கார்க்கியின் பார்வையில்

முதலாளித்துவம் நடத்தும் பாடம்

சமீபமாக காரசாரமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு செய்திகள் நாம் ஏற்கனவே படித்த சில பாடங்களை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

செய்தி 1) யானைக்கால் வியாதிக்காரனின் காலைப் போல செயற்கையாக வீங்கிப் பெருத்த அமெரிக்கப் பொருளாதாரம் ஊசி பட்ட பலூன் போல வெடித்துச் சிதறியதில் சில கம்பெனிகள் ’நட்டமடைந்தது’. அந்தக் கம்பெனிகளை நட்டத்தில் இருந்து காக்க அதிரடியாக களமிறங்கிய அமெரிக்க அரசு, ஜெனரல் வார்டில் இருந்து எமர்ஜென்ஸி வார்டுக்கு மாறி இருக்கும் முதலாளித்துவ நோயாளியை காப்பாற்ற 700 பில்லியன் டாலரை குளூக்கோஸாக இறக்கியிருக்கிறது. இந்தக் கம்பெனிகள் பெரும்பாலும் நிதிமூலதனம் ஊகவனிகம் போன்ற ஊரான் காசை உள்ளே விட்டுக் கொள்வதன் மூலம் முன்பு பெரிய அளவில் தேட்டை போட்ட கம்பெனிகள் தான்.

அப்படியானால் முன்பு சம்பாதித்த லாபம் இப்போ எங்கே போச்சு? யாரிடம் போச்சு? அந்த லாபமெல்லாம் அந்நிறுவனங்களின் தலைப்பீடங்களில் இருக்கும் ஓரிருவரின் சட்டைப்பைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும். இப்போது நட்டத்தில் இருந்து காப்பாற்ற வாரியிறைக்கப்படுவது - மக்கள் பணம்!

செய்தி 2)க்கு போகும் முன் ஒரு சின்ன ப்ளாஷ் பேக் - கஞ்சிக்கே வக்கில்லாத இல்லாத மக்கள் சைக்கிளில் பயணம் செய்து அல்லலுறுவதைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடித்த ரத்தன் டாடா, அவர்கள் பாதுகாப்பாக பயனம் செய்ய வேண்டுமே என்கிற உயர்ந்த நோக்கில் ஜஸ்ட் ஒரே ஒரு லட்சம் ரூபாய்க்கு கார் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். இந்த முடிவை கேட்டதும் இந்தியாவில் ஏழைகளின் ஒரே பங்காளனாக இருக்கும் காமரேட்டுகள் இன்னும் விவசாயத்தை நம்பி பிழைத்துக்கிடக்கும் சில முட்டாள் விவசாயிகளிடமிருந்து ஒரு ஆயிரம் ஏக்கர் நிலத்தை பிடுங்கி ரத்தன் டாடாவுக்கு தானமாகக் கொடுத்தார்கள்.

காமரேட்டுகளின் நல்ல உள்ளத்தையும் ரத்தன் டாடாவின் இளகிய மனதையும் புரிந்து கொள்ளாத அந்த முட்டாள் விவசாயிகள் பொங்கிய எழுந்து டாடாவின் பின்புறத்தில் எட்டி உதைத்ததில் மேற்கு வங்கத்திலிருந்து தூக்கியெறியப்பட்டு விட்டார். அப்படி தூக்கியெறியப்பட்டவர் நம் மாநிலத்தில் விழ மாட்டாரா என்று மற்ற மாநில முதல்வர்கள் இன்னும் அன்னாந்து பார்த்துக் கிடக்கிறார்கள்.

இப்போ செய்தி 2) அந்திரத்தில் வந்து தனது கனவுக் காரை – இல்லையில்லை – ஏழைகளின் கனவுக்காரை தயாரிக்க டாடா போட்டிருக்கும் ஒரு முக்கிய நிபந்தனை – அவர்கள் சிங்கூரில் கூடாரத்தைக் கலைத்த வகையில் ஏற்பட்ட நட்டத்தை ஆந்திர அரசு ஈடு கட்ட வேண்டும் என்பது – அதாவது மக்கள் பணம்!

இந்த இரண்டு செய்திகளின் மூலமும் நமக்கு முதலாளித்துவம் நடத்தும் பாடம் என்னவெனில் – லாபம் தனியுடைமை! நட்டம் பொதுவுடைமை!

இது குறித்து டெக்கான் க்ரோனிக்கலில் வெளியான செய்தி கீழே –

Nano in AP if Singur loss is paid by state
BY B. KRISHNA PRASAD

Tata Motors is ready to relocate its Nano project to Andhra Pradesh if the government pays for the loss that the company incurred in shifting out of Singur. Tata Motors officials put the figure at Rs 700 crore.
The Chief Minister, Dr Y.S. Rajasekhar Reddy, offered to compensate the loss “to some extent”, about Rs 300 crore.
“The issue of relocation cost got highlighted during the talks,” said a official in the industries department. “Though they had indicated this issue before their visit to the state, we did not anticipate that they were so serious about it.” The government offered cent per cent VAT exemption for the plant, which would work out to more than Rs 100 crore a year and even give land to ancillary units.
With the Tata delegation insisting on total compensation, a visibly disturbed Chief Minister asked his officers not to bother to stretch out for the project.
By Monday evening, Tata Motors officials went “out of contact” with officials of the Chief Minister Office. “The message is clear, they don’t want to talk at this juncture,” said a CMO official.
Earlier on Monday morning, the Tata Motors delegation visited the Vargal mandal in Medak district, about 50 km from the city, to inspect an alternative site. The government offered 600 acres immediately and another 650 acres after acquisition.

அக்டோபர் 7, 2008 பதிந்தவர் kaargipages | medias, politics | | 3 மறுமொழிகள்

Do we have a choice?

கருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுடைய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.

இதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள்? எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது? இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன?

உதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும்? வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,
கள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறுதிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை!

அறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு
கோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.

வேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்
இதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.

நேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு
உல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.

இவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்
சிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.

இனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise! எப்படி? -

ஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்
செய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை
கொண்ட சூத்திரர்கள்.

தெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று
அனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.

உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!

அக்டோபர் 21, 2007 பதிந்தவர் kaargipages | culture, medias | , | 2 மறுமொழிகள்

ஊடகங்களும் வாழ்க்கையும்!

கார்கில் போர் நினைவிருக்கிறதா? அந்த சமயத்தில் நாடெங்கிலும் பொங்கி வழிந்த “தேசபக்தி”யை எவரும் மறந்திருக்க மாட்டோ ம். ஒரு போரின் பின்னேயும் அதன் வெற்றியின் பின்னேயும் இந்திய ராணுவத்தின் அயோக்கியத்தனங்களும், உள்ளே புளுத்து நாறிக் கொண்டிருந்த ஊழலும் எப்படியெல்லாம் மறைக்கப் பட்டது என்பதையும் நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. இதனையெல்லாம் ஊதி ஊதி எறிய வைத்தது ஊடகங்களே. பாவம் அவர்களுக்கு இப்போதெல்லாம் தங்கள் வியாபாரத் திறனையும் மார்கெட்டிங் யுக்தியையும் காட்ட போர் எதுவும் நடக்கவில்லை.. ஆனாலும் ஒரு போருக்கு உரிய அத்துனை வெறி/பரபரப்பையும் ஒரு விளையாட்டுப் போட்டிக்குள் திணித்து விட தங்களால் முடியும் என்பதையும், “இந்தியர்களை” ( இந்துக்களை என்று
புரிந்து கொள்க) உசுப்பேத்தி விட முடியும் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை
எதிர்த்து ஆடி வென்றது. இது ஒன்று போதாதா? இந்திய அணி நாடு திரும்பியதும் மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று வரவேற்ற காட்சி ஆங்கில செய்தி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதில் நம் கவனத்துக்குறியது என்னவென்றால், “ரசிகர்களில்” பலர் காவி நிறக் கொடியுடன் விளையாட்டு வீரர்களை வரவேற்றது தான். நான் வசிக்கும் பகுதியில் இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் இரவு, தேனீர் அருந்த நான் வெளியே சென்றிருந்தேன். இருசக்கர வாகனங்களில் வெறிக்கூச்சலுடன் சில ரசிகர்கள் ரவுண்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு ரம்ஜான் மாத இரவு. அதே நேரத்தில் ஊரெங்கும் பிள்ளையார் சதுர்த்திக்காக சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி. வாகனங்களில் வந்த ரசிகர்கள் தலையில் காவி நிறத் துணியையும் கையில் காவிக் கொடியையும் கொண்டிருந்தனர். இரவுத் தொழுகை முடிந்து
தெருக்களில் கூடி பேசிக் கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் கண்டதும் பைக்குகளில் வந்த காலிகளின் வெறி அதிகமானது. வாகனத்தை நிறுத்தி, “பாரத் மாதா கீ ஜே” “பாக்கிஸ்த்தான் டவுன் டவுன்” என்ற கத்திவிட்டு நகர்ந்தனர்.

இந்திய விளையாட்டு அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியானது இந்துக்கள் முஸ்லீம்களை வென்றதன் குறியீடாக இவர்கள் பாவிக்கிறார்கள். இந்தக் கூச்சல்களினூடாக முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களில்லை என்பதையும், இந்தியா என்பது ‘இந்து’யா எனபதையும் பதியவைக்க முயற்சிக்கிறார்கள். நாளிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புச் செய்திகள் வரை இப்படியான ஒரு சித்திரத்தைத் தான் உருவாக்கி விட்டுள்ளது.

ஒரு விளையாட்டில் கிடைத்த வெற்றிக்குப் பின்னால் ஏன் இத்தனை ஒரு வெறி?

ஒரு விளையாட்டை விளையாட்டு என்பதாக அல்லாமல் அதற்கும் மேலானதொரு கவுரவப் போர் என்கிற அளவுக்கு அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உடல் திறனை வெளிப்படுத்தும் வேறு விளையாட்டுகள் முக்கியத்துவம் இழந்ததற்குக் காரணம் இந்த ஊடக வெறியூட்டிற்கு அப்பால் இருக்கிறது. அந்தக் காரணங்களை விவாதக் களத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதே இந்த கிரிக்கெட் வெறியூட்டலின் மூலம் ஊடகங்கள் சாதித்ததாகும்.

இங்கே என்பது சதவீதத்துக்கும் மேலான மக்கள் உயிர் பிழைத்துக் கிடக்கவே உணவு என்கிற நிலையில் இருக்க, இவர்கள் உடல்திறன்
சார்ந்த வேறெந்த விளையாட்டிலும் ஈடுபடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இன்று நாளிதழில்( 15/10/2007 டைம்ஸ் ஆப் இந்தியா )
வெளியான செய்தியின் படி இந்தியக் குழந்தைகளில் 40% பேர் பட்டினியுடன் தான் தினசரி உறங்கப் போகிறார்கள். விளையாட்டுகள் என்பதும் உடல் திறனைக் கூட்டும் பயிற்சி என்பதும் சுமார் 20% குறைவான உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கு ஊதிப் பருத்த தொப்பையைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்று என்றாகிப் போய் விட்டது.

இதனை மறைக்கும் விதமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமான சிறு நகரங்களில் இருந்து உருவான, “புகழ்” பெற்ற வீரர்களை முன்னிறுத்துவதும், கிரிக்கெட்டின் மேல் அதீதமாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள்/ கட்டுரைகள் வெளியிடுவதும் ஆகும். தினசரி வாழ்க்கையையே போராட்டமாக வாழும் மக்களின் வாழ்க்கைப் போரை மறைக்கவே விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு போரின் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“ஏன் இந்தியாவில் பரவலாக மக்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை?” என்னும் கேள்விக்குள் புகுந்தால் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலங்களுக்கு “கசக்கும்” உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே அந்தக் கேள்வி மிகத் தந்திரமாக அழுத்தப்படுகிறது. பாக்கிஸ்தானை இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் அந்நாட்டை போரில் வென்றது போல வெளியாகும் செய்தியின் கூச்சலில், அந்நாட்டு மக்களில் பட்டினியில் வாடுவோர் இந்தியாவை விட சதவீத அளவில் குறைவு ( அதே செய்தியின் படி) என்பது மறைந்து விடுகிறது.

சென்செக்ஸ் பதினெட்டாயிரம் புள்ளிகள் கடந்து பாய்வதன் மேல் பாய்ச்சப்படும் ஊடக வெளிச்சத்தில் கண்கள் கூசும் மக்கள், இதே நாட்டில் 77 கோடிப் பேர் அரசாங்க கணக்குப்படியே நாளொன்றுக்கு இருபது ரூபாய்களுக்கும் குறைச்சலான தொகையில் வாழ்க்கை நடத்துவதை காணத்தவறுகிறார்கள் -தவற வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் உயரும் சென்செக்ஸ் புள்ளிகள் யாருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது? நாட்டின் நிதிமந்திரியே
“என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி உயர்கிறது என்பதும் தெரியவில்லை. கவலையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.” என்று “ஒன்னுமே புரியல உலகத்திலே…. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” என்று விரக்தியுடன் உளரிக் கொண்டிருப்பதும் எவர் கவனத்தையும் பெறவில்லை - அப்படி கவனத்தைப் பெற இவர்கள் விடுவதும் இல்லை.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் புளுத்துப் போன கோதுமையில் செய்யப்பட்ட “லால் ரொட்டியை” தின்பது இவர்களின் கவுரவத்துக்கும் போலிக் கரிசனத்துக்கும் உறுத்தலாய் இருந்திருக்கும் போலிருக்கிறது. போன வாரம் காட்டப்பட்ட இது தொடர்பான செய்திகளில், இதற்குக் காரணமான தானியக் கொள்முதல் கொள்கைகளையும், அதன் காரணமாய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளையும் பற்றி பேச்சு மூச்சே இல்லை. தெருவில் அலையும் பிச்சைக்காரணைப் பார்த்து சொல்லப்பட்ட “அச்சச்சோ”வின் தொனியே மேலோங்கி இருந்தது. குறைந்த பட்சம் இவர்களும் நம்முடைய “இந்தியாவில்” தான் வாழ்கிறார்கள் என்பதாகவும் கூட பதிவு செய்யப்படவில்லை.

மொத்தத்தில் ஒரு யுப்பி வர்க்கத்து இளைஞனுக்கு எப்போதாவது - ஒரு விபத்து போல - மேலெழும் கேள்விகளை மொன்னையாக்குவதும், அவன் எப்போதாவது நிதர்சனத்தைக் கண்டு திகைத்து நிற்கும் போது சமாதானப்படுத்திக் கொள்ள காரணங்களைத் தருவதும் தான் இந்த செய்திகளின் நோக்கமாக இருக்கிறது.

நம்மைப் பொருத்த வரையில், அவன் காட்டுவது நம்முடைய நாடு அல்ல! அவன் பேசுவது நம்முடைய பிரச்சினைகளை அல்ல! அவன் தரும் சித்திரம் நம்முடைய வாழ்க்கைச் சித்திரமல்ல!

அக்டோபர் 15, 2007 பதிந்தவர் kaargipages | culture, medias | , | 2 மறுமொழிகள்