கார்க்கியின் பார்வையில்

ஊமைப் பட்டாசுகள்!

“ஹம்ப்க்” ஒரே தம்மில் லாவகமாய் அந்த வெங்காய மூட்டையை ஏற்றிக் கொடுத்தான் துரை.

அது தாராபுரத்தின் ஒரு சின்ன காய்காறிச் சந்தை. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வரும் வெங்காயமும் தக்காளியும் தரம் பிரிக்கப்பட்டு சென்னையின் பெரிய சந்தை ஒன்றுக்கு லாரிகளில் லோடடிப்பார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள் அது. பண்டிகை நாளுக்கான எந்த பரபரப்பும் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது சந்தை. போன வருடம் இதே நாளில் எள்ளுப் போட்டால் கீழே என்னையாகி விழும் கூட்ட நெறிசல் இருந்தது துரையின் மனதில் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தது.

“ஐய்யே.. கொஞ்சம் மெதுவாத்தான் தாயேன்… ஸ்லிப்பாவுதுபா…” வழுக்கிய ஒரு முனையை அட்ஜஸ் செய்து மேலே தூக்கிக் கொண்டே சொன்னார் பெரிசு.

பெரிசுக்கு என்ன வயதென்றே எவராலும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அனேகமாக இந்த சந்தை செயல்பட ஆரம்பித்த துவக்க நாட்களிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். பெயர் கூட இன்னதென்று எவருக்கும் தெரியாது – அதைப்பற்றி எவரும் கவலைப்பட்டது கூட கிடையாது – எல்லோருக்கும் அவர் “பெருசு” தான். சந்தை அடைந்த பின் ரோட்டின் எதிர்ப்புரத்தில் இருக்கும் ராயப்பன் டீக்கடையின் திண்ணை தான் பெரிசின் ஜாகை. பச்சைக் கலரில் ஒன்றும் நீலக்கலரில் ஒன்றுமாக இரண்டு முண்டா பனியன்கள் உண்டு அவரிடம். மிகக் கூர்மையாக கவனித்தால் தான் அதன் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். பெரிசுக்கு பேச்சுக் கூட்டாளி துரை தான். வேறு எவரிடமும் அவர் அனாவசியமாகப் பேசி யாரும் கவனித்ததே இல்லை.

“என்னாங்கடா அங்க பேச்சு? எத்தினி மூட்டைய ஏத்திருக்கீங்க?” இருபதுகளின் துவக்கத்தில் இருந்த செட்டியார் மகன் முப்பதுகளின் இறுதியில் இருந்த துரையையும் பெரிசையும் அதட்டல் குரலில் கேட்டுக் கொண்டே மண்டியில் இருந்து வெளியே வந்தான். ஆட்காட்டி விரலை அடையாளமாய்ச் சொருகி ஒரு குமுதத்தைக் கைவிரல்களில் பற்றியிருந்தான். நாளைய ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் புக் பண்ண போக முடியாமல் நாற்றம் பிடித்த வெங்காய மண்டிக்குள் திணித்து விட்டு திருப்பதிக்கு சேத்ராடனம் கிளம்பி விட்ட அப்பனின் மேலான எரிச்சல் மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. உழைப்பேயறியாத ஊளைச் சதை அல்லைகளில் பிதுங்கிக் கொண்டிருந்தது. வெயில்படாத தேகத்தில் பரவலாக ஒரு மினுமினுப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.

“நூத்தம்பது மூட்ட ஆச்சுது மொதலாளி; இன்னும் ஒரு அறுபது தேறும்” பெரிசு பதில் சொல்லவில்லை.

“ஜல்தியா ஏத்துங்கடா.. மெட்றாசுல இருந்து போன் வருது.. வண்டிய அனுப்பனும்ல..”

“செரி மொதலாளி ஒரு டீயப் போட்டுட்டு வந்துடறோம்..” துரையின் பதிலுக்கு செட்டியார் மகன் மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே டேபிளுக்குத் திரும்பினான். ஆட்காட்டி விரல்கொண்டு அடையாளம் வைத்திருந்த குமுதத்தின் நடுப்பக்கத்தை திருப்பிக் கொண்டே ப்ளாஸ்டிக் வலைச் சேரில் சாய்ந்தான்.

துரையும் பெரிசும் ரோட்டைக் கடப்பதைக் கண்ட ராயப்பன் இரண்டு கண்ணாடித் தம்ளர்களை வென்னீரில் ஒரு அலாவு அலாவி பாய்லரின் பைப் முன்பு வைத்தான்.. “ஆத்தாமப் போடு ராயப்பா.. அப்புடியே சின்னக்கட்டு யோகி பீடி ஒன்னு” என்ற துரை இரண்டு போண்டாவை எடுத்து ஒன்றை பெரிசின் கையில் திணித்தான்.

“தொரை.. அறுபது மூட்டைக்கு இது காணுமா..? சாயந்திரமா மேட்டுப்பாளையத்திலேர்ந்து தக்காளி டெம்போ வேற வருது..”

ராயப்பனின் அழுக்கடைந்த எப்.எம் ரேடியோ கரகரப்பாக, “இது ஒன் ஜீரோ பைவ் பாய்ண்ட் நைன் சூரியன் எப்.எம். நீங்கள் கேட்டிக் கொண்டிருப்பது நேயர் விருப்பம். நேரமிப்போது இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்…..” என்றபடியே உளரலைத் தொடர்ந்து கொண்டே போனது..

“கேட்டியா பெரிசு.. மணி ஏற்கனவே ரெண்டே முக்கா.. சாப்புடப்போனா மணி மூன்ற ஆய்டும். இவிங்கய்யன் மாறி இவனுக்கு பொறுமையே இல்ல.. சும்மாவே கத்திட்டு இருக்கான்..” என்றவாறே ரோட்டின் எதிர்ப்புறத்தில் மண்டியினுள் குமுதத்தில் தலையைக் கவிழ்த்துக் கிடந்த செட்டியார் மகனை சுட்டிக் காட்டினான் துரை.

சின்னக்கட்டு யோகியைப் பிரித்து அதில் ஒன்றை உதட்டோ ரம் சொருகி வெட்டுப்பல்லால் கடித்த படியே.. ” இந்த செட்டிப் பயலுக்கு மூளைல கரையான் புடிச்சிருக்கு போல.. ஏற்கனவே யாவாரம் டல்லு.. ஊரே பூராம் பெரிய பெரிய காய்கடைகள ஏசி போட்டு தொறந்து வச்சிருக்கான்.. போன நோம்பிக்கும் இந்த நோம்பிக்கும் எத்தினி வித்தியாசம்..? போன வருசம் இதே நாளு நானும் நீயுமா ஐநூறு மூட்டைய ஏத்துனோம் ஒவ்வொரு நாளும் மூன்னூறு மூட்டைக்கு கொறவில்லாம ஏத்துவோம்.. இப்ப என்னாடான்னா… நாளுக்கு நூத்தம்பது மூட்ட தேறுனாலே அதிகம்னு வண்டியோடுது.. இத்தினிக்கும் போன வருசம் பத்து மண்டி; இந்த வருசம் நாலு தான் பொழச்சுக் கெடக்குது.. யாவாரமே இப்புடி தெடுமாறிக்கிட்டுக் கொடக்க இந்த செட்டிப்பய பொறுப்பில்லாத மவனக் கொண்டாந்து ஒக்கார வச்சிட்டு திருப்பதிக்குப் போயிருக்கான். அவன் வாரதுக்குள்ளாற இவன் உள்ள
யாவாரத்துக்கும் மொட்டையடிச்சிடுவான் போலிருக்கு…”

நீளமாய்ப் பேசிய பெரிசு புகையை வெளியே தள்ளினார் பெரிசு..

“ட்ட்ட்ட்ட்ட்டொம்ம்ம்ம்”

செவிப்பாறையின் அதிரலில் துரை ஒரு முறை தோளைக் குறுக்கிக் கொண்டான் ” யார்ராவன் கேணப்பொச்சு.. நாளைக்கித்தான நோம்பி.. இப்பயே காதக் கிழிக்கிறானுங்க” முணுமுணுத்துக் கொண்டே துரை திரும்பிப்பார்த்தான். தெருமுனையில் சில பையன்கள் அடுத்த பட்டாசைப் பற்றவைக்க அதன் திரியை நக நுணியால்
கிள்ளியவாறே வந்து கொண்டிருந்தனர். பெரிசு எந்த பாதிப்புமில்லாமல் கடைசியாக ஒருதரம் இழுத்து விட்டு பீடியைத் தூர எறிந்தவாறே ஆமோதிப்பாய் பார்த்தார்.

காலையில் இருந்து சலிக்காமல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததில் அனேகமாய் மறந்தே போய் விட்டிருந்த அந்த விஷயம் துரையின் மனதில் மீண்டும் மேலே எழுந்தது – நாளைக்கு தீபாவளி!

“நோம்பியன்னிக்கு வெடிச்சா பத்தாதா? ஒரு நா மின்னயே வெடிசி ‘எங்கூட்டுக் காசு காரியாகுது பாரு’ன்னு ஊரையேக் கூட்டனுமா?” பெரிசிடமிருந்து ஆசுவாசமாய் அந்த வார்த்தைகள் வெளியேறியது..

துரை கஷ்ட்டமாய் எச்சிலை விழுந்தியவாறே லுங்கியை உயர்த்தி உள்ளே போட்டிருந்த நீல டவுடரின் வலது பக்கப்பையினுள் கையை விட்டு வெளியே எடுத்தான். கூடவே கொஞ்சம் கசங்கிக் கோணலாகிப் போயிருந்த சிரிப்புடன் காந்திக் காகிதங்களும் வெளியே வந்தது. துரை அந்த கோனல் சிரிப்புகளை நேராக்கி நோட்டுகளை ஒரு வரிசையாய் அடுக்கினான். மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்த்தான் – நானூறு! இன்றோடு இருபது நாட்களாய் ஓவர் டைம் செய்து சேர்த்த காசு. மூட்டைக்கு ஒரு ரூபாய் கூலி என்று போட்டால் ‘இன்னிக்கு எப்டியும் ஒரு நூறு சேர்ந்துடும்’ என்று நினைத்துக் கொண்டான்..
இருபது நாட்களுக்குப் பின்னும் அய்னூரு ரூபாய் தான் தேற்ற முடிந்தது என்பது அவனுக்கு ஆற்றாமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கையில் இருந்த காகிதங்களில் காந்தியின் சிரிப்பில் ஏதோ ஒரு குரூரத்தன்மை இருப்பதாகப் பட்டது அவனுக்கு.. ‘மவனே நீ யாரோ எவரோ… ஆனா என்னிக்காவது கைல மாட்டினே… ங்கொய்யால’ மனதுக்குள் கருவிக் கொண்டே அந்தத் தாள்களை மீண்டு வலது பக்க பையினுள் திணித்துக் கொண்டான்.

இன்னும் பற்ற வைக்க மறந்த பீடியை பற்ற வைத்து உதட்டுக்குக் கொடுத்தான். புகை காரமாக தொண்டையைக் கடந்து நுரையீரலை நிரப்பியது. இறுக்கமாக இருந்த ஏதோவொன்று உள்ளே தளர்ந்தது. எப்படி சமாளிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினான்.. காலையில் கிளம்பும் போது சின்னவன் சொல்லியனுப்பிய வார்த்தைகள் வேறு உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“யப்போவ் நீ ஏன் எனுக்கு இன்னியும் புது டிரஸ் எடுக்கல? இன்னிக்கு வரும்போது புதுத்துணி.. பட்டாசு..லட்டு எல்லாம் வாங்கிட்டுவாப்பா..
சேகருக்கெல்லாம் போன வாரமே துணி எடுத்தாச்சு தெரீமா?” பத்து வயது சிந்தனைக்கு அப்பனை யாரோடு ஒப்பிடுவது என்று கூடத் தெரியவில்லை. கடைசி வாக்கியத்தை முடிக்கும் போது சின்னவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.

“சரிடா கண்ணு” நம்பிக்கையே இல்லாமல் நம்பிக்கை சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது… “கமலாவுக்கு இன்னிக்கு முறுக்குக் கம்பெனில வாரக் கூலி கொடுத்துடுவாங்க.. அது ஒரு நானூறூ.. நம்மளோடது ஒரு அய்நூறூ.. மொத்தமா ஒரு தொள்ளாயிரம் தேறுது.. இதில பெரியவனுக்கும் சின்னவனுக்கும் துணி..அப்புறம் பட்டாசு பலகாரம்….- ம்ஹூம் இது பத்தவே பத்தாது.. என்ன செய்யலாமென்ற கேள்வி உள்ளே பிடுங்கித் தின்றது

பெரியவன் ஏதும் பேசவில்லை. பதின்ம வயதுகளின் மைய்யத்திலிருக்கும் அவனுக்கு அரைகுறையாய் நிலவரம் புரிந்தது.
அவன் பார்வையாலேயே சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டான். திங்கட் கிழமை புதுத் துணியோடு பள்ளிக்கு வரும் பையன்கள் மத்தியில் பழையதைப் போட்டுக் கொண்டு போவது இன்னும் முழுமையாய் உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவனுக்குள்ளே எப்படிக் கூசும் என்பதை துரையால் உணர முடிந்தது.

இருபது நாட்களாக பதினாறு மணிநேரம் வேலை செய்து பார்த்தாகி விட்டது. மதிய வேளையில் வெறும் போண்டா டீயுடன் இருபது நாட்களாக சமாளித்தும் பார்த்தாகி விட்டது. ஆனாலும் ஐநூறு தான் தேறி இருக்கிறது. போன வருடம் தீபாவளி சமயத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சந்தையை நினைத்துப் பார்த்தான். அடுத்த வருடத்தைப் பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது. பத்து வயதில் தாய் தகப்பனை இழந்து விட்டு அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த பொது அள்ளி அனைத்துக் கொண்ட சந்தை. போன வருடமெல்லாம் ஒவ்வொரு காய்க்கும் தனித்தனியே ஒரு நான்கைந்து மண்டிகளாவது இருக்கும். வெங்காயத்துக்கு மட்டுமே பத்து மண்டிகள் இருந்த நாட்கள் அது. இன்றோ அதில் பாதி ஆவியாகி விட்டது. சென்னைக்கு லோடடிக்கும் லாரிகளும் பாதியாய்க் குறைந்து விட்டது. அவன் கண் முன்னேயே அந்த சந்தை தனது இறுதி மூச்சை விட்டுக்
கொண்டிருக்கிறது. வேலை குறைய குறைய ஒவ்வொருவராய் குடும்பத்தோடு திருப்பூருக்கு கூலிகளாய்ப் போய் விட்டனர். துரைக்கு என்னவோ இந்த சந்தையை விட்டுப் போக மனமே இல்லை. தனது தந்தையே மரணப்படுக்கையில் இருப்பது போலத் தோன்றியது அவனுக்கு. எல்லாரும் போனாலும் கடைசி வரைக்கும் தனியாளாகவாவது இங்கே தான் இருக்க வேண்டும் என்று வைராக்கியமாய் நினைத்துக் கொண்டான். அதைத் தன் கடமையாகவே
கருதினான் அவன்.

அவனுக்கும் அந்த சந்தைக்குமான உறவு உணர்வுப்பூர்வமாய் இருந்தது.. பண்டிகைக்கால இயலாமைகளால் சந்தையை வெறுக்க வேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சினான்.. ஒருகணம் அவனுக்குள் கொண்டாட்டங்கள் மேலேயே வெறுப்பு மேலிட்டது

“அடச்சே இந்தப் நோம்பி எளவு வந்தாலே பெரிய தொல்லையாப் போச்சு. உங்கத்திங்கவே கூலியெல்லாம் சரியாப்போகுது.. இதில பட்டாசு பலகாரம் துணிமனி.. நாய் பொழப்புடா சாமி…” தன்னை மறந்து வார்த்தைகள் வெளியே வந்துவிட்டது.

வேறேதோ சிந்தனையிலிருந்த பெரிசு திரும்பிப் பார்த்தார்; ஏதும் பேசாமல் அடுத்த பீடியை உருவிக் கொண்டார்.

“ஏய் சீக்கிரமா வாங்கடா…” செட்டியார் மகன் ரோட்டின் எதிர்ப்புறத்திலிருந்து தனது புது அதிகாரத்தை சோதித்துப் பார்த்தான். தூரத்தில் மேட்டுப்பளைய தக்காளி டெம்போ வளைவில் சிரமமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.. நீண்டதொரு பெருமூச்சுடன் துரை எழுந்தான்.

                                         0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0

“வெங்காய மூட்ட எறநூத்திப் பத்துங்க.. அப்பால தக்காளிக் கூட ஒரு எளுபதுங்க மொத்தமா எறநூத்தியெம்பதுங்க” இரவு மணி பத்தாகிவிட்டது.. செட்டியாரி மண்டி தான் கடைசியாக இயங்கிக் கொண்டிருந்தது.

“இந்தா இதில முன்னூறு இருக்கு. இருவதுருவா தீவாளிக்காசு. பப்பாதியாப் பிரிச்சுக்கங்க.. கோட்டரப் போட்டுட்டு மல்லாந்துடாம வூட்டுக்குப் போற வளியாப் பாரு…. என்னா..?” செட்டி மகன் தனது முதலாளி முறுக்கைக் காட்டினான்.

துரை உள்ளே குமைந்தான் ‘இந்த லூசுப்பய மவங் கிட்ட எவம் பேசுவான்’ என்று நினைத்துக் கொண்டு “சரிங்க” என்றவாறே திரும்பினான். லேசாகத் தூரல் போட்டது.. மண்டி சந்தில் சாய்த்து நிறுத்தியிருந்த சைக்கிளை வெளியே எடுத்து உருட்டிக் கொண்டே ரோட்டைக் கடந்து ராயப்பன் டீக்கடை நோக்கிப்
போனான். பெரிசு டீக்கடைத் திண்ணையில் சாய்ந்து கொண்டு கடைசியாய் மிஞ்சிய இரண்டு பீடியில் ஒன்றை உருவி பற்ற வைத்துக் கொண்டிருந்தார்.

“தா.. பெரிசு.. ஒன்னோட பாதி நூத்தம்பது ரூவா” என்று பணத்தை இடது கையால் நீட்டிக் கொண்டே வலது கையால் கடைசி பீடியை பெரிசின்
கையிலிருந்து உருவினான் துரை.

“அதையும் நீயே வச்சுக்க.. அப்பால திருப்பித்தா போதும்.. அப்படியே இந்தா இதில ஒரு முன்னூறு இருக்கு இதையும் வச்சிக்க” என்றபடியே
கசங்கிய ரூபாய்த் தாள்களை துரையின் கையில் திணித்தார் பெரிசு. வாங்கத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் துரை..

“அட என்னப்பா அப்புடிப்பாக்குறே? எனுக்குத் தெரியாதா நீயேன் ஒரு பத்திருபது நாளா இஞ்சியத்தின்னவன் மாறி அலைஞ்சிட்டிருக்கேன்னு…
இருக்கவனுக்கு கொடுத்துதவ ஆயிரம் பேர் இருக்கான்.. நமக்குன்னு வேற யார் இருக்கா? ஒனக்காவது குடும்பம் இருக்கு; எனக்காரு இருக்கா? நாளைக்கு ஒனக்கு நோம்பி.. எனக்கு நாளைக்கு ஒரு நா லீவு.. காசிருந்தா நாளைக்கு ஒரு ஆப்ப உள்ள உட்ருப்பேன்.. பரவால்ல தொர..
கெளம்பரக்கு மின்னாடி பாய் கடைல போய் முட்டிக்குலுங்கர என்னை ஒரு புட்டி வாங்கிக் கொடுத்துட்டுப் போ…” என்றபடியே கரைந்து போயிருந்த பீடியைத் தூர எரிந்தார் பெரிசு.

துரைக்கு திடீரென்று உற்சாகம் முட்டிக் கொண்டு கிளம்பியது. அப்பாடா…வென்றிருந்தது அவனுக்கு..

“சரி சரி பேந்தப் பேந்தப் முழிச்சிட்டு நிக்க வேணாம்.. கெளம்பு. மணி இப்பயே பத்தாச்சு. மூலனூருக்குப் போய்ச்சேர இன்னும் ஒருமணி நேரமாகும் ஒனக்கு. அதுக்கு மின்ன பொடிசுகளுக்கு துணிமனிய வேறெ வாங்கனும்.. கெளம்பு கெளம்பு”

மழை வலுத்திருந்தது.. சாரலாய் ஆரம்பித்தது இப்போது வானமே பொத்துக் கொண்டது போல் ஊற்றியது. துரை எல்லா ரூபாய்த் தாள்களையும் இரண்டு பாலித்தின் கவருக்குள் போட்டு சுருட்டி கால்சட்டைப் பாக்கெட்டில் சொருகி வைத்தான்.. என்னென்ன வாங்க வேண்டும் என்பதை மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே கடைவீதிப் பக்கமாய் சைக்கிளை மிதித்தான். மழைத்தண்ணீர் ரோட்டில் மூட்டளவையும் தாண்டி ஆறாக ஓடியது.

ராவுத்தர் பாய் புதிதாக ஒரு தார்பாய் பந்தல் போட்டு பட்டாசுக்கடை ஒன்றைத் திறந்திருந்தார். அதன் எதிரே சைக்கிளை ஸ்டாண்டு போட்டு விட்டு,

“பாய்.. நமக்கு ஒரு ரெண்டு கட்டு கம்பி மத்தாப்பு, அஞ்சு கட்டு கேப் வெடி, ரெண்டு துப்பாக்கி, மூனு கட்டு பிஜிலி, ரெண்டு கட்டு பெரிய லச்சுமி வெடி, அணு குண்டு ரெண்டு பாக்கெட்டு, சர வெடி நாலு கட்டு, பூவாளி ரெண்டு பாக்கெட்டு, ராக்கெட்டு ரெண்டு பாக்கெட்டு கட்டுங்க.. நான் போயி இனிப்பும் பசங்கலுக்கு துணியும் எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறே சாலையின் எதிர்ப்புறத்தில் ப்ளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு புதிதாய் முளைத்திருந்த துணிக்கடைகளைப் பார்த்து நடையை எட்டிப் போட்டான் துரை.

ராவுத்தர் கடையைக்கு நாலுகடை தள்ளி புதிதாய் மின்னும் பெயர்ப்பலகையோடு ஒரு புதிய  சூப்பர் மார்க்கெட் கடை திறந்திருந்தார்கள்.. தெரு முழுவதும்
அடைத்துக் கொண்டு  அதன் வாடிக்கையாளர்களின் கார்கள் நின்றிருந்தது.. பாதிக் கார்களில் ஆட்கள் இருந்தார்கள்.. கதவைத் திறந்தால் உள்ளே பாய்ந்து வரத் தயாராய்
மழைத்தண்ணீர் காத்துக் கொண்டிருக்க, உள்ளே அடைத்த கதவுகளுக்குள் புழுக்கம் தாளாமல் நெளிந்து கொண்டிருந்தார்கள்.. துரைக்கு அவர்களின் முகவோட்டைத்தைக் காணவே வேடிக்கையாய் இருந்தது. அந்தக் கடைக்கு எதிர்ச்சாரியில் தான் தார்ப்பாலின் துணிக்கடைகள் இருந்தது.. போலீசுக்காரன் ஒருத்தன் “அனுமதியில்லாமல்” கடை போட்டதற்காக ரோட்டோ ரக் கடைக்காரர்களிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தான்.. ராவுத்தர் ஏற்கனவே அந்தப் போலீசுக் காரனுக்கான மாமூலை பட்டாசாகக் கட்டி வைத்து விட்டார்.

மீண்டும் துரைக்கு சில ஆண்டுகளின் முந்தைய நினைவு தட்டியது.. அப்போதெல்லாம் இந்தக் கடைவீதிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்.. இப்போதோ அந்த இடத்தைக் கார்கள் தான் அடைத்திருக்கிறது.. ‘அந்த மனிதர்களெல்லாம் எங்கே தான் போயிட்டாங்க…?’ துரையின் மனம் விடை தெரியாத அந்தக் கேள்வியை எழுப்பிப் பார்த்தது. எதிர்ச்சாரியில் இருந்த ரோட்டோ ரத் துணிக்கடைகளிலும் பெரிதாகக் கூட்டமில்லை. நகை நட்டுகளை அடமானம் வைத்து வாங்கிய சரக்கை எப்படித் தள்ளுவது என்கிற கவலை அவர்கள் முகங்களில் தெரித்தது…

எல்லாம் வாங்கி விட்டுக் கிளம்பும் போது மணி பதினொன்று முப்பது ஆகிவிட்டது. மூலனூர் போய்ச் சேரும் போது பண்ணிரண்டு தாண்டிவிட்டது. இன்னும் மழை ஊற்றிக் கொண்டிருந்தது… தொப்பலாக நனைந்திருந்தான் துரை. வீட்டில் இன்னும் அறுபது வாட்ஸ் பல்பு சோகையாய் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் வெடிக்கும் வெடியோசை பம்மலாய்க் கேட்டது.சின்னவன் இன்னும் தூங்கவில்லை போலும்.. தன் அம்மாவிடம், அப்பா எப்போ வருவார் என்றூ விசாரித்துக் கொண்டிருந்தது துரைக்குக் கேட்டது. வீட்டுக்கு முன்னிருந்த மட்டைப் பந்தலுக்குக் கீழே சைக்கிளை சார்த்தி நிறுத்திவிட்டு கேரியரில் இருந்த பெரிய பட்டாசு பார்சலையும், முன்னே ஹேண்டிலில் ஊசலாடிக் கொண்டிருந்த துணிப் பையையும் அவிழ்த்து எடுத்தான். பனியனுக்குள் சொருகி வைத்திருந்த இனிப்புப் பார்சலை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டான்..

“கமலா.. கதவத் தொற…”  கண்களின் எரிச்சலையும் தாண்டி சின்னவனின் முகம் போகும் போக்கைக் காண துரைக்கு ஆவலாய் இருந்தது…

“அப்பாடா.. ஒங்க வாரிசு போட்டு கொடஞ்சி எடுத்திட்டான்.. அடேய்ய்ய்.. ஒங்கப்பன் வந்தாச்சி பாரு” என்று கதவைத் திறந்து கொண்டே உள்ளே
திரும்பி குரல் கொடுத்தாள் கமலம்.

“ஹேய்ய்ய்….” என்று கத்திக் கொண்டே வந்த சின்னவன் பார்சல்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு நேரே பாய்க்கு ஓடினான். சப்தம் கேட்டு பெரியவனும் விழித்துக் கொண்டான்.

“என்ன செய்திருக்கே” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தான் துரை.. பொடியன்கள் இருவருமாகச் சேர்ந்து கொண்டு பார்சல்கள் ஒவ்வொன்றால் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“காலைல ஆக்குனது அப்பிடியே இருக்கு. ரசம் வச்சு கருவாடு வருத்திருக்கேன்” என்றபடியே அவளும் திரும்பிப் பார்த்தாள். சின்னவன் முக்கியமாய் பட்டாசுக் கட்டுகளை பிரித்துக் கொண்டிருந்தான்.

“அடேய்… அதையெல்லாம் ஏண்டா இப்பயே பிரிக்கிறே.. காலைல பாத்துக்கலாம் போய் படுங்கடா” என்று கத்தினாள்..

“வுடு கமலா.. வருசத்தில ஒரு நாளு…” என்ற துரையின் மனதில் பெரிசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய மூன்னூற்றைம்பது நினைவுக்கு வந்தது.

“எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான்; இவனுக ரெண்டு பேரும் கெட்டுப் போறானுக” கமலா அதே அறையில் இன்னொரு பக்கத்தில்
படுதா கட்டிப் பிரித்திருந்த சமயலறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னாள்..

“வுடுறீ… சின்னப் பசங்க.. அப்புடித்தான் இருப்பாங்க” பனியனைக் கழட்டி அறையின் குறுக்கே ஓடிய கொடியில் போட்டான் துரை. அதிலேயே தொங்கிய துண்டை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டான்.

சாப்பிட்டு முடித்திருந்த துரை சின்னவனின் குதூகலத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சின்னவன் உலகத்தையே மறந்து சர வெடிகளையெல்லாம் தனித்தனியே பிரிப்பதில் மூழ்கி இருந்தான்.

“அதையேண்டா பிரிக்கிறே…?”

“அப்பத்தான்பா ரொம்ப நேரம் வெடிக்க முடியும்..” சின்னவன் திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.

“காலைல பார்த்துக்கலாம் வா படு.. கமலா லைட்ட ஆப் பண்ணிடு”

                                              0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o

“யப்போய்.. எழுந்திரிச்சி வாப்பா.. பாலா எனக்குத் தராம அவனே வெடிக்கிறான்” சின்னவனின் குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது.. முழங்கையால் முட்டுக் கொடுத்து தட்டுத் தடுமாறி எழுந்து பார்த்தான் துரை. தலைக்கு மேலே அறுபது வாட்ஸ் பல்பை சுற்றி இரண்டு மூன்று பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது. கால்மூட்டுகளைப் பிடித்துக் கொண்டே பாயில் இருந்து எழுந்தான்.. தலைக்கு மேலே ஒரு பாறாங்கல்லையே வைத்தது போல் ஒரு பாரம் அழுத்தியது. வெளியே வந்து பார்த்தான்; இன்னும் முழுவதுமாக விடியவில்லை..

அத்தனை நேரத்திலும் “பொடு பொடு” வென்று எங்கோ தூரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. பெரியவன் கையில் பாலித்தின் பையை வைத்திருந்தான். அந்தப் பையில் முந்தைய இரவு வெடிச் சரத்தில் இருந்து உதிர்த்த பட்டாசுகளை நிரப்பியிருந்தான்..

“யேய்.. தம்பிக்கும் கொடேண்டா…” வாயில் லேசாக கசப்பாக உணர்ந்தான். ‘இதென்னடா எழவு.. காய்ச்சலோ..?’ என்று நினைத்துக் கொண்டான்.

“அப்பா.. அவன் பத்த வெச்சிட்டு பக்கத்திலேயே நிக்கிறான்.. வெடிக்கவே தெரியலெ” என்று திரும்பிப் பார்க்காமலேயே குரல் கொடுத்தான் பெரியவன்.

“ரெண்டு பேரும் மொதல்ல பல்லு வெளக்கிக் குளிச்சிட்டு வாங்க; உங்கம்மா எங்கெ போயிருக்கா?” உள்ளே திரும்பிப் பார்த்தான்; கமலத்தைக் காணவில்லை..

“இன்னிக்குத் தண்ணி வர்ற நாளு..” இதற்கும் பெரியவன் திரும்பிப் பார்க்கவில்லை..

“சண்ட போடாம வெடிங்க” என்று விட்டு பந்தலடியில் சார்த்தியிருந்த சைக்கிள் கேரியரில் குடம் கட்டும் தாம்புக் கயிரை சொருகிக் கொண்டு
பெருமாள் கோயிலை நோக்கி அழுத்த ஆரம்பித்தான்.

கோயில் கருவறைக்கு நேர் எதிரே தான் வீதி பைப் உள்ளது. அந்த அதிகாலை மூன்று மணிக்கு பைப்பில் அவ்வளவாக கூட்டமில்லை. கமலம் வீட்டிலிருந்த ஐந்து ப்ளாஸ்டிக் குடங்களுடனும் அங்கே நின்றிருந்தாள்.. அவர்கள் தெருவில் இருந்த வேறு சில பெண்களும் அவர்கள் கனவன்மார்களுமாக அங்கே ஒரு சின்னக் கூட்டம் இருந்தது.

“என்னெ எழுப்ப வேண்டியது தானே?’ என்றபடியே சைக்கிளை ஸ்டாண்டு போட்டான் துரை..

“மேலெல்லாம் கொதிச்சிட்டிருந்தது.. அனத்திட்டு இருந்தீங்க. அதான் ரெவ்வெண்டா நானே கொண்டாந்திரலாம்னு வந்தேன்..” அவளும் இன்னும் குளித்திருக்கவில்லை..

“ம்ம்ம்ம் நல்லா தலைய வலிக்குது. ஒரே பாரமா இருக்கு”

பெருமாள் கோயிலில் இருந்து மணிச்சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர் – அந்த காலை நேரத்திலேயே கீழ்தெரு உஷா மாமியும் அவரது மருமகளும் எண்ணை தேய்த்துக் குளித்து விட்டுக் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். பெருமாளும் அவர் சம்சாரமும்
அணிந்திருந்த பழைய துணிமனிகளை குருக்கள் எடுத்து வந்து பந்தல் மேல் எரிந்து விட்டு புதிதாய் பட்டுப் பீதாம்பரமும், பச்சைப் பட்டையும்
உஷா மாமியிடம் இருந்து வாங்கிக் கொண்டு உள்ளே கருவறைக்குள்ளே நுழைந்தார்..

“யோவ் உனுக்கு ஏன்யா இந்த வருசம் துணியெடுக்கல” அவளுக்கு எடுக்காததை அவள் கேட்கவில்லை

“இதுக்கே கடன்; நமக்கு பொங்கலுக்குப் பாத்துக்கலாம்” அவளுக்கும் சேர்த்தே பதில் சொன்னான் துரை

“நாம என்ன பெருமாளா.. ஊரான் எடுத்துக்குடுக்க” பச்சைப் பட்டின் பளபளப்பு இன்னும் அவள் கண்ணுக்குள்ளேயே நின்றது.

தாம்புக்கயிரில் கட்டி இரண்டு குடங்களை பக்கங்களுக்கு ஒன்றாய் தொங்கவிட்ட துரை, மூன்றாவதை கேரியரின் மேல் வைத்தான். கமலம் இடுப்பில் ஒன்றை ஏற்றிக் கொண்டு,

“விஜயாக்கா, இதக் கொஞ்சம் தலைக்கு ஏத்திக் கொடேன்…” என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள்..

அங்கே சின்னவனும் பெரியவனுமாக எதை யார் வெடிப்பது என்கிற சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். துரை பட்டாசுச் சண்டைகளில் கலந்து கொள்ளவில்லை இந்த சின்னச் சின்ன சண்டைகளாவது அவர்களின் உலகத்தை சுவாரசியமாக வைத்திருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான். கமலம் பாய்கடையில் இருந்து அனாசின் வாங்கி வந்து கொடுத்தாள். உப்புமாவைத் தின்று விட்டு மாத்திரை போட்டுப் படுத்தவன் மதியம் தான் எழுந்தான். சின்னவனுக்கு மதியத்திற்குப் பின் முகம் சுருங்கி விட்டது; வெடிகளெல்லாம் அனேகமாக தீர்ந்து விட்டது. இன்னும் புஸ்வானமும் சங்குச்சக்கரமும் தான் மீதமிருந்தது..
காலையில் போலில்லாமல் மதிய நேரத்தில் பட்டாசுச் சத்தங்கள் குறைந்து விட்டது. ‘எல்லோரும் டீ.வி முன் ஒக்காந்துட்டானுவலா இல்லை நம்ம கேசு தானா’ என்று நினைத்துக் கொண்டான் துரை. அவ்வப்போது எங்கோ தூரத்தில் வெடிக்கும் பட்டாசுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் சின்னவன் ஏக்கமாய் துரையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

“யப்பா.. நாளிக்கி நம்ப வீட்டு மின்னே தானே பட்டாசுக் காயிதம் நெறயக் கெடக்கும்?..” சந்தேகமும் ஏக்கமுமாகக் கேட்டான் சின்னவன்.. துரை பதில் சொல்லாமல் அவனையே பார்த்தான்,

“சொல்லுப்பா.. மத்தப் பயங்கெல்லாம் என்னெக் கிண்டல் பண்ணுவாங்கப்பா..”

துரைக்கு உடல் வலியைத் தாண்டி உள்ளே வலித்தது.. சின்னவன் இன்னும் வீடு என்னும் கருவறைக்குள் அமைதியாக உறங்கும் குழந்தையாகவே இருந்தான். அவன் சமுதாயத்துக்குள் நுழையும் பிரசவகாலம் இன்னும் வரவில்லை. அவனது உலகம் அவனோடு இன்னும் பெரிதாக முரண்படவில்லை.. கூழாங்கற்களை அவன் இன்னும் அரிய வைரங்களைப் போல சேகரித்து வைக்கும் நாட்களில் தான் இருந்தான்.”பெரியவர்களின்” உலகத்தோடான அவன் முதல் சந்திப்பை இவன் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறானோ.. இன்னும் எத்துனை நாட்களுக்கு இவனை இப்படியே அடைகாக்க முடிமோ என்றெல்லாம் நினைக்கையில் துரைக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. தான் ஒரு குறைப்பிரசவக் குழந்தையாகவே சமுதாயத்துக்குள் திணிக்கப்பட்டதை எண்ணிப்பார்த்தான்; அதுவே இன்று தன்னை கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.

வீட்டுச் சூழலும் வீட்டைச் சுற்றி இருக்கும் சூழலும் இன்னும் சின்னவனை மாசுபடுத்தியிருக்கவில்லை. சைக்கிள் ஓட்டும் துரை அவனுக்கு ஒரு பெரிய அதிசயமாகவும் ஒரு நாயகன் போலவும் தோன்றினான். ஆனால் பெரியவனுக்கோ கொஞ்சம் போல புரிய ஆரம்பித்து விட்டது; அவன் சமுதாயத்துக்குள் பிரசவிக்கப்பட்டு விட்டான். “காம்ப்ளான் பையன்களை” விளையாட்டு மைதானங்களில் பார்த்திருக்கிறான். தான் இன்னும் பழையகஞ்சி பையனாகவே இருப்பது ஏன் என்கிற கேள்வி அவனுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. புதுமணம் மாறாத புத்தகங்களை சுமந்து வரும் பையன்களிடையே அரைவிலைக்கு வாங்கிய பழைய புத்தகங்களையே தான் இன்னும் சுமந்து செல்லும் நிலைமை ஏன் என்பது புரியத்துவங்கிய போது அவன் அமைதியாகிவிட்டான். அவனது அந்த உலகம் அவனை ஊமையாக்கி விட்டது. எப்போதும் ஏதோவொன்றைப் பேசிக்கொண்டிருக்கும்  தம்பியை அவன் இப்போதெல்லாம் கரிசனமாகப் பார்க்கிறான். அவனுக்குத் தெரியும் சீக்கிரம் சின்னவனும் ஊமையாக்கப்படுவான் என்று.

மாலை இருள் கவிந்ததும் சின்னவன் முகத்தில் மீண்டும் கொஞ்சம் ஒளி வந்தது. கொஞ்சம் நேரம் மிஞ்சிய பட்டாசுகளில் சிலவற்றை மட்டும் கொளுத்தியவன் பாதி வெடிகளைஒரு கவரில் போட்டுக் கட்டி அட்டாலியில் போட்டான்..

“அதையேண்டா மிச்சம் வைக்கிறே.. கொளுத்தித் தீர்க்க வேண்டியது தானே?” கமலா பஜ்ஜிக்காக வாழைக்காயை நீள்வாக்கில் அரிந்து கொண்டே கேட்டாள்.

“அதெல்லாம் காத்தியை தீபத்தன்னிக்கு வெடிக்கப் போறன்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே பதில் சொன்னான்.. ‘அன்றைக்கு நீயென்ன புதிதாய் வாங்கித் தரவா போகிறாய்?’ என்ற குத்தல் கேள்வி அந்த பதிலில் ஒளிந்திருந்தது..

“ம்ம்ம் இவனுகளுக்கு கஷ்ட்டந்தெரியாம வளக்குறது எங்கே கொண்டு போய் விடுமோ” என்றாள் துரையைப் பார்த்துக் கொண்டே.. அதனை அவன் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

“எத்தினிக் காசு… எல்லாம் ஒரே ஒரு நா கூத்துக்குக் கரியாப் போச்சி..ஆமா இத்தினியும் வாங்கக் காசு ஏதுய்யா??”

“பெரிசு கிட்டே கைமாத்து வாங்கினேன்” எப்படித் திருப்பிக் கொடுப்பது என்கிற கேள்வி முட்டிக்கொண்டு கிளம்பியது. இன்னும் இதற்கு எத்தனை நாட்கள் மதியவேளையை போண்டாவோடு சமாளிப்பது என்று கணக்குப் போடத்துவங்கினான்.

காலையில் சீக்கிரம் எழுந்து விட்டதால் பொடியன்கள் இருவரும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே தூங்கப் போய் விட்டனர். துரைக்கு ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும்
இவன்களிருவரும் எழுந்திருக்கும் முன்பே சந்தைக்குக் கிளம்புபவன், அவர்கள் உறங்கிய பின் தான் வீடு சேர்வான். வருடத்திற்கு ஓரிரு நாட்களில் தான் தனது மகன்களை அவனால் பகல் வெளிச்சத்தில் பார்க்க பேச முடியும்.. ஞாயிறு சனியென்று வார ஓய்வு நாளே இல்லாத ஓட்டம் அது.. வாழ்க்கை துரையை துரத்திய துரத்தலில் வயிற்றை சமாளித்த நேரம் போக மகன்களுடன் கொஞ்சி விளையாடவெல்லாம் நேரத்தை அவனுக்கு மிச்சம் வைக்கவில்லை. துரையைப் பொருத்தளவில் ஓய்வு என்பது உறக்கம் தான்; உறக்கம் என்பது மயக்கம் தான். ஒவ்வொரு நாள் படுக்கையில் விழும்போதும் மறுநாள் விடியும் என்பது மட்டும் தான் அவனுக்கு அச்சமாக இருந்தது.

திடீரென ஏதோ பேச்சு சப்தம் சப்தம் கேட்டு துரை திரும்பிப் பார்த்தான், சின்னவன் ஏதோ உளரிக் கொண்டிருப்பது கேட்டது… “நாங்க தான் நெறய வெடிச்சம்….” துரைக்கு திடீர் என்று தான்
அது உறைத்தது. சட்டென்று எழுந்து வீட்டு முற்றத்திற்குப் போய் பார்த்தான்.. அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்ததில் இங்கே கொஞ்சம் பட்டாசுக் காகிதங்கள் குறைவாக இருப்பதாகப் பட்டது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.. அப்படியே தெருக்கோடி வரை ஒரு நடை சென்று ஆங்காங்கே காற்றில் குமித்துக் கிடக்கும் சிதறிய காகிதங்களை சேகரித்து வீட்டு முன் பரப்பி வைத்தான். வாசல்படிக்கு மீண்டும்
வந்து அங்கேயிருந்து ஒரு தரம் சுற்றிப் பார்த்தான், திருப்தியாக இருந்தது.. ‘ராத்திரி காத்து அடிச்சித் தொலைக்கக் கூடாதே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..

காலையில் மீண்டும் தனது ஓட்டத்தைத் துவங்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே பாயில் சரிந்தவன் கண்களை மூடினான்..
அதுவரையில் இருந்த இருள் மறைந்தது..

 – Kaargi

நவம்பர் 9, 2007 - Posted by | culture, short story |

5 பின்னூட்டங்கள் »

 1. Migavum arumai…..
  No Other words to comment.

  பின்னூட்டம் by kumar | திசெம்பர் 20, 2007 | மறுமொழி

 2. i am feeling some burden in my heart after read this story. when and which sun will clear this darkness from tamil working glass ?

  பின்னூட்டம் by Nambi | ஜனவரி 31, 2008 | மறுமொழி

 3. மிக மிக அழகான பதிவு. வாழ்த்துக்கள்

  பின்னூட்டம் by அடலேறு | செப்ரெம்பர் 20, 2008 | மறுமொழி

 4. கருத்துக்களுக்கு நன்றி குமார், நம்பி & அடலேறு.

  பின்னூட்டம் by kaargipages | செப்ரெம்பர் 21, 2008 | மறுமொழி

 5. arumai… i dont have anything other to say…

  பின்னூட்டம் by ranndom | ஜூலை 6, 2011 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: