கார்க்கியின் பார்வையில்

தீப-இருள்!

எல்லோர் வீட்டிலும் ஒளியேற்றும்
சிவகாசித் தீக்குச்சிகள்
சிவகாசிச் சிறுவனின் வீட்டிலோ
இருளை ஏற்றுகிறது

உறக்கமறியாத கரங்கள் சுற்றிய
முறுக்கு தொண்டையில்
முள்ளாய் இறங்குகிறது.

எங்கள் சிவகாசிப் பொடியன்
சுருட்டிய பட்டாசின் சிதறும்
ஒலியில் அவன் வாழ்வின்
சிதறல் ஒலி கரைந்தே போனது..

போராட்டத்தின் மெல்லிய ஒலியைக்
கேட்கும் வலிமையை காதுகள் இழந்து விட்டது -
பட்டாசின் வலுத்த சப்தங்கள் அதனை
உறுதிப்படுத்தி ஒலிக்கிறது!

இரவு பகலாய் தையல் இயந்திரத்தின்
பெடலை மிதித்த எங்கள் தோழனின்
கழண்டு போன மூட்டுகளுக்கு
எண்ணைக் குளியல் வேண்டாம்
ஒரு நாள் ஓய்வும்
குவாட்டர் ஓல்டு மங்கும் போதும்

புதுத் துணியின் நாற்றத்தில் மறைகிறது
பருத்தியறுத்தவனின் வியர்வை மணம்

கொன்று கெடுத்தான் கிருஷ்ணன்-
மறுநாள் ஓவர் டைம் செய்கிறார்கள்
துப்புரவு தொழிலாளிகள்

-kaargi

அக்டோபர் 29, 2007 பதிந்தவர் kaargipages | culture | | 2 மறுமொழிகள்

மோடியின் ராம ராஜ்ஜியம்

சில நேரங்களில் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி முடிக்க வார்த்தைகளைத் தேட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. ஆயிரக்கணக்கான கட்டுரைகள் இந்துத்துவ பாசிஸ்டுகளை கண்டித்தும் அம்பலப்படுத்தியும் எழுதப்பட்டிருக்கும்.. ஆனாலும் உண்மைகளை ஒவ்வொரு முறை நேரடியாக பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வார்த்தைகள் செத்துப் போகிறது. இதை எழுதும் போதோ கைகள் நடுங்குகிறது. இந்த பாசிஸ்ட் நாய்களின் குடலை உருவும் வாய்ப்புக் கிடைக்காதா என்று ஆற்றாமையில் தொண்டை விம்முகிறது. இந்த நாய்களைப் பாதுகாத்து நிற்கும் இந்த நீதி மன்றங்களையும்,
அரசு இயந்திரத்தையும் நொறுக்கித் தள்ள முடியவில்லை இன்னும் என்கிற உண்மையால் வெட்கம் வருகிறது.

எல்லோருக்கும் தெரியும் நரேந்திர மோடி என்னும் கொலைகாரன் இரண்டாயிரத்தியிரண்டில் எப்படியெல்லாம் முஸ்லிம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தான் என்று. எத்தனையோ கட்டுரைகள் எழுதப்பட்டு விட்டது. எத்தனையோ முறை காறித்துப்பியாகி விட்டது.
ஆனால் நம்மால் இது மட்டும் தான் முடிந்திருக்கிறது என்பது எத்தனைக் குறைவானதொன்று என்பது நேற்று தெகல்கா பத்திரிக்கை குஜராத்தின் கொலைகாரர்களின் பெருமிதம் ததும்பும் பேச்சுக்களை அம்பலத்திற்கு கொண்டுவந்தபோது புரிந்தது.

அந்தக் கொலைகள் வெறும் ஆத்திரத்திலோ சொந்த விவகாரங்களுக்காகவோ நடத்தப்பட்ட கொலைகள் அல்ல. அது ஒரு இன அழிப்பு! நேற்றுக் காண நேர்ந்த வீடியோக் காட்சி ஒன்றில் இந்துத்துவ வெறியன் ஒருவன் எப்படி கர்பவதியான ஒரு முஸ்லிம் பெண்மணியின் வயிற்றைக் கிழித்து இன்னும் உலகத்தைக் கூட
காணாமல் உறங்கிக் கிடந்த கருவை வெளியே எடுத்து கிழித்து எறிந்தோம் என்று சொன்னதைக் கேட்ட போது இந்த பாசிஸ்டுகளையும் இவர்கள் இந்த முறையில் அமைக்கப் போவதாய் அறிவித்திருக்கும் இராம ராஜ்ஜியத்தையும் இவர்கள் நாயகனான இராமனையும் இவர்கள் காட்டிய கொடூரத்தைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு கொடூரத்தைக் காட்டி எதிர்த்தழிக்க வேண்டியதன் அவசியம் மண்டையில் உறைக்கிறது.

தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸைச் சேர்ந்த ஒரு வயதான முஸ்லிம் பிரமுகரின் வீட்டுக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர் சில முஸ்லிம்கள். அந்த வீட்டை நாலாபுறமும் இருந்து சுற்றி வளைத்துக் கொண்ட இந்து வெறியர்கள், சுற்றிலும் தீ மூட்டி இருக்கிறார்கள். அந்தப் பிரமுகர் “வேண்டுமானால் பணம் கொடுக்கிறேன். தயவு செய்து எங்களைக் கொல்ல வேண்டாம்” என்று கெஞ்சி இருக்கிறார். “சரி பணத்தைக் கொடு விட்டு விடுகிறோம்” என்று கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். அவர் வெளியே வந்ததும் ஒருவன் அவரை உதைத்துக் கீழே தள்ளி இருக்கிறான். ஒருவன் அவர் கால்களை வெட்டியிருக்கிறான். நான்கைந்து பேர் சேர்ந்து அவரை தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள். ஒருவன்
அவன் இரண்டு கைகளையும் வாளால் துண்டித்திருக்கிறான். பின்னர் அவருடைய பிறப்புறுப்பு அறுத்தெறியப்பட்டிருக்கிறது…. கடைசியில் அவரை உயிரோடு எரித்துக் கொன்றிருக்கிறார்கள்.
இத்தனையையும் செய்தவர்கள், தெகல்காவின் காண்டிட் காமெராவின் முன் மிகவும் பெருமிதமாகச் சொல்லிப் பூரித்துப் போகிறார்கள்.

ஒருவன் தன்னுடைய மனைவியை அருகில் வைத்துக் கொண்டு சொல்கிறான், “முஸ்லிம் பெண்கள் பழங்களைப் போன்று இருந்தார்கள்… நாங்களெல்லாம் சுவைத்தோம்… வேண்டுமானால் வி.ஹெச்.பி ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களைக் கேட்டுப் பாருங்களேன்; அவர்களும் கூடத்தான் சுவைத்தார்கள். இதோ என் எதிரே சாமிப் படம் இருக்கிறது, என் அருகே என் மனைவி  இருக்கிறாள்.. நான் பொய் சொல்ல மாட்டேன்; நானும் கூட ஒருத்தியை சுவைத்தேன்.. பின் அவளைக் கொன்றேன்” இவர்களுக்கு நல்ல சாவு வருமா? இவர்கள் இன்னும் உயிரோடு அலைவது என்பது மானமும் ரோஷமும் உள்ள நாகரீக மனிதன் எவனால் பொருத்துக் கொண்டிருக்க முடியும்?
இவர்கள் இந்து ராஷ்டிரம் அமைக்கப் போகும் முறை இது தான்.

இதோ இது தான் ராம ராஜ்ஜியம்! இதைத்தான் இந்துத்துவ இயக்கங்கள் அமைக்கப்போவதாக சொல்கிறார்கள். இவர்களின் நாயகன் தான் ராமன். இவர்களைத்தான் தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆதரிக்கிறாள். இவர்களைத்தான் ஒரு மாநிலத்தின் அத்துனை அரசு இயந்திரமும், அரசாங்கமும் பொத்திப் பொத்திப் பாதுகாத்தது. இவர்களில்
ஒருவனான பாபு பஜ்ரங்கி என்பவனுக்குத் தான் நரேந்திர மோடி மவுண்ட் அபு என்னும் இடத்தில் இருக்கும் குஜராத்தி பவனில் ஐந்து மாதம் அடைக்கலமும் கொடுத்து, பின்னர் மூன்று நீதிபதிகளை மாற்றி விடுதலை செய்வித்தான். மேலே விவரிக்கப்பட்டிருக்கும் சம்பவங்கள் நூறில் ஒரு சதவீதம் கூடக் கிடையாது. மேற்கொண்டு விவரிக்க எனக்கு மனதிடமும் கிடையாது.. ஆனால் இதைத்தான் இந்துக்களின் பதிலடி என்று அன்றைக்கு ஜெயலலிதா சொன்னதோடு மோடியை ஆதரித்து அறிக்கையும் விடுத்தாள்!

ஒட்டுமொத்த கொலைகளையும் பின்னிருந்து இயக்கியது மோடி. அத்தனைக் கொலைகளையும் மூடி மறைத்தது அம்மாநிலத்தின் அரசு இயந்திரங்களான நீதித்துறை, காவல்துறை. பொய் சாட்சிகளை உருவாக்கியது அரசு வழக்கறிஞர்கள்.. அதனை ஊக்குவித்தது நீதிபதிகள். தெளிவாகத் தெரிகிறது இந்த அரசு இயந்திரங்கள் யாருக்கானது என்று. ஒழித்துக்கட்டப்பட வேண்டியது பாஜாகா ஆர்.எஸ்.எஸ் போன்ற பாசிஸ்டுகள் மட்டுமல்ல; மாறாக இவர்களுக்கு இந்த தைரியம் உண்டாவதற்குக் மூல காரணமான அரசு இயந்திரமும் தான்!

மக்களுக்கான நீதியை இந்த அமைப்புக்குள் தேடுவது எப்பேர்பட்ட மடத்தனம் என்பதை நேற்றுப் பார்த்த காட்சிகள் உணர்த்துகிறது. உயிரைக்காப்பாற்றிக் கொள்ள மறைந்திருக்கும் முஸ்லிம் சகோதரர்களை வி.ஹெச்.பியினருக்கு அடையாளம் காட்டிக் கொடுத்து ஆள்காட்டி வேலை செய்தது காவல் துறை. இவர்களைத் தான் நாம்
இன்னும் நாம் நம்பப் போகிறோமா? “நீதி தேவைதையின்” முன்னே குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டிய அரசு வக்கீலும், நீதிபதியும் தான் பொய் சாட்சிகளைத் தயார்படுத்தியது.. இவர்களைத் தான் நாம் நம்பப் போகிறோமா?

இந்துத்துவ பாசிஸ்டுகளுக்கான தண்டனையை இந்திய அரசு அமைப்பு கொடுக்காது. அதற்கான அருகதையோ யோக்கியதையோ அதற்குக் கிடையாது. கோவை குண்டு வெடிப்புக்காக முஸ்லிம்களுக்கு தண்டனை வழங்கிய அதே நீதித்துறை, அதற்கு சில மாதங்கள் முன்பு நடந்த நவம்பர் கலவரத்திற்குக் காரணமான பார்ப்பனத் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு இதே குஜராத் பாணியில் எங்கேயெல்லாம் முஸ்லிம்கள் இருக்கிறார்கள், எங்கேயெல்லாம் அவர்களின் கடைகள் இருக்கின்றன என்பதை காட்டிக் கொடுத்து உதவிய காவல் துறையையும்
ஏன் தண்டிக்கவில்லை?

அவர்கள் தண்டிக்க மாட்டார்கள். தண்டிக்கவும் முடியாது. இந்திய ஆளும் வர்கம் என்பது பார்ப்பன பயங்கரவாதிகளுக்குக் கொட்டை தாங்கும் வர்க்கம்  என்பதைக் கண் முன்னாள் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது நேற்றைய தெகல்கா வீடியோக்கள்.

ஒரே நம்பிக்கை மக்கள் தான்! உழைக்கும் மக்கள் தான் இவர்களுக்கான தண்டனையை, இவர்களுக்கான தீர்ப்பை வழங்குவார்கள். இவர்கள் சொறி நாயைப் போல தெருவில் கல்லாலேயே அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். அதில் முதல் கல்லை நக்சல்பாரிகளே வீசுவார்கள்!

கார்கி

அக்டோபர் 26, 2007 பதிந்தவர் kaargipages | politics, terrorism | | 9 மறுமொழிகள்

Do we have a choice?

கருத்து பாசிசம் என்பதைப் பற்றி எனக்கு முன்பு எனக்கிருந்த கருத்து என்னவென்றால், “இதோ இது தான் உன்னுடைய கருத்து; இந்தா வைத்துக் கொள்” என்று நம் மேல் எவரும் நேரடியாக திணிப்பது தான் கருத்து பாசிசம் என்று நினைத்திருந்தேன். இப்போது சில காலமாகவே இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இப்போதோ வேறு வகையான உத்தியைக் கையாண்டு ஆளும் வர்க்கமும் அவர்களின் அல்லக்கைகளான ஊடங்களும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிறார்கள் என்பது புரிகிறது. காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கும் நேரம் வரையில் நமக்குள் உருவாகும் என்னங்கள் எங்கேயிருந்து வருகிறது என்றால் சமுதாயத்திலிருந்து; நாம்முடைய நேரடி பார்வைக்குட்பட்ட சமுதாயம் என்பதைக் கடந்து; அதன் எல்லைகளைத் தாண்டி இருக்கும் உலகம் பற்றிய கருத்துக்களை நான் பார்க்கும், கேட்கும், படிக்கும் ஊடகங்கள் வாயிலாகவே வருகிறது.

இதில் நம் கேள்வி என்னவென்றால், ஒரு சம்பவம் அல்லது பிரச்சினை பற்றி எந்த விதமான கோணத்தில் அலசப்பட்ட செய்திகளை நாம் வாசிக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது என்பதே. இன்று அனேகமான பேர் வேலை-வீடு-வேலை என்னும் வட்டத்தில் சுற்றிச் சுற்றி அலுத்துப் போய், “சரி நம்மைச் சுற்றி என்னதான் நடக்கிறது பார்க்கலாமே” என்ற என்னத்தோடு போய் சரணடைவது ஊடகங்களிடம் தான். இங்கே தான் பிரச்சினை ஆரம்பமாகிறது. ஒரு செய்தி அல்லது நிகழ்ச்சியை யாருக்கு சாதகமான கோணத்தில் நம் முன்வைக்கிறார்கள்? எந்தெந்த நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது? எந்தெந்த நிகழ்வுகள் புறக்கணிக்கப்படுகிறது? இந்த ஊடகங்களின் நோக்கம் என்ன?

உதாரணமாக எனக்கு ஒரு நான்கு நாட்களாகவே ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்களைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எங்கே நம்மை பயித்தியக்காரனாக்கி விடுவானோ என்கிற பயம் தான் காரணம்.. பின்னே சைஃப் அலிகானுக்கும் கரீஷ்மா கபூருக்கும் “புதிதாக” ஏற்பட்டுள்ள காதலை ஐம்பதாவது முறையாக பார்ப்பவனின் / கேட்பவனின் நிலை என்னவாகும்? வடக்கே ஆங்காங்கே ரிலையன்ஸை எதிர்த்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகிறார்கள்ல்; தெற்கே தமிழகத்திலோ மீண்டும் “பரம்பரை யுத்தம்” தொடங்கி இருக்கிறது,
கள நிலவரப்படி தினசரி ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடந்து வருகிறது… கோடியாவது முறையாக பிரதமரின் வாக்குறுதிகளுக்குப் பின்னும் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கிறது… ஆனால் இவற்றின் எந்த ஒரு அம்சமும் செய்தி ஊடகங்களில் எதிரொலிக்க வில்லை!

அறைக்கு வெளியே வந்தால் காணும் சமுதாயமும்; அறைக்குள் தொ.கா பெட்டித் திரைக்குள் காணும் உலகமும் வேறு வேறாக இருக்கிறது. முன்பு எங்கள் வீட்டுக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியா வரும், அதிலோ சிறப்பு இனைப்புகளெல்லாம் போட்டு ( life, rougue என்னும் பெயரில் வரும் என்று நினைவு ) “ஒரே பெண் எத்தனை ஆண்களைக் காதலிக்கலாம்”, “கல்யாணத்துக்குப் பின் கனவன்/மனைவிக்குத் தெரியாமல் வெளியே தொடர்பு வைத்துக்கொள்வது எப்படி” என்பது போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளைப் பல்வேறு
கோணத்தில் சீரியஸாக அலசிக் கொண்டிருப்பார்கள். இல்லையா, டயட்டிங் செய்வது, ஸிக்ஸ் பேக் ஆப்ஸ், நாற்பதுகளில் வாழ்க்கையை எப்படி அனுபவிப்பது என்பது போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் அலசப்பட்டிருக்கும். எனக்கு என்ன சந்தேகமென்றால், இவன் பேப்பருக்கு சப்ளிமெண்ட் தர்ரானா இல்லை சப்ளிமெண்ட்டில் இருக்கும் சமாச்சாரம் போய்ச் சேர வேண்டும் என்பதற்காக பேப்பரும் தர்ரானா என்பது தான்.

வேளா வேளைக்குத் தின்று செரிக்காமல், அல்லையில் சேர்ந்து விட்ட கொழுப்பு கரைய வில்லையே என்ற வாழ்க்கையின் அதி முக்கிய கவலையில் மூழ்கித் திளைக்கும் உயர் நடுத்தர வர்க்க அல்ப்பைகளின்
இதயத் துடிப்பாக இருப்பது தான் ஊடகங்கள் என்னும் தீர்மானத்துக்கு நான் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களின் எண்ணிக்கையோ ஒரு பத்து அல்லது பதினைந்து சதவீதத்துக்குள் தான் இருக்கும் ஆனால் சந்தையில் கடைவிரிக்கப்பட்டிருக்கும் சரக்குகள் எல்லாம் இவர்களுக்கான சாய்ஸ் தான்.

நேற்று காசுமீரத்தில் ஒரு ஆசிரியர் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்; இது ஒன்றும் இப்போது புதிதாய் நிகழும் சம்பவமுமில்லை.. போன வாரம் தொடர்ச்சியாக இராணுவ வீரர்களோடு சியாச்சின் பனிமுகடுகளுக்குச் சென்று வந்த வீர தீரச்செயலை விலாவாரியாகக் காட்டியவர்கள், இந்த செய்திக்கு கண் சிமிட்டும் நேரம் கூட ஒதுக்கவில்லை. கண் மூடித் திறக்கும் இடைவெளியில் இந்தச் செய்தி ஓடி மறைகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த மக்களின் போராட்டங்களெல்லாம் அப்படியே மறைக்கப்பட்டது.
ஒரு மாநிலத்தின் மக்கள் சில பத்தாண்டுகளாக இராணுவத்தின் இரும்புப் பிடிக்குள் சிக்கி உழல்வதைக் காட்ட மறுக்கும் அதே செய்தி நிறுவனங்கள் அதே மாநிலத்தில் இராணுவ வீரர்களோடு
உல்லாசச் சுற்றுலா சென்று வந்ததையும், அதில் சந்தித்த இடர்பாடுகளையும் பற்றி மணிக்கணக்கில் அளந்து விடுகிறது.

இவர்களின் நோக்கங்கள் தெள்ளத்தெளிவாக இருக்கிறது… மக்களின் நிலை என்னாவாக இருந்தால் என்ன; நாங்கள் அந்த சூழலை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே நீங்களும் பாருங்கள் என்பது தான் இவர்கள் நிலை. இவர்கள் சியாச்சினில் உல்லாச ஊர்வலம் போன பாதை நெடுக உறைந்து கிடக்கும் இரத்தத் துளிகளின் கதறல் இவர்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு குற்ற உணர்வைக் கூட எழுப்பவில்லை. நேயர்களின் உணர்வு மட்டத்தையும் இவர்கள் இவ்வாறே தயார்படுத்துகிறார்கள். சியாச்சினின் அழகு; அந்த அழகை இந்தியாவினுடையதாக்க “வீரர்கள்” செய்த “தீரச்செயல்கள்” என்னும் வகையில் அணிவகுக்கும் செய்திகளின் பின்னே அம்மாநில மக்களின் அறை நூற்றாண்டுகால அழுகுரல் மறைக்கப்படுகிறது. அந்த அழகுச்
சிகரங்களின் பின்னே அம்மக்களின் அவலமான வாழ்க்கை ஒளிக்கப்படுகிறது.

இனி தலைப்பில் கேட்ட கேட்டிருந்த கேள்விக்கான பதில் = yes we have a choise! எப்படி? -

ஒருபக்கம் சலிப்பு தரும் வகையில் ஊடகப் போக்குகள் இருக்க; மறுபக்கமோ மக்கள் நமக்கு உற்சாகத்தையும் நம்பிகையையும் தருகிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்னி மறையும்
செய்தித்துணுக்கினுள் நூற்றாண்டுகளுக்கும் சேர்த்துப் பாடங்கள் மறைந்து கிடக்கிறது. வட இந்தியாவில் ரிலையன்ஸ் என்னும் தரகு முதலாளியின் சில்லரை வணிக அங்காடிகளை ஆங்காங்கே மக்கள் உடைத்து நொறுக்கும் காட்சிகள் “ஸ்டாம்பு” சைசில் வந்தாலும் மிகப் பெரிய நம்பிகையையும் உற்சாகத்தையும் ஊட்டுகிறது. தமிழகத்திலோ இந்தியாவின் வேறெந்த தேசிய இனமும் கைவைக்க அஞ்சிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வெறியர்களுக்கு “அவர்கள் மொழியில்” பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சூடு சொரனை
கொண்ட சூத்திரர்கள்.

தெற்கே இருக்கும் உழைக்கும் மக்களுக்கு வடக்கில் இருந்து செய்தி வருகிறது; வடக்கே இருக்கும் சூத்திரர்களுக்கோ தெற்கில் இருந்து செய்தி செல்கிறது!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த கொந்தளிப்பான நிலைமை தங்கள் தலைவனைப் பற்றி எவனோ சொல்லி விட்டதால் எழுந்த கண நேர கோபமாக இல்லை. ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்களும் பிரச்சாரங்களும், துண்டரிக்கைகளும், புத்தகங்களுமாக மிகவும் வீச்சாக போர் நடந்து வருகிறது. இந்த சூழலில் வைக்கோ போன்ற துரோகிகளின் வேஷமும் கலைந்து போயிருப்பது கூடுதல் மகிழ்ச்சி. தமிழக மக்கள் இந்தியாவின் பிற மாநில மக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்… வகுப்பறையிலோ கிழித்துப் போடப்பட்ட தவளை போன்று
அனாதையாகக் கேட்க நாதியற்றுக் கிடக்கிறான் ராமன்.

உண்மையில் சமுதாயம் பற்றிய சரியான சித்திரத்தை நேரடியாக சமுதாயத்திடமிருந்தே பெறுவது தான் சரியான ஒன்று. மக்களிடமிருந்தே வாழ்க்கையை / அதன் சிக்கல்களை
/ அதற்கான போராட்டங்களைக் கற்றுக் கொள்வது உத்தமமானது. ஊடகங்கள் போன்ற interfaces நிகழ்வுகளை manipulate செய்து அவர்களின் சிந்தனையை நமது மூளைக்குள் தினித்து விடும் காரியத்தையே செய்து வருகிறது. இன்னும் சரியாகச் சொல்வதானால் ஊடகங்களின் நோக்கம் ஆளும் வர்க்க அடிவருடிகளை உருவாக்குதல்!

அக்டோபர் 21, 2007 பதிந்தவர் kaargipages | culture, medias | , | 2 மறுமொழிகள்

பரபக்கம்

கலைஞர் இப்போது ராமனைப் பார்த்து “பாலம் கட்ட நீ எந்தக் கல்லூரியில் பொரியியல் படித்தாய்?” என்று கேட்டாரே இந்தத் துணிவு வேறெந்த மாநிலத்தைச் சேர்ந்த வெறெந்த தலைவருக்காவது இல்லாமல் போனது தற்செயலானதல்ல. தமிழர்களின் ஐஞ்சிறுங் காப்பியங்களில் ஒன்றான நீலகேசியின் தலைவி நீலகேசி, வேதவாதம் பேசியவர்களைப் பார்த்துக் கேட்ட கேள்விகளை ஒப்பிட்டால் இது ஒன்றுமேயில்லை. அதில் அவள் வாதாடும் முறையே பரபக்கம் எனப்படுவது. இவ்வகையிலான வாத முறை வேறு பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகிறது.

பழைய மரபுகளைப் பேசிக்கொள்வது சும்மா “அந்தக்காலத்துல நாங்கெல்லாம் எப்படியிருந்தோம் தெரியுமா?” என்று வெட்டியாய் பழம்பெருமை பேசி அரட்டையடித்து பெருமைப்பட்டுக் கொள்வதற்காக அல்ல. மாறாக அந்த மேலான மரபுகளை இன்றைய நவீன யுகத்து இளைஞனுக்கு நினைவூட்டி மீண்டும் அந்த பார்ப்பன எதிர்ப்பு மரபுகளை உயர்த்திப் பிடிக்கவே. இந்த எதிர்ப்பரசியல் என்பது ஏதோ இன்றைக்கு புதிதாய் தோன்றியதென்றும்,  இது பிரிவினைவாதிகளின் சதியென்பது போலும் பார்ப்பன ஊடகங்கள் பொய்யைப் பரப்பி வரும் வேளையில், இந்த நினைவூட்டல்கள் அவசியமாகிறது.

பார்ப்பன மரபு என்பது வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய உள்ளூர் மரபுகளைத் திரித்து, அதனை ஒரு முகமூடியாய்ப் போட்டுக் கொண்டு வரும் தன்மையுடையது. இது இன்றல்ல.. நீலகேசியின் காலத்திலேயே ஆரம்பித்து விட்டது. சாங்கியம் என்பது வேத எதிர்ப்பு மரபு. அதனுள் ஊடுருவிய பார்ப்பனர்கள் அதற்குள் “புருஷன்” என்னும் அத்துமனைத் தினித்து சாங்கியத்தை கலப்படமயமாக்கி அதனை எடுத்துக் கொண்டு நீலகேசியின் முன் வருகிறார்கள். பெண்களை இழிவு படுத்திய பார்ப்பன மரபுக்கு செருப்படி கொடுத்தது ஒரு தமிழ்ப் பெண்.. சாங்கியப் படுதாவுக்குள் பதுங்கி வரும் பார்ப்பன மரபினனைப் பார்த்து,

“தன்னைப் படைப்பின் தான்முன் இன்மையால் இல்லை
பின்னைப் படைக்கின் படைக்கப் படுவதின்
முன்னைப் படைப்பென் முடிவில்லை, மூடனே
நுன்னைப் படைத்தவர் யாரினி நோக்காய்”

என்கிறாள். சாங்கியத்துக்குள் புருஷனான ஆத்துமன் தன்னைத் தானே படைத்துக்கொள்வான் என்கிறாயே.. அப்படிப் படைத்துக் கொள்ளும் முன்
அவன் இல்லாதவனாகிறான். இல்லை.. பின்னால் தான் படைத்தான் என்றால், அவனுக்கு முன் எவரோ இருந்தார் என்றாகிறது. அப்படியானால் அவனைப் ( முன்னால் இருந்தவனைப்) படைத்தது யார்? இப்படி லூசுத்தனமாய் பேசுகிறாயே உன்னைப் படைத்தது எந்தக் கிறுக்கனோ? என்று  சாதாரணமாக எள்ளி நகையாடுகிறாள்.

இப்போது நம்மிடம், வேதங்களெல்லாம் ஆதியந்தமற்றது என்றெல்லாம் பசப்புகிறார்களல்லவா? இதே சரடை நீலகேசியிடமும் விட்டுப் பார்த்துள்ளனர்.. அதற்கு அவள் சொன்ன பதில் பெரியார் சொன்ன பதில்களைக் காட்டிலும் காரமானது.. ( விரிவாக இந்த சுட்டியில் இருக்கிறது – http://www.jainworld.com/JWTamil/jainworld/neelakesi/urai.asp?num=9 ) அதிலிருந்து சில பத்திகள் மட்டும் இங்கே,

“தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்கமற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு.

மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறையறிவுக்குப்
பொருந்தாதவை. இந்திரனும் சூயனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்கி஡஢வரைப் பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல் ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம்விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழியாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் அவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. இவை நடவாச் செயல் மட்டுமல்ல; நடக்க முடியாத செயல்கள். அறிவுப்பகுதியில் (ஞான காண்டத்தில்)  எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வினைப்பகுதியில் (கர்ம காண்டத்தில்) வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு யானை பா஢சு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர்சனகா஢டம் தாம் வேள்வியில் முனைவது
உண்மையறியும் அவாவாலன்று; காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில்
மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளா஢னும் கீழ்நிலையடைகிறது வேளாண் செல்வன் ஒருவன், தன் புதல்வருள்
ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செயல்வனான குருக்கள், மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக  உங்கள் சமயநூல்களே கூறுகின்றன.

உங்கள் மறை நூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம் ஆகியவற்றை ஆதா஢க்கின்றன. செளத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சா஢க்கையினால் பெளண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில் கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக்கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்குவதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக் கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையும் ண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பலபொருள்படக் கூறப்பட்டுள்ளன.பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம் தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற்படுகின்றன. எடுத்துக்காட்டாக ‘அஜேநயஷ்டவ்யம்’ என் தொடா஢ல் அஜம் என்பதனை ஆடு என்று ஒரு சாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொரு சாராரும் பொருள்கொள்ளும் படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபா஢சரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபா஢சரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிருகஸ்பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக ‘மாவிலங்கு’ செய்யும்படி கூறுவது கேட்டு, ஊனுண்ணும்; விருப்புடன் வேள்விக்கு வந்த ‘தேவர்கள்’ வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதா஢க்க, இருவா஢டையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச்சான்றுமீறித் தேவர்புறம் தீர்ப்பளித்து நரகடைந்தான்.

இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் ‘மா அ஡஢சி’ முதலிய படைப்புகளாலேயே முனிவர்களால் தொடக்கத்தில்
செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர்
கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் இவ்வளவு என்பது வரையறுக்கக் கூடியதாயிருத்தலும் அதை நீங்கள் வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக்கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம்.

நீலகேசி வேதமரபினரை மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் நிலவிய பூத வாதம், வைசேடிக வாதம், சாங்கியவாதம், ஆசீவக வாதம், புத்த வாதம், மொக்கல வாதம் என்று சகலத்தையும் கேள்விக்குட்படுத்துகிறாள். ஒவ்வொரு மரபினுள்ளும் இருக்கும் உள்முரண்பாடுகளை மோத விட்டுப் பரிகசிக்கிறாள்.

பரபக்கம் என்னும் விவாதமுறை நீலகேசியில் மட்டுமல்ல, சங்ககால நூலான குண்டலகேசியிலும், புறநானூற்றுப் பாடல்கள் சிலவற்றிலும்
கூட பரவலாகக் காணக் கிடைக்கிறது.

பண்டைய தமிழன் புனிதம் என்று போதிக்கப்பட்ட எதையும் விவாதிக்காமல், கேள்விக்குட்படுத்தாமல் விட்டதில்லை. இன்றைக்கோ சாதாரணமான ஒரு கேள்விக்கே “மனம் புன்பட்டு விட்டது” என்று புலம்புகிறது இந்துத்துவ வட்டாரம். பார்ப்புகளின் “மனம்” புண்பட்டதற்கு ஈடாக சூத்திரனின் “தலை” கேட்கிறது வேதாந்தக் குரங்கு!

சங்ககாலம் என்றில்லை.. இடையே பக்தி வெள்ளம் கரைபுரண்டோ டிய காலத்தில் மக்கள் மொழியில் எக்காளத்தோடும், ஆத்திரத்தோடும் மீண்டு வந்தது அதே மரபு சித்தர்கள் உருவில்! காலம் பார்ப்பனியத்தை கெட்டிப்படுத்தி விட்டதற்கு இணங்க சித்தர்களின் கோபமும் கொழுந்து விட்டு எரிகிறது.. “இரும்பைப் போல் நீ இறுகிப் போனாலும் சரி; உன்னை உருக்காமல் விட்டேனா பார்” என்று தொடை தட்டுகிறான் சித்தன்!

சித்த மரபு பற்றி வேறு சமயத்தில்…..
 

அக்டோபர் 20, 2007 பதிந்தவர் kaargipages | culture | | 1 மறுமொழி

தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி?

இது கொஞ்சம் சிக்கலான மேட்டர் தான். முதலில் எழுத்தில் நடிப்பது எப்படி என்று ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருத்தல் நலம். அப்புறம் இந்த பிரபஞ்சத்தின் கீழ் வரும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லித் தொலைக்கும் ‘தில்’ மிகவும் அவசியம். இன்னுமொரு முக்கிய விசயம் என்னவென்றால்.. “கட்டற்ற சுதந்திரம்” போன்ற எந்த ஒரு அர்த்தமும் இல்லாத வார்த்தைகளாகப் பார்த்து ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளைப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.. இது பதிவெழுதும் போது மறந்து விடாமலிருக்க
உதவும்.

இனி இந்த முற்போக்கு வேடம் போடும் போது முக்கியமாய் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்களைப் பற்றி பார்க்கலாம்…

முன்பே சொன்ன மாதிரி நாட்டில் கழுதை பேண்டது, பன்றி மோண்டது என்று என்ன நடந்தாலும் அதில் நம்முடைய கருத்து என்று ஏதாவது ஒரு கன்றாவியை சொல்லித் தொலைத்து விடுவது அவசியமானது. இடையிடையே, “எனக்கு கம்யூனிஸம் பிடிக்கும் ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. ஏங்கெல்ஸ் ஒரு தெய்வப்பிறவி ஆனால் மார்க்ஸ் கொஞ்சம் சரியில்லை. பெரியாரை நான் காதலிக்கிறேன் – இந்த பெரியாரிஸ்டுகள் ரொம்ப மோசம். ஓஷோவை நான் காதலிக்கிறேன் – ஆனால் எனக்கு இடது கண் மட்டும் தான் அவர் ( ஏன்னா.. வலது கண்ணைத்தான் ஏற்கனவே பெரியாருக்கு பட்டா போட்டாச்சே)” இப்படி படிப்பவன் மயிரைப் பிய்த்துக் கொள்வது போல எதையாவது உளரிக் கொண்டே இருக்கவேண்டும்.

அவ்வப்போது “ஆயிரம் வருசத்துக்கு முன்னே போவோம்”, “ரெண்டாயிரம் வருசத்துக்கு பின்னே போவோம்”, “கற்பனைக் கழுதைக்கு காகிதம் போடுவது எப்படி?” என்பது போன்ற தலைப்புகளில் எதையாவது கிறுக்கி வைத்துக் கொள்வது மிக அவசியம். எக்குத் தப்பாய் உள்ள பூந்து கொண்ட எவனையும் ஒரு நிமிடம் “இப்ப நான் எங்கே இருக்கேன்?” என்று பேந்தப் பேந்த முழிக்க வைத்து விடுவதில் தான் நம் தொழில் ரகசியமே அடங்கி இருக்கிறது.

யாரும் நம்மை சீந்தாமல் விட்டு விடும் நிலை மிகவும் ஆபத்தானது. அப்படி ஏதாவது ஒரு நிலைமை ஏற்படுவது போல் வாசனை தென்பட்டால் “18 வயதுக்கு மேல் மட்டும் உள்ளே வரவும்” என்னும் மசால்வடை டிஸ்கியைத் தலைப்பில் போட்டு விட்டு, உள்ளே ஏதாவது ஒரு மூன்று X போட்ட இனையதளத்தில் இருந்து உருவிய ஆபாச வீடியோ காட்சியை ஓட விட்டால் போதும். எதிர்த்து எவனும் – “ஏண்டா பெண்மையைப் போற்றுவோம்னு நீ தானடா சொன்னே?” என்று எக்குத்தப்பாய் கேட்டு விட்டால், “அப்ப நீ பாத்தே தானே? கக்குடா எல்லாத்தையும்..” என்று முற்போக்காகப் பேசி சமாளித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் “அழகை ஆராதிக்கத்
தெரியாத தலைகீழாய்த் தொங்கும் முண்டங்கள்” என்று அடுத்த பதிவிலேயே சொல்லி நம்மை ஒரு ‘கலா’ ரசிகனாகவும் காட்டிக் கொள்ளலாம்.

மூத்திரச் சந்தில் ஒன்னுக்குப் போனது, கக்கூசில் கக்கா போனது, பாரின் விஸ்கி குடித்தது, தம்மடித்தது, சட்டை போடாமல் சலம்பல் பண்ணியது என்று வகை தொகையே இல்லாமல் செய்த அத்தனை அல்பத்தனங்களையும் வீடியோ படக்காட்சிகளாக பதிவு செய்து
கொள்வது நல்லது. ஏனென்றால் கற்பனைக் கழுதை காலை நொண்டும் சமயங்களில் இந்த வீடியோக்களைத் தனித்தனியாக ரிலீஸ் செய்து பார்ப்பவர்களைப் பதற வைத்து விடலாம். நமக்கும் பொழுது குஷாலாகப் போகும். வீடியோக்கள் கையைக் கடிக்கும் போது நமீதாவோ
சகீலாவோ இல்லை வேறு ஏதாவது ஒரு கழிசடையோ பனியனைக் கழட்டுவது மாதிரியான “தூய கலைப்” படங்களை எங்காவது சுட்டுப் போட்டுக் கொள்ளலாம். இந்தப் பின்ன-வீனத்துக்கும் (பின்காலனீயம்!?) இப்படிக் கழட்டிப் போடப்பட்ட பனியன்களுக்கும் விட்ட குறை தொட்ட குறை ஏதோ இருந்து தொலைப்பதால் நம்மை ‘அந்த’ மாதிரி பதிவர்களும் “இவனை நம்ம லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா?” என்று மண்டையைக் குடாய்ந்து கொண்டே இருப்பார்கள்.

இத்தனையையும் செய்து விட்டு வலையுலகில் “அடுத்தவன்” செய்யும் ஆபாசத்தை எதிர்க்காவிட்டால் எப்படி? அதனால் பார்ட்டைமாக
அதையும் எதிர்த்து ஒரு பத்துப் பதினைந்து பதிவுகள் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் எழுதப்படும் ( வேற எவன் எழுதுவான் நாமே தான்) இந்த ஆபாச எதிர்ப்பு வரலாற்றில் நாமக்கும் ஒரு இடம் கிடைத்தது போலாகி விடும். இப்படி ஆபாசத்தை எதிர்த்த கையோடு செக்ஸை எப்படி கண்டபடி கொண்டாடுவது என்றும் இடையிடையே சொல்லி வைக்கலாம். எவனும் நம்மைப் பார்த்து, “அப்ப உங்க வீட்ல “எல்லாமே” நடுத்தெருவிலே தான் கொண்டாடுவீங்களா?” என்றெல்லாம் கேட்டு விடமாட்டான். பின்னே ‘அதென்ன’ பொங்கலா கொண்டாட?

எந்த இமேஜும் இல்லாத பதிவர் என்ற இமேஜ் தான் இருப்பதிலேயே ரொம்ப முக்கியமான ஒன்று. கூடவே, “தத்துவமே இல்லாத தத்துவம்”, “எந்த இஸமும் இல்லாத இஸம்” இப்படி சில தத்துவங்களையும் இஸங்களையும் உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது. இப்படி படாத பாடுபடெல்லாம் படுவது எதற்காக?… கரெக்ட்! “க்ரூப்பிஸமே இல்லாத ஒரு இஸம் கொண்ட ஒரு க்ரூப்பை” உருவாக்கத்தான். இந்த க்ரூபிற்கு பல்வேறுபட்ட “வரலாற்றுக் கடமைகள்” இருக்கிறது. முக்கியமானதை அடுத்த பத்தியில் சொல்கிறேன். உடனடி வரலாற்றுக் கடமை பற்றி மட்டும் இந்தப் பத்தியில். “காலையில் எனக்கு நீளமா குசு பிரிந்தது” என்று நாம் ஒரு பதிவு போடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதர் ஆப்சனை பயன்படுத்தி ஊடுருவும் நம்ம க்ரூப் மெம்பர் பிடல் காஸ்ட்ரோ பெயரில் வந்து “தோழர், எனக்கு படாரென்று பிரிந்தது. உங்களுக்கென்ன புஸ்ஸென்றா?” என்று “விவாதத்தைத்” தொடங்கி வைப்பார். அடுத்து ஜார்ஜ் புஸ் வந்து “யார்ராவன் என்னோட பேரை இழுக்கறது” என்று சீறுவார். பின்னாடியே சேகுவேரா பாய்ந்து வந்து “பார்த்தீர்களா தோழர் இந்த ஏகாதிபத்திய திமிரை?” என்று பதறுவார். இப்படியாக கும்மியடிப்பது கூத்தடிப்பது என்று சமூகத்துக்குத் தேவையான சகலத்தையும் நமது மெம்பர்களே கவனித்துச் செய்து கொள்வார்கள்.

நமது கீபோர்டு சமூகத்துக்காக இப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பின்னும் நன்றியில்லாத இந்த வலைச் சமூகம் நம்மை புறக்கனிக்கும் ( ஹிட் கவுண்டர் ஏறலைன்னா பின்ன இன்னா அர்த்தம்?) ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஏதாவது ஒரு சமூகக் கொடுமை நமக்கு நேர்ந்து விட்டால்…? “மன வருத்தத்துடன் என் எழுத்துக்களுக்கு நிரந்தர ஓய்வு தருகிறேன்” என்று ஒரு பதிவைப் போட்டு விட்டு, “அக்கா நான் போறேன்”, “அண்ணே நான் போறேன்”, “மதினி நான் போறேன்”, “ஐயா நான் போறேன்”, “தாய்க்குலமே நான் போறேன்”, “தம்பிமார்களே நான் போறேன்”, “ஒன்னு விட்ட பெரியப்பா நான் போறேன்”  “ரெண்டு விட்ட சித்தப்பா நான் போறேன்” “மூனு விட்ட மாமா நான் போறேன்” “நாலு விட்ட அத்தே நான் போறேன்” என்று சில பல பின்னூட்டங்களை சிதற விட வேண்டும். இப்போது தான் மேலே நாம் உருவாக்கிய “க்ரூபிஸமே இல்லாத க்ரூப்பின்” வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த அந்த வரலாற்றுக் கடமை ஆரம்பமாகிறது. ஒவ்வொருத்தராக ஓடி வந்து “ஐயையோ போகாதீங்க தோழர்”, “நீங்க மட்டும் திரும்பி வர்ரேன்னு சொல்லைன்னா நான் டீக்குடித்துக் கொள்வேன்”, “ஒரு அப்பாவா சொல்றேன், திரும்ப வந்துடுங்க ப்ளீஸ்” என்றெல்லாம் பாசத்தை பிழிந்து விடுவார்கள்.

நாமும் கொஞ்சம் பிகு பன்ன வேண்டும். அதிகமில்லை ஜெண்டில்மேன், ஜஸ்ட் ஒரு மூணு மணி நேரத்துக்குத் தான். பதிவைப் போட்டோ மா.. மார்னிங் ஷோ போனோமா( போறேன்னு சொன்னதே அங்க தானே!)… திரும்பி வந்து அடுத்த பதிவைப் போட்டு விட வேண்டும். இல்லையென்றால் “சர்தான் போடா நாயே” என்று நம்மைக் கழட்டி விட்டு விடும் அபாயம் நிறைந்த விளையாட்டு இது. “ஆப்ரிக்காவில் இருந்து தந்தி வந்தது”, “அண்டார்டிக்காவில் இருந்து டிரங்கால் வந்தது” “செவ்வாய் கிரகத்தில் இருந்து டிரங்கு பெட்டி வந்தது” என்று எதையாவது சொல்லிக் கொள்ளலாம். காரணமா முக்கியம்? “போனதற்கும்”, “வந்ததற்கும்” கவிதைகள் எல்லாம் கூட வரும். ரொம்பவே சுவாரஸ்யம் தரும் ஆபத்தான விளையாட்டு இது. எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

திரும்பி வந்த பின்? பழைய விளையாட்டுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ( இதற்கும் அதிகமில்லை ஜெண்டில்மேன். ஒரு மூணு பதிவுக்குத் தான்) பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்குக் ஜாக்கி போட்டு உயர்த்தும் நம்முடைய வரலாற்று லட்சியத்தை செயல்முறைப் படுத்த ஆரம்பித்து விட வேண்டியது தான். “புகைப்படம் எடுப்பது எப்படி?”, “சோறு தின்பது எப்படி?” “தின்ற பின் முக்காமல் முனகாமல் கக்கா போவதற்கு என்ன செய்ய வேண்டும்?” “போன பின் சரியாக எப்படி கழுவுவது?” என்று பல்வேறு பட்ட அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் (பதிவுலக)மக்களுக்கு ( ஒட்டு மொத்தமா கூட்டிக் கழிச்சா ஒரு முன்னூனூனூறு பேர் தேறுவாங்க!) பயன்படும் பதிவுகள் சிலவற்றை அள்ளித் தெளித்து விட வேண்டும்.

இப்படி ஒரு வழியாக நம்முடைய பொழுதும் போவதோடு முற்போக்கு முலாம் பூசிக் கொண்ட மாதிரியும் ஆகிவிடும்.

ஒரு குறிப்பு : கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்த அனுபவத்தில், இதன் போக்குகளைப் பற்றியும் இந்த தளத்தில் இயங்கும் பதிவர்கள் சிலரின் போக்குகள் பற்றியும் எனக்குள் ஏற்பட்ட ஒரு சித்திரத்தின் சிறிய பகுதி தான் இது. மக்கள் பிரச்சினைகள் பற்றி ஒரு பக்கம் சில பதிவர்கள் மிகவும் அக்கறையோடு, தங்கள் மதிப்பான நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து பேசிக் கொண்டிருக்க, மறுபுறமோ போலித்தனமான முற்போக்கும், வெட்டி மேட்டிமைத்தனமும் நிறைந்த குட்டிமுதலாளித்துவ அல்பைத்தனங்களே பரவலான கவனிப்பைப் பெறுகிறது. இந்த போக்குகள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எந்த தகவலும் சுலபத்தில் கிடைக்கும் வாய்ப்பு பெற்ற, நல்ல அறிவு கொண்ட இவர்களின் இந்த போக்குகள் ஆதங்கத்தைத் தான் தருகிறது. அதன் கிண்டலான வெளிப்பாடு தான் இது. அவர்களின் வார்த்தைகளில் சொன்னால் – ஜஸ்ட் கும்மி!

அக்டோபர் 18, 2007 பதிந்தவர் kaargipages | Alppaigal, tamil blogsphere | , | 8 மறுமொழிகள்

ஒட்டுக் கேட்ட உரையாடல்கள்

நேற்றுக் காலை தேனீர் குடிக்க ரோட்டோர தேனீர்க் கடைக்கு போயிருந்த போது ஒட்டுக்கேட்ட உரையாடல் இது - 

“ஏம்பா உனுக்கு இந்த பங்கு சந்தையிலே புள்ளி ஏறுது பல்லி பதுங்குதுன்னு சொல்றானுவலே அது இன்னான்னு தெரியுமா?”

தந்தியை  மடித்து வைத்துக் கொண்டே கேட்டான் மாதன்.

“அது இன்னா எழவோ என்னா கர்மமோ யாரு கண்டா…. நிதி மந்திரியே கோயில் கூட்டத்துல தொலைஞ்சு போனது மாதிரி பெக்கே பெக்கேன்னு முழிக்குது…. நமக்கு என்னா புரியும்?”

என்றான் சின்னான், மடக்கி வைத்த தந்தியை கையில் எடுத்துக் கொண்டே.

“ஏம்பா அவரு தானே நாட்டுக்கே நிதிமந்திரியாமுல்ல? அவருக்கேவா தெரியலே?”

“”அட ஆமாப்பா… இப்புடி புள்ளி ஏறுரதப்பாத்தாலே பயம்மா இருக்குன்னு பேசி இருக்காரே”

“என்னாபா இது.. இப்புடி ஒரு கிறுக்குப் பயலப் போயி அமிச்சராப் போட்டிருக்காங்களே…”

 ஒரு ஆதங்கத்தில் கேட்டே விட்டான் சின்னான்.

“இன்னிக்கு  நாட்டுல மந்திரியா இருக்க அறிவாளியா இருக்கனுமின்னு கட்டாயமா என்னா?”

சின்னானின் அதே எகத்தாளமான பதிலுக்கு அசட்டுத்தனமாய் சிரித்துக்கொண்ட மாதன் அடுத்த விவகாரத்துக்குள் புகுந்தான்,

“அது சரி.. அது யாரோ காரத்தாமில்ல… அவரு  அணு சக்தி ஒப்பந்தத்துல அரசாங்கம் கையெழுத்துப் போட்டா கவுத்துருவோம் கவுத்துருவோம்னு
சொல்றாறே மெய்யாலுமே கவுத்துருவாரா?”

ஏற்கனவே தினத்தந்தி நாலடியாரின் “தத்துவத்தால்” மண்டை காய்ந்து போயிருந்த சின்னானுக்கு பொத்துக் கொண்டு வந்துவிட்டது..

“அடப்போய்யா நீ வேறே. அவங்க கவலை அவங்களுக்கு.. எலிக்சனு வேற இப்பவா அப்பவான்னு இருக்கில்லே.. அதான் “நீ என்னா வேணா செய்துக்கோ ஆனா எல்லாருக்கும் தெரியறா மாதிரி செய்யாத” அப்படின்னு காங்கிரஸுக்கே காவளித்தனம் பன்றாது எப்புடின்னு சொல்லிக் குடுக்குறாங்கோ. இப்ப இப்புடி தையா தக்கான்னு
குதிக்கிற இவரு… ஏன் இதுக்கு மின்னாடியே நடந்த பேச்சு வார்த்த… அமெரிக்கா நடத்துன கட்டப்பஞ்சாயத்துக்கெல்லாம் மிரட்டாம இருந்தாரு? ரெண்டாயித்தஞ்சிலேயே ரகசியமா ஒப்பந்தம் கையெழுத்தாயாச்சு. இப்ப குதிக்கிறவரு… கையெழுத்து போட்ட பேப்பரையெல்லாம் கிழிச்சுப் போடலாம்னு மட்டும் சொல்லவே இல்ல கவனிச்சியா? அதான் மேட்டரே….!”

“அது சரீ… கம்யூனிஸ்டு கச்சியும் காங்கிரஸும் சேந்து கமிட்டு போட்டு பேசப் போறாங்களாமில்லே.. அப்ப ஒப்பந்தம் நின்னா  மாதிரி தானே?”

“அதாவது மாதா… “நானு சொறி நாயி, என்னோட வேல சும்மா கொறைக்கறது தான். உனுக்கு பிரச்சனையின்னா இந்தா இந்த பஞ்ச வச்சி காதப் பொத்திக்கோ” அப்படின்னு சொறி நாயி சொன்னா மாதிரி தான் இது”

“அட இன்னாபா இது சரியான பேச்சுமாத்தா இருக்கே?”

“இதுல.. கமிட்டிங்கறது பஞ்சு மாதிரி. என்னா ஒரு விசயம்னா.. இதே பஞ்ச நாட்டுல எல்லாரு காதுலயும் பூவாச் சுத்தப் பாக்குறாங்க. அவ்வளவு தான் மேட்டரு”

சிபிஎம், சிபிஐ அரசியல் “தந்திரங்களை”க் கேட்டதால் பேஸ்த் அடித்தது போல் ஆகிவிட்டிருந்த மாதனுக்கு டீக்குடித்தால் தேவலம் போலிருந்திருக்கும் போல..

“யெய்யா சடையப்பா… ஜூடா ரண்டு டீ குடுப்பா” என்றான்.

பேச்சைத்தான் மாற்றிப் பார்ப்போமே என்று அடுத்த கேள்வியை வீசினான் மாதன்,

“அது என்னாபா யாரோ பரதேசிச் சாமியாரு கலைஞரு தலையவே வெட்டச் சொல்லிப் புட்டாராமே?”

“நம்ம ஊருல புள்ளையாரு கச்சி இருக்கே.. அது தான் வடநாட்டுல ராமரு கச்சி..”

“இது இன்னாபா அநியாயமா இருக்கு? நாட்டுல இருக்க மனுசப் பசங்கள வச்சி இவங்க அரசியல் பண்ண மாட்டாங்களாமா?”

“ஊருல எவன் எக்கேடு கெட்டுப் போன எனக்கென்ன கவலைன்னு சொல்லி அரசியல் பன்றது தான் இவங்க பொழப்பே… நம்ம கலைஞரு வேற ராமரோட வேட்டியவே உருவிட்டாரா… சும்மா உடுவாங்களா? அதான் வாயக்குடுத்து இப்ப புண்ணாக்கிட்டு அலையறாங்க.”

“அதான் ராமரு கட்டுன பாலம்னு சொல்றாங்களே.. இவரு ஏன் அத இடிக்கப் போறாரு?”

“அட லூசுப் பயலே… ராமயானமே வெறும் கத தானப்பா? அப்ப ராமரு மட்டும் எப்பிடி உசிரோட இருந்திருக்க முடியும்? அப்புடியே இருந்தாலும் அவரோட காலம் லச்சக்கணக்கான வருசத்துக்கு மின்னன்னு சொல்றாங்க ராமயானத்தப் படிச்சவங்க. லச்சக்கணக்கான வருசத்துக்கு மின்ன நாட்டுல மனுசங்களே இல்லன்னு படிச்ச விஞ்ஞானிகளெல்லாம்
எழுதி வச்சிருக்காங்க. அப்படியே இருந்தாலும், அந்த காலத்துல தமிழ்நாட்டுக்கும் லங்கைக்கும் கடலே இல்லைன்னும் விஞ்ஞானிமாருக சொல்றாங்க.. அப்புடியே கடல் இருந்தாலும் 30 மைல் தூரத்துல இருக்கற லங்கைக்கு 800 மைல் தூரத்துக்கு ஏன் பாலங்கட்டனும்?”

“அடப்பாவமே இதக் கேப்பாரே இல்லையா?”

“அதக் கேக்கப் போயி தான் நம்ம கலைஞரு நாக்க வெட்டனுமின்னு சொல்லி இருக்கான் அந்த சாமி”

“அடப்பாவி.. இவனுகளயெல்லாம் ரோட்டுல ஓட விட்டு அடிக்கனும்பா”

“அதத்தானே நம்ம தி.முக காரங்க நல்லாவே செய்யறாங்களே..”

“புள்ளையாரு கச்சிக்காரங்க புதுசா ஈழத்துல இருக்க நம்மாளுகளுக்கு துணி மனியெல்லாம் வாங்கியனுப்ப போறாங்களாமே”

“இதுக்குப் பேரு தான் கூடிக் கெடுக்கறது. இவனுக கிட்ட மட்டும் சாக்ரதையா இருக்கனும்பா”

“நம்ப ஏரியாவுக்கு வரட்டும்.. சாணி கரச்சி அடிக்கறேன்”

காலியான தேனீர் கோப்பைகளை வைத்து விட்டு இடத்தை காலி செய்தனர் மாதனும் சின்னானும். தேனீர்க்கடை அரசியல் பேச்சும் சலூன் கடை அரசியல் அரட்டைகளுமாகத் தான் தமிழகத்தில் திராவிட இயக்கங்களை சாதாரண மக்கள் அறிந்து கொண்டனர் என்று சமீபத்தில் எங்கோ படித்ததை, ‘எங்கே படித்தோம்?” என்று யோசித்துக் கொண்டே
நானும் நடையைக் கட்டினேன்.

Bye the way, அது இன்னும் நினைவுக்கு வந்தபாடில்லை!

அக்டோபர் 17, 2007 பதிந்தவர் kaargipages | politics | | 1 மறுமொழி

ஊடகங்களும் வாழ்க்கையும்!

கார்கில் போர் நினைவிருக்கிறதா? அந்த சமயத்தில் நாடெங்கிலும் பொங்கி வழிந்த “தேசபக்தி”யை எவரும் மறந்திருக்க மாட்டோ ம். ஒரு போரின் பின்னேயும் அதன் வெற்றியின் பின்னேயும் இந்திய ராணுவத்தின் அயோக்கியத்தனங்களும், உள்ளே புளுத்து நாறிக் கொண்டிருந்த ஊழலும் எப்படியெல்லாம் மறைக்கப் பட்டது என்பதையும் நாமெல்லாம் மறந்திருக்க முடியாது. இதனையெல்லாம் ஊதி ஊதி எறிய வைத்தது ஊடகங்களே. பாவம் அவர்களுக்கு இப்போதெல்லாம் தங்கள் வியாபாரத் திறனையும் மார்கெட்டிங் யுக்தியையும் காட்ட போர் எதுவும் நடக்கவில்லை.. ஆனாலும் ஒரு போருக்கு உரிய அத்துனை வெறி/பரபரப்பையும் ஒரு விளையாட்டுப் போட்டிக்குள் திணித்து விட தங்களால் முடியும் என்பதையும், “இந்தியர்களை” ( இந்துக்களை என்று
புரிந்து கொள்க) உசுப்பேத்தி விட முடியும் என்பதையும் நிரூபித்துக் கொண்டுள்ளனர்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்றது. அந்த போட்டியின் இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தானை
எதிர்த்து ஆடி வென்றது. இது ஒன்று போதாதா? இந்திய அணி நாடு திரும்பியதும் மும்பையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி நின்று வரவேற்ற காட்சி ஆங்கில செய்தி ஊடகங்களில் காட்டப்பட்டது. அதில் நம் கவனத்துக்குறியது என்னவென்றால், “ரசிகர்களில்” பலர் காவி நிறக் கொடியுடன் விளையாட்டு வீரர்களை வரவேற்றது தான். நான் வசிக்கும் பகுதியில் இறுதிப் போட்டி நடைபெற்ற நாள் இரவு, தேனீர் அருந்த நான் வெளியே சென்றிருந்தேன். இருசக்கர வாகனங்களில் வெறிக்கூச்சலுடன் சில ரசிகர்கள் ரவுண்ட்ஸ் அடித்துக் கொண்டிருந்தனர். அது ஒரு ரம்ஜான் மாத இரவு. அதே நேரத்தில் ஊரெங்கும் பிள்ளையார் சதுர்த்திக்காக சிலைகள் நிறுவப்பட்டிருந்தது. நான் நின்று கொண்டிருந்தது முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி. வாகனங்களில் வந்த ரசிகர்கள் தலையில் காவி நிறத் துணியையும் கையில் காவிக் கொடியையும் கொண்டிருந்தனர். இரவுத் தொழுகை முடிந்து
தெருக்களில் கூடி பேசிக் கொண்டிருந்த இஸ்லாமியர்களைக் கண்டதும் பைக்குகளில் வந்த காலிகளின் வெறி அதிகமானது. வாகனத்தை நிறுத்தி, “பாரத் மாதா கீ ஜே” “பாக்கிஸ்த்தான் டவுன் டவுன்” என்ற கத்திவிட்டு நகர்ந்தனர்.

இந்திய விளையாட்டு அணியின் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியானது இந்துக்கள் முஸ்லீம்களை வென்றதன் குறியீடாக இவர்கள் பாவிக்கிறார்கள். இந்தக் கூச்சல்களினூடாக முஸ்லீம்கள் இந்த நாட்டைச் சேர்ந்தவர்களில்லை என்பதையும், இந்தியா என்பது ‘இந்து’யா எனபதையும் பதியவைக்க முயற்சிக்கிறார்கள். நாளிதழ்களில் வெளியாகும் ஆய்வுக் கட்டுரைகள் தொடங்கி தொலைக்காட்சி ஊடகங்களில் வெளியாகும் சிறப்புச் செய்திகள் வரை இப்படியான ஒரு சித்திரத்தைத் தான் உருவாக்கி விட்டுள்ளது.

ஒரு விளையாட்டில் கிடைத்த வெற்றிக்குப் பின்னால் ஏன் இத்தனை ஒரு வெறி?

ஒரு விளையாட்டை விளையாட்டு என்பதாக அல்லாமல் அதற்கும் மேலானதொரு கவுரவப் போர் என்கிற அளவுக்கு அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்து செய்திகள் வெளியிட்டு வரும் ஊடகங்கள் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்றாலும் நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், உடல் திறனை வெளிப்படுத்தும் வேறு விளையாட்டுகள் முக்கியத்துவம் இழந்ததற்குக் காரணம் இந்த ஊடக வெறியூட்டிற்கு அப்பால் இருக்கிறது. அந்தக் காரணங்களை விவாதக் களத்திற்கு வெளியே நிறுத்தி வைத்திருப்பதே இந்த கிரிக்கெட் வெறியூட்டலின் மூலம் ஊடகங்கள் சாதித்ததாகும்.

இங்கே என்பது சதவீதத்துக்கும் மேலான மக்கள் உயிர் பிழைத்துக் கிடக்கவே உணவு என்கிற நிலையில் இருக்க, இவர்கள் உடல்திறன்
சார்ந்த வேறெந்த விளையாட்டிலும் ஈடுபடும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இன்று நாளிதழில்( 15/10/2007 டைம்ஸ் ஆப் இந்தியா )
வெளியான செய்தியின் படி இந்தியக் குழந்தைகளில் 40% பேர் பட்டினியுடன் தான் தினசரி உறங்கப் போகிறார்கள். விளையாட்டுகள் என்பதும் உடல் திறனைக் கூட்டும் பயிற்சி என்பதும் சுமார் 20% குறைவான உயர்நடுத்தர வர்க்கத்தினருக்கு ஊதிப் பருத்த தொப்பையைக் குறைக்கும் முயற்சிகளில் ஒன்று என்றாகிப் போய் விட்டது.

இதனை மறைக்கும் விதமாகவே அங்கொன்றும் இங்கொன்றுமான சிறு நகரங்களில் இருந்து உருவான, “புகழ்” பெற்ற வீரர்களை முன்னிறுத்துவதும், கிரிக்கெட்டின் மேல் அதீதமாக முக்கியத்துவம் கொடுத்து செய்திகள்/ கட்டுரைகள் வெளியிடுவதும் ஆகும். தினசரி வாழ்க்கையையே போராட்டமாக வாழும் மக்களின் வாழ்க்கைப் போரை மறைக்கவே விளையாட்டுப் போட்டிகளுக்கு ஒரு போரின் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

“ஏன் இந்தியாவில் பரவலாக மக்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை?” என்னும் கேள்விக்குள் புகுந்தால் ஆக்ஸ்போர்ட் ஆங்கிலங்களுக்கு “கசக்கும்” உண்மைகள் வெளிப்பட்டு விடும் என்பதாலேயே அந்தக் கேள்வி மிகத் தந்திரமாக அழுத்தப்படுகிறது. பாக்கிஸ்தானை இந்தியா கிரிக்கெட்டில் வென்றால் அந்நாட்டை போரில் வென்றது போல வெளியாகும் செய்தியின் கூச்சலில், அந்நாட்டு மக்களில் பட்டினியில் வாடுவோர் இந்தியாவை விட சதவீத அளவில் குறைவு ( அதே செய்தியின் படி) என்பது மறைந்து விடுகிறது.

சென்செக்ஸ் பதினெட்டாயிரம் புள்ளிகள் கடந்து பாய்வதன் மேல் பாய்ச்சப்படும் ஊடக வெளிச்சத்தில் கண்கள் கூசும் மக்கள், இதே நாட்டில் 77 கோடிப் பேர் அரசாங்க கணக்குப்படியே நாளொன்றுக்கு இருபது ரூபாய்களுக்கும் குறைச்சலான தொகையில் வாழ்க்கை நடத்துவதை காணத்தவறுகிறார்கள் -தவற வைக்கப்படுகிறார்கள். அப்படியென்றால் உயரும் சென்செக்ஸ் புள்ளிகள் யாருடைய வாழ்க்கையை உயர்த்துகிறது? நாட்டின் நிதிமந்திரியே
“என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. ஏன் இப்படி உயர்கிறது என்பதும் தெரியவில்லை. கவலையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது.” என்று “ஒன்னுமே புரியல உலகத்திலே…. என்னமோ நடக்குது, மர்மமா இருக்குது” என்று விரக்தியுடன் உளரிக் கொண்டிருப்பதும் எவர் கவனத்தையும் பெறவில்லை – அப்படி கவனத்தைப் பெற இவர்கள் விடுவதும் இல்லை.

இந்நாட்டின் உழைக்கும் மக்கள் புளுத்துப் போன கோதுமையில் செய்யப்பட்ட “லால் ரொட்டியை” தின்பது இவர்களின் கவுரவத்துக்கும் போலிக் கரிசனத்துக்கும் உறுத்தலாய் இருந்திருக்கும் போலிருக்கிறது. போன வாரம் காட்டப்பட்ட இது தொடர்பான செய்திகளில், இதற்குக் காரணமான தானியக் கொள்முதல் கொள்கைகளையும், அதன் காரணமாய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட விவசாயிகளையும் பற்றி பேச்சு மூச்சே இல்லை. தெருவில் அலையும் பிச்சைக்காரணைப் பார்த்து சொல்லப்பட்ட “அச்சச்சோ”வின் தொனியே மேலோங்கி இருந்தது. குறைந்த பட்சம் இவர்களும் நம்முடைய “இந்தியாவில்” தான் வாழ்கிறார்கள் என்பதாகவும் கூட பதிவு செய்யப்படவில்லை.

மொத்தத்தில் ஒரு யுப்பி வர்க்கத்து இளைஞனுக்கு எப்போதாவது – ஒரு விபத்து போல – மேலெழும் கேள்விகளை மொன்னையாக்குவதும், அவன் எப்போதாவது நிதர்சனத்தைக் கண்டு திகைத்து நிற்கும் போது சமாதானப்படுத்திக் கொள்ள காரணங்களைத் தருவதும் தான் இந்த செய்திகளின் நோக்கமாக இருக்கிறது.

நம்மைப் பொருத்த வரையில், அவன் காட்டுவது நம்முடைய நாடு அல்ல! அவன் பேசுவது நம்முடைய பிரச்சினைகளை அல்ல! அவன் தரும் சித்திரம் நம்முடைய வாழ்க்கைச் சித்திரமல்ல!

அக்டோபர் 15, 2007 பதிந்தவர் kaargipages | culture, medias | , | 2 மறுமொழிகள்

விளம்பர அரசியல்

வர வர இந்த அழகுக் க்ரீம் கம்பெனிகள் நம்மையெல்லாம் வெள்ளைக்காரர்களாக மாற்றாமல் ஓய மாட்டார்கள் போலிருக்கிறது. கருப்பான பையன்களும் பெண்களும் ஏழு நாட்களிலோ என்னவோ
பளிச்சென்று வெள்ளைக்காரப் பையன்கள் போல் ஆகிவிடுவது போன்ற தொலைக்காட்சி விளம்பரங்களை எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. இது தவிர ஊட்டச்சத்து பான விளம்பரங்கள்,
கைப்பேசி இனைப்பு விளம்பரங்கள் சோப்பு விளம்பரங்கள் ம்யூட்சுவல் பண்டு விளம்பரங்கள் என்று எந்த விளம்பரங்களானாலும் நம்முடைய ‘நிலையை’ அடுத்த தளத்துக்குள் திணித்து விடுவது மட்டுமே
தங்களது ஒரே வாழ்க்கை லட்சியம் என்கிற லட்சியவெறியில் இயங்கிக் கொண்டிருப்பது போல் காட்டுகிறார்கள். இதில் பொதுவாக எவருமே அவன்
விளம்பரப்படுத்தும் பொருளின் நம்பகத்தன்மை / நீரூபகத்தன்மை பற்றியெல்லாம் பேசியிருப்போம் ஆனால் இது போன்ற விளம்பரங்களின் பின்னே மறைந்து வரும் அரசியல் நோக்கங்கள்
பற்றி எத்துனை விவாதங்கள் நிகழ்ந்திருக்கும் / அல்லது அப்படி நிகழ்ந்த விவாதங்கள் எத்துனை பேரின் கவனத்துக்குப் போயிருக்கும்; ஏன் அப்படி கவனத்துக்கு வராமல் போய் விட்டது
என்பதே தனியானதொரு விவாதத்துக்குரியது.

இவ்விளம்பரங்கள் நேர் பொருளில் சொல்லும் செய்தியைக் காட்டிலும் மறைபொருளாக நம்முள் ‘திணித்து’ விட்டுச் செல்லும் செய்திகள் அதிக வக்கிரமும் தீமையும் நிறைந்த ஒன்று. ஒரு பத்து அல்லது இருபது நொடி விளம்பரம், பார்வையாளன் ஒருவன் ஆழ்மனதில் கருப்பாயிருப்பது அசிங்கமானது என்றும் அவமானகரமானது என்றும், வெள்ளைத் தோல் இருந்தால் தான் பெண்களுக்கு வேலை கிடைக்கும் என்பது போலவும் பதிய வைத்து விடுகிறது. பணிப்பெண் வேலைக்கும் வெள்ளைத் தோலுக்கும் என்ன தொடர்பு? வேலைக்கு ஆளெடுக்கிறார்களா விபச்சாரத்துக்கு ஆளெடுக்கிறார்களா? கருப்பாய் இருப்பதைக் காட்டிலும் வெள்ளையாய் இருப்பது என்னென வகையில் உசத்தி? எது அழகு? யார் அதைத் தீர்மானிப்பது?
என்றெல்லாம் சிந்திக்க விடாத வேகத்தில் காட்சிகள் நகர்கிறது.

வெள்ளை நிறத் தோலின் மேலான மோகத்தின் நீட்சி வெள்ளை நாடுகள் மேலான விசுவாசமாய் முடிகிறது. இவ்வித விளம்பரங்களின் பின்னேயுள்ள நிறுவனங்கள் பெரும்பாலும்
பன்னாட்டு நிறுவனங்களாய் இருப்பதும்; இந்த போக்கை துவக்கியதும் அவர்களாயே இருப்பதும் எதேச்சையானதொன்றல்ல.

பன்னாட்டு வங்கி ஒன்றின் விளம்பரம் ஒன்றில் ஒரு பெண் காலை நேர ஒட்டப்பயிற்சியில் இருக்கிறாள்; வீட்டுக்கு வாங்க வேண்டிய பொருட்கள் பற்றி சிந்தித்தவாறே ஓடுகிறாள்; எதிரே கடந்து போகும் இளைஞனைத் திரும்பிப் பார்த்தவாறே ஒரு நமுட்டுச் சிரிப்புடன் “coool T-Shirt!” என்று மனதுக்குள் கமெண்ட் அடிக்கிறாள் – இது பார்வையாளன் சொக்கிப் போயிருக்கும் தருணம்! – உடனே வாடிக்கையாளர் ஒருவரின் சேமிப்பு பற்றியும் சிந்திக்கிறாள். இந்தியச் சூழலில் ஒரு பெண் ஆடவன் ஒருவனைப் பார்த்து கமெண்ட் அடிப்பதைப் பார்க்கும் பார்வையாளனுக்குள் எவ்விதமான கிரக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல வேண்டியதில்லை! அதே கிறக்கம் கலையும் முன்னே தமது ஊழியர்களின் “கடமை உணர்ச்சியை” உள்ளே சொருகி விடுகிறார்கள். இங்கே இலக்கு வைக்கப்பட்ட பார்வையாளர்கள் காளான்களைப் போல் பெருகி வரும் பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய இளைஞர்கள்.

“என்ன இருந்தாலும் ப்ரைவேட் பேங்க் மாதிரி வருமா சார்? அங்க தான் சார் கஸ்டமரை மதிக்கிறான்!” என்று உளரும் இளைஞனை
நம்மாள் புரிந்து கொள்ள முடிகிறது!
இன்றைக்கு தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடுகள் சொற்பம். தமிழக அரசாங்கமும் தமது குடிகளைத் “தயார்ப்படுத்தும்” பொருட்டு இலவசமாகவே தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்க முன்வந்திருக்கிறது.

முன்பெல்லாம் குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு வயது வரை தாய்ப்பாலும்
அதற்குப் பின்னே கொஞ்சம் கொஞ்சமாக திட உணவும் கொடுத்தே பழக்கப்படுத்துவார்கள். திட உணவும் அப்படியெல்லாம் ஒன்றும் விசேசமானதில்லை; அப்பனாத்தாளுக்கு என்னவோ அதில் கொஞ்சம் குட்டிப் பாப்பாவுக்கு – அவ்வளவு தான். விளம்பரங்களின் கைவரிசையால் இன்றைய பொடிசுகள் அப்பனின் சட்டையை கொத்தாகப் பிடித்து “எங்கே எனது ஜூனியர் ஹார்லிக்ஸ்?” என்கிறது.

மாதம் மூவாயிரத்தைனூரில் நாலு வயிற்றை ரொப்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் ஐந்து வயது மகன்,

“அங்கிள், ஐயேம் எ காம்ப்ளான் பாய்” என்கிறான் மழலை மொழியில்; அந்தத் தகப்பனோ மழலை மொழியை ரசிக்கும் நிலையில் இல்லை!

பொருட்களை வாங்கிக் குவிப்பதே அந்தஸ்தின் அடையாளமாகவும், பல்சர் வைத்திருப்பதே ஆண்மையின் அடையாளமாகவும்.. நமது இளைஞர்கள் அடிமைப் புத்திக்கு கொஞ்சம் கொஞ்சமாக தயார்படுத்தப்படுகிறார்கள்.

பெண்களை இவர்கள் காட்டும் விதம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

ஜட்டியின் அழகில் மயங்கும் பெண்கள் கூட்டம் ஒன்று இளைஞன் ஒருவனை முத்தமிட்டே தீர்க்கிறார்கள். இனிமே சூப்பர்மேன் போல பேண்ட்டுக்கு மேலே ஜட்டியுடன் பையன்கள் அலைவார்களானால் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.. பேக்பைப்பர் இசைக்கு மயங்கும் எலிகள் வாசிப்பவனைப் பின் தொடர்கிறது.. அவன் போட்டிருக்கும் செண்ட்டின் மனத்துக்கு மயங்கும் பெண்கள் அவனை எலிகளைப் போல பின் தொடர்ந்து செல்கிறார்கள்.. என்னவோ இது பெண்களை தெய்வமாகப் போற்றும் தேசமாம்…அதையும் நாம் நம்பவேண்டுமாம!

இவ்விளம்பரங்களில் காட்சிப்படுத்தப்படும் வாழ்நிலையும், நாடும் நிச்சயமாக நம்முடைய நாடோ  வாழ்நிலையோ இல்லை. இதையெல்லாம் பார்த்து தயாராகும் யுப்பி வர்க்க இளைஞர்களோ “சார் நாடு இப்பயெல்லாம் எங்கேயோ போயிருச்சுங்க” என்று ஜனகராஜின் அசிஸ்டெண்ட் லெவலுக்கு உருகுகிறார்கள்.

போன வாரம் அப்படிச் சொன்ன இளைஞன் ஒருவனிடம் அதே நாளில் செய்தித்தாளில் வந்திருந்த அரசு ஆய்வு ஒன்றைச் சுட்டிக் காட்டி நாளுக்கு இருபது ரூபாய் மட்டும் சம்பாதித்து வாழும் குடும்பங்களின் என்னிக்கை என்பது சதவீதம் என்று விளக்கினேன். அவனோ பதிலின்றி “ஙே” என்று விழிக்கிறான்.

ஒப்பீட்டளவில் அதிக சம்பளம் வாங்கும் ஐ.டி துறை இளைஞர்களையே இவ்விளம்பரங்கள் குறிவைக்கின்றன; அவனுக்கோ அவனைச் சுற்றி – அவன் வீடு, அலுவலகம், நன்பர்கள் – உள்ள உலகத்தையே இவையும் அழகாக காட்சிப்படுத்தித் தருவதால் அதுவோ நாட்டின் ஒட்டுமொத்தமான சித்திரம் என்பதாக நினைத்துக் கொள்கிறான்.

என்.டி.டீ.வியும் சி.என்.என்.ஐபின்னும் முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியை அதே கோனத்தோடு இவனும் முக்கியமாய்க் கொள்கிறான். அந்தச் சேனல்களுக்கு சோற்றுக்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் போல வாழ்வில் அவ்வப்போது சோகச் சுவையும் தேவையாய் இருக்கிறபடியால் அத்தி பூத்தாற்போல எப்போதாவது ‘ஏழ்மையைப்’ பார்த்து நீலிக்கண்ணீர் வடித்து வைக்கிறார்கள். ஏதோ மிருகக்காட்சி சாலையில் மிருகங்களைக் காட்டி விளக்கி வரும் கைடு போல இந்நாட்டு உழைக்கும் மக்களின் பிரச்சினையைக் காட்டுகிறார்கள்.

அதிர்ச்சியில் இருந்து வெளியே வந்த அந்த இளைஞன், “சார் ஏதோ ஒரு நாலைஞ்சு பேரு நாட்டுல கஷ்ட்டப்படறாங்கன்னு நினைச்சா இவ்வளவு பேரோட நெலமையே இப்படித் தான் இருக்கா?” என்கிறான்

இது தான் “அவர்கள்” எதிர்பார்ப்பது! 

அக்டோபர் 5, 2007 பதிந்தவர் kaargipages | culture | , , | 4 மறுமொழிகள்