையோடு வண்டியில் ஏறினான். காற்று சில்லென்று வீசியது.

Advertisements

மே 14, 2010 - Posted by | culture, short story, Uncategorized | , ,

3 பின்னூட்டங்கள் »

  1. கதை நன்றாக வந்திருக்கிறது. இத்தகைய களங்கள் பலருக்கு தெரிந்த ஒன்றாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் குத்திக் காட்ட வேண்டியிருக்கிறது.

    இருப்பினும் இந்தக் கதையில் ஆழ்ந்து போக வேண்டிய உணர்ச்சிக்கு இவ்வ்வளவு விவரங்கள் அதிகமாக வேண்டியதில்லையோ என்று தோன்றுகிறது. அடுத்து கணவன், மனைவி இருவரும் தத்தமது உலகிலிருந்து கொண்டு இணைகின்ற புள்ளியை இன்னும் அழுத்தமாக அந்தக் கையறு நிலையை அல்லது இரண்டு அடிமைகளின் உணர்வுப்பூர்வமான தற்கொலையை இன்னும் ஆழமாக, பயணம் செய்து பார்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இல்லையேல் ஒரு பொதுப்பார்வையில் இந்தக் கதை ஆ.விகடன் பாணியில் ஆசைப்பட்ட மனைவி, கஷ்டப்பட்ட கணவன் என்று மேம்போக்காகவும் புரிந்து கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.

    வேறு வெளிச்சப்படுத்தல்கள் எதுவுமின்றி பொருள்களோடு மட்டும் தனது ஆளுமையை வெளிப்படுத்த முனையும் இத்தகைய மனைவிகள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களை வெளியே அனுப்பாத வகையில் இந்த நோயை எப்படி தீர்க்க முடியுமென்று தோன்றுகிறது.

    பின்னூட்டம் by வினவு | மே 15, 2010 | மறுமொழி

  2. நன்றி வினவு,

    புனைவு எனக்கு பழக்கமில்லை. ஓரளவுக்கு கதை சொல்ல மட்டும் வருகிறது. இந்த சிறுகதை ஆரம்பத்தில் வந்த சில வரிகளை படிமமாக வைத்து
    இன்னொரு களத்தில் எழுத முயற்சித்து அது சரியாக வரவில்லை. டெம்ப்ளேட் போன்ற ஒன்றை உருவாக்க முடியுமா எனும் முயற்சியில்
    ஈடுபட்டுள்ளேன் – அதாவது, கதைக் களன், கதை மாந்தர்கள், அவர்களின் வர்கப் பின்புலன், அவர்களுக்குள் எழும் சமூக பொருளாதார
    முரண்பாடுகள் என்பது தனியே துருத்திக் கொண்டு தெரியாமல் கதையின் போக்கில் ஒரு பேக் டிராப் போல வருவது போல. மேலும்
    நடப்பு சமூக அமைப்பில் உழைக்கும் வர்க்க நலனுக்கு எதிராக நடுத்தர வர்க்க நலனை பொருளாதார சூழல் முன்னிறுத்தி உள்ளது என்பதை
    உணர்த்தும் உரையாடல்கள் – இதை ஒரு டெம்ப்ளேட் போல வைத்து கதையை அதன் மத்தியில் வைக்க முடியுமா என்பதை முயற்சித்துப்
    பார்க்கிறேன்.

    இதுவும் கூட எனக்கு ஒரு முழுநிறைவை அளிக்கவில்லை. அடுத்த முயற்சிகளில் உங்கள் விமர்சனத்தைக் கணக்கில் கொள்கிறேன்.

    நன்றி

    பின்னூட்டம் by kaargipages | மே 16, 2010 | மறுமொழி

  3. கதை நன்றாக இருக்கிறது.

    பின்னூட்டம் by kunthavai | மே 17, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: