கார்க்கியின் பார்வையில்

ஊடகங்களும் வாழ்க்கையும்!

கார்கில் போர் நினைவிருக்கிறதா? அந்த சமயத்தில் நாடெங்கிலும் பொங்கி வழிந்த “தேசபக்தி”யை எவரும் மறந்திருக்க மாட்டோ ம். ஒரு போரின் பின்னேயும் அதன் வெற்றியின் பின்னேயும் இந்திய ராணுவத்தின் அயோக்கியத்தனங்களும், உள்ளே புளுத்து நாறிக் கொண்டிருந்த ஊழலும் எப்படியெல்லாம் மறைக்கப் பட்டது என்பதையும் நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. இதனையெல்லாம் ஊதி ஊதி எறிய வைத்தது ஊடகங்களே. பாவம் அவர்களுக்கு இப்போதெல்லாம் தங்கள் வியாபாரத் திறனையும் மார்கெட்டிங் யுக்தியையும் காட்ட போர் எதுவும் நடக்கவில்லை.. ஆனாலும் ஒரு போருக்கு உரிய அத்துனை வெறி/பரபரப்பையும் ஒரு விளையாட்டுப் போட்டிக்குள் திணித்து விட தங்களால் முடியும் என்பதையும், “இந்தியர்களை” ( இந்துக்களை என்று
புரிந்து கொள்க) உசுப்பேத்தி விட முடியும் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை
எதிர்த்து ஆடி வென்றது. இது ஒன்று போதாதா? இந்திய அணி நாடு திரும்பியதும் மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று வரவேற்ற காட்சி ஆங்கில செய்தி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதில் நம் கவனத்துக்குறியது என்னவென்றால், “ரசிகர்களில்” பலர் காவி நிறக் கொடியுடன் விளையாட்டு வீரர்களை வரவேற்றது தான். நான் வசிக்கும் பகுதியில் இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் இரவு, தேனீர் அருந்த நான் வெளியே சென்றிருந்தேன். இருசக்கர வாகனங்களில் வெறிக்கூச்சலுடன் சில ரசிகர்கள் ரவுண்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு ரம்ஜான் மாத இரவு. அதே நேரத்தில் ஊரெங்கும் பிள்ளையார் சதுர்த்திக்காக சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி. வாகனங்களில் வந்த ரசிகர்கள் தலையில் காவி நிறத் துணியையும் கையில் காவிக் கொடியையும் கொண்டிருந்தனர். இரவுத் தொழுகை முடிந்து
தெருக்களில் கூடி பேசிக் கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் கண்டதும் பைக்குகளில் வந்த காலிகளின் வெறி அதிகமானது. வாகனத்தை நிறுத்தி, “பாரத் மாதா கீ ஜே” “பாக்கிஸ்த்தான் டவுன் டவுன்” என்ற கத்திவிட்டு நகர்ந்தனர்.

இந்திய விளையாட்டு அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியானது இந்துக்கள் முஸ்லீம்களை வென்றதன் குறியீடாக இவர்கள் பாவிக்கிறார்கள். இந்தக் கூச்சல்களினூடாக முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களில்லை என்பதையும், இந்தியா என்பது ‘இந்து’யா எனபதையும் பதியவைக்க முயற்சிக்கிறார்கள். நாளிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புச் செய்திகள் வரை இப்படியான ஒரு சித்திரத்தைத் தான் உருவாக்கி விட்டுள்ளது.

ஒரு விளையாட்டில் கிடைத்த வெற்றிக்குப் பின்னால் ஏன் இத்தனை ஒரு வெறி?

ஒரு விளையாட்டை விளையாட்டு என்பதாக அல்லாமல் அதற்கும் மேலானதொரு கவுரவப் போர் என்கிற அளவுக்கு அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உடல் திறனை வெளிப்படுத்தும் வேறு விளையாட்டுகள் முக்கியத்துவம் இழந்ததற்குக் காரணம் இந்த ஊடக வெறியூட்டிற்கு அப்பால் இருக்கிறது. அந்தக் காரணங்களை விவாதக் களத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதே இந்த கிரிக்கெட் வெறியூட்டலின் மூலம் ஊடகங்கள் சாதித்ததாகும்.

இங்கே என்பது சதவீதத்துக்கும் மேலான மக்கள் உயிர் பிழைத்துக் கிடக்கவே உணவு என்கிற நிலையில் இருக்க, இவர்கள் உடல்திறன்
சார்ந்த வேறெந்த விளையாட்டிலும் ஈடுபடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இன்று நாளிதழில்( 15/10/2007 டைம்ஸ் ஆப் இந்தியா )
வெளியான செய்தியின் படி இந்தியக் குழந்தைகளில் 40% பேர் பட்டினியுடன் தான் தினசரி உறங்கப் போகிறார்கள். விளையாட்டுகள் என்பதும் உடல் திறனைக் கூட்டும் பயிற்சி என்பதும் சுமார் 20% குறைவான உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கு ஊதிப் பருத்த தொப்பையைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்று என்றாகிப் போய் விட்டது.

இதனை மறைக்கும் விதமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமான சிறு நகரங்களில் இருந்து உருவான, “புகழ்” பெற்ற வீரர்களை முன்னிறுத்துவதும், கிரிக்கெட்டின் மேல் அதீதமாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள்/ கட்டுரைகள் வெளியிடுவதும் ஆகும். தினசரி வாழ்க்கையையே போராட்டமாக வாழும் மக்களின் வாழ்க்கைப் போரை மறைக்கவே விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு போரின் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“ஏன் இந்தியாவில் பரவலாக மக்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை?” என்னும் கேள்விக்குள் புகுந்தால் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலங்களுக்கு “கசக்கும்” உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே அந்தக் கேள்வி மிகத் தந்திரமாக அழுத்தப்படுகிறது. பாக்கிஸ்தானை இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் அந்நாட்டை போரில் வென்றது போல வெளியாகும் செய்தியின் கூச்சலில், அந்நாட்டு மக்களில் பட்டினியில் வாடுவோர் இந்தியாவை விட சதவீத அளவில் குறைவு ( அதே செய்தியின் படி) என்பது மறைந்து விடுகிறது.

சென்செக்ஸ் பதினெட்டாயிரம் புள்ளிகள் கடந்து பாய்வதன் மேல் பாய்ச்சப்படும் ஊடக வெளிச்சத்தில் கண்கள் கூசும் மக்கள், இதே நாட்டில் 77 கோடிப் பேர் அரசாங்க கணக்குப்படியே நாளொன்றுக்கு இருபது ரூபாய்களுக்கும் குறைச்சலான தொகையில் வாழ்க்கை நடத்துவதை காணத்தவறுகிறார்கள் -தவற வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் உயரும் சென்செக்ஸ் புள்ளிகள் யாருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது? நாட்டின் நிதிமந்திரியே
“என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி உயர்கிறது என்பதும் தெரியவில்லை. கவலையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.” என்று “ஒன்னுமே புரியல உலகத்திலே…. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” என்று விரக்தியுடன் உளரிக் கொண்டிருப்பதும் எவர் கவனத்தையும் பெறவில்லை – அப்படி கவனத்தைப் பெற இவர்கள் விடுவதும் இல்லை.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் புளுத்துப் போன கோதுமையில் செய்யப்பட்ட “லால் ரொட்டியை” தின்பது இவர்களின் கவுரவத்துக்கும் போலிக் கரிசனத்துக்கும் உறுத்தலாய் இருந்திருக்கும் போலிருக்கிறது. போன வாரம் காட்டப்பட்ட இது தொடர்பான செய்திகளில், இதற்குக் காரணமான தானியக் கொள்முதல் கொள்கைகளையும், அதன் காரணமாய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளையும் பற்றி பேச்சு மூச்சே இல்லை. தெருவில் அலையும் பிச்சைக்காரணைப் பார்த்து சொல்லப்பட்ட “அச்சச்சோ”வின் தொனியே மேலோங்கி இருந்தது. குறைந்த பட்சம் இவர்களும் நம்முடைய “இந்தியாவில்” தான் வாழ்கிறார்கள் என்பதாகவும் கூட பதிவு செய்யப்படவில்லை.

மொத்தத்தில் ஒரு யுப்பி வர்க்கத்து இளைஞனுக்கு எப்போதாவது – ஒரு விபத்து போல – மேலெழும் கேள்விகளை மொன்னையாக்குவதும், அவன் எப்போதாவது நிதர்சனத்தைக் கண்டு திகைத்து நிற்கும் போது சமாதானப்படுத்திக் கொள்ள காரணங்களைத் தருவதும் தான் இந்த செய்திகளின் நோக்கமாக இருக்கிறது.

நம்மைப் பொருத்த வரையில், அவன் காட்டுவது நம்முடைய நாடு அல்ல! அவன் பேசுவது நம்முடைய பிரச்சினைகளை அல்ல! அவன் தரும் சித்திரம் நம்முடைய வாழ்க்கைச் சித்திரமல்ல!

ஒக்ரோபர் 15, 2007 - Posted by | culture, medias | ,

2 பின்னூட்டங்கள் »

 1. //ஒரு விளையாட்டை விளையாட்டு என்பதாக அல்லாமல் அதற்கும் மேலானதொரு கவுரவப் போர் என்கிற அளவுக்கு அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உடல் திறனை வெளிப்படுத்தும் வேறு விளையாட்டுகள் முக்கியத்துவம் இழந்ததற்குக் காரணம் இந்த ஊடக வெறியூட்டிற்கு அப்பால் இருக்கிறது. அந்தக் காரணங்களை விவாதக் களத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதே இந்த கிரிக்கெட் வெறியூட்டலின் மூலம் ஊடகங்கள் சாதித்ததாகும்.

  //
  இதில் இந்து மத துவேசிகளுக்கு எந்த அளவு பங்குண்டோ அதே அளவு முஸ்லீம் மக்களுக்கும் உண்டு என்பதை மறவாதீர்கள்.

  எனகென்னமோ ஜிகாத் என்ற பெயரில் உலகம் பூராவும் பரவி வரும் முஸ்லீம் பயங்கரவாதத்தை
  உங்களை போன்றோர் கண்டு கொள்வதில்லையோ என அஞ்சுகிறேன் .

  இந்து பயங்கரவாதம் , முஸ்லீம் பயங்கரவாதம் இரண்டும் ஒரே அளவில் விமர்சிக்கப்படனும்
  என விரும்புக்கிறேன்

  பின்னூட்டம் by தியாகு | ஒக்ரோபர் 15, 2007 | மறுமொழி

 2. பயங்கரவாதம் என்பதற்குத் தனியாக ஒரு மதம் இல்லை. மேலும் so called “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்பது அமெரிக்காவின்
  கள்ளக் குழந்தை என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. நீங்கள் சொல்லும் உலகம் முழுவதும் பரவி வரும் “இஸ்லாமிய பயங்கரவாதம்”
  என்பதே அமெரிக்க பயங்கரவாதத்திற்கான பதில் தான். இந்த விதமான “பதிலில்” எனக்கு ஒப்புதலில்லை என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.

  பதிவில் குறிப்பாக இந்திய ஊடகங்கள் வெறியூட்டி ஏற்றி விடும் இந்து தேசபக்தி வெறியையே சொல்ல முயன்றுள்ளேன்

  பின்னூட்டம் by kaargipages | ஒக்ரோபர் 15, 2007 | மறுமொழி


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: