கார்க்கியின் பார்வையில்

அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..

”ச்சை.. சனியனுங்க.. இப்பத்தான் கரெண்ட நிப்பாட்டனுமா நிம்மதியா சாப்புடக்கூட உடமாட்றானுக”

”இருய்யா மெளுகு வத்தி கொளுத்தறேன்”

”பாத்துப்போடி… வழியிலே சேர் கெடக்குது”

”ஆமா.. இது பெரிய்ய அரமனை.. இருந்தாலும் தடவிக்கிட்டு தானே போவனும்?”

”கெட்ட கேட்டுக்கு அரமன சொகுசு கேக்குது பாரு”

“உன்ர வாய்க்கு ஒன்னும் கொரயில்லைய்யா.. இந்தா சீக்கிரமா தின்னு முடி. மெளுகு வத்தி வெளிச்சத்துக்கு பூச்சி வரும்”

”அடிப்போடி.. இந்த ரேசன் அரிசியத் திங்கரதும் பூச்சியத் திங்கரதும் ஒன்னுதான்”

”ஒனக்கெல்லாம் ரூவாய்க்கு கிலோ அரிசி போட்டா அல்லைல கொளுப்பு கட்டுது”

”குடுக்கும் போது கிலோ ரூவாய்க்கு குடுக்கறான்.. அடுத்த நா காலைல காக்கிலோவுக்கு ரெண்டு ரூவா கேக்கறான்.. போடி நீயும் ரூவா அரிசியும்”

”நீ உங்கரக்கு ஆதரிச்சா பேள்ரதுக்கு வழியென்னங்கர”

” உங்கச் சோறு போட்டவன் இருக்கவனெல்லா பேள வழி இருக்கவனான்னு பாத்தா போடறான்?”

“செரி செரி சோத்தத் தின்னு முடி.. நரகலப் பத்தி பேசற நேரத்தப் பாரு”

”மணி ஒம்போதாகுது.. பய்யனெங்கடி?”

”ஆறாம்மவங்கிட்டெ புக்கு வாங்கப் போறேன்னு ஆறு மணிக்கிப் போனவன்… சேக்காளிகளோட சேந்து எங்கியாவது நாயமடிச்சிட்டிருப்பான்”

”சின்னப் பாப்பாளுக்கிறுக்கர பொறுப்பு இந்த நாயிக்கில்லே பாரு.. இஸ்கூல்லேர்ந்து வந்தமா படிச்சமா பொட்டாடம் தூங்குனமான்னு இல்லாம தெருப்பொறுக்கிட்டு அலையறான்.. பண்னெண்டாவது படிக்கறமே மார்க்கில்லேன்னா அப்பன மாறி நாமளும் கூலிக்குத் தான் போகனுமேன்னு பயமாச்சுமிருக்கா அவனுக்கு”

“அட சும்மாருய்யா.. மார்க்கெடுத்தா மட்டும் நீயென்ன டாக்டருக்கா படிக்க வச்சிரப்போறே?”

“நீ தாண்டி அவன செல்லங்கொஞ்சிக் கெடுக்கர”

”வக்கில்லாதவனுக்கு வாயி மட்டும் ஏளு மயிலு நீளமாம்மா..”

”இப்புடிப் பேசியே அவன் வீணளிஞ்சிப் போயிட்டாண்டி.. இந்த வருசம் அவனுக்கு பீசு கட்ட எத்தினி செரமப் பட்டோம்? ஏதோ ராயப்பன் தெரிஞ்சவனாகப் போயி ரண்டு வட்டிக்கி கொடுத்தொதவினான்,, இனி அடுத்தாப்புல காலேஜில சேக்கோனும்னா எவங்கிட்டேடி போய் நிக்கறதுன்னு நானே கவலயில இருக்கேன்”

”சரி உடுய்யா.. அவஞ்சோட்டுப் பசங்களப் பாத்தியா.. ஒவ்வொன்னும் கலர் கலரா உடுத்துக்கிட்டு பட்டாம்பூச்சி மாறி சுத்திக்கிட்டு இருக்குதுக.. நமக்கிருக்க வக்குக்கு சாயம் போன சட்டையத்தான் வாங்கிக் குடுக்க முடியுது.. அவனுக்கும் ஆசயிருக்காதா? கிரிக்கெட்டாடப் போகோனுமின்னாலும் சொந்தமா மட்ட வாங்கிட்டு வரச் சொல்றாங்களாமா.. ஏதோ சேக்காளிகளோட பேசறது அவனுக்கு சந்தோசம். அதையுமா நாம கெடுக்கோனும்?”

“இப்புடியே உட்டா அவனும் நாளைக்கு என்னிய மாறி கம்பி கட்டத்தான் லாயக்காவாண்டி. இந்த நாயிப் பொழப்பு நம்ம தலக்கட்டோடயே போகட்டும். இன்னிக்கு நா கண்டிசனா பேசறது அவனுக்கு கஸ்டமாத்தா இருக்கும்.. ஆனா நாளைக்கு அவங்குடும்பம் கடைல அரிசி வாங்கிச் சாப்புடும் போது நெனச்சிப் பாத்துக்குவான்.. அவனாவது அவம்பையனுக்கு நல்ல துணி வாங்கிக் குடுக்கட்டுமே”

“எல்லாஞ்செரிதான்யா.. இதெல்லா அவனுக்குப் புரியுமா? நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி திட்டிப் போடற.. அவனும் மூஞ்சியத் தூக்கிட்டு உங்காமத் திங்காம சுருண்டு படுத்துக்கறான்.. சின்னப் பய்யன்யா.. வளர வேண்டிய வயசு. மத்தவிங்க ஊட்டு நெலமையும் நம்மூட்டு நெலமையும் புரியவா போகுது? தீவாளி வருது.. எல்லாரும் இப்பவே புதுசு புதுசா எடுத்துப் போட்டுட்டு அலையுதுக.. நாம ஒரு வருசமாச்சும் நோம்பியன்னிக்கு புதுசு வாங்கிக் குடுத்துருக்கமா?”

“இதெல்லா அவங்காது படப் பேசிப்போடாத.. இதெல்லா கேட்டா அவனுக்கு இன்னுங்கொஞ்சம் தொக்காயிடும்.. உப்பக் கஸ்டப்பட்டா பின்னாடிக்கி நல்ல நெலமைக்கி வந்துருவாண்டி. ”

”ஆசையிருக்குது ஆன மேல போக.. வகையிருக்குது வக்கத்த நெலைலன்னு சொன்னா மாறி இருக்குது நீ பேசறது..”

” நீ வேனாப் பாருடி.. எந்தலைய அடமானமா வச்சாவது எம்பய்யன இஞ்சினீராக்கத்தாம் போறேன்”

“இஞ்சினீராமா இன்ஞ்னீரு.. இஞ்சி விக்க அனுப்புனா இப்புடி மஞ்சச் சோத்தத் திங்கரக்கு பதிலா வெள்ளச்சோறாச்சும் திங்கலாம்..அவனும் ஆசப்பட்டத தின்னு விருப்பப்பட்டத உடுத்திக்குவான்”

“உன்ர கரி நாக்க வச்சிட்டு சும்மா இருடி..”

“என்ர கரி நாக்கு கெடக்கட்டும் கெடயில.. நீ மொதல்ல தின்னு முடிக்கர வழியப் பாரு”

Advertisements

ஒக்ரோபர் 1, 2008 - Posted by | culture

1 பின்னூட்டம் »

  1. பிரமாதம். எளிய மக்களின் வாழ்வை சிறந்த மொழியுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்.

    பின்னூட்டம் by ஆழியூரான் | ஒக்ரோபர் 20, 2008 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: