கார்க்கியின் பார்வையில்

ஒரு தேவதையின் மரணம்…!

போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை..  குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?

ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.

“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”

“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”

“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”

“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”

ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும்  ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.

அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.

“வீட்டுக்குப் போகலையா?”

“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”

“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”

“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”

“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”

“அதுக்கில்லே…”

“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”

“………..”

“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”

“அதெப்படி…..”

“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”

“நல்ல மார்க் வாங்கனும்”

“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”

“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.

“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”

எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..

“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”

“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.

“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”

“ம்…”

“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”

“ஆனா எப்படி…?”

“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”

“ச்சும்மா இருக்கேன்”

“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”

“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”

“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”

“ம்… சரி”

“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”

“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது

“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”

“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”

“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”

“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”

கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”

அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள்.  அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.

“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”

“போடி.. அது என் ஸ்டைல்”

“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”

“ம்ம்… சரி”

‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”

“ம்ம்.. சரி”

“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”

“எனக்கு தெரியலடி…”

“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”

“ம்ம்.. சரி”

எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள்.  ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..

ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..

“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”

“என்ன?”

“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”

“ஏன்?”

“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”

“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”

“என்ன?”

“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”

“அது சரியா வராதுடா..”

“ஏன்?”

“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”

நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..

முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.

கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.

“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.

“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..

“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”

“எங்கே?”

“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”

“எதுக்குடா?”

“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”

“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”

“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”

“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.

“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”

வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”

“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”

“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”

“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”

“சந்தோஷமா இருக்கா?”

“அதெப்படி நமக்குத் தெரியும்”

“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”

“இப்ப என்ன சொல்ல வர்றே”

“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”

“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”

“பொண்ணு?”

“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”

“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.

அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.

“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”

“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”

“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”

“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”

திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம்.  எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

” சரி நான் போறேன் ”

“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”

“வேணாம் நான் போறேன்”

“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.

“இல்ல போறேன்”

“சரி.. போ….”

செப்ரெம்பர் 15, 2008 Posted by | culture, short story | , | 20 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: