அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!
“…..OK. Let me look in to the problem and come back to you shortly.. Thanks for calling. Bye” அரை மணி நேரமாய் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அமெரிக்கனிடமிருந்து
கத்தரித்துக் கொண்டு தலையில் மாட்டியிருந்த ஹெட்போனை உருவிக்கொண்டே திரும்பினான் சேல்லி.. இல்லை செல்வா என்னும் செல்வேந்திரன். அமெரிக்க வாய்
கோணிவிடக்கூடாது என்பதற்காக செல்வேந்திரன் “சேல்லி” ஆகியிருந்தான்.
“ஹேய் பாலா.. வர்றியா ஒரு தம் போட போறேன்.. கம்பெனி குடு” என்றான் பாலா எனப்படும் பாலமுருகனாகிய என்னைப் பார்த்து.
“சரி வா “
இது ஒரு ரிமோட் சப்போர்ட் செண்டர். அமெரிக்கனுக்கு அரித்தால் சொறிந்து விட வேண்டும் – அதாவது அவனது சிஸ்டத்தில் ஏதாவது பிரச்சினையென்றால் நாங்கள் இங்கிருந்து
சரிசெய்ய வேண்டும். அன்புமணியின் புண்ணியத்தால் கம்பெனிக்குள் புகைப்பிடிக்க தடையென்பதால் கம்பெனி கேட்டுக்கு நேர் எதிரே இருக்கும் பெட்டிக்கடை தான் போயாக
வேண்டும். ஒரு கிலோமீட்டர் நடை.
“Bull shit.. what the hell they are thinking” என்றான்
“என்னடா என்ன பிரச்சினை?”
“These bloody politicians… நம்ம நாட்டில தம்மடிக்கக் கூட சுந்தந்திரமில்லே. ஏதோ சர்வாதிகார நாடு மாதிரியில்லே இருக்கு”
“ஓ.. தம்மடிக்க விட்டிருந்தா இந்தியா முழு சுந்தந்திரம் உள்ள நாடுன்னு அர்த்தமாயிடுமா?”
“…….” பேசாமல் தனது ஐ-பாடின் இயர் போனைக் காதுக்குள் சொறுகிக் கொண்டே ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை…’ என்று முணுமுணுத்துக் கொண்டே நடையைப் போட்டான்.
மணி அண்ணன் எங்களை தூரத்தில் பார்த்த போதே இரண்டு தம்ளரில் டீயை ஊற்றிவிட்டு ஒரு சிகரெட்டை தனியே எடுத்து வைத்தார். பக்கத்தில் வந்ததும்
அவரின் டிரேட் மார்க் சினேகமான புன்னகையை வீசினார்.
“என்னா சார் காலையிலேர்ந்து காணமே”
“கொஞ்சம் வேலை அதிகம்ணா” ஒரு டீயை நான் எடுத்துக் கொண்டு ஒன்றை அவனிடம் நீட்டினேன். சிகரெட்டை அவனே பொறுக்கியெடுத்து பற்ற வைத்துக் கொண்டான்.
மணி அண்ணான் அழுக்குத் தண்ணீர் நிரம்பியிருந்த டிரேயில் கிடந்த தம்ளர்களை அள்ளிக் கொண்டு கொஞ்சம் தள்ளியிருந்த கழுவும் இடம் நோக்கி சென்ற போது தான் அந்த
நாயைக் கவனித்தேன். சாப்பிட்டு இரண்டு நாட்களாகியிருக்கும் போலிருந்தது. வயிறு முதுகெலும்போடு ஒட்டியிருந்தது. தள்ளாடித் தள்ளாடி நடந்து பெட்டிக் கடையின் குப்பைகள்
போட்டு வைக்கப்பட்டிருந்த ஒரு அட்டைப் பெட்டியினுள் தலையை நுழைத்து ஏதாவது கிடைக்குமா என்று துழாவிக் கொண்டிருந்தது. அடிக்கடி தலையை உயர்த்தி சற்று தொலைவில்
உட்கார்ந்து தம்ளர்களைக் கழுவிக்கொண்டிருந்த மணி அண்ணா மேல் ஒரு கண் பார்த்துக் கொள்வது மீண்டும் தலையை பெட்டிக்குள் நுழைத்து துழாவுவதுமாய் இருந்தது. உள்ளே
ஏதோ அகப்பட்டிருக்க வேண்டும் போல – வரட் வரட் என்ற சத்தத்தோடு அதை வெளியே இழுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது மணி கவனித்து விட்டார்.
கவனித்ததும் மெல்ல ஓசைப்படாமல் நடந்து குப்பை பெட்டியை நோக்கி வந்தார். நாய் உள்ளே ஏதோ அகப்பட்டுக் கொண்ட சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாய் தலையை மேலே
தூக்கவில்லை. அதற்குள் மணி நாயின் பக்கவாட்டில் வந்து நின்றவர் அதன் வயிற்றைப் பார்த்து ஓங்கி ஒரு உதை விட்டார். நாயின் வயிற்றுக்குள் ஒரு பிரளயமே நடந்திருக்க
வேண்டும்.
கொல்ல்ல் கொல்ல்லென்று ஈனசுவரத்தில் அலறிக்கொண்டே சுருண்டு போய் ஒரு பத்தடி தள்ளி விழுந்தது. தலையைப் பரிதாபமாய் தூக்கிப் பார்த்து விட்டு ஓடி விட்டது. இதைப்
பார்த்துக் கொன்டிருந்த செல்வாவுக்கு சட்டென்று முகம் சிவந்து விட்டது…
“Ohhh my fucking God…. யோவ்.. அந்த நாய் என்னய்யா பாவம் பண்ணிச்சி. ஏன்யா அதை அடிச்சே. Rascal இரு இரு புளூக்ராஸ்க்கு போன் பன்றேன்.. உன்னையெல்லாம் உள்
ளே
தள்ளினாத்தான்யா புத்தி வரும்…” என்று பொறிந்து தள்ளிக்கொண்டே மொபைல் போனை பாக்கெட்டில் இருந்து உருவினான்.
“சார்… இந்த நாயிங்க பெட்டில இருக்க குப்பைய அள்ளிட்டுப் போய் கம்பெனி கேட்டுக்கு முன்னே போட்டிருது சார். உங்க கம்பெனிகாரங்க போன வாரம் வந்து சத்தம்
போட்டாங்க சார். இனி குப்பை விழுந்தா பெட்டிக் கடைய காலி பண்ண வேண்டியிருக்கும்னு சொல்லிட்டாங்க சார். நம்ப பொழப்பே இத நம்பித் தான் சார் ஓடுது.. என்னா சார்
பண்ணட்டும் நான்.. இங்கே நாளுக்கு எறநூறு டீ ஓடுது.. அத நம்பித்தான் சார் எங்க குடும்பமே சாப்பிடுது” முடிந்த வரையில் அதிக “சார்” இருக்கும் படி பார்த்துக்கொண்டார்.
“அதுக்காக நாயை அப்படியா ஒதப்பே? மனசுல ஈரமேயில்லையா மேன்” உச்சஸ்தாயியில் கத்தினான் செல்வா.
“செல்வா… விடு – நீ கெளம்பு மொதல்லே” இந்த நேரம் அவனிடம் எதுவும் பேசி புரியவைத்து விட முடியாது என்று எனக்குத் தெரியும்.
அவரிடம் திரும்பி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண் காட்டிவிட்டு இரண்டு டீக்கும் அவனது சிகரெட்டுக்கும் சேர்த்து காசு கொடுத்து விட்டு அவன் தோளைப் பற்றி நடத்திக் கூட்டி வந்தேன்.
“ச்சே.. என்னா மனுசங்க பாத்தியா பாலா.. அந்த ஜீவனுக்கு எப்படி வலிச்சிருக்கும்.. அதுவே பாவம் பசியோட இருந்தது.” இன்னும் முகம் சிவந்திருந்தது.
“அந்த நாய் பாவம் தான்.. ஏன் மணி பாவமில்லையாடா? அவர் குடும்பமே அந்தக் கடைய நம்பித்தான் இருக்கு, நாய்க்கு அவர் பாவம் பார்த்தா அவங்களுக்கெல்லாம் யார் சோறு
போடறது? நீ போடுவியா?”
“இல்ல…. ஆனாலும்…”
“ச்சீ நிப்பாட்டுடா.. ஒன் ஜீவ காருன்யத்த பெட்ரோல் ஊத்திக் கொளுத்த – மனுசனும் ஜீவன் தாண்டா.. ஏன் இந்த ஜீவன் மேல மட்டும் காருண்யம் வர மாட்டேங்குது உனக்கு?”
“அது… அது…” வார்த்தையைத் தேட ஆரம்பித்தான். பின் நிறுத்தி விட்டு என்னை ஏறிட்டுப் பார்த்தான். ‘நீயெல்லாம் மனுசனா இல்ல மிருகமா’ என்கிற மாதிரி ஒரு பார்வையை வீசி
விட்டு ஐ-பாடின் இயர் போனை மீண்டும் பொறுத்திக் கொண்டான் – “நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழையில்” மீண்டும் நனைய ஆரம்பித்தான்.
‘இவனுக மண்டையில அமில மழை தான் பெய்யனும்’ என்று நினைத்துக் கொண்டேன்.
ஒரு தேவதையின் மரணம்…!
போன மாதம் ஊருக்குப் போய் மலரைப் பார்த்து விட்டு வந்ததில் இருந்து எனக்கு ஜெனியின் நினைவு தான். இந்தளவுக்கு உருவ ஒற்றுமை சாத்தியம் என்று நான் இதுவரை
நினைத்துக்கூட பார்த்ததில்லை. அதே போன்ற கோதுமை நிறம், அதே போன்ற வட்ட முகம், அதே போன்ற பூசினாற் போன்ற உடல் வாகு, அதே போன்ற சுருள் முடி.. குரல் கூட
ஏறக்குறைய ஒரே மாதிரி… இல்லை எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா?? சிரிக்கும் போது கூட ஜெனியே கண்முன் தோன்றி மறைந்தது போன்ற ஒரு பிரமை.. குணம் மட்டும்
தலைகீழ்.. ஆனால் தோற்றம் அப்படியே.. ஊரில் இருந்து வந்ததும் நினைவு வெளியெல்லாம் ஜெனியாகவே இருந்தாள்.. இப்போது எப்படி இருக்கிறாள்? எங்கே இருக்கிறாள்?
குழந்தைகள் எத்தனை? ஜெனியின் குழந்தை கூட அவள் போலவே இருப்பாளோ..?
ஜெனி…… என் பதின்ம வயதுக்கால தோழி.. தேவதைகள் இருப்பது உண்மையானால் அவர்கள் ஜெனியைப் போல் தான் இருப்பார்கள்.
“டேய் நீ என்னெ லவ் பண்றியா? ஆமான்னு மட்டும் சொன்னே.. மவனே செருப்பு பிஞ்சிடும் ராஸ்கல்”
“யார் சொன்னா நான் உன்னெ லவ் பண்றேன்னு? நான் சொன்னேனா? லூசு மாதிரி பேசாத என்னா?”
“யாருடா லூசு.. பசங்க எல்லாரும் தான் லூசு. ஒரு பொண்ணு நாலு வார்த்தை பேசினாலே ஈயின்னு இளிச்சிக்கிட்டே போல் லெட்டர் கொடுக்க மாட்டீங்க? நான் உன் கிட்டே
ப்ரீயா பேசறது உன் பொறுக்கி ப்ரெண்ட்ஸுக்கு ஆகலை போல.. வசந்த் எல்லார் கிட்டயும் நாம லவ்வர்ஸ்னு சொல்லிட்டு இருக்கான். சொல்லி வை அவன் கிட்டே… இனி இந்த
மாதிரி பேசினான்னா செருப்பு பிஞ்சிடும்னு”
“பார்த்துடி அடிக்கடி பிஞ்சிகிட்டே இருந்தா உங்கப்பா செருப்பு வாங்கிக் குடுத்தே ஏழையாய்ட போறார்…”
ஜெனி சுடிதார் போட்ட ஆண்பிள்ளை. பதின்ம வயதுகளின் மத்தியிலேயே அவளுக்கு இருந்த தெளிவு பிரமிக்க வைக்கக் கூடியது. நட்பு, காதல், திருமணம்.. ஏன் செக்ஸைப் பற்றி கூட
நிறைய தெரிந்து வைத்திருந்தாள்.. அவளின் IQ ஆச்சர்யமூட்டக்கூடியது.. பள்ளியின் அவள் முதல் மாணவியாக இருந்ததில் எவருக்கும் பெரிய ஆச்சர்யம் இருக்க முடியாது. ஏனோ
அவளுக்கு என்னைத் தவிற வேறு நன்பர்கள் இருந்ததில்லை.. வேறு எவரோடும் அதிகம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டாள். எங்களிடையே கூட பேச்சு என்பது எப்போதும் ஒன்வே
தான்.. அவள் பேசுவாள் பேசுவாள் பேசுவாள் பேசிக்கொண்டேயிருப்பாள் நான் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக் கொண்டிருப்பேன்.. அவளுக்குத் தெரியாத விஷயமே
இந்த உலகத்தில் இருந்து விட முடியாது என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்.
அது நான் சிறுவனாய் இருந்து வாலிபனாய் மாறிக்கொண்டிருந்த சிக்கலான நாட்கள். ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்யத் துவங்கிய நாட்கள்.. அழகான பெண்களைக் காணும்
போதெல்லாம் உள்ளே பட்டாம்பூச்சிகள் பறக்கத் துவங்கிய நாட்கள். அப்போது அரையாண்டு தேர்வு முடிவுகள் வந்திருந்தது.. ஏற்கனவே சுமார் மானவனான நான் அந்த முறை எந்தப்
பாடத்திலும் இருபது மதிப்பெண்களைத் தாண்டவில்லை.. மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குப் போய் எப்படி அப்பாவை சமாளிப்பது என்ற யோசனையில் வகுப்பிலேயே
உட்கார்ந்திருந்தேன்.. அப்பா படு கண்டிப்பானவர். அச்சத்தில் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தது. அழ வேண்டும் போல் இருந்தது.
“வீட்டுக்குப் போகலையா?”
“பயமா இருக்குடி.. அப்பா பெல்ட்டாலேயே சாத்துவார்”
“ம்ம்… புள்ள இப்படி மார்க் வாங்கினா எந்த அப்பா தான் கொஞ்சுவார்?”
“நீ வேற ஏண்டி.. பேசாம ப்ரோக்ரஸ் கார்ட்ல நானே கையெழுத்துப் போட்றலாமானு யோசிக்கிறேன்”
“டேய் ப்ராடு… மார்க் மட்டும் தான் உன் திறமைய அளந்து பார்க்கிற ஸ்கேலா? என்ன… நாலு அடி போடுவரா? அதுக்கே ஏண்டா இப்படி கிரிமினலா யோசிக்கிறே?”
“அதுக்கில்லே…”
“க்ளாஸ் நடக்கும் போது பாடத்தை கவனிக்கனும்.. அத்த விட்டுட்டு பாடம் எடுக்கற டீச்சரை சைட் அடிச்சிட்டு இருந்தா இப்படித்தான் மார்க் வரும்”
“………..”
“கடைசி பெஞ்சில ஒக்காந்துகிட்டு நீங்க என்ன பன்றீங்கன்னு எனக்குத் தெரியும். ஸ்கூல் புக் படிக்கச் சொன்னா செக்ஸ் புக் படிக்க வேண்டியது.. அப்புறம் மார்க் வரும் போது
மூஞ்சத் தூக்கிக்கிட்டு ஒக்காந்துக்க வேண்டியது..”
“அதெப்படி…..”
“எனக்குத் தெரியும்டா.. இது இந்த வயசுல நார்மல் தான். ஆனா இதையெல்லாம் கடந்து அடுத்த ஸ்டேஜுக்குப் போகனும். இதிலேயே தேங்கிடக் கூடாது. அந்தந்த வயசுல அந்தந்த
வயசுக்கேயுரிய ப்ரையாரிடிஸ் இருக்கில்லே? இப்போ உன்னோட ப்ரையாரிடி என்ன?”
“நல்ல மார்க் வாங்கனும்”
“போடா ட்யூப் லைட். இந்த வயசுல கத்துக்கணும். நிறைய கத்துக்கணும். கவனம் சிதறக் கூடாது. லேசா என் துப்பட்டா விலகினா உத்து உத்து பாக்கறியே.. ஏன் பாக்கத் தோணுதுன்னு
யோசிச்சுப் பார்த்திருக்கியா?”
“ஸாரி நான் இனிமே அப்படிப் பார்க்கலை” முகத்தை வேறு புறமாகத் திருப்பிக் கொண்டேன். அவமானமாக இருந்தது.. உச்சி மயிறைப் பிடித்து தன் பக்கமாகத் திருப்பினாள்.
“என் கண்ணைப் பார்த்து சொல்லு.. உன்னால அது முடியுமா?”
எனக்கு அந்த நேரத்தில் பயமாக இருந்தது. அழுகை வருவது போல் இருந்தது. அவள் என் முன்னே விஸ்வரூபம் எடுத்து நிற்கும் காளியைப் போல தோன்றினாள்..
“ஏன் கண் கலங்குது? சொல்லு உன்னால முடியுமா?”
“……………” எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்தக் கேள்வியெல்லாம் ஒரு பெண்ணிடமிருந்தே வரும் என்று நான் யோசித்துக் கூட பார்த்ததில்லை.
“முடியாது. நிச்சயமா முடியாது. ஏன்னா அது கெமிஸ்ட்ரி. அப்படித்தான் பார்க்கத் தோணும். தொட்டுப் பார்க்கலாமான்னு கூட தோணும். தோணுதில்லே?”
“ம்…”
“Because.. thats how your system is designed. Its not a problem.. its a property. You have to manage it properly. Or else that will manage you. That will rule you.. ஒன்னு நீ
இந்த என்னங்களை சரியா மேய்க்கணும் இல்ல அது உன்னை மேய்க்கும். உன்னை இந்த என்னங்கள் தங்களோட கட்டுப்பாட்டுக்கு எடுத்த பின்னாடி உன்னால எந்த வேலையையும்
சரியா செய்ய முடியாது. படிக்க முடியாது. சரியா சாப்பிட விடாது. செக்ஸ் பத்தின thoughts எல்லாம் தீ மாதிரி.. சரியா ஹேண்டில் பண்ணலைன்னா மொத்தமா எரிச்சிடும்”
“ஆனா எப்படி…?”
“நீ என்கிட்டே பேசறது தவிற படிக்கறது தவிற வேற என்ன செய்யறே?”
“ச்சும்மா இருக்கேன்”
“அதான் பிரச்சினையே… நீ ஏன் சும்மா இருக்கே? ஏதாவது வேலைல உன்னையே இன்வால்வ் பண்ணிக்கலாமில்லே? எதாவது கேம்ஸ்ல இன்வால்வ் ஆகலாமில்லே? உனக்கு தெரியுமா..
empy mind is devil’s workshop”
“எனக்கு எந்த கேம்ஸும் தெரியாதே..”
“ஏன்.. நம்ப ஸ்கூல்லே புதுசா கராட்டே க்ளாஸ் ஆரம்பிச்சிருக்காங்கல்ல? அதுல போய் சேரலாமில்ல? டெய்லி காலைலயும் சாயந்த்ரமும் ரெண்டு மணி நேரம் நல்லா வொர்க் அவுட்
பண்ணு.. அப்புறமா படிக்க உக்கார்.. பொண்ணுங்களோட பேசும் போது கண்ணைப் பார்த்து பேசு. கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனா பழகிக்கோ. தப்பான சிந்தனை வந்தா
தடுக்க நெனைக்காத.. ச்சும்மா அதை வேடிக்கை பார். எங்கேயிருந்து வருது.. ஏன் வருதுன்னு கவனி. தானா போய்டும்”
“ம்… சரி”
“இப்போ யாரையாவது லவ் பண்ணனும்னு தோணுதில்லே”
“……ஆமா உன்னெ லவ் பண்ணனும்னு தோணுது” கண்களுக்குள் பார்த்து தான் சொன்னேன்.. எந்த சலனமும் இல்லாமல் பதில் வந்தது
“வேணாண்டா… இது லவ் இல்ல. லவ்வுன்னு நீ எதை நெனைக்கறியோ அது லவ்வே கிடையாது. இப்ப உனக்குப் புரியாது.. பத்து வருஷம் கழிச்சி யோசனை பண்ணு.. அப்ப
புரியலாம்”
“அப்பவும் நான் உன்னெ லவ் பண்ணா?”
“அப்ப வந்து சொல்லு.. நான் உன்னோட வர்றேன்”
“உனக்குக் கல்யாணம் ஆயிருந்தா?”
கிண்டலாய் சிரித்துக் கொண்டே சொன்னாள்.. “புருஷனை விட்டுட்டு உன்னோட வர்றேன்.. போதுமா?”
அவள் சொன்னது தான் சரி.. இதோ இப்போது பத்து வருடம் கழித்து யோசித்துப் பார்க்கையில் அன்று நான் கொண்டிருந்தது காதல் அல்லவென்று தெளிவாய்ப் புரிகிறது. தேவதைகள்
மேல் காதல் வராது…. பக்தி தான் வருமோ? களிமண்ணுக்கு உரு கொடுப்பது போல் என் சிந்தனைகளுக்கு உரு கொடுத்தாள். என் அந்த நாள் குழப்பங்கள் பலவற்றுக்கும் அவளே
விடையாய் இருந்தாள். அதற்குப் பின் எனக்கு இன்று வரை காதல்
காமம் என்று எந்தக் குழப்பமும் வந்ததேயில்லை. அவள் சொல்லி ஆரம்பித்த பல விடயங்களை இன்று வரை நான் அப்படியே தொடர்கிறேன்.. கராட்டே உட்பட.
“நீ ஏன் எப்போ பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி தலைய கலைச்சுப் போட்டுக்கிட்டே அலையுறே?”
“போடி.. அது என் ஸ்டைல்”
“பார்க்க கேவலமா இருக்கு.. எப்போதும் பாக்கெட்டில் சீப்பு வச்சிக்கோ. எப்பவும் பார்க்க ப்ரெஷ்ஷா இருக்கனும்”
“ம்ம்… சரி”
‘நீ ஏன் லைப்ரரி பக்கமெல்லாம் வரவே மாட்டேன்ற? படிக்கறது நல்ல பழக்கம்டா. பாடம் மட்டும் இல்லாமே நிறைய வைடா படிக்கனும்.. ஆக்ச்சுவலா படிக்கக் கூடாது – கத்துக்கணும்”
“ம்ம்.. சரி”
“டென்த்க்கு அப்புறம் என்ன பண்ணப் போறே?”
“எனக்கு தெரியலடி…”
“உனக்கு நேச்சுரலாவே என்ஜினியரிங் மைண்ட் இருக்கு.. பேசாமே டிப்ளமோ சேர்ந்துடு”
“ம்ம்.. சரி”
எல்லாம் எழுதினால் ஆயிரம் பக்கங்கள் கூட பத்தாது. இன்றைக்கு நான் ஒரு முழு மனிதனாய் இருக்க பல வகைகளில் அவளே காரணம். அவள் என் மனதை என்னை விட நன்றாக புரிந்து வைத்திருந்தாள். ஜெனி என் தோழி மட்டுமல்ல – என் குரு.. என் ஆசிரியை..
ஊருக்கு வந்ததும் அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. கடைசியாக ஆறு வருடம் முன் பார்த்தது.. அவள் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருந்தாள்..
“டேய்.. நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”
“என்ன?”
“நீ என் கல்யாணத்துக்கு வர வேண்டாம்”
“ஏன்?”
“காரணமெல்லாம் சொல்ல முடியாது.. வரவேண்டாம்னா வரவேண்டாம்”
“ம்ம் சரி.. ஒன்னே ஒன்னு கேட்கவா?”
“என்ன?”
“நீ ஏன் என்னை லவ் பண்ணியிருக்கக் கூடாது? நாம் ஏன் கல்யாணம் செய்துக்கக் கூடாது?”
“அது சரியா வராதுடா..”
“ஏன்?”
“உன்னைப் பார்த்தா என் குழந்தையவே பார்க்கற உணர்வு தான் வருதுடா. நாம கல்யாணம் செய்துகிட்டா நீ எனக்கு அடிமையாவே ஆய்டுவே.. யாரும் யாருக்கும் அடிமையா இருக்கக் கூடாதுடா.. சரி நான் வரட்டா? நேரமாச்சு”
நம்புங்கள் – இந்த வார்த்தைகளை அவள் பேசும் போது அவளுக்கும் இருபத்தோரு வயது தான்! அவள் பேசி நான் மறுத்துச் சொன்னதேயில்லை.. அன்றும் கூட..
முதல் வேலையாக குளித்து சாப்பிட்டு விட்டு அவள் வீட்டுக்குப் போய் அம்மாவிடம் அவள் புகுந்த வீட்டு முகவரி வாங்கிக் கொண்டு அங்கே போய் அவள் வீட்டு காலிங்பெல்லை அழுத்தும் போது மணி மதியம் இரண்டு.
கதவைத் திறந்தது ஜெனி… இல்லை இல்லை குட்டி ஜெனி. அப்படியே அம்மாவை உரித்து வைத்திருக்கிறாள்.
“யாருடி அது…” என்று கேட்டுக் கொண்டே வந்தவள் என்னைப் பார்த்ததும் அப்படியே முகம் மலர்ந்தாள்.
“டேய்…. பொறுக்கி.. எப்படிடா இருக்கே? இப்பத்தான் வழி தெரிஞ்சதா?” நிறைய மாறியிருந்தாள். இருபத்தேழு வயது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நாற்பது வயதுக்காரி
போல் இருந்தாள். கண்களுக்குக் கீழ் நிரந்தரக் கருவளையம்.. ஆழமான குழிக்குள் விழுந்த கண்கள்..என்னை வழியும் முகம்..
“அது இருக்கட்டும்.. கிளம்பு போலாம்”
“எங்கே?”
“நான் எங்கெல்லாம் போறேனோ அங்கெல்லாம்”
“எதுக்குடா?”
“ஹேய்.. என்ன மறந்துட்டியா? நீ தானே சொன்னே பத்து வருஷம் கழிச்சிக் கூப்பிடு வர்றேன்னு?”
“டாய்… பொறுக்கி… இன்னும் அதெல்லாம் நீ மறக்கலையாடா? அந்தக் குறும்பு மட்டும் மாறவேயில்லை உன்கிட்டே?”
“ஆமா நீ ஏன் இப்படி பிச்சைக்காரி மாதிரி இருக்கே? நோயாளி வேஷம் போட்ட மாதிரி… இல்ல மேக்கப் போடாத நடிகை மாதிரி இருக்கியே?”
“…..” அவள் பதில் பேசாமல் இருப்பது இதுவே முதல் முறை.
“என்னாச்சுடி? ஏன் இப்படி இருக்கே?”
வேறு புறமாகத் திரும்பிக் கொண்டு.. “அந்தக் கூண்டுல இருக்க பறவை என்ன தெரியுதா பாரேன்…”
“அட.. இது ஹம்மிங் பேர்ட் தானே?”
“ஆமா அவரோட ப்ரெண்ட் ப்ரஸண்ட் பண்ணது.. எப்படி இருக்கு?”
“ம்…. நல்லா அழகா இருக்கு.. ஏன்”
“சந்தோஷமா இருக்கா?”
“அதெப்படி நமக்குத் தெரியும்”
“உங்களுக்கெல்லாம் அதைப் புரிஞ்சுக்கவே முடியாதுடா..”
“இப்ப என்ன சொல்ல வர்றே”
“நான் சொல்றது இருக்கட்டும்.. உனக்கு எப்போ கல்யாணம்?”
“மே பி இன்னும் ஒரு ரெண்டு வருஷத்திலே”
“பொண்ணு?”
“கன்பார்ம் ஆன பின்னே சொல்றேன்”
“யாரோ இருக்கட்டும்.. ஆனா தயவுசெஞ்சி இப்படிக் கூண்டுல போட்டுடாதே” இப்போது திரும்பினாள்.. கண்களில் நீர் கோர்த்துக் கொண்டிருந்தது.
அவளின் அந்தக் கோலத்துக்குக் காரணம் புரிந்தது. அதற்கு மேல் அங்கே நிற்கவே முடியாது என்று தோன்றியது. இனிமேல் இவளை நான் பார்க்கவே கூடாது. இப்போதே
பார்த்திருக்கக் கூடாது. தேவதைகள் உயிரோடு இருக்கும் போது தான் பார்க்க வேண்டும். பிணமான பின் பார்க்கக் கூடாது. இவள் இப்போது தேவதையல்ல. மரித்துப்போன தேவதை.
திருமண பந்தத்தால் சிறகுகள் ஒடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப் பட்ட பறவை. இவளிடம் அந்தப் பழைய சங்கீதம் மீதமில்லை. சில சோக ராகங்களைத் தவிர்த்து வேறெதுவும் இல்லை.
“ஜெனி.. முன்னாடியெல்லாம் நீ எப்படி இருந்தே தெரியுமா? அந்தத் தெளிவெல்லாம் எங்கேடி போச்சு? உன்னால இதை மாத்திக்கவே முடியாதா?”
“அந்த ஹம்மிங் பேர்டுக்கு வேற சாய்ஸே இல்ல தெரியுமா? ரொம்ப பலமான இரும்புக் கூண்டு” மீண்டும் திரும்பி நின்று கொண்டாள் ” முன்னே அதுக்கு எத்தனையோ ராகங்கள்
தெரிஞ்சிருக்கும். ஆனா இப்போ அது பாடற பாட்டு ஒரே விதமான கதறல் தான்”
“அப்போ உன்னால கூட இந்தக் கூண்டை உடைக்கவே முடியாதா?”
“பறவைகளை விட இரும்புக்கு பலம் அதிகம்”
திருமணம்.. சுதந்திரத்திற்கு விழும் முதல் சாவு மணி. அதிலும் பெண்கள் விஷயத்தில் பெரும்பான்மையாக விழுந்து விடுகிறது. இந்தப் பெரும்பாண்மையில் ஜெனியும் சிக்கிக் கொண்டது தான் சோகம். எரிந்து தீர்த்த கானகம் போல் இருக்கிறாள்.
நம் சமூகத்தில் திருமணம் என்பது ஆண் பெண்ணைக் கொத்தடிமையாய் வைத்துக் கொள்ள கொடுக்கப்படும் லைசென்ஸ் என்பதாக இருப்பதற்கு ஜெனி இன்னுமொரு சாட்சி. அவளின்
ஆளுமை, அறிவு, திறமை, தெளிவு.. எல்லாம் எல்லாம் வீண். அதற்கு மேல் நான் அங்கே இருந்தால் தடுமாற வாய்ப்புகள் அதிகம் என்பதால் அவளை விட்டு விரைவில் விலகிச் செல்ல
வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். எப்போதும் போல இந்தக் கடைசி சந்திப்பிலும் அவள் எனக்கு குருவாகவே இருந்து பாடம் நடத்தியிருக்கிறாள். என்னளவிலாவது
இன்னுமொரு ஹம்மிங் பேர்டை கூண்டில் அடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
” சரி நான் போறேன் “
“ஏன் அவசரம்? காபி போட்டுத் தரவா?”
“வேணாம் நான் போறேன்”
“ம்ஹூம்.. போய்ட்டு வர்றேன்” திருத்தினாள்.
“இல்ல போறேன்”
“சரி.. போ….”
கண்ணாடித் திரை
அவனை பதினேழு வருடம் கழித்து சந்திப்பேன் என்று நினைத்தும் பார்க்கவில்லை. வேலை முடிந்து ஆபீசில் இருந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நின்று கொண்டிருக்கும் போது தான் அவனைப் பார்த்தேன். கல்லூரியில் கடைசி வருடம் கடைசி நாள் சான்றிதழ் வாங்கும் நாளன்று பார்த்தது தான். அதற்குப் பின்எங்கே போனான் என்னவானான் என்கிற ஒரு தகவலும் இல்லாமல் போய் விட்டது. தாளாத மகிழ்ச்சியோடு பேச ஆரம்பித்தேன்.
“டேய் சுந்தரா.. எப்படி இருக்கேடா.. இத்தனை நாளா எங்கேடா போயிருந்தே..எப்போ இந்த ஊருக்கு வந்தே?” கொஞ்சம் முன்வழுக்கையும் இளந்தொந்தியுமாக இருந்தான் எங்கள் கல்லூரிக் கால ரோமியோ. கண்களைச் சுற்றி இருந்த கருவளையம் ஒரு ஐந்து வயதை கூட்டிக் காட்டியது.
“ம்ம்ம் நல்லா இருக்கண்டா.. இங்கே வந்து ரெண்டு மாசமாச்சு நீ எப்படி இருக்கே” ஏதோ சொல்லமுடியாத அவஸ்த்தையில் கண்கள் அலைபாய்ந்தபடியே பேசினான். நான் அதைக்கண்டு கொள்ளாமல் தொடர்ந்தேன்.
“நானும் நல்லா இருக்கேன்.. அப்புறம் கல்யாணமெல்லாம் ஆயாச்சா?” என்று உரையாடலை நீட்டும் உத்தேசத்தோடு கேள்வியை வீசினேன்.
“ஆயாச்சு.. ஒரு பையன். ஐந்தாவது படிக்கிறான்” துண்டுத்துண்டான பதில்கள். எதிர்கேள்வியில்லை. ஏதோ அவசர வேலைக்குச் செல்பவனைப் போல கால் மாற்றி கால் மாற்றி நின்று கொண்டிருந்தான்.
“ஓ.. என்னடா ஒரு மாதிரியா பரபரப்பா இருக்கே? எதுனா அவசர வேலையா” கேட்டதும் அவன் முகத்தில் பல்பு எரிந்தது. இந்தக் கேள்விக்குத் தான் காத்திருந்தான் போல; உடனே பதில் வந்தது..
“ஹிஹி.. அமாண்டா.. கொஞ்சம் முக்கியமான ஒரு வேலை. ஒத்தரை பாக்க வர்றேன்னு சொல்லிருக்கேன் அதான் அவசரமா போயிட்டிருக்கேன் ஒன்னோட மொபைல் நெம்பர் கொடேன்.. அப்புறமா காண்டாக்ட் பன்றேன்” ஒருகையால் செல்பேசியை எடுத்துக் கொண்டே எதிர் காலை வீசி பைக் சீட்டை ஆரோகனித்தான். அவன் வண்டியின் டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்தது. உள்ளே எதையோ தினித்து வைத்திருந்தான்.
“சரி சரி.. உன் நெம்பர் கொடு மிஸ்டு கால் தர்றேன்”
மிஸ்டு கால் கொடுத்து விட்டு எனது செல்பேசியில் அவனது எண்ணை சேமித்துக் கொண்டே அடிக் கண்ணால் அவனைப் பார்த்தால் அவன் எனது எண்ணை சேமிக்காமல் பைக் சாவியை திருகிக் கொண்டிருந்தான்..
“டேய் சேவ் பண்ணிக்கடா”
“அப்புறம் பண்ணிக்கறேண்டா., மிஸ்டு கால் லிஸ்டிலே இருக்குமில்லே”
“சரி சரி எங்கே தங்கியிருக்கேன்னு சொல்லு நான் அந்தப் பக்கம் வந்தா வீட்டுக்கு வர்றேன்” என்றேன். அவன் பைக்கை உதைத்து அதை புகை கக்க வைத்துக் கொண்டே பேசினான்,
“நேத்தாஜி நகர் தெரியுமில்லே.. அங்கே சிம்பொனி அப்பார்ட்மெண்ட்; ரெண்டாவது ப்ளோர்.. டோர் நெம்பர் 204″ நான் குறித்துக் கொண்டேனா என்று கூட கவனிக்காமல் கியர் மாற்றி “சரிடா அப்புறம் கூப்பிடறேன்” என்று விட்டு எனது பதிலுக்குக் காத்திறாமல் பறந்தே போய் விட்டான்.
எனக்கு இப்போது ஆச்சரியம் கூடிப்போயிருந்தது; அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை பற்றி கிண்டலுடன் எழுதப்பட்ட நகைச்சுவைகளைப் படித்திருந்தாலும் இப்போது அதுவே எனக்கும் நடப்பது வியப்பாக இருந்தது. ஏனெனில் நானும் அதே அப்பார்ட்மெண்டில் ஐந்தாவது தளத்தில் தான் இரண்டு வருடங்களாக குடியிருக்கிறேன். ரெண்டு மாதமாக எனக்குக் கீழே உள்ள தளத்தில் வசிக்கும் நன்பனை கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.
‘போடா மவனே.. போ உனக்கு நாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாரு’ என்று நினைத்துக் கொண்டே கிளம்பினேன்.
வழக்கமான போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலை என் மனதைப் போலவே சந்தோஷமாக இருப்பது போல் தெரிந்தது. பதினேழு வருடங்கள் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது.. இப்போதெல்லாம் கல்லூரி நன்பர்கள் தொடர்பு விட்டுப் போவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாத அளவுக்கு தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து நிற்கிறது.. ஈமெயில் செல்போன் என்பதெல்லாம் அன்றைக்கு நாங்கள் கற்பனையே செய்து பார்த்திராத ஒன்று. அந்தக் கடைசி நாளில் கண்களில் கண்ணீரோடு ஒரு சின்ன அட்றஸ் புக்கில் எல்லோருடைய வீட்டு முகவரியையும் எழுதி வாங்கியது தான்; அதிலும் ஒரு பக்கத்தில் முகவரியும் அதன் எதிர்பக்கத்தில் அவர்கள் உதிர்த்த ஏதாவது ‘தத்துவ முத்தும்’ இருக்கும். அன்று பலர் வீட்டில் டெலிபோன் கூட இருக்காது. நன்பர்கள் நினைவு வரும் போதெல்லாம் அந்த புத்தகத்தை தடவிப்பார்த்துக் கொள்ள வேண்டியது தான். இதோ இன்றைக்கு ஏற்பட்டது போன்ற எதிர்பாராத இனிய ஆச்சர்யங்கள் எப்போதாவது தான் நிகழ்கிறது – இந்த நிமிடம் வானில் பறப்பது போல் உணர்கிறேன்.
பழைய நினைவுகளோடே வந்ததாலோ இல்லை போக்குவரத்து நெரிசல் இல்லாததாலோ என்னவோ சீக்கிரமே அப்பார்ட்மெண்ட் வந்து சேர்ந்து விட்டேன். பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு லிப்டை நோக்கி திரும்பும் போது தான் கவனித்தேன். டேங்க் கவர் புடைத்துக் கொண்டிருந்த அந்த பைக் – ஸ்ப்ளெண்டர். ‘அட நம்மாளு வண்டியாச்சே.. எங்கியோ போயிட்டிருக்கேன்னு சொன்னானே..’
எதற்கும் சந்தேகத்தைப் போக்கிக் கொள்ள குனிந்து வண்டியின் சைலன்சரை தொட்டுப் பார்த்தேன். சூடாக இருந்தது. அப்படியானால் நம்மாளே தான். ‘எங்கேயோ போறேன்னு இவன் எதுக்கு டுபாக்கூர் வுட்டான்’ மணியைப் பார்த்தேன் ஏழாகியிருந்தது..
‘ம்ம்ம்.. இன்னிக்கே அவனுக்கு சர்ப்ரைஸைக் கொடுத்துட வேண்டியது தான்’ என்று நினைத்துக் கொண்டே லிப்டில் ஏறி ஐந்தாம் நெம்பர் பித்தானை அழுத்தினேன்.
************************************************************************************************************
“ஏங்க இன்னிக்கு லேட்? எங்கே ஊதுங்க பாக்கலாம்?” இது வீட்டுக்குள் நுழைந்ததும் நடக்கும் வழக்கமான செக்கிங் தான். போன வாரம் நானும் எனது இடதொரு பாகமும் சேர்ந்து இந்த முடிவை எடுத்திருந்தோம். ‘ஒரு நாளைக்கு இருபது ரூபாய்னு கணக்குப் போட்டா மாசம் அறுநூறு ரூபா ஆவுது ஒங்க புகை செலவுக்கு. காசு என்னா மரத்துலயா காய்க்குது? அதனாலே ஒழுங்கா மரியாதையா புகை விடற பழக்கத்தை விட்டொழிக்கறீங்க’ என்று கண்டிப்பான கட்டளை போட்டிருந்தாள்
“ஹேய்.. எம்மேல நம்பிக்கை இல்லையா உனக்கு” செல்லமாய்க் கோபித்துக் கொண்டே திரும்பிப் பார்த்தால், எனது வாரிசு நான் உள்ளே வந்ததுகூடத் தெரியாமல் வீடியோ கேம்ஸில் ஆழ்ந்து கிடந்தான்.
இவனுக்கு தெரிந்த உலகத்தில் ரெண்டே ரெண்டு இடங்கள் தான் இருக்கிறது. ஒன்று வீடு – அடுத்தது பள்ளி. இது இரண்டுக்கும் வெளியே ஒரு உலகமோ மனிதர்களோ இருப்பதே அவனுக்கு வீடியோ கேம்ஸில் வரும் க்ராபிக்ஸ் மனிதர்களை வைத்துத் தான் தெரியும். எனது பள்ளி நாட்களை நினைத்துப் பார்த்தேன். அரசுப் பள்ளியில் படிக்கத்தான் எங்களுக்கெல்லாம் வசதியிருந்தது. தமிழ்வழிக் கல்வி தான். ஆனால் உலகம் குறித்து என் மகனை விட அவன் வயதில் எனக்கு அதிகமாகவே தெரிந்திருந்தது. ஓரளவுக்கு வீட்டின் பொருளாதாரம் குறித்தும் அறியவைக்கப்பட்டிருந்தோம். ஒவ்வொரு பெரிய பரீட்சை விடுமுறையிலும் பக்கத்தில் இருந்த குளக்கரையில் விளையும் கீரையைக் அதிகாலை நேரத்திலேயே போய் பறித்து வந்து கட்டுக் கட்டி வீடு வீடாக விற்போம். கிடைக்கும் காசை சேர்த்து வைத்து தான் அடுத்த வருடத்திற்கான புத்தகங்களையும் சீருடைகளையும் வாங்க வேண்டும்.
அந்த நாட்களின் மாலை நேரமெல்லாம் எங்களுக்கு ஒரே கொண்டாட்டமாக
இருக்கும்; மாரியம்மன் கோயில் திடல் புழுதியில் கபடி விளையாடிக் கொண்டிருப்போம். சிராய்ப்புகள் இல்லாமல் வீட்டுக்குப் போனதாக சரித்திரமே கிடையாது. அப்போதெல்லாம் கிரிக்கெட் என்ற விளையாட்டைப் பற்றி எங்களுக்கு அதிகம் தெரியாது. விதம் விதமான விளையாட்டுகள் இருக்கும். கில்லி தாண்டு, பம்பரம், கரடி விளையாட்டு, கோலி என்று சொல்லிக் கொண்டே போகலாம். கோலி விளையாட்டின் அந்தப் பாட்டை
இப்போதும் சில நேரங்களில் ஹம் செய்வதுண்டு – “ஐய்யப்பஞ்சோலை.. அறுமுகதகடி… ஏழுவாலிங்கம்.. எட்டுமுத்துக் கோட்டை…” இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. எங்கள் விளையாட்டுகள் ஒன்று உடலுக்குப் பயிற்சியாக இருக்கும் அல்லது பையன்கள் மத்தியில் கூட்டுறவான ஒரு நிலையை உண்டாக்குவதாய் இருக்கும்.
எங்கள் ஊரில் இருந்த என் வயதுச் சிறுவர்களெல்லாம் எனக்கு நன்பர்கள் தான். எல்லோரும் மற்றெல்லார் வீட்டுக் கதையும் அத்துப்படியாகத் தெரியும். ஒவ்வொருத்தன் வீட்டிலும் என்னப் பிரச்சினை, அது எப்படித் தீர்ந்தது என்பதை பேசிக் கொள்வோம். அந்த
அனுபவங்கள் இப்போதும் கைகொடுக்கிறது.
இவனுக்கோ விளையாட்டு என்றால் வீடியோ கேம்ஸைத் தவிர்த்து கிரிக்கெட் மட்டும் தான் தெரியும். பத்து வயதுப் பையன் நட்டமாய் வளராமல் பக்கவாட்டில் வளர்ந்து கொண்டே போய் இப்போது ஒரு உருண்டையான உருவத்தை அடைந்திருக்கிறான். இப்போதே சைனஸ் பிரச்சினை வேறு.. எடுத்ததற்கெல்லாம் பிடிவாதம். நினைத்தை நினைத்த நேரத்தில் வாங்கி விட வேண்டும் என்கிற பிடிவாதம். என் தந்தை எனக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கேட்டு.. அப்புறம் உரமூட்டை சாக்குகளை சாக்கு வியயபாரி இஸ்மாயில் பாயிடம் ஒரு வருடத்துக்கு போட்டு அந்தக் காசை ஒரு வருடம் கழித்து மொத்தமாய் வாங்கி; அப்படி வந்த காசில் தான் எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். எங்களுக்கெல்லாம் எதையாவது வாங்கிக் கொடு என்று கேட்கவே பயமாக இருக்கும். எங்கள் முன்னே வைத்துத் தான் அப்பாவும் அம்மாவும் பணச் சிக்கல்களையெல்லாம் பேசிக் கொள்வார்களென்பதால் இயல்பாகவே அந்தத் தயக்கம் இருந்தது. என் மகனோ நாங்கள் பேசிக் கொள்ளும் போது ஒரு ‘டீசெண்ட் டிஸ்டென்ஸ் மெயிண்டென்ய்’ பண்ணுகிறான். ரொம்பநாள் கழித்து தான் தெரிந்தது -
அப்படிச் செய்யச் சொல்லி தான் அவர்கள் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களாம்.
எங்கள் விடலை வாழ்க்கைக்கும் இன்றைய நகர வாழ்க்கைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள்.. இந்த நகர வாழ்க்கையும் அப்பார்ட்மெண்ட வாசமும் ஏதோ நான் சிறையில் இருப்பது போன்றதொரு பிரமையைத் தான் தருகிறது. பாருங்களேன்.. கீழே எனது நன்பன்
குடிவந்து இரண்டு மாதங்களாகிறது.. நான் கவனிக்கவே இல்லை!! எங்கள் ஊரிலெல்லாம் புதிதாக எவர் வந்தாலும் அதைப் பற்றி எல்லோருக்கும் உடனடியாகத் தெரிந்து விடும். நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.. சுந்தரின் மகனும் என் மகனும் விளையாட்டுத் தோழர்களாக இருந்தால் இவனுக்கு அது நல்லது தான்.. அட்லீஸ்ட் வீட்டை விட்டு வெளியேவாவது போகிறானா பார்க்க வேண்டும். சமூக உறவுகளோ நன்பர்களோ இல்லாமல் இவன் வளருவது எனக்கு அச்சமூட்டுவதாய் இருக்கிறது.
“என்னாங்க.. சப்பாத்திக்கு மாவு உருட்டித் தாங்க நான் கிழங்கு செய்யறேன்” துவாலையால் முகம் துடைத்துக் கொண்டே வந்தால் மனைவியின் அழைப்பு.
“இரு இரு இப்ப வேணாம்.. நான் உன் கிட்டே சொல்லியிருக்கேனில்லே என் ப்ரெண்டு சுந்தர் பத்தி.. அவன் இங்கே ரெண்டாவது ப்ளோரில் தான் குடிவந்து இருக்கான்.. போய் பார்த்திட்டு வந்து ஆரம்பிக்கலாம்”
“எப்ப வந்தாராம்.. நீங்க என்கிட்டே சொல்லவே இல்லையே..?”
“எனக்கே இன்னிக்குத் தான் தெரியும்மா.. சரி சரி கிளம்பு போயிட்டு வந்துடலாம். டேய் தம்பி நீயுந்தான் கெளம்பு கெளம்பு.. சீக்கிரம்”
ஒரு கொலைவெறிப் பார்வையை வீசி விட்டு எந்த வார்த்தையும் பேசாமல் வாசலுக்கு வெளியே போய் நின்று கொண்டான். ‘எல்லாம் நேரம்டா.. எங்கப்பன் கிட்டே இந்த முறுக்கை நான் காட்டியிருந்தா கண்ணை நோண்டியிருப்பான்; உங்கப்பன் ஈவாயன்றதால தானே இந்த லுக்கு.. இரு வச்சிக்கிறேன்’ என்று கருவிக் கொண்டேன். ஆரம்பத்தில் செல்லம் கொடுத்தது என் தவறு; இப்போது என்னத்தைப் புலம்பி என்னத்தச் செய்ய?
*************************************************************************************************************
டோர் நெம்பர் 204.
உள்ளே ஹோவென்ற இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. காலிங் பெல்லை அழுத்தினேன். இந்த திடீர் விஜயம் அவனை எப்படியெல்லாம் ஆச்சரியப்படுத்தும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த போதே காலடிச் சத்தம் கேட்டது.
அவன் தான்.. அவனே தான். பார்த்தவுடனே முகம் அஷ்டகோனலாகிப் போனது. அசடு வழிய சிரித்துக் கொண்டே.
“டே டேய்… நீ நீ எப்படிடா.. இங்க..? சங்கடத்துடன் வந்த வார்த்தைகளுக்குள் அதை விட சங்கடமான கேள்வி. ஹாங்..அப்புறம் நான் முக்கியமாய் எதிர்பார்த்த அந்த ஆச்சரியம் மிஸ்ஸிங்.
“ராஸ்கல்.. நான் உன் அட்ரஸ் கேட்டேனே.. பதிலுக்கு நீ கேட்டியாடா? நானும் இதே அப்பார்ட்மெண்டில் தாண்டா ரெண்டு வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கேன். இது என் வைஃப் இது பையன். இவனும் ஐந்தாவது தான் படிக்கிறான்”
“ஹிஹி.. வாங்க வாங்க சிஸ்டர்” இப்போது கொஞ்சம் சமாளித்துக்கொண்டான்.
“வாங்க வாங்கன்னு சொல்லிட்டே நந்தி மாதிரி வாசலை அடைச்சு நிக்கிறாயே; வழிய விடு மொதல்ல” எங்களுடையதைப் போன்ற அதே விதமான ப்ளாட் தான். சிட்டவுட் தாண்டி ஹாலுக்குள் நுழைந்தால் இருபத்தோரு இன்ஞ் தொலைக்காட்சியின் திரைக்குள்ளே தலையை நுழைக்காத குறையாக இன்னொரு உருண்டை உருவம். அவன் மகனாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே..
“இது என் பையன். ராகுல் இங்க பாரேன் யாரு வந்திருக்கான்னு..” இவன் அழைப்பு சுவற்றில் மோதிய பந்தாக திரும்பி வந்தது. தலையைத் திருப்பாமலேயே “ஹலோ அங்கிள்” ஒன்றை வீசினான்.
“அவனுக்கு கிரிக்கெட்னா சரியான பயித்தியமாக்கும்” சுந்தரின் வார்த்தைகளில் பெருமிதம் அலைமோதியது. இப்போது தான் விளங்கியது இவன் ஏன் மாலை என்னை தவிர்த்து விட்டு பறந்தான் என்று. இப்போது எனக்கும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. என்ன சொல்வது என்று
நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவன் உள்பக்கமாய் திரும்பி “பாப்பு.. இங்கெ வாயேன்” என்றான்.
“யாருங்க” என்றவாறே உள்ளேயிருந்து அவன் மனைவி வெளியே வந்தாள்.
“இது யார் தெரியுமா.. செந்தில்நாதன். என் பிரெண்டு. அது அவன் வைஃப். அது அவங்க பையன். இதே ஊரில் தான் இவனுக்கும் வேலை. நம்ம அப்பார்ட்மெண்டில் தான் குடியிருக்கான். ஐந்தாவது ப்ளோரில” தந்திவாக்கியங்களில் அறிமுகத்தை முடித்து வைத்தான். அவள் எனக்கு கையை கூப்பிவிட்டு என் மனைவியை நோக்கி ஒரு சினேகமான பார்வையை வீசினாள்.
“ஒரு நிமிஷம் இருங்க காபி கொண்டு வர்றேன்” என்றவாறே உள்ளே திரும்பினாள். உடனே நம்மாள் “நானும் வந்து ஹெல்ப் பண்ணலாமா” என்றவாறே எழுந்து விட்டாள்.
“அட.. என்னாங்க கேட்டுக்கிட்டு, தாராளமா வாங்களேன்” அவர்களிருவரும் சமையலறை நோக்கி நகர்ந்து விடவே நான் சுந்தரின் பக்கம் திரும்பினேன். அவனோ டி.வி பக்கம் மும்முரமாய் இருக்கவே நானும் அந்தப் பக்கம் திரும்பினேன். ஏதோ கிரிக்கெட் மாட்ச் நடந்து
கொண்டிருந்தது. இடையிடையே சில பெண்கள் இடையை அசைத்து நடனமாடிக் கொண்டிருந்தனர்.
“ஹேய் என்னடா இது.. கிரிக்கெட்டுக்கு மத்தில டாண்சு ஆடறாங்களே இதென்னடா கூத்து?” இப்போது தான் நான் இதைப் பார்க்கிறேன்.
அவன் தலையைத் திருப்பாமலேயே பதில் சொன்னான் “இது ஐ.பி.எல் மேட்ச். டொண்டி டொண்டி. அவங்க சியர் லீடர்ஸ்” மறுபடியும் தந்தி வாக்கிய பதில்கள். அட.. இவனுக்கு என்னதானாச்சு..? சரி.. அவனுக்கு ஆர்வமான இடத்திலேர்ந்தே பேச்சைத் தொடங்குவோம் என்று நினைத்து,
“ஆமா எந்தெந்த நாடுகள் விளையாடறாங்க?” என்றேன்.
விருட்டென்று திரும்பினான் “டேய் உனக்கு ஐ.பி.எல் பத்தி தெரியாதா?” என்று விட்டு பட்டிக்காட்டானைப் பார்ப்பது போல் பார்த்தான்.
“எனக்கு எப்படா இதிலெல்லாம் விருப்பமிருந்தது? எனக்குத் தெரிஞ்சி சச்சின் டெண்டுல்கர் இந்தியாவுக்கு விளையாடறார். போன உலகக் கோப்பையை நாம் தோத்துட்டோம்.. இப்படி தலைப்புச் செய்தியா வர்ற மேட்டர் மட்டும் தான் எனக்குத் தெரியும். அதிலும் இப்பல்லாம் பேப்பர் கூட முழுசா படிக்க நேரமிருக்கறதில்லே”
“அடப்பாவி… இதாண்டா இன்னிக்கு ஹாட் நியூஸே.. அதாவது.. உலக அளவில பேமஸான வீரர்களும் உள்ளூர் வீரர்களுமா சேர்ந்து அணிகளை அமைச்சிருக்காங்க. அவங்களுக்குள்ளே ஆளுக்கு இருபது ஓவர்கள் மட்டும் விளையாடும் விதமா ரூல்ஸை மாத்தி வைச்சி விளையாடறாங்க. பெரிய பெரிய கம்பெனி முதலாளிகளெல்லாம் அணிகளை விலைக்கு வாங்கி, இந்த வீரர்களை ஏலத்தில் எடுத்து இருக்காங்க” என்றான்.
“அப்ப இப்ப விளையாடற டீம் எதெது?”
“இது சென்னை டீமும் டெல்லி டீமும்.. தோ.. மஞ்ச சட்டை போட்ட டீம் தான் நம்ம சென்னை டீம்” என்றான்.. திரும்பிப் பார்த்தேன்.. மஞ்சள் சட்டை போட்ட வெள்ளையன் ஒருவன் பந்து வீச ஓடிக் கொண்டிருந்தான்.
“என்னடா அவனைப் பார்த்தா வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்?” என்றேன் மீண்டும்.
இந்த முறை அவனிடம் இருந்து சலிப்பாக பதில் வந்தது.. “டேய் அதான் சொன்னேனே வெளியூர் வீரர்களும் உள்ளூர் வீரர்களும் சேர்ந்து விளையாடுவார்கள் என்று” என்றான்
“அப்ப சென்னை டீமில் எத்தனை பேர்டா நம்மாளுக?”
“ஒரு ரெண்டு மூனு பேர் இருப்பாங்க” தலையைத் திருப்பாம பதில் சொன்னான்.
‘ரெண்டு மூனு தமிழ்காரங்க இருக்கற டீமை எப்படி சென்னை டீம்னு சொல்றாங்க’ என்று தோன்றியதை கேட்கவில்லை. இந்த எழவு எனக்கு எப்போதும் புரியப்போவதில்லை என்பது மட்டும் புரிந்தது.
ஹோவென்ற அந்த இரைச்சலுக்கு மத்தியில் எங்களுக்குள் ஒர் மயான அமைதி நிலவியது. இவனிடம் என்னென்னவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். தொடர்பு விட்டுப்போன நன்பர்கள் குறித்து, அவன் வேலை குறித்து, பழைய நினைவுகள்.. ஆனால் அவனோ எதையும்
கேட்கும் நிலையில் இல்லை. நிறைய பேச்சு சப்தம் அந்த அறையில் இருந்து எழுந்தது; ஆனால் அவையெல்லாம் டீ.வி திரைக்குள்ளிருந்து. என் பக்கமாக அவன் திரும்புவதாயில்லை. ஒரு பதினைந்து நிமிடம் கழிந்திருக்கும், அவன் மனைவியும் என் மனைவியும் சமையலறையில் இருந்து வெளியே வந்தனர் – கைகளில் காபிக் கோப்பைகளோடு.
காபி அருந்தும் போது கூட அவன் திரும்பவேயில்லை. விளையாட்டு எந்தளவுக்கு கவர்ந்ததோ அதேயளவுக்கு விளம்பரங்களும் அங்கேயிருந்த எல்லோரையும் கவர்ந்தது. என் மனைவியும் மகனும் விளம்பரங்களை உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தனர். எனக்கு உள்ளூர பயம் ஆரம்பித்து விட்டது.. ‘ இந்த மாதம் ‘இன்ப்ளேஷன்’ நோயால் கடும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கும் எனது பர்ஸ் ஏற்கனவே மெலிந்து கிடக்கிறது; இவர்கள்
இனிமேல் புதிதாய் ஏதேதும் பூதத்தைக் கிளப்பிவிட்டால் என்ன செய்வது’ என்கிற சிந்தனை வேறு வாட்டிக் கொண்டிருந்தது.
ஏண்டா வந்தோமென்றாகி விட்டது எனக்கு. அழைப்பில்லாத கல்யாண வீட்டுக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் எந்த உரையாடலும் இன்றி ஹோவென்ற அந்த இரைச்சலின் பின்னனி இசையுடன் இப்படியே கழிந்திருந்த நிலையில்.. என்னால் அதற்கு மேல் தாங்க முடியவில்லை. அந்த இரைச்சல் என் மூளைக்குள் அமிலத்தைக் கொட்டுவது போலிருந்தது.
“டேய் நாங்க அப்ப கிளம்பறோமே..” இதற்காவது திரும்புவான் என்று எதிர்பார்த்தேன்
“ம்ம் சரிடா” தலையைத் திருப்பாமலேயே பதிலை வீசினான்.
“சரிங்க அப்ப நாங்க வர்றோம்.. ஞாயித்துக் கிழமை நீங்களும் எங்க வீட்டுக்கு வாங்க. நாங்க அஞ்சாவது மாடில தான் இருக்கோம்” என்று அவன் மனைவியிடம் சொல்லிவிட்டு எழுந்தேன். கூடவே என் மனைவியும், பெரும் கடுப்போடு என் மகனும் எழுந்து விட்டனர்.
நாங்களே கதவைத் திறந்து வெளியே வந்து சாத்தி விட்டு லிப்டை நோக்கி நடையைப் போட்டோ ம். கடும் ஏமாற்றமாக இருந்தது… எத்தனை வருடங்கள் கழித்து சந்தித்த நன்பன்.. புதிப்பிக்கப் போகும் நட்பைக் குறித்து மகிழ்ச்சியாக வீட்டிலிருந்து கிளம்பினேன்.. இப்போது சோர்வாக உணர்கிறேன். போதைக்கு ஆட்பட்டவனைப் போல டி.வி திரையை வெறிக்கும் நன்பன் எனக்கு வினோதமாய் தென்பட்டான். எல்லோரும் நடமாடும் பண்டங்களாகிவிட்டாகளோவென்கிற சந்தேகம் எழுகிறது.
விளையாட்டு என்னும் நிலையைக் கடந்து கிரிக்கெட் வேறொருதளத்தை அடைந்துவிட்டது புரிந்தது. ஆட்டத்தின் இடையே கவர்ச்சியான உடையலங்காரத்தோடும்
ஆபாசமான உடலசைவுகளோடு ஆடும் பெண்கள். பரபரப்பு, ஆபாசம், வக்கிரம் என்று ஒரு நீலப்படத்தின் சகல அம்சங்களோடும் இருக்கிறது. விளம்பரங்களை வெறித்துப் பார்க்கும் பொடிசுகள் நம் மனதுக்குள் கலவரத்தை விதைக்கிறார்கள். ஏற்கனவே என் வாரிசு பெரும் பிடிவாதக்காரன்..இப்போது என்னென்ன எழவை மனதுக்குள் குறித்து வைத்திருக்கிறானோ தெரியவில்லை.
என் மகன் தான் கேட்டது கிடைக்கப் பெற்றால் தான் என்னோடு சகஜமாக பேசவே செய்கிறான். அந்தளவுக்கு இந்த விளம்பரங்கள் பொருட்களை வலுக்கட்டாயமாக மூளைக்குள்ளேயே திணித்து விடுகிறது. மனித உறவுகளே கூட வணிகமயமாகிவிட்ட போது விளையாட்டுகள் எம்மாத்திரம்.. அதிலும் கிரிக்கெட் போன்ற ஒரு விளையாட்டின் இடையிடையே தோன்றும் விளம்பரங்களோ வீரிய ஒட்டுரக வகையைச் சேர்ந்தவை. திரையில் சிக்ஸர் அடித்த அதே வீரர் இடைவெளியில் வந்து ‘பூஸ்ட் ஈஸ் த சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி’ என்றால் என் மகன் வீட்டில் செய்த நவதானிய சத்துமாவை காறித்துப்புவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?
எப்போது படுத்தேன் எப்போது உறங்கினேன் என்றே தெரியவில்லை; இதே நினைவுகளோடே உறங்கிப் போனேன்… அன்றைக்குக் கனவில் நான் ஒரு பெருங்கூட்டத்தின் மத்தியில் நிற்பது போலொரு காட்சி தோன்றியது. அக்கூட்டத்தில் எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தனர். எல்லோரும் என்னோடு பேசினர், நானும் எல்லோரோடும் பேசினேன்.. ஆனால் எவருக்கும் மற்றவரின் குரல் கேட்கவில்லை. எங்கள் எல்லோரையும் ஏதோவொரு திரை – கண்களுக்குத் தெரியாத கண்ணாடித் திரை – மறித்து நிற்பது போலிருந்தது. தொட்டு விடும் தூரத்தில் தான் சுந்தர் தெரிந்தான்; ஏதோ பேசினான் எனக்குக் கேட்கவில்லை. எனது சப்தமும் அவனுக்குக் கேட்டிருக்காது. எல்லோரும் இருந்தும் எவரும் இல்லாத உணர்வொன்று அனைவரையும் ஆட்கொண்டது. இயந்திரம் போன்ற இறுக்கமான முகத்தோடே என் மகன் என்னைக் கடந்து போகிறான்.. வாங்கிக் கொடுக்க வக்கில்லாத உன்னோடு பேச்சு மட்டும் என்ன கேடு என்று அவன் முகம் சொன்னது மட்டும் எனக்குக் கேட்டது.. அந்தத் திரை சப்தங்களை மறித்தது போய் காற்றைக்கூட மறிக்கத் துவங்கிவிட்டதோ.. மூச்சுத் திணறுவது போலிருக்கிறது. சப்தங்களோ காற்றோ கூட இல்லை.. மரணாவஸ்த்தையாக இருக்கிறது.. ஆயினும் சிலர் சந்தோஷமாக இருப்பதாகவே தெரிந்தது..
சட்டென்று விழிப்பு வந்தது – தொப்பலாக வியர்த்திருந்தேன். அந்தத் திரை…அந்தத் திரை… அதை… உடைத்து நொருக்கத் தான் வேண்டும்..!
ஊமைப் பட்டாசுகள்!
“ஹம்ப்க்” ஒரே தம்மில் லாவகமாய் அந்த வெங்காய மூட்டையை ஏற்றிக் கொடுத்தான் துரை.
அது தாராபுரத்தின் ஒரு சின்ன காய்காறிச் சந்தை. சுத்துப்பட்டு கிராமங்களில் இருந்து மாட்டு வண்டிகளில் வரும் வெங்காயமும் தக்காளியும் தரம் பிரிக்கப்பட்டு சென்னையின் பெரிய சந்தை ஒன்றுக்கு லாரிகளில் லோடடிப்பார்கள். தீபாவளிப் பண்டிகைக்கு முந்தைய நாள் அது. பண்டிகை நாளுக்கான எந்த பரபரப்பும் இல்லாமல் வெறிச்சென்று இருந்தது சந்தை. போன வருடம் இதே நாளில் எள்ளுப் போட்டால் கீழே என்னையாகி விழும் கூட்ட நெறிசல் இருந்தது துரையின் மனதில் காட்சியாய் ஓடிக் கொண்டிருந்தது.
“ஐய்யே.. கொஞ்சம் மெதுவாத்தான் தாயேன்… ஸ்லிப்பாவுதுபா…” வழுக்கிய ஒரு முனையை அட்ஜஸ் செய்து மேலே தூக்கிக் கொண்டே சொன்னார் பெரிசு.
பெரிசுக்கு என்ன வயதென்றே எவராலும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. அனேகமாக இந்த சந்தை செயல்பட ஆரம்பித்த துவக்க நாட்களிலேயே இங்கே வந்திருக்க வேண்டும். பெயர் கூட இன்னதென்று எவருக்கும் தெரியாது – அதைப்பற்றி எவரும் கவலைப்பட்டது கூட கிடையாது – எல்லோருக்கும் அவர் “பெருசு” தான். சந்தை அடைந்த பின் ரோட்டின் எதிர்ப்புரத்தில் இருக்கும் ராயப்பன் டீக்கடையின் திண்ணை தான் பெரிசின் ஜாகை. பச்சைக் கலரில் ஒன்றும் நீலக்கலரில் ஒன்றுமாக இரண்டு முண்டா பனியன்கள் உண்டு அவரிடம். மிகக் கூர்மையாக கவனித்தால் தான் அதன் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க முடியும். பெரிசுக்கு பேச்சுக் கூட்டாளி துரை தான். வேறு எவரிடமும் அவர் அனாவசியமாகப் பேசி யாரும் கவனித்ததே இல்லை.
“என்னாங்கடா அங்க பேச்சு? எத்தினி மூட்டைய ஏத்திருக்கீங்க?” இருபதுகளின் துவக்கத்தில் இருந்த செட்டியார் மகன் முப்பதுகளின் இறுதியில் இருந்த துரையையும் பெரிசையும் அதட்டல் குரலில் கேட்டுக் கொண்டே மண்டியில் இருந்து வெளியே வந்தான். ஆட்காட்டி விரலை அடையாளமாய்ச் சொருகி ஒரு குமுதத்தைக் கைவிரல்களில் பற்றியிருந்தான். நாளைய ரிலீஸ் படங்களுக்கு டிக்கட் புக் பண்ண போக முடியாமல் நாற்றம் பிடித்த வெங்காய மண்டிக்குள் திணித்து விட்டு திருப்பதிக்கு சேத்ராடனம் கிளம்பி விட்ட அப்பனின் மேலான எரிச்சல் மூக்கு நுனியின் துடிப்பில் தெரிந்தது. உழைப்பேயறியாத ஊளைச் சதை அல்லைகளில் பிதுங்கிக் கொண்டிருந்தது. வெயில்படாத தேகத்தில் பரவலாக ஒரு மினுமினுப்பு ஒட்டிக் கொண்டிருந்தது.
“நூத்தம்பது மூட்ட ஆச்சுது மொதலாளி; இன்னும் ஒரு அறுபது தேறும்” பெரிசு பதில் சொல்லவில்லை.
“ஜல்தியா ஏத்துங்கடா.. மெட்றாசுல இருந்து போன் வருது.. வண்டிய அனுப்பனும்ல..”
“செரி மொதலாளி ஒரு டீயப் போட்டுட்டு வந்துடறோம்..” துரையின் பதிலுக்கு செட்டியார் மகன் மூஞ்சியைச் சுளித்துக் கொண்டே டேபிளுக்குத் திரும்பினான். ஆட்காட்டி விரல்கொண்டு அடையாளம் வைத்திருந்த குமுதத்தின் நடுப்பக்கத்தை திருப்பிக் கொண்டே ப்ளாஸ்டிக் வலைச் சேரில் சாய்ந்தான்.
துரையும் பெரிசும் ரோட்டைக் கடப்பதைக் கண்ட ராயப்பன் இரண்டு கண்ணாடித் தம்ளர்களை வென்னீரில் ஒரு அலாவு அலாவி பாய்லரின் பைப் முன்பு வைத்தான்.. “ஆத்தாமப் போடு ராயப்பா.. அப்புடியே சின்னக்கட்டு யோகி பீடி ஒன்னு” என்ற துரை இரண்டு போண்டாவை எடுத்து ஒன்றை பெரிசின் கையில் திணித்தான்.
“தொரை.. அறுபது மூட்டைக்கு இது காணுமா..? சாயந்திரமா மேட்டுப்பாளையத்திலேர்ந்து தக்காளி டெம்போ வேற வருது..”
ராயப்பனின் அழுக்கடைந்த எப்.எம் ரேடியோ கரகரப்பாக, “இது ஒன் ஜீரோ பைவ் பாய்ண்ட் நைன் சூரியன் எப்.எம். நீங்கள் கேட்டிக் கொண்டிருப்பது நேயர் விருப்பம். நேரமிப்போது இரண்டு மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்…..” என்றபடியே உளரலைத் தொடர்ந்து கொண்டே போனது..
“கேட்டியா பெரிசு.. மணி ஏற்கனவே ரெண்டே முக்கா.. சாப்புடப்போனா மணி மூன்ற ஆய்டும். இவிங்கய்யன் மாறி இவனுக்கு பொறுமையே இல்ல.. சும்மாவே கத்திட்டு இருக்கான்..” என்றவாறே ரோட்டின் எதிர்ப்புறத்தில் மண்டியினுள் குமுதத்தில் தலையைக் கவிழ்த்துக் கிடந்த செட்டியார் மகனை சுட்டிக் காட்டினான் துரை.
சின்னக்கட்டு யோகியைப் பிரித்து அதில் ஒன்றை உதட்டோ ரம் சொருகி வெட்டுப்பல்லால் கடித்த படியே.. ” இந்த செட்டிப் பயலுக்கு மூளைல கரையான் புடிச்சிருக்கு போல.. ஏற்கனவே யாவாரம் டல்லு.. ஊரே பூராம் பெரிய பெரிய காய்கடைகள ஏசி போட்டு தொறந்து வச்சிருக்கான்.. போன நோம்பிக்கும் இந்த நோம்பிக்கும் எத்தினி வித்தியாசம்..? போன வருசம் இதே நாளு நானும் நீயுமா ஐநூறு மூட்டைய ஏத்துனோம் ஒவ்வொரு நாளும் மூன்னூறு மூட்டைக்கு கொறவில்லாம ஏத்துவோம்.. இப்ப என்னாடான்னா… நாளுக்கு நூத்தம்பது மூட்ட தேறுனாலே அதிகம்னு வண்டியோடுது.. இத்தினிக்கும் போன வருசம் பத்து மண்டி; இந்த வருசம் நாலு தான் பொழச்சுக் கெடக்குது.. யாவாரமே இப்புடி தெடுமாறிக்கிட்டுக் கொடக்க இந்த செட்டிப்பய பொறுப்பில்லாத மவனக் கொண்டாந்து ஒக்கார வச்சிட்டு திருப்பதிக்குப் போயிருக்கான். அவன் வாரதுக்குள்ளாற இவன் உள்ள
யாவாரத்துக்கும் மொட்டையடிச்சிடுவான் போலிருக்கு…”
நீளமாய்ப் பேசிய பெரிசு புகையை வெளியே தள்ளினார் பெரிசு..
“ட்ட்ட்ட்ட்ட்டொம்ம்ம்ம்”
செவிப்பாறையின் அதிரலில் துரை ஒரு முறை தோளைக் குறுக்கிக் கொண்டான் ” யார்ராவன் கேணப்பொச்சு.. நாளைக்கித்தான நோம்பி.. இப்பயே காதக் கிழிக்கிறானுங்க” முணுமுணுத்துக் கொண்டே துரை திரும்பிப்பார்த்தான். தெருமுனையில் சில பையன்கள் அடுத்த பட்டாசைப் பற்றவைக்க அதன் திரியை நக நுணியால்
கிள்ளியவாறே வந்து கொண்டிருந்தனர். பெரிசு எந்த பாதிப்புமில்லாமல் கடைசியாக ஒருதரம் இழுத்து விட்டு பீடியைத் தூர எறிந்தவாறே ஆமோதிப்பாய் பார்த்தார்.
காலையில் இருந்து சலிக்காமல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்ததில் அனேகமாய் மறந்தே போய் விட்டிருந்த அந்த விஷயம் துரையின் மனதில் மீண்டும் மேலே எழுந்தது – நாளைக்கு தீபாவளி!
“நோம்பியன்னிக்கு வெடிச்சா பத்தாதா? ஒரு நா மின்னயே வெடிசி ‘எங்கூட்டுக் காசு காரியாகுது பாரு’ன்னு ஊரையேக் கூட்டனுமா?” பெரிசிடமிருந்து ஆசுவாசமாய் அந்த வார்த்தைகள் வெளியேறியது..
துரை கஷ்ட்டமாய் எச்சிலை விழுந்தியவாறே லுங்கியை உயர்த்தி உள்ளே போட்டிருந்த நீல டவுடரின் வலது பக்கப்பையினுள் கையை விட்டு வெளியே எடுத்தான். கூடவே கொஞ்சம் கசங்கிக் கோணலாகிப் போயிருந்த சிரிப்புடன் காந்திக் காகிதங்களும் வெளியே வந்தது. துரை அந்த கோனல் சிரிப்புகளை நேராக்கி நோட்டுகளை ஒரு வரிசையாய் அடுக்கினான். மீண்டும் ஒரு முறை எண்ணிப்பார்த்தான் – நானூறு! இன்றோடு இருபது நாட்களாய் ஓவர் டைம் செய்து சேர்த்த காசு. மூட்டைக்கு ஒரு ரூபாய் கூலி என்று போட்டால் ‘இன்னிக்கு எப்டியும் ஒரு நூறு சேர்ந்துடும்’ என்று நினைத்துக் கொண்டான்..
இருபது நாட்களுக்குப் பின்னும் அய்னூரு ரூபாய் தான் தேற்ற முடிந்தது என்பது அவனுக்கு ஆற்றாமையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். கையில் இருந்த காகிதங்களில் காந்தியின் சிரிப்பில் ஏதோ ஒரு குரூரத்தன்மை இருப்பதாகப் பட்டது அவனுக்கு.. ‘மவனே நீ யாரோ எவரோ… ஆனா என்னிக்காவது கைல மாட்டினே… ங்கொய்யால’ மனதுக்குள் கருவிக் கொண்டே அந்தத் தாள்களை மீண்டு வலது பக்க பையினுள் திணித்துக் கொண்டான்.
இன்னும் பற்ற வைக்க மறந்த பீடியை பற்ற வைத்து உதட்டுக்குக் கொடுத்தான். புகை காரமாக தொண்டையைக் கடந்து நுரையீரலை நிரப்பியது. இறுக்கமாக இருந்த ஏதோவொன்று உள்ளே தளர்ந்தது. எப்படி சமாளிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினான்.. காலையில் கிளம்பும் போது சின்னவன் சொல்லியனுப்பிய வார்த்தைகள் வேறு உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
“யப்போவ் நீ ஏன் எனுக்கு இன்னியும் புது டிரஸ் எடுக்கல? இன்னிக்கு வரும்போது புதுத்துணி.. பட்டாசு..லட்டு எல்லாம் வாங்கிட்டுவாப்பா..
சேகருக்கெல்லாம் போன வாரமே துணி எடுத்தாச்சு தெரீமா?” பத்து வயது சிந்தனைக்கு அப்பனை யாரோடு ஒப்பிடுவது என்று கூடத் தெரியவில்லை. கடைசி வாக்கியத்தை முடிக்கும் போது சின்னவனுக்கு தொண்டை அடைத்துக் கொண்டது.
“சரிடா கண்ணு” நம்பிக்கையே இல்லாமல் நம்பிக்கை சொல்லிவிட்டு வந்தாகிவிட்டது… “கமலாவுக்கு இன்னிக்கு முறுக்குக் கம்பெனில வாரக் கூலி கொடுத்துடுவாங்க.. அது ஒரு நானூறூ.. நம்மளோடது ஒரு அய்நூறூ.. மொத்தமா ஒரு தொள்ளாயிரம் தேறுது.. இதில பெரியவனுக்கும் சின்னவனுக்கும் துணி..அப்புறம் பட்டாசு பலகாரம்….- ம்ஹூம் இது பத்தவே பத்தாது.. என்ன செய்யலாமென்ற கேள்வி உள்ளே பிடுங்கித் தின்றது
பெரியவன் ஏதும் பேசவில்லை. பதின்ம வயதுகளின் மைய்யத்திலிருக்கும் அவனுக்கு அரைகுறையாய் நிலவரம் புரிந்தது.
அவன் பார்வையாலேயே சொல்லவேண்டியதைச் சொல்லி விட்டான். திங்கட் கிழமை புதுத் துணியோடு பள்ளிக்கு வரும் பையன்கள் மத்தியில் பழையதைப் போட்டுக் கொண்டு போவது இன்னும் முழுமையாய் உலகத்தைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் அவனுக்குள்ளே எப்படிக் கூசும் என்பதை துரையால் உணர முடிந்தது.
இருபது நாட்களாக பதினாறு மணிநேரம் வேலை செய்து பார்த்தாகி விட்டது. மதிய வேளையில் வெறும் போண்டா டீயுடன் இருபது நாட்களாக சமாளித்தும் பார்த்தாகி விட்டது. ஆனாலும் ஐநூறு தான் தேறி இருக்கிறது. போன வருடம் தீபாவளி சமயத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த சந்தையை நினைத்துப் பார்த்தான். அடுத்த வருடத்தைப் பற்றி சிந்திக்கவே பயமாக இருந்தது. பத்து வயதில் தாய் தகப்பனை இழந்து விட்டு அனாதரவாய் அலைந்து கொண்டிருந்த பொது அள்ளி அனைத்துக் கொண்ட சந்தை. போன வருடமெல்லாம் ஒவ்வொரு காய்க்கும் தனித்தனியே ஒரு நான்கைந்து மண்டிகளாவது இருக்கும். வெங்காயத்துக்கு மட்டுமே பத்து மண்டிகள் இருந்த நாட்கள் அது. இன்றோ அதில் பாதி ஆவியாகி விட்டது. சென்னைக்கு லோடடிக்கும் லாரிகளும் பாதியாய்க் குறைந்து விட்டது. அவன் கண் முன்னேயே அந்த சந்தை தனது இறுதி மூச்சை விட்டுக்
கொண்டிருக்கிறது. வேலை குறைய குறைய ஒவ்வொருவராய் குடும்பத்தோடு திருப்பூருக்கு கூலிகளாய்ப் போய் விட்டனர். துரைக்கு என்னவோ இந்த சந்தையை விட்டுப் போக மனமே இல்லை. தனது தந்தையே மரணப்படுக்கையில் இருப்பது போலத் தோன்றியது அவனுக்கு. எல்லாரும் போனாலும் கடைசி வரைக்கும் தனியாளாகவாவது இங்கே தான் இருக்க வேண்டும் என்று வைராக்கியமாய் நினைத்துக் கொண்டான். அதைத் தன் கடமையாகவே
கருதினான் அவன்.
அவனுக்கும் அந்த சந்தைக்குமான உறவு உணர்வுப்பூர்வமாய் இருந்தது.. பண்டிகைக்கால இயலாமைகளால் சந்தையை வெறுக்க வேண்டி வந்துவிடுமோ என்று அஞ்சினான்.. ஒருகணம் அவனுக்குள் கொண்டாட்டங்கள் மேலேயே வெறுப்பு மேலிட்டது
“அடச்சே இந்தப் நோம்பி எளவு வந்தாலே பெரிய தொல்லையாப் போச்சு. உங்கத்திங்கவே கூலியெல்லாம் சரியாப்போகுது.. இதில பட்டாசு பலகாரம் துணிமனி.. நாய் பொழப்புடா சாமி…” தன்னை மறந்து வார்த்தைகள் வெளியே வந்துவிட்டது.
வேறேதோ சிந்தனையிலிருந்த பெரிசு திரும்பிப் பார்த்தார்; ஏதும் பேசாமல் அடுத்த பீடியை உருவிக் கொண்டார்.
“ஏய் சீக்கிரமா வாங்கடா…” செட்டியார் மகன் ரோட்டின் எதிர்ப்புறத்திலிருந்து தனது புது அதிகாரத்தை சோதித்துப் பார்த்தான். தூரத்தில் மேட்டுப்பளைய தக்காளி டெம்போ வளைவில் சிரமமாகத் திரும்பிக் கொண்டிருந்தது.. நீண்டதொரு பெருமூச்சுடன் துரை எழுந்தான்.
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0
“வெங்காய மூட்ட எறநூத்திப் பத்துங்க.. அப்பால தக்காளிக் கூட ஒரு எளுபதுங்க மொத்தமா எறநூத்தியெம்பதுங்க” இரவு மணி பத்தாகிவிட்டது.. செட்டியாரி மண்டி தான் கடைசியாக இயங்கிக் கொண்டிருந்தது.
“இந்தா இதில முன்னூறு இருக்கு. இருவதுருவா தீவாளிக்காசு. பப்பாதியாப் பிரிச்சுக்கங்க.. கோட்டரப் போட்டுட்டு மல்லாந்துடாம வூட்டுக்குப் போற வளியாப் பாரு…. என்னா..?” செட்டி மகன் தனது முதலாளி முறுக்கைக் காட்டினான்.
துரை உள்ளே குமைந்தான் ‘இந்த லூசுப்பய மவங் கிட்ட எவம் பேசுவான்’ என்று நினைத்துக் கொண்டு “சரிங்க” என்றவாறே திரும்பினான். லேசாகத் தூரல் போட்டது.. மண்டி சந்தில் சாய்த்து நிறுத்தியிருந்த சைக்கிளை வெளியே எடுத்து உருட்டிக் கொண்டே ரோட்டைக் கடந்து ராயப்பன் டீக்கடை நோக்கிப்
போனான். பெரிசு டீக்கடைத் திண்ணையில் சாய்ந்து கொண்டு கடைசியாய் மிஞ்சிய இரண்டு பீடியில் ஒன்றை உருவி பற்ற வைத்துக் கொண்டிருந்தார்.
“தா.. பெரிசு.. ஒன்னோட பாதி நூத்தம்பது ரூவா” என்று பணத்தை இடது கையால் நீட்டிக் கொண்டே வலது கையால் கடைசி பீடியை பெரிசின்
கையிலிருந்து உருவினான் துரை.
“அதையும் நீயே வச்சுக்க.. அப்பால திருப்பித்தா போதும்.. அப்படியே இந்தா இதில ஒரு முன்னூறு இருக்கு இதையும் வச்சிக்க” என்றபடியே
கசங்கிய ரூபாய்த் தாள்களை துரையின் கையில் திணித்தார் பெரிசு. வாங்கத் தோன்றாமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் துரை..
“அட என்னப்பா அப்புடிப்பாக்குறே? எனுக்குத் தெரியாதா நீயேன் ஒரு பத்திருபது நாளா இஞ்சியத்தின்னவன் மாறி அலைஞ்சிட்டிருக்கேன்னு…
இருக்கவனுக்கு கொடுத்துதவ ஆயிரம் பேர் இருக்கான்.. நமக்குன்னு வேற யார் இருக்கா? ஒனக்காவது குடும்பம் இருக்கு; எனக்காரு இருக்கா? நாளைக்கு ஒனக்கு நோம்பி.. எனக்கு நாளைக்கு ஒரு நா லீவு.. காசிருந்தா நாளைக்கு ஒரு ஆப்ப உள்ள உட்ருப்பேன்.. பரவால்ல தொர..
கெளம்பரக்கு மின்னாடி பாய் கடைல போய் முட்டிக்குலுங்கர என்னை ஒரு புட்டி வாங்கிக் கொடுத்துட்டுப் போ…” என்றபடியே கரைந்து போயிருந்த பீடியைத் தூர எரிந்தார் பெரிசு.
துரைக்கு திடீரென்று உற்சாகம் முட்டிக் கொண்டு கிளம்பியது. அப்பாடா…வென்றிருந்தது அவனுக்கு..
“சரி சரி பேந்தப் பேந்தப் முழிச்சிட்டு நிக்க வேணாம்.. கெளம்பு. மணி இப்பயே பத்தாச்சு. மூலனூருக்குப் போய்ச்சேர இன்னும் ஒருமணி நேரமாகும் ஒனக்கு. அதுக்கு மின்ன பொடிசுகளுக்கு துணிமனிய வேறெ வாங்கனும்.. கெளம்பு கெளம்பு”
மழை வலுத்திருந்தது.. சாரலாய் ஆரம்பித்தது இப்போது வானமே பொத்துக் கொண்டது போல் ஊற்றியது. துரை எல்லா ரூபாய்த் தாள்களையும் இரண்டு பாலித்தின் கவருக்குள் போட்டு சுருட்டி கால்சட்டைப் பாக்கெட்டில் சொருகி வைத்தான்.. என்னென்ன வாங்க வேண்டும் என்பதை மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டே கடைவீதிப் பக்கமாய் சைக்கிளை மிதித்தான். மழைத்தண்ணீர் ரோட்டில் மூட்டளவையும் தாண்டி ஆறாக ஓடியது.
ராவுத்தர் பாய் புதிதாக ஒரு தார்பாய் பந்தல் போட்டு பட்டாசுக்கடை ஒன்றைத் திறந்திருந்தார். அதன் எதிரே சைக்கிளை ஸ்டாண்டு போட்டு விட்டு,
“பாய்.. நமக்கு ஒரு ரெண்டு கட்டு கம்பி மத்தாப்பு, அஞ்சு கட்டு கேப் வெடி, ரெண்டு துப்பாக்கி, மூனு கட்டு பிஜிலி, ரெண்டு கட்டு பெரிய லச்சுமி வெடி, அணு குண்டு ரெண்டு பாக்கெட்டு, சர வெடி நாலு கட்டு, பூவாளி ரெண்டு பாக்கெட்டு, ராக்கெட்டு ரெண்டு பாக்கெட்டு கட்டுங்க.. நான் போயி இனிப்பும் பசங்கலுக்கு துணியும் எடுத்துட்டு வந்துடறேன்” என்றவாறே சாலையின் எதிர்ப்புறத்தில் ப்ளாட்பாரத்தை அடைத்துக் கொண்டு புதிதாய் முளைத்திருந்த துணிக்கடைகளைப் பார்த்து நடையை எட்டிப் போட்டான் துரை.
ராவுத்தர் கடையைக்கு நாலுகடை தள்ளி புதிதாய் மின்னும் பெயர்ப்பலகையோடு ஒரு புதிய சூப்பர் மார்க்கெட் கடை திறந்திருந்தார்கள்.. தெரு முழுவதும்
அடைத்துக் கொண்டு அதன் வாடிக்கையாளர்களின் கார்கள் நின்றிருந்தது.. பாதிக் கார்களில் ஆட்கள் இருந்தார்கள்.. கதவைத் திறந்தால் உள்ளே பாய்ந்து வரத் தயாராய்
மழைத்தண்ணீர் காத்துக் கொண்டிருக்க, உள்ளே அடைத்த கதவுகளுக்குள் புழுக்கம் தாளாமல் நெளிந்து கொண்டிருந்தார்கள்.. துரைக்கு அவர்களின் முகவோட்டைத்தைக் காணவே வேடிக்கையாய் இருந்தது. அந்தக் கடைக்கு எதிர்ச்சாரியில் தான் தார்ப்பாலின் துணிக்கடைகள் இருந்தது.. போலீசுக்காரன் ஒருத்தன் “அனுமதியில்லாமல்” கடை போட்டதற்காக ரோட்டோ ரக் கடைக்காரர்களிடம் மாமூல் வசூலித்துக் கொண்டிருந்தான்.. ராவுத்தர் ஏற்கனவே அந்தப் போலீசுக் காரனுக்கான மாமூலை பட்டாசாகக் கட்டி வைத்து விட்டார்.
மீண்டும் துரைக்கு சில ஆண்டுகளின் முந்தைய நினைவு தட்டியது.. அப்போதெல்லாம் இந்தக் கடைவீதிக்குள் நுழையவே முடியாத அளவுக்கு மனிதர்கள் நிறைந்திருப்பார்கள்.. இப்போதோ அந்த இடத்தைக் கார்கள் தான் அடைத்திருக்கிறது.. ‘அந்த மனிதர்களெல்லாம் எங்கே தான் போயிட்டாங்க…?’ துரையின் மனம் விடை தெரியாத அந்தக் கேள்வியை எழுப்பிப் பார்த்தது. எதிர்ச்சாரியில் இருந்த ரோட்டோ ரத் துணிக்கடைகளிலும் பெரிதாகக் கூட்டமில்லை. நகை நட்டுகளை அடமானம் வைத்து வாங்கிய சரக்கை எப்படித் தள்ளுவது என்கிற கவலை அவர்கள் முகங்களில் தெரித்தது…
எல்லாம் வாங்கி விட்டுக் கிளம்பும் போது மணி பதினொன்று முப்பது ஆகிவிட்டது. மூலனூர் போய்ச் சேரும் போது பண்ணிரண்டு தாண்டிவிட்டது. இன்னும் மழை ஊற்றிக் கொண்டிருந்தது… தொப்பலாக நனைந்திருந்தான் துரை. வீட்டில் இன்னும் அறுபது வாட்ஸ் பல்பு சோகையாய் எரிந்து கொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் வெடிக்கும் வெடியோசை பம்மலாய்க் கேட்டது.சின்னவன் இன்னும் தூங்கவில்லை போலும்.. தன் அம்மாவிடம், அப்பா எப்போ வருவார் என்றூ விசாரித்துக் கொண்டிருந்தது துரைக்குக் கேட்டது. வீட்டுக்கு முன்னிருந்த மட்டைப் பந்தலுக்குக் கீழே சைக்கிளை சார்த்தி நிறுத்திவிட்டு கேரியரில் இருந்த பெரிய பட்டாசு பார்சலையும், முன்னே ஹேண்டிலில் ஊசலாடிக் கொண்டிருந்த துணிப் பையையும் அவிழ்த்து எடுத்தான். பனியனுக்குள் சொருகி வைத்திருந்த இனிப்புப் பார்சலை இன்னொரு கையில் எடுத்துக் கொண்டான்..
“கமலா.. கதவத் தொற…” கண்களின் எரிச்சலையும் தாண்டி சின்னவனின் முகம் போகும் போக்கைக் காண துரைக்கு ஆவலாய் இருந்தது…
“அப்பாடா.. ஒங்க வாரிசு போட்டு கொடஞ்சி எடுத்திட்டான்.. அடேய்ய்ய்.. ஒங்கப்பன் வந்தாச்சி பாரு” என்று கதவைத் திறந்து கொண்டே உள்ளே
திரும்பி குரல் கொடுத்தாள் கமலம்.
“ஹேய்ய்ய்….” என்று கத்திக் கொண்டே வந்த சின்னவன் பார்சல்கள் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு நேரே பாய்க்கு ஓடினான். சப்தம் கேட்டு பெரியவனும் விழித்துக் கொண்டான்.
“என்ன செய்திருக்கே” என்று கேட்டுக் கொண்டே திரும்பிப் பார்த்தான் துரை.. பொடியன்கள் இருவருமாகச் சேர்ந்து கொண்டு பார்சல்கள் ஒவ்வொன்றால் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.
“காலைல ஆக்குனது அப்பிடியே இருக்கு. ரசம் வச்சு கருவாடு வருத்திருக்கேன்” என்றபடியே அவளும் திரும்பிப் பார்த்தாள். சின்னவன் முக்கியமாய் பட்டாசுக் கட்டுகளை பிரித்துக் கொண்டிருந்தான்.
“அடேய்… அதையெல்லாம் ஏண்டா இப்பயே பிரிக்கிறே.. காலைல பாத்துக்கலாம் போய் படுங்கடா” என்று கத்தினாள்..
“வுடு கமலா.. வருசத்தில ஒரு நாளு…” என்ற துரையின் மனதில் பெரிசுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய மூன்னூற்றைம்பது நினைவுக்கு வந்தது.
“எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம் தான்; இவனுக ரெண்டு பேரும் கெட்டுப் போறானுக” கமலா அதே அறையில் இன்னொரு பக்கத்தில்
படுதா கட்டிப் பிரித்திருந்த சமயலறைக்குள் நுழைந்து கொண்டே சொன்னாள்..
“வுடுறீ… சின்னப் பசங்க.. அப்புடித்தான் இருப்பாங்க” பனியனைக் கழட்டி அறையின் குறுக்கே ஓடிய கொடியில் போட்டான் துரை. அதிலேயே தொங்கிய துண்டை எடுத்து தலையைத் துவட்டிக் கொண்டான்.
சாப்பிட்டு முடித்திருந்த துரை சின்னவனின் குதூகலத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சின்னவன் உலகத்தையே மறந்து சர வெடிகளையெல்லாம் தனித்தனியே பிரிப்பதில் மூழ்கி இருந்தான்.
“அதையேண்டா பிரிக்கிறே…?”
“அப்பத்தான்பா ரொம்ப நேரம் வெடிக்க முடியும்..” சின்னவன் திரும்பிப் பார்க்காமலேயே பதில் சொன்னான்.
“காலைல பார்த்துக்கலாம் வா படு.. கமலா லைட்ட ஆப் பண்ணிடு”
0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o
“யப்போய்.. எழுந்திரிச்சி வாப்பா.. பாலா எனக்குத் தராம அவனே வெடிக்கிறான்” சின்னவனின் குரல் எங்கோ கிணற்றுக்குள் இருந்து கேட்டது.. முழங்கையால் முட்டுக் கொடுத்து தட்டுத் தடுமாறி எழுந்து பார்த்தான் துரை. தலைக்கு மேலே அறுபது வாட்ஸ் பல்பை சுற்றி இரண்டு மூன்று பூச்சிகள் பறந்து கொண்டிருந்தது. கால்மூட்டுகளைப் பிடித்துக் கொண்டே பாயில் இருந்து எழுந்தான்.. தலைக்கு மேலே ஒரு பாறாங்கல்லையே வைத்தது போல் ஒரு பாரம் அழுத்தியது. வெளியே வந்து பார்த்தான்; இன்னும் முழுவதுமாக விடியவில்லை..
அத்தனை நேரத்திலும் “பொடு பொடு” வென்று எங்கோ தூரத்தில் பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.. பெரியவன் கையில் பாலித்தின் பையை வைத்திருந்தான். அந்தப் பையில் முந்தைய இரவு வெடிச் சரத்தில் இருந்து உதிர்த்த பட்டாசுகளை நிரப்பியிருந்தான்..
“யேய்.. தம்பிக்கும் கொடேண்டா…” வாயில் லேசாக கசப்பாக உணர்ந்தான். ‘இதென்னடா எழவு.. காய்ச்சலோ..?’ என்று நினைத்துக் கொண்டான்.
“அப்பா.. அவன் பத்த வெச்சிட்டு பக்கத்திலேயே நிக்கிறான்.. வெடிக்கவே தெரியலெ” என்று திரும்பிப் பார்க்காமலேயே குரல் கொடுத்தான் பெரியவன்.
“ரெண்டு பேரும் மொதல்ல பல்லு வெளக்கிக் குளிச்சிட்டு வாங்க; உங்கம்மா எங்கெ போயிருக்கா?” உள்ளே திரும்பிப் பார்த்தான்; கமலத்தைக் காணவில்லை..
“இன்னிக்குத் தண்ணி வர்ற நாளு..” இதற்கும் பெரியவன் திரும்பிப் பார்க்கவில்லை..
“சண்ட போடாம வெடிங்க” என்று விட்டு பந்தலடியில் சார்த்தியிருந்த சைக்கிள் கேரியரில் குடம் கட்டும் தாம்புக் கயிரை சொருகிக் கொண்டு
பெருமாள் கோயிலை நோக்கி அழுத்த ஆரம்பித்தான்.
கோயில் கருவறைக்கு நேர் எதிரே தான் வீதி பைப் உள்ளது. அந்த அதிகாலை மூன்று மணிக்கு பைப்பில் அவ்வளவாக கூட்டமில்லை. கமலம் வீட்டிலிருந்த ஐந்து ப்ளாஸ்டிக் குடங்களுடனும் அங்கே நின்றிருந்தாள்.. அவர்கள் தெருவில் இருந்த வேறு சில பெண்களும் அவர்கள் கனவன்மார்களுமாக அங்கே ஒரு சின்னக் கூட்டம் இருந்தது.
“என்னெ எழுப்ப வேண்டியது தானே?’ என்றபடியே சைக்கிளை ஸ்டாண்டு போட்டான் துரை..
“மேலெல்லாம் கொதிச்சிட்டிருந்தது.. அனத்திட்டு இருந்தீங்க. அதான் ரெவ்வெண்டா நானே கொண்டாந்திரலாம்னு வந்தேன்..” அவளும் இன்னும் குளித்திருக்கவில்லை..
“ம்ம்ம்ம் நல்லா தலைய வலிக்குது. ஒரே பாரமா இருக்கு”
பெருமாள் கோயிலில் இருந்து மணிச்சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர் – அந்த காலை நேரத்திலேயே கீழ்தெரு உஷா மாமியும் அவரது மருமகளும் எண்ணை தேய்த்துக் குளித்து விட்டுக் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தனர். பெருமாளும் அவர் சம்சாரமும்
அணிந்திருந்த பழைய துணிமனிகளை குருக்கள் எடுத்து வந்து பந்தல் மேல் எரிந்து விட்டு புதிதாய் பட்டுப் பீதாம்பரமும், பச்சைப் பட்டையும்
உஷா மாமியிடம் இருந்து வாங்கிக் கொண்டு உள்ளே கருவறைக்குள்ளே நுழைந்தார்..
“யோவ் உனுக்கு ஏன்யா இந்த வருசம் துணியெடுக்கல” அவளுக்கு எடுக்காததை அவள் கேட்கவில்லை
“இதுக்கே கடன்; நமக்கு பொங்கலுக்குப் பாத்துக்கலாம்” அவளுக்கும் சேர்த்தே பதில் சொன்னான் துரை
“நாம என்ன பெருமாளா.. ஊரான் எடுத்துக்குடுக்க” பச்சைப் பட்டின் பளபளப்பு இன்னும் அவள் கண்ணுக்குள்ளேயே நின்றது.
தாம்புக்கயிரில் கட்டி இரண்டு குடங்களை பக்கங்களுக்கு ஒன்றாய் தொங்கவிட்ட துரை, மூன்றாவதை கேரியரின் மேல் வைத்தான். கமலம் இடுப்பில் ஒன்றை ஏற்றிக் கொண்டு,
“விஜயாக்கா, இதக் கொஞ்சம் தலைக்கு ஏத்திக் கொடேன்…” என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்டாள்..
அங்கே சின்னவனும் பெரியவனுமாக எதை யார் வெடிப்பது என்கிற சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர். துரை பட்டாசுச் சண்டைகளில் கலந்து கொள்ளவில்லை இந்த சின்னச் சின்ன சண்டைகளாவது அவர்களின் உலகத்தை சுவாரசியமாக வைத்திருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான். கமலம் பாய்கடையில் இருந்து அனாசின் வாங்கி வந்து கொடுத்தாள். உப்புமாவைத் தின்று விட்டு மாத்திரை போட்டுப் படுத்தவன் மதியம் தான் எழுந்தான். சின்னவனுக்கு மதியத்திற்குப் பின் முகம் சுருங்கி விட்டது; வெடிகளெல்லாம் அனேகமாக தீர்ந்து விட்டது. இன்னும் புஸ்வானமும் சங்குச்சக்கரமும் தான் மீதமிருந்தது..
காலையில் போலில்லாமல் மதிய நேரத்தில் பட்டாசுச் சத்தங்கள் குறைந்து விட்டது. ‘எல்லோரும் டீ.வி முன் ஒக்காந்துட்டானுவலா இல்லை நம்ம கேசு தானா’ என்று நினைத்துக் கொண்டான் துரை. அவ்வப்போது எங்கோ தூரத்தில் வெடிக்கும் பட்டாசுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் சின்னவன் ஏக்கமாய் துரையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.
“யப்பா.. நாளிக்கி நம்ப வீட்டு மின்னே தானே பட்டாசுக் காயிதம் நெறயக் கெடக்கும்?..” சந்தேகமும் ஏக்கமுமாகக் கேட்டான் சின்னவன்.. துரை பதில் சொல்லாமல் அவனையே பார்த்தான்,
“சொல்லுப்பா.. மத்தப் பயங்கெல்லாம் என்னெக் கிண்டல் பண்ணுவாங்கப்பா..”
துரைக்கு உடல் வலியைத் தாண்டி உள்ளே வலித்தது.. சின்னவன் இன்னும் வீடு என்னும் கருவறைக்குள் அமைதியாக உறங்கும் குழந்தையாகவே இருந்தான். அவன் சமுதாயத்துக்குள் நுழையும் பிரசவகாலம் இன்னும் வரவில்லை. அவனது உலகம் அவனோடு இன்னும் பெரிதாக முரண்படவில்லை.. கூழாங்கற்களை அவன் இன்னும் அரிய வைரங்களைப் போல சேகரித்து வைக்கும் நாட்களில் தான் இருந்தான்.”பெரியவர்களின்” உலகத்தோடான அவன் முதல் சந்திப்பை இவன் எப்படி தாங்கிக் கொள்ளப்போகிறானோ.. இன்னும் எத்துனை நாட்களுக்கு இவனை இப்படியே அடைகாக்க முடிமோ என்றெல்லாம் நினைக்கையில் துரைக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. தான் ஒரு குறைப்பிரசவக் குழந்தையாகவே சமுதாயத்துக்குள் திணிக்கப்பட்டதை எண்ணிப்பார்த்தான்; அதுவே இன்று தன்னை கெட்டிப்படுத்தி வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்.
வீட்டுச் சூழலும் வீட்டைச் சுற்றி இருக்கும் சூழலும் இன்னும் சின்னவனை மாசுபடுத்தியிருக்கவில்லை. சைக்கிள் ஓட்டும் துரை அவனுக்கு ஒரு பெரிய அதிசயமாகவும் ஒரு நாயகன் போலவும் தோன்றினான். ஆனால் பெரியவனுக்கோ கொஞ்சம் போல புரிய ஆரம்பித்து விட்டது; அவன் சமுதாயத்துக்குள் பிரசவிக்கப்பட்டு விட்டான். “காம்ப்ளான் பையன்களை” விளையாட்டு மைதானங்களில் பார்த்திருக்கிறான். தான் இன்னும் பழையகஞ்சி பையனாகவே இருப்பது ஏன் என்கிற கேள்வி அவனுக்குள் தோன்ற ஆரம்பித்து விட்டது. புதுமணம் மாறாத புத்தகங்களை சுமந்து வரும் பையன்களிடையே அரைவிலைக்கு வாங்கிய பழைய புத்தகங்களையே தான் இன்னும் சுமந்து செல்லும் நிலைமை ஏன் என்பது புரியத்துவங்கிய போது அவன் அமைதியாகிவிட்டான். அவனது அந்த உலகம் அவனை ஊமையாக்கி விட்டது. எப்போதும் ஏதோவொன்றைப் பேசிக்கொண்டிருக்கும் தம்பியை அவன் இப்போதெல்லாம் கரிசனமாகப் பார்க்கிறான். அவனுக்குத் தெரியும் சீக்கிரம் சின்னவனும் ஊமையாக்கப்படுவான் என்று.
மாலை இருள் கவிந்ததும் சின்னவன் முகத்தில் மீண்டும் கொஞ்சம் ஒளி வந்தது. கொஞ்சம் நேரம் மிஞ்சிய பட்டாசுகளில் சிலவற்றை மட்டும் கொளுத்தியவன் பாதி வெடிகளைஒரு கவரில் போட்டுக் கட்டி அட்டாலியில் போட்டான்..
“அதையேண்டா மிச்சம் வைக்கிறே.. கொளுத்தித் தீர்க்க வேண்டியது தானே?” கமலா பஜ்ஜிக்காக வாழைக்காயை நீள்வாக்கில் அரிந்து கொண்டே கேட்டாள்.
“அதெல்லாம் காத்தியை தீபத்தன்னிக்கு வெடிக்கப் போறன்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டே பதில் சொன்னான்.. ‘அன்றைக்கு நீயென்ன புதிதாய் வாங்கித் தரவா போகிறாய்?’ என்ற குத்தல் கேள்வி அந்த பதிலில் ஒளிந்திருந்தது..
“ம்ம்ம் இவனுகளுக்கு கஷ்ட்டந்தெரியாம வளக்குறது எங்கே கொண்டு போய் விடுமோ” என்றாள் துரையைப் பார்த்துக் கொண்டே.. அதனை அவன் கண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
“எத்தினிக் காசு… எல்லாம் ஒரே ஒரு நா கூத்துக்குக் கரியாப் போச்சி..ஆமா இத்தினியும் வாங்கக் காசு ஏதுய்யா??”
“பெரிசு கிட்டே கைமாத்து வாங்கினேன்” எப்படித் திருப்பிக் கொடுப்பது என்கிற கேள்வி முட்டிக்கொண்டு கிளம்பியது. இன்னும் இதற்கு எத்தனை நாட்கள் மதியவேளையை போண்டாவோடு சமாளிப்பது என்று கணக்குப் போடத்துவங்கினான்.
காலையில் சீக்கிரம் எழுந்து விட்டதால் பொடியன்கள் இருவரும் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு சீக்கிரமாகவே தூங்கப் போய் விட்டனர். துரைக்கு ஏமாற்றமாய் இருந்தது. எப்போதும்
இவன்களிருவரும் எழுந்திருக்கும் முன்பே சந்தைக்குக் கிளம்புபவன், அவர்கள் உறங்கிய பின் தான் வீடு சேர்வான். வருடத்திற்கு ஓரிரு நாட்களில் தான் தனது மகன்களை அவனால் பகல் வெளிச்சத்தில் பார்க்க பேச முடியும்.. ஞாயிறு சனியென்று வார ஓய்வு நாளே இல்லாத ஓட்டம் அது.. வாழ்க்கை துரையை துரத்திய துரத்தலில் வயிற்றை சமாளித்த நேரம் போக மகன்களுடன் கொஞ்சி விளையாடவெல்லாம் நேரத்தை அவனுக்கு மிச்சம் வைக்கவில்லை. துரையைப் பொருத்தளவில் ஓய்வு என்பது உறக்கம் தான்; உறக்கம் என்பது மயக்கம் தான். ஒவ்வொரு நாள் படுக்கையில் விழும்போதும் மறுநாள் விடியும் என்பது மட்டும் தான் அவனுக்கு அச்சமாக இருந்தது.
திடீரென ஏதோ பேச்சு சப்தம் சப்தம் கேட்டு துரை திரும்பிப் பார்த்தான், சின்னவன் ஏதோ உளரிக் கொண்டிருப்பது கேட்டது… “நாங்க தான் நெறய வெடிச்சம்….” துரைக்கு திடீர் என்று தான்
அது உறைத்தது. சட்டென்று எழுந்து வீட்டு முற்றத்திற்குப் போய் பார்த்தான்.. அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்ததில் இங்கே கொஞ்சம் பட்டாசுக் காகிதங்கள் குறைவாக இருப்பதாகப் பட்டது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்து எவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டான்.. அப்படியே தெருக்கோடி வரை ஒரு நடை சென்று ஆங்காங்கே காற்றில் குமித்துக் கிடக்கும் சிதறிய காகிதங்களை சேகரித்து வீட்டு முன் பரப்பி வைத்தான். வாசல்படிக்கு மீண்டும்
வந்து அங்கேயிருந்து ஒரு தரம் சுற்றிப் பார்த்தான், திருப்தியாக இருந்தது.. ‘ராத்திரி காத்து அடிச்சித் தொலைக்கக் கூடாதே’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்..
காலையில் மீண்டும் தனது ஓட்டத்தைத் துவங்க வேண்டியிருப்பதை நினைத்துக் கொண்டே பாயில் சரிந்தவன் கண்களை மூடினான்..
அதுவரையில் இருந்த இருள் மறைந்தது..
- Kaargi
-
அண்மை
- உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்..!
- மாற்றம் தேவை வலைப்பதிவு குறித்து!
- நான் கடவுள் விமர்சனம்
- இந்துத்துவா கிரிமினல்களும் பிங்க் ஜட்டிகளும்!
- அல்பைத்தனத்தின் ஜீவகாருண்யம்..!
- பார்ப்பனியத்தின் இருப்பு!!
- ஒரு நாடோடியின் நினைவிலிருந்து..!
- சலிப்பு-ஆத்திரம்-அருவெறுப்பு-இலக்கியவாதிகள்!
- முதலாளித்துவம் நடத்தும் பாடம்
- அடிக்கடி காதில் விழுந்த பேச்சுகள்..
- ஒரு தேவதையின் மரணம்…!
- மன்மோகன் சிங் என்னும் பொய்யர்
-
இணைப்புகள்
-
தொகுப்புகள்
- செப்டம்பர் 2009 (1)
- மார்ச் 2009 (1)
- பெப்ரவரி 2009 (2)
- டிசம்பர் 2008 (1)
- நவம்பர் 2008 (2)
- அக்டோபர் 2008 (3)
- செப்டம்பர் 2008 (2)
- ஆகஸ்ட் 2008 (1)
- மே 2008 (5)
- டிசம்பர் 2007 (3)
- நவம்பர் 2007 (2)
- அக்டோபர் 2007 (8)
-
வகைகள்
-
RSS
வரவுகள் RSS
மறுமொழிகள் RSS