கார்க்கியின் பார்வையில்

ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!

“யாத்ரியோ க்ருப்யா க்யான் தே… காடி நெம்பர் சார், சாத், ஷுன்யெ, தோ… – ப்ப்பாபாபாங்ங்ங்ங்…. தடக் தடக் தடக்…”
அறிவிப்பாளினியின் குரலைத் தின்று கொண்டே சோம்பலாய் நுழைந்தது அந்த ரயில்.

“சௌ ருப்யா தே தோ மஹராஜ்” என்றபடி எதிர்பார்ப்புடன் என் முகத்தைப் பார்த்தார் அந்த வயதான போர்ட்டர். ஒடுக்கு விழுந்த கருத்த முகம். உழைத்தே தேய்ந்து போன கெச்சலான உடல்.

“சௌ ருப்பா too much ஹே பாய். மே பச்சாஸ் ருப்யா தே ரஹாஹூ” ஆங்ரேஜியும் இந்தியும் கலந்து திக்கித்திக்கி சொன்னேன்.

“யே ஜாதா வெயிட் ஹே ஸாப்” இரண்டு பெரிய பயணப் பொதிகள்…

தெரியாத மொழியில் வேறென்ன பேரம் பேசி விட முடியும். மேலும் அவர் அந்த பெட்டிகளை தள்ளாடித் தள்ளாடி தூக்க முயன்றது மனதை என்னவோ செய்தது.

“அச்சா சலோ பாய்” என்றவாறே அவர் தலை மேல் அந்தப் பொதிகளை ஏற்ற உதவினேன்.

எனது சீட்டின் கீழே அவற்றை பெரும் சிரமத்தொடு சொறுகி விட்டு அவர் கையில் நூறு ரூபாய் தாளை கொடுத்த போது கேட்டார் –

“ஸாப் ஆப் மதராஸி ஹே?”

“ஜீ ஹாங்” இரண்டு வருடங்கள் முன்பு இந்த ஊரில் கால் வைத்த போது எதிர் கொண்ட அதே கேள்வி – ஊரை விட்டு கிளம்பும் போதும்

இரண்டு வருடங்கள்! இரண்டு முழு வருடங்கள்!!! நான் வேலை பார்க்கத் துவங்கிய பின் நீண்ட நாட்கள் தங்கிவிட்ட ஊர் இது தான்.

ரயில் மெல்ல சோம்பல் முறித்து நகரத் துவங்கியது. சன்னலோர இருக்கையில் சாய்ந்து பின்னோக்கிப் பாயும் காட்சிகளில் லயித்தேன். ரயில் பயணம் சந்தோஷமானது – அதில்
கிடைக்கும் அந்த நேர இடைவெளிக்காகவே ரயில் பயணத்தை நான் நேசிப்பதுண்டு. கொஞ்ச நேரத்தில் பச்சை வயல்கள் கடந்து போக ஆரம்பித்தது.. கண்களில் நழுவும் பசுமை..
மனதினுள் ஆழப்பதிந்து விட்ட சில பசுமையான நினைவுகளைத் தூண்டி விட ஆரம்பித்தது. திரும்பிப் பார்க்க வாய்ப்பே தராத தொடர்ந்த ஓட்டம். இப்படி ஆசுவாசமான தருணங்கள்
அபூர்வமாய் வாய்க்கும் சமயங்களில் மீண்டும் மீண்டும் கிளர்ந்து எழுந்து விடும். பழைய நாட்களை நினைப்பது என்றாலே எனக்கு அச்சமாகத் தான் இருக்கும். இன்றைய நாள் நரகம்
என்றால் முந்தைய நாட்கள் பாழும் நரகம். ஊர் ஊராய் ஓடத் தொடங்கி ஒன்பது வருடங்களாகி விட்டது.. எப்போது முடிவுறும் என்றே தெரியாத சாலையில் பயணிப்பது  போன்றதொரு
உணர்வு சமீப நாட்களாய் எழத்தொடங்கி விட்டது.

சாய்ந்து அழ தோள் இல்லாதவனின் தோல்வியும், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஆட்களில்லாதவனின் வெற்றியும் பெரும் சோகங்கள். இந்த ஒன்பது வருட பயணத்தில் இப்படியான
சந்தர்ப்பங்கள் மாறி மாறி வந்தபின் இன்று சிரிப்போ அழுகையோ இயல்பாய் வர மறுக்கிறது. இயல்பான அன்போ காதலோ இல்லாத நாட்கள். கடந்த காலத்தை திரும்பிப் பார்க்க
நேரமும் வாய்ப்பும் இருந்தால் மட்டும் போதாது அது இனிமையானதாயும் இருந்திருக்க வேண்டும்.

“எடோ .. எந்தாடா ஈ ட்ரெஸ்ஸு… ஈ ஆபீஸுக்கு ட்ரெஸ் கோட் உண்டு அறியுமோ? போய்க்கோடா.. ட்ரெஸ் சேஞ்ச் செய்து வா….” முதல் வேலையில் முதல் நாள் அந்த மலையாள
மேனேஜர் முகத்தை உருக்கிய இறும்பு போல் வைத்துக் கொண்டு எரிந்து விழுந்த போது எனக்கு பதினெட்டு வயது முடிந்து பத்தொன்பது பிறக்க சரியாக நாலு மணி நேரமும்
முப்பத்தைந்து நிமிடங்களும் தான் இருந்தது. ஆம் அன்று தான் எனக்குப் பிறந்த நாள். நான் அன்று உடுத்திப் போயிருந்தது என் பிறந்த நாளுக்கு ஆசையாய் வாங்கியிருந்த புது உடுப்புகள்.

பத்தாம் வகுப்பு முடிந்து மூன்றாண்டுகள் பட்டயப்படிப்பும் முடித்து கேம்பஸில் தேர்வாகி ஆறு மாதம் வேலைக்கான உத்தரவு வராமல் காத்திருந்து தேர்வு செய்திருந்த கம்பெனிக்கு
கடிதங்கள் மேல் கடிதங்களாக நான் எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் வயதுத் தோழர்கள் காதல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஆறு மாதங்கள் வேலை நிச்சயமாகாத சூழலில் சும்மா சுற்றிக் கொண்டிருந்த போது எதிர் கொண்ட உறவுகளின் கேலிப் பார்வையும், அம்மாவின் குத்தல் பேச்சும் வேலை
கிடைத்த உடனே மறைந்த மாயம் சொல்லிக் கொடுத்த பாடம் – சொந்தங்கள் என்னும் மாளிகையின் அஸ்திபாரம் – பண்ம்!

“நீயெல்லாம் நல்லா கொட்டிக்கத்தாண்டா லாயக்கு – நீ கெட்ட கேட்டுக்கு முட்ட தோசை ஒன்னு தான் கொறை – அவனவன் படிச்சமா வேலைக்குப் போனமான்னு இருக்க,
நீ யென்னடான்னா தெள்ளவாரியா ஊர் சுத்திட்டு இருக்கே” ஆறு மாதம் முன்பு வரை சோறு ஊட்டி விட்ட அம்மா!

வாழ்க்கையிலேயே முதன்முதலாக மலச்சிக்கலால் அவதிப்பட்ட நாட்கள் அது தான். எதிர்காலம் குறித்த பயம் ஒரு பெரும் இருளைப் போல் என்னைச் சூழ்ந்திருந்த நாட்கள் அது!

அப்பாவின் தங்கைக்கு ஏற்பட்ட வைத்தியச் செலவுகளுக்காக வாங்கிய கடன் – என்னை கல்லூரியில் சேர்க்க வாங்கியிருந்த கடன் – அப்பாவுக்கு காலில் அடிப்பட்டு அந்த
வைத்தியத்திற்கு வாங்கிய கடன் – அவர் சரியாக தொழிலை கவனிக்க முடியாமல் நொடிந்து போயிருந்த நிலை.. என்று சுற்றிச் சுற்று கடன். பந்தம் பாசம் நேசம் காதல்
என்று அத்தனை வகை உறவுகளும் பணம் என்னும் அடித்தளத்தின் மேலேயே கட்டப்பட்டிருந்ததை எனக்கு வாழ்க்கை மண்டையில் ஆணி அடித்து இறக்கியதைப் போல்
கற்றுக் கொடுத்த நாட்கள் அது.

இந்த இடத்தில் நான் உணர்ந்து கொண்ட இன்னுமொரு விஷயம் எனக்கும் அப்பாவுக்குமான உறவு. அது வரையில் – அதாவது நான் படித்து முடிக்கும் வரையில் – நான் அதிகம்
வெறுத்த ஒரு மனிதர் என் அப்பா தான். மிகக் கண்டிப்பானவர். நிறைய அடிப்பார். ஆனால் அந்த ஆறு மாதம் நான் வேலையற்று இருந்த நாட்களில் ஒரு முறையென்றால் ஒரு முறை
கூட கடுகடுப்பாய் ஒரு வார்த்தை சொல்லவில்லை. சில சமயங்களில் பரிதாபமாய் பார்ப்பார் – இப்போதும் கூட நேரில் பார்க்கும் போது சில சமயங்களில் அதே பரிதாபப் பார்வையை
உணர்ந்ததுண்டு. அந்தப் பார்வை – புதிதாய் போர்க்களத்துக்குப் போகும் வீரனை அடிபட்டு திரும்பி வரும் வீரன் பார்ப்பானே அதே பார்வை!. ஒரு வேளை அவர் கூட என் நிலையைக்
கடந்து தான் வந்திருக்க வேண்டும். அவரும் கூட உறவுகளின் போலித்தனத்தை உணர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அச்சடித்த மாயக்காகிதங்களை துரத்தி ஓய்ந்திருப்பார்.
ஒரு காலத்தில் என்னைப் போல் ஒரு பந்தையக் குதிரையாக இருந்திருப்பார். இப்போதோ கிழட்டு பந்தையக் குதிரை – என்னிலும் மோசமான ஒரு நிலை. பந்தையக் குதிரைகளுக்கு
மதிப்பு அது திறமையாக ஓடும் வரை தான்.

ஒரு வழியாக வேலை கிடைத்து கொஞ்ச நாளிலேயே திருப்பூருக்கு மாற்றலானது – “அய்யோ செல்வா.. நீயில்லாம இந்த வீடே வெறிச்சோடிப் போகுமே”… –  நான் சந்தோஷமாய்
திருப்பூர் கிளம்பினேன். அதே நேரத்தில் சகோதரிக்கு அவசர அவசரமாய்க் கல்யாண ஏற்பாடுகள் நடக்க, எழுபத்தையாயிரம் வரதட்சினை, நகை, பெரிய மண்டபத்தில் வரவேற்பு –
என் தலைமேல் ஒன்னறை லட்சம் புதிய கடனும் ஆறாயிரம் வட்டி கட்ட வேண்டிய பொறுப்பும் வந்து விழுந்தது.

திருப்பூரில் தங்கும் செலவும் போக்குவரத்து செலவுக்கு பெட்ரோல் காசும் கம்பெனி கொடுத்து விட எனக்கு சாப்பாட்டு செலவு மட்டும் தான். சம்பளம் அப்படியே வீட்டுக்கு
போய்விட வாரா வாரம் கிடைக்கும் லோக்கல் அலோவன்ஸில் தான் சாப்பாடு. அலைச்சலும் ஏற்றபடி அலோவன்ஸ் ஏறும் இறங்கும். சில சமயம் நூற்றைம்பது.. அதிக பட்சம் முன்னூறு.
பல வாரங்கள் அலோவன்ஸ் வர தாமதமாகும். அப்படியான சமயங்களில் மதிய உணவு வேர்க்கடலையும் அரை லிட்டர் தண்ணீரும் தான். காலையும் மாலையும் பாட்டியம்மா இட்லி.
அவர் பெயர் கூட இப்போது மறந்து விட்டேன். காலையும் மாலையும் இட்லி கொண்டு வருவார். அமிர்தம் போலிருக்கும் – காரணம் அதன் விலை – ஐம்பது பைசா!

திருப்பூர் ஒரு வினோதமான ஊர். ஒரு குட்டித் தமிழ்நாடு என்று சொல்லலாம். எல்லா வகை மனிதர்களையும் பார்க்கலாம். என்னை விட பலமடங்கு இளைய வயதில் வேலை பார்க்க
துவங்கியவர்களை அங்கே பார்த்திருக்கிறேன். சின்னச் சின்ன பிள்ளைகள் டையிங் செக்ஷன்களில் உடலெல்லாம் சாயத்தோடும் கெமிக்கல் வாசத்தோடும் கண்களில் எந்தக்
கனவுகளும் இல்லாத சிறுவர்கள். ம்ம்ம்ம்… அப்துல் கலாம் இது வரையில் கற்பனையில் கூட பார்த்திராத சிறுவர்கள். நாளொன்றுக்கு அய்ம்பது ரூபாய் வாங்குவார்களாயிருக்கும். அங்கே கம்பெனிகளெல்லாம் பழைய பண்ணைகளின் புதிய உருவம் தான். பெரும்பாலான கம்பெனிகள் கவுண்டமார்களுக்கும் நாயக்கர்களுக்கும் தான் சொந்தமாயிருக்கும்.
அவர்களுக்கும் சாதிவாரியாக சிண்டிகேட் எல்லாம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கம்பெனிகளில் பண்ணையார்த்தனம் கொடிகட்டிப் பறக்கும். முதலாளி பண்ணையார் –
மேனேஜர் – சூப்பர்வைசர்களெல்லாம் கங்கானிகள்! பதிநான்கு மணி நேரம் மிருகங்களைப் போல் அடைத்து வைத்து வேலை வாங்குவார்கள். அந்தச் சிறுவர்கள் தாம் உலகத் தரமான டிசர்ட்டுகளை உருவாக்கி அமெரிக்காவுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். மாலை நேரங்களில் நாளெல்லாம் அலைந்து திரிந்தும் தீனி கிடைக்காத ஆடுகள் கிடைக்குத் திரும்புவதைப் போல – ஜோம்பிகளைப் போல – அவர்கள் வீடு திரும்புவதைப் பார்த்திருக்கிறேன். அதே ஊரில் தான் எந்த லேட்டஸ்ட் மாடல் காரானாலும் – உலகில் எந்த மூலையில் ரிலீஸ் ஆகியிருந்தாலும் – அடுத்த ஒரே மாதத்தில் சாலையில் ஓடிப் பார்த்திருக்கிறேன்.

கருமத்தம்பட்டி, அவினாசி, பெருமாநல்லூர், பெருந்துரை, கோபி, உடுமலை, தாராபுரம், பல்லடம், காங்கேயம் என்று சுற்றுப்பட்டில் இருக்கும் சிறு நகரங்களில் இருந்து காலை
நேர திருப்பூர் பேருந்து எதிலாவது ஏறி ஒரு ஆறு மாதம் தொடர்ந்து பயணித்தால் வாழ்க்கைக்கான அத்தனை பாடத்தையும் கற்றுக் கொள்ளலாம். பள்ளிக்கூடத்திலிருந்து
பாதியிலேயே பிடுங்கியெறியப்பட்ட பிள்ளைகள். தாலிக்கு பவுன் சேர்க்கும் கனவுகளோடு பதின்மவயதுப் பெண்கள் -அவர்களை நெரிசலில் உரசிப் பார்க்கத் துடிக்கும் காலிகள்.
வரண்டு போன நிலத்தை ஏக்கத்தோடு நினைத்துக் கொண்டே அதற்கு காரணமான திருப்பூர் சாயப்பட்டரைக்கு வேலைக்காக பயனிக்கும் விவசாயி. ஊரில் சித்தாள் வேலை கிடைக்காத
வயதான பெண்மணி –

அந்தச் சூழல் முதலில் எனக்கு திருப்தி அளித்தது – குரூர திருப்தி. ஒரு அலட்சியமான கோணல் சிரிப்பு. இளக்காரமான பார்வை. உனக்கு நான் மேல் என்கிற இறுமாப்பு..

அந்த வருட தீபாவளியை என்னால் மறக்கவே முடியாது. அந்த தீபாவளிக்குப் பின் நான் தீபாவளி கொண்டாடியதேயில்லை – வேறு எந்தப் பண்டிகையும் கொண்டாடியதில்லை.

பொதுவாக எனக்கு வரும் அலோவன்ஸ் என் சீனியரின் பெயருக்கு செக்காக வரும். அவரும் நானும் ஒரே அறையில் தான் தங்கியிருந்தோம் – பகல் நேரங்களில் அதுவே தான்
ஆபீஸும் கூட. அவர் அந்த சமயத்தில் தீபாவளிக்காக ஒரு வாரம் முன்பே விடுப்பில் சென்றுவிட்டார். அந்த தீபாவளி ஒரு மாதக் கடைசியில் வந்து சேர்ந்தது. ஒரு வாரமாக சீனியர் இல்லாததால் வண்டியில் பெட்ரோல் கூட கிடையாது. அன்று காலை என் தூங்கி எழுந்த போது பாக்கெட்டில் மொத்தமாக ஒரு மூன்று ஒரு ரூபாய் நாணயங்கள் இருந்தது. இண்டு இடுக்கிலெல்லாம் தேடியதில் இன்னுமொரு மூன்று ரூபாய் தேறியது. ஒரு மூன்று ரூபாயை தனியே வைத்தேன் “இது இட்லிக்கு” இன்னொரு மூன்று ரூபாயை பாக்கெட்டில் போட்டேன் “டீக்கும்
பிஸ்கட்டுக்கும்”

“மதியத்திற்கு?”

அறை முலையில் குவிந்து கிடந்த பழைய நாளிதழ்கள் கண்ணில் பட்டது. என் சீனியருக்கு தினசரி இரண்டு நாளிதழ்கள் வாசிக்கும் வழக்கம் – தமிழில் ஒன்று ஆங்கிலத்தில் ஒன்று.
ஒரு ஆறேழு மாதமாய் அது சேர்ந்திருந்தது. அலுவலக தொலைபேசியில் இருந்து அவருக்கு கூப்பிட்டேன்,

“பாஸ், செலவுக்கு காசு வேணும்… நம்ப ரூம்ல இருக்கற பேப்பரை வேஸ்ட்டுக்கு போட்டிடவா? நீங்க கன்வேயன்ஸ் வந்ததும் அதில் கழிச்சிக்கங்க”

“ஓக்கே டா”

மொத்தமாக ஒரு நாற்பது கிலோ தேறியது. அதற்குள் இட்லி வந்துவிட குளித்து சாப்பிட்ட உடன் அதை சிரமப்பட்டு வாசலுக்கு கொண்டு வந்தேன். இதையெப்படி கடைவரைக்கும்
சுமப்பது என்று குழம்பி நின்ற போது –

“என்னண்ணே, வேஸ்ட்டுக்கா?” எதிர் அறைப் பொடியன். மதுரைக்கு அந்தப்பக்கம் ஏதோ ஒரு ஊர். பக்கத்தில் ஏதோ கம்பெனியில் பேக்கிங் செக்ஷனில் வேலை. அவர்கள் ஒதுக்கிக்
கொடுத்திருந்த புறாக்கூண்டில் வசிக்கும் பத்துப் பொடியன்களில் ஒருவன்.

“ஆமாண்டா… நீ ஊருக்குப் போகலையா?”

“போனஸ் தரலைண்ணே”

“மற்றவங்களைக் காணலியே?”

“அவங்கெல்லாம் பக்கத்திலே ஈரோடு தானே.. நேத்தே கிளம்பிட்டாங்க”

“ஓ…”

“அண்ணே… சாப்ட காசில்லண்ணே.. இதக் கடை வரை தூக்கியாறேன்.. பத்து ரூவா தாரீங்களா?”

அன்றைக்கு நாங்களிருவரும் பகத்திலிருந்த “அன்பு” மெஸ்ஸில் சாப்பிட்டோம். இரண்டு அப்பளம் வைத்து அன்லிமிடட் மீல்ஸ். சர்வர் சோர்ந்து போகும் வரை வாங்கி வாங்கி சாப்பிட்டோம்.
அதற்குப் பின் மூன்று விஷயங்களை நான் செய்ததில்லை – ஒன்று – பண்டிகைகள் கொண்டாடுவதில்லை – இரண்டு – கஷ்ட்டப்பட்டு உழைப்பவர்களைப் பார்த்து ‘இவங்களுக்கு நான் எவ்வளவோ பரவாயில்லை” என்று திருப்தி அடைந்து கொள்வதில்லை – மூன்று – சாப்பிடும் பொருளை வீணாக்குவதில்லை.

ஒரு விஷயம் செய்வதுண்டு –

எப்போதெல்லாம் கண்ணதாசன் பாட்டான “உனக்கும் கீழே உள்ளவர் கோடி – நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்கிற வரிகளை கேட்க நேர்கிறதோ அப்போதெல்லாம்

“தெவ்டியாப்பய… அயோக்கிய ர்ராஸ்கல்” என்று நினைத்துக் கொள்வதுண்டு.

ஒரு வருடம் திருப்பூர், அப்புறம் சென்னை, கொஞ்சம் நாள் பெங்களூர், கல்கட்டா, பிறகு ஒரு வருடம் டில்லி, இப்போது கடைசியாக இங்கே இரண்டு வருடம்.
சொந்த ஊர். சொந்த மக்கள். தாய் மொழி. நம்மவர்கள். என்று எல்லா பிடிப்புகளும் உதிர்ந்து மறைந்து விட்டது. காசில்லாதவன் / வேலையில்லாதவன் எந்த மொழிக்காரனாய்
இருந்தாலும் எந்த மதத்துக்காரனாய் இருந்தாலும் எந்த ஊர்க்காரனாய் இருந்தாலும் மதிப்பற்றவன் தான். உழைத்துப் பிழைப்பவனுக்கு இந்த நேசங்கள்,பிடிப்புகள் பற்றியெல்லாம் சிலாகித்துக்
கொள்ள எந்த இனிமையான நினைவுகளும் இருக்க வாய்ப்பில்லை. அந்த திருப்பூர் சிறுவனிடம் போய் தேசபக்தி~மொழிப்பற்று~மதம்~இனப்பற்று~சொந்தம்~பந்தம்~காதல்~அன்பு
என்று பேசிப்பாருங்கள் – காறித் துப்பி விட்டு தன் வேலையைப் பார்க்க போய்விடுவான். பத்து நிமிடம் நின்று காது கொடுத்து விட்டு லேட்டாகப் போனால் நாளைக்கு சோறு கிடைக்காது.

இது தான் உண்மை – வலிக்கும் உண்மை!

ரயில் ஏதோ ஒரு பெயர் தெரியாத ஸ்டேஷனில் நின்றது. வெளியே பயங்கரமாக மழை பெய்திருந்தது. சன்னலை உயர்த்தி வெளியே பார்த்தேன். தண்டவாளத்திற்கு பக்கவாட்டில் மழைத்
தண்ணீர் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு பாலித்தீன் காகிதம் இழுத்துக் கொண்டு நீரின் போக்கில் போனது.

நவம்பர் 17, 2008 - Posted by | culture

4 பின்னூட்டங்கள் »

 1. மனசு அடிச்சுகுது.. இந்த மாதிரி ஒரு இளகிய மனசா, அதுவும் இந்தக்காலத்தில? இந்த மாதிரி சிந்திக்கிற இளைஞர்கள் அதிகம் இருக்குமானால் இந்தியாவின் எதிர் காலம் எப்படி இருக்குமோ?

  இதையெல்லாம் பார்த்து மனம் இளகினால் , நம் முன்னோர்கள் வழி மொழிந்த ‘ அவனவன் தலை எழுத்து, அனுபவிக்கறான்’ என்று மனதைத் தேற்றிக் கொண்டு சரிகைப் புடவை வாங்கி பண்டிகை கொண்டாடலாம்.

  ஒண்ணுமே பிடி படமாட்டேங்கிறது.

  ஆனல் மனதில் ஒரு ஆறுதல், நம்மைப் போல நினைப்பவர்களும் உண்டு.

  hats off to you!

  பின்னூட்டம் by Jayalakshmi | நவம்பர் 20, 2008 | மறுமொழி

 2. கார்க்கியைப் போலவே வாழ்க்கையைப் படித்திருக்கிறீர்கள். அருமை… பொருளுக்கான நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சி. இனி பொருள்முதல்வாதத்துக்கான நாடோடி வாழ்க்கையை உற்சாகமாகத் தொடங்குங்கள். காசில்லாத அதே பொழுதில் விலை மதிப்பில்லாத உறவுகள் புலப்படத் துவங்கும். வாழ்த்துக்கள் தோழர்! தொடர்ந்து எழுதுங்கள்!

  பின்னூட்டம் by porattam | நவம்பர் 21, 2008 | மறுமொழி

 3. ஏ அய்யா. கதய ரொம்ப அருமையா எழுதிருக்கியேயா…. எழுத்து ந்ட அப்பிடியே பிடிச்சி கடசி வரைக்கும் கொண்டு வந்திருச்சேய்யா…. படிச்ச புறவு மனசில வெறும அப்படியே பரவி நிக்குதேயா….

  பின்னூட்டம் by purachi | ஜனவரி 23, 2009 | மறுமொழி

 4. அருமை கார்க்கி.. உங்கள் எண்ணங்களும் அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதமும்.

  பின்னூட்டம் by PPattian | திசெம்பர் 31, 2009 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: