கார்க்கியின் பார்வையில்

மஞ்சள் நிற பூதம்…!

பாவம் புண்ணியம் சாபம் என்பதெல்லாம் ஒருவேளை உண்மையாக இருக்குமானால் உலகிலேயே மிக அதிக பாவத்தையும் சாபத்தையும் சுமந்து வரும் ஒரு வஸ்த்து தங்கமாய்த் தான் இருக்க முடியும். உங்கள் இதயத்துக்குக் காதுகள் இருக்குமானால் அழகான வளைவுகளோடும், நுண்ணிய வேலைபாடுகளோடும் பெண்களின் கழுத்தில் ஆடும் நகைகளின் உரசல் சப்த்தத்தில் நீங்கள் ஐரோப்பிய தங்க வேட்டையர்களின் துப்பாக்கிச் சப்தங்களையும், அந்த ஈயக் குண்டுகளால் லட்சக் கணக்கில் உயிர்களை விட்ட செவ்விந்தியர்களின் கதறல்களையுமே கேட்டிருப்பீர்கள். அந்தத் தங்க வேட்டையர்கள் முத்து காமிக்ஸில் கேப்டன் டைகரின் சகாவாக வரும் கிழட்டுத் தங்க வேட்டையன் ஜிம்மியைப் போன்ற கோமாளிகளல்ல.. இரத்த வெறியாலும் கொலை வெறியாலும் உந்தித் தள்ளப்பட்ட மத்திய காலத்திய ப.சிதம்பரங்கள்.

தங்கம் மரணத்தின் நிழல். புனிதமாகப் போற்றப்படும் திருமணச் சடங்களின் மங்களக் குறியீடான அதே தங்கம் தான் கோடிக்கணக்கான செவ்விந்தியர்கள் அம்மைக் கிருமி தோய்ந்த கம்பளிக்குள் வெளிப்படுத்திய மரணக் கேவல்களின் குறியீடும் கூட. வரலாறு என்பது சிதம்பரங்களின் விரும்பியபடியெல்லாம் எழுதப்படும் என்றால் இன்னும் ஒரு மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் முத்து காமிக்ஸில் டெக்ஸ் வில்லருக்கும் கிட் கார்சனுக்கும் பதில் மன்மோகனும் சிதம்பரமும் நாயகர்களாக வரக் கூடும். டெக்ஸுக்கும் கார்சனுக்கும் செவ்விந்திர்களிடமிருந்து கைப்பற்ற
தங்கமும் நிலமும் இருந்தது என்றால் இவர்கள் கண் முன்னே எண்ணற்ற கனி வளங்களும் நிலமும் விரிகிறது. அன்று அமெரிக்க கண்டத்திலும் ஆப்ரிக்க கண்டத்திலும் இன்று கோலார் சுரங்கத்தின் இருட்டுப் பொந்துகளுக்குள்ளும் இந்த மஞ்சள் உலோகம் விளைவித்த மரணங்களின் எண்ணிக்கையை ஆயிரம் ஹிட்லர்கள் வந்தாலும் அடித்துக் கொள்ள முடியாது.

தங்கம் என்பது வக்கிரம். நாளுக்கு இருபது ரூபாய்கள் சம்பாதிக்கும் மக்களை 80 சதவீதம் கொண்ட அதே நாடு தான் உலகத்தில் உற்பத்தியாகும் தங்கத்தில் 25% சதவீதத்தை நுகர்கிறது. ஓரிரு பவுன் குறைந்து போனதால் சமையலறை விபத்துகளின் கருகிப் போன மலர்களைக் கொண்டிருக்கும் அதே நாட்டில் தான் வருடத்துக்கு 800 டன் தங்க நகைகள் நுகரப்படுகிறது. ஜெயா-சசியின் அந்தப் புகழ் பெற்ற நிழற்படத்தை
அத்தனை சுலபத்தில் மறந்து விட முடியுமா?

அதே தங்கம் மனித உழைப்பின் உச்சத்தைக் குறிக்கும் குறியீடாகவும் இருப்பது ஒரு நகை முரண் தான். மலைகளின் கணத்தை ஒத்த கடும் பாறைகளைப் பிறந்து, பூமிக்கு அடியில் – பிராணவாயு குறைந்த அந்த சுரங்கத்துக்குள் – பாதுகாப்பு சாதனங்கள் ஏதுமின்றி – உயிரைப் பனயம் வைத்து வெட்டியெடுத்து வரும் ஒரு டன் கச்சாப் பொருளில் இருந்து ஓரிரு கிராம் தங்கத்தைப் பிரித்தெடுப்பதிலாகட்டும்; அந்தத் தங்கத்தை எங்கோவொரு பட்டரையின் இருட்டு மூலையில் தலைக்கு மேல் தொங்கும் குண்டு பல்பின் வெளிச்சத்தில் நாளெல்லாம் சூழ்ந்து நிற்கும் அமிலத்தின் நெடியை சுவாசித்து ஆஸ்த்துமாவை சம்பளமாகவும், மூல நோயை போனஸாகவும் பெற்று ஓரு அழகான நகையாக வார்த்தெடுப்பதிலாகட்டும்; அது அந்த நகையில் காணும் நெளிவு சுழிவுகளின் அழகு மாத்திரமல்ல – அது உழைப்பின் அழகு. அங்கே ஜொலிப்பது வெறும் உலோகமல்ல –  உழைப்பு.

எழுதப்பட்டுள்ள வரலாற்றின் சுவடுகள் நெடுக இந்த மஞ்சள் உலோகம் பற்றிய குறிப்புகளும் அதற்காக சிந்தப் பட்ட சிவப்பு இரத்தமும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இந்தியவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தீர்க்கமான வரலாறு இப்போது கிடைக்காவிட்டாலும் ஆங்காங்கே சிதறிய அளவில் கிடைக்கும் குறிப்புகளில் தங்கத்தின் பயன்பாடு  குறிக்கப்பட்டுள்ளது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே பஞ்ச நதியைக் கடந்து வரும் ஆரியர்கள் இங்கே வாழ்ந்து வந்த ‘அசுரர்கள்’ தமது கழுத்துகளில் மஞ்சளான ஏதோவொரு உலோகத்தாலான அணிகலன்களை அணிந்துள்ளார்கள் என்றும் அவர்கள் நாகரீகமில்லாமல் வீடுகளுக்குள் வாழ்கிறார்கள் என்றும் அவர்களை அழிக்க படைகளோடு வந்து உதவுமாறும் தமது படைத்தலைவன் இந்திரனை வேண்டியழைப்பது சதபத பிரமானம் எனும் ஒரு பழமையான பிரமானத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது. மிட்டானிய மன்னன் டுஷ்ரட்டா ‘எகிப்து தெருக்களில் இருக்கும் தூசை விட அங்கே தங்கம் அதிகமுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நாகரீகமற்ற காட்டுமிராண்டி நாடோ டிகளான ஆரியர்கள் ஆரம்பத்தில் தங்கத்தைக் கண்டு அஞ்சினாலும் பிற்பாடு அதை சுவீகரித்துக் கொண்டனர். காட்டுமிராண்டிச் சடங்குகளாய் இருந்த பார்ப்பணிய சடங்குகள் நிலைபெற்று மதமாக மாறிய போது அவர்கள் உருவாக்கிய கடவுளர்களை நடமாடும் ஜூவெல்லரிக் கடைகளாய்ப் படைத்தனர். அந்தக் கடவுளர்கள் தங்கத்தேர்களில் ஊர்சுற்றியலைவதும், தங்கக் கிரீடம் வைத்துக் கொண்டிருப்பதும்,
கையிலிருந்து தங்க காசுகள் பீரிட்டுப் பாய்வதும் என்று தங்கம் தூய்மையின் குறியீடாக உள்வாங்கிக் கொள்ளப்பட்டது. தங்கம் வைத்திருப்பது ஐசுவரியத்தை கொடுக்கும் என்பது போன்ற நம்பிக்கைகளால் கலாச்சார அரங்கில் தங்கத்தின் முக்கியத்துவம் சிறிது சிறிதாக நிலை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஒரு பொருளின் மதிப்பு அதன் உருவாக்கத்தில் செலுத்தப்படும் உழைப்பு மற்றும் அது எத்தனை எளிதில் கிடைக்கிறது என்பதைக் கொண்டு தீர்மானமாகும். தங்கத்தின் உருவாக்கத்திற்கு அளவற்ற உழைப்பு தேவைப்பட்டதோடு அது அரிதாகக் கிடைக்கக் கூடியதாயும் இருந்தது. மேலும் அது சீக்கிரத்தில் பொலிவிழக்காத தன்மையும் கொண்டிருந்தது. இவையெல்லாவற்றோடும் சேர்ந்து அதற்கு உலகெங்கும் இருந்த மதம் மற்றும் காலாச்சாரங்களில் இருந்த செல்வாக்கால் அது ஒரு மதிப்பு மிக்க உயர்ந்த இடத்தை இயல்பாகவே பெற்றது. ஒரு கட்டத்தில் அது பொதுவான
பரிவர்த்தனை நானயமாகவும் இருந்தது. சமீபத்தில் எழுபதுகள் வரையில் உலத்தின் பொதுவான வர்த்தக நாணயமான அமெரிக்க டாலரின் மதிப்பும் கூட அவர்களிடம் இருந்து ரிசர்வ் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டது.

சாதாரண உழைக்கும் மக்களுக்கு தங்கம் என்பது நிலையான ஒரு சேமிப்பு. அதன் மங்காத தன்மை, நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கும் பண்பு, எப்போது வேண்டுமானாலும் அதை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் தன்மை ஆகியவற்றால் உழைக்கும் மக்களும் நடுத்தர மக்களும் தங்கத்தை சேமிப்புக்கான ஒரு பொருளாகவே தங்கத்தை மதித்தனர். மேட்டுக்குடியினர் தங்கம் வாங்கும் போது அதில் அதிகளவு வேலைப்பாடுகள் நுணுக்கங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நடுத்தர வர்க்கத்தினரோ குறைவான வேலைப்பாடுகளும் நுணுக்கங்களும் இருக்க வேண்டும் என்று விரும்பினர் – அது சேதாரம் குறைவு என்பதாலும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் நகைப் பெட்டகமான அடகுக் கடையில் அதிகமாக மதிப்பிடப்படும் என்பதாலும் தான்.

இங்கே பொதுவில் தங்க நகை உருவாக்கம் என்பது முழுவதுமாக ஒரு நிலபிரபுத்துவ பாணியிலான உற்பத்தியாகவே இருந்தது. தங்க ஆசாரிகள், தமது வீடுகளிலேயே பட்டறைகளை அமைத்திருப்பர்; அவர்களது மொத்த குடும்பமும் சேர்ந்து நகை உருவாக்கத்தில் ஈடுபடும். நகை தேவைப்படுவோர் தங்கத்தை (நகையாகவோ, நாணயமாகவோ) ஆசாரியிடம் கொடுத்தால் அவர் நகையாக வார்த்துத் தருவார். ஒரு நகையின் டிசைன்/ மாடல்
போன்றவற்றைத் தீர்மாணிப்பதில் இருந்து அதில் கல்பதிப்பது, அந்த நகையில் இருக்கும் பால்ஸ், கம்பி போன்றவைகளை டிசைனுக்குத் தகுந்தவாறு நுணுக்கமாக பொருத்துவது, மெருகூட்டுவது என்று அதன் உருவாக்கத்தின் சகல அம்சத்திலும் அந்த ஆசாரியே பங்குபெற்றிருப்பார். இவ்வகையான உற்பத்தி முறையில் ஒரு நகையை உருவாக்க அதன் வேலைப்பாடுகளின் நுணுக்கத்தைப் பொருத்து ஒருவாரமோ பத்துநாளோ ஆகலாம்.

மேலும் இவ்வகையிலான உற்பத்தியில் பெரும்பாலும் ஒரு குறிப்பாக ஆசாரி சாதியினரே கோலோச்சினர். ஆசாரிகளிலும் நகை வேலை செய்வோர், மரவேலை செய்வோர், இரும்பு வேலை செய்வோர், சிற்ப வேலை செய்வோர், கட்டிட வேலை செய்வோர் என்று வெவ்வேறு உட்பிரிவினர். இதில் பார்ப்பனியம் நகை வேலை செய்யும் ஆசாரிகளுக்கு மட்டும் பூனூல் மாட்டி அழகு பார்த்திருக்கிறது என்பது இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லா
விட்டாலும் ஒரு சுவாரஸ்யமான குறிப்பு.

இந்தப் பட்டரைகளில் வேலை கற்றுக் கொள்வதும் அத்தனை எளிதல்ல. பல ஆண்டுகள் எடுபிடியாக வேலை செய்தாக வேண்டும். சாதி பிரதானம் என்பதால் சொந்தக்காரர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து தொழில் கற்றுத் தருவார்கள். பொதுவாக பள்ளிப் படிப்பை முடித்தோ முடிக்காமலோ
தொழிலுக்கு வந்தால் தான் திருமணத்துக்கு முன் சொந்தமாக பட்டரை போடும் அளவுக்குக் கற்றுத் தேற முடியும். தொழில் நெருக்கமாக நடக்காத பகுதிகளில் (உதாரணமாக திருநெல்வேலி என்று வைத்துக் கொள்வோம்) ஒரே ஆசாரியே கம்மல், மூக்குத்தி, ஆரம், ஒட்டியானம், மோதிரம், தாலி என்று எல்லா ஆபரனங்களையும் செய்யும் திறன் பெற்றிருந்தால் தான் பட்டரை போட முடியும் – எனவே அந்தப் பகுதிகளில் பெரும்பாலும்
ஆசாரிகளின் குடும்பங்கள் கூட்டுக்குடும்பமாகவோ அல்லது தனிக்குடித்தனமாய் இருந்தாலும் தொழில் ஒன்றாகவோ தான் இருக்கும். ஏனெனில் இந்த எல்லா வேலைகளையும் கற்றுத் தேற நடுத்தர வயதாகி விடும் (ஆர்டரும் அடிக்கடி வராது).

நகைத் தொழில் நெருக்கமாக நடக்கும் கோவை போன்ற பகுதிகளில் கம்மல் ஆசாரி, தாலி ஆசாரி என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகவோ அல்லது ஓரிரண்டு வகைகளுக்கு ஒருவராகவோ இருப்பார்கள்.

இந்தப் பழையகால உற்பத்திமுறையில் தங்க நகை வடிவமைப்பு பல நூற்றாண்டுகளாக அப்படியே தேங்கி நின்றது. ஏனென்றால் நுகர்வு குறைவு. தேவைக்கதிகமாக வாங்கிப் பூட்டி வைப்பது என்பது போன்ற வழக்கங்கள் மிக மிக சில மேட்டுக்குடி குடும்பங்களிலேயே இருந்தது. மேலும் உற்பத்தி அதிகமாகி அதை சந்தையில் தள்ளியாக வேண்டும் எனும் கட்டாயம் எழவில்லை. இந்தியாவில் வரலாற்று ரீதியாக முதலாளித்துவ உற்பத்தி வளராமல் தேங்கியதற்கு என்ன காரணமோ அதே காரணமே தங்க நகைத் தொழிலின் உற்பத்தி முறை வளராமல் தேங்கியதற்கும் காரணியாக இருந்தது.

இதே நிலை ஏறக்குறைய தொன்னூறுகளின் துவக்கம் வரையில் அப்படியே தான் நீடித்தது – பொருளாதார தாராளமயமாக்கம் புகுத்தப்படும் வரை. உலகமயம் தாராளமயம் தனியார்மயம் மற்ற துறைகளில் ஏற்படுத்தியதைப் போலவே தங்க நகைத் தொழிலிலும் பெரும் மாற்றங்களைக் கோரியது. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் நுகர்வு வெறியுடன் கூடிய ஒரு புதிய ரக மேல் நடுத்தர வர்க்கம் ஒன்று புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் உருப்பெற்று எழுந்தது.

பொதுவில் நகைகள் நுகர்வு என்பது தொன்னூறுகளின் மத்தியிலிருந்து ஒரு மாற்றத்துக்குள்ளாகிறது. மறுகாலனியதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் திணிக்கப்பட்ட வங்கிச் சீர்திருத்தங்களின் காரணமாக சேமிப்புக்கான வட்டி வீதம் குறைக்கப்பட்டது; இது மக்களை தேக்குமர திட்டம், சவுக்குமர திட்டம் போன்ற பிளேடு கம்பெனிகளின் பின்னே விரட்டியடிக்கிறது. அவர்களின் கவர்ச்சிகரமான வட்டி சதவீதங்களால் மயங்கி அங்கே முதலீடு செய்து கடுமையாக பதம் பார்க்கப்பட்டவர்களுக்கு எப்போதும் நிலையாக உயரும் தங்கத்தின் விலை ஒரு கவர்ச்சிகரமான சேமிப்பு இலக்கானது.

இதுவும் போக, எழுந்து வந்த ஐ.டி துறை போன்ற சேவைத் துறைகளால் ஐந்திலக்க சம்பளம் என்பது சாதாரணமாகிவிட்டதால், அத்துறைகளின்
மாப்பிள்ளைமார்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனப்பெண் வீட்டை ரத்தம் வர கறப்பதற்கான வாய்ப்பு கூடி, வரதட்சினைக் கொள்ளையின் அளவும் கூடியது. இன்னொரு பக்கம் புதியதாக உருவான புதிய ரக மேல் நடுத்தர் வர்க்கத்தாரின் வெறி கொண்ட நுகர்வு.

இது காசுக்கொழுப்பா அல்லது மாப்பிள்ளை வீட்டார் அடித்த கொள்ளையா?

விளைவாக நகைகள் நுகர்வும் அதன் தொடர்ச்சியாக அதன் உருவாக்கத்திலும் அத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடையேயும் தொன்னூறுகளின் இறுதியிலிருந்து பெரும் மாற்றங்கள் உருவாகத் துவங்கியது.

தெற்கின் தங்கப் பட்டறையாக திகழ்ந்த கோவை மாநகரில் 98 குண்டு வெடிப்புகளுக்குப் பின் பொருளாதார ரீதியில் இரண்டு பேரிடி விழுந்தது. ஒன்று பஞ்சாலைகள் பரவலாக மூடத் தொடங்கியது – இரண்டு தங்கப் பட்டறை தொழில் ஒரு பெரும் வீழ்ச்சிக்குட்பட்டு தங்க நகை ஆசாரிகளும் தொழிலாளர்களும் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொள்ளத் தொடங்கியது. அந்த ஆண்டுகளில் மக்களிடையே “துலுக்கன் குண்டு வெச்சி நம்ம கோயமுத்தூர நாசப்படுத்திட்டாங்க – மில்லுகளும் தங்கப் பட்டரைகளும் மூட துலுக்கன் வெச்ச குண்டு தான் காரணம்” என்று பரவலாக பிரச்சாரம் செய்யப் பட்டது.

அந்த நேரத்தில் பரவலாக மில்கள் மூடப்படுவதும் ஓடும் மில்களில் ‘நோ வொர்க்’ கொடுப்பதும் சாதாரணம். நகைப் பட்டரைத் தொழிலாளிகள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். முன்னொரு காலத்தில் ஜே ஜே என்று நகைப் பட்டரைகள் நடந்து வந்த சலீவன் வீதி, குரும்பர் வீதி
போன்ற பகுதிகள் எழவு விழுந்த வீடுகள் போன்று இருந்தது. 98ல் இருந்து இரண்டாயிரத்திரண்டாம் ஆண்டுக்குள் சுமார் 300 நகைத்
தொழிலாளிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டார்கள். முப்பதாயிரம் பேர்களுக்கு மேல் ஈடுபட்டிருந்த நகைத் தொழிலில் இருந்து இருபதாயிரம் பேர் காணாமல் போய், 2002 வாக்கில் வெறும் பத்தாயிரம் பேர் தான் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழில் வீழ்ச்சி 98க்குப் பின் உணரப்பட்டாலும், இந்த வீழ்ச்சிக்கான விதை அதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தூவப்பட்டுவிட்டது என்பது தான் உண்மை. ஆனால் அது குண்டு வெடிப்பு சம்பவம் வரைக்கும் ஒரு செய்தியாக ஆகாமல் இருந்தது – குண்டு வெடிப்பு என்பது காக்காய் உட்கார்ந்ததைப் போலத்தான்; பனம்பழம் ஏற்கனவே விழத் தயாராய்த்தான் இருந்தது.

ஏன் அந்த வீழ்ச்சி ஏற்பட்டது? என்பது பற்றியும் பொதுவில் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகள் மற்ற தொழில்களை எப்படி நிர்மூலமாக்கியதோ – அதாவது, முதலில் ஒரு உலுக்கு உலுக்கி அந்தத் தொழிலில் இருப்பவர்களை நெருக்கடிக்குள்ளாக்குவது; அடுத்து அந்தத் தொழிலை மேலிருந்து கீழ் வரை தனது தேவைக்குத் தக்கவாறு மறுவார்ப்பு செய்து தனக்குக் கீழ் கொண்டு வந்து தனது தொங்கு சதையாக, ஆக்சிலரி யூனிட்டாக மாற்றி குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுவது – அதே பாணியில் நகை உருவாக்கத் தொழிலிலும் ஒரு பெரும் தாக்கத்தை உண்டாக்கியது. அது எவ்வாறு என்பதையும் உதாரணங்களோடு அடுத்து வரும் பகுதிகளில் விளக்க முயல்கிறேன்.

அடுத்து மறுகாலனியாதிக்கத்தின் உடன் விளைவாக ஏற்பட்டுள்ள பெருமளவிலான தொழிலாளிகளின் இடப் பெயர்வு தங்க நகைத் தொழிலாளர்கள் விஷயத்திலும் நடந்துள்ளது. குறிப்பாக கேரளம், மேற்கு வங்கம் போன்ற வெளிமாநில தொழிலாளர்களும், இதே மாநிலத்தின் வேறு மாவட்டத்திலிருந்தும் குறிப்பாக ஒரே இடத்தில் தொழிலாளர்கள் குவிய வேண்டிய நிர்பந்தத்தை உண்டாக்கியது. இது போன்ற விசயங்களையும் நேரடி உதாரணங்கள் மூலம் பார்க்கலாம்.

(தொடரும்)

குறிப்பு :

1) இந்தக் கட்டுரையின் தொடரும் பாகங்களில் சங்கிலித்தொடர் நகை மாளிகைகள் வரவு; அதனால் பாதிக்கப்பட்ட பாரம்பரிய பட்டரைகள்; வங்கத்தில் இருந்து இடம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளிகள்; அந்தத் தொழிலாளிகளிடம் நடத்திய உரையாடல்கள் (முடிந்தால் ஒலி வடிவில்); அவர்களின் பணிச் சூழல், வாழ்க்கைச் சூழல் போன்றவற்றை உள்ளடக்கலாம் என்று உத்தேசம்.

2) இணையத்தை பாவிப்பதில் இருக்கும் சிக்கல் காரணமாக மறுமொழிகள் உடனே வெளியிடமுடியாமல் போகலாம்.

பிப்ரவரி 26, 2010 - Posted by | Uncategorized

4 பின்னூட்டங்கள் »

 1. தங்கமான எழுத்துக்கு சொந்தக்காரரே.. (நீங்கள் கோபப்பட்டாலும் நான் அவ்வாறுதான் கூறுவேன்)..

  நான்கு வரி படித்தவுடனே இந்த மறுமொழி இடுகிறேன். செதுக்கிய வார்த்தைகள். பதுக்கிய கருத்துக்கள். உயிர் உலுக்கிய உணர்வு. வாழ்நாளில் இனிமேல் தங்கத்தை நான் எங்கெல்லாம் பார்க்கிறேனோ அங்கெல்லாம் இந்த இடுகை ஏதோ ஒரு விதத்தில் என் எண்ணங்களில் ஒரு பதிப்பை உண்டாக்கலாம். கனக்கிறது மனது.

  பின்னூட்டம் by Essaar | பிப்ரவரி 26, 2010 | மறுமொழி

 2. உழைப்பின் உயர்வையும் அது இழிவாக நடத்தப்பட்ட விதத்தையும் நடத்தப்படும் விதத்தையும் அதற்கான காரணத்தையும் தெளிவாக விளக்குகிறது .ஆனால் தங்க தொழிலாளியின் கஷ்டங்கள், அதற்கான முதலாளித்துவத்தின் காரணங்கள், மக்களின் மாற்றங்கள் அரசின் கொள்கைகள், நடைமுறை பிரச்சனைகள் என அனைத்தையும் சொல்லும்போது எதனையும் முழுவதுமாக எடுத்து உள்வாங்கி கொள்ளவும் படித்தவுடன் ஒன்றை பற்றி தெரிந்து கொண்ட நிறைவும் ஏற்பட வில்லை .அதே போன்று தொடர்து வாசிக்காதவர்களுக்கு அறிமுகம் செய்யும் பொது ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாத தாகிறது .

  பின்னூட்டம் by baskar | மார்ச் 1, 2010 | மறுமொழி

  • நீங்கள் குறிப்பிடுவது போன்ற உணர்வு இந்தப் பகுதியில் ஏற்படுவது தவிர்க்கவியலாது என்று நினைக்கிறேன். நகைத் தொழிலாளிகளின் பணிச்
   சூழல் மற்றும் பொதுவாக் அத் தொழிலின் தன்மையில் ஏற்பட்ட மாற்றம் குறித்து தொடரும் பகுதிகளில் எழுதப்பட்டுள்ளது.

   பின்னூட்டம் by kaargipages | மார்ச் 1, 2010 | மறுமொழி

 3. பெண்களுக்கு சம உரிமை சொத்தில் இல்லாத காரணம், அந்த காலத்தில் தங்கமாக சீதனம் கொடுத்தார்கள். இப்போது தான் சட்டம் இருக்கே? இருந்தாலும் விடிவு இல்லை. ஆண் பிள்ளைகள் – அக்கா தங்கைகளுக்கு இன்றும் கொடுப்பதில்லை. என் அக்காவிற்கு, என் அப்பாவின் பாதி சொத்து கல்யாண சமயத்தில் செலவானது. ஒவ்வொரு பைசாவிற்கும் அப்பா கணக்கு வைத்திருக்கிறார். அவருக்கு பிறகு, என் அக்கா மீண்டும் சொத்து கொடு என்று வந்து கேட்கமாட்டாள் ( இதற்கும், சொந்த வெட்டிட்டு டாக்டர் மாப்பிள்ளை அமெரிக்க சிடிசன் வேறு ) என நிச்சயம் கிடையாது. இப்போது சொல்லுகிரார்ல், நம்பியூரில் இருக்கும் காட்டில், பாதி அவளுக்கு வேண்டுமாம், பாரம் ஹவுஸ் கட்ட. இப்போதும் இரண்டு வருடம் ஒரு முறை லீவில் வந்தால் இரண்டு மூன்று லட்சங்கள் அவள் குடும்பத்திற்கு அப்பா தான் செலவு செய்கிறார். நல்ல வாழ்க்கைக்கு தங்கம் போடுவது கொழுப்பு தான். காசில்லாபோது அந்த கொழுப்பு தான் அடமனமோ விற்றோ வயிற்றுக்கு சோறு போடும். சொந்தங்கள் வந்தால் ஒரு வாய் காப்பி தண்ணி கொடுக்க முடியும். இந்த மாதிரி பதிவுகள் படிக்க இன்டர்நெட்டுக்கு பில் கட்ட எங்கிருந்து வரும் காசு? 🙂

  என்னமோ ஐ.டி. துறையில் தான் வேலை நிரந்தரம் என்று சொல்கிறீர்கள். இப்போது ஒவ்வொரு நாளும் கொடுமைங்க. நானும் படிப்பு முடித்தவுடன் நாலு பேருக்கு வேலை கொடுக்கும் எண்ணத்தில் திருப்பூரில் சிறு ஐ.டி. கம்பெனி ஒன்று ஆரம்பித்தேன். வேலை செய்தவர்கள் பெரிய கம்பெனிக்கு போவதற்கே, படியாக பயன்படுத்தினார்கள். பெங்களூர் வந்தால் வேலை இல்லாமல் இருக்கும் என் நண்பர்கள், எனக்கு வாழ்வு கொடுத்தவர்கள், கஷ்டத்தில், கட்டட மேஷ்திரிகலாக ( சிவில் படித்தவர்கள், ஏசி ரூமில் வாழ்ந்தவர்கள் ) இருப்பதை காட்டுகிறேன். பிக் பஜாரில் தினம் நூறு ரூபாய்க்கு சாமானம் கட்டுகிறார்கள். எனக்கு கிழே வேலை பார்த்த ஒருவன் கோரமனகளா செட்டிநாடு ஹோட்டலில் ஆர்டர் எடுக்கிறான், உணவு இலவசம், இரநூறு ருபாய் சம்பளத்திற்கு. எங்கே போயிற்று சங்கங்கள் ஐ.டி. துறையில்? பணக்காரர்கள் செலவு செய்யாவிட்டால், ஏழைகள் எப்படி வாழ்வார்கள்? கார்ல் மார்க்ஸ் எழுதிய கேபிடல் ஒரு முறை படித்து விடவும்.

  பின்னூட்டம் by Sureshkumar | ஏப்ரல் 5, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: