கார்க்கியின் பார்வையில்

தேர்வு – கல்விமுறை – சில அனுபவங்கள்..!

அது ஒரு தொழில் நகரம். நகரம் தான் தொழில் நகரம் ஒரு ஐந்து கிலோ மீட்டர் தாண்டிவிட்டால் விவசாயம் தான். நாங்கள் இருந்த பகுதி இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு பகுதி. பெரும்பாலும் எல்லோரும் ஏதாவது ஒரு தொழில் பட்டறையில் வேலை செய்பவர்களாய் இருப்பார்கள் அல்லது சிறு விவசாயிகளாகவோ விவசாய கூலிகளாகவோ இருப்பார்கள். முதலில் என்னை வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தான் சேர்த்தார்கள். சேர்ந்த இரண்டாவது நாள் கல்லு சிலேட்டை எறிந்து டீச்சர் மண்டையை உடைத்து விட்டேன். அந்த அம்மாள் என்னை கையோடு இழுத்து வந்து அப்பாவிடம் கொடுத்து விட்டு நீ காசே குடுத்தாலும் இந்தப் பையனை நான் பார்த்துக் கொள்ள முடியாது என்று விட்டார். அப்போதெல்லாம் நான் நிறைய குறும்பு செய்வேனாம்..

எங்க அப்பா ஒன்றுக்கு பதிமூணு முறை யோசித்து விட்டு, ‘இவனையெல்லாம் புரியாத பாசை பேசற பள்ளிக்கூடத்துல சேர்த்தா தான் ஒளுங்கா பயந்துகிட்டு படிப்பான்’ என்று முடிவு செய்து பக்கத்து ஊரில் இருந்த ஆங்கில நர்சரி பள்ளியில் சேர்த்து விட்டார். அது ஒரு டிரஸ்ட்டினால் நடத்தப்பட்டு வந்த ஆங்கிலப் பள்ளி. அனுபவம் வாய்ந்த வயதான ஆசிரியர்கள் இருந்தார்கள். கல்விக் கட்டணமும் அப்பாவின் மாதச் சம்பளத்துக்குள் கட்டுபடியாகும் அளவுக்குத் தான் இருந்தது. அதிகபட்சமாக பத்தாவது படிக்கும் போது மாத கட்டணமாக இருநூறு ரூபாய் கட்டியிருக்கிறேன்.  மற்றபடி மறைமுக கொள்ளை ஏதும் நடந்ததில்லை.

ஆங்கில வழிக் கல்வி என்னைப் பொருத்தளவில் ஒரு பயமுறுத்தும் பூச்சாண்டியாகத் தான் அறிமுகமானது. தமிழ் வழிக் கல்வியில் படித்தவர்கள் ஆங்கிலத்தின் மேல் தங்களுக்கு இருந்த பயத்தைப் பற்றி சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னைப் போல வீட்டில் முதன்
முறையாக ஆங்கிலவழிக் கல்வி பயிலச் செல்பவர்களின் பிரச்சினை வேறு வகையானது. வீட்டில் ஆங்கிலம் படிப்பவர்கள் பேசுபவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பள்ளியில் எல்லா பாடமும் ஆங்கிலமாகவும் இரண்டு பாடங்கள் தமிழாகவும் இருக்கும் ( தமிழ் I & II).

இது ஒரு ரெண்டும் கெட்டான் நிலை. ஆங்கிலமும் மக்கார் பண்ணும் தமிழும் தகறாரு பண்ணும். சொன்னா சிரிக்காதீங்க – எனக்கு ஏபிசிடியே அஞ்சாவது வரைக்கும் ஒரு குத்துமதிப்பாத் தான் தெரியும். எட்டாவது வரைக்கும் ஆங்கில எழுத்து m சரியாக எழுத வராது. எங்க ஆங்கில வாத்தியார் தண்டனையாக “mummaa mumma mummy” என்று ஒரு நோட்டு முழுக்க எழுத வைத்து விரலை உடைத்தார். தமிழைப் பொருத்தவரை இப்பவும் க,ங,ச வரிசையாக சொல்ல முடியாது. திக்கும். தடுமாறும். ஆங்கில இலக்கணத்தைப் பொருத்தவரையில் சுத்தம். தமிழ் இலக்கணம் எனக்குப் புரிந்த லட்சணத்தைத் தான் நீங்களே அனுபவிக்கிறீர்களே. தமிழ் வீட்டிலும் வெளியிலும் பேசும் மொழியாக இருந்தாலும் கூட பள்ளியைப் பொருத்தவரை ஒரு நாளுக்கு ஒரே வகுப்பு தான் தமிழில் நடக்கும் என்பதால் கல்வி எனும் கோணத்தில் அதுவும் கூட அன்னியமாகிப் போனது.

என்றைக்காவது வீட்டுக்கு வரும் தூரத்து சொந்தக்கார மாமா முன் அப்பா பெருமையாக சொல்வார் – ‘எங்க பய்யன நாங்க இங்கிலீசு மீடியத்துல சேத்துருக்கோமாக்கும். டேய் இங்க வாடா குட்டி. மாமா கிட்ட இங்கிலீசுல பேசு’ என்பார் பாசமாக. என்னத்த பேச. ‘மை நேம் ஈஸ் சங்கரு’ என்பதற்கு மேல் வண்டி செல்ப் எடுக்காது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு நிற்பேன். மாமா போனதும் முதுகு வீங்கி விடும். ஏற்கனவே பூச்சாண்டியான ஆங்கிலம் கொஞ்சம் கொஞ்சமாக வில்லனாகவே ஆகிவிட்டது.

வகுப்பில் முதல் இரண்டு பென்ச்சில் அமரும் மானவர்களுக்கு வீட்டில் படித்தவர்கள் யாராவது இருந்தார்கள். வீட்டில் அவர்களோடு ஆங்கிலத்தில் உரையாட ஆட்கள் இருந்தார்கள். ஆங்கிலம் அவர்களுக்கு சுலபமாக பேச வந்தது. வகுப்பில் பாட சம்பந்தமான கேள்விகளை தன்னம்பிக்கையோடு கேட்டார்கள். ஆசிரியர்களும் அவர்கள் மட்டும் கேள்விகள் கேட்பதை வைத்துக் கொண்டு அவர்களே புத்திசாலிகள் என்று தீர்மானித்தார்கள். அவர்களுக்கே நல்ல ஊக்கமும் தந்தார்கள். கடைசி பென்சு டிக்கெட்டுகளான நாங்களோ பாடம் நடந்து கொண்டிருக்கும் போது அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல ‘என்னமோ நடக்குது மர்மமா இருக்குது’ என்று ‘ஙே’ன்னு பாத்துட்டு இருப்போம்.

மெட்ரிகுலேசனில் படிக்கும் மானவன் பள்ளிக்கூடத்திலேயே தமிழில் பேசுவதா என்று கவுரவம் பார்க்கும் பள்ளி எங்களுடையது. அதனால் வகுப்பு லீடருக்கு யார் யார் தமிழில் பேசுகிறார்கள் என்று கண்காணித்து போட்டுக் குடுக்கும் வேலையும் கொடுத்து விட்டார்கள். தமிழில் பேசுவதற்கு தண்டனையாக சட்டையில் இருக்கும் வெள்ளை பட்டனை எடுத்து விட்டு கருப்பு பட்டன் வைத்து தைத்து விடுவார்கள். எங்கள் வகுப்பில் பெரும்பாலும் எல்லோருக்கும் சட்டையில் கருப்பு பட்டன் தான் இருந்தது.

நான் படித்திருந்த மெட்ரிகுலேசன் ஆங்கிலத்தின் பருப்பு தமிழ்நாட்டின் எல்லைக்கு வெளியே வேகவே இல்லை. பிற்காலத்தில் புதிதாகத்தான்
ஆங்கில உரையாடலைக் கற்றுக் கொண்டேன். ஒரு விசயம் அப்போது தான் உறைத்தது. எந்த மொழியையும் கற்க வேண்டுமானால் முதலில் அதைப் பேச வேண்டும்; பிறகு தான் எழுதப் படிக்க பழக வேண்டும். நாம் மற்ற மொழிகள் விசயத்தில் தலைகீழாக அணுகுகிறோம். அது தான் நமது ஆங்கில தடுமாற்றத்துக்கு அடிப்படையான காரணம். நாம் தமிழில் சிந்திக்கிறோம் – எனவே பாடங்களை தமிழில் படிப்பது சிறந்தது. ஆங்கிலத்தை ஒரு இணைப்பு மொழியாக சரியான அம்சத்தில் கற்க வேண்டும். எனக்குத் தெரிந்து நன்றாக ஆங்கிலம் பேச முடிந்தவர்களே கூட அதை சரியான அம்சத்தில் பேசுவதில்லை – நாம் பேசு ஆங்கிலம் பெரும்பாலும் Formalஆக இருக்கிறது.

அதாவது தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அதே நடையில் தெருவில் காய்கறிக்காரரிடம் பேசினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நாம் பேசும் ஆங்கிலமும் இருக்கிறது. பேச்சு மொழியாக பேசாமல் எழுத்தில் இருப்பதைப் போன்ற ஒரு ஆவண மொழியாக பேசுகிறோம். இது மெட்ரிகுலேசனில் படித்த மானவனுக்கும் பொருந்தும். என்னைப் பொருத்தவரை மெட்ரிகுலேசன் கல்வி என்பது ஒரு கிரிமினல் வேஸ்ட். நாம் பாடங்களை தமிழில் படித்து விட்டு ஆங்கில உரையாடலை பாடதிட்டத்தில் சேர்த்து விட்டால் கூட போதும். ஆறாம் வகுப்புக்கு மேல் அங்கிலத்தை எழுத படிக்க சொல்லிக் கொடுத்தாலே போதுமானது.

பாடங்கள் புரியவில்லை என்பதை வைத்துக் கொண்டு எங்களை தத்தி என்றோ மக்கு என்றோ அவசரப்பட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். எங்களில் திறமைசாலிகள் இருந்தனர். ஒவ்வொரு வருடமும் நடக்கும் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளில் நாங்கள் கோப்பைகளை அள்ளிக் குவிப்போம். வருடா வருடம் நடக்கும் பள்ளி ஆண்டுவிழா விஞ்ஞானக் கண்காட்சியில் கடைசி பெஞ்சு மானவர்களின் ஸ்டால்கள் தான் அசத்தும். இதுக்காகவே ஒன்பதாவது படிக்கும் போது எங்க வீட்டு டேப் ரெக்காடரை பிரித்து அதிலிருக்கும் மோட்டாரை தனியே எடுத்து. அதில் ஒரு காத்தாடியை இணைத்து – அதை பேட்டரியால் இயங்க வைத்து – ஒரு மோட்டார் படகு வடிவமைத்தோம்.  பரிசும் கிடைத்தது – வீட்டில் பெல்ட் அடியும் கிடைத்தது. அறிவிப்பு செய்யும் மைக்செட்டில் என்ன பிரச்சினை என்றாலும் மாப்பிள்ளை பெஞ்சு மானவர்கள் தான் சரிசெய்வார்கள். காலர் பட்டன் போட்ட ‘பழங்களுக்கு’ கரண்டு என்றால் பயம். எங்களுக்கு பரிட்சை என்றால் பயம்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு சமயம். எங்கள் நன்பர்களுக்கெல்லாம் மூலத்தில் ஜன்னி கண்டுவிட்டது. ஸ்டடி ஹாலிடேஸ் எனப்படும் அந்த கடைசி நாட்களில் புத்தகத்தை எடுத்தால் எல்லாம் புத்தம் புதிதாகத் தெரிகிறது. ஏற்கனவே ஓரளவு தெரிந்த பாடங்கள் கூட புதிதாக படிப்பது போல இருக்கிறது. பெயில் ஆகி விட்டால் வீட்டிலேயே சேர்த்துக் கொள்ள மாட்டேன் என்று அப்பா சொல்லியிருந்தார். அந்தப் பரீட்சை பயம் எனக்குள் ஏதோவொன்றை அசைத்திருக்கிறது. இன்றும் கூட அவ்வப்போது ஹால்டிக்கெட்டை மறந்து விட்டு பரீட்சைக்கு போய்விடுவதைப் போலவும், டைம்
டேபிளை சரியாக பார்க்காமல் வேதியல் பரீட்சைக்கு இயற்பியல் படித்து விட்டு போய்விடுவது போலவும் கனவுகள் வந்து கொண்டேயிருக்கிறது. பத்தாவது பொதுத் தேர்வுகள் எழுதி சரியாக பதினாலு வருடங்கள் போய் விட்டாலும் கூட இப்போதும் அந்தக் கனவு வரும் போது தூக்கம் களைந்து திடுக் என்று எழுந்து உட்கார்ந்து விடுவேன். உடலெல்லாம் வியர்த்துக் கொட்டும்; விரல்களெல்லாம் நடுங்கும்.

தேர்வு மைய்யம் இன்னொரு பள்ளி. அந்தப் பள்ளி வளாகத்துக்குள் பரீட்சை எழுத நுழையும் போதெல்லாம் இடுப்புக்குக் கீழே உணர்வற்றுப் போய் விடும். பயத்தில் கால்கள் இருப்பதையே உணர முடியாது. அப்படியே மிதந்து கொண்டே செல்வது போல் இருக்கும். தேர்வுகளுக்கு முன் ஆபத்பாண்டவனாக வந்தார் எங்கள் ஆசிரியர் சுப்பிரமனியன். அவர் சொல்லிக் கொடுத்த டெக்னிக்கை வைத்து தான் நாங்கள் தேர்வில் வெற்றி பெற்றோம். அதாவது தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் ஆசிரியர்களிடம் அவற்றை கத்தை கத்தையாக கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஒவ்வொரு விடையாக முழுவதும் படித்துப் பார்க்கும் நேரம் இருக்காது என்றும் சொன்னவர், ஒரு விடையின் முதல் வரியும் கடைசி வரியும் சரியாக இருக்க வேண்டும் என்றும், நன்றாக மார்ஜின் விட்டு எழுத வேண்டும் என்றும், படங்களைத் தெளிவாக போட வேண்டும் என்பதிலும்
கவனம் செலுத்தச் சொன்னார். மேலும், விடைத்தாளில் சரியான வாக்கியங்களின் கீழும் துனைத் தலைப்புகளின் கீழும் பென்சிலால் அடிக் கோடிட்டு காட்ட வேண்டும் என்றும் சொன்னர். இப்படியாக விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் நாங்கள் செய்த டெக்கரேசன் வேலைகளில் ஏமாந்து போய் தான் எங்களை பாசாக்கி இருக்க வேண்டும்.

சீக்கிரம் வேலைக்குச் சென்று சம்பாதித்தாக வேண்டிய குடும்பச் சூழல் என்னை பண்ணிரண்டாம் வகுப்பு வரை படிக்க அனுமதிக்கவில்லை. அப்பா தனது நன்பரிடம் மேற்கொண்டு என்னை எங்கே சேர்க்கலாம் என்று அலோசனை கேட்டிருக்கிறார். ஒரு போர் மேன் ரேஞ்சுக்கு கலெக்டரிடமா கேட்டிருப்பார் – அவர் தனது சூப்பர்வைசர் நன்பரிடம் தான் கேட்டிருந்தார். அவரும் பாலிடெக்னிக் சேர்த்து விடுங்கள் என்று ஆலோசனை சொல்லவே வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய் தேற்றியாகி விட்டது. இனி இந்த பட்ஜெட்டுக்குள் ஏதாவது ஒரு கல்லூரியில் ஏதாவது ஒரு பிரிவை பிடிக்க வேண்டும்.

எனக்கு மெக்கானிக்கல் படிக்க வேண்டும் என்று ஆசை. பள்ளி நாட்களில் பெரிய பரீட்சை லீவு விட்டவுடன் அப்பா என்னை அவரது நன்பரின் பைக் மெக்கானிக் செட்டுக்கு அனுப்பி வைப்பார். சும்மா சுத்தினா கெட்டுப் போயிடுவேனோன்னு பயம். ஓரளவு பணக்கார பசங்கள் எல்லாம் செஸ் கிளாஸ், நீச்சல் கிளாஸ் என்று போவார்கள் – அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் கிளாசும் அபாகஸ¤ம் இத்தனை பிரபலமாகவில்லை. எனக்கு மெக்கானிக் வேலை பிடித்து இருந்தது. இன்ஞ்சின் இறக்கி ஏத்துவதைத் தவிர மற்ற எல்லா வேலையும் நானே செய்வேன். என்றாவது ஒருநாள் ஒரு பெரிய மெக்கானிக் ஆக வேண்டும் என்பது என் பள்ளி நாட்களின் கனவு. பழுதடைந்த ஒரு இயந்திரத்தை சீர்படுத்தி மீண்டும் இயங்க வைத்திருக்கிறீர்களா
நீங்கள்? அந்த சத்தமிருக்கிறதே… ஹ… அது தான் அதி உன்னதமான சங்கீதம். அந்தக் கணம் தான் சொர்க்கம். நான் இயந்திரவியல் படிக்க
வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால் டிப்ளமா மெக்கானிக்கல் எங்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லை.

அப்பா எனது படிப்பு எதுவென்று முடிவு செய்து விட்டு பணத்தை தயார் செய்யவில்லை – பணத்தை தயார் செய்து விட்டு அதற்குள் அடங்கும்
படிப்பை முடிவு செய்தார். மின்னணுவியல் தான் கிடைத்தது – சரியாகச் சொன்னால் ஒத்துவந்தது. அப்போது மின்னணுவியல் படிப்புக்கு அத்தனை செல்வாக்கு இல்லை. மேலும் நான் சேர்ந்த கல்லூரியில் மின்னணுவியல் அரசு உதவி பெற்று வந்த துறை என்பதால் அதற்கான கட்டணம் குறைவு – வருடத்திற்கே ஆயிரத்து நூத்தி என்பது ரூபா தான் கட்டணம். டொனேசனாக இருபத்திரண்டாயிரம் கொடுத்து விட்டு மீதம் இருந்த மூவாயிரத்தில்
இரண்டாயிரத்து இருநூறு ரூபாய்க்கு கேஸ் அடுப்பு வாங்கினார் – அதுவரையில் மன்னெண்ணை பம்பு ஸ்டவ் தான். மிஞ்சிய எண்ணூறு ரூபாவுக்கு மூன்று கலர் சட்டையும் இரண்டு பேண்ட்டும் எடுத்துக் கொடுத்தார் – இனிமேல் சீருடை கிடையாதல்லவா.

கல்லூரி வந்து முதல் செமஸ்டர் வரும் வரைக்கும் தமிழ் மீடியத்தில் இருந்து வந்த மானவர்கள் எல்லாம் ஆங்கில மீடியத்தில் இருந்து வந்த
மானவர்களை அச்சத்தோடு தான் பார்த்தார்கள். பாடமெல்லாம் ஆங்கிலம் – நாங்கள் வேறு ஆங்கில மீடியம் – எனவே நாங்கள் நன்றாகப் படித்து விடுவோம் என்று அவர்களாகவே தீர்மானித்து விட்டார்கள். செமஸ்டர் முடிவுகள் வந்ததும் தான் அவர்களுக்கும் நிம்மதியானது எங்களுக்கும் நிம்மதியானது.

நான் படித்த பாலிடெக்னிக் மானவர்களும் எனது பள்ளித் தோழர்களைப் போன்ற வர்க்கப் பின்னணியைக் கொண்டவர்கள் தான். எனது வகுப்பில் ஒரே ஒரு மானவனைத் தவிற யாரும் பைக்கில் வந்ததில்லை. எல்லோரும் பஸ் பாஸ் தான். நான் வீட்டை அடமானம் வைத்து பணம் கட்டியிருந்தேன் என்றால் அவர்கள் காட்டையோ நகையையோ அடமானம் வைத்து வந்தவர்கள். யாரும் விரும்பிய படிப்பு கிடைக்கவில்லையே என்று ஏங்கி நின்று விடவில்லை. இது தான் தலையெழுத்து என்று ஏற்றுக் கொண்டனர். ஆனால் துரதிருஸ்டவசமாக பள்ளியில் கிடைத்த அளவுக்கு நல்ல ஆசிரியர்கள் இங்கே கிடைக்கவில்லை.

ஒரு தியரி பேப்பருக்கு மொத்தம் ஐந்து யூனிட்டுகள். ஒவ்வொரு யூனிட்டிலிருந்தும் இருபது மதிப்பெண்களுக்கு கேள்விகள் வரும். ஆசிரியர்கள் பொதுவாக மூன்று யூனிட்டுகள் தான் நடத்துவார்கள். கடைசி இரண்டு யூனிட்டுக்கு பதில் கடந்த ஐந்து ஆண்டுகள் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களின் நகலைக் கொடுத்து விடுவார்கள் – அதற்கு கறாராக காசு வாங்கிவிடுவார்கள். நாமே தான் படித்துக் கொள்ள வேண்டும். கட்டிய காசு வீணாகப் போய் விடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. நூலகத்திற்குச் சென்றெல்லாம் மாய்ந்து மாய்ந்து படித்தார்கள் – படித்தேன்.

மூன்று வருடம் ஏதேதோ தகிடுதத்தம் செய்து படித்து முடித்து விட்டு வேலைக்கு வந்த பின் தான் தெரிந்தது அந்த மூன்று வருடம் முக்கி முக்கி படித்தது எனது வேலைக்கு எந்தவிதத்திலும் பயன்படப் போவதில்லை என்று. அந்த மூன்று வருடம் மட்டுமல்ல – அதற்கு முன் பத்து வருடங்கள் படித்த படிப்பினாலும் வாழ்க்கைக்குப் பெரிதாக பயனில்லை என்பதும் மிகத் தாமதமாக விளங்கியது.

சர்வீஸ் என்ஜினியர் வேலைக்குச் சேர்ந்த முதல் நாள் பயிற்சியின் போது –

“இது தான் மானிட்டர், இது கீ-போர்டு, இது மவுஸ், இது சி.பி.யு. என்ன தெரியுதா.. எதுனா கேள்வி இருந்தா கேளுங்க. கூச்சப்படாதீங்க”
டிரெய்னிங் ஆபீஸர் வேலாயுதம் சொல்லி முடித்ததும் நான் கேட்டேன்,

“புரியுது சார்.. இதுல எது சார் கம்ப்யூட்டரு?”

மூன்று வருட படிப்பு அந்தளவுக்குத் தான் எங்களை தயாரித்து அனுப்பியிருந்தது. அப்போது இருந்த பாலிடெக்னிக் பாடதிட்டத்தின் படி மின்னணுவியல் துறையில் ஒரே ஒரு பாடம் தான் கம்ப்யூட்டர் இருந்தது. அதுவும் மகா மொக்கை. பிராக்டிகலுக்கு இரண்டு மூன்று பாடாவதி கம்ப்யூட்டர்களை வைத்திருந்தார்கள். அதையும் பக்கத்தில் போய் தொட அணுமதிக்க மாட்டார்கள். குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறைக்கு வெளியில் இருந்து கைநீட்டிக் காட்டுவார்களா – பிராக்டிகல் நேரம் சுபமே முடிந்தது! மைக்ரோ எலக்ட்ரானிக்ஸில் நான் மிகுந்த
சிரமப்பட்டு படித்த AND gate, OR gate எல்லாம் மிக மிக மிக ஆரம்ப பாடம் என்று வேலைக்கு வந்ததும் தான் புரிந்தது. எங்கள் பாடதிட்டத்தில் இருந்த மைக்ரோ பிராசசர் காலாவதியாகி இரண்டு தசாப்தங்களாவது ஆகியிருந்தது.

பாலிடெக்னிக் லேபில் முதல் நாளே நான் லேப் அசிஸ்டெண்ட் ரகுநாத் சாரிடம் செம்ம மாத்து வாங்கினேன். ரெஸிஸ்டரின் இரண்டு முனைகளையும் U வடிவத்தில் வளைத்து லேப் டெஸ்கில் இருந்த ப்ளக் பாயிண்டில் நுயூட்ரலுக்கும் ·பேசுக்கும் இடையில் சொருகினால் என்ன நடக்கிறது என்று பார்த்தேன். படபடவென்று எல்லா ப்யூஸ¤ம் பிடுங்கிக் கொண்டது. அது ஏன் அப்படியானது என்று விளக்குவதற்கு பதில் எல்லார் முன்பும் போட்டு சாத்து சாத்தென்று சாத்திவிட்டார். லேபில் இருக்கும் உபகரணங்கள் எல்லாமே பாடாவதி – இதில் இதைத் தொடாதே அதைத் தொடாதே என்று ஆயிரம் கட்டுப்பாடுகள் வேறு.

படிப்பது என்பது வேறு என்றும் வேலை அனுபவம் வேறு என்றும் பிறகு புரிந்தது. இன்னொரு விசயம் என்னவென்றால் நமது கல்வி முறை என்பது நம்மை புதிதாக எதையும் முயற்சிக்கும் படி தூண்டுவதில்லை – ஏற்கனவே இருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அதுவும் ஒரு முப்பது வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைப் பற்றி தான் பேசுகிறது. அதுவும் எப்படி பேசுகிறது – பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து விட்டு ஊருக்குப் போய் சொல்லுவதைப் போல எட்டி நின்று பேசுகிறது. நம்மையும் பயமுறுத்தி தூர நிற்க வைத்து விடுகிறது. உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை.

நாம் எதையும் புதிதாக உருவாக்கும் வல்லமை கொண்டவர்களாக கல்லூரியில் இருந்து வெளிவருவதில்லை. கல்லூரியை விட்டு வெளியேறியதும் நமக்கு முதலில் கிடைப்பது திகைப்பும் அச்சமும் தான். நாம் படித்ததில் பெரும்பாலானவை நடப்பிலேயே இருக்காது. சைக்கிள் மெக்கானிசம் படித்து விட்டு வந்தவன் சைக்கிளே வழக்கொழிந்து போய் விட்டதை பார்க்கிறான். அவனிடம் நீங்கள் EFI டெக்னாலஜியோடு வரும் பைக்கைக் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னால் அவனால் என்ன செய்ய முடியும்?

நடப்பில் இருப்பதை புதிதாக படித்து புரிந்து கொண்டு பிரமிப்பதற்குள்ளாகவே நடுத்தர வயதை எட்டிவிடுகிறோம். அதற்கு மேல் ரிஸ்க் எடுத்து புதிய விசயங்களில் ஆர்வத்தை திருப்ப நமது குடும்ப அமைப்பு முறை அனுமதிப்பதில்லை. அதற்குள் சுயதிருப்தி எனும் ஆழமான ஒரு மோனநிலையில் அமிழ்ந்து போகிறோம். தொழில்நுட்பத் துறையில் நாம் பெரிதாக புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் எதையும் நிகழ்த்தவில்லை என்பதற்கு அடிப்படையில் உற்பத்தி முறையின் கெட்டிப்பட்டுப்போன தன்மை ஒரு காரணம் – அதே கெட்டிப்பட்டுப் போன தன்மை தான் இப்படி ஒரு கல்வி முறையை நடப்பில் வைத்திருக்கிறது.

ஆண்டாண்டு காலமாக இறுகிப் போன ஒரு உற்பத்தி முறை. மத்தியானம் தயிர் சோறு சாப்பிட்டது மாதிரியான ஒரு சொத்துடைமை வடிவம். நல்ல விவசாயம் – வயித்துக்கு சோறு – வருசத்துக்கு ஒரு பிள்ளையை பெத்துப் போட்டு விட வேண்டியது. ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்று பிச்சைக்காரனைப் பார்க்கிலும் நாம் பரவாயில்லை என்று நிம்மதியை நாடிக் கொண்டிருந்த சைக்கிள் கேப்பில் உலகம் எங்கேயோ போய்விட்டது. இப்போது மேற்கில் உருவாக்குகிறார்கள் நாம் அதை வெறுமனே மெயிண்டெய்ன் செய்து கொண்டிருக்கிறோம். அதிகபட்சம் ஓரிரண்டு செழுமைப்படுத்தல்கள் நம்மவர்களால் செய்யப்பட்டிருக்கலாமே ஒழிய நடப்பில் இருப்பதை மொத்தமாக புரட்டிப் போடும் புதிய கண்டுபிடிப்பு எதையும் நாம் செய்துவிடவில்லை.

உறைந்து போன நிலையில் இருக்கும் சமுதாய ஒழுங்கு அந்த நிலையை அப்படியே தக்கவைத்துக் கொள்ள ஏதுவான ஒரு கல்வி முறையை வைத்துள்ளது. ஓரிரண்டு கல்விச் சீர்திருத்தங்களால் ஒட்டுமொத்தமாக ஒரு பலன் கிடைக்க வாய்ப்பில்லை. நடப்பில் இருக்கும் சமுதாய ஒழுங்கைக் கலைத்துப் போட்டு புதிதானவொரு சமுதாய ஒழுங்கை உருவாக்குவதில் தான் புதிய சிந்தனைகளின் உருவாக்கமும் புதிய நுட்பங்களின் உருவாக்கமும் அடங்கியிருக்கிறது என்பதை பின்னர் நான் கற்றுக் கொண்ட மார்சியம் எனக்குப் புரியவைத்தது.

– Kaargi

மே 6, 2010 - Posted by | culture, Education, Uncategorized | ,

20 பின்னூட்டங்கள் »

 1. //அப்போதெல்லாம் நான் நிறைய குறும்பு செய்வேனாம்..//

  இப்போ மட்டும் என்னவாம்!

  பின்னூட்டம் by வால்பையன் | மே 6, 2010 | மறுமொழி

  • விளையும் பயிர்..!

   பின்னூட்டம் by kaargipages | மே 6, 2010 | மறுமொழி

 2. //எனக்கு ஏபிசிடியே அஞ்சாவது வரைக்கும் ஒரு குத்துமதிப்பாத் தான் தெரியும். எட்டாவது வரைக்கும் ஆங்கில எழுத்து m சரியாக எழுத வராது. எங்க ஆங்கில வாத்தியார் தண்டனையாக “mummaa mumma mummy” என்று ஒரு நோட்டு முழுக்க எழுத வைத்து விரலை உடைத்தார்.//

  இன்ன வரைக்கும் எங்களுக்கு இங்கீலீசு அப்படித்தான்யா? எதையோ குத்துமதிப்ப பேசித்தான் கம்பனில காலத்த ஓட்டிட்டு இருக்கோம்…..

  //மானவர்களுக்கு//
  உங்களுக்கு தமிழ்மா’ன’ம் சாஸ்தின்னு தெரியுது. அதுக்காக மாணவர்களை மானவர்கள்னு எழுதுறது ஓவரு. ஏதோ பேருலயாவது மானம் இருக்கட்டும்ன்னு நினைச்சீங்களா என்ன?

  //ஆபத்பாண்டவனாக///

  யோவ் அது ஆபத்பாந்தவன்யா…. அவ்வ்…….

  //சுப்பிரமனியன்//
  அது ‘மனி’ இல்ல ‘மணி’. ஏக் காவும் மே ஏக் ‘மணி’ ரஹதாத்தா….

  மணி… மணி.. எங்க திரும்ப சொல்லு….

  //படிப்பது என்பது வேறு என்றும் வேலை அனுபவம் வேறு என்றும் பிறகு புரிந்தது. இன்னொரு விசயம் என்னவென்றால் நமது கல்வி முறை என்பது நம்மை புதிதாக எதையும் முயற்சிக்கும் படி தூண்டுவதில்லை – ஏற்கனவே இருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அதுவும் ஒரு முப்பது வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைப் பற்றி தான் பேசுகிறது. அதுவும் எப்படி பேசுகிறது – பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து விட்டு ஊருக்குப் போய் சொல்லுவதைப் போல எட்டி நின்று பேசுகிறது. நம்மையும் பயமுறுத்தி தூர நிற்க வைத்து விடுகிறது. உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை.//

  இது வரை எழுதியுள்ள கட்டுரைகளிலேயே மிக நேர்த்தியானவற்றுள் ஒன்று இது. இது போல அனுபவக் கட்டுரைகள், கதைகளை அதிகம் எதிர்பார்க்கிறோம்.

  தோழமையுடன்,
  தோழன்

  பின்னூட்டம் by தோழன் | மே 6, 2010 | மறுமொழி

  • நன்றி தோழர்,

   இந்த எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன். அடுத்த பதிவில் கூடுதல் கவனம் கொடுக்கிறேன்.

   பின்னூட்டம் by kaargipages | மே 6, 2010 | மறுமொழி

 3. மிக அருமை தோழர் கார்க்கி! வினவு கட்டுரையை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிக் கல்வியை கோட்பாடு ரீதியாக மட்டுமே புரிந்திருந்த எனக்கு நடைமுறையில் தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவத்தை விளக்குவதில் பிரச்சினை இருந்தது. உங்களது விளக்கத்தின் மூலம் புதிய விசயங்கள் நிறையக் கற்றுக் கொண்டேன். அடுத்து நடைமுறையிலும், நவீனத்துவத்திலும் தொடர்பே இல்லாத நமது கல்வி முறையின் அபத்தத்தை உங்களது அனுபவம் சிறப்பாக வெளிக் கொண்டு வந்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

  கொசுறு: உங்கள் தமிழில் ன, ண பிரச்சினை இருக்கிறது. மாணவர்கள், எண்ணங்கள் எல்லாம் மூன்று சுழி ண வில் வரும். இதை பேசுவதை வைத்து உணரலாம். ன எனும் இரண்டு சுழி எழுத்தை நாம் நாக்கின் முன்பகுதி முன்பல் வரிசையை ஒட்டி தொட்டு பேசுவோம். அதுவே ண எனப்படும் மூன்று சுழி எழுத்தை நடுநாக்கின் மேலபகுதியை முன்நாக்கால் மடித்து தொட்டு பேசுவோம். இதை புரியும் விதத்தில் நான் எழுதியிருக்கிறேனா என்று சந்தேகம். எனவே நீங்கள் ன, ண இரண்டையும் உச்சரித்து அதற்காக நாக்கு பயன்படும் வித்தியாசத்தை உணரலாம்.

  அடுத்து கல்வி முறை பற்றிய பதிவர்களின் தொடர் சிறப்பாக வரும் பட்சத்தில் அதை ஒரு புத்தகமாக போடலாம் என்று தோன்றுகிறது.

  ஆங்கிலம், தமிழ் பிரச்சினையை நீங்கள் தனிச்சிறப்பான ஒரு இடுகையாக எழுத வேண்டுமென்பது கோரிக்கை.

  பின்னூட்டம் by வினவு | மே 6, 2010 | மறுமொழி

 4. வினவு

  //மிக அருமை தோழர் கார்க்கி! வினவு கட்டுரையை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது.//

  உண்மை….

  ஒரு சமுதாயத்தின் நூற்றாண்டு கால பிரச்சனையையும்
  ஒரு சமுதாயம் முன்னேறாமல் போன காரணத்தையும் உங்களின் இந்தப் பதிவு அருமையாக வெளிக் கொணர்ந்துள்ளது.

  பதிவில் உள்ள பல சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்தவைதான்.

  நமது பாடத்திட்டம் நம் சமுதாயத்தின் எத்தனை விஞ்ஞானிகளை அரும்பும்போதே அழித்துவிட்டது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.

  நம் சுய சிந்தனையையும் சுய ஆற்றலையும் வெளிக்கொணரத் தடையாக இருந்த இந்த கல்வித்திட்டம் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நம் சமுதாயத்தைச் சீரழிக்குமோ?…….

  பின்னூட்டம் by Cheenu | மே 6, 2010 | மறுமொழி

 5. பதிவுலகிற்கு புதிது நான் ஆனால் மிக அருமையான கட்டுரையை படித்த திருப்தி.

  பின்னூட்டம் by முத்தூரான் | மே 6, 2010 | மறுமொழி

 6. //ஒரு விடையின் முதல் வரியும் கடைசி வரியும் சரியாக இருக்க வேண்டும் என்றும், நன்றாக மார்ஜின் விட்டு எழுத வேண்டும் என்றும், படங்களைத் தெளிவாக போட வேண்டும் என்பதிலும்
  கவனம் செலுத்தச் சொன்னார். மேலும், விடைத்தாளில் சரியான வாக்கியங்களின் கீழும் துனைத் தலைப்புகளின் கீழும் பென்சிலால் அடிக் கோடிட்டு காட்ட வேண்டும் என்றும் சொன்னர். இப்படியாக விடைத்தாள்களைத் திருத்திய ஆசிரியர்கள் நாங்கள் செய்த டெக்கரேசன் வேலைகளில் ஏமாந்து போய் தான் எங்களை பாசாக்கி இருக்க வேண்டும்// இது தெரியாம இத்தன வருசமா இருந்துட்டேனே வரபோற ஆராய்ச்சி பட்டம் பெறுவதற்கான தேர்வில் முயற்சி செய்து பார்கிறேன். பிடித்த பாடம் என்பதை விட வேலை கிடைக்கும் படிப்பு எது என்பதே என் தெரிவாக இருந்தது. அன்றாட கூலி வேலையும் குத்தகை விவசாயம் செய்யும் குடும்பத்தில் பிறந்து எதிர்கால குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதை உணர்தவனுக்கு வேறு என்ன தெரிவாக இருக்க முடியும்.இளங்கலை வரை தமிழில் படித்து உணர்ந்த பாடத்தை பார்த்து எழுதும் அவசியம் இல்லாமல் இருந்தது. பாடவேளையில் கேட்கும் கேள்விகளுக்கு மிக எளிதாக பதில் சொல்ல முடியும் எனக்கு பரிச்சையில் படித்ததை எல்லாம் வாந்தி எடுத்து மதிப்பெண் பெறும் கலை இன்று வரை தெரியவில்லை.ஆங்கில பாடத்தில் தான் நான் முதல் முறையாக தேர்ச்சி பெறாமல் தவறியது அதை தேர்ச்சி பெற கேள்வி தாளில் உள்ள ஆங்கில வார்த்தைகளையும் தெரிந்த ஆங்கில வார்த்தைகளை போட்டு பக்கத்தை நிரப்பியது தனி கதை.கேள்விகளும் நான் என்ன படித்து புரிந்து கொண்டேன் என்பதை சோதிப்பதற்கு எந்த வாய்ப்பையும் வழங்கவில்லை.அந்த வாய்ப்பை மதுரை பல்கலை கழகம் முதுநிலை கல்விக்கான நுழைவு தேர்வு வழங்கியது நானும் முதல் பத்து மாணவர்களில் எழாவது மாணவனாக வந்தேன்.பிறகு சென்னை பல்கலை கழகத்தில் சேர்ந்து முதல் நாள் ஆங்கில வகுப்பு அன்றே முடிவு செய்தேன் என் கல்வி பயணத்தை இதோடு முடித்து கொள்வதென்று.முதல் வரிசையில் அமர்த்த நான் கடைசி வரிசையை தேர்வு செய்தேன்.பகுப்பாய்வு வேதியலில் அனைவரும் அரசு கலை கல்லூரி மாணவர்களாகவும் பெரும்பாலும் ஒரே குடும்ப பின்னணியை கொண்டவர்களாகவும் அமைந்தது தனி சிறப்பு.தேர்வின் போது எங்கள் போர் வியூகம் என்றும் தோற்றது இல்லை. பார்த்து எழுதியவன் அதிக மதிப்பெண் எடுத்தாலும் நம்ம பையன்தானே என்ற நட்புணர்வு வருமே தவிர பொறமை கொண்டதில்லை நாங்கள்.ஆய்வு நோட்டுகள் எழுதிய மாணவர்கள் எழுதாத மாணவர்களுக்காக ஆசிரியரிடம் கொடுக்காமல் ஒன்றாக வாங்கி கட்டி கொண்டதுமுண்டு.ஆனால் ஒற்றுமையை விட்டு கொடுத்ததில்லை அதனாலேயே ஆசிரியர்களால் எங்களை மிரட்ட முடிவதில்லை. நாங்கள் ஒரே இலையில் உணவு உண்பதை பார்த்து முகம் சுளிக்காதவர்கள்  இருக்க முடியாது அதே சமயம் எங்கள் ஒற்றுமையை கண்டு நெகிழதவர்களும் இருக்க முடியாது.ஆங்கிலத்தில் உள்ள புத்தகங்களை படிப்பதே பெரிய விசயமாக இருக்கும் போது அதை புரிந்து கொள்வது எப்படி? தெளிவாக புரியும் வண்ணம் எழுதவது எப்படி ? இருப்பினும் ஆங்கிலம் பேச அவதிப்படும் என் நண்பன் அடிப்படை ஆங்கிலத்தை வைத்து கொண்டு பீட்டர் விடும் மாணவர்களுக்கும் பாடம் எடுத்ததை மறக்க வியலாது அதற்காக அவன் எடுத்து கொண்ட முயற்சி அதிகம் என்றாலும் அதை பார்த்த எங்களுக்கு ஆங்கிலத்தை பேசுபவர்களை ஆ வென்று பார்க்கும் எண்ணத்தை மாற்றியது. எல்லாம் தெரிந்த என் நண்பன் எத்தனையோ கேள்விகள் இருந்தாலும் பல பொது இடங்களில் அமைதியாக இருந்ததும் உண்டு. நாங்கள் பார்த்து எழுதாத பிட்டு வைத்து எழுதாத தேர்வுகள் இல்லை இன்று அனைவரும் மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் ஆராய்ச்சி மாணவர்களாகவும் உள்ளோம். இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்கள் என்ன படிக்கிறார்களோ அதை ஆய்வகங்களில் ஆய்வு செய்யும் மாணவர்களின் அறிவுறுத்தலில் செய்து பார்பதையும் அது தொடர்பான பாட திட்டத்தை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதையும் தவறும் போது அதையும் அந்த aasiriyaraiyum  புறக்கணித்து விட்டு வேறு பாடத்திட்டத்தை தேர்வு செய்வதையும் பார்க்கும் போது நமது மாணவர்களுக்கு எப்போது இவை வாய்க்கும் என்ற ஆதங்கமே மேலிடுகிறது.

  பின்னூட்டம் by baskar | மே 6, 2010 | மறுமொழி

 7. கல்வி முறையின் அவலங்களை உங்கள் பார்வையில் நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சங்கர்!

  பின்னூட்டம் by ☼ வெயிலான் | மே 6, 2010 | மறுமொழி

 8. தோளில் கைப்போட்டு பேசுவது போல் அருமையான கட்டுரை வாழ்த்துக்கள் 11வயதில் என்னுடைய அத்தாவுக்கும் அம்மாவுக்கும் (தலாக்) விவாகரத்து ஆகி நானும் என் தாயும் வறுமையில் கஷ்ட்டப்பட்ட போது நான் படிக்க ஆசைப்பட்டேன் ஒவ்வோரு சொந்த காரய்ங்ககிட்டபொயி காலையில் எனக்கு சாப்பாடு வேனாம் மதியம் சத்துணவு சாப்பாடு சாப்புட்டுகிரேன் இரவு ஒரு வேல சாப்பாடு குடுங்கய்யா நான் படிக்கிறேன்னு சொல்லி கேஞ்சிருக்கேன் 2வருடம் தம் கட்டி படிச்சேன் முடியால 13வயதில் ஜவுளிக்கட வேலைக்கி போயிட்டேன் படிச்சது 8ப்பு பாதிவரை என்னுடைய படிப்பின் இலச்சனத்த என்னுடைய எழுத்துபிழைளை கொண்டே நீஙகள் தெரிந்துக்கொள்ளலாம் நன்பர் கார்க்கி என்னை மாதிரியே எழுவதை நினைத்து மனதிற்குள் ஒரு சந்தோஷம்

  பின்னூட்டம் by ஹைதர் அலி | மே 7, 2010 | மறுமொழி

  • உங்களது ஆரம்பகட்ட வாழ்க்கைக்காக மிகவும் வருந்துகிறேன் தோழரே! மறுமுறை நாம் போனில் பேசும் போது நான் கூட சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்,

   படிப்பில் முதல் மாணவனாக இருந்தும் தொடர முடியாமைக்கு உங்களைப்போலவே எனக்கும் ஒரு காரணம் உண்டு!

   பின்னூட்டம் by வால்பையன் | மே 7, 2010 | மறுமொழி

 9. ஹைதர்அலி,

  பள்ளி கல்லூரி படிப்பை தவற விட்டதில் நீங்கள் வாழ்க்கையில் ஏதும் தவற விடவில்லை என்பதே உண்மை. வாழ்க்கையும் சமுதாயமும் கற்றுத்
  தரும் பாடம் தான் மிகப் பெரியது – அவசியமானதும் கூட.

  பள்ளிக் கல்வியால் எனக்கு என் தாய் மொழியையே சரியாக கற்றுத் தர முடியாத போது – சூழ்நிலையும் வாழ்க்கையும் எனக்கு இரண்டு அன்னிய
  மொழிகளை கற்றுத் தந்துள்ளது. கல்லூரிக் கல்வியால் கிடைத்த வேலை போனால் மயிராச்சு ஒரு செட் போட்டு உக்காந்துக்கடா
  என்கிற தில் வெளியில் கற்றுக் கொண்ட மெக்கானிக் வேலை தான் கொடுத்துள்ளது.

  பின்னூட்டம் by kaargipages | மே 7, 2010 | மறுமொழி

 10. மிக அருமை கார்க்கி. பழைய நினைவுகள் வருகின்றன. மிக்க நன்றி.

  பின்னூட்டம் by அன்பரசு செல்வராசு | மே 7, 2010 | மறுமொழி

 11. அறுமையான அனுபவப் பதிவு. பரிந்துரைத்த வினவுக்கு நன்றி. வினவின் மதிப்பீடு போலவே இக்கட்டுரையில் சமூக அம்சம் துலக்கமாய்த் தெரிகிறது. பள்ளி, கல்லூரிப் படிப்பும், சான்றிதழும் என்னைப் பொருத்தவரை ’ஓட்டக் காலணா’ மாதிரி. அது வழியாகத்தான் வாழ்க்கையில் முண்டியடித்து நுழைய வேண்டியிருந்தது. ஆனால், எவ்வளவு நெருக்கமாக வைத்தாலும் அதுவழியாக வாழ்க்கையைப் பார்க்க முடியாது. கடிவாளமற்ற கண்களால் எதார்த்தத்தைப் பார்க்கும்போது எல்லாப் பக்கமும் கொக்கிமுள்ளில் மாட்டிய சேலை போல பரிதாபகரமாக இருக்கிறது. அவ்வளவு முரண்பாடுகள், அவ்வளவும் முரண்பாடுகள்.

  பின்னூட்டம் by anamadeyan | மே 7, 2010 | மறுமொழி

 12. thanks for making me to remember my golden days.

  பின்னூட்டம் by madurai saravanan | மே 8, 2010 | மறுமொழி

 13. கல்லூரிக் காலத்தில், தமிழ்வழியில் பயின்ற பல மாணவர்கள் படுகிற சிக்கல்களைக் கவனித்திருக்கிறேன். விரிவுரையாளர்கள் ஆங்கிலத்தில் தயாரித்து வந்த குறிப்புகளை வாசித்து அதை வார்த்தை விடாமல் எழுதிக் கொள்ளச் சொல்லுவார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் இவ்வாறாகவே குறிப்புகளை வாசிப்பார்கள். ஐந்தாறு வாரங்களுக்குப் பிறகு சிலபஸ் முடிஞ்சிருச்சு என்று சொல்லி மாத்தி மாத்தி டெஸ்ட் வைப்பார்கள்.

  ஏதோ சடகோபன் என்ற மகானுபாவர் மலிவு விலையில் நோட்ஸ் எழுதி வெளியிட்டதால் எங்களில் பல பேர் பிழைத்தோம்.

  வினவு கட்டுரையில் சொல்ல விட்டுப்போன தொடர்ச்சியாகவே இந்தப் பதிவைக் கருத வேண்டியிருக்கிறது. வருமானமில்லாமல் படிப்பை விட்டவர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக ஆங்கிலத்தால் படிப்பை விட்டவர்களும் இருப்பார்களோ என்றுதான் அஞ்ச வேண்டியுள்ளது.

  // இளங்கலை மற்றும் முதுநிலை படிக்கும் மாணவர்கள் என்ன படிக்கிறார்களோ அதை ஆய்வகங்களில் ஆய்வு செய்யும் மாணவர்களின் அறிவுறுத்தலில் செய்து பார்பதையும் அது தொடர்பான பாட திட்டத்தை அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்வதையும் தவறும் போது அதையும் அந்த aasiriyaraiyum புறக்கணித்து விட்டு வேறு பாடத்திட்டத்தை தேர்வு செய்வதையும் பார்க்கும் போது நமது மாணவர்களுக்கு எப்போது இவை வாய்க்கும் என்ற ஆதங்கமே மேலிடுகிறது.//

  நீண்ட இந்த வாக்கியத்துக்காகவும் நாட்டிலுள்ள கல்விமுறைக்காகவும் ஒரு சேர பெருமூச்சு விடத்தான் முடிகிறது தோழரே.

  பின்னூட்டம் by விஜய்கோபால்சாமி | மே 10, 2010 | மறுமொழி

 14. அருமையான கட்டுரை.

  நானும் அப்படித்தான் நினைக்கிறேன், வினவு கட்டுரையின் துள்ளலான தொடர்ச்சி. எனக்கு ஆங்கிலத்தில் வரும் பிழைகளோடு ஒப்பிட்டால் உங்களின் பிழைகள் ஒன்றுமேயில்லை. எழிலான நடையில் சொல்லவேண்டியதை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

  செங்கொடி

  பின்னூட்டம் by செங்கொடி | மே 12, 2010 | மறுமொழி

 15. அருமையான கட்டுரை.

  நானும் அப்படித்தான் நினைக்கிறேன், வினவு கட்டுரையின் துள்ளலான தொடர்ச்சி. எழிலான நடையில் சொல்லவேண்டியதை மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

  எனக்கு ஆங்கிலத்தில் வரும் பிழைகளோடு ஒப்பிட்டால் உங்களின் பிழைகள் ஒன்றுமேயில்லை.

  செங்கொடி

  பின்னூட்டம் by செங்கொடி | மே 12, 2010 | மறுமொழி

 16. எழுத்தில் பிழையிருந்தால் என்ன! மீண்டும் படிக்கத் தூண்டும் நடை. மிக அருமை. நமது நாட்டு கல்வியின் அவலத்தை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.
  உங்களைப் போன்ற அனுபவம் ஒன்று எனக்கும் இன்னமும் உண்டு. 12ம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு நாளொன்றில் தாவரவியலை படித்து விட்டு தேர்விற்குச் சென்றேன், சென்ற பிறகுதான் தெரிந்தது அன்று இயற்பியல் தேர்வு என்று. ஆங்கில மீடியம் என்பதால் நம்மால் சமாளிக்க முடியாது என்று தேர்வு எழுதாமலேயே திரும்பி விட்டேன். அந்நிகழ்ச்சி இன்னமும் என் கனவில் வந்து பயமுறுத்துகிறது. கனவில் நாம் பள்ளிக்கூடத்திற்கு இன்னமுமா சென்று கொண்டிருக்கிறோம் என்று திடுக்கிட்டு எழுந்துகொள்வேன். நிகழ்காலத்தை உறுதி செய்த பின்னரே உறங்குவேன்.

  பின்னூட்டம் by கலை | மே 19, 2010 | மறுமொழி

 17. நமது கல்வி முறை என்பது நம்மை புதிதாக எதையும் முயற்சிக்கும் படி தூண்டுவதில்லை – ஏற்கனவே இருப்பதைப் பற்றி மட்டுமே பேசுகிறது. அதுவும் ஒரு முப்பது வருடங்களுக்கு முந்தைய தொழில்நுட்பத்தைப் பற்றி தான் பேசுகிறது. அதுவும் எப்படி பேசுகிறது – பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்து விட்டு ஊருக்குப் போய் சொல்லுவதைப் போல எட்டி நின்று பேசுகிறது. நம்மையும் பயமுறுத்தி தூர நிற்க வைத்து விடுகிறது. உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை.

  very impressive….

  பின்னூட்டம் by rrajbe | மே 23, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: