கார்க்கியின் பார்வையில்

சில பயணங்கள் சில அனுபங்கள்..

போன மாதம் பணி காரணமாக நானும் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த எனது ஜூனியரும் நாகபுரி செல்ல வேண்டியிருந்தது. அது ஒரு அரசு நிறுவனம். அங்கே பாதுகாப்பான
ஒரு அறையில் மிகவும் பாதுகாப்பாக பொத்திப் பொத்திப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு இயந்திரத்தைப் பார்த்தோம். அது மிகக் கவனமாய் உறை போட்டு மூடப்பட்டு இருந்தது. பார்த்த
உடனே தெரிந்து விட்டது அதன் உறைகளைக் கழற்றியே பல வருடங்கள் இருக்குமென்று. நாங்கள் பார்க்கப் போயிருந்த அதிகாரியை அது பற்றிக் கேட்டோ ம்.

அது அமெரிக்காவிலிருந்து தருவிக்கப்பட்ட ஒரு இயந்திரமென்றும் அதன் விலை என்பது கோடியென்றும் இதே போன்ற இயந்திரம் மற்ற ஊர்களில் இருக்கும்
அதே நிறுவனத்தின் மற்றைய கிளைகளிலும் இருக்கிறதென்றும் பெருமையாகக் குறிப்பிட்டார். நாங்கள் அது ஏன் உபயோகப்படுத்தப்படாமல் கிடக்கிறது என்று கேட்டோ ம். அதற்கு அவர்
அதை எதற்கு பயன்படுத்த வேண்டும், எப்படிப் பயன்படுத்த வேண்டும் ஏன் பயன்படுத்த வேண்டும் என்று அங்கே உள்ள ஒருவருக்கும் தெரியாது என்றும் அது வாங்கப்பட்ட
கடந்த ஒரு நான்கு ஆண்டுகளாகவே ஒரு முறை கூட இயக்கப்படாமல் அப்படியே வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வேலை முடிந்து சென்னைக்கு ரெயிலில் வந்து கொண்டிருக்கும் போது உடன் வந்த எனது ஜூனியர் –

” என்ன அநியாயம் பாத்தீங்களா சார்.. நம்மளோட வரிப்பணமெல்லாம் எப்படி வீணாகுதுன்னு” என்றார்

“என்ன சொல்றீங்க.. புரியலையே” என்றேன்

“இல்ல.. அந்த இயந்திரத்தோட விலை என்பது கோடின்னா.. இவங்களோட பத்துக்கும் மேற்பட்ட கிளைகள்ல இப்படித்தானே சும்மா தூங்கிக்கிட்டு இருக்கும்?’

“ஆமா.. அதுக்கென்ன?”

“ஒரு என்னூறு கோடி ரூவா இப்படி அநியாயமா யாருக்கும் பயனில்லாம அனாமத்தா போயிடிச்சே?”

“சரி என்னா செய்யலாம்கறீங்க?”

“இல்ல சார் இந்த கவர்மெண்ட் சரியில்லைங்க”

“அப்ப எந்த கவர்மெண்ட் சரின்றீங்க? ஆபீசருங்கெல்லாம் ஒழுக்கமா என்ன?”

“எல்லாருக்கும் உள்கை இருக்குமில்லே? எல்லா நாயுங்களும் அயோக்கியனுங்க தான் சார்”

“அப்ப என்ன தான் பண்ணலாம்கறீங்க”

“இவனுக பூரா பேரையும் தொரத்தி வுட்டுப்பிட்டு.. நம்ம காசு நமக்கே பயன்படறா மாதிரி ஒரு கவர்மெண்டு உருவாகனும்க.. டோ ட்டலா எல்லாத்தையும் மாத்தனும் சார்”

“எல்லாம் சரிதான் யார் செய்யப்போறா? நீங்க அதுக்கெல்லாம் வேலை செய்யத் தயாரா?”

“………..”

சென்னை தான் வந்து சேர்ந்தது.. பதில் வரவில்லை

___________________________________________________________________________________________________

சில வாரங்களுக்கு முன் நன்பனுக்கு சேலத்தில் அவசர கல்யாணம் – காதல் கல்யாணம். திடீர் முடிவு. திடீர் அறிவிப்பு. எனவே திடீர் பயணம்.

சேலம் செல்ல கோயம்பேட்டில் இருந்து அரசு பேருந்தில் ஏறினேன். ஏறும் போது நடத்துனரிடன் சேலம் போய்ச் சேர எத்தனை நேரமாகும் என்று கேட்டேன். அவர் ஏழு மணி நேரம்
ஆகுமென்றார். அப்போது மணி காலை பத்து. எப்படியும் ஐந்து மணிக்கு சேர்ந்து விடலாம் என்று ஏறி அமர்ந்து கொண்டேன்.

பேருந்து ஆரம்பத்திலிருந்தே நத்தை வேகத்தில் தான் நகர்ந்தது. எனக்கு அருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்து வந்தார். தாம்பரம் தாண்டியதும் பேருந்து வேகம் பிடிக்கும்
என்று நாங்கள் பேசிக் கொண்டோ ம். தாம்பரமும் தாண்டியது. ஆனாலும் வேகத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை. டிவிஎஸ் 50 வண்டிகள் கூட எங்கள் பேருந்தை முந்திக் கொண்டு
போகும் அளவு வேகத்தில் தான் எங்கள் பேருந்து போய்க் கொண்டிருந்தது. திண்டிவனம் தாண்டியதும் பயனிகள் பொருமையிழந்து விட்டார்கள்…

கடந்து செல்லும் நடத்துனரை ஒவ்வொருவரும் பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். நடத்துனர் பரிதாபமாகக் கெஞ்ச ஆரம்பித்து விட்டார்..

“சார் நான் என்னாங்க பன்றது.. வண்டி கண்டிசன் அவ்வளவு தான். நாப்பதுக்கு மேல போனா படுத்துக்கும்.. நானும் இது ரெண்டாவது சிப்டு பார்த்துட்டு இருக்கேன். ஆளுங்களும்
இல்ல… எப்பா எறங்கி வீட்டுக்குப் போயி படுக்கலாம்னு இருக்கு என்ன செய்யட்டும் சொல்லுங்க” என்றார்..

பயனிகள் ஒவ்வொருவரும் பாய்ந்து பிடுங்கி விட்டார்கள்.

“வண்டி வேகமாப் போகாதுன்னாக்க ஏன் சார் எடுக்கறீங்க? ஏறும் போதே சொல்லலாமில்லே? ஏன் சார் எங்க உயிர வாங்கறீங்க?”

“நான் என்னாங்க செய்யட்டும்? வண்டி கண்டிசன் சரியில்லே… ஸ்பேர் பார்ட்ஸ் எதுவும் ஒர்க்சாப்பில் இல்லை.. மெக்கானிக் இல்ல.. புதுசா ஆளுங்களும் எடுக்கறதில்ல..”

விழுப்புரம் வந்து சேரும் வரை ஒவ்வொருவரும் பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் கரித்துக் கொட்டிக் கொண்டு வந்தார்களே ஒழிய ஒருவர் கூட அரசு பேருந்தின் அந்த அவல
நிலைக்குக் காரணமான அரசையோ, அரசு போக்குவரத்துக் கழகத்தையோ பற்றி பேசவேயில்லை.. எல்லோரும் தங்கள் கோபத்தை நடத்துனர் மேலும் ஓட்டுனர் மேலும் கொட்டித்
தீர்த்தார்களே தவிர ஒருவர் கூட ஏன் இப்படி ஒரு அரசு நிறுவனம் நலிவுற்றுப் போனது என்பது பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

விழுப்புரம் தாண்டியதும் நடத்துனர் பொருக்கமாட்டாமல் குமுறித்தீர்த்து விட்டார்..

“யோவ் எறங்கறதுன்ன எறங்கி வேற வண்டில வாங்க சும்மா நைய்யிநைய்யின்னு கத்தாதீங்க.. என்கிட்டே உழுந்து புடுங்கறீங்களே.. போய் கவர்மெண்ட கேட்க வேண்டியது தானே?
இன்னும் நாலு வருச சர்வீஸ் இருக்கு எனக்கு.. ரெண்டு பொண்ணுக கல்யாணம் இருக்கேன்னு பல்லக் கடிச்சிட்டு வேலை பார்த்திட்டு இருக்கேன் நானே.. என்கிட்டே ஏன்யா
எகிறிட்டு இருக்கீங்க? இப்படிக் கேவலமான கண்டிசன்ல பஸ்ஸெல்லாம் மெயிண்டெய்ன் பண்ணி தனியார் திங்கறக்கு வழி விட்டிருக்கானே அதிகாரி அவனைப் போய் கேளுங்கைய்யா..
லாபத்துல தானே பஸ் கார்ப்பரேசன் போனிச்சி.. அப்புறம் ஏன் மெண்டெனன்ஸ் செய்யாம நஸ்டத்துக்கு கொண்டாந்தீங்கன்னு அங்க போய் கேளுங்கைய்யா.. வந்துட்டானுக”

ஒரு வழியாக சேலம் வந்து சேர்ந்தது… பயனிகள் எவருக்கும் சொரனை வந்ததா என்று தான் தெரியவில்லை..

___________________________________________________________________________________________________

குலதெய்வத்தை பத்தாண்டுகளாக நான் பார்க்காமல் இருப்பது தான் நான் கோயில் மாடு மாதிரி பொறுப்பில்லாமல் சுத்தக் காரணம் என்று எந்த ஜோசியக்காரனோ அப்பாவிடம்
போட்டுக் கொடுத்து விட.. போன வாரம் என்னை குடும்பமே சேர்ந்து தென் தமிழ்நாட்டில் இருக்கும் எங்கள் குல தெய்வக் கோயிலுக்கு தள்ளிக் கொண்டு போய் விட்டார்கள்.

நான் பத்தாண்டுகளுக்கு முன் அவளைப் பார்த்தது.

அவள் ? இசக்கி.

அப்போதெல்லாம் அவளுக்கு கோயில் என்று எதுவும் பெரிதாக இருந்ததில்லை.. தெருவோரத்தில் ஒரு கீத்துக் கொட்டகைக்குள் தான் இருப்பாள்.. எங்கள் தூரத்து சொந்தத்தில் ஒரு
தாத்தா தான் பூசாரியாக இருந்தார். அந்தப் பழைய நினைவுகளோடும் அதே எதிர்பார்ப்போடும் போய்ப் பார்த்தால் ஒரே ஆச்சர்யம்.. புதிதாக கட்டிடம் எழும்பியிருந்தது. ஐந்தடி உரத்தில்
காம்பௌண்டு முளைத்திருந்தது. அதன் சுற்று முழுதும் காவியும் வெள்ளையுமாக வரிவரியாக இருந்தது. புதிதாக கிரில் கேட் போட்ட
கதவு முளைத்திருந்தது. ஆஸ்பெஸ்டாஸ் பந்தல் போட்டிருந்தார்கள்.. “எசக்கி கோயில்” என்ற தகரப்பலகையை காணவில்லை.. கிரில் கேட்டின் முகப்பில் “ஸ்ரீ இசக்கி அம்பாள்” என்று
எழுதியிருந்தது.. “இசக்கி” க்கும் “அம்பாளுக்கும்” நடுவே சமஸ்கிருத ஓம் போட்டிருந்தார்கள்.

“அப்பா கோயில இன்னும் நம்ம பூசாரித் தாத்தா தான் பார்த்துகிடறாரா?” என்று கேட்டேன்

“இல்லடா அவரு செத்துப் போயி தான் நாலு வருசமாகுதே.. இப்ப ஒரு குருக்கள் தான் பார்த்துக்கிட்டிருக்கார்”

“அந்தாளு பாப்பானா?”

“டேய் மரியாதையா பேசுடா.. அவரு குருக்கள்டா”

“குடுமி வச்சி பூணூல் போட்டிருக்கானா சொல்லு?”

“ஆமா அவங்க அய்யருமாருங்கடா..”

“அப்ப அவன் பாப்பான் தான்”

“நீ திருந்தவே மாட்டே..உனக்கு நாக்குல சனி”

“பார்த்தியா.. பாப்பான் வந்ததும் உன் சாமி பேரையே மாத்திட்டான் பாரு..”

“பேர்ல என்னடா இருக்கு..”

“பேர்ல தான் எல்லாமே இருக்கு.. முன்ன சாமி அதும் பாட்டுக்கு ரோட்டோ ரத்துல ஒக்காந்திருந்ததா? போற வர்ற எவன் வேணுமின்னாலும் கும்பிடலாம்.. தொட்டு கூட பாக்கலாம்..
ஆனா இப்ப பாத்தியா உனக்கும் சாமிக்கும் நடுவால இவன் வந்துட்டானில்லே? நம்ம தாத்தா தானே இந்த சாமிய இங்கே வச்சி கீத்துக் கொட்டாய் போட்டாரு.. இப்ப என்னாடான்னா
நீயே மூணாவதாள் மாதிரி வெளியே நின்னு அந்தாளுக்காக காத்துக்கிட்டிருக்கே. உள்ள என்ன பேங்கா நடக்குது? இதுக்கெதுக்கு கதவெல்லா? உனக்கு சாமிக்கும் நடுவாலே வர
இந்தாளு எதுக்கு?”

அப்போதைக்கு அவரிடம் இருந்து பேச்சேயில்லை.. வேண்டுதல் முடிந்து ஊருக்கும் வந்து விட்டோ ம். நேற்று போனில் கூப்பிட்டு கதவு கிரில் கேட்டெல்லாம் எடுத்து விடச்
சொல்லிவிட்டதாக சொன்னார். “குருக்களை” பத்திவிடச் சொல்லியிருக்கிறேன்.. பார்க்கலாமென்றிருக்கிறார்.

ஓகஸ்ட் 26, 2008 - Posted by | culture

4 பின்னூட்டங்கள் »

 1. பிரமாதம், அப்படியே Maintain பண்ணுங்க…

  பின்னூட்டம் by sunstalin | ஓகஸ்ட் 26, 2008 | மறுமொழி

 2. http://redsunrays.blogspot.com/

  பின்னூட்டம் by sunstalin | ஓகஸ்ட் 26, 2008 | மறுமொழி

 3. எஇன்க உருலயும் இந்த மாதிரி 4 கோவில் பெருசா கட்டிடானுஇங்க

  பின்னூட்டம் by pothikai | நவம்பர் 15, 2008 | மறுமொழி

 4. உண்மை தோழரே! எங்கள் ஊர் ‘ஸ்ரீ அங்காளம்மன்’ கோயிலுக்கு போன போது எனக்கு எழுந்த அதே எண்ணங்கள். “காத்து நுழையாத எடத்துலயும் பார்ப்பான் நுழைஞ்சிடுவான்”

  பின்னூட்டம் by ராஜாராமன் | ஜனவரி 6, 2010 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: