கார்க்கியின் பார்வையில்

கொல்லும் இருள்

இது மௌனமா இல்லை மரணமா
என்று தெரியவில்லை.
வார்த்தைகள் மட்டும் தான் செத்துப் போனதா
இல்லை செயல்கள் கூட செத்துப் போனதா
என்றும் புரியவில்லை..

வயிற்றில் சுரக்கும் அமிலம் எரிக்க சோறில்லாமல்
இங்கே குடல்கள் எரிந்து சாம்பலாகிறது..
கொலைகளின் வெற்றிப் பெருமிதம்
முகத்தில் அறைந்த நரகலாய் நாறுகிறது..
சுவர்களற்ற வெளியில் குளிரும் கூட அலைகிறது
உயிர்கள் தேடி..
குளிரின் ஓய்வுக்குக் காத்திருக்கிறான்
சூரியன்..
விதைத்த விதைகளோ தாம்புக்கயிறுகளாய் முளைக்கிறது
அறுத்ததை விற்றால் பூச்சி மருந்தே மிஞ்சுகிறது

உண்டது மட்டுமல்ல கண்டதும் கூட மலமாய்க்
கழிகிறது..
தெரிக்கும் இரத்தத்துளிகளில் ஓவிய நளினம்
தேடும் கண்கள்..
ஓலங்களின் ஒலியில் சிம்பொனி தேடும்
காதுகள்..
பிணங்களின் நாற்றத்துக்குப் பழகிப் போன
நாசிகள்..

உடல் இயங்கிக் கொண்டுதானிருக்கிறது..
உணர்வுகள்…..?

திசெம்பர் 27, 2007 Posted by | கவிதை | 3 பின்னூட்டங்கள்

   

%d bloggers like this: