கார்க்கியின் பார்வையில்

கண்ணாடித் திரை

அவனை பதினேழு வருடம் கழித்து சந்திப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. வேலை முடிந்து ஆபீசில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அவனைப் பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் கடைசி நாள் சான்றிதழ் வாங்கும் நாளன்று பார்த்தது தான். அதற்குப் பின்எங்கே போனான் என்னவானான் என்கிற ஒரு தகவலும் இல்லாமல் போய் விட்டது. தாளாத மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தேன்.

“டேய் சுந்தரா.. எப்படி இருக்கேடா.. இத்தனை நாளா எங்கேடா போயிருந்தே..எப்போ இந்த ஊருக்கு வந்தே?” கொஞ்சம் முன்வழுக்கையும் இளந்தொந்தியுமாக இருந்தான் எங்கள் கல்லூரிக் கால ரோமியோ. கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் ஒரு ஐந்து வயதை கூட்டிக் காட்டியது.

“ம்ம்ம் நல்லா இருக்கண்டா.. இங்கே வந்து ரெண்டு மாசமாச்சு நீ எப்படி இருக்கே” ஏதோ சொல்லமுடியாத அவஸ்த்தையில் கண்கள் அலைபாய்ந்தபடியே பேசினான். நான் அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்.

“நானும் நல்லா இருக்கேன்.. அப்புறம் கல்யாணமெல்லாம் ஆயாச்சா?” என்று உரையாடலை நீட்டும் உத்தேசத்தோடு கேள்வியை வீசினேன்.

“ஆயாச்சு.. ஒரு பையன். ஐந்தாவது படிக்கிறான்” துண்டுத்துண்டான பதில்கள். எதிர்கேள்வியில்லை. ஏதோ அவசர வேலைக்குச் செல்பவனைப்  போல கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தான்.

“ஓ.. என்னடா ஒரு மாதிரியா பரபரப்பா இருக்கே? எதுனா அவசர வேலையா” கேட்டதும் அவன் முகத்தில் பல்பு எரிந்தது. இந்தக் கேள்விக்குத் தான் காத்திருந்தான் போல; உடனே பதில் வந்தது..

“ஹிஹி.. அமாண்டா.. கொஞ்சம் முக்கியமான ஒரு வேலை. ஒத்தரை பாக்க வர்றேன்னு சொல்லிருக்கேன் அதான் அவசரமா போயிட்டிருக்கேன் ஒன்னோட மொபைல் நெம்பர் கொடேன்.. அப்புறமா காண்டாக்ட் பன்றேன்” ஒருகையால் செல்பேசியை எடுத்துக் கொண்டே எதிர் காலை வீசி பைக் சீட்டை ஆரோகனித்தான். அவன் வண்டியின் டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்தது. உள்ளே எதையோ தினித்து வைத்திருந்தான்.

“சரி சரி.. உன் நெம்பர் கொடு மிஸ்டு கால் தர்றேன்”

மிஸ்டு கால் கொடுத்து விட்டு எனது செல்பேசியில் அவனது எண்ணை சேமித்துக் கொண்டே அடிக் கண்ணால் அவனைப் பார்த்தால் அவன் எனது எண்ணை சேமிக்காமல் பைக் சாவியை திருகிக் கொண்டிருந்தான்..

“டேய் சேவ் பண்ணிக்கடா”

“அப்புறம் பண்ணிக்கறேண்டா., மிஸ்டு கால் லிஸ்டிலே இருக்குமில்லே”

“சரி சரி எங்கே தங்கியிருக்கேன்னு சொல்லு நான் அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வர்றேன்” என்றேன். அவன் பைக்கை உதைத்து அதை புகை கக்க வைத்துக் கொண்டே பேசினான்,

“நேத்தாஜி நகர் தெரியுமில்லே.. அங்கே சிம்பொனி அப்பார்ட்மெண்ட்; ரெண்டாவது ப்ளோர்..  டோர் நெம்பர் 204” நான் குறித்துக் கொண்டேனா என்று கூட கவனிக்காமல் கியர் மாற்றி “சரிடா அப்புறம் கூப்பிடறேன்” என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திறாமல் பறந்தே போய் விட்டான்.

எனக்கு இப்போது ஆச்சரியம் கூடிப்போயிருந்தது; அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி கிண்டலுடன் எழுதப்பட்ட நகைச்சுவைகளைப் படித்திருந்தாலும் இப்போது அதுவே எனக்கும் நடப்பது வியப்பாக இருந்தது. ஏனெனில் நானும் அதே அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் தான் இரண்டு வருடங்களாக குடியிருக்கிறேன். ரெண்டு மாதமாக எனக்குக் கீழே உள்ள தளத்தில் வசிக்கும் நன்பனை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

‘போடா மவனே.. போ உனக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.

வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என் மனதைப் போலவே சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. பதினேழு வருடங்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.. இப்போதெல்லாம் கல்லூரி நன்பர்கள் தொடர்பு விட்டுப் போவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.. ஈமெயில் செல்போன் என்பதெல்லாம் அன்றைக்கு நாங்கள் கற்பனையே செய்து பார்த்திராத ஒன்று. அந்தக் கடைசி நாளில் கண்களில் கண்ணீரோடு ஒரு சின்ன அட்றஸ் புக்கில் எல்லோருடைய வீட்டு முகவரியையும் எழுதி வாங்கியது தான்; அதிலும் ஒரு பக்கத்தில் முகவரியும் அதன் எதிர்பக்கத்தில் அவர்கள் உதிர்த்த ஏதாவது ‘தத்துவ முத்தும்’ இருக்கும். அன்று பலர் வீட்டில் டெலிபோன் கூட இருக்காது. நன்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் அந்த புத்தகத்தை        தடவிப்பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இதோ இன்றைக்கு ஏற்பட்டது போன்ற எதிர்பாராத இனிய ஆச்சர்யங்கள் எப்போதாவது தான் நிகழ்கிறது – இந்த நிமிடம் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.

பழைய நினைவுகளோடே வந்ததாலோ இல்லை போக்குவரத்து நெரிசல் இல்லாததாலோ என்னவோ சீக்கிரமே அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்து விட்டேன். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டை நோக்கி திரும்பும் போது தான் கவனித்தேன். டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்த அந்த பைக் – ஸ்ப்ளெண்டர். ‘அட நம்மாளு வண்டியாச்சே.. எங்கியோ போயிட்டிருக்கேன்னு சொன்னானே..’

எதற்கும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள குனிந்து வண்டியின் சைலன்சரை தொட்டுப் பார்த்தேன். சூடாக இருந்தது. அப்படியானால் நம்மாளே தான். ‘எங்கேயோ போறேன்னு இவன் எதுக்கு டுபாக்கூர் வுட்டான்’ மணியைப் பார்த்தேன் ஏழாகியிருந்தது..

‘ம்ம்ம்.. இன்னிக்கே அவனுக்கு சர்ப்ரைஸைக் கொடுத்துட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் நெம்பர் பித்தானை அழுத்தினேன்.

************************************************************************************************************
“ஏங்க இன்னிக்கு லேட்? எங்கே ஊதுங்க பாக்கலாம்?” இது வீட்டுக்குள் நுழைந்ததும் நடக்கும் வழக்கமான செக்கிங் தான். போன வாரம் நானும் எனது இடதொரு பாகமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தோம். ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்னு கணக்குப் போட்டா மாசம் அறுநூறு ரூபா ஆவுது ஒங்க புகை செலவுக்கு. காசு என்னா மரத்துலயா காய்க்குது? அதனாலே ஒழுங்கா மரியாதையா புகை விடற பழக்கத்தை விட்டொழிக்கறீங்க’ என்று கண்டிப்பான கட்டளை போட்டிருந்தாள்

“ஹேய்.. எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தால், எனது வாரிசு நான் உள்ளே வந்ததுகூடத் தெரியாமல் வீடியோ கேம்ஸில் ஆழ்ந்து கிடந்தான்.
இவனுக்கு தெரிந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று வீடு – அடுத்தது பள்ளி. இது இரண்டுக்கும் வெளியே ஒரு உலகமோ மனிதர்களோ இருப்பதே அவனுக்கு வீடியோ கேம்ஸில் வரும் க்ராபிக்ஸ் மனிதர்களை வைத்துத் தான் தெரியும். எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தேன். அரசுப் பள்ளியில் படிக்கத்தான் எங்களுக்கெல்லாம் வசதியிருந்தது. தமிழ்வழிக் கல்வி தான். ஆனால் உலகம் குறித்து என் மகனை விட அவன் வயதில் எனக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வீட்டின் பொருளாதாரம் குறித்தும் அறியவைக்கப்பட்டிருந்தோம்.  ஒவ்வொரு பெரிய பரீட்சை விடுமுறையிலும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் விளையும் கீரையைக் அதிகாலை நேரத்திலேயே போய் பறித்து வந்து கட்டுக் கட்டி வீடு வீடாக விற்போம். கிடைக்கும் காசை சேர்த்து வைத்து தான் அடுத்த வருடத்திற்கான புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்க வேண்டும்.

அந்த நாட்களின் மாலை நேரமெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக
இருக்கும்; மாரியம்மன் கோயில் திடல் புழுதியில் கபடி விளையாடிக் கொண்டிருப்போம். சிராய்ப்புகள் இல்லாமல் வீட்டுக்குப் போனதாக சரித்திரமே கிடையாது. அப்போதெல்லாம் கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. விதம் விதமான விளையாட்டுகள் இருக்கும். கில்லி தாண்டு, பம்பரம், கரடி விளையாட்டு, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோலி விளையாட்டின் அந்தப் பாட்டை
இப்போதும் சில நேரங்களில் ஹம் செய்வதுண்டு – “ஐய்யப்பஞ்சோலை.. அறுமுகதகடி… ஏழுவாலிங்கம்.. எட்டுமுத்துக் கோட்டை…” இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. எங்கள் விளையாட்டுகள் ஒன்று உடலுக்குப் பயிற்சியாக இருக்கும் அல்லது பையன்கள் மத்தியில் கூட்டுறவான ஒரு நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.

 எங்கள் ஊரில் இருந்த என் வயதுச் சிறுவர்களெல்லாம் எனக்கு நன்பர்கள் தான். எல்லோரும் மற்றெல்லார் வீட்டுக் கதையும் அத்துப்படியாகத் தெரியும். ஒவ்வொருத்தன் வீட்டிலும் என்னப் பிரச்சினை, அது எப்படித் தீர்ந்தது என்பதை பேசிக் கொள்வோம். அந்த
அனுபவங்கள் இப்போதும் கைகொடுக்கிறது.

இவனுக்கோ விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸைத் தவிர்த்து கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பத்து வயதுப் பையன் நட்டமாய் வளராமல் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே போய் இப்போது ஒரு உருண்டையான உருவத்தை அடைந்திருக்கிறான். இப்போதே சைனஸ் பிரச்சினை வேறு.. எடுத்ததற்கெல்லாம் பிடிவாதம். நினைத்தை நினைத்த நேரத்தில் வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதம். என் தந்தை எனக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கேட்டு.. அப்புறம் உரமூட்டை சாக்குகளை சாக்கு வியயபாரி இஸ்மாயில் பாயிடம் ஒரு வருடத்துக்கு போட்டு அந்தக் காசை ஒரு வருடம் கழித்து மொத்தமாய் வாங்கி; அப்படி வந்த காசில் தான் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் எதையாவது வாங்கிக் கொடு என்று கேட்கவே பயமாக இருக்கும். எங்கள் முன்னே வைத்துத் தான் அப்பாவும் அம்மாவும் பணச் சிக்கல்களையெல்லாம் பேசிக் கொள்வார்களென்பதால் இயல்பாகவே அந்தத் தயக்கம் இருந்தது. என் மகனோ நாங்கள் பேசிக் கொள்ளும் போது ஒரு ‘டீசெண்ட் டிஸ்டென்ஸ் மெயிண்டென்ய்’ பண்ணுகிறான். ரொம்பநாள் கழித்து தான் தெரிந்தது –
அப்படிச் செய்யச் சொல்லி தான் அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம். 

எங்கள் விடலை வாழ்க்கைக்கும் இன்றைய நகர வாழ்க்கைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்..  இந்த நகர வாழ்க்கையும் அப்பார்ட்மெண்ட வாசமும் ஏதோ நான் சிறையில் இருப்பது போன்றதொரு பிரமையைத் தான் தருகிறது. பாருங்களேன்.. கீழே எனது நன்பன்
குடிவந்து இரண்டு மாதங்களாகிறது.. நான் கவனிக்கவே இல்லை!! எங்கள் ஊரிலெல்லாம் புதிதாக எவர் வந்தாலும் அதைப் பற்றி எல்லோருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.. சுந்தரின் மகனும் என் மகனும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தால் இவனுக்கு அது நல்லது தான்.. அட்லீஸ்ட் வீட்டை விட்டு வெளியேவாவது போகிறானா பார்க்க வேண்டும். சமூக உறவுகளோ நன்பர்களோ இல்லாமல் இவன் வளருவது எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கிறது.

“என்னாங்க.. சப்பாத்திக்கு மாவு உருட்டித் தாங்க நான் கிழங்கு செய்யறேன்” துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே வந்தால் மனைவியின் அழைப்பு.

“இரு இரு இப்ப வேணாம்.. நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனில்லே என் ப்ரெண்டு சுந்தர் பத்தி.. அவன் இங்கே ரெண்டாவது ப்ளோரில் தான் குடிவந்து இருக்கான்.. போய் பார்த்திட்டு வந்து ஆரம்பிக்கலாம்”

“எப்ப வந்தாராம்.. நீங்க என்கிட்டே சொல்லவே இல்லையே..?”

“எனக்கே இன்னிக்குத் தான் தெரியும்மா.. சரி சரி கிளம்பு போயிட்டு வந்துடலாம். டேய் தம்பி நீயுந்தான் கெளம்பு கெளம்பு.. சீக்கிரம்”

ஒரு கொலைவெறிப் பார்வையை வீசி விட்டு எந்த வார்த்தையும் பேசாமல் வாசலுக்கு வெளியே போய் நின்று கொண்டான். ‘எல்லாம் நேரம்டா.. எங்கப்பன் கிட்டே இந்த முறுக்கை நான் காட்டியிருந்தா கண்ணை நோண்டியிருப்பான்; உங்கப்பன் ஈவாயன்றதால தானே இந்த லுக்கு.. இரு வச்சிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டேன். ஆரம்பத்தில் செல்லம் கொடுத்தது என் தவறு; இப்போது என்னத்தைப் புலம்பி என்னத்தச் செய்ய?

*************************************************************************************************************
டோர் நெம்பர் 204.

உள்ளே ஹோவென்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். இந்த திடீர் விஜயம் அவனை எப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த போதே காலடிச் சத்தம் கேட்டது.

அவன் தான்.. அவனே தான். பார்த்தவுடனே முகம் அஷ்டகோனலாகிப் போனது. அசடு வழிய சிரித்துக் கொண்டே.

“டே டேய்… நீ நீ எப்படிடா.. இங்க..? சங்கடத்துடன் வந்த வார்த்தைகளுக்குள் அதை விட சங்கடமான கேள்வி. ஹாங்..அப்புறம் நான் முக்கியமாய் எதிர்பார்த்த அந்த ஆச்சரியம் மிஸ்ஸிங்.

“ராஸ்கல்.. நான் உன் அட்ரஸ் கேட்டேனே.. பதிலுக்கு நீ கேட்டியாடா? நானும் இதே அப்பார்ட்மெண்டில் தாண்டா ரெண்டு வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். இது என் வைஃப் இது பையன். இவனும் ஐந்தாவது தான் படிக்கிறான்”

“ஹிஹி.. வாங்க வாங்க சிஸ்டர்” இப்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டான்.

“வாங்க வாங்கன்னு சொல்லிட்டே நந்தி மாதிரி வாசலை அடைச்சு நிக்கிறாயே; வழிய விடு மொதல்ல” எங்களுடையதைப் போன்ற அதே விதமான ப்ளாட் தான். சிட்டவுட் தாண்டி ஹாலுக்குள் நுழைந்தால் இருபத்தோரு இன்ஞ் தொலைக்காட்சியின் திரைக்குள்ளே தலையை நுழைக்காத குறையாக இன்னொரு உருண்டை உருவம். அவன் மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..

“இது என் பையன். ராகுல் இங்க பாரேன் யாரு வந்திருக்கான்னு..” இவன் அழைப்பு சுவற்றில் மோதிய பந்தாக திரும்பி வந்தது. தலையைத் திருப்பாமலேயே “ஹலோ அங்கிள்” ஒன்றை வீசினான்.

“அவனுக்கு கிரிக்கெட்னா சரியான பயித்தியமாக்கும்” சுந்தரின் வார்த்தைகளில் பெருமிதம் அலைமோதியது. இப்போது தான் விளங்கியது இவன் ஏன் மாலை என்னை தவிர்த்து விட்டு பறந்தான் என்று. இப்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்ன சொல்வது என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உள்பக்கமாய் திரும்பி “பாப்பு.. இங்கெ வாயேன்” என்றான்.

“யாருங்க” என்றவாறே உள்ளேயிருந்து அவன் மனைவி வெளியே வந்தாள்.

“இது யார் தெரியுமா.. செந்தில்நாதன். என் பிரெண்டு. அது அவன் வைஃப். அது அவங்க பையன். இதே ஊரில் தான் இவனுக்கும் வேலை. நம்ம அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கான். ஐந்தாவது ப்ளோரில” தந்திவாக்கியங்களில் அறிமுகத்தை முடித்து வைத்தான். அவள் எனக்கு கையை கூப்பிவிட்டு என் மனைவியை நோக்கி ஒரு சினேகமான பார்வையை வீசினாள்.

“ஒரு நிமிஷம் இருங்க காபி கொண்டு வர்றேன்” என்றவாறே உள்ளே திரும்பினாள். உடனே நம்மாள் “நானும் வந்து ஹெல்ப் பண்ணலாமா”    என்றவாறே எழுந்து விட்டாள்.

“அட.. என்னாங்க கேட்டுக்கிட்டு, தாராளமா வாங்களேன்” அவர்களிருவரும் சமையலறை நோக்கி நகர்ந்து விடவே நான் சுந்தரின் பக்கம்  திரும்பினேன். அவனோ டி.வி பக்கம் மும்முரமாய் இருக்கவே நானும் அந்தப் பக்கம் திரும்பினேன். ஏதோ கிரிக்கெட் மாட்ச் நடந்து
கொண்டிருந்தது. இடையிடையே சில பெண்கள் இடையை அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.

“ஹேய் என்னடா இது.. கிரிக்கெட்டுக்கு மத்தில டாண்சு ஆடறாங்களே இதென்னடா கூத்து?” இப்போது தான் நான் இதைப் பார்க்கிறேன்.

அவன் தலையைத் திருப்பாமலேயே பதில் சொன்னான் “இது ஐ.பி.எல் மேட்ச். டொண்டி டொண்டி. அவங்க சியர் லீடர்ஸ்” மறுபடியும் தந்தி வாக்கிய பதில்கள். அட.. இவனுக்கு என்னதானாச்சு..? சரி.. அவனுக்கு ஆர்வமான இடத்திலேர்ந்தே பேச்சைத் தொடங்குவோம் என்று நினைத்து,

“ஆமா எந்தெந்த நாடுகள் விளையாடறாங்க?” என்றேன்.

விருட்டென்று திரும்பினான் “டேய் உனக்கு ஐ.பி.எல் பத்தி தெரியாதா?” என்று விட்டு பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்தான்.

“எனக்கு எப்படா இதிலெல்லாம் விருப்பமிருந்தது? எனக்குத் தெரிஞ்சி சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு விளையாடறார். போன உலகக் கோப்பையை நாம் தோத்துட்டோம்.. இப்படி தலைப்புச் செய்தியா வர்ற மேட்டர் மட்டும் தான் எனக்குத் தெரியும். அதிலும் இப்பல்லாம் பேப்பர் கூட முழுசா படிக்க நேரமிருக்கறதில்லே”

“அடப்பாவி… இதாண்டா இன்னிக்கு ஹாட் நியூஸே.. அதாவது.. உலக அளவில பேமஸான வீரர்களும் உள்ளூர் வீரர்களுமா சேர்ந்து அணிகளை அமைச்சிருக்காங்க. அவங்களுக்குள்ளே ஆளுக்கு இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும் விதமா ரூல்ஸை மாத்தி வைச்சி விளையாடறாங்க. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளெல்லாம் அணிகளை விலைக்கு வாங்கி, இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்காங்க” என்றான்.

“அப்ப இப்ப விளையாடற டீம் எதெது?”

“இது சென்னை டீமும் டெல்லி டீமும்.. தோ.. மஞ்ச சட்டை போட்ட டீம் தான் நம்ம சென்னை டீம்” என்றான்.. திரும்பிப் பார்த்தேன்.. மஞ்சள் சட்டை போட்ட வெள்ளையன் ஒருவன் பந்து வீச ஓடிக் கொண்டிருந்தான்.

“என்னடா அவனைப் பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்?” என்றேன் மீண்டும்.

இந்த முறை அவனிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது.. “டேய் அதான் சொன்னேனே வெளியூர் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் சேர்ந்து விளையாடுவார்கள் என்று” என்றான்

“அப்ப சென்னை டீமில் எத்தனை பேர்டா நம்மாளுக?”

“ஒரு ரெண்டு மூனு பேர் இருப்பாங்க” தலையைத் திருப்பாம பதில் சொன்னான்.

‘ரெண்டு மூனு தமிழ்காரங்க இருக்கற டீமை எப்படி சென்னை டீம்னு சொல்றாங்க’ என்று தோன்றியதை கேட்கவில்லை. இந்த எழவு எனக்கு எப்போதும் புரியப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.

ஹோவென்ற அந்த இரைச்சலுக்கு மத்தியில் எங்களுக்குள் ஒர் மயான அமைதி நிலவியது. இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். தொடர்பு விட்டுப்போன நன்பர்கள் குறித்து, அவன் வேலை குறித்து, பழைய நினைவுகள்.. ஆனால் அவனோ எதையும்
கேட்கும் நிலையில் இல்லை. நிறைய பேச்சு சப்தம் அந்த அறையில் இருந்து எழுந்தது; ஆனால் அவையெல்லாம் டீ.வி திரைக்குள்ளிருந்து. என் பக்கமாக அவன் திரும்புவதாயில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், அவன் மனைவியும் என் மனைவியும் சமையலறையில் இருந்து வெளியே வந்தனர் – கைகளில் காபிக் கோப்பைகளோடு.

காபி அருந்தும் போது கூட அவன் திரும்பவேயில்லை. விளையாட்டு எந்தளவுக்கு கவர்ந்ததோ அதேயளவுக்கு விளம்பரங்களும் அங்கேயிருந்த எல்லோரையும் கவர்ந்தது. என் மனைவியும் மகனும் விளம்பரங்களை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளூர பயம் ஆரம்பித்து விட்டது.. ‘ இந்த மாதம் ‘இன்ப்ளேஷன்’ நோயால் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் எனது பர்ஸ் ஏற்கனவே மெலிந்து கிடக்கிறது; இவர்கள்
இனிமேல் புதிதாய் ஏதேதும் பூதத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது’ என்கிற சிந்தனை வேறு வாட்டிக் கொண்டிருந்தது.

ஏண்டா வந்தோமென்றாகி விட்டது எனக்கு. அழைப்பில்லாத கல்யாண வீட்டுக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் எந்த உரையாடலும் இன்றி ஹோவென்ற அந்த இரைச்சலின் பின்னனி இசையுடன் இப்படியே கழிந்திருந்த நிலையில்.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அந்த இரைச்சல் என் மூளைக்குள் அமிலத்தைக் கொட்டுவது போலிருந்தது.

“டேய் நாங்க அப்ப கிளம்பறோமே..” இதற்காவது திரும்புவான் என்று எதிர்பார்த்தேன்

“ம்ம் சரிடா” தலையைத் திருப்பாமலேயே பதிலை வீசினான்.

“சரிங்க அப்ப நாங்க வர்றோம்.. ஞாயித்துக் கிழமை நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க அஞ்சாவது மாடில தான் இருக்கோம்” என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்தேன். கூடவே என் மனைவியும், பெரும் கடுப்போடு என் மகனும் எழுந்து விட்டனர்.

நாங்களே கதவைத் திறந்து வெளியே வந்து சாத்தி விட்டு லிப்டை நோக்கி நடையைப் போட்டோ ம். கடும் ஏமாற்றமாக இருந்தது… எத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த நன்பன்.. புதிப்பிக்கப் போகும் நட்பைக் குறித்து மகிழ்ச்சியாக வீட்டிலிருந்து கிளம்பினேன்.. இப்போது சோர்வாக உணர்கிறேன். போதைக்கு ஆட்பட்டவனைப் போல டி.வி திரையை வெறிக்கும் நன்பன் எனக்கு வினோதமாய் தென்பட்டான். எல்லோரும் நடமாடும் பண்டங்களாகிவிட்டாகளோவென்கிற சந்தேகம் எழுகிறது. 

விளையாட்டு என்னும் நிலையைக் கடந்து கிரிக்கெட் வேறொருதளத்தை அடைந்துவிட்டது புரிந்தது. ஆட்டத்தின் இடையே கவர்ச்சியான உடையலங்காரத்தோடும்
ஆபாசமான உடலசைவுகளோடு ஆடும் பெண்கள். பரபரப்பு, ஆபாசம், வக்கிரம் என்று ஒரு நீலப்படத்தின் சகல அம்சங்களோடும் இருக்கிறது. விளம்பரங்களை வெறித்துப் பார்க்கும் பொடிசுகள் நம் மனதுக்குள் கலவரத்தை விதைக்கிறார்கள். ஏற்கனவே என் வாரிசு பெரும் பிடிவாதக்காரன்..இப்போது என்னென்ன எழவை மனதுக்குள் குறித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லை.

என் மகன் தான் கேட்டது கிடைக்கப் பெற்றால் தான் என்னோடு சகஜமாக பேசவே செய்கிறான். அந்தளவுக்கு இந்த விளம்பரங்கள் பொருட்களை வலுக்கட்டாயமாக மூளைக்குள்ளேயே திணித்து விடுகிறது. மனித உறவுகளே கூட வணிகமயமாகிவிட்ட போது விளையாட்டுகள் எம்மாத்திரம்.. அதிலும் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டின் இடையிடையே தோன்றும் விளம்பரங்களோ வீரிய ஒட்டுரக வகையைச் சேர்ந்தவை. திரையில் சிக்ஸர் அடித்த அதே வீரர் இடைவெளியில் வந்து ‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்றால் என் மகன் வீட்டில் செய்த நவதானிய சத்துமாவை காறித்துப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

எப்போது படுத்தேன் எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை; இதே நினைவுகளோடே உறங்கிப் போனேன்… அன்றைக்குக் கனவில் நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் நிற்பது போலொரு காட்சி தோன்றியது. அக்கூட்டத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எல்லோரும் என்னோடு பேசினர், நானும் எல்லோரோடும் பேசினேன்.. ஆனால் எவருக்கும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. எங்கள் எல்லோரையும் ஏதோவொரு திரை – கண்களுக்குத் தெரியாத கண்ணாடித் திரை – மறித்து நிற்பது போலிருந்தது. தொட்டு விடும் தூரத்தில் தான் சுந்தர் தெரிந்தான்; ஏதோ பேசினான் எனக்குக் கேட்கவில்லை. எனது சப்தமும் அவனுக்குக் கேட்டிருக்காது. எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாத உணர்வொன்று அனைவரையும் ஆட்கொண்டது. இயந்திரம் போன்ற இறுக்கமான முகத்தோடே என் மகன் என்னைக் கடந்து போகிறான்.. வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உன்னோடு பேச்சு மட்டும் என்ன கேடு என்று அவன் முகம் சொன்னது மட்டும் எனக்குக் கேட்டது.. அந்தத் திரை சப்தங்களை மறித்தது போய் காற்றைக்கூட மறிக்கத் துவங்கிவிட்டதோ..  மூச்சுத் திணறுவது போலிருக்கிறது. சப்தங்களோ காற்றோ கூட இல்லை.. மரணாவஸ்த்தையாக இருக்கிறது.. ஆயினும் சிலர் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது..  

சட்டென்று விழிப்பு வந்தது – தொப்பலாக வியர்த்திருந்தேன். அந்தத் திரை…அந்தத் திரை… அதை… உடைத்து நொருக்கத் தான் வேண்டும்..!

 

 

மே 21, 2008 Posted by | culture, short story | | 3 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: