கார்க்கியின் பார்வையில்

நான் கடவுள் விமர்சனம்

இணைய புத்திஜீவிகள் எல்லோரும் இந்தப் படத்தைப் போற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்க, மற்றவர்கள் “நமக்குத்தான் ஒருவேளை புரியலையோ” என்ற சந்தேகத்தில் “நல்லாத்தான் இருக்கு…….ஆனா….” என்று மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக நான் பாலா படங்களைப் பார்ப்பதில்லை; நிறைய செயற்கைத்தனம் இருக்கும் என்பது ஒரு காரணம். இந்த முறை ஓசியில் டிக்கெட் கிடைத்ததால் நன்பனோடு பார்க்கப் போனேன்.

முதலில் ருத்ரன். காசி மாநகரத்தைச் சேர்ந்த அகோரி – அதாவது நமக்குப் புரியும் மொழியில், பினந்தின்னி சாமியார். இவனை காசியில் ஜாதக தோஷங்களுக்காக காசியில் நேர்ந்து விட்டு விட்ட தகப்பன் தேடிவரும் காட்சியில் தான் படம் ஆரம்பமாகிறது. ஒத்தாசைக்கு வரும் காசி நகர பார்ப்பான் ஜாதகக் காரணங்களுக்காக பிள்ளையை காசியில் விட்டு விட்டதாக தகப்பன் சொன்னதும் பொங்கியெழுகிறார். இந்தியில் திட்டுகிறார்; நம்மாளு காலில் விழுந்ததும் ‘சரி சரி பார்க்கலாம் என்கிறார்’ – எழுத்துப் பிச்சர் ஒடும் போது
ஜெயமோகன் பெயரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது.

படம் நெடுக இந்த நபரை எல்லா கதாபாத்திரங்களும் ஒருவித மிரட்சியுடன் பார்க்கிறார்கள். அட, நம்ம போலீசும் கோர்ட்டும் கூட இவனிடம் பம்முகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமக்குத் தெரிந்து எலும்பு வீசுபவனிடம் மட்டும் தான் இவர்கள் பம்முவார்கள். ஊருக்கு வந்து சேரும் பினந்தின்னிச் சாமி அங்கே கோயிலில் பிச்சையெடுக்கும் கூட்டம் ஒண்டும் ஒரு இடத்துக்குப் பக்கத்தில் தனது ஜாகையை அமைத்துக் கொள்கிறது. அங்கே இருக்கும் லோக்கல் சாமிகள் – போலீசுக்கு பயந்து மறைந்து வாழ்வதாக சொல்கிறான் ஒரு சாமி – வலித்துக் கொடுத்த கஞ்சாவைக் கூட தொடாமல் சுத்தபத்தமாக தனி கஞ்சா அடிக்கும் அளவுக்கு காசியைச் சேர்ந்த அகோரி தன் புனிதத் தன்மையை தமிழ் நாட்டில் காப்பாற்றிக்
கொள்கிறான். கடுமையான டயட் கண்ட்ரோலில் இருக்கும் அகோரி, நரமாமிசம் தவிர்த்து வேறு அசுத்த உணவுகள் எதையும் உட்கொள்வதில்லை.

அடிக்கடி சமஸ்கிருதத்தில் “அஹம் ப்ரம்ஹாஸ்மி…” என்று வானத்தைப் பார்த்துக் கூவிக் கொண்டிருப்பது இந்த நபரின் முக்கிய வேலைகளில் ஒன்று. ம்ம்ம்ம்….. நியாயமாகப் பார்த்தால்
இந்த ருத்ரனை அழைத்து வந்து – முரண்டு பிடித்தால் பொடனியில் ஒன்று போட்டாவது – மனநல மருத்துவரிடம் சேர்த்திருக்க வேண்டும். தெருவில் இப்படி பரிதாபத்துக்குரிய ஒருத்தனைப் பார்த்தால் நாம் அப்படித்தான் நினைப்போம்; ஆனால் படத்தில் வரும் இந்த மனநோயாளியை எல்லோரும் ரசிக்கிறார்கள்.

அடுத்து பிச்சைக்காரர்கள் – நீங்கள் இந்த மிருகக்காட்சி சாலைகளில் கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் மிருகங்களைப் பார்த்து ரசிக்கும் கூட்டத்தைப் பார்த்திருப்பீர்கள் தானே? அதே போன்ற ஒரு ரசனையைத் தான் படத்தில் வரும் பிச்சைக்காரர்கள் / குரூபிகள் தமக்குள் பேசிக்கொள்வதைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கும் ரசிகக் கூட்டம் வெளிப்படுத்துகிறது.

பார்வையாளன் இவர்களின் உலகத்தை ரசனையோடு பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் எடுத்து அந்தக் காட்சிகளை இயக்குனர் காட்சிப்படுத்தி இருக்கிறார். பிச்சைக்காரர்கள் சமூகத்தில் உருவாகக் காரணமான சமூக அமைப்புமுறையின் மேல் எழ வேண்டிய கோபம் முதலாளி தாண்டவனைத் தாண்ட மாட்டேனென்கிறது. தாண்டவனின் கையாள் முருகன் பிச்சைக்காரர்களிடம் நெகிழும் இடங்களில் பார்வையாளனும் நெகிழ்கிறான்; பிச்சைக்காரர்களை “உருப்படிகள்” என்று விளிப்பதைக் கேட்டு சிரிக்கிறான். நயன்தாரா போல் வேடமிட்டு ஆடும் பிச்சைக்காரனைப் பார்த்து வெட்கப்படுகிறான். இப்படி தம்மை நெகிழவும் சிரிக்கவும் வைத்த அந்த பிச்சைக்காரர்களில் ஒருவனான அங்கவீனமான சிறுவனை ஒரு மலையாள “முதலாளி” தூக்கிக் கொண்டு போவதைப் பார்த்த பிறகு தான் பார்வையாளன் கோபப்படுகிறான். அந்த மக்களை புறக்கனித்து அவர்களுக்கு ஒரு
கொடூரமான வாழ்க்கையைப் பரிசளித்திருக்கும் இந்த சமூக அமைப்பின் மேலோ, இந்த அயோக்கியத்தனங்களுக்கு வால் பிடித்து நிற்கும் போலீசு உள்ளிட்ட அரசு அமைப்பின் மேலோ பாய்ந்திருக்க வேண்டிய கோபம், மலையாள முதலாளியையும் தாண்டவனையும் அகோரி ருத்ரன் “தண்டிப்பதன்” மூலன் சாந்தமடைகிறது.

படத்தில் பாடிப்பிச்சையெடுக்கும் குருட்டுப் பிச்சைக்காரி கதாபாத்திரத்திம் முதலில் ஒரு முதலாளியிடன் இருந்து அடுத்து இன்னொரு முதலாளி கையில் வந்து சேர்கிறாள். முகம்
கோரமான இன்னொரு முதலாளியிடம் காமுகியாய் அனுப்ப புது முதலாளி முடிவெடுக்க இவள் மறுக்கிறாள். அதன் காரணமாய் அவன் இவள் முகத்தை சுவற்றில் தேய்த்து கோரப்படுத்தி விடுகிறான். முகம் கோரப்பட்ட இவள் பினந்தின்னிச் சாமியிடம் வந்து மரண வரம் கேட்க, இவரும் சந்தோஷமாய் அதைக் கொடுத்தருளுகிறார்.

மொத்தம் மூன்று கொலைகள் ஆயிற்றா? அடுத்த காட்சியில் நியாயமாக கம்பியென்னத்தான் போயிருக்க வேண்டும்… ஆனால் நாம்மாளு காசியிலிருந்து ஸ்பெசலாய் எழுந்தருளி இருக்கும் அகோரியல்லவா? எனவே அடுத்த காட்சியில் கூலாக காசிக்கே போய்விடுகிறார். கொலைக்கு ஒன்று வீதம் மூன்று முறை கங்கையில் முங்கியெழுகிறார் – பின்னனியில் சமஸ்கிருத மந்திரங்கள் ஒலிக்க தன் குருவை நோக்கி கம்பீரமாய் நடந்து வர, காட்சி உறைகிறது – பார்வையாளர்கள் பிச்சைக்காரப் பயல்களை மறந்து விட்டு சந்தோஷமாய் மனநிறைவோடு எழுந்து வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.

அகோரிகள், தாந்திரிகர்கள், காபாலிகர்கள், காலபைரவர்கள் என்பதெல்லாம் இந்து மதத்தின் தீவிர மனநோயாளிகளால் பின்பற்றப்படும்  ‘கல்ட்’கள் (cult). இதெல்லாம் தடைசெய்யப்பட
வேண்டிய பைத்தியக்காரத்தனங்கள்.ஆனால் இந்தப் படமோ அவர்கள் மேல் ஒரு வித மரியாதையை / பிரமிப்பை பார்வையாளர்கள் மத்தியில் உருவாக்குகிறது. கண் பார்வையற்ற ஒரு அப்பாவிப் பெண்ணை அத்தனை பேர் வேடிக்கை பார்க்க இரண்டு மூன்று ரவுடிகள் தூக்கிச் செல்ல முயன்றால், அங்கே இருக்கும் எல்லோரும் சேர்ந்து ‘பொது மாத்து’ கொடுத்திருக்க வேண்டும் – எங்கூர்ல எவனாவது இப்படி செஞ்சிருந்தான்னா ஊரே சேர்ந்து கிழிச்சிருப்பாங்க- இங்கே என்னடாவென்றால், எல்லோரும் ‘ஆ’வென்று வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்க, நம்மாளு மட்டும் அந்நியன் விக்ரம் போல பறந்து பறந்து அடிக்கிறார். ஏட்டைய்யா மரியாதையாக செருப்பைக் கழட்டிப் போட்டு விட்டு நெருங்குகிறார் – எதுக்கு? – கஞ்சாவைக் கொடுக்க!

படம் நெடுக ஆங்காங்கே பிச்சைக்காரர்கள் கடவுளைச் செல்லமாக பகடி செய்து கொள்கிறார்கள். ஓரிடத்தில் கிருஷ்ணனை “உள்பாவாடைக் களவானி” என்கிறான் ஒரு சிறுவன். உச்சமாக ஒரு கிழவர் கடவுளைத் “தேவிடியாப்பய” என்றும் சொல்கிறார்… இதையெல்லாம் கொண்டு இந்த படம் இந்துத்துவத்தை எதிர்த்து விட்டதாகச் சொல்லிவிட முடியாது.  பருண்மையாகப் பார்க்கையில் பார்வையாளர்கள் எல்லோருடைய ஒட்டுமொத்த கோபத்துக்கும் ஆளானா “பயங்கர” வில்லன் தாண்டவனை தண்டிப்பது ஒரு அகோரி தான்; எனவே திரையரங்கை விட்டு வெளியேறுகையில் அகோரியின் மேல் – இந்த வகை லூசுத்தனங்களை அனுமதித்திருக்கும் இந்து மதத்தின் மேல் – அருவெறுப்பு தோன்றுவதற்குப் பதில்
பார்வையாளனுக்கு ஆதர்சமும், பிரமிப்பும், மரியாதையும் தான் தோன்றுகிறது.

தினமலரின் பார்வையில் லோக்கல் சாமியார்கள் எப்படித்தெரிவார்களோ அப்படித்தான் படத்தில் வரும் லோக்கல் சாமியார்களும் ( கஞ்சா குடிக்கி சாமிகளாகட்டும் கையும் காலும்
இல்லாத சாமியாகட்டும்) காட்டப்பட்டிருக்கிறார்கள். அதே தினமலரின் பார்வையில் காஞ்சி சங்கராச்சாரி எப்படித் தெரிவானோ அப்படித்தான் அகோரி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறான்.
அப்போ பிச்சைக்காரர்கள்? – அவர்கள் பார்வையாளர்களுக்கு ஒரு எண்டெர்டெயின்மெண்ட்! மிருகங்களை வேடிக்கை பார்த்து ரசிப்பதைப் போல பார்த்து ரசிக்கிறார்கள். மீண்டும் வடநாட்டில் இருந்து ஒரு பினந்தின்னிச் சாமி எழுந்தருள அவர்கள் பிரார்த்திக்க வேண்டியது தான்!! அந்த மீசைக்கார போலீசு இன்ஸ்பெக்டர் என்னவாயிருப்பார்? அவர் இன்னொரு தாண்டவனை உருவாக்குவதில் இப்போ பிஸியாக இருப்பாராயிருக்கும்.

படம் விட்டு வெளியே வரும் போது நன்பனிடம் கேட்டேன் –

“ஏண்டா.. அந்தப் பிச்சைக்காரங்களைப் பார்த்து அப்படி கெக்கே பெக்கேன்னு சிரிச்சிட்டு இருந்தியே…?”

“ஆமாண்டா… வாழ்க்கைன்னா மேடு பள்ளம் இருக்கனும் அப்பத்தாண்டா வாழ்க்கைய ரசிக்க முடியும்”

“இல்ல… அந்தப் பிச்சைக்காரர்களையும், குரூபிகளையும் இந்த சமூகம் புறக்கனிச்சிருக்கே, அதைப் பத்தி என்ன நினைக்கிறே?”

“என்ன பன்றது… பாவந்தான்… ஆனா, அது அவங்க விதி. நம்மாள முடிஞ்ச அஞ்சோ பத்தோ போடத்தான் நம்மாள முடியும். வேறென்னத்த செய்யச் சொல்றே?”

“அப்ப அந்த தாண்டவனைப் போல மாஃபியாக்கள்?”

“அதான் சாமியே தண்டனை கொடுத்திச்சில்லே?”

இயக்குனர் பாலா நிச்சயமாக ஜெயித்து விட்டார் என்று புரிந்தது.

மற்றபடி நல்ல பின்னனி இசை, புத்திசாலித்தனமான கேமராக் கோணங்கள், அருமையான ஒளிப்பதிவு…. blah, blah, blah, blah, blah….. அவ்வளவுதான்

– கார்க்கி

பிப்ரவரி 14, 2009 Posted by | culture, Films | 4 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: